🌹மையலுடைத்தாய் மழை மேகமே.. பாகம் 8🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மறுநாள் காலையில் அனைவரும் இன்பவனத்திற்கு புறப்பட்டனர்.பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்காய் மயூரா குடும்பத்தினரால் நடத்தப்படும் இல்லம் இதுவாகும். மற்ற இல்லங்களை போல் இல்லாமல் இங்கே சின்ன சின்ன பிள்ளைகளை பார்த்து கொள்ளும் காப்பகம் போலவும் இன்பவனம் செயல்படுகிறது.அவர்களின் ரிசார்ட் அருகேதான் இன்பவனம் உள்ளது.
இந்த அருமையான ஆலோசனையை வழங்கியதே மயூராதான். மிகவும் வித்தியாசமான காப்பகம் இந்த இன்பவனம் சிறு பிள்ளைகளுக்கு கிரச் போலவும் செயல்படுகிறது.

மயூரா ரிசோர்டில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் இங்குள்ள பெரியவர்களின் கண்காணிப்பில் தான் வளர்கின்றனர்.இங்கே இருக்கும் பெரியவர்களும் பல விதமான பின்புலன்களைக் கொண்டவர்கள்.ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் , விவசாயம் செய்தவர்கள், யோகா ஆன்மீகம் கற்றவர்கள் இப்படி பல விதமான மனிதர்கள்தான் இன்பவனத்தின் ஆணி வேர்கள்.
இக்கால குழந்தைகள் பிஞ்சிலே நவீன நாகரீகத்தில் பால்ய வயது இன்பங்களை அண்ட்ராய்டுகளில் தொலைத்து இயந்திரங்களை போல் செயல்படுவதை காண சகிக்காமல் தான் மயூரா இப்படி ஒரு இல்லம் நடத்துவது.

இங்கே குழந்தைகள் கைகளில் போன் இருக்காது. மாறாக மண்ணில் புரண்டு விளையாடுவார்கள். இயற்கையோடு ஒன்றி வாழும் முறைகளை இங்குள்ள பெரியவர்களிடம் கற்று கொள்கிறார்கள்.ஒரு மணி நேரம் வெளி விளையாட்டு, செடி நடுவது, யோகா, சங்கீதம் நடனம்,சமையல், ஆரம்பக் கல்வி, மொழியறிவு இப்படி அவர்களுக்கு பிடித்தத்தை கற்றுக்கொள்ளும் உரிமையும் அவர்களுக்கு இருந்தது.

ஒரு தாத்தா சரித்திர கதை சொல்லுவார். ஒரு பாட்டி பல்லாங்குழி விளையாட கற்று தருவார். யோகி தாத்தா யோகா மற்றும் விளையாட்டும், அஞ்சனை பாட்டி குட்டி குட்டி சமையலும் கூட சொல்லி குடுப்பார்கள். இயற்கை முறையில் அங்கேயே விளைவிக்கப்பட்ட காய்கறிகளை கொண்டே குழந்தைகளுக்கு உணவு தயாரித்து வழங்குவார்கள். வயதானால் யாருக்கும் உபயோகம் இல்லை என்று இங்குள்ள பெரியவர்கள் துவண்டு விடக்கூடாது எனவும் அதே சமயம் அவர்களுக்கு வருமானம் வரும் வகையிலும் பேரப்பிள்ளைகளைப் போன்ற குழந்தைகளுடன் இன்பமாக பொழுதை செலவு செய்யவும் இன்பவனம் இன்பமாக இயங்கி கொண்டிருந்தது.

இங்கு வளரும் பிள்ளைகள் நல்ல ஆரோக்கியமாகவும் அறிவாகவும் எல்லாம் வகையிலும் சிறந்தவர்களாக வளர்வதை நேரில் கண்ட பல செல்வந்தர் வீட்டு பிள்ளைகளும் இன்ப வனத்தின் கிரச்சில் தான் வளர்கின்றனர். அவர்கள் தரும் பெரும் நன்கொடைக்கள் தான் இங்குள்ள பெரியவர்களுக்கு சம்பளம் ஆக தரப்படுகிறது.

காலேஜ் இல்லாத சமயங்களில் மயூரா ருத்ரா மதனிகா அந்தரன் இங்குதான் இருப்பார்கள். யோகி தாத்தாதான் இதன் நிர்வாகியாக செயல்படுபவர். பின்னாளில் தன்னார்வாளர்கள் பலர் இன்ப வனத்தில் இணைந்து கொண்டனர். மயூராவிற்கு இங்க இருக்க ரொம்ப பிடிக்கும்.தாத்தா பாட்டி அன்பு அறியாமல் வளர்ந்தவர்கள் என்பதால் மூவரும் இங்குள்ள அனைவருக்கும் செல்லம் தான். அதிலும் யோகி தாத்தாவிற்கு மகா கேடியான மயூராவைதான் அதிகம் பிடிக்கும். அஞ்சனை பாட்டிக்கு அறிவும் நல்திறனும் அமைந்த ருத்ரனை பிடிக்கும்.

இன்பவனத்தின் கணக்கு வழக்குகளைப் பார்க்கும் அஞ்சனைப் பாட்டி ஓய்வு பெற்ற கணித பேராசிரியை. யோகி தாத்தா காலேஜ் மெட். கல்யாணம் செய்து கொள்ளமலே தனித்து விட்ட அஞ்சனை பாட்டியை யோகி தாத்தா தான் இங்கு அழைத்து கொண்டது. மயூராவைத் தொலைவிலே கண்டு விட்ட ஒரு குட்டி வாண்டு அவளை நோக்கி ஓடி வந்தது. மயிலு வந்திடுச்சு மயிலு வந்திடுச்சுனு அந்த சுட்டி குழந்தை ஓடி வந்து மயூராவின் கால்களைக் கட்டிக் கொண்டது.

அப்படி என்ன மாயம் மந்திரம் செய்வாளோ தெரியல. எல்லாம் குழந்தைகளும் மயூரா பார்த்த மாத்திரத்தில் அவளோடு ஒட்டிக் கொண்டு விடும். அவளோடு விளையாடவும், அவள் நவரசனையோடு அள்ளி விடும் பேய் கதை, ராஜா ராணி கதை கேட்கவும் ஒரு மழலை பட்டாளமே அங்கு இருந்தது. அந்த குழந்தையைப் பார்த்ததும் மயூராவும் "புவனமோகினி செல்லம்னு '' அவளைத் தூக்கி அவள் வெண்ணை கன்னத்தில் முத்தம் வைத்தாள்.

"மயிலு எத்தனை தடவை சொல்றது அழகா புவினு கூப்பிடுனு, ஏன் இப்படி புவனமோகினி னு நீட்டா இழுக்கிற. எனக்கு வெக்கமா இருக்க '' புவி குறைக் கூறினாள். கொழு கொழுவென்று இருந்த புவியின் கன்னங்களை கிள்ளியவாறே "என் லட்டுபேபி, நீ பொறந்தப்போ கொழு கொழுனு அழகா தேவதை மாதிரி இருந்தியாம். அதான் உன் அம்மா அப்பா உன் அழகில் சொக்கி உனக்கு புவனமோகினினு பேர் வெச்சாங்களாம். அப்டினா உலகத்தில் ரொம்ப அழகான பொண்ணுனு அர்த்தம். அவ்வளவு அழகான குழந்தையை புவனமோகினினு தானே கூப்பிடனும்? மயூரா கேட்க 4 வயது புவி கன்னத்தில் குழி விழ சிரித்தாள்

"நீ சொன்னா சரிதான். நா புவனமோகினி சரிதானே ''புவி தலையை சரித்துக் கேட்டாள். மயூராவும் ஆமாம் என்பது போல் தலையசைத்து சிரித்தாள். அப்போது அங்கு வந்த யோகி தாத்தா "என்ன தண்டனையின் ஒரு பகுதியா இந்த விஜயம் மயிலு'' சிரித்துக் கொண்டே கேட்க, ஆமாம் தாத்தா என்றாள்.

"இன்னும் காலை பசியாறல் தொடங்கல, மயிலு உன் கையால் உன்னோட ஸ்பெஷல் மசாலா டீ போட்டு கொடேன். ரொம்ப நாள் ஆச்சி குடிச்சு'' யோகி தாத்தா கேட்கவும் மயூரா
"அதற்கு என்ன தாத்தா டீ போட்டுட்டா போச்சி, இன்னிக்கு எல்லோருக்கும் நான்தான் டீ கலக்குவேன். நீங்க போய் பிரேக்பாஸ்ட் டை ரெடி பண்ணுங்க, நான் டீ கலந்து கொண்டு வரேன்''மயூரா சமையறை நோக்கி செல்ல, ருத்ரன் அஞ்சனை பாட்டியுடன் இல்லத்தின் கணக்கு வழக்குகளைப் பார்வையிட செல்ல, அந்தரனும் மதனிகாவும் இல்லத்தில் ஏதாவது ரிப்பேர் பணிகள் இருக்கின்றனவா என்று நோட்டமிட சென்றனர்.

காலை பசியாறல் தொடங்கும் நேரம் அனைவரும் உணவு கூடத்திற்கு வந்தனர். முதியவர்கள் 20 பேர்கள் பிள்ளைகள் 40 பேர்கள். அனைவரும் ஒன்றாக அமர்ந்து இறை வணக்கம் சொல்லிவிட்டு உணவை உண்டனர். அங்குள்ள முதியவர்களின் தேவை ரசனைகள் கூட மயூராவிற்கு அத்துப்படி. யோகி தாத்தாக்கு மசாலா டீ, அஞ்சனை பாட்டிக்கு லெமன் ஹனி டீ, தோட்டக்காரர் தாத்தாவிற்கு பால் கலக்காத கடுங்காப்பி, அம்புஜம் மாமிக்கு பால்.இப்படி அவர் அவர் தேவைக்கு தகுந்தவற்றை மயூரா சரியாக கலந்து வைத்திருந்தாள்.


மதியம் வரை அங்கிருந்து விட்டு அனைவரும் வீடு திரும்பினர்.அதற்குள் திருமணத்திற்கு சென்றவர்களும் வீடு திரும்பியிருந்தனர்.சென்ற நாளின் சண்டைகளை மறந்து விட்டு மயூரா, ருத்ரன், மதனிகா மூவரும் வீட்டில் ரகளை செய்து கொண்டிருந்தனர். அன்றைய பொழுது அவ்வாறே முடிவுற்றது.
 
Last edited:

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே.. பாகம் 8🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN