🌹 மழை மேகமே-பாகம் 10🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எப்படி ருத்ரனை காதலிக்க வைப்பது என்ற யோசனையில் மதனிகாவோடு வீடு வந்து சேர்ந்தாள். அவர்களுக்கு முன்பாகவே ருத்ரன் வீட்டுக்கு சென்று விட்டிருந்தான். அவர்களை எதிர்க் கொண்டு அழைத்த மயூராவின் அம்மா சாம்பவி "அடியே மயிலு ரொம்ப நேரமா ருத்ரன் உன்னை தேடிட்டு இருக்கான். என்னான்னு போய் கேளு போ ''.

"அட இது என்னடா சாத்தானை நினைத்த மாத்திரத்தில் அதுக்கு தெரிஞ்சி போய் நம்பள தேடுதே''மைண்ட் வாய்ஸ் டப்பாவை திறக்க,
"என்னவாம் உன் ருத்ரனுக்கு, எதுக்கு என்னை தேடறான், இன்னும் ரெண்டு கொட்டு வைக்கவா? '' மயூரா கேட்க,

"அவனுக்கு தலைவலிடி'' அவர் சொல்லி முடிக்கும் முன் மயூரா அங்க இல்லை.ருத்ரன் ஹீலிங் ரூம்மில்தான் இருப்பான் என்பது அவளுக்குத் தெரியும். எதையும் தாங்கிக் கொள்ளும் ருத்ரனால் மைக்ரேன் தலைவலியை மட்டும் தாங்கிக் கொள்ள இயலாது.அதிசயம் போல் மயூரா அவன் தலையை பிடித்து மசாஜ் செய்தால் அந்த வலி குறைந்துவிடும்.

இந்த நோய் ருத்ரனின் தாய் வழி பாட்டிக்கும் இருந்தது. சிறு வயதில் அவன் வலியில் துடிக்கும் பொழுது மயூராதான் மென்மையாக தலை பிடித்து விடுவாள்.அவனுக்காகத்தான்அந்த ஹீலிங்க் ரூமை மயூரா கட்ட சொல்லியது. பொதுவாக மைக்ரேனில் அவதிபடுவோர்க்கு வெளிச்சமும், சத்தமும் பெரும் உபாதையாக இருக்கும்.அவர்கள் இருட்டு அறையில் தூங்கி எழுவது வலி நிவாரணியாக செயல்படும்.அதற்காகவே அந்த அறையை முழுவதும் மயூராதான் தயார் செய்தாள். இது மாதிரி விஷயங்களில் அவளுக்கு ஈடுபாடு அதிகம்.

விரைந்து சமையலறை சென்று அவனுக்கு இஞ்சி டீ தயார் செய்து எடுத்துக்கொண்டு அறைக்கு சென்றாள். அங்கே தலையை பிடித்துக் கொண்டு ருத்ரன் படுத்திருந்தான்.
மங்கிய மஞ்சள் கிரிஸ்ட்டல் உப்பு விளக்கு இரண்டு அறைகோடியில் எரிந்துக் கொண்டிருந்தது. சிஸ்டத்தில் சன்னமான ஒலியில் புல்லாங்குழல் இசையை தவழ விட்டாள்.
ருத்ரனுக்கு இஞ்சி டீ பருக தந்து விட்டு, அவன் பக்கத்தில் அமர்ந்து மேஜை மேல் இருந்த லாவெவண்டர் ஆயிலை அவன் நெற்றியில் பூசி மசாஜ் பண்ண ஆரம்பித்தாள்.
அவள் தொடுகையை கண் மூடி இருந்தாலும் ருத்ரன் உணர்ந்துக் கொண்டான். அவன் இதழ்களில் புன்னகை படர்ந்தது.

மெல்ல தலையணை மேல் இருந்தவன் சற்றே தலை தாழ்த்தி மயூராவின் மடி மீது படுத்துக் கொண்டான். இதற்கு முன்பு வலி வந்தாலும் அவன் இப்படிதான் செய்வான்.ஏன் மயூரா கூட மாதவிலக்கு நேரங்களில் அவன் மடியில் தானே தலை வருட சொல்லி தூங்குவாள்.
ஏனோ அன்று அவனின் அந்த செய்கை மயூராவை ஏதோ செய்தது.மிக அருகில் அவன் முகம். கண்கள் மூடி நிர்மால்யமாய் இருந்தது.தலைக் கொள்ளா முடியும் அலை அலையாக காற்றில் பறந்துக் கொண்டிருந்தது.

மெல்ல கைகளினால் அவன் தலை முடி ஒதுக்கி, யோகி தாத்தா சொல்லிக் கொடுத்த திரியம்பகம் மந்திரத்தை மனதில் உச்சரித்தவாறே, நெற்றியை அமுக்கி விட்டாள்.ருத்ரனோ தலையை திருப்பி அவள் வயிற்றில் புதைத்துக் கொண்டு அப்படியே தூங்கிவிட்டான்.அந்த வேளை மட்டும் மயூரா அவனிடம் சண்டித் தனங்கள் செய்வது இல்லை. மயூரா சதய நட்ச்சத்திரத்தில் பிறந்தவள், அவள் கைப்பட மருந்து குடுத்தால் நோய் குணமாகும் என்பதை யோகி தாத்தாதான் அவளுக்கு சொல்லி அந்த மந்திரத்தையும் கற்றுக் கொடுத்தார்.

அன்று முதல் ருத்ராக்கு தலைவலி என்றால் இந்த மந்திரத்தை சொல்லித்தான் தலை பிடித்து விடுவாள். இருவர் மட்டுமே அந்த இருண்ட அறையில்.மவுனமாய் மயூரா அவன் தலையை வருடிக் கொண்டிருந்தாள். இவனை எப்படி காதலிக்கறது என்ற யோசனை வேறு. அவன் ஆழ்ந்து உறங்கியதும், சரியாக அவனை படுக்க வைத்துவிட்டு அறையை விட்டு வந்தாள்.

அவள் வெளியே வந்ததும் அவள் அம்மா "அவன் தூங்கிட்டான்னா ஆருஷி? சரி வா வந்து கை கால் அலம்பிட்டு சாப்பிடுங்கள். மது உனக்காக வெயிட் பண்றா பாரு '' சாம்பவி சாப்பாடு மேஜையை நோக்கி நகர மயூராவும் அவரைத் தொடர்ந்தாள்.

சுட சுட சாம்பார், சாதம், அவியல் , பொரியல் எல்லாம் மேஜையில் அவள் வரவிற்கு காத்திருக்க, அப்போது புயல் போல் ரோஜா அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தாள்.

"ஆண்டி ஆண்டி என் ருத்ராக்கு என்ன ஆச்சு? காலேஜ்ல ரொம்ப ரெஸ்ட்லெஸ்ச இருந்தாரே? இப்ப எப்படி இருக்கார்? நா அவரை உடனே பார்க்கனும்'' ரோஜாவின் ஆர்ப்பாட்டத்தைப் பார்த்து சாம்பவி அசந்து விட்டார்.அவள் ருத்ரனாமே.

மயூராவோ எதுவும் கண்டு கொள்ளாதது போல் சாம்பாரை சாதத்தில் பிசைந்து உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.

"அவனுக்கு வழக்கமா வர்ற தலைவலி தான். ரூம்ல ரெஸ்ட் பண்ணிட்டு இருக்கான்.மயூரா அவனுக்கு தைலம் தேய்ச்சி விட்டுருக்கா. சரி ஆயிடும் ரோஜா. நீ பயபடற மாதிரி ஒன்னும் இல்லை'' சாம்பவி ரோஜாவை சமாதானப்படுத்தினார்.

அவளோ " அடிக்கடி வலி வர்றது நல்லது இல்லை ஆண்டி.இன்னும் நாட்டு வைத்தியம் அது இதுனு மயூராவை நம்பிட்டு இருக்கீங்க. இதெல்லாம் உடனே ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போய் காமிக்கறது இல்லையா'' அந்த குத்தல் மயூராவிற்குத்தான் என்பது அவளுக்கும் தெரியும்.
மயூரா வாயை திறந்தால் அங்கே ஒரு தரமான சம்பவம் சிறப்பாக நடந்தேறிவிடும். அதற்கு முன் மதனிகா முந்திக் கொண்டாள்.

"ரோஜாக்கா மைக்ரேன்னை எந்த மருந்தும் குணப்படுத்தாது.இது பரம்பரை வியாதி.இந்த வலிக்கு சும்மா சும்மா என் அருமை அத்தான் பெயின் கில்லர் போட்டுக்கிட்டு இருந்தா அவர் கிட்னி சட்னி ஆயிடும். இயற்கை முறை மருத்துவம் நல்ல தூக்கம் இருந்தாலே சரி ஆயிடும். அதை என் மயிலு அக்கா நல்லாவே செய்வா. மேலும் மாமா வலி வந்தா அக்காளைத் தான் தேடுவாரு.வேற யாருக்கும் அங்க வேலையே கிடையாது'' ரோஜா மூக்கை நறுக்குன்னு பேச்சாலே மது வெட்டிவிட்டாள்.

ஒரு கணம் மயூராவே திகைத்துவிட்டாள்.என் பிள்ள பூச்சி தங்கையா இது?இந்த போடு போடுதே. ஜாடையாக தங்கை பார்த்த பார்வையில் பெருமிதம் இருந்தது.

அதற்கு மேல் அங்க நிற்க ரோஜாவிற்கு வேண்டுதலா என்ன? சாம்பவியிடம் சொல்லிக் கொள்ளாமல் கூட கிளம்பி விட்டாள்.குடும்ப நண்பரின் மகள் என்ற முறையில் அடிக்கடி அவளும் ருத்ரனை பார்க்க வருவாள். அவளின் அலட்டல்கள் மயூராவிற்கும் மதுவிற்கும் பிடிப்பதே இல்லை.
நன்கு உறங்கி எழுந்த ருத்ரனுக்கு தலைவலி சரியாகிவிட்டிருந்தது.மயூராவிற்கு நன்றியை தெரிவிக்க அவள் அறைக்கு சென்றான்.

ஏனோ அவனை காதலித்து காமிக்கிறேன் என்ற சவாலுக்கு பின் அவன் கண்களை பார்ப்பதற்கு கூட மயூராவிற்கு ஒரு மாதிரியாக இருந்தது.ஏனோ சகஜமாக அவனோடு பேசக் கூட அவளுக்கு தடுமாறியது.இதை எதையும் அறியாதவன் இயல்பாக நன்றி தெரிவித்து விட்டு அவ்விடம் விட்டு அகன்றான்.விளையாட்டாக அவனை காதலிக்கிறோம் என்று சொல்லி பிறகு விஷயம் அவனுக்கு தெரிந்து விட்டால் ருத்ரனின் கோவம் எவ்வாறானது என்பது அவளை தவிர யார் அறிவார்?

பூரணியின் பெட் ஞாபகம் வந்தது.வந்தது வரட்டும்.காப்பாத்து சிவனேனு மயூரா களத்தில் குதித்தாள்.
 

Author: KaNi
Article Title: 🌹 மழை மேகமே-பாகம் 10🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN