சாதி மல்லிப் பூச்சரமே!!! 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 13
மறுநாள் காலையிலேயே நண்பர்கள் இருவரும் கிளம்பிவிட்டார்கள். அதிலும் சரண் தனிப்பட்ட முறையில் தனியே வந்து தென்றலிடம் பல ஆயிரம் நன்றிகளைச் சொல்லிவிட்டுத் தான் சென்றான்.


சற்று நேரத்திற்கு எல்லாம் கோவிலுக்குச் சென்றிருந்த கந்தமாறனும், மூர்த்தியும் வந்து விட. ரொம்ப வருடம் கழித்து மகளைத் தன் வீட்டில் பார்க்கவும் மாறனுக்கு கண் கலங்கி விட்டது. “வா தாயி! இப்போம்தேன் ஒனக்கு வழி தெரிந்சுச்சோ?” என்று மகளைத் தோள் சாய்த்துக் கொண்டார் அவர். “நீ வாரேணு தகவல் சொல்லி இருக்கலாமே தாயி? நான் இங்கனயே இருந்திருப்பேனல்லோ… திடீர்னு பாதியில கெளம்பி வர முடியல தாயி” அவர் இங்கு இல்லாததை மனபாரமாய் சொல்ல


“இருக்கட்டும் பா...” என்று ஆறுதல் அளித்தாள் மகள்.


வழக்கம் போல அவர் பண்ணை வீட்டுக்கு மகளை அழைத்துச் செல்ல, இது தான் சரியான தருணம் என்று நினைத்து பேச்சை ஆரம்பித்தாள் தென்றல்.


தன்னுடைய கனவான மேல் படிப்பை பிரான்ஸில் தொடர வேண்டும் என்று சொன்னவள் மேற்கொண்டு அங்கேயே வேலை செய்யப் போவதாக சொல்ல, அதைப் பற்றி முழுமையாக மகளிடம் கேட்ட மாறன், ஒரே மூச்சாய் மறுத்து விட, வழக்கம் போல் அவர் மேல் விரோதமும் கோபமும் தான் எழுந்தது தென்றலுக்கு.


அப்பவும் அதை வெளிக்காட்டாமல், “அப்பா... ப்ளீஸ் பா! எனக்கு நிறைய ஆசை கனவு இருக்கு பா. மறுக்காதீங்க… அட்லீஸ்ட் படிக்க மட்டுமாவது அனுப்புங்க பா!” மகள் கெஞ்சவும் செய்தாள்.


அவளைப் பொருத்தவரை எப்படியாவது வெளிநாடு சென்று விட்டால் பிறகு திரும்ப வராமல் சமாளித்துக் கொள்ளலாம் என்ற எண்ணம்.


“இல்ல தாயி... வேணாம்… ஒன் அம்மாவும் இல்லாம நீயும் என் பக்கத்துல இல்லாம நானும் இத்தன வருசம் கெடத்திட்டேன். நமக்கு இருக்குத சொத்தே போதும் தாயி. நீ படிக்க ஆசப் பட்ட… படிக்க வச்சிட்டேன். போதும்... மாமனக் கெட்டிக்கிட்டு பேரன் பேத்தியைக் பெத்துக் குடுத்து கடைசிவரை என் பக்கத்திலயே இரு தாயி....” அவர் கோபமாக சொல்லியிருந்தால் கூட பரவாயில்லை. நைந்து சொல்லவோ, தென்றலுக்குத் தன் கனவுகளை நினைத்து கண்ணீல் நீர் முட்டியது.


“நானா உங்க கூட இருக்க மாட்டேன்னு சொன்னேன்? உங்களுக்கு உங்க தங்கச்சி புள்ள மட்டும் பக்கத்தில் இருந்தா போதும்னு என்னை அனுப்பி விட்டிங்க இல்லை? இப்போ மட்டும் நான் இருக்கணுமா?” ஆற்றாமையால் தன் மனதில் உள்ளதை சவுக்கு அடி போல் தந்தையை அவள் கேட்டு விட...


“தாயி!” துடிதுடித்துப் போனார் மாறன். அவர் என்ன நினைத்து செய்தது இன்று இப்படி போனதே என்ற மனவேதனை அவருக்கு. தந்தை மகளுக்குள் நடந்த பேச்சை வேற யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டார் மாறன்.


அன்று மாலை இவள் சொன்ன தோழிக்கு வரவேற்பு, காலையில் திருமணம். அதற்கு இவள் மட்டும் இல்லாமல் அனைவரும் கிளம்பினார்கள். இவர்கள் குடும்பத்திற்கு மணப்பெண்ணின் குடும்பம் தூரத்து சொந்தம். அதுவும் அந்த சொந்தம் ஐயாருவின் மனைவி வழியில் இருந்ததால் குடும்பத்தில் உள்ள அனைவரும் கிளம்பினர்.


பண்ணை வீட்டுக்கே வந்து வேந்தன் தந்தை மகள் இருவரையும் அழைத்துச் செல்வதாக ஏற்பாடு. இன்று தந்தை தன் கனவை மறுத்த கோபத்தில் இருந்த தென்றல் புடவைக்கு பதில் அழகான காக்ராசோலியில் கிளம்பி வெளியே வர, தன்னவள் ராஜகுமாரியாக மிளிர்ந்தாலும் கோபத்தில் அவளை முறைத்தான் வேந்தன். ‘நீ எப்படி வேணா பார்த்து வை’ என்ற ரீதியில் காரில் ஏற நெருங்கியவள் வேந்தன் பக்கத்திலிருந்த முன் சீட்டு தான் அவளுக்கான இடமாய் இருக்க, அதில் இன்னும் கடுப்பானவள்


“கிழவி! முன்னாடி வந்து உன் பேரன் பக்கத்தில் உட்கார். நான் பின்னாடி போறேன். வயசான காலத்துல நீ இப்போ எதுக்கு வந்துட்டு இருக்க? பிறகு இங்க வலிக்குது அங்க வலிக்குதுன்னு சொல்லு....” இவள் பாட்டியிடம் வம்பிழுக்க


“காட்ட வெட்டிச் சாச்சவனுக்கு கம்பு புடுங்கப் பயமா என்ன? எனக்கு என்னட்டி வந்துரும்கிறவ? இவிங்க எல்லாரும் கெளம்புவாங்கலாம்... நான் மட்டும் மொட்டு மொட்டுன்னு வீட்ல ஒக்காந்து கெடக்கணுமா? என் சம்பந்தி வீட்டு விசேசம் டி! நான் இல்லாமையா?” என்றவர் “நான் முன்ன ஒக்காந்தா டாக்டர் மாதிரி எதிரால வாரவன் எல்லாம் என் மூஞ்சில பல்பு போடுவானுவ. நீயே ஒக்காரு” பேத்திக்கு இடம் கொடுக்காமல் பாட்டி மறுத்து விட, இவள் அவருடன் அங்கிருந்த நரேன், நவீனைப் பார்க்க, அவர்களும் அசையவில்லை. வேறு வழியில்லாமல் முணுமுணுப்புடன் முன் சீட்டில் அமர்ந்தாள் தென்றல்.


இப்படி இவர்கள் நால்வர் ஒரு காரிலும் கந்தமாறன், தாமரை, ஐயாரு என்று இவர்கள் மூன்று பேர் ஒரு காரிலும், மூர்த்தி மற்றும் கலையரசன் இருவரும் தனித்தனி காரிலும் சென்று கொண்டிருந்தார்கள்.


தன்னவளை ஒரு ரசனை பார்வை பார்த்துக் கொண்டே காரை ஓட்டிக் கொண்டிருந்தான் வேந்தன். பேத்தி இருக்கும் மனநிலை தெரியாமல் பாட்டி தான் மறுபடியும் வம்பை ஆரம்பித்தது. “அளக்குற நாழி அகவெலை அறியுமானு கேட்டா இல்லன்னுதேன் சொல்லுவாக. அப்டிதேன் இங்கன ஒருத்தி இருக்குதா. நாள் நட்சத்திரம் பாத்து கொலம் கோத்ரம் யோசிச்சி அம்புட்டு அழகான தமிழ் பேரா பூந்தென்றல்னு வெச்சா... தனக்குத் தானே பேரு வெச்சிருக்குதா பாரு கிஸ்தா! ஆக்கங்கெட்டவ, எங்கன புடிச்சாளே இந்த பேர”


பக்கென சிரித்து விட்டார்கள் நரேனும் நவீனும். வேந்தனோ வாய்க்குள்ளேயே சிரிப்பை அடக்க, தென்றல் முறைக்க “ஆச்சி, அது லிஸ்மிதா!” நரேன் அவசரமாய் திருத்த


“எலேய்... எனக்கு எல்லாம் தெரியும் நீ சொம்மா இரு டே... நாளு இங்கிலீசு வார்த்த படிச்சா நீங்க எல்லாம் பெரிய ஆளா? எனக்கும்தேன் இங்கிலீசு தெரியும். லவ்வு... கிஸ்ஸூ... மிஸ்ஸ் யூ.... டியார்.... இதத்தாம்ல அடிக்கடி அந்த டிவி பெட்டிக்குள்ளார பேசிக்கிடுதாங்க? சரி… இவ வச்சிருக்குத பேருக்கு என்னலே வெளக்கம்?”


“அப்பத்தா...” தென்றல் பல்லைக் கடிக்க


“அண்ணி படிக்குத படிப்புக்கு இப்டிதேன் ஆச்சி ஸ்டைலா பேரு வெச்சிக்கிரணும்” நரேன் விளக்க


“எதுடே? மானத்த மறைக்க போட்டுக்கிட வேண்டிய உடுப்ப, அதச் செய்யாம கிழிஞ்சாலும்... கந்தலா போட்டுகிட்டு திரியுதாங்களே... அந்த படிப்பு தானே பேராண்டி?” பாட்டி குசும்பாய் கேட்க


“கிழவி! பேசாம வா. இனி ஏதாவது பேசுன.... உன்னை வெளியே தூக்கி போட்டுடுவேன்” என்று உருத்து விழித்தவள் “மாமா.... வண்டியை நிறுத்து நான் அப்பா வண்டியில் வரேன்” கோபத்தில் மாமனுக்கு கட்டளை இட்டாள் தென்றல். ஏற்கனவே மஞ்சு முதல் வீட்டில் உள்ள அனைவரும் நல்ல பெயரை ஏன் மாற்றின என்று கேட்டுக் கொலை பண்ண, இன்று பாட்டி அதற்கே உள்ள நையாண்டித் தனத்துடன் தென்றலை நேரடியாகவே தாக்கியது.


“என்னவே பாப்பு இது! அவுக பெரியவக… அப்டிதேன் பேசுவாக. ஏதோ சொல்லிட்டுப் போறாக விடு…” வேந்தன் கண்டிக்க


“அண்ணே! இந்த விஷயத்துல நாங்க அண்ணி பக்கங்தேன். வெளியே வந்து உலகத்தை பாருங்க, எப்படி எல்லாம் வாழவும் அனுபவிக்கவும் வழி இருக்குனு… அதை விட்டுட்டு இந்த பட்டிக்காட்லயே இருப்பாகளா? நமக்கு பணம் காசுல கொறச்சல் இல்லண்ணே. ஆனா வாழ்க்கைய அனுபவிச்சு வாழணும். அதுக்கு நாமளும் நம்மள கொஞ்சம் மாத்திக்கிடணும். அதுல தப்பே இல்ல” நவீன் தன் ஆசையையும் புகுத்தி தென்றலுக்குப் பரிந்து பேச...


“அதெல்லாம் இந்த குடும்பத்துக்கு சொன்னா தெரியாது டா. பெரிய தொழில் செய்தா மட்டும் பத்தாது. வெளி உலகத்துக்கூடவும் ஒன்றி வாழணும்” தென்றலுக்கு இருந்த கோபத்திற்கு அவளும் விடுவதாய் இல்லை.


நவீன், நரேனுக்கு இந்த காடு மேடையெல்லாம் விட்டுவிட்டு ஐ டெக் வாழ்வு வாழ வேண்டும் என்று ஆசை. வேந்தனோ எதற்கும் வாயைத் திறக்கவில்லை. இந்த வயது இப்படி யார் என்ன சொன்னாலும் புரியாது என்று இருந்தான். அவன் பாட்டி தான், “இந்த குடும்பம்னா? அப்போம் நீ எந்த குடும்பத்துலர்ந்து வந்தவ?” என்க


அதன் பிறகு வண்டியில் யாரிடமும் பேச்சு இல்லை, அதற்குள் மண்டபமும் வந்து விட, வண்டியை நிறுத்தியவன், “ஒன் மடியிலிருந்து ஏதோ கீழே விழுந்துருச்சு பாரு பாப்பு...” என்க


“என் மடியில் இருந்தா… நான் எதுவும் எடுத்துட்டு வரலையே மாமா....” என்றவள் கீழே குனிந்து தேட....


“நீ... எந்த உடுப்பு போட்டாலும் தேவதை கணக்கா இருக்கட்டி!” இவன் தன்னவளின் காதில் ரகசியம் பேச, அப்போது தான் இவளுக்கு அவனின் தில்லாலங்கடி வேலை புரிந்தது, “க்கும்...” என்ற முறைப்புடன் உதட்டைச் சுழித்தவள் மாமனின் உல்லாசப் பார்வையை எதிர்த்த படி வண்டியை விட்டு இறங்கினாள் தென்றல்.


‘போடி... இப்டியே... உதட்ட சுழிச்சிட்டு இரு. ஒரு நாள் அதை என்ன செய்யுதேன்னு பாரு.....’ என்று உல்லாசமாக நினைத்த படி வண்டியை விட்டு இறங்கினான் வேந்தன்.


மண்டபத்தில் இவர்கள் குடும்பத்திற்கு நல்ல வரவேற்பே கிடைத்தது. வரவேற்பில் மணப்பெண் பக்கத்தில் நின்றிருந்த தென்றல் மேல் தான் அங்கு வந்த இளவட்டங்களின் பார்வை இருந்தது. இந்த ஊரில் இப்படி ஒரு அழகியா என்றும் இவள் தனக்கு மனைவியாக வர மாட்டாளா என்ற ஏக்கக் பார்வைகளும் அவளைச் சுற்றி வந்தது. அதில் வேந்தனுக்கு கோபமும் தனக்கானவள் இவள் என்ற பெருமையும் இவள் அழகுக்கு நான் நிகரா என்ற கேள்விகளும் அவனுள் எழத் தான் செய்தது.


தன் தோழியான மணப்பெண்ணை சந்தித்து அளவாடியதில் அவளை விட்டு இமியும் நகரவில்லை தென்றல். இரவு உணவுக்குப் பிறகும் தோழிகளின் பேச்சு தடை படாமல் இருக்க இரவு தன்னுடனே தென்றலை மணப்பெண் தங்கச் சொல்ல, அதற்கு சம்மதித்து இவள் தன்னுடைய ஆடை பையை எடுத்து வரச் செல்ல, அப்போது விழுந்தது அப்படிப்பட்ட வார்த்தைகள் இவள் காதில்.


“என்ன மச்சான் இப்டி சொல்லுத.... ஒனக்கு எதுனா நான் விட்ருவனா? நாம எல்லாம் ஒரே சாதிசனம்யா... அதெப்படி இன்னொருத்தனை நம்ம சாதிக்குள்ளார நொழைக்க விடலாம்? தோ…. என் பேரன் எதுக்கு இருக்குதான்.... நான் என்ன சொன்னாலும் தட்டாம செய்ற சிங்க குட்டிலே இவன். இவன் இருக்கும்போது நீ ஏம்லே வெசனப்படுத? என்று எல்லாம் மணப்பெண்ணின் தாத்தாவுக்கு ஆறுதலும் நம்பிக்கையும் கொடுத்துக் கொண்டிருந்தது வேறு யாரும் இல்லங்க சாட்சாத் நம்ப ஐயாரு தாங்க!


“என்னலே சொல்லுத? நான் சொன்னது சரிதாம்ல?” ஐயாரு அங்கிருந்த வேந்தனிடம் கேட்க


என்ன என்று தெரியாமலே “நான் இருக்குதேன் ஐயா!” என்ற வாக்குறுதியை கொடுத்துக் கொண்டிருந்தான் வேந்தன்.


இந்த வாக்குறுதியால் பாவம் இவன் வாழ்வில் பல மாற்றங்கள் நடக்கப் போவதை வேந்தன் அறியவில்லை, இதைக் கேட்டுக்கொண்டிருந்த தென்றலும் தான் அறியவில்லை.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN