குமரிகண்டம்
சித்திரை மாதம் நண்பகல் கடந்து பல நாழிகைகள் ஒடியிருந்த போதும் சூரியனின் ஆட்சி இன்னும் குறைய காணோம் வெப்பம் மிக அதிகமாக இருந்தது. அதனால் தெருவில் யார் நடமாட்டமும் காணப்படவில்லை. தெரு நன்றாக அகலமாக இருந்தது இரண்டு யானைகள் ஒரே நேரத்தில் நடந்து செல்லும் அளவிற்கு அகலம் கொண்ட இராஜவீதி அளவிற்கு இல்லாவிட்டாலும் நன்றாக அகலமாக இருந்தது. அந்த தெருவின் இருபுறமும் மரங்கள் வரிசையாக வளர்ந்திருந்தது. அவைகள் அவ்வப்போது குளிர்ந்த காற்றை வீசி வெப்பத்தின் கொடுமையை குறைந்தன. அந்த நேரத்திற்காகவே காத்திருந்தது போல மரங்களில் இருந்த பறவைகள் சத்தம் எழுப்பின. சில நொடிகளே தொடர்ந்தாலும் அந்த இடந்தை ரம்மியமாக மாற்றின அந்த பறவைகளின் குரல்கள். ஆனால் இவை எவற்றையும் கவனிக்க முடியாத நிலையில் ஒருவன் குதிரையில் அதி வேகமாக வந்து கொண்டிருந்தான். அந்த வெள்ளை நிற குதிரையும் அவனின் அவசரத்தை உணர்ந்தது போல வெகு வேகமாக ஓடி வந்தது. அவன் தலையில் இருந்த சுருள் முடியும் முகத்தில் முளைத்திருந்த அரும்பு மீசையும் அவனது அகவை இருபத்தி ஐந்திற்கு மேலிருக்க வாய்ப்பில்லை என்பதனை உறுதிபடுத்தியது. அவன் கைகளில் காணப்பட்ட தழுப்புகள் அவன் சிறு வயதிலேயே பல போர்க்களம் கண்டவன் என்பதனை காட்டியது. முக்கியமாக அவன் முகத்தில் தாடையின் ஓரம் இருந்த தழும்பு அவன் அழகை குறைப்பதற்கு பதில் அதிகமாக்கி காட்டியது. முகத்தில் படிந்திருந்த தூசி அவன் வெகு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறான் என்பதனை காட்டியது. அவன் இடுப்பில் தொங்கிய வாள் அவன் பெரும் வீரன் என்பதனையும் அதில் இருந்து வழிந்த குருதி சமீபத்தில் அவனின் வீரத்திற்கு நடந்த பரிச்சையையும் அதில் அவன் அடைந்த வெற்றியையும் காட்டியது. அவன் குதிரை ஒரு வீட்டின் முன்பே வந்து நின்றது அதிலிருந்து அலட்சியமாக குதித்த அவன் வீட்டின் உள்ளே ஓடினான். அங்கே அவன் கண்ட காட்சி அவனை கீழே விழச்செய்தது. மனது ஓடிந்து விழுதான். அங்கே ஒரு பெண் இரத்த வெள்ளத்தில் கிடந்தாள் சுற்றிலும் வீட்டில் உள்ள பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. அந்த தரையில் பலரின் காலடித்தடங்கள் கிடத்தன. அவை அனைத்தும் அங்கே அந்த பெண்ணிற்கும் அவளை அழிக்க நினைத்த கயவர்களுக்கும் நடந்த போராட்டத்தை காட்டின.இறுதியாக தன் மானத்தை காக்க தன் உயிரை கொடுத்து இருக்கிறாள் அந்த பெண் தன் உயிரை விட மானம் பெரியது என கொள்ளும் தமிழ் பெண் அல்லவா அவள். தன் வாளை எடுத்து தன் மார்பில் பாய்ச்சிக் கொண்டு இறந்து போயிருந்தாள் அவள்.நடந்தவை அனைத்தையும் ஒரே பார்வையில் உணரந்து அறிந்தான் அவன்.எழுந்து நடந்தான் அந்த பெண்ணின் மார்பில் இருந்த வாளை பிடுங்கினான். அவளை தன் மடியில் வைத்துக் கொண்டு அதே வாளை தன் மார்பில் மிகுந்த வேகத்துடன் பாய்ச்சி கொண்டு மடிந்தான்.கை பிடியில் சிங்கத்தின் தலை கொண்ட வாள் பளபளத்தது. அந்த இருவரின் உணர்வுகளும் உயிரும் மரணத்திலும் ஒன்றாக கலந்தன. அங்கே ஓடிய இரத்தத்தின் வழியாக....
" டேய் ஆதி எந்திரிடா " என அம்மா சொல்லி எழுப்பி விட்டார் ஆதியின் கண்கள் கலங்கியிருந்தன. அதனை கண்டு அவன் அம்மா " இன்னைக்கும் அதே கனவா " என்றார் இவனும் " ஆமாம் அம்மா " என்றான் ஆதிக்கு தொடர்ந்து பல மாதங்களாக இதே கனவு வந்து கொண்டிருக்கிறது காரணம் கிடைக்கவில்லை. ஆனால் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் இது தெரியும் அதனால் தான் அவர் அம்மா " உனக்கு வேற வேல இல்ல அந்த கனவுக்கும் வேற வேல இல்லை கவலபடாம கிளம்பு இன்னைக்கு காலேஜ்ல இருந்து டூர் வேற போறீங்க " என்றார். ஆதி வீட்டிற்கு ஒரே பையன் அதுவும் செல்ல பையன் இவன் தந்தை ஒரு வியாபாரி தன் பங்குதாரருடன் சேர்ந்து பெரிய நிறுவனத்தை நடத்தி வருங்கிறார். இருவரும் நண்பர்களும் கூட அதே போல் அவர்கள் மகன் மைக்கேலும் ஆதியும் நல்ல நண்பர்கள் சிறு வயதில் இருந்தே. செல்வத்திற்கு குறை ஒன்றும் இல்லை. ஆதியின் ஒரே பிரச்சனை இந்த கனவு தான் மாதத்தில் பாதி நாட்கள் இதே கனவுடனும் கண்ணீரோடும் தான் எழுவான். அதற்கான காரணம் தான் தெரியவில்லை. இன்று கல்லூரியில் இருந்து சுற்றுலா வேறு செல்லுகிறார்கள். இன்றும் அதே கனவு இருந்தும் உற்சாகத்துடன் கிளம்பினான். கல்லூரி நண்பர்கள் அனைவரும் சேர்ந்து பெங்களுர்,டில்லி என பல ஊர்கள் செல்ல திட்டம் இட்டு இருந்தனர். மொத்தம் 10 நாட்கள் சுற்றுலா இந்த சுற்றுலா தன் வாழ்க்கையை மாற்றும் என அவன் அறிந்திருக்கவில்லை. சுற்றுலா நல்லபடியாகத்தான் தொடங்கியது தன் நண்பன் மைக்கேலுடன் இன்பமாக சென்றான். முதல் நாள் பெங்களூரில் ஒரு அருங்காட்சியகத்திற்கு சென்றிருந்தனர். அங்கே ஒவ்வொரு பொருளாக அங்கிருந்த பொருப்பாளர் விளக்கி கொண்டிருந்தார். ஒரு வாளைக் காட்டி " பசங்களா இந்த வாள் ஒரு பொக்கிஷம் கடலுக்குள்ள மொத்தமாக மூழ்கி போன குமரி கண்டத்துல இருந்து ரொம்ப கஷ்டப்பட்டு கொண்டு வரப்பட்டது வாள்ள கூட எவ்வளவு கலை நயம் பாருங்க " என விளக்கினார். ஆதியும் ஆர்வமாக அதனை பார்க்க அதன் பிடியில் சிங்க தலை. அவன் அதனை உற்றுப் பார்க்க தன் கனவில் காணும் அதே வாள்.அதுவும் அவனை நோக்கி அதிர்வது போன்ற உணர்வு.அதிர்ச்சியுடன் தன் கனவு நிஜம் தானா.? என எண்ண நெஞ்சில் இருந்து இரத்தம் அதே வாள் குத்திய வலி மயங்கி சாய்ந்தான் அருகே இருந்த மைக்கேல் தாங்கி பிடித்தான்.
பௌர்ணமிக்கு முந்தைய நாள் இரவு நிலவு பிற நாட்களை விட அதிக ஒளியாக தெரிந்து கொண்டிருந்தது. அந்த இரவில் அந்த காட்டின் அழகு அதிகமாக தெரிந்தது. மரத்தின் இடையே பாய்ந்த நிலவின் ஒளி திட்டு திட்டாக பல வர்ண ஜாலங்களை காட்டிக் கொண்டிருந்தது. அங்கிருந்த அதிகப்படியான அமைதியே ஒரு பயத்தை அளித்தது. அதனை கெடுக்கும் வகையில் சில நேரங்களில் கேட்ட மிருங்கங்களில் சத்தம் பயத்தை அதிகப்படுத்தியது. அனைத்திற்கும் மேலாக கேட்டது ஆந்தையின் அலறல். இவை எதனையும் லட்சியம் செய்யாமல் அலட்சியமாக அந்த காட்டின் ஊடே ஓடியது ஒரு வெண் நிற புரவி. அதனை போலவே அதன் மேல் படு அலட்சியமாக அமர்ந்திருந்தான் அந்த வாலிபன். "வீரா நாம் செல்ல வேண்டிய இடம் தொலைவில் உள்ளது இரவு முழுவதும் பயணம் செய்தால் தான் அதனை அடைய முடியும் " என்றான் அந்த புரவியும் புரிந்தது போல தலையை ஆட்டியது. மேலும் அவன் " உனக்கு களைப்பு இல்லையே? " என்றான். அதற்கு அந்த புரவி " இல்லவே இல்லை " என்பது போல கனைத்துக் கொண்டு சென்றது.
மறு நாள் முழு பௌர்ணமி நிலவு. அதில் முழுவதும் நனையும் கடற்கரை அங்காடி. அது சாதாரண அங்காடி அல்ல முத்துகள் பல விற்கும் அங்காடி. அதில் பல நாட்டவரும் இருந்தனர். எகிப்து, கிரேக்கம்,சீனா,பாலி, தற்கால இந்தோனேசியா என பல நாட்டவர். குள்ளமாக இருந்த சீனரும், உயரமாக இருந்த அரேபியேரும், நடுத்தரமாக இருந்த தமிழரும், இந்தோனேசியாவின் வெப்பத்தால் புஷ்டியாக இருந்த மக்களும் ஆர்வமாக இருந்தனர். அனைவரும் எதற்காக வந்து இருக்கின்றனர்?...? முத்துக்காக... அந்த ஊரின் பெயர் முத்தூர் பெயருக்கேற்ப அந்த ஊரின் முத்து உலகம் முழுவதும் பிரபலம். சூரிய ஓளியில் அந்த முத்துக்களை காட்டினால் வைரகற்களை போல மாறும். ஒரு பொற்காசு முதல் கோடி பொற்காசு வரை விலை போகும் முத்துகளும் உண்டு. அரண்மனை வீரர்களும் மக்களும் மீன் பிடிக்க போவதை போல் முத்துக்களை பிடிக்க செல்வர் திருவிழா போல அந்த நிகழ்வு நடைபெறும். ஒரு சிப்பியில் ஓரே முத்து இருக்கும் அது இராஜ முத்து ஆகும். அளவில் பெரியதாக இருக்கும் முத்து அரசாங்கத்திற்கு சொந்தம் ஆகும். பிற முத்துகள் விற்கப்படும். ஆண்டு முழுவதும் அந்த திருவிழா நடைபெறும்.இந்த நிகழ்வு அந்த ஊர் மக்களின் செல்வத்திற்கு சான்று என்றால் மற்றொரு புறம் வீரத்தின் சான்று அரங்கேறியது.பல நூற்றுக்கணக்கான புரவிகள் பழக்கப்பட்டு கொண்டிருந்தன. அவை புதியதாக அரபு தேசத்தில் இருந்து அரண்மனைக்காக வாங்கப்பட்ட புரவிகள். அவற்றை கட்டளைக்கு கீழ்படியும் புரவிகளாக மாற்ற அரச வீரர்கள் பயிற்சி அளித்துக் கொண்டிருந்தன. ஒவ்வொரு புரவியும் ஒவ்வொரு வண்ணம் ஒவ்வொரு குணம். அவற்றின் குணத்திற்கேற்பே அவை கட்டப்பட்டிருந்தன. சில புரவிகள் முன்னங்கால்களில், சிலவை கழுத்தில். அவற்றை வீரர்கள் பழக்கும் காட்சியை காண பலர் கூடியிருந்தனர். மாதத்தில் சில நாட்கள் இவை நடை பெறும். அந்த காட்சி கண் கொள்ளா காட்சியாக இருக்கும். எந்த புரவியும் தன் மேல் மனிதர்கள் பயணம் செய்வதை விரும்பாது. அவற்றை அடக்கி வழிக்கு கொண்டுவருவது வீரம். அங்கு புலப்பட்டது அந்த நாட்டின் வீரம்.இவ்வாறு பல சிறப்பு மிக்க விஷயங்களை உள்ளடக்கி கம்பீரமாக காட்சி தந்தது அந்த குமரி நாடு அதாவது குமரிகண்டம்