மாயம் 1

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நீ
நான்
என்ற
இரு சொல்
நாம்
என்று
மாறும் நாள்
அருகிலா தொலைவிலா???

அன்றும் வழக்கம் போல் தன் காதலி நிலவை ஓய்வெடுக்க சொல்லிவிட்டு தனது கடமையை செய்ய புறப்பட்டான் கதிரவன். தன் வரவுக்காக காத்திருக்கும் அனைவரையும் மகிழ்விக்க தயாரானான் ஆதவன். அவனது வரவை முன்கூட்டியே அறிவிக்கும் முகமாக அவனது உற்ற தோழனும் நலன் விரும்பியுமான சேவல் உச்சஸ்தாயில் கூவியது. தனது நண்பனின் ஆர்ப்பாட்டமான வரவேற்பில் மகிழ்ந்த ஆதவன் தனது கதிர்களை மெல்ல பரப்ப ஆரம்பித்திருந்தான். இவ்வாறு சூழல் விழித்தெழ அதுபற்றி கவலையின்றி இன்னும் உறங்கிக்கிடந்தது அத்தெரு.

அந்தத்தெருவின் பிரமாண்டமே இது செல்வந்தப்பிரபுக்கள் வாழும் இடம் என பரிந்துரைக்கும். “மாடமாளிகைகள் கூட கோபுரங்கள்” என்ற உயர்வு நவிற்சி அணிக்கு சற்றும் குறையாத கட்டமைப்புக்களுடனும் செல்வ செழிப்புக்களுடனும் வியத்தகு வகையில் காட்சியளித்தது அத்தெரு.
மேலும் இயற்கையின் சில படைப்புகளும் மெழுகூட்ட அத்தெரு இன்னொரு தேவலோகமாக மிளிர்ந்தது. அத்தெருவின் மற்றைய மாளிகைகளை விட பிரம்மாண்டத்தின் உச்சகட்டமாக திகழ்ந்த லஷ்மி இல்லமே நம் கதையின் கதைக்களம்.

என்றும் போல் அன்றும் தன் பூஜை புனஸ்காரங்களை முடித்துவிட்டு தன் அன்புக்கணவரை கவனித்துக்கொண்டிருந்தார் சுபலஷ்மி. நானும் உனக்கு சளைத்தவனல்ல என்று தன் மனையாளை சீண்டிக்கொண்டிருந்தார் யோகேந்திரமூர்த்தி.

யோகேந்திரமூர்த்தி- சுபலஷ்மி இருவரும் மனமொத்த தம்பதிகள். யோகேந்திரமூர்த்தி நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். தனது தந்தையின் தொழிலான புடவைத்தொழிலில் புதுப்புது உத்திகளை கையாண்டு சிறிது சிறிதாக விருத்திசெய்தார். அவர் தொழிலில் கால்பதிக்கத்தொடங்கிய காலகட்டத்தில் தன் அத்தை மகளான சுபலஷ்மியை தன் மனையாளாக்கிக்கொண்டார்.

யோகேந்திரமூர்த்தியின் கடின உழைப்பாலும் சுபலஷ்மியின் திறமையான வீட்டு நிர்வாகத்தாலும் அவர்களது செல்வநிலை உயர்ந்தது. பொருளால் மட்டுமல்லாது குணத்தாலும் அவர்களது செல்வநிலை உயர்ந்தே நின்றது... இத்தம்பதிகளின் சீமெந்த புதல்வர்களே ரிஷிராஜ் மற்றும் ரித்விராஜ்.

மூத்தவன் ரிஷிராஜ்....

.இளம்தொழிலதிபர்.....

யூ.எஸ் இல் எம்.பி.எ பட்டப்படிப்பை முடித்துவிட்டு தந்தையின் தொழிலை பொறுப்பேற்று உலகம் முழுதும் கிளைகளை கொண்ட வெற்றிகரமான தொழிலாக விஸ்தரித்துள்ளான். இளமையும் விவேகமும் இவனது பலம். “ரிஷிராஜ் டெக்ஸ்டைல்ஸ்” இவர்களது தொழில் சாம்ராஜ்ஜியத்தின் திருநாமம்.

இளையவன் ரித்விராஜ். பி.டெக் பட்டதாரி. சுயமாகவும் தனக்கு விருப்பமான துறையில் தொழிலொன்றினை தொடங்கவேண்டும் என்ற அவாவினாலும் தன் தமையனை போல் வெற்றியடையவேண்டும் என்ற உந்துதலினாலும் சிறிய அளவில் அட்வடைசிங் கம்பனியொன்றினை ஆரம்பித்து கடந்த இரண்டு வருடங்களில் பல பெரிய நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவிற்கு நிறுவனத்தின் நிலையை உயர்த்தி தன் வெற்றியை தெரிவித்துள்ளான். குறும்பும் பிடிவாதமும் இவனது பிறவிக்குணம். மீண்டும் நாம் கதைக்கு வருவோம்.

“என்ன சுபா டீலா நோ டீலா??” என்று தன் மனையாளை வம்பிழுக்க தயாரானார் மூர்த்தி.

“என்னங்க சொல்லுறீங்க??? நீங்க சொல்றது எனக்கு புரியலைங்க??” என்று அப்பாவியாய் தன் கணவரிடம் வினவினார் சுபா.

“இவ்வளவு நேரம் நீ பேசுன டீலிங்கோட ரிசல்ட் என்னானு கேட்டேன்??”

“ஏங்க நான் சாமி கும்பிடுறது உங்களுக்கு டீலிங் பேசுற மாதிரி இருக்கா??”

“ஆமா மா. சாமிகிட்ட நீங்களாம் டீலிங் தானே பேசுவீங்க. எங்களை மாதிரி அப்பாவிகளை படுத்துனது பத்தாதுனு அவரையும் இப்படி படுத்துரீங்களேமா....”

“ இப்போ எனக்கு ஒன்னு தெரிஞ்சாகனும்..அப்படி என்ன உங்களை நான் படுத்திட்டேன்???”

“என்ன செய்யலைனு கேளுமா... காலங்காத்தாலே தூங்குற மனிஷனை மணியடிச்சி எழுப்பிட்டு என்ன செஞ்சேன்னா கேட்கிற?? நல்லதுக்கு காலமில்லடா சாமி..” என்று போலியாக புலம்பினார் மூர்த்தி.

“சாமி கும்பிடுறது தப்பாங்க???”

“சாமி கும்பிடுறது தப்பில்லைமா... ஆனா இப்படி காதுலயே வந்து மணியடிக்கிற பாரு... அது தான் தப்பு...”

“சரி...இனிமே உங்களுக்கு பெட்காபி கட்.... நீங்க எப்போ எழும்புறீங்களோ அப்போ கேட்டு குடிச்சிக்கோங்க... பெட்காபி மட்டும் இல்லை... எல்லாமே...”என்று எல்லாமே என்ற வார்த்தையை சற்று அழுத்தமாக கூறினார் சுபா.

“ஏன் சுபா... இப்படி என் அடிவயித்துல கை வைக்கிற??? தெரியாமல் அப்படி சொல்லிட்டேன்.. இந்த அப்பாவியை மன்னிச்சிருமா.....என்னோட எனர்ஜி பூஸ்ட்டே அதுகள் தானே.. கொஞ்சம் கருணை காட்டுமா...”

“அந்த பயம் இருக்கட்டும்... இருந்தாலும் உங்களுக்கு இம்புட்டு அலும்பு ஆகாதுங்க...”

“அப்போ எவ்வளவு வேணும்னு சொல்லுற சுபா??”

“ஐயா சாமி உங்ககிட்ட வாய் குடுத்தது தப்பு தான். இப்போதைக்கு ஆளை விடுங்க.”

“ஆஹா.. சுபாமா நீ தான் என் ஆளு.. உன்னை அப்படியெல்லாம் விடமுடியாது...”

“பிள்ளை இல்லாத வீட்டில் கிழவன் துள்ளி விளையாடுறானாம்... பேரப்பிள்ளை எடுக்கிற வயசாச்சி.. இப்போ உங்களுக்கு ரொமேன்ஸ் ஒன்னு தான் குறை...”

“ரொமேன்ஸிற்கு ஏதுமா வயசு.. ஆறிலும் காதல் அறுபதிலும் காதல்னு நம்ம பெரியவங்க சொல்லியிருக்காங்க.... நீ என்ன இப்படி சொல்லுற??”

“ஆறிலும் சாவு நூறிலும் சாவுனு தான் கேள்விபட்டிருக்கேன்...இது என்னங்க புதுசா??”

“பழமொழி சொன்னா அனுபவிக்கனும்... இப்படி ஆராயக்கூடாது...”

“சரி விடுங்க... உங்க ரொமேன்ஸை பிறகு பார்த்துக்கலாம்.. முதல்ல உங்க புள்ளைக்கு ஒரு வழி பண்ணுங்க... நம்ம ரிஷிக்கு இந்த வருஷத்துக்குள்ள முடிச்சா தான்
சின்னவனுக்கு பார்க்க ஆரம்பிக்கலாம். இந்த புள்ள என்னடானா பிடி குடுக்கமாட்டேன்கிறான். காலாகாலத்துல செய்யவேண்டியதை செய்யனும்ங்க.. நீங்க தான் அவன்கிட்ட பேசனும்...”

“நானும் அதைபத்தி யோசிச்சேன் மா..நான் அவன்கிட்ட பேசுறேன்..ஆனா என்னால அவனை வற்புறுத்தவோ கட்டாயப்படுத்தவோ முடியாது...”

“ஐயோ நீங்க வேற ஏங்க.. நான் என்ன அவனை நாளைக்கேவா கல்யாணம் பண்ணிக்க சொல்றேன்... இதை பத்தி பேச ஆரம்பிச்சாலே பையன் காணாமல் போயிர்றான்...முதல்ல நான் சொல்லுறதை காது குடுத்து கேட்க சொல்லிங்க.. எதுவும் அவன் விருப்பத்துக்கு மாறாக நடக்காது..”

“உத்தரவு மகாராணி..தாங்கள் செப்பியதை தாங்கள் ஈன்றெடுத்தவனிடம் ஒப்பித்துவிடுகிறேன். தங்கள் உத்தரவை சிரமேற்கொண்டு செய்து முடிப்பான் உங்கள் அடிமை..” என்று நாடகப்பாணியில் பேசினார் மூர்த்தி..

“ஐயா சாமி... உங்க லொள்ளு தாங்கலை... இன்னைக்கு இந்த ரவுண்டு போதும்.. நாளைக்கு கொஞ்சம் மிச்சம் வைங்க..”

“ பார்த்தியா உனக்கே பழகிடுச்சி... அதான் ஐயாவோட திறமை...”

“போதும் உங்க அரட்டை...பையன் சாப்பிட வந்திடுவான்..வாங்க டைனிங் ஹாலிங்கு போகலாம்...” என்றுவிட்டு அறையை விட்டு வெளியேறினார் சுபா...

“கட்டின புருஷன் பேசுறதை அரட்டைனு சொல்லுற பொண்டாட்டி இவ மட்டுமா இருப்பா.. ஆண்டவா இதெல்லாம் உனக்கு தான் வெளிச்சம்” என்று அங்கலாய்த்தவாறு தன் மனையாளை பின்தொடர்ந்தார் மூர்த்தி..

“என்னமா உன் பசங்க வந்துட்டாங்களா??”

“இல்லைங்க... இரண்டு பேரும் கிளம்புறதுக்கு இன்னும் டைம் இருக்குங்க... நீங்க சாப்பிடுங்க.. இன்னைக்கு எங்கயோ போகனும்னு சொன்னீங்களே...சாப்பிட்டு கிளம்புங்க..”

“ஏன்மா எனை துரத்துவதிலேயே குறியாக இருக்க..??”

“தெரியாமல் சொல்லிட்டேன்...நீங்க கிளம்புங்க இல்லைனா இங்கேயே இருங்க.. நான் எதுவும் சொல்லலை...”

“என்ன சுபா இதுக்கெல்லாம் கோவிச்சிக்கலாமா?? என்னமோ தெரியலமா... உன்னிடம் வம்பிழுக்காட்டி எனக்கு அந்த நாளே சோர்வா இருக்கும்...”

“நக்கலு...” என்று தம்பதிகளிருவரும் ஊடலில் திளைத்திருக்க அதற்கு தற்காலிக இடைவெளியாக அமைந்தது ரிஷியின் வருகை...

“குட்மார்னிங் பா...குட்மார்னிங் மா..”என்று காலை வணக்கத்தை தெரிவித்தபடி டைனிங் டேபிள் அமர்ந்தான் வினய்.
அவனது காலை வணக்கத்தை ஏற்றுக்கொண்டனர் பெற்றோர் இருவரும். மூர்த்தியோ இடைநிறுத்தியிருந்த தன் கேலியை மீண்டும் ஆரம்பித்தார்.

“ என்ன ரிஷி... இன்னைக்கு சீக்கிரம் கிளம்பிட்ட போல... உங்க அம்மா அடிச்ச மணி உன்னையும் தூங்கவிடலையா??”

“ஆமா பா.. இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங்... அலாரம் வைக்க மறந்துட்டேன்... ஆனா அம்மாவோட மணி சத்தம் இருக்க பயமேன்???” என்று தந்தையோடு இணைந்து தன் அன்னையை வார

“அப்பாவும் மகனும் கூட்டணி போட்டுட்டீங்களா?? இனி என்னோட தலல உருளப்போவது கன்போர்ம்..”

“ஏன்பா ஏதும் கட்சி ஆரம்பிக்கப்போறதா அம்மாகிட்ட சொன்னீங்களா??” என்று தன் அதிமுக்கிய சந்தேகத்தை ரிஷி தன் தந்தையிடம் கேட்க

“இல்லையே ரிஷி... அப்படி ஏதும் சொன்னதா எனக்கு நியாபகம் இல்லையேடா...”

“ அம்மா ஏதோ கூட்டணி பத்தி சொன்னாங்களே... அதான் கேட்டேன்..”

“டேய் ஏன்டா காலையிலேயே அப்பாவும் மகனும் என்னை இப்படி பந்தாடுறீங்க?? ஏன்டா இந்த அம்மாவை பார்த்தா பாவமாயில்லை...??”

“பாவமா இல்லைதான்... ஆனா இன்னைக்கான கோட்டாவை இதோடு முடிச்சிக்குவோம்.. இன்னைக்கு விட்டதை நாளைக்கு கன்டினியூ பண்ணலாம்...”

“டேய் இது என்ன டெஸ்ட் மேட்சா?? செக்கன்ட் இன்னிங்ஸ் விளையாட???” என்று சுபா பதற

“இல்லைமா... இது நம்ம ஊரு டிவி சீரியல் மாதிரி... ஒவ்வொரு நாளும் போய்கிட்டே இருக்கும்..” என்று ரிஷி கூற மூர்த்தியை முறைத்த படி சுபா

“இப்போ சந்தோஷமாங்க?? இதுக்கு தானே ஆசைப்பட்டீங்க?? என்று முறுக்கிக்கொண்டார். இந்த சூழ்நிலையில் தன்னை காக்க எண்ணிய மூர்த்தி

“டேய் மகனே என் முன்னாடியே என் பொண்டாட்டியை நீ இப்படி படுத்தக்கூடாதுடா...”

“என்னப்பா இப்படி அந்தர் பல்டி அடிக்கிறீங்க..?”

“ மகனே இப்படி எல்லாம் குட்டிக்கரணம் அடிச்சா தான்பா அவன் குடும்பஸ்தன்...”

“குடும்பஸ்தனுக்கு தான்பா அந்த கஷ்டம் எனக்கு இல்லை... இது தான் பேச்சுலர்ஸ் லைப்பில் உள்ள கிக்கு... அதெல்லாம் உங்களுக்கு புரியாது...”

“ரிஷி நாங்களும் இந்த ஸ்டேஜெல்லாம் தாண்டிதான் வந்திருக்கோம்.. பிரம்மச்சாரி வாழ்க்கையை விட சம்சாரி வாழ்க்கையில் சுவாரஸ்யம் அதிகம்பா.. அது வாழ்ந்து பார்த்தா தான் புரியும்..”

“ சரிபா..அது வரும்போது பார்த்துக்கலாம்.. இட்ஸ் கெட்டிங் லேட்பா.. நான் கிளம்புறேன்.. பாய் பா... பாய் மா...” என்றுவிட்டு உணவை உண்டுமுடித்து எழுந்து சென்றான் ரிஷி... அவன் கிளம்பியதும் சுபா தன் கணவரிடம்

“ பார்த்தீங்களாங்க... எப்படி நழுவுறான்னு... இவனை என்னங்க செய்யலாம்??”

“பொறுமையா இரு சுபா.. அவன் ஒன்னும் சின்னப்பிள்ளை இல்லை.. இவ்வளவு பெரிய பிசினஸ்ஸை திறம்பட நடந்துறவனுக்கு எதை எப்போ செய்யனும்னு தெரியும்... கொஞ்சம் பொறுமையா இரு...விட்டு பிடிக்கலாம்..”

“ஏதோ சொல்லுறீங்க... எல்லாம் நல்லபடியா நடந்தா சரிதான்..”

“நடக்கும் சுபா.. சரி ரித்வி எங்க?? இன்னுமா தூங்குறான்??”

“ஆமாங்க.. அவன் நேத்து நைட் வர ரொம்ப லேட்டாச்சு... அசந்து தூங்குறான்... பதினொரு மணிக்கு மேலே ஆபிஸ் போனா போதும்னு சொன்னான்...”

“சரி சுபா... நானும் கிளம்புறேன்... ரங்கனை பார்க்க போகனும்.. அவன் இன்னைக்கு நைட் லண்டன் கிளம்புறான். ஆபிஸ் விஷயமா கொஞ்சம் பேசவேண்டி இருக்கு...”

“சரிங்க பார்த்து போயிட்டு வாங்க.. லன்சிற்கு வீட்டுக்கு வருவீங்க தானே??”

“ஆமா சுபா.. அவ்வளவு தானா இல்லை இன்னும் சில உத்தரவுகள் மீதமிருக்கா இந்த அடியேனுக்கு??”

“அவ்வளவு தான் .. நீங்க கிளம்புங்க..” என்று சிரித்தவாறு தன் கணவனை வழியனுப்பிவிட்டு தன் வேலையை கவனிக்கத் தொடங்கினார் சுபா...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN