ஆழி சூழ்ந்த உலகிலே...4

Priya Pintoo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
"அண்ணா... அண்ணா... அப்பாக்கு திடீர்னு..." அர்ச்சனா என்ன ஆயிற்று என்று கூறாமல் அர்ஜூனை கட்டிக்கொண்டு அழ அவன் கேள்வியாக சிவரஞ்சனியை பார்த்தான்.
அடித்து பிடித்து கொண்டு அர்ச்சனா கூறிய மருத்துவமனைக்கு வந்த அர்ஜூன், வரவேற்பு அறையில் போடப்பட்டு இருந்த இருக்கைகளில் அமர்ந்து இருந்த தன் குடும்பத்தாரை கண்டு கொண்டு அவர்களிடம் செல்ல அர்ச்சனா அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்து விட்டாள். லட்சுமி இருக்கையில் அமர்ந்து கொண்டே சிவரஞ்சனியின் தோலில் சாய்ந்தபடி உறங்கிக் கொண்டு இருந்தார்.
"மைல்ட் அட்டாக்... இப்போ ஒன்னும் பிராப்ளம் இல்லைன்னு சொல்லிட்டாங்க..." தனது மாமியார் எழுந்து விட கூடாது என்று மெல்லிய குரலிலேயே கூறினாள் சிவரஞ்சனி.
"ஓ... இப்போ எங்க இருக்காரு..." என்று கேட்டவனின் குரலில் ஜீவன் இல்லை.
அவன் வந்ததில் இருந்து அவனையே கவனித்து கொண்டு இருந்த சிவரஞ்சனிக்கு கோபமாக இருந்தது. 'பெற்ற தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். ஆனால் இவன் சிறிது கூட வருத்தம் இல்லாமல் இருக்கிறான்... ரோபோ...' என்று நினைத்து கொண்டாள்.
"நைட் ஐ.சி.யூ ல இருக்கனும்னு சொல்லிட்டாங்க... நாளைக்கு காலையில நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க..." என்று கூறியவள் வேடிக்கை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். யாரை யாரையே பிடித்து அனுமதி பெற்று ராஜரத்தினத்தை ஐ.சி.யூ விற்குள் சென்று பார்த்துவிட்டு வந்தான் அர்ஜூன்.
சிவரஞ்சனி கூறியிருந்தால் உடனே அனுமதி கிடைத்து இருக்கும். அவளின் குடும்ப நண்பரின் மருத்துவமனை தான் இது. சக்தியும் இங்கு தான் மருத்துவராக இருக்கிறான். எனவே அவள் சொல்லி இருந்தால் உடனே சென்று பார்க்க விட்டு இருப்பார்கள். ஆனால் அவளுக்கு உதவ மனமில்லை. அதோடு அவனின் தந்தைக்காக எவ்வளவு தான் கஷ்டப்படுகிறான் என்பதை பார்க்க விரும்பினாள். அவனின் பெற்றோர் மீதாவது பாசம் இருக்கிறதா என அறிந்து கொள்ள விரும்பினாள்.
அவள் உதவாதது தெரிந்தால் நிச்சயம் அர்ஜூன் கோபப்படுவான் என்பது அவளுக்கு தெரியும். ஆனால் இவ்வளவு நாள் ஒன்றும் இல்லாத விஷயத்திற்கு தன்னை இந்த பாடு படுத்தி இருக்கிறான் என்று தெரிந்த பிறகு அவளுள் இருந்த குற்ற உணர்ச்சி காற்றோடு காற்றாக மாறி அவன் மேல் கோபம் துளிர்க்க ஆரம்பித்து விட்டது.
அர்ஜூன் தன் அப்பாவை பார்த்து விட்டு வரும்போது அர்ச்சனாவும் சிவரஞ்சனியின் மடியில் தலை வைத்து உறங்கிக் கொண்டு இருந்தாள். அவர்களிடம் சென்றவன் லட்சுமியையும் அர்ச்சனாவையும் எழுப்பி அவர்களை வீட்டிற்கு கிளம்ப கூற அப்பொழுது தான் அவனை பார்த்த லட்சுமி அழுது தீர்த்துவிட்டார். வீட்டிற்கு போகமுடியாது என அடம்பிடித்த லட்சுமியை சம்மதிக்க வைத்தவன் மூவரையும் அழைத்து கொண்டு வெளியே வந்து எப்படி வந்தீர்கள் என சிவாவிடம் விசாரிக்க அவள் பதில் கூறாமல் அவனின் கார் சாவியை தன் கைப்பையில் இருந்து எடுத்து அவனின் கைகளில் திணித்தாள்.
அவன் வந்ததில் இருந்து அவளின் அலட்சியத்தை கவனித்து கொண்டு தான் இருந்தான். தற்போதும் அவனுக்கு கோபம் வந்தாலும் இது கோபத்தை காட்ட சரியான நேரம் இல்லை என்பதால் அவளை முறைத்து விட்டு மட்டும் காரை பார்க்கிங்கில் இருந்து எடுத்து வந்து அவளிடமே ஒப்படைத்து விட்டு லட்சுமி மற்றும் அர்ச்சனாவை காலையில் வரும்படி கூறிவிட்டு அவள் புறம் கூட திரும்பாமல் சென்றுவிட்டான். அவளும் அவனின் பார்வையை எதிர்பார்த்து எல்லாம் காத்துக் கொண்டு இருக்கவில்லை. எனவே அதை அவள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அவர்கள் ஏறியதும் அவர்களை வீட்டில் விட்டுவிட்டு தன் அறையில் அமைதியாக படுத்தவள் மனம் இரவு அவர்களின் வீட்டில் நடந்தவற்றையே அசைபோட்டு கொண்டு இருந்தது.
இரவு உணவிற்காக அர்ஜூனை தவிர்த்து மற்ற அனைவரும் உணவு மேசையில் கூடி உணவு அருந்தி கொண்டு இருந்தனர். லட்சுமி சிவரஞ்சனியை கடிந்துக்கொண்டு இருந்தார். அவள் காலையில் இருந்து சாப்பிடாததற்கு அவள் கூறிய காரணம் அவருக்கு சற்றும் பிடிக்கவில்லை.
மாதாந்திர பிரச்சினை நாட்களில் அவளின் பாட்டி அவளை சமையல் அறைக்குள் செல்ல விட்டது கிடையாது. பாட்டி சிறிது நாட்களுக்கு முன் இறந்த பிறகும் அதை அவளால் மாற்ற முடியவில்லை. அதுவே அவளுக்கு பழகி இருந்ததால் அவள் இங்கும் அதையே கடைபிடிக்க எண்ணி சமையல் அறைக்குள் சென்று உணவை எடுத்து சாப்பிடாமல் வெளியே உணவு மேஜையில் இருந்த தண்ணீரையே குடித்து குடித்து தன் வயிற்றை நிரப்பிக் கொண்டு இருந்து இருக்கிறாள் என தெரிந்து லட்சுமி அவளின் மீது கோபம் கொண்டார் என்றால் ராஜரத்தினம் அர்ஜூன் மீது கோபம் கொண்டிருந்தார்.
'வீட்டில் இருந்தவனுக்கு அவனின் மனைவி சாப்பிட்டாலா இல்லையா என்று பார்க்க கூட நேரம் இல்லையா... இந்த பெண்ணை எவ்வளவு தான் வதைப்பான்...' என நினைத்து அவன் மீது கோபம் கொண்டு இருந்தார். அந்த நேரத்தில் தான் சிவரஞ்சனி அந்த வார்த்தைகளை கூறினாள்.
"மாமா... அத்தை... எங்களுக்கு டைவஸ் வாங்கி கொடுத்துடுங்க ப்ளீஸ்... அவராவது நல்லா இருக்கட்டும். அந்த பொண்ணு யாருன்னு சொல்லுங்க. அவ கால்ல விழுந்து மன்னிப்பு கோட்டாவது அவரையும் அந்த பொண்ணையும் சேர்த்து வச்சிடரேன்..." கடினப் பட்டு வார்த்தைகளை கூறியவள் அதற்கு மேல் முடியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்து விட்டாள்.
சிவரஞ்சனிக்கு அர்ஜூனின் காதல் விவகாரம் தெரியும் என்பது லட்சுமி மற்றும் ராஜரத்தினத்திற்கு தெரியாது. தற்போது அவர்கள் குற்ற உணர்ச்சியில் கூணிக்குறுகி போயினர். ஆனால் அழுபவளை தேற்றும் கடமை தற்போது அவர்களுக்கு இருப்பதால் லட்சுமி அவளை தன் வயிற்றில் சாய்த்து ஆறுதலாக தலையை வருடிக் கொடுக்க ராஜரத்தினம் பேச ஆரம்பித்தார்.
"முதல்ல நாங்க உன்கிட்ட மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்ம்மா... அர்ஜூன் எவ்வளவோ சொன்னான் எனக்கு கல்யாணத்துலலாம் விருப்பம் இல்லை. என்ன விட்டுடுங்கன்னு. ஆனா பெத்த மனசு கேட்கலம்மா... கல்யாணம் ஆனா சரியாகிவிடும்னு நினச்சு அவன வற்புறுத்த ஆரம்பிச்சோம். ஆனா அவன் கொஞ்சமும் அசரல. அவனுடைய பிடிவாதத்தை விடவே இல்லை. உங்க வீட்டுல இருந்து வரன் கேட்டு வந்ததையும் மறுக்க முடியல. உன்ன மருமகளா கொண்டுவந்தா என் மூத்த மகள் அபிநயாவும் நாங்களும் எங்க சம்மந்தி வீட்டு ஆளுங்க முன்னாடி கௌரவமா இருக்கலாம்னு சுயநலமா சிந்திச்சிட்டேன். விட்டுட்டு போன அவளையே நினச்சு வர வாழ்க்கையை தொலைச்சுடுவானோன்னு பயந்தோம். அதனால எங்க மேல மட்டுமில்லாமல் அர்ச்சனா மேலயும் மண்ணெண்ணெய் ஊற்றி செத்துடுவோம்னு கேவலமா ப்ளாக்மெய்ல் செய்து அவன சம்மதிக்க வச்சோம்...."
"தனக்குன்னு ஒருத்தி வந்தா அவன் அந்த பொண்ண மறந்துட்டு வாழ ஆரம்பிச்சுடுவான்னு நினைச்சோம். ஆனால் அவன் மாறவே இல்லை... உன்னுடைய குணத்தை பார்த்தாவது திருந்துவான்னு நினச்சா கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாமல் உன்னை வார்த்தைக்கு வார்த்தை திட்டி, அவமானப்படுத்தி... ச்சே... என் மகன் இப்படி போவான்னு நான் கொஞ்சம் கூட நினைக்கவே இல்லை. நீ எவ்வளவு பெரிய இடத்து பொண்ணு... நீ நினைச்சா அவன உருத்தெரியாமல் ஆக்கிட முடியும். ஆனால் நீ எவ்வளவு சகித்துக்கொண்டு இருக்க. இந்த குணத்துக்காவது அவன் மாறலாம் இல்ல... நாங்க பெரிய தப்பு பண்ணிட்டோம்மா... எங்களை மன்னிச்சிடும்மா... இனிமேல் உங்க வாழ்க்கைல நாங்க தலையிட மாட்டோம். உனக்கு என்ன சரின்னு படுதோ அதை செய்... உனக்கு துணையா நாங்க இருக்கோம்..." என்று கூறியவர் எழுந்து அவரின் அறைக்குள் சென்று விட்டார். அர்ச்சனாவும் தன் அறைக்கு சென்றுவிட லட்சுமி சமையல் அறைக்குள் புகுந்து கொண்டார்.
சிவரஞ்சனிக்கு மனதின் பாரம் குறைந்தது போல் இருந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் அர்ஜூனின் காதலை பிரித்து விட்டோமே... என வருந்தி கொண்டு இருந்தவளுக்கு அவனின் காதல் ஏற்கனவே தோல்வியில் தான் முடிவடைந்தது என தெரிந்ததும் அது அவளுக்கு தேன் மிட்டாய் சாப்பிடுவது போல் இருந்தது.
'காதல் தோல்வி அடைந்தவனுக்கு வாழ்க்கை கொடுத்து இருக்கிறேன் ஆனால் அவன் என்னை இவ்வளவு நாள் ஒன்றும் இல்லாமல் ஆகிய காரணத்திற்காக வதைத்துக்கொண்டு இருந்து இருக்கிறான்... வரட்டும் வரட்டும் நான் யார் என்று காட்டுகிறேன்...' என நினைத்துக் கொண்டு உணவு மேசையிலேயே அமர்ந்து அவனுக்காக காத்து கொண்டு இருந்தவள் மேசையிலேயே தலை சாய்த்து தூங்க ஆரம்பித்தாள்.
நடு இரவில் லட்சுமியின் பதட்டமான குரல் அவளை எழுப்ப விறைந்து சென்றவள் கண்டது ராஜரத்தினம் நெஞ்சை பிடித்தப்படி அமர்ந்து இருப்பதைத்தான். விறைவாக செயல்பட்டு அவரை சக்தி பணியாற்றும் மருத்துவமனையிலேயே சேர்த்தவள் அவருக்கு தற்போது ஆபத்து இல்லை என்று சக்தி கூறிய பிறகே நிம்மதி அடைந்தாள்.
லட்சுமி உடைந்து போய் இருந்தார் என்றால் சிறு பிள்ளையான அர்ச்சனா மிகவும் பயந்துபோய் இருந்தாள். லட்சுமிக்கும் அர்ச்சனாவிற்கு சக்தி ராஜரத்தினத்தின் உடல்நிலை பற்றி கூறிய பிறகே அவர்களுக்கு உயிரே வந்தது. நடந்ததை நினைத்தபடி தனக்குள் உழன்று கொண்டு இருந்தவள் எப்பொழுது தூங்கினாள் என்று அவளுக்கே தெரியவில்லை.
 

Author: Priya Pintoo
Article Title: ஆழி சூழ்ந்த உலகிலே...4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN