களம் காண்போம்
" நண்பா..... நான் தான் கஜவர்மன் எனக்கு எந்தீங்கும் நிகழவில்லை. நம் எதிரி நாட்டை முற்றிலும் அடிமைபடுத்த நிகழ்த்தப்பட்ட நாடகம் தான் இது. நீ நிச்சயம் வெல்வாய் என எனக்கு தெரியும். விரைவாக நம் படைகள் அங்கே வரும் இந்திர ராணியை என் வசம் கொடுத்துவிடு. பரம்பரை பரம்பரையாக தொடர்ந்த நம் நாடுகளுக்கு இடைப்பட்ட பகை அவர்களை அடிமைபடுத்துவதால் முடியட்டும் இப்படிக்கு கஜவர்மன் " என முடிந்திருந்தது. இதனை படித்த அவள் கண்கள் துயரமாக இருந்தது. அவனும் ஏமாந்து போய் அமர்ந்திருந்தான். தன் நண்பன் தன்னிடம் நட்பை வைத்தே விளையாடி விட்டானே. அவன் கேட்டிருந்தால் இந்த காரியத்தை நானே செய்து முடித்திருப்பேனே. ஏன் இப்படி செய்தான் என குழம்பி தவித்தது. வாழ்வின் முதல் முதலாக கல்லேன சமைந்து அமர்ந்தான். பின் அவள் முகத்தினை நோக்க அவள் " இப்பொழுது என்ன செய்ய போகிறீர்கள் தங்கள் முடிவு என்ன " என கேட்டாள். " தெரியவில்லை நீ உங்க அப்பா கிட்ட அனைத்தையும் சொல்லிரு " என்றான் அவள் " சொல்லிவிட்டேன் அவரும் ஏற்றுக் கொண்டார் நம் காதலை உங்களை அவர் நம்புகிறார் " என்றாள். தன் நண்பன் இந்த நாட்டினை பிடிக்க தன்னிடம் பொய் கூறுகிறான். இவர்கள் நம்மை நம்புகிறார்கள் அருமை. இடையில் தன் காதல் வேறு தன் நண்பனிடம் விருப்பம் கேட்டு தன் காதலை நிறைவு செய்யலாம் என எண்ணினால் அவன் முடிவு சொல்லும் தகுதியை இழந்து நிற்கிறான். தன் நிலையை எண்ணி சிரிப்பதா அழுவதா என்றே தெரியவில்லை. இறுதியாக " தேவி ஒரு துணியை எடுத்து வாருங்கள் பதில் அனுப்பலாம் " என்றான்.
கபாடபுர அரசனுக்கு ஒரு தம்பி இருந்தான் சந்திரவர்மன் என்று. அவனுக்கு தன் அண்ணனை அண்டி பிழைப்பது சிறிதும் பிடிக்கவில்லை தன்னை தாழ்த்துவதாக நினைத்துக் கொண்டான் ஆகவே எவ்வாறாவது தான் அரசன் ஆக வேண்டும் என எண்ணினான். மிகவும் தந்திரசாலியான அவனுக்கு கஜவர்மன் மற்றும் அருள்வர்மனின் நட்பு தான் தனக்கு முதல் தடை என புரிந்தது. அவர்கள் தான் இந்த நாட்டின் கேடயம் என அறிந்தான். ஆகவே அவர்களை பிரிக்க முடிவு செய்தான். ஒரு சமயம் அருள்வர்மன் மற்றொரு போரில் இருக்கும் போது கஜவர்மன் தனியாக இருக்கும் போது அவனை சந்திக்க சென்றான். கஜவர்மனும் அவனை அன்பாக வரவேற்றான். பின் திறமைசாலியான அவன் பேச தொடங்கினான் " மகனே எனக்கு மிகவும் பயமாக உள்ளது " என்றான் கஜவர்மனும் " ஏன் சித்தப்பா என்ன நடந்தது? " என்றான் அக்கறையாக " இல்லை மகனே நான் சில கைதிகளை விசாரிக்கும் போது இந்த உண்மை தெரிய வந்தது அதனை நினைத்து நடுக்கமாக உள்ளது " என்றான். அவன் " யாரை விசாரித்தீர்கள் ஏன் நடுக்கம் " என்றான். " சிலர் நம் படையில் ஊடுருவி இருப்பதாக கேள்வி பட்டேன் அவர்கள் விசாரிப்பதன் மூலம் இது தெரியவந்தது " என்றான். " என்ன தெரியவந்தது சித்தப்பா " என்றான். " அருள்வர்மன் சில சதி வேலைகள் புரிகிறானாம் அவன் தான் அவர்களை ஊடுருவ வைத்தானாம் " என அவன் சொல்லும் போதே கலகலவென சிரித்தான் கஜவர்வன் " என்னது அவனா சித்தப்பா நகைச்சுவை செய்யாதீர் அவனும் நானும் ஒரே உயிர் அல்லவா அவன் எப்படி இதற்கு துளியும் சாத்தியம் இல்லை. மேலும் அவனை பற்றி அவதூறு பேசுவது இதுவே கடைசியாக இருக்கட்டும் " என்றான் காட்டமாக. அவன் " மகனே அவனும் நீயும் ஒன்று தான் அதற்கு காரணம் தெரியுமா? அவனால் தான் உன் உயிர் பிரியுமாம் உங்கள் ஜாதக அமைப்பு அப்படி அவன் பிறந்ததும் அவனை கொல்ல நினைத்தார்கள் உன்னை காக்க எதற்கும் அவனிடம் சற்று எச்சரிக்கையாக இரு இதற்கு மேலும் ஒன்று உண்டு " என நிறுத்தினான். ஜாதக விஷயம் அவன் அறியாத ஒன்று ஆகவே சற்று அதிர்ச்சியுடன் கஜவர்மன் " சொல்லுங்கள் அதனையும் " என்றான். அவன் " அருள்வர்மனை மக்கள் அரசராக எதிர்பார்கீறார்கள் " என முடித்தான். " நான் கேட்டால் அவன் உயிரையும் தருவான் அவன் கேட்டால் நான் இந்த ராஜ்யம் முழுவதையும் தருவேன் நீங்கள் செல்லலாம் " என முடித்தான். அவன் சென்ற உடன் கஜவர்மன் சிந்திக்க தொடங்கினான். அவன் நல்லவன் தான் அருளை மிக மிக விரும்புபவன் தான் ஆயினும் அவன் மனதின் மூலையில் ஒரு புள்ளி அளவு அருள்வர்மனிடம் பொறாமை இருந்தது அவனின் வீரம் திறமை ஆகியவற்றை கண்டு. இவனும் திறமைசாலி தான் ஆனால் அந்த பொறாமை இவனை விட அவனை திறமைசாலியாக காட்டியது. தன் சித்தப்பா சொன்னது துளியும் உண்மையில்லை என அறிவு சொன்னது ஆனால் அப்படி இருந்தால்...? என மனது இழுத்தது. ஆகவே தங்கள் இருவர் ஜாதகத்தையும் எடுத்து கணிக்க கொடுத்தான் தனக்கு நம்பிக்கை ஆனவர்களிடம் அவர்கள் கணித்து அவன் சித்தப்பா கூறியது உண்மை என கூறினார்கள். அந்த கைதிகளையும் ஒற்றர்களையும் இவன் விசாரிக்க சித்தப்பாவிற்கு ஏற்றவாறே சொன்னார்கள் ஏனென்றால் அவர்கள் அனைவரும் இவன் சித்தப்பா ஏற்பாடு செய்திருந்த ஆட்கள். ஒரு குடம் பாலில் விழுந்த ஒரு சிறு துளி விஷம் போல் இவன் மனதில் சந்தேகம் விழுந்துவிட்டது. அன்றிலிருந்து அருளின் செயல்பாடுகள் அனைத்தும் சந்தேகத்தை வலுப்படுத்தின. அருள்வர்மன் சாதாரணமாக தான் இருந்தான். கஜவர்மனுக்கு தான் அவ்வாறு தோன்றியது ஏனென்றால் சந்தேகத்தை விட விரைவாக வளரும் விதை கிடையாது. நடப்பவை அனைத்தையும் பார்த்து அமைதியாக புன்னகைத்து கொண்டிருந்தான் சந்திரவர்மன். அருள்வர்மனை நேரடியாக எதுவும் செய்ய இயலாது என அவர்களுக்கு புரிந்தது. நேருக்கு ரேராக அவனுடன் மோதுவது முட்டாள் தனம். அவனை கைது செய்து கொன்றால் மக்களுக்கு பதில் சொல்ல வேண்டி வரும் ஆகவே அவற்றை தடுக்க மக்களின் இழி சொல்லுக்கு எட்டாமல் அவனை அழிக்க சந்திரவர்மனின் உதவியோடு ஏற்பாடு செய்யப்பட்டது தான் இந்த போட்டியும் இந்த திட்டமும். ஆனால் அவன் போட்டியில் வெல்வான் என சந்திரவர்மன் புலம்பினான் ஆனால் கஜவர்மனோ " சித்தப்பா இவை எல்லாம் அவனுக்கு சாதாரணம் அமாவாசையில் கூட நிலவை கொண்டு வர தெரிந்தவன் என் நண்பன் அந்த போட்டியின் வென்றவன் அவன் ஆனால் பரிசு நமக்கு" என கூறி எழுதியது தான் இந்த ஓலை. அதற்கு பதிலை எதிர்பார்த்து காத்திருந்தனர் அதில் உயிர் நண்பா...நீ நட்பில் சறுக்கியதை கண்டு வெட்கப்படுகிறேன். அதனால் என் பக்கம் நடந்த சறுக்கலை சற்று குற்றவுணர்வு குறைந்து உன்னிடம் கூறுகிறேன். என தொடங்கி நடந்த அனைத்தையும் அவன் மீண்டும் எழுதியிருந்தான். அவற்றை படித்து அவர்களுக்கு அதிர்ச்சி. தங்கள் சூது தரும் எதிர்வினையை கண்டு மீண்டும் என்ன செய்யலாம் என்ற சிந்தனையுடன் ஆலோசித்தனர் சித்தப்பாவும் மகனும்.
ஆனால் இது எதுவும் தெரியாமல் அங்கே கொஞ்சி கொண்டிருந்தனர் இரு காதல் பறவைகள் கடற்கரை ஓரத்தில். அவர்களை தாங்கி வந்த வெள்ளை புரவி அலட்சியமாக படுத்திருக்க அருகே அமர்ந்திருந்தான் அருள்வர்மன் அவனுக்கு அருகே மரத்தில் சாய்ந்திருந்தாள் இந்திர ராணி. அன்று பௌர்ணமி நிலவு அந்த நிலவிற்கு போட்டியாக மண்ணில் தோன்றிய நிலவென அவள் அவளை ரசிக்கும் மானிடனாய் அவன் " என்ன அப்படி பார்கிறீர்கள் " என்றாள் அவள் அவனும் " ஏன் தங்களை பார்க்க கூடாதா தேவி " என்றான் அவள் உடனே " வீரரே நான் என்ன புதியவளா " என்றாள். " ஆமாம் தேவி " என்றான் " இது எப்படி சாத்தியம் " என அவள் கேட்க " இது சாத்தியம் ஆவதினால் தான் இது காதல் " என்றான் ரகசியமாக அவள் " ஓகோ அப்படியா " என கேட்க அவன் " காதலில் பழையது எது புதியது எது தேவி தினமும் புதியது தான் " என்றான் புன்னகையுடன். " சரி தான் " என்றாள். மேலும் " நம் காதல் கூட உங்கள் நண்பன் ஒத்துக்கொள்ள வேண்டுமே " என்றாள். " அது தேவையில்லை " உறுதியாக அவள் " ஏன் அப்படி " என்றாள். " தேவி அவன் போட்டியில் என்னை பங்கேற்க வைத்ததே பொய்யினை வைத்து ஒரு விஷயத்தில் அஸ்திவாரமே பொய்யாக இருக்கும் போது விளைவுகளில் உள்ள விஷயங்கள் முக்கியம் அல்ல. இதன்படி அவன் பொய் சொல்லி ஆரம்பித்த விஷயத்தில் மாறும் இந்த நிலையை அவன் ஏற்றுக் கொள்ள தான் வேண்டும் " என்றான் தெளிவாக அதில் ஏமாற்றமும் வருத்தமும் காணப்பட்டது. அதற்கு காரணமும் புரிந்தது ஆகவே அவளும் வருந்தினாள் பின் " தங்கள் தூதிற்கு பதில் வந்ததா? " என கேட்க அவன் " வந்தது ஆனால் எதிர்பார்த்தது வரவில்லை " என்றான். " பின் என்ன சொன்னார் உங்கள் நண்பர் " என அவள் கேட்க அவன் " நான் தங்களை ஏற்றுக் கொண்டால் இந்த நாட்டினை அவனுக்கு அடிமை படுத்த வேண்டுமாம் " என்றான் வருத்தமாக. அவள் உடலில் உணர்ச்சிகள் அதிகளவில் ஓடியதை உணர்ந்தான் அவன். " அதற்கு தாங்கள் என்ன சொன்னீர்கள்? " என்றாள். அவன் " சரி " என ஓலை அனுப்பிவிட்டேன் என்றான். இதனை கேட்டதும் சிலிர்த்து எழுந்தாள். " என்ன நினைத்தீர்கள் என்னை பற்றி நான் உங்களை விரும்புகிறேன் உயிரையும் தருவேன் ஆனால் எந் நாட்டை ஒருகாலும் விட்டுத் தர மாட்டேன். என் மனதை வேண்டுமானால் முறித்துக்கொள்வேன் அழித்துக் கொள்வேன். ஆனால் என்னை நம்பும் என் நாட்டினையும் மக்களையும் கை விடமாட்டேன் என் நாட்டை இழந்தாள் தான் என் காதல் என்றால் காதலே வேண்டாம் " என படபடவென உதிர்த்தாள் உறுதியாக. இரவில் உதித்த சூரியன் போல் கோபக்கனல் தெரிக்க நின்றாள். அதனை கேட்ட அவன் பெருமை பொங்க எழுந்து நின்றான். " வீரத் தமிழ் மகள் வேறு என்ன பேசுவாள் இதனை தவிர அருமை இந்திர ராணி அருமை " என்றான் மேலும் " அவன் அனுப்பிய ஓலையில் அவனுக்கு நாட்டை தர வேண்டுமாம் ஒரு வேளை நீங்கள் எதிர்தால் அவர்கள் படைகளை அனுப்பி உங்களை அடிமைபடுத்தி ஆளுவார்களாம். ஆனால் அவன் என்னை புரிந்து கொள்ளவில்லை நீயும் புரிந்து கொள்ளவில்லை. " என்றான் சற்று வருத்தமாக. " என்ன புரிந்து கொள்ளவில்லை? " என்றாள் சற்று குழப்பமாக கோபம் சற்று குறைந்து இருந்தது. " நான் பதிலுக்கு அனுப்பயிருக்கும் ஓலையை பார் " என்றான். அதனை படித்த அவள் " இது உண்மையா? " என்றாள். அவன் " நிச்சயம் நீ என்னுடையவள் நீ என் மேல் கொண்ட நம்பிக்கையை நான் காக்க வேண்டும். உன் மேல் உன் மக்கள் கொண்ட நம்பிக்கையையும் நான் காக்க வேண்டும் அல்லவா " என்றான். புன்முறுவலுடன். அவன் அனுப்பிய ஓலையை கஜவர்மன் விளக்கொளியில் படித்துக் கொண்டிருந்தான். அதில் " நண்பா இந்திர ராணி என்னை விரும்புகிறாள் நானும் அவளை விரும்புகிறேன். அவளை உன்னிடம் தர இயலாது. அவள் உயிராக நேசிக்கும் நாட்டினையும் உனக்கு விட்டு தர இயலாது. முத்தூர் கபாடபுரத்திற்கு என்றும் நட்பு நாடாக தான் இருக்கும் அடிமை நாடாக அல்ல. ஒரு வேளை இந்த நாட்டினை அடக்க நீ படை எடுத்தால் நண்பர்களாக நாம் பல களம் கண்டுள்ளோம் எதிரிகளாக இந்த களம் காண்போம் வா " எழுதியிருந்தது.
அதே நிலவு...
ரோஸியின் டைரியை படித்துக் கொண்டிருந்த ஆதி அதன் சுவாரசியத்தில் அனைத்தையும் மறந்திருந்தான். அந்த பக்கத்தின் இறுதி வரிகளை படித்து விட்டு அடுத்த பக்கத்தை புரட்ட அதில் எழுத்துக்கள் இல்லை. அதிர்ச்சியும் ஏமாற்றமும் அடைந்தான். தனக்கு மிகவும் பிடித்த கதை ஒரு வேளை தன் வாழ்க்கை கதையாக கூட மாறலாம். அந்த கதை பாதியில் நின்றது பெரும் ஏமாற்றம் அடைந்தான். அதன் பிற பக்கங்களையும் பார்த்தான் ஆனால் அதில் எதுவும் எழுதப்படவில்லை. இந்த சூழல் முன்னால் இருந்த சூழலை மேலும் ரணமாக்கி குழப்பியது. முதலில் கனவில் வந்த கதை அதில் வந்த பொருளை பார்த்து நினைவாக தொடர்ந்தது. பின் அதில் வரும் அதே பெண் கண் முன்னால் நினைவின்றி அவள் எழுதி வைத்த பக்கங்களும் பாதியில். ஏறத்தாழ மன நோயாளியாகவே மாறிவிட்டோம் என்ன செய்ய எல்லாம் சூழ்நிலை என விதியின் மேல் பழி போட்டு விட்டு சற்று அமைதியானான். தன் நண்பன் வரும் நேரம் நெருங்கியதை உணர்ந்து ரோஸியின் அறையை நோக்கி ஓடி அந்த டைரியை எடுத்த இடத்தில் வைத்து விட்டு வந்தான்.
தன் நண்பன் வந்ததும் தன் குழப்பங்களை மறந்து அல்லது மறைத்து சாதாரணமாக இருந்தான். இன்னும் 7 நாட்களில் தான் தன் இல்லம் செல்ல வேண்டும் என்பதனை உணர்ந்தான். மறுநாள் தன் உடல் முற்றிலும் குணமானதை உணர்ந்தான். தன் நண்பன் அழைப்புக்கு இணங்கி பெங்களூரை சுற்றி பார்க்க கிளம்பினான். இரு நண்பர்களும் சந்தோஷமாக பல இடங்களை சுற்றி பார்த்தன. சினிமா மால் என பல இடங்கள். இறுதியாக ஒயின் ஷாப் ஆதிக்கு அந்த பழக்கம் இல்லை ஆனால் மைக்கேலுக்கு அந்த பழக்கம் உண்டு அவன் மது குடிப்பதும் இவன் சைடிஸ்களை உண்டு அவனுக்கு கம்பெனி கொடுப்பதும் கல்லூரி நாட்களில் இருந்து வழக்கம். எப்பொழுதாவது ஒரு நாள் அவன் அளவுக்கு அதிகமாக குடித்து விடுவான் மயங்கும் அளவிற்கு. அப்பொழுது இவன் தான் அவனை அழைத்து சென்று வீட்டில் சேர்ப்பான். அன்றும் அப்படி தான் அவன் மயங்கி விழ இவன் காரில் அழைத்து வந்து வீட்டில் சேர்த்தான். தன் அறையிலே படுக்க வைத்தான் அப்பொழுது நேரம் மாலை 8 மணி இனி மைக்கேல் காலையில் தான் எழுவான் என உணர்ந்தான். இவனும் வாங்கி வந்த உணவினை உண்டு படுக்க போனான். அப்பொழுது தான் ரோஸியின் நினைவு வந்தது. இவன் கால்கள் இவனது அனுமதியே இன்றி அவளது அறையை நாடி சென்று வாயிலில் நின்றது. அப்பொழுது அவளை பார்த்தான் வெள்ளை நிற மெத்தையில் தேவதை என அவள் பூ போட்ட போர்வையை போர்த்தி கொண்டு படுத்திருந்தாள். அவளை கவனிக்கும் அம்மா பக்கத்து அறையில் படுத்துக் கொண்டிருப்பதை உணர்ந்தான். ரோஸியின் முகத்தில் அதே புன்முறுவல் இவன் கண்டு மயங்கிய அதே புன்னகை. இவன் அவளை பார்த்துக் கொண்டே நின்றான். ஒரு அன்னிய பெண்னை இப்படி பார்ப்பது தவறு என அறிவு சொல்லியது அவள் அந்நியம் அல்ல உன்னுடையவள் என மனது சொல்லியது அழுத்தமாக. ஆகவே அருகே சென்று அவள் படுத்திருந்த மெத்தையின் ஓரத்தில் அமர்ந்தான். அவள் முகத்தினை பார்த்தான் அதே பால் போன்ற நிறத்தில் பளிங்கு போன்ற கன்னங்கள். அமைதியாக உறங்கி கொண்டிருந்தாள். அப்பொழுது தென்றல் காற்று வீசியது மிகவும் மென்மையாக அவள் கூந்தலை கலைத்தது அதில் உள்ள ஒரு முடி கற்றை அவள் முகத்தில் விழுந்தது. இவன் அவளை ரசிப்பதை அது தடை செய்ய அதனை வலது கரம் கொண்டு தள்ளி விட்டான். அப்பொழுது இவனது விரல்கள் அவள் கன்னங்களை சில கணங்கள் தழுவியது அவளது உடல் சிலிர்த்தது. இவனது உடலும் நடுங்கி துடித்தது. இவன் மனது சொல்லியது உறுதியாக அவள் இந்திர ராணி தான் இவன் அருள்வர்மன் தான் என மனது சொல்லியது. ஆனால் அறிவு சற்றும் சாத்தியம் அல்ல என்பதினை உணர்த்தியது. இவனுது உதடுகளும் " இந்திர ராணி " என உச்சரித்தது இவன் அனுமதி இல்லாமலே. அவளது உதடுகளும் " ம்ம்ம் " என உச்சரித்தது பெரும் மூச்சாக. அப்பொழுது இவன் தன்னை அறியாமல் அவளது கைகளை பிடித்து தூக்கியது அவளும் எழுந்து கண்களை திறந்து புன்னகித்தாள். " அருள்வர்மா வந்து விட்டீர்களா நீங்கள் திரும்ப இவ்வளவு காலமா...? போதும் போதும் இதுவே போதும்...." என சொல்ல தொடங்கினாள் ஆவேசமாக. அந்த சத்தத்தில் இவனுக்கு சுயவுணர்வு வர பெற்று " ரோஸி அமைதியா இரு ஒன்னும் இல்ல நான் ஆதி நீ ரோஸி ரோஸி " என கூறினான் இவனும். இந்த சத்தம் கேட்டு அவளை கவனிக்கும் அம்மா எழுந்து விட்டாள். ஆச்சரியமாக உள்ளே வந்தாள் " என்ன நடக்குது இங்கே தம்பி யார் நீ " என கேட்டாள். அவன் சற்று தடுமாறினான் " சரி சரி இந்திர ராணி கொஞ்சம் அமைதியாயிரு அமைதி " என கூறி அமைதி படுத்த அவளும் அமைதியானாள் " நீங்க அருள் தான் என் பேர சரியா சொல்றீங்க " என கூறிக் கொண்டே தூங்க தொடங்கினாள். அவனும் அந்த அம்மாவிடம் நடந்தது அனைத்தையும் சொன்னான். இறுதியை மட்டும் மாற்றினான் தான் சத்தம் கேட்டு அவள் அறையினுள் சென்றதாக. அவளுக்கு நினைவு வந்ததை கண்டு அந்த அம்மா ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்தாள். அந்த நேரத்தில் மருத்துவருக்கு போன் செய்து அழைத்தார்கள். அவரும் வந்து பரிசோதித்து ரோஸிக்கு நினைவு திரும்பியதாக சொன்னார். சில நாட்களுக்கு அவளுக்கு ஓய்வு அவசியம் என்றும் கூறிச் சென்றார். மறுநாள் அவளின் பெற்றோரும் வந்து பார்த்து மிகவும் மகிழ்ச்சியடைந்தனர். ஆதிக்கு நன்றிகள் பல கூறினர். இவனின் நண்பன் மைக்கேலும் மிகவும் மகிழ்ந்தான். சந்தோஷமாக ரோஸியுடன் அளாவினான். அவள் சாதாரணமாகவே பேசினாள். ஆதியும் கொஞ்சம் பேசினான் அவளும் பதில் அளித்தாள். அவள் நோயில் இருந்து விழித்ததே அவனுக்கு பெரிதும் மகிழ்ச்சியாக இருந்தது. அவள் இருவருடனும் நன்றாக பழகினாள். ஆதியுடன் நெருங்கி பழகினால் மைக்கேலின் முகம் மாறும் அதனை அறிந்து ஆதி விலகுவான். மனதிற்குள் தன் இந்திராணி எங்கே என்ற கேள்வியும் காணப்பட்டது ரகசியமாக. அன்று அவன் ஊரிலிருந்து கிளம்பிய 6 வது நாள் இரவு இன்னும் 4 நாட்களில் ஊர் செல்ல வேண்டும். இங்கு வந்தது தான் கண்ட விஷயம் தனக்கு வந்த கனவுகள் நினைவுகள் அனைத்தும் கற்பனை என முடிவு செய்து நிம்மதியாக தூங்கலாம் என உறங்க சென்றான். அவனுக்கும் நிம்மதிக்கும் இனி தொடர்பில்லை என அவனுக்கு புரியவில்லை. அவனும் மைக்கேலும் ஓரே அறையில் உறங்கி கொண்டிருந்தனர். அப்பொழுது அவனை யாரோ தட்டுவது போல் உணர்ந்தான். பின் எழும்பி பார்த்தால் ரோஸி. சற்று அதிர்ச்சியடைந்தான் பின் பேச தொடங்கினான் " என்ன ரோஸி மைக்கேல பார்க்க வந்தியா? அவன் அந்த கட்டில்ல தூங்குறான் பொறு எழுப்புறேன் " என எழ முயன்றான். அவளோ அவனை தடுத்து " ஆதி உன்ன தான் பார்க்க வந்தேன் எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் " என்றாள். இவன் குழப்பமாக " என்ன? " என்றான். அவள் " என்ன கொஞ்சம் வெளிய கூட்டிட்டு போறீயா? " என்றாள். " என்ன சொல்ற புரியல " என்றான். " நான் கொஞ்சம் வெளியே போகனும் இப்ப கூட்டிட்டு போறீயா? " என்றாள். " ரோஸி போய் படு இப்ப எதுக்கு வெளிய யார பார்க்கனும் " என்றான். அவள் " இல்ல எல்லாரும் என்ன பெஷண்ட் மாறியே பார்குறாங்க வெளிய போய் ரொம்ப நாள் ஆச்சு அவன் கிட்ட சொன்னா ஒத்துக்க மாட்டான் நீ கூட்டிட்டு போ " என்றாள். அவன் மறுபடியும் மன நோய் வந்துருச்சா என எண்ணிக்கொண்டே " சரி நாளைக்கு போகலாம் " என்றான். அவளோ விடமால் " இப்ப வா பிளீஸ் " என்றாள். இவனுக்கும் அவளுடன் நேரம் செலவழிக்க ஆசை தான் அவள் இந்திர ராணி என்ற எண்ணத்தினால். மேலும் அந்த டைரியை பற்றி கேட்கவும் விரும்பினான். ஆனால் வெளியே தெரிந்தால் அவளை விட்டுவிடுவார்கள் ஆனால் தன் நிலமை என குழம்பினான். அவளுடன் அவன் பழகி இருந்தான் நல்ல நண்பனாக அந்த நம்பிக்கையில் தான் அவள் இவனை அழைக்கிறாள். மணியை பார்த்தான் 10.00 இந்நேரத்தில் வெளியே ஒரு பெண்ணுடன் செல்வது தவறு. அதுவும் பழக்கமில்லாத ஊரில் என குழம்பினான் அதுவும் பெண்ணுடன். முடிவாக அவனும் கிளம்பினான். " இப்ப யாராவது நம்மல பார்த்துட்டா? " என அவன் இழுக்க அவளோ " எல்லாரும் தூக்குறாங்க நாம ஒரு மணி நேரத்துல வந்துறலாம் " என்றாள். " சரி தான் " என கூறிக் கொண்டே கிளம்பினான். பின் வெளியே வந்து " எனக்கு கார் ஓட்ட தெரியாது " என்றான். அவளும் " பைக் ஓட்ட தெரியுமா? " என்றாள் ஏளனமாக. அவனும் " தெரியும் எதோ ஒரளவிற்கு " என கூறினான் புன்முறுவலுடன். பைக்கை கிளம்பினான் இவனது நண்பனின் பைக் தான். அவளும் பின்னால் அமர்ந்து கொண்டு வந்தாள். " எங்க போனும் ரோஸி " என்றான். அவளும் " நான் வழி சொல்றேன் நீ போ " என்றாள். இவனும் சரி என சென்றான். அவளும் " நேரா " " ரைட் கட் யூ டன் " என கூறிக் கொண்டே வர இவனும் சென்றான்.
இறுதியாக தனிமையான ஒரு இடத்தில் வண்டி சென்று நின்றது. அது ஒரு கடற்கரை போன்ற ஏரி இருவரும் இறங்கினார்கள். அன்று பௌர்ணமி. இவனுக்கு அனைத்தும் கனவு போல் இருந்தது. மனது பின்னோக்கி சென்றது. அதிசயமாக நோக்கி கொண்டு இருந்தான். அப்பொழுது பின்னால் இருந்து அவள் அழைத்தாள் " அருள்வர்மா " என இவனும் திரும்பினான். அனைத்திற்கும் சாட்சியாக அதே நிலவு அதே காதலர்கள்.