சாதி மல்லிப் பூச்சரமே !!! 11

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 11

வேந்தன் வெளியே கிளம்புவதற்கு முன் தன்னை வந்து பார்க்கச் சொன்னார் ஐயாரு. அதன்படியே இவன் அவர் அறைக்குச் செல்ல, “நம்ப குடும்பம் எப்டி பட்டதுன்னு தெரியுமில்ல ராசு.... காலைல இந்த புள்ள வந்தப்போம்திருந்து ரவுசு பண்ணிட்டு திரியுதா. இது பட்டணம் இல்ல இந்த புள்ள இஷ்டத்துக்கு நடந்துக்க. பாத்து சூதானமா இருக்கச் சொல்லுடே. ஒனக்குச் சொல்லவேண்டியது இல்ல... பாத்துக்கலே” அவர் முடித்து விட, ஒரு தலையசைப்புடன் அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் வேந்தன்.





இவன் காரில் வந்து அமர, அவனுக்கு முன்பே முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க காரில் அமர்ந்திருந்தாள் தென்றல். எதுவும் அவளிடம் வம்பு வளர்க்காமல் காரை முதலில் தங்கள் தோட்டத்திற்கு விட்டவன், அவளை இறங்கச் சொல்ல ஒரு முறைப்புடன் இவள் இறங்க. இவர்களைப் பார்த்ததும் அங்கு வேலை செய்பவன் ஓடி வர, அவனைத் தனியே அழைத்துச் சென்று அவனிடம் ஏதோ வேந்தன் சொல்லியவன்.





பின் ஒரு சிகப்பு ரோஜாவைப் பறித்து வந்து தன்னவளிடம் தந்து, “நீ கெட்டி இருக்குத பொடவைக்குத் தோதா இருக்கும் இந்த பூ. இங்கன இருக்குற வரையில தெனமும் பூ வெச்சிக்க. இனி தோட்டத்துலயிருந்து வந்துரும்... நான் சொல்லி இருக்குதேன்..” என்றவன் தன்னைவளை காதலுடன் ஆசை தீர பார்த்து ரசித்து விட்டு காருக்குச் சென்று விட





ஒரு வினாடி அவன் கொடுத்த பூவைக் கையில் பிடித்துப் பார்த்தவளுக்கு அதன் அழகில் மனது கொள்ளை போக, அதனால் அவன் மேலிருந்த சுணக்கம் தற்சமயம் மறைய, எந்த மறுப்பும் இல்லாமல் பூவைத் தலையில் வைத்துக் கொண்டாள் அவள்.





பிறகு காரை எடுத்தவன் அதை ஒரு ஓட்டு வீட்டின் முன் நிறுத்த, அந்த வீட்டின் உள்ளிருந்து நடுத்தர வயது பெண்ணொருத்தி போலியோவால் செயலிழந்த தன் ஒரு காலால் நடக்க முடியாத காரணத்தால் கைக்கு கட்டையைக் கொடுத்து அவசரமாய் எழுந்து வெளியே வரப் பார்க்க, அதற்குள் தென்றலுடன் அவசரமாக காரை விட்டு இறங்கியவன் “நான் தான் வீட்டுக்குள்ள வரப் போகுதேன்… பொறவு நீ ஏன் செரமப் படுத?” என்றபடி இவன் உள்ளே வர





“என்ன இருந்தாலும் ஐயா வாரையில எப்டி...” என்றாள் அந்தப் பெண்.





அங்கிருந்த சேரில் தென்றலை அமரச் சொன்னவன் “இப்போம் எப்டி இருக்காக?” என்று விசாரிக்க





“பரவாயில்லைனு சொன்னாக. தூங்கிட்டுதேன் இருந்தாக. இப்போம் எழுந்துக்கவே தான் கஞ்சி காய்ச்சிகிட்டு இருக்குதேன்” அந்த பெண் பதில் தர





“எங்கே அறையிலா....” என்றவன் தென்றலையும் அழைத்துக் கொண்டு உள்ளே செல்ல





கட்டிலில் படுத்திருந்தான் தென்றலால் காலையில் காரால் ஏற்பட்ட விபத்தில் பாதிக்கப்பட்ட அந்த நபர். இருவரையும் பார்த்ததும் அவன் எழுந்து அமர எத்தனிக்க, “இருக்கட்டும் ரத்தினம்…” என்றவன் “இவ வேணும்னு வண்டிய அப்டி ஓட்டிகிட்டு வரல... பிளஷர்ல ஏதோ பிரச்சனை. அதேன் உன் மேல இடிக்க வேண்டியதா போயிருச்சு.





கால் சரியாகற வர ஒரு மாசத்துக்கு வேலைக்கு வர வேணாம். கொஞ்சம் அரிசி, பருப்பு, காய் எல்லாம் எடுத்து வந்திருக்குதேன். செங்காவையும் வரச் சொல்லி இருக்குதேன். அவன் வந்ததும் எடுத்து வச்சிருவான். இந்தா இந்த பணத்தை வாங்கிக்கோ” நீளமாய் பேசிய வேந்தன் படுத்திருந்தவர் கையில் பணத்தைக் திணிக்க





அவன் மனைவியோ, “ஆஸ்பத்திரி செலவையும் நீங்கதேன் பாத்துக்கிட்டீக. இப்போம் இது வேறையா… நீங்க நல்லா இருக்கணும் ஐயா!” என்று மனதார வாழ்த்த





“நான் எதுவும் செய்யல மா. எல்லாத்துக்கும் உங்க எசமானி அம்மாதேன் காரணம். இவுகள வாழ்த்து...” என்றவன் பக்கத்தில் நின்ற தென்றலைக் கை காட்ட





“நீங்க ரெண்டு பேரும் நல்லா இருக்கணும் ஐயா” என்றாள் அந்த பெண்மணி.





இப்போது தென்றலுக்கும் அனைத்தும் புரிந்தது. இவள் விளையாட்டாய் பந்தயம் கட்டி வேகமாய் கார் ஓட்ட, அதில் விபத்தானவரும் அவர் மனைவியும் தான் இவர்கள் இருவரும் என்று தான் செய்த தப்பை உணர்ந்தவள், ‘பாவம்! இப்படிப் பட்ட பெண்ணைக் கல்யாணம் செய்த இவரும் படுத்துட்டா பிறகு எப்படி?’ என்று நினைத்தவளுக்கு மனது கஷ்டமாகிப் போனது.





கூடவே, அதனால் தான் மாமா சரனை அந்த அடி அடித்து தன்னை இங்கு அழைத்து வந்திருக்கிறார் என்பதும் அவளுக்குப் புரிந்தது.





கட்டிலில் படுத்திருந்தவர் பக்கத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்று படுத்திருக்க, என்ன நினைத்தாளோ? அந்த குழந்தையைத் தூக்கி கொஞ்சி பெயர் என்ன என்று கேட்டு பின் வேந்தனிடம், “மாமா... உன்னிடம் எவ்வளவு பணம் இருந்தாலும் தா” என்று உரிமையாய் அவனிடம் கேட்க





தன்னவள் முதன் முதலில் கேட்பதால் தன் பாக்கெட்டில் இருந்த மூவாயிரத்தையும் எடுத்துக் கொடுத்தான் அவன். “குழந்தை இருக்கும்னு எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தா ஏதாவது டிரஸ் வாங்கி வந்திருப்பேன். இந்தாங்க இந்த பணத்தை வச்சிக்கோங்க...” என்றபடி அந்த பணத்தைக் குழந்தையின் தாயிடம் கொடுக்க, வேந்தனுக்கு தன்னவளை நினைத்து பெருமையாக இருந்தது. இது தான் தென்றல்! நீ தப்பு செய்தாய் என்று சுட்டிக்காட்டினால் அதை ஏற்றுக் கொண்டு மனம் மாறுவாள் அவள்.





மறுபடியும் இருவரும் காரில் பயணம் மேற்கொண்டார்கள், “என்ன… என் மாமன் மவளுக்கு கோவம் போயிருச்சா?” இவன் திடீரென கேட்க





முகத்தை அவன் புறம் திருப்பியவள் “அதெல்லாம் போகாது. நீ செய்தது சரி இல்ல மாமா. அவனை அந்த அடி அடிக்கிற… பாவம்! இப்போ எங்க இருக்கானோ தெரியல...” இவள் சற்றே முதலில் சமாதானப்பட்டு பின் கோபப் பட





“ஹா... ஹா... ஹா! இந்த மாதிரி ஒருத்தி என்னைய எப்போம் வந்து கேள்வி கேப்பானுதேன் நான் காத்துகிட்டு இருக்குதேன்....” இவன் குறும்புடன் சீண்ட, ஒரு முறைப்புடன் முகத்தை திருப்பிக் கொண்டவள்.





“இன்னும் வேற எங்கே என்னை அழைச்சிட்டுப் போறீங்க?”





“எங்கனன்றத அங்கன போனா தெரிஞ்சிக்கிடப் போகுத” மாமன் பதிலில் பசை போட்டு ஒட்டாத குறையாக உதடுகளை மூடிக் கொண்டாள் தென்றல்.





இப்போது கார், ஊரைத் தாண்டி டவுனில் உள்ள ஒரு உயர்தர மருத்துவமனை முன்பு நிற்க, அவளுக்குப் புரிந்து விட்டது சரனைப் பார்க்க வந்திருக்கிறோம் என்று. அவனுக்குப் பலத்த அடி இல்லை என்றாலும் முகம் முழுக்க வீங்கிப் போய் நிறைய உள் காயங்களுடன் படுத்திருந்தான் சரண்.







தென்றல் உள்ளே நுழைந்தவள், “பிசாசுங்களா! பிசாசுங்களா! அறிவு இருக்கா உங்களுக்கு எல்லாம்? எத்தனை முறை போன் பண்ணினேன்? எடுத்தீங்களா?” மஞ்சுவை முறைத்தவள் அந்த நிலையில் படுத்திருந்த சரனை நான்கு அடி அடிக்க





“போதும்.. போதும்… அப்படியே பாசக்கார நண்பி மாதிரி நடிக்காத. ஊருக்கு வாடா ஊரைச் சுற்றிக் காட்டுறேன்.. இள ஆட்டுக்கறிய பொங்கி போட சொல்றேனு சொல்லிக் கூட்டிட்டு வந்துட்டு இப்போ உன் மாமாவை வைத்தே என்னை பின்னிப் பெடல் எடுத்துட்ட இல்ல நீ?” என்று வடிவேல் ரேஞ்சுக்கு பொங்கிய சரண், “என்ன அடிப்பா! ஒண்ணு ஒண்ணும் திம்சு கட்டையால என்னைய படுக்க வைத்து மிதிச்ச மாதிரி தானே இருந்தது!” மறுபடியும் இவன் அழாத குறையாக புலம்ப,





மஞ்சு வாய் பொத்தி சிரிக்க, தென்றலுக்கு அவனைப் பார்த்து பாவமாக இருந்தது. அதை மறைத்துக் கொண்டவள், “உனக்கு நல்லா வேணும். நான் அப்பவே சொன்னேன், இந்த விளையாட்டு வேணாம்னு. நீ கேட்டியா? உன்னால ஒருத்தர் கால் உடைந்து அங்க படுத்துட்டு இருக்கார். சோ, உனக்கு இது வேணும் தான். என் மாமா எதையும் தப்பா செய்ய மாட்டார் புரிஞ்சிக்க” தென்றல் பதில் கொடுக்க





அப்போது தான் அவளுடன் வந்திருந்த வேந்தனைப் பார்த்தார்கள் நண்பர்கள் இரண்டு பேரும். சரண், “சார்! உங்களுக்கு என்னை அடிக்கணும்னு நினைத்தா என் உடம்பில் எங்கே வேணா அடிங்க சார். ஆனா முகத்தை மட்டும் டேமேஜ் பண்ணாதீங்க. ஒரு மாடல் கலைஞனுக்கு முகம் தான் சார் முக்கியம்” என்று சரண் அடியை வாங்கிக் கொண்டு கெஞ்ச





இப்போது மஞ்சு, தென்றல் இருவருமே ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர். சரண் ஒன்றும் முழு மாடல் இல்லை. இப்பொழுது தான் அதற்கு தாயார் ஆகிறான். அதற்கே இந்த பில்டப்! வேந்தனுக்கு தான் அவனைப் பார்த்து பாவமாகிப் போனது. “சாரி தம்பி! பிளஷர்ல இருந்து நீங்க எறங்கவோதேன் விபத்துக்கு நீங்க காரணம்னு நான் நெனச்சேன்” மன்னிப்பையும் வேந்தன் கம்பீரமாய் கேட்க





“மாமா! அந்த விபத்து நடக்க முழு முதல் காரணமே இவன் தான்! அதனால் நீ மன்னிப்பு எல்லாம் கேட்காத” தென்றல் தன் மாமனுக்குப் பரிந்து வர





“நல்ல வேளை! நான் தப்பிச்சேன் யா... காரில் மறந்து வச்சிட்டு வந்ததை எடுக்க நான் போகறதுக்குள்ள முந்திரிக் கொட்டை மாதிரி இவன் போய்ட்டான். இல்லனா அந்த அடி எனக்கு விழுந்திருக்கும்...” மஞ்சு குதூகளிக்க





“y blood? same blood...” என்று தோழிகள் இருவரும் கலகலத்த படி ஹைஃபை கொடுத்துக் கொண்டார்கள். அதை பார்த்த சரண் காண்டாகி முறைக்க, நண்பர்களுக்குத் தனிமை கொடுத்து விலகிச் சென்றான் வேந்தன்.





“ஏய்! ஏன் டி போனை எடுக்கல?” மறுபடியும் தென்றல் அதையே கேட்க





“எங்கள் நண்பர்கள் குல திலகமே! ஞாபக மறதி ராசாத்தியே! அவன் போன் சார்ஜ் இல்லாம செத்துப் போச்சு. என் போன் சைலன்ட்ல இருக்கு. இதை எல்லாத்தையும் விட எங்க இரண்டு பேர் போனும் உங்க வீட்டிலேயே இருக்கு!” என்றவள் “இவனை அடிச்ச அடியில நான் பயந்து அப்படியே ஊருக்குப் போயிடலாமானு நினைச்சிட்டேன். நான் எடுத்துட்டு வந்த பேக்காவது மண்ணாவதுனு யோசித்த நேரம் உங்க வீட்டு கணக்குப் பிள்ளை இவனைத் தூக்கி காரில் போட்டார்.





எங்க வடிவேல் மாதிரி இவனை முட்டு சந்துல வைத்து எவ்வளவு அடிச்சாலும் தாங்குவானு மறுபடியும் மிதிச்சிடப் போறாங்கனு பயந்து சரி போறது தான் போகறோம் இந்த நாயையும் காப்பாத்தி கூட்டிட்டுப் போகலாம்னு தான் நானும் அதே காரிலே ஏற, இவனை ஆஸ்பிட்டல் கூட்டிட்டுப் போகிறதா சொன்னார் அவர். சரி, அடிச்ச அவங்களே இவனுக்கு இவ்வளவு பார்க்கும்போது பழகின நாம விடலாமான்னு தான் பழகின தோஷத்துக்கு இவன் கூட வந்துட்டேன்” மஞ்சு ஏற்றி இறக்கி வேண்டா வெறுப்பாய் சொல்ல





சரண் காதில் புகை வந்தது. “ஆனா ஒண்ணு லிஸ்மிதா! சோத்தையும் போட்டு கும்மாங்குத்து குத்துறதுனு கேள்விப் பட்டிருக்கேன். இன்று உன் நாரதர் வேலையால் என் வாழ்க்கையில் அது நடந்துடுச்சு. அதிலும் மருத்துவ செலவையும் பார்த்தாரு பாரு உன் மாமா... அங்க நிற்குது உங்க குடும்பம்!” என்று சோகத்தைப் பிழிந்த படி சரண் சொல்ல, தோழிகள் இருவரும் சிரித்துக் கொண்டார்கள்.





நண்பர்களைப் பார்த்து விட்டு இருவரும் வீட்டுக்குக் கிளம்ப, காரை ஓட்டிக் கொண்டிருந்த வேந்தன், “இப்போவாச்சும் என் மாமன் மவளுக்கு கோவம் போயிருச்சா?” என்று மறுபடியும் தன்னவளிடம் அடங்கா காதலுடன் கேட்க





“ம்ஹும்...” உதட்டைச் சுளித்தவள் “செய்றதை எல்லாம் செய்துட்டு எப்போ பார் கோபம் போச்சா... கோபம் போச்சான்னு கேளு மாமா...” என்று இவள் சலித்துக் கொள்ள





காரை ஒரு மர நிழலில் நிறுத்தியவன், அவள் கையைப் பிடித்து மென்மையாய் வருடி, “எத்தனை வருசம் ஆச்சு டி நாம இப்டி பாத்துப் பேசி... அன்னைக்கி அப்டி நடந்துகிட்டேனு என் மேல கோவமா போனவதேன் நீ....” இதைக் கேட்டதும் முகம் சிவக்க இவள் முகத்தை வேறு புறம் திருப்பிக் கொள்ளவும்,





அவளின் நிலை புரிந்தவன் மந்தகாசமாய் சிரித்த படி “அது எனக்கு அறியாத வயசு... ஒனக்குப் புரியாத வயசு...” என்று முணுமுணுத்தவன் “இம்புட்டு நாளுக்கு பொறவு சந்திச்சிக்கிடுற நாம சண்டை போட்டுக்கிடணுமா?” என்று கேட்டு “அதுவும் இல்லாம என் பாப்பு யார்ட்டயும் சொல்லடியோ சாபமோ வாங்கிறக் கூடாது. அதாம்ல ஒன்னைய புடிவாதமா கூப்ட்டு போனேன்...” இவன் மென்மையாய் காதலோடு சொல்ல





என்ன நினைத்தாளோ… “சரி சண்டை போடல. கையை விடு மாமா...”





“ம்ஹும்.... கோவம் இல்லை மாமான்னு சொல்லு. நான் விடுதேன்....” இவன் டீல் பேச





“கோபம் இல்லை மாமா” என்றவள் கண்களை மூடி சீட்டில் தலையை சாய்த்துக் கொள்ள, திருப்தியுடன் காரை எடுத்தான் வேந்தன்.





கண்களை மூடியவளுக்குள் ஆயிரம் கேள்விகள். ‘மாமா சொல்ற மாதிரி, எவ்வளவு கோபமா ஊருக்கு போனோம்... வரும்போதும் அவர் மேலே எவ்வளவு கோபமா வந்தோம்? ஆனா அதெல்லாம் எதுவும் நடக்காத மாதிரி இடையில் பிரிவே இல்லாத மாதிரி நான் எப்படி மாமா கிட்ட சகஜமா பேசினேன்? எதுவும் புரியல… எதுவா இருந்தாலும் நான் வந்த வேலையைச் சொல்லாம, சாதிக்காம விட மாட்டேன்!’ என்று மனதிற்குள் உறுதி எடுத்தாள் பிடிவாதக்காரியான பூந்தென்றலான லிஸ்மிதா!

 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 11
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN