உறவாக வேண்டுமடி நீயே 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு - 2



அபி அந்த ஜோசியரையே உற்று நோக்க, சற்று நேரம் எந்தப் பேச்சும் இல்லாமல் அபி ஜாதகத்தைப் புரட்டியவர் நிமிர்ந்து மணிமேகலையை ஒரு சங்கடப் பார்வை பார்க்க



“என்ன?.. என்ன விஷயம்?” என்று தாய் பதறவும்



“அம்மா... என்று தாயின் கையைத் தன் கைக்குள் பொத்திய படி அவரை அமைதி படுத்தினான் அபி. அவர் அமைதியாகவும்



“பெரிய தம்பிக்கு இப்போ தசாபுத்தி கொஞ்சம் சரியில்லாமல் இருக்கிறதுமா. வீண் வம்பு தும்புகள் பகை எல்லாம் வந்து சேரும். இதுவரை ஏறு முகமா இருந்தவரு இனி இறங்கு முகமா இரு...”



“இஸ் இட்?”அபியின் நக்கல் தொனியிலும் சுட்டெரிக்கும் பார்வையிலும் பாதியிலேயே பேச்சை நிறுத்தினார் அவர்.



“என்ன இப்படி சொல்றீங்க? இதற்கு பரிகாரம் எதுவும் இல்லையா? நான் இவனுக்கு திருமண யோகம் வந்துவிட்டதா என்று கேட்கத் தான் உங்களை வரச் சொன்னேன். எங்களுக்கு இப்போ இருக்கிற சொத்தே போதும் ஜோசியரே. என் மகனுக்கு கல்யாணம் ஆகி வர்ற பெண்ணோட இவன் சந்தோஷமா இருந்தா அதுவே எனக்கு போதும். அதனால் இவன் கல்யாண கட்டத்தைப் பாருங்க” என்று ஒரு தாயின் பரிதவிப்போடு அவர் கேட்க, அவரோ மறுபடியும் சற்று நேரம் ஜாதகத்தைப் புரட்டி விட்டு நிமிர்ந்து உதட்டைப் பிதுக்க



“என்ன? இன்னும் நேரம் கூடி வரலையா? நானும் உங்க கிட்ட இவன் ஜாதகத்தைக் கொடுத்த நாளா இதையே தான் சொல்லிகிட்டு இருக்கீங்க. எப்போதான் இவனுக்கு அப்படி ஒரு நேரம் கூடி வரும்? ஒரு தாயா அப்படி இவனுக்கு நல்லது நடக்க நான் என்ன செய்யணும்னு சொல்லுங்க செய்யறேன்” அவரின் குரல் மன்றாடியது.



அபியை ஒரு பார்வை பார்த்தவர் ‘நானா இப்படி சொல்கிறேன்? ஜாதகத்தை நான் கையில் வாங்கின நாளா உங்க மகன் தான் அப்படி சொல்லச் சொல்லி என்னை மிரட்டுகிறார்’ இதையெல்லாம் மனதிற்குள் தான் சொல்லிக் கொண்டார் அவர். வாய் திறந்து சொன்னால் அபியிடமிருந்து என்ன மாதிரி பூஜைகள் கிடைக்கும் என்பது தெரியாதா அவருக்கு?



“சரி… நீங்க என் தம்பி ஜாதகத்தைப் பாருங்க” அபி சொல்ல



துருவனுடையதை எடுத்துப் புரட்டியவர் “இவன் ஜாதகம் ஷேமமா இருக்கு. இந்த வருடத்துக்குள்ள கல்யாண யோகம் இருக்கு.. முடித்துவிடலாம். தவற விட்டீங்கனா பத்து வருடம் கழித்து தான் நடக்கும்”



“அது எப்படி பெரியவன் இருக்க சின்னவனுக்கு செய்ய முடியும்?” மணிமேகலை கவலையுடன் கேட்க



“ம்மா... நான் தான் எனக்கு கல்யாணமே வேணாம்னு ஆரம்பத்திலிருந்தே சொல்கிறேனே!”



“வாயை மூடுடா படுவா! நீ இப்படி ஆரம்பத்தில் சொன்னதாலேயே தான் இன்னும் உனக்குத் திருமணம் தட்டிக் கழித்துப் போகுது. அந்த ஆள் செய்த தப்புக்கு நீ ஏன் டா பெண்களையே வெறுத்து எனக்குத் தண்டனை தர? பேசாம உங்க இரண்டு பேரையும் அந்த ஆள் கிட்டயே விட்டுவிட்டு வந்திருக்க...”



“அம்மா!” அபி போட்ட சத்தத்தில் வெளியில் கட்டிப் போட்டிருந்த ரெக்ஸ் கூட பயத்தில் குலைக்க ஆரம்பித்து விட்டான்.



“பேச்சா!” தோட்டக்காரனை அழைத்தவன் ரெக்ஸ்யை வாக்கிங் கூட்டிட்டுப் போ. அபி கட்டளைக்கு மறு பேச்சு இல்லாமல் செயல்பட்டான் தோட்டக்காரன்.



“இந்த வருடத்திற்குள்ளேயே துருவன் திருமணத்தை நானும் அம்மாவும் சிறப்பா முடிச்சிடுறோம்” வந்தவருக்கு இவன் உறுதி அளிக்க



“உங்களுக்குத் திருமணம் முடிக்காம எனக்கு மட்டும் திருமணம் வேண்டாம் ண்ணா. அது பத்து வருடம் ஆனாலும் பரவாயில்லை ண்ணா” சிறு குரல் என்றாலும் துருவன் உறுதியாக மறுக்க



தம்பியை ஆச்சரியத்துடன் பார்த்தான் அபி. இதுவரை அவனிடம் குரலை உயர்த்தி கூட பேசாதவன் துருவன். அதற்கு பெயர் பயம் இல்லை தன் அண்ணன் மேல் அவன் வைத்திருக்கும் மதிப்பும் மரியாதையும் தான் அதற்கு காரணம். இதிகாசத்தில் ராமனின் பாதரட்சைகளை வைத்து பரதன் ஆட்சி செய்தான் என்று சொல்லுவார்கள். ஆனால் இந்த யுகத்திலும் அப்படி ஒரு பரதனைக் காண வேண்டும் என்றால் அது அபிரஞ்சனின் தம்பி துருவனாகத் தான் இருக்க வேண்டும். அதிகம் பேசாதவனுக்கு தன்னுடைய கொஞ்சல் கெஞ்சல் எல்லாம் அண்ணன் இல்லாத போது தாயிடம் தான் இருக்கும்.



“போங்கடா.. இப்படியே இரண்டு பேரும் சொல்லிகிட்டே போங்கடா. உங்க இரண்டு பேரையும் பெற்றதிற்கு நான் தான் ஏதாவது ஒரு மடத்தில் போய் உட்காரப் போகிறேன். நான் சும்மா மிரட்டுறேன் என்று நினைக்காதீங்கடா. இந்த வருடத்திற்குள்ளே உங்க இரண்டு பேருக்கும் கல்யாணம் ஆகவில்லை என்றால் அதைத் தான் செய்யப் போறேன்” என்று அவர் தொண்டை அடைக்கச் சொல்லவும்



துருவன் என்ன நினைத்தானோ, தான் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து வந்து தாயின் மறு பக்கத்தில் அமர்ந்து கொண்டன் அவன். இரண்டு பிள்ளைகளும் தன் இரண்டு பக்கமும் அமர்ந்து தன்னைத் தாங்கவும் அமைதியானார் மணிமேகலை.



“இரண்டு பேருக்கும் ஒரே மேடையிலேயே திருமணம் செய்திடலாம் என்று நினைக்கிறேன். அப்படி ஏதாவது ஜாதகம் இருந்தா அக்கா தங்கையா இருந்தா கூட பாருங்க” என்று ஒரு தாயாய் இவர் ஜோசியரிடம் முடிக்கவும்



வந்தவர் அபியைப் பார்க்க, ‘எனக்கு பெண் பார்த்திடுவ?’ என்ற மிரட்டும் த்வனி அவனின் விழியில் தெளிவாகத் தெரியவும்



அதைப் புரிந்து கொண்டவர் “சரிங்கமா.. அப்போ நான் கிளம்புறேன்” என்றவர் ‘பாவம் மணிமேகலை அம்மா! அவங்க பெரிய பையனுக்கு இந்நேரம் திருமணம் நடந்திருக்கணும். அப்படி நடந்து இல்லைனா இந்த ஆயுசுக்கும் அவனுக்குத் திருமணம் ஆகாது என்பதை எப்படித் தாங்கப் போறாங்களோ?!’ என்று மனதில் நினைத்த படி வெளியேறினார் ஜோதிடர்.



பின் அபி கிளம்பி வெளியே வர, அவனுடைய ரெக்ஸ் அவனைப் பார்த்தும் பார்க்காததைப் போல் முகத்தைத் திருப்பிய படி படுத்திருந்தது. காலையில் அபி வரும் போது இவன் தன் வாலை குழைத்துக் கொண்டு அவன் மேல் பாய இருக்க, தன் உதட்டின் மேல் விரல் வைத்து சத்தம் எழுப்பாதே என்ற மவுன பாஷையுடன் அவனை கண்டு கொள்ளாமல் அபி உள்ளே சென்று விடவும் தன் கோபத்தை வெளிப்படுத்துகிறாராம் இவர்!



அதைப் புரிந்து கொண்டவனோ உதட்டில் தவழ்ந்த புன்னகையுடன் ரெக்ஸ் முன் மண்டியிட்டு அமர்ந்தவன் “என்ன சார்? ரொம்ப கோபமா இருக்கீங்க போல!” என்று இவன் குழைய அப்போழுதும் முகம் திருப்பித் தான் இருந்தது. “டேய்! அம்மாவுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கத் தான் டா உன்னை சத்தம் எழுப்ப வேண்டாமென்று சொல்லி உள்ளே போனேன். அதற்காக எல்லாம் உன்னை மறந்து விட்டேனென்று அர்த்தமா? பெருசா கோபப்படுற!” என்று அபி தணிந்து கேட்க



எழுந்து தன் முன் கால் இரண்டையும் அபியின் நெஞ்சில் வைத்தவனோ இல்லை என்று இப்படியும் அப்படியுமாக தலையாட்டினான் ரெக்ஸ்.



“டேய்! நான் ஆபீஸ் போகணும் டா. சட்டையை அழுக்கு செய்யாதே” என்று போலியாக மிரட்டியவனோ அவனின் கேசம் கோதி நெற்றியில் முத்தமிட்டு “குட்” என்று மெச்சிக் கொண்டான் அபி.



அபிக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் கிடையாது. மனிதர்களை நம்புவதை விட இப்படிப் பட்ட வாயில்லாத ஜீவன்களை நம்பலாம் என்று நினைப்பவன். வீட்டிலிருக்கும் தாயின் பாதுகாப்பிற்கு இவனை நம்பி விட்டுவிட்டு எங்கும் செல்வான் அவன்.



“ரெக்ஸ்! ஸ்டாண்ட் அப்” என்ற அவன் கட்டளையை ஏற்று அவனின் இடுப்பு அளவிற்கு எழுந்து நின்றது அந்த வாயில்லாத ஜீவன். “ரெக்ஸ் கெட் ரெடி” என்று சொல்லி விட்டு இவன் காரை ஸ்டார்ட் செய்து வீட்டின் முன்பிருந்த ஃபௌண்டனைச் சுற்றி ஓட்ட வண்டியின் பின்னாடியே ஓடினான் ரெக்ஸ். பின்னர் அபி வண்டி கேட்டைத் தாண்டி கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்து வழி அனுப்புவது தான் ரெக்ஸ்யின் தினசரி வேலை. இவ்விளையாட்டைச் சிறு வயதிலிருந்து பழக்கியவனும் அபி தான்.



அபிரஞ்சன் தொழில் சாம்ராஜ்ஜியத்தில் தனக்கு எதிரியாக இருப்பவர்களுக்குச் சிம்ம சொப்பனமாக விளங்குபவன். ஆண்களுக்கே உள்ள சராசரி உயரத்துடன் அவனுடைய முப்பத்தி ஓர் வயதிலும் இன்றைய கால இளைஞர்கள் போல் சிக்ஸ் மற்றும் எய்ட் பேக்குடன் கட்டுக்கடங்காத காளை என மிளிர்பவன். நல்ல சிவந்த நிறம் சுருண்ட முடி கண்ணில் எப்போதும் டைட்டானியம் கிளாஸ் அணிந்து ஒரு ஆணழகனுக்கு உள்ள அனைத்து அம்சத்துடன் இருப்பவன்.



தொட்டதற்கு எல்லாம் கோபப்பட மாட்டான். அதே சமயம் கோபமும் வரும். தனிமை விரும்பி, பேச்சில் நிதானம் இருக்கும். எதுவும் யாரும் தன் கண்ணசைவால் குறிப்புணர்ந்து செயல் பட வேண்டும் என்று நினைப்பவன். இன்னும் கேட்டால் அப்படிச் செய்யவும் வைப்பவன். தனக்குக் கிடைக்கும் சிறிய ஓய்வு நேரத்தைக் கூட படிப்பில் செலவிடுபவன். உலக பொருளாதாரம் எல்லாம் தன் விரல் நுனியில் வைத்திருப்பவன்.



இளையராஜா பாட்டு பிடிக்கும், மெக்ஸிகன் உணவு பிடிக்கும், கார்டனிங் பிடிக்கும். விளையாட்டில் செஸ் பிடிக்கும், நீச்சல் பிடிக்கும். இதையெல்லாம் விட பணம் சம்பாதிக்கப் பிடிக்கும். அதை விட தாயைப் பிடிக்கும். இப்படி எல்லாம் பிடிப்பவனுக்குப் பெண்கள் என்றால் பிடிக்காது. அதிலும் திருமணம் என்றால் அறவே நாட்டம் இல்லாதவன். இது காதல் தோல்வியால் இல்லை. தன் தந்தையின் செயலால் அவனுக்குக் கிடைத்த சாபம்.



அதற்காக மூணாந்தரப் பொறுக்கியாக பார்க்கும் பெண்களை எல்லாம் படுக்கைக்கு கூப்பிட்டு அவர்களின் பெண்மையை அழிப்பவனும் இல்லை. ஒழுக்கத்தில் தனக்கென சில கோட்பாடுகளை வைத்து தன் தாயைப் போல இருக்க விரும்புபவன். இன்று வரை அக்மார்க் virgin ஆக வாழ்பவன். அவனுடைய தாரக மந்திரம் டூ ஆர் டை என்பது தான்.



இத்தனை நாள் விடுமுறைக்குப் பிறகு ஆபீஸ் போனவனுக்கு ஒரு வாரம் வேலைகள் நெட்டி முறித்துத் தள்ளியது. அன்று தன் அண்ணனிடம் ஆபீஸ் சம்மந்தமாக பேச வந்த துருவன் தங்கள் உரையாடல்கள் முடிந்தும் எழுந்து செல்லாமல் தயங்கிய படி அங்கேயே அமர்ந்திருக்க



“நம்ப V.P. காலனி குடோனிலியிருந்து ஸ்டாக் பற்றி இன்னும் மெயில் வரவில்லை. சோ அது என்னவென்று போய் பார்த்துவிட்டு வா...” லேப்டாப்பிலிருந்து கண்ணை எடுக்காமல் அபி கட்டளை இடவும்



தான் பேச வரும் விஷயத்தை அண்ணன் புரிந்து கொண்டான் என்பதை அறிந்து கொண்ட சின்னவனோ “அது வந்து ண்ணா...” இவன் இன்னும் தயங்கவும்



இவன் சொல்லாமல் போக மாட்டான் என்பதை உணர்ந்தவன் “ம்ம்... சொல்லு டா” தான் பார்த்துக் கொண்டிருந்த வேலையை விட்டு விட்டு கையைக் கட்டிய படி அபி கேட்க



“அந்த துரை கம்பெனி சம்பந்தமா நீங்க இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லையேண்ணா”



“ஓ... அப்படியா?” தன் மோவாயைச் சொறிந்தவன் “அப்போது ஸ்ரீராம் கம்பெனிக்கு மட்டும் நான் முடிவு எடுத்திட்டேனா துருவன்?” என்று கண்ணில் கூர்மையுடன் இவன் கேட்கவும், துருவன் தலை கவிழ்ந்தான்.



துரை கம்பெனிக்கு முன்பே ஆறு மாதமாக ஸ்ரீராம் கம்பெனி அபியுடனான பேச்சு வார்த்தைக்கு காத்துக் கொண்டிருக்கிறார்கள். அதைத் தான் அபி கோடிட்டு காட்டினான்.



“அண்ணா! ஸ்ரீராம் கம்பெனி வேற. ஆனா துரை கம்பெனி அப்படி இல்லைணா. இந்த கம்பெனியால் பல நன்மைகள் இருக்கு.

“யாருக்கு?” என்று அடுத்த தாக்குதல் அபியிடமிருந்து வரவும், மறுபடியும் தலை கவிழ்ந்தான் அவன்.



“சொல்லுடா யாருக்கு?” இவன் விடாமல் கேட்க



“எல்லோருக்கும் தான் ண்ணா.. முக்கியமா நம் நாட்டில் உள்ள பெண்களுக்கு”



அதாவது நம் தாய் தயாரித்த பொருளுக்கு மூடு விழா செய்து விட்டு யாரோ ஒருவர் தயாரிக்கின்ற இல்லை இல்லை துரை கம்பெனி தயாரிக்கிற பொருளுக்கு என் கையாலேயே திறப்பு விழா கொண்டாட வேண்டுமென்று நினைக்கிற. அதுவும் இந்தியா முழுக்க! அப்படித் தானே?”



அவன் குரலில் அனல் பறந்தது. டை அப் என்ற பெயரில் இன்னொர் கம்பெனியுடன் கை கோர்த்து அவர்கள் பொருளை விற்க விடாமல் செய்வது மட்டுமில்லாமல் அவர்களின் ரகசிய குறிப்புகளை அறிந்து அதை தன் பொருளுடன் கலந்து உலக மார்க்கெட்டில் தான் மட்டுமே கோலோச்ச நினைத்தான் அபி. அதிலும் அவர்கள் கை கொண்டே அவர்கள் கண்ணைக் குத்த நினைத்திருந்தான். இதையே அந்த நிறுவன எம்.டியும் நினைத்திருந்தால் என்ன செய்வது என்று யோசித்ததால் தான் இவ்வளவு கோபம் வந்தது அபிக்கு. சரி அதையும் தான் பார்ப்போமே என்று நினைத்து இவன் போக இவனுடைய ஈகோ தடுத்தது. இவன் மனநிலையோ இப்படி இருக்க



இதே கேள்வியை துருவன் ஒரு பெண்ணிடம் கேட்டபோது அவள் சொன்ன பதில் அச்சு பிசராமல் இப்போது அவன் காதில் மீண்டும் ஒலித்தது.



‘அப்பா! என்ன ஒரு பொய்! இதை யாராவது காதில் பூ வைத்திருப்பவர்களிடம் போய் சொல்லுங்க நம்புவார்கள். உங்க அம்மா தாயாரித்தது முழுக்க முழுக்க உடலுக்குத் தீங்கு விளைவிக்காத நல்ல பொருள். ஆனால் இப்போது நீங்க தாயாரிப்பது அதற்கு எதிர்மறையான ரசாயன பொருள். இதனால் எத்தனை பெண்களுக்குப் பாதிப்பு தெரியுமா? ஒரு பொருளைத் தயாரித்து சந்தையில் விற்கும்போது அதனால் மக்களுக்கு நன்மை இருக்க வேண்டுமே தவிர கெடுதல் இருக்கக் கூடாது’



அன்று அவள் இதையெல்லாம் என்னைப் பார்த்து ஈஸியாகக் கேட்டு விட்டாள். ஆனால் எனக்கு தான் என் அண்ணனைப் பார்த்து அப்படியெல்லாம் கேட்க தயக்கமா இருக்கிறது. இவன் தன்னுள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே



“வெல்.. டேக் இட் ஆர் லீவ் இட் துருவன்!” என்ற படி அபி தன் வேலையைப் பார்க்க ஆரம்பிக்கவும்



“எனக்காகக் கொஞ்சம் கன்சிடர் பண்ணக் கூடாதாண்ணா?” துணிந்தே துருவன் கேட்டு விட



“நான் செய்ய மாட்டேன் என்று சொல்லவில்லையே? அந்த M.D உன்னிடம் எதுவும் பேசாமல் என்னை வரச் சொன்னால் எப்படி? அவர் யார் எனக்கு கட்டளை இட? இப்போது அபியின் குரலில் மறுபடியும் சுருதி ஏறியது.



“அவர் இல்லண்ணா. அவங்க.... துரை கம்பெனி M. D ஒரு பெண்!”



“வாட்?!” அபியிடம் அதிர்வுடன் கூடிய சிறு வியப்பு. ஒரு பெண் எனக்கு கட்டளை இடுவதா என்று கோபமும் கலந்திருந்தது.



அவனுக்கு தெரிந்த வரை துரைசிங்கம் தான் அந்த கம்பெனியின் M.D அப்படி தான் தெரியும் எப்போழுது அங்கு ஒரு பெண் வந்தார்கள் என்ற கேள்வி அவனுக்குள்.



“ஆமாண்ணா.. அவங்க பேர் யுகநந்திதா! நான் அவங்க கம்பெனி சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் அனுப்பினேனே.. நீங்க பார்க்கவில்லையா?



ஒரு வினாடி கண்களை மூடி தன் இடது கையின் ஆள்காட்டி விரலால் இடது புருவத்தின் மத்தியில் வருடியவன் “சோ வாட்? இனி அந்த கம்பெனி கூட எந்த டை அப்பும் வேண்டாம். இதுவரை எவ்வளவு பேசியிருந்தாலும் எல்லாவற்றையும் டிராப் செய்து விடு” அபியிடம் அதிகாரத்துடன் கூடிய கட்டளை இருந்தது.



“அண்ணா...”



தன் கை உயர்த்தி “துருவன்!” என்று அதட்ட,



“அண்ணா நீங்க எதைச் சொன்னாலும் அதை நான் மறுத்து நடந்தது இல்லை. அப்படியே இப்பொழுதும் இந்த விஷயத்திலும் நடந்து கொள்வேன் அண்ணா. ஆனா எனக்காக இந்த ஒரு விஷயத்தில் மட்டும் நான் சொல்வதை நீங்கள் கேட்கக் கூடாதா? இதுவரை நான் உங்களிடம் எதுவும் கேட்டது இல்லை. இப்போது கேட்கிறேன் அண்ணா. அவர்களிடம் பேசுங்கள், அதற்கு முன் அவர்களைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள். பிறகு நீங்கள் என்ன சொன்னாலும் செய்கிறேன். சரிண்ணா.. நான் கிளம்புகிறேன்” என்று உள்ளன்புடன் நயமாகப் பேசியவன் வெளியே கிளம்ப எத்தனிக்க



அபியோ கண்களை மூடி கைகளைக் கோர்த்து தலையின் பின்புறம் வைத்து இருக்கையில் சாய்ந்தவன் “பாரதியை நம் வீட்டுக்கு மருமகளாக மட்டும் வரச் சொல். கம்பெனி விஷயத்தில் எல்லாம் இனி தலையிட வேண்டாம் என்று சொல்லி வை துருவன்” அதில் நீ சொல்லித் தான் ஆக வேண்டும் என்ற கட்டளை இருந்தது.



திடீரென்று கேட்ட அண்ணனின் குரலில் விதிர்விதிர்த்து திரும்பியவன் அவன் கண் மூடியிருப்பதைப் பார்த்து “அண்ணா...” என்று துருவன் ஏதோ சொல்ல வரவும், அதே நேரம் அபியின் போன் சிணுங்கவும் பின் எதுவும் சொல்லாமல் வெளியேறித் தன் இடத்திற்கு வந்தவனுக்கு ‘அண்ணனுக்கு ஏதோ தெரிந்திருக்கு’ என்ற படபடப்பையும் மீறி அவன் பாரதியை முதன் முதலில் சந்தித்ததை நோக்கி சன்னமான புன்னகையுடன் பயணித்தான் துருவன்.



ஒரு வருடத்திற்கு முன் சென்னையில் வளசரவாக்கத்தில் கம்பெனி விஷயமாக அவசரமாக ஒருவரைச் சந்திக்க துருவன் சென்று கொண்டிருந்த நேரம் வழியில் ஓரிடத்தில் மக்கள் கூட்டத்தால் போக்குவரத்து நெரிசலில் இவன் மாட்டிக்கொள்ள, “புல் ஷிட்! ஏற்கனவே டைம் ஆகிடுச்சு. இன்னும் இந்த கூட்டத்தைக் கிளியர் பண்ணாம என்ன தான் செய்றாங்க?” என்ற படி காரை விட்டு இறங்கியவன் கூட்டத்தை விலகி பார்க்க



“சென்னை மாநகராட்சியே! என்ன செய்கிறாய்? உன் கஜானாவில் பணம் இல்லையா? அந்நிய தேசத்துப் பிரதமர் வந்தால் உள்நாட்டு முதல்வர்கள் வந்தால் அவசர கதியில் நீ போடும் சாலையை இங்கு வசிக்கும் மக்களுக்காக போட்டால் என்ன?” என்று சல்வார் அணிந்த இளம்பெண்ணொருத்தி கூச்சலிட்ட படி தன் கேள்வியை அரசாங்கத்திடம் கேட்க, “ஆமாம்! போட்டால் என்ன?” என்று அவளைச் சுற்றியிருந்த சில பெண்கள் கையில் பதாகைகளைத் தாங்கிய படி கோஷமிட,



துருவனுக்கு சலிப்புடன் கூடிய கோபம் வந்தது. “ச்சை...” என்று காலைத் தரையில் உதைத்த படி தலையைக் கோதியவன் “இதுங்களுக்கு வேற வேலையே இல்லை! எப்போ பார்த்தாலும் கொடி பிடித்து கொண்டு திரிய வேண்டியது” என்று அவன் வாய்க்குள் முணுமுணுத்த நேரம்



முன்பு நடுநாயகமாகக் கேள்வி கேட்ட அந்த சல்வார் போட்ட பெண்ணே “இந்த பகுதி கவுன்சிலர் இப்பொழுது இங்கு வந்து இங்கிருக்கும் சேற்றில் கால் வைக்கும் வரை நாங்கள் இங்கிருந்து களைய மாட்டோம்” என்றவள் தன் கையிலிருந்த நாற்றில் சிறிது எடுத்து அங்கு குட்டை போலிருந்த சேற்று சகதியில் அவள் நட ஆரம்பிக்க, ஆடியே போனான் துருவன். ‘இது என்ன டா வம்பா போச்சு! ஏதோ கோஷம் போட்டுட்டு போய்டுவாங்கனு பார்த்தா இவங்க இன்று முழுக்க இங்கே தான் இருப்பாங்க போலவே!’



“ஏய்... ஏய்.... பட்டிக்காடு! இது என்ன வாய்க்கா வரப்பென்று நினைத்தயா? இப்படி நாற்று நடணும்னா தமிழ்நாட்டில் எங்கேயோ கடைக்கோடியில் இருக்கிற உன் கிராமத்தில் போய் அதை செய்துக்கோ. இது எங்களை மாதிரி படிச்சவங்க வாழ்கிற சிட்டி. டூ யு ஹேவ் எனி சென்ஸ்? சரியான கன்ட்ரிப்ரூட்!” எப்போதும் எல்லோரிடமும் தன்மையாவும் மரியாதையாகவும் பேசுபவன் துருவன். ஆனால் இன்று அவனுக்கிருந்த கண்மண் தெரியாத கோபத்தில் இடம் பொருள் தெரியாமல் இப்படி எல்லாம் கத்தி விட்டான்.



அங்கிருந்தவர்கள் இவனைச் சிறு வியப்புடன் பார்க்கவும் “கையில் நாற்று வைத்திருந்தவள் மட்டும் “வாங்க மிஸ்டர் கோட்டு சூட் போட்ட சிட்டிப்ரூட்! விவசாயம் செய்கிற விவசாயி மட்டும் இந்தியாவின் கடைக்கோடியில் வசிக்கணும். ஆனால் அதிலிருந்து வருகிற அரிசியை மட்டும் செவன் ஸ்டார் ஹோட்டலில் உட்கார்ந்து கை படாம பசிக்கு நாலு ஸ்பூன் பந்தாவுக்கு மூணு ஸ்பூன் பிறகு வேண்டா வெறுப்பாக இரண்டு ஸ்பூன் என்று நாசுக்காய் சாப்பிடும் நீங்க எல்லாம் சொகுசா சிட்டியில் இருக்கணும். இப்போ இங்கே என்ன பிரச்சனை என்று உங்களுக்குத் தெரியுமா? விவசாயத்திற்கு உகந்த இடம் சிட்டியா இல்லை கடைக்கோடி கிராமமா என்று நாங்கள் ஒன்றும் இங்கே பட்டிமன்றம் நடத்தவில்லை.



இந்த சாலை கடந்த ஒரு வருடமாக படு மோசமாக இருக்கு. இந்த குண்டும் குழியுமான ரோட்டைத் தான் பள்ளி மாணவர்களும் மருத்துவமனைக்குப் போகிற நோயாளிகளும் தினம் கடந்து போறாங்க. நல்லா பாருங்க இது என்ன ரோடா? அதள பாதாளத்தில் விழுந்து சாகணும்னு நினைக்கிறவங்க இங்கு வந்து விழுந்தா போதும். நேரா அவர்களுக்கு சொர்க்கமோ இல்லைனா நரகமோதான். தினம் இந்தப் பக்கம் போறீங்களே இதைச் சரி செய்யணும் என்று உங்களுக்குத் தோணுதா? அது எப்படி தோணும்? நீங்க தான் நீருக்குள்ளே புல்டவுசர் ஓட்டுகிற ஜேம்ஸ்பாண்ட் கணக்கா தானே போறீங்க! இதை அவள் சொல்லும்போது சுற்றியிருந்தவர்கள் சிரித்துவிட இவனுக்கு இன்னும் கோபம் ஏறியது.



“சார்! நாங்க எல்லாம் M.B.A மாணவர்கள். வாட்ஸ்ஆப் குரூப் மூலமாக மாணவர் பேரவை என்ற அமைப்பை ஆரம்பித்து அரசாங்கம் கண்டுகொள்ளாத சில விஷயங்களை அவங்க கிட்ட கொண்டு சேர்ப்பது தான் எங்க வேலை. அதனால் தான் பள்ளமாக இருக்கும் இந்த இடத்தில் நாற்று நட்டு அரசாங்கத்திற்கு எங்க எதிர்ப்பை நாங்க தெரிவிக்கிறோம்” என்று ஒரு மாணவன் துருவனை நெருங்கி விவரம் சொல்ல



‘இது தெரியாதவனா நான்? நானே இன்றைய நேரத்திற்குப் போக வேண்டிய இடத்திற்குப் போய் கான்ட்ராக்ட்ல சைன் செய்யனும் இருக்கேன்.. இவன் வேற அவள் மாதிரியே லெக்சர் கொடுத்துட்டு இருக்கான்’ என்று மனதிற்குள் நொந்தவன்



“அதற்கு இப்படி போவோர் வருவோரை எல்லாம் நிற்க வைத்து போராட்டம் செய்யக் கூடாது. உங்க கை காசை எல்லாம் போட்டு இரவோடு இரவா இங்கே சாலை போட உதவி செய்திருக்கணும். உங்களை எல்லாம் பார்த்தா பெரிய இடத்துப் பசங்க மாதிரி தான் தெரியுது. பிறகு என்ன? ஒரு நாள் பாக்கெட் மணி போதுமே இதை செய்ய!”



“வார்ரே வா! வாங்க தொழில் அதிபரே வாங்க! உங்களை பார்த்தா கூடத் தான் பெரிய மல்டி மில்லினர் மாதிரி தெரியுது” தெரியுது என்ன? உண்மையாகவே பிசினஸ் மாத இதழில் இவன் புகைப்படத்தை பார்த்திருக்கிறாள் அவள்.



“நாங்க எல்லாம் கொடுக்கிற வரிப்பணத்தில் தான் இங்கே அரசாங்கத்தின் கஜானாவே நிரம்புது. அதிலிருந்து எடுத்து தான் தொழில் முனைவோர் என்ற பெயரில் ஒரு கோடி ரூபாய் மானியமா வாங்கிட்டுப் போறீங்க. பிறகு உங்கள் பொருளை மார்க்கெட் செய்ய மானியம் கார் வாங்கினா மானியம்னு எல்லாவற்றையும் நீங்க வாங்கிட்டுப் போவீங்க. ரோடு மட்டும் நாங்க போடணுமா? ஏன் அதை நீங்க உங்க செலவில் போட்டா என்ன?” முன்பு பேசிய அதே சல்வார் போட்ட பெண்ணே இப்போதும் துடுக்காகப் பேச



அங்கிருந்தவர்களும் “படித்த பெண் இல்லையா? அதான் பாய்ண்டா கேட்கிறது!” என்று சொல்ல



“ஐயோ! இன்றைக்கு நான் முழித்த முகமே சரி இல்லை போலவே!” என்று வாய் விட்டு நொந்தவன் “அப்பா! என்ன வாய்! இங்கிருந்து கன்னியாகுமரி வரைக்கும் நீளுது” என்று இவனும் பதிலுக்கு அவளை மட்டம் தட்ட



அவளோ கோபத்தில் “அருகில் வந்தால் கையும் நீளும்.. அதையும் கொஞ்சம் பாருங்களேன்” என்றாள்.



“எதற்கு? அணைக்கவா?” சொன்ன பிறகே தான் எப்படிப் பட்ட வார்த்தையைச் சொன்னோம் என்பதே அவனுக்குத் தெரிந்தது.



அவளும் ஒரு நிமிடம் அதிர்ந்தவள் “என் பெயர் என்ன தெரியுமா? பாரதீ!” என்று அழுத்திச் கூறியவள் “பெயரிலேயே தீ இருக்கு.. ஜாக்கிரதை!” என்று எச்சரிக்க



“நான் எல்லாம் குளு குளு சிலு சிலு நயாகராம்மா! எப்படிப்பட்ட தீயையும் அணைத்துவிடுவேன்” கையால் ஆக்ஷனோடு இவன் சொல்ல மேற்கொண்டு இருவருக்கும் என்ன வாக்குவாதங்கள் தொடர்ந்திருக்குமோ அதற்குள் போலீஸ் வந்து அவர்களைக் கலைத்து வழி செய்யவும் அங்கிருந்து விலகிச் சென்றான் துருவன்.



அதன் பிறகு பாரதி அவனை மறந்தாலும் துருவன் அவளை மறக்கவில்லை. அவளுக்கே தெரியாமல் அவள் சம்பந்தப்பட்டதை அறிந்தான். அப்போது தான் அண்ணனுக்குத் தெரிய வந்திருக்குமோ என்ற ஐயப்பாடு அவனுக்கு. பாரதியை மறக்கவில்லை என்றாலும் நேரம் வரும்போது பேசிக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில் ஒதுங்கியே இருந்தான்.



அதன் பிறகு நான்கு மாதத்திற்கு முன் துரை கம்பெனியில் யுகநந்திதாவுக்குப் P.Aவாக அவளைப் பார்த்தவனுக்கு இன்ப அதிர்ச்சி. அண்ணன் சொல்வது போல் தனக்கு மனைவியாக தங்கள் வீட்டுக்கு இளைய மருமகளாக அவளே வர வேண்டும் என்ற எண்ணம் அப்போது தான் அதிக மழைச் சாரலோடு அவன் மனதில் துளிர் விட்டது. அதன் பின் தற்செயல் என்ற முறையில் இரண்டு முறை அவளை சந்தித்திருக்கிறான்.



அநியாயம் எங்கு நடந்தாலும் போர்க்கொடி பிடிப்பவள் பாரதி. தாய் இல்லை தந்தை திருமலை, துரை கம்பெனியில் G.Mஆக இருக்கிறார் அவர். நேர்மையின் மறுபிம்பம். அவளை வளர்த்தது கணவனை இழந்து தங்கள் வீட்டிலேயே இருக்கும் அவள் அத்தை தான். அவருடைய ஒரே மகன் புகழ், போலீஸ் பதவியில் இருக்கும் ஒரு பொறுக்கி.



தன் பதவியையும் வார்த்தை ஜாலத்தையும் வைத்து எத்தனையோ பெண்களை அவன் வலையில் விழ வைத்தாலும் பாரதியை மட்டும் அவனால் நெருங்க முடியவில்லை. அது தான் அவளே சொன்னாளே தன் பெயரிலேயே தீ இருப்பதை! அந்த தீயே புகழை அவளிடமிருந்து தூர நிறுத்தியது. இப்படி தான் அவள் சம்பந்தப்பட்ட அனைத்தையும் தெரிந்து வைத்திருந்தான் துருவன்.



அபிக்கு எந்த பெண்ணையுமே தன் வாழ்க்கைத் துணையாக அமைத்துக் கொள்ளத் தான் விருப்பம் இல்லையே தவிர தொழில் சம்பந்தமாக யாரிடம் எது பேசுவது என்றாலும் தவிர்க்க மாட்டான். ஆனால் இந்த துரை கம்பெனியில் M.D பெண் என்று தெரிவதற்கு முன்பிலிருந்தே அவர்களுடன் இணக்கமாகப் போய் பேச விருப்பம் இல்லாமல் போனது.




என்றும் எதையும் எப்பொழுதும் கேட்காத தம்பியே இன்று கேட்டுவிட்டான். அவனுக்காக என்றாலும் மேற்கொண்டு துரை கம்பெனி தயாரிப்புக்கு முடிவுரை எழுத வேண்டும் இல்லையா அதற்காகவாது பேசுவது என்று அரை மனதாக முடிவு செய்தவன் தன் வேலைகளை எல்லாம் முடித்துக் கொண்டு இரண்டு நாள் கழித்துத் தான் துரை கம்பெனி பற்றி துருவன் தந்த தகவல்களைப் பார்க்க ஆரம்பித்தான்...


உறவாக வேண்டுமடி நீயே... 1
 

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN