தொடர்ந்த கனவு...
நிலவு புறப்பட்டு சில மணி துளிகளே ஆன காரணத்தினால் இளஞ்சிவப்பும் வெண்மையும் கலந்து அதிசய ஒளியை பரப்பி கொண்டிருந்தது. அந்த நிலவு எனும் மங்கை அணிந்திருக்கும் ஆடையில் வரையப்பட்ட ஒவியங்களாக மேகங்கள். அதில் பதிக்கப்பட்ட இரத்தினங்களாக விண்மீன்கள். பௌர்ணமி என்ற காரணத்தினால் சற்று அதிகமாக வேகம் காட்டிய அலைகள். பௌர்ணமி என்பதினால் அதிக ஒலியுடன் வேகத்துடன் சீறி பாய்ந்த அலைகள் அருகே அதன் ஒலியுடன் போட்டி போட்டுவதாக எண்ணி சிறிய அளவு ஒலியை எழுப்பிய தென்னை மரங்கள் அவற்றில் அமர்ந்து அமுத கானம் பாடிக் கொண்டிருந்த பறவைகள் என அனைத்தையும் கவனித்து தான் கனவில் மட்டுமே உணர்ந்த சூழலை நிஜத்திலும் ரசித்துக் கொண்டிருந்தான் ஆதி தன் நிலை மறந்து அவனை ரோஸி அழைத்த " அருள்வர்மா " எனும் சொல் சுயநினைவு அடைய செய்தது. அவனும் திரும்பி " நான் ஆதி ரோஸி அருள்வர்மன் இல்லை " என்றான் புன்னகையுடன். அவளோ " எனக்கு தெரியும் நீங்கள் தான் அருள்வர்மன் என்று என்னவன் என்று " என்றாள் உறுதியுடன். அவனோ " யாரது அருள்வர்மன்? உனக்கு எப்படி அவனை தெரியும்? " என்றான். அவளும் " நான் மயக்கத்தில் இருந்து மீண்டதில் இருந்து என்னை அதிலிருந்து எழுப்பும் சக்தி என்னவனுக்கு மட்டும் தான் உள்ளது அதிலிருந்து நான் அடையாளம் கண்டேன் " என்றாள். இவனுக்கு நம்புவதா இல்லை வேண்டாமா என தெரியவில்லை. தன் கனவில் வரும் மாந்தர்கள் இவள் கனவிலும் வருவது உண்மை. ஆனால் நான் தான் அருள்வர்மன் என்பதை இவனால் ஏற்க முடியவில்லை. ஏனென்றால் கனவில் வரும் அவன் வீரம் புத்தி கூர்மை அனைத்தும் உள்ளவன். ஆனால் இவனுக்கும் அதற்கும் சிறிது கூட சம்பந்தம் கிடையாது. ஆகவே கூறினான் " எனக்கு ஒன்னும் புரியல நீ சொல்றத தெளிவாக சொல்லு முதல வா வீட்டுக்கு போகலாம் " என்றான். அவள் உடனே " நான் எப்படி முன்ன பின்ன தெரியாதவர நம்பி கூட வருவேன். நான் உங்க கிட்ட பார்த்தது அவர தான். நாம சந்திப்ப திட்டமிட்டு நடந்தது அல்ல எதார்த்தமா தான நடந்தது?. இப்ப இல்லைனாலும் எப்படியும் அது கண்டிப்பா நடந்து இருக்கும். உங்களுக்கும் இது சம்பந்தமா கனவுகள் இல்லைனா சிந்தனைகள் வந்து இருக்கும் இல்லையா? எனக்கும் வந்தது அத எல்லாம் டைரில எழுதுனேன் முழுசா எழுதுறதுக்குள்ல ஆக்சிடெண்ட் ஆச்சு எனக்கு உடம்பு சரி ஆனாலும் மனசு சரி ஆகல அது மொத்தமா அருள்வர்மன் தான் தேடி அமைதியா மயக்கமா போச்சு பல மாதமா அப்படியே இருந்துச்சு உங்கள பார்த்ததும் தான் எனக்கு மனசு தெளிந்தது நீங்க தான் நீங்க தான் அருள்வர்மன் " என உணர்ச்சி வேகத்தில் சொல்லிக் கொண்டே போனாள். அவனும் அனைத்தையும் கேட்டு பிரம்மை பிடித்து நின்றான். அவள் சொல்லுவது அனைத்தும் உண்மை என உணர்ந்தான்.அவனுக்கு வரும் கனவுகள், அவன் பெங்ளூர் வந்தது, மியூசியத்தில் மயங்கியது, அவனது நினைவுகள், அவளை சந்தித்தது, அவள் பல மாத கோமாவில் இருந்து எழுந்தது என அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகள் எனவே அவனுக்கு தோன்றியது. அவை எல்லாம் எதோ ஒரு காரணத்திற்காக நடந்ததாகவே தெரிந்தது. ஆனால் அனைத்தையும் நம்புவதை ஒரே ஒரு பெயர் தடுத்தது அது தான் " அருள்வர்மன் " எனும் பெயர். அவனது குணங்களும் வீரமும். ஆகவே சொன்னான் " நீ சொல்றது எல்லாம் சரி தான் ஆனால் என்னால நம்ப முடியல ரோஸி " என்றான் அமைதியாக. இதனை கேட்டதும் அவள் உணர்ச்சி வெள்ளம் ஆனாள் " எதனை நம்ப முடியவில்லை உங்களால் இதே போன்ற கடற்கரையில் நாம் ஒன்றாக கழித்த இரவுகளையா? இல்லை அரண்மனை மாடத்தில் ஒன்றாக கழித்த பொழுதுகளையா? என்னை உயிரை விட நேசிப்பதாக கூறுவீர்களே அதையா? இருவரும் ஒருவரையொருவர் உயிரென விரும்பியும் சேராமல் இறந்தோமே அதையா? எதை நம்ப இயலவில்லை தங்களால் இனியும் நம்ப முடியவில்லை என்றால் அனைத்திற்கும் சாட்சியாக இருக்கும் இந்த கடலை கேளுங்கள். இல்லை என்றால் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த இந்த நிலவை கேளுங்கள் " என்றாள் கண்ணீர் பொங்க உணர்ச்சிகள் தெரிக்க. அப்பொழுது அவன் கவனித்தான் அவள் பேச பேச அந்த கடல் அலைகளும் அவளுடன் சேர்ந்து அதிகமாக ஓசையும் இரைச்சலும் எழுப்பின. நிலவு நேரம் செல்ல செல்ல வெண்மையாக மாறுவதற்கு பதில் அடர் சிவப்பாக மாறியது. அதே சிவப்பு நிறத்தை அந்த மேக கூட்டங்களும் வாங்கி கொண்டு பிரதிபலிக்க வானமே சிவப்பாக மாறியது. காற்றும் அவளுடன் சேர்ந்து பேரிரைச்சல் போட்டன மரங்கள் அனைத்தும் மொத்தமாக ஆடின. சற்று முன்பு இருந்த இன்ப நிலை மாறி எங்கும் ஒரு உணர்ச்சி நிலை பரவுபதை உணர்ந்தான். அவள் சொல்லி முடிக்கும் தருணத்தில் ஒரு பெரிய மின்னல் வானையே கிழிப்பது போல் ஒரு கோடியில் இருந்து மறு கோடி வரை அடித்தது. அதன் சீற்றம் அருகே இருந்த தென்னை மரத்தை தாக்க அது அடியில் தீ பிடித்து உடைந்து விழுந்தது. அந்த மரம் நேராக ரோஸி மேல் விழ செல்ல ஆதி அவளை தள்ளி விட்டான் அவள் தப்பினாள் ஆனால் அந்த மரம் இவன் முதுகில் விழுந்து இவனை அப்படியே பூமியில் புதைத்தது. ஆதி மயங்கி கிடக்க முதுகின் குறுக்கே அந்த மரம் கிடக்க ஓடி வந்த அவள் அதனை தூக்க முயன்றாள் ஆனால் முடியவில்லை. " உனக்காக உயிரை தருவேன் என கூறியதை மீண்டும் நிரூபணம் செய்கிறீர்களா அருள்வர்மா " என புலம்பி கொண்டே அழ தொடங்கினாள். அப்பொழுது நடந்தது அந்த அதிசயம் ஆதி தன் கைகளை பூமியில் அழுத்தி எழுந்தான் பெரும் வேகத்துடன் அவன் மேல் கிடந்த அந்த மரக்கட்டை பல அடிகள் தாண்டி போய் விழுந்தது. எழுந்து நின்ற அவன் " அழாதே இந்திர ராணி நான் அருள்வர்மன் தான் " என உறுதியுடன் கூறின அவன் இதழ்கள். மேலும் அவன் கைகள் அவளை தூக்கி இழுத்து அணைத்துக் கொண்டன. அவளும் அவனை அணைத்துக் கொண்டான் ஆனந்த கண்ணீருடன்.
அந்த அணைப்பு அந்த இருவருக்கும் தேவையாக தான் இருந்தது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பின்பு கிடைக்கும் அணைப்பல்லவா? அது. இருவரும் மிகவும் அழுத்தமாக அணைத்துக் கொண்டனர். ஆகவே அந்த அணைப்பு நீங்க பல நிமிடங்கள் ஆனது. அதன் பிறகு இருவரும் பிரிய மனமில்லாமல் பிரிந்தனர். அவள் இவனின் மார்பில் சாய்ந்து இருக்க அவன் தரையில் அமர்ந்து இருந்தான். அவர்கள் இருவர் மனமும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நினைவுகளுக்கு சென்றன. அந்த நினைவுகளை இருவரும் ஒருவருக்கொருவர் ஆசையுடன் ஆர்வமாக பகிர்ந்து கொண்டனர். அவன் முதல் முதலாக தன் நண்பனுக்காக முத்தூர் வந்தது அங்கே இந்திர ராணியை மதியழகியாக பார்த்து பழகியது. தன் இதயத்தை பறி கொடுத்தது பின் அவள் தான் இளவரசி என அறிந்து சற்று குழம்பியது. அதனை தொடர்ந்து தன் நண்பனால் ஏற்பட்ட சறுக்கல் குழப்பம் என அனைத்தையும் பகிர்ந்து கொண்டனர். ஆனால் இருவருக்கும் கஜவர்வன் படை எடுத்தால் முத்தூரை காக்க அருள்வர்மன் களத்தில் அவனை எதிர்ப்பான் என அவனுக்கு ஓலை அனுப்பிய பின் நடந்த நிகழ்வுகள் எதுவும் ஞாபகம் வரவில்லை. இருவரும் அதனை நினைத்து குழம்பினர் இருவருக்கும் அதனை பற்றி சிந்திக்க தலை வலி தான் வந்தது. பின் அருள்வர்மன் அல்லது ஆதி கூறினான் " நீ வருத்தப்படாத இந்திர ராணி அந்த பிரச்சனையை நான் கண்டுபிடிக்கிறேன் " என்றாள். அவளும் " அந்த ஜென்மத்துல எதனால நாம சேராம போனோம்னு தெரிஞ்சா தான் இந்த பிறவிலையாவது நாம் சேர முடியும் " என்றாள் ஏக்கமாக அவனும் அவளை சமாதானம் செய்து வீட்டிற்கு அழைத்து சென்றான். அங்கே ஒருவரும் அறியாமல் அவரவர் அறையை நாடினர்.
மறுநாள் மைக்கேல் வெளியே செல்ல அழைத்த போது அவனிடம் தலைவலி என கூறி அவனை மட்டும் அனுப்பி வைத்து விட்டு இவன் அந்த மியூசியத்தை தேடி சென்றான் அப்பொழுது " மீண்டும் அங்கே சென்றால் அந்த கனவுலகிற்கு சென்றால் மூளைச்சாவு கூட ஏற்படலாம்" என அந்த மருத்துவர் சொன்னதையும் அலட்சியம் செய்து அங்கே சென்றான். அந்த வாளை நெருங்கினான் ஆனால் ஏமாற்றம் தான் அடைந்தான் மயக்கமோ இல்லை எதுவும் நினைவுகளோ ஏற்படவில்லை மனது அமைதியாக இருந்தது. இருப்பினும் நெருங்கி சென்று அந்த கண்ணாடி பேழையை தூக்கி அந்த வாளை எடுத்தான். அப்பொழுதும் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் அபாய அலாரம் ஒலிக்க காவலர்கள் வந்து அவனை பிடித்து தள்ளினர். அவர்களிடம் மன்னிப்பு கேட்டு அபராதம் கட்டி திரும்பினான் வீட்டிற்கு. ஏமாற்றத்துடன் உறங்க சென்றான் சோர்வாக அப்பொழுது வந்தது தொடர்ந்த கனவில் தெரிந்தது இவனது கடந்த காலம்.
வேறு கதை
நண்பன் கஜவர்மனிடம் களம் காண அழைப்பு விடுத்து நாட்கள் ஐந்து ஆகியும் அதற்கு பதில் எதுவும் இல்லை நினைத்து குழம்பிக் கொண்டு இரு மரங்களுக்கு இடையே கட்டப்பட்ட கயிற்று கட்டிலில் ஆடிக் கொண்டிருந்தான் அருள்வர்மன். அமாவாசை முடிந்து வளர்பிறை தொடங்கியிருந்த காலம் என்பதால் பிறை நிலவு அழகாக வான வீதியில் உலா வந்து கொண்டிருந்தது. அந் நிலவு சில சமயங்களில் மேக கூட்டங்களில் ஒளிந்து கண்ணாம் மூச்சி விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தது. இத்தனை அழகையும் ரசித்துக் கொண்டு வீசும் குளிர் காற்றில் நனைந்து கொண்டிருந்தான். அந்த நிலவினை அவன் கண்ட போது அந்த நிலவினை முகமாக கொண்ட ஒரு காரிகையின் நினைவும் அவனுக்கு வந்தது. இதே நிலவொளியில் அவர்கள் இருவரும் கழித்த பொழுதுகள் நினைவிற்கு வந்தன. அவளை விட்டு தூரமாக இருப்பது அவனிற்கு ஏமாற்றத்தை கொடுத்தது அதன் வெளிப்பாடாக ஒரு பெருமூச்சு ஒன்று விட்டான். காற்றிலே தன் கரத்தினை அசைத்துக் கொண்டான். இந்த கரத்தினை அவள் கரம் பிடித்த சமயங்கள் நினைவிற்கு வந்தன. என்ன ஒரு ஆச்சரியம் அப்பொழுது அவனது கை பிடிக்கப்பட்டது ஒரு மலர் கரத்தால். அதிர்ச்சியுடன் எழும்பி அமர்ந்தான் அவன் எதிரே புன்னகையுடன் நின்றிருந்தாள் இந்திர ராணி. அவனும் " தேவி தாங்கள் " என இழுத்தான் ஆச்சரியம் குறையா குரலில். " ஆம் நானே தான் " என்றாள். அவனும் " சொல்லுங்கள் நீங்கள் வந்த நோக்கம் என்ன? " என்றான் அந்த கயிற்று ஊஞ்சலில் இருந்து இறங்கிய வண்ணம். அவள் உடனே " நான் தங்களை காண வர காரணம் எதுவும் தேவையில்லை " என்றாள். அவன் அவளை உற்று நோக்கினான் அவளின் முகத்தின் ஜொலிப்பு அந்த விண்மீன்களின் ஜொலிப்புடன் போட்டி போட்டது. அதனை ரசித்த அவன் அவளின் நிலவு முகத்தை நோக்கி" தேவையில்லை தான் " என்றான் சற்று அழுத்தமாக. அவளும் புன்னகையுடன் " ஆனால் இப்பொழுது வந்ததிற்கு காரணம் உள்ளது " என்றாள்.அவனும் " சொல்லுங்கள் " என்றான் அவள் " உங்களை அழைத்து செல்ல " என்றாள். அவனும் குழப்பத்துடன் " ஏன் " என்றான். அவள் " உங்கள் நண்பரை போருக்கு அழைத்து இன்று ஐந்து நாட்கள் ஆகின்றன " என ஆரம்பித்தாள் அவளின் எண்ணம் இவனுக்கு புரிந்தது. ஆயினும் " அதற்கு " என இழுக்க அவள் " போருக்கான ஆயத்த பணிகள் ஊருக்குள் நடக்கின்றன ஆனால் நீங்கள் இங்கே காட்டிற்குள் என்ன செய்கிறீர்கள் " என்றாள். அவனும் " நானும் போருக்கு ஆயத்தம் ஆகிறேன் " என்றான். அவள் " படை அணிவகுப்பு பயிற்சிகள் திட்டங்கள் என எது நடக்கும் போதும் உங்களை அந்த புறம் காணவில்லை பின்பு எப்படி ஆயத்தம் செய்கிறீர்கள் " என்றாள். அவன் " தேவி அவை ஒரு முறை ஆனால் அவற்றால் பயனில்லை ஆகவே வேறு முறையில் முயற்ச்சிக்கிறேன் " என்றான். அவளோ " ஏன் அவற்றால் பயனில்லை? தங்களின் போர் தந்திரம் யுக்திகள் அனைத்தும் உலக பிரசித்தம் ஏன் அவை எங்கள் படைக்கு நிச்சயம் தேவை " என்றாள். அவனும் " தாங்கள் சொல்வது உண்மையும் கூட ஆனால் தற்பொழுது சூழல் அப்படி " என்றான். அவள் " புரியவில்லை " என்றாள். அவனும் புன்னகையுடன் " தேவி என் தந்திரங்கள் யுக்திகள் யுத்தத்தில் பலன் தராது ஏனென்றால் இப்பொழுது என்னை எதிர்த்து வருவது என் நண்பன் என் செயல்பாடுகள் ஏன் என் அசைவுகளை கூட கணிக்க கூடியவன். இன்னும் சொல்ல போனால் அவனுடன் யுத்தம் புரிவது கண்ணாடி முன்பு நின்று நான் போர் புரிவதற்கு சமம் " என்றான் பெருமையுடன் அதில் சிறிது வருத்தமும் காணப்பட்டது. அவன் சொன்னதை அவள் சிந்தித்தாள் அது உண்மை என கூட புரிந்தது. பிறந்ததில் இருந்து உடனிருக்கும் ஒருவன் இரட்டை பிறவிகள் என அழைக்கப்படும் இருவருக்குள் யுத்தம் நடந்தால் யுத்தம் நிச்சயம் கடுமையாக இருக்கும் என புரிந்தது. அதில் ஒருவரின் மனநிலைகள் யுக்திகள் செயல்பாடுகளை மற்றவர் கணிப்பது சாதாரணம் தான் என புரிந்தது. ஆகவே " பின்னர் என்ன செய்வது அவர்கள் படையை விட நம் படை சிறியது. உங்கள் அறிவும் தற்சமயம் பலன் தாராது. பின் எப்படி நாம் போராடுவது " என்றாள் அதில் சிறிது கவலையும் தென்பட்டது. அவனும் சற்று ஆறுதலாக " கவலை கொள்ளாதீர்கள் நம்மிடம் மற்றொரு முறை உள்ளது யுத்தத்தில் வெல்ல " என்றான். அவளோ " புரியும்படி சொல்லுங்கள் " என்றாள் அதில் நம்பிக்கையும் தெரிந்தது. அவன் " தேவி போர் வீரர்கள், படைகள், அணிவகுப்புகள், இவை எல்லாம் கைவிடும் படை ஆகும் ஏனென்றால் அவை ஒரு வேளை தோல்வி அடையலாம். ஆனால் மற்றொரு வகை உள்ளது அவை தான் கைவிடா படைகள் அதனை உருவாக்க தான் நான் இங்கே காட்டில் வந்துள்ளேன். " என்றான். அவளுக்கு எதுவும் புரியவில்லை ஆகவே கேட்டாள் " அது என்ன படை தாங்கள் எப்படி அதனை உருவாக்க முடியும் " என்றான். அவன் " தேவி அவற்றை நான் தனியாக உருவாக்கவில்லை உங்கள் நாட்டில் உள்ள கொல்லர்கள் தச்சர்கள் என பலரின் உதவியுடன் உருவாக்கியுள்ளேன் " என்றான். அவளோ " புரியவில்லை அவர்களை கொண்டு என்ன படை? " என்றாள். அவனோ " வாருங்கள் காட்டுகிறேன் " என அழைத்துக் கொண்டு நடக்க தொடங்கினான்.
அவர்கள் சென்ற பாதை ஒத்தையடிப் பாதையாக இருந்ததால் அவள் முன்னே செல்ல அவள் பின் தொடர்ந்தாள். அவளின் கொலுசு சத்தமும் அங்கே தரையில் கிடந்த சருகுகளில் இவர்கள் காலடி பட்டு வரும் ஓசையும் அவனை வேறு ஒரு உலகிற்கு அழைத்து சென்றன. அவ்வப்பொழுது அவன் அவளை திரும்பி பார்த்துக் கொண்டே சென்றான். பாதை ஓரங்களில் இருந்த மர இடைவெளிகளில் நிலவின் ஒளி அவள் உடலிலும் அவளின் முகத்திலும் திட்டுதிட்டாக படர அவளின் அழகை பல மடங்கு அதிகப்படுத்தி காட்டியது. குங்கும சிவப்பு நிற கன்னத்தில் பட்டு தெளித்த வெள்ளை ஒளி இணையில்லா அழகை அவளுக்கு அளித்தது. ஆனால் அவள் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. தன்னையும் தன் நாட்டையும் காக்க அவன் கொல்லர்களையும் தச்சர்களையும் கொண்டு என்ன படையை ஏற்பாடு செய்திருப்பான் என்ற குழப்பம் அவளிடம் காணப்பட்டது. அவனின் புத்தியில் அவளுக்கு நம்பிக்கை இருந்தது ஆகவே சற்று ஆர்வமாக அவள் சென்றாள். சிறிது தூரம் சென்றதும் வெளிச்சம் தெரிந்தது. " அங்கே பாருங்கள் தேவி " ஒரு ஐந்து கூடாரங்கள் சற்று பெரிதாக அமைந்திருந்தன. அவற்றின் நடுவே ஒரு பெரிய கூடாரம் ஒரு ஒரத்தில் வெட்டி குவிக்கப்பட்ட மரங்கள். இவை அனைத்தும் பந்தங்களின் ஒளியில் தெரிந்தது. அவள் அனைத்தையும் பிரம்மிப்பாக பார்த்தாள்.
உள்ளே நூற்றுக்கணக்கில் மனிதர்கள் வேலை பார்த்துக் கொண்டிருந்தனர் அந்த இரவிலும். மரங்களில் செய்யப்பட்ட பெரிய பெரிய பொறிகள் அம்புகள் என அனைத்தும் பெரியதாக. அதனை தாங்கியுள்ள பொறிகள் பெரிய சக்கரங்களில் பொருத்தப்பட்டிருந்தனர். ஆச்சரியத்துடன் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். இறுதியாக அவர்கள் சிறிய ஒரு கூடாரத்தை அடைந்தனர். அங்கே பஞ்சனையில் அவள் அமர்ந்தாள் அந்த அறை முழுவதும் தோல் சுருள்களில் பல படங்கள் வரையப்பட்டிருந்தனர். " இவையெல்லாம் என்ன? " என அவள் ஆச்சரியம் குறையாமல் கேட்க அவன் " தேவி இவை அனைத்தும் கைவிடாப் படைகள் யுத்தத்தில் பயன்படுத்தப்படும் இயந்திர பொறிகள் " என்றான். அவள் " இவை எப்படி? உதவும் " என கேட்டாள். அவன் " தேவி இங்கே ஆயிரக்கணக்கான அம்புகளை ஒரு நொடியில் ஏறியும் பொறிகள் உள்ளன. பெரும் பாறைகளை பெரும் விசையுடன் எதிரி படையின் மேல் வீசும் பொறிகள் உள்ளன அனைத்திற்கும் மேலாக திரிபுர அம்புகள் உள்ளன " என்றவனை " அப்படி என்றால்? " என அவள் கேட்க அவன் " தேவி புராணத்தில் சிவபெருமான் திரிபுரங்களை மூன்று அம்புகளால் எரித்தார் என படித்துள்ளோம் அல்லவா? அவற்றை உருவாக்கி உள்ளோம். அவை பெரும் அம்புகள் அவை பொறியின் மூலம் எய்யப்பட்டால் ஆகாயத்தில் பறந்து முதல் அடுக்கு பிரிந்து கொட்டும் அவற்றில் அடைக்கப்பட்டுள்ள எண்ணெய் நிரப்பப்பட்ட தோற்பைகள் ஆயிரக்கணக்கில் விழும் எதிரிகள் மேல். இரண்டாம் அடுக்கில் இருந்து நெருப்பு கொட்டும். எதிரிகள் மொத்தமாக எரிந்து போவார்கள் " என்றான். அதனை கேட்டு அவன் சொன்னதை ஒரு கணம் சிந்தித்து பார்த்து பயந்தாள். " இவை அனைத்தையும் உருவாக்கியது யார்? " கேட்க அவன் " நான் தான் தேவி இந்த திட்டங்கள் அனைத்தும் என் தேசத்திற்கு இணையில்லா பாதுகாப்பை அளிக்க நான் ஏற்பாடு செய்து மனதில் தீட்டியவை. ஆனால் இன்று என் தேசத்திற்கு எதிராகவே பயன்படப் போகின்றன. இதுவரை எங்கும் நான் பயன்படுத்தாதவை. எதிரிகளுடன் இவை போர் புரியாது ஆனால் முற்றிலும் அழித்துவிடும். " என்றான். அவள் அவனின் திறமையை கண்டு ஆச்சரியப்பட்டாள் அவனின் அழிவு தரும் ஆயுதங்களின் செயல்பாட்டை நினைத்து மகிழ்ந்தாளும் பயந்தாள் " வீரரே இருப்பினும் பல வீரர்களின் உயிர் " என்றாள் அதில் கவலையும் காணப்பட்டது. இவன் " தேவி இதனை நானும் சிந்தித்தேன் ஆனால் உங்கள் நாட்டின் படைபலம் 20000 மட்டும் ஆனால் எதிரிகளின் படைபலம் ஒரு இலட்சம். நாம் மட்டும் போர் புரிந்தால் விளைவு தங்களுக்கே தெரியும் ஆயினும் வேறு வழி இல்லை என்ற நிலையில் தான் இவற்றை பயன்படுத்த வேண்டும். முக்கியமாக திரிபுர அம்புகளை " என முடித்தான். அவளும் ஏற்றுக்கொண்டாள். மேலும் வந்த சில நாட்கள் பெரும் போருக்கான ஏற்பாடுகள் நடந்தன. அவனின் அழிவு கருவிகள் அனைத்தும் கோட்டையை வந்து சேர்ந்தன. அனைத்து போர் வேலைகளிலும் இவனே முன்னின்று நடத்தினான். படை தளபதிகளுடன் ஆலோசனைகள் நடந்தன. முக்கியமாக கடற்படை தலைவருடன் திட்டங்கள் தீட்டினான். ஒவ்வொரு கோட்டை வாயிலையும் சிறப்பு கவனம் செலுத்தி பாதுகாப்பு வேலைகளை நடத்த யோசனை கூறினான். மொத்தமாக பத்து நாட்களுக்கு பின்பு கபாடபுரத்தில் இருந்து செய்தி வந்தது. பழைய கதை போய் வேறு கதை பிறந்தது.