உன்னாலே உனதானேன் 7

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பாடலை ரசித்து பாடியபடி மெய்மறந்து படுத்திருந்தவன் திடீரென ஈரத்தை உணர அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்..
அவன் முன்னே தண்ணீர் கோப்பையுடன் நின்றிருந்தாள் ரேஷ்மி...

“என்ன ரேஷ்மி உன் கையில் இருந்த காபி கப் எங்க?? அது எப்படி தண்ணீர் குவளையாக மாறியது??” என்ற கேட்டவனை ஒருமாதிரி பார்த்தாள் ரேஷ்மி..

“எதுக்கு இப்படி ஒரு லுக்கு..?? நீ எதுக்கு என்மேல தண்ணீர் ஊற்றினாய்... எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருந்தது..?” என்று மறுபடியும் கேட்டவனை யோசனையுடன் பார்த்தாள் ரேஷ்மி..

“வினய்... ஆர் யூ ஆல்ரைட்...??”

“எனக்கு என்ன ரேஷ்மி.... இவ்வளவு நேரம் நான் ரொமேன்ஸ் பண்ணதை பார்த்துமா இப்படி கேட்குற???” என்றவனது பதிலில் குழப்பம் நீங்க பெற்றவள் சிரிக்கத்தொடங்கினாள்..
இப்போது குழம்புவது வினயின் முறையானது..

“இப்போ நான் என்ன சொல்லிட்டேனு நீ சிரிக்கிற?? என்மேல தண்ணியை ஊற்றியது மட்டுமில்லாமல் சிரித்து கிண்டல் பண்ணுறியா???”

“ஆமா.. எனக்கு வேற வேலை இல்லை பாருங்க... நல்லா தூங்கிட்டு இருந்தவளை பாட்டு பாடி எழுப்பியது மட்டுமல்லாமல் கண்ணாடியை பார்த்து தத்துபித்துனு நீங்க உளறிவிட்டு இப்போ நான் கிண்டல் செய்தேன் என்று சொல்லுறீங்களா???” என்ற ரேஷ்மியின் வார்த்தைகளில் உண்மை உரைக்கப்பெற்றவன்

“அப்போ இவ்வளவு நேரம் கண்டதெல்லாம் கனவா...??? ஓ மை காட்.. இப்படி ஏமாந்துட்டேனே... கனவுல நடந்ததை உண்மைனு நினைத்து இப்படி பாட்டெல்லாம் பாடி என் எனர்ஜியெல்லாம் வேஸ்ட் பண்ணிட்டேனே...” என்றவன் தொடர்ந்து

“ நான் தான் கனவுல உளறுகிறேன் என்று உனக்கு தெரிந்தது தானே...தட்டி எழுப்பாமல் எதுக்கு என்னை காலையிலேயே குளிக்க வைத்தாய்.... ஷிமி” என்றவனை தன்னால் முடிந்தமட்டும் முறைத்தாள் ரேஷ்மி...

அவளது முறைப்பிலேயே தவறு தன் புறம் என்று உணர்ந்தவன்

“ஏன் ஷிமி இப்படி முறைக்கிற??? உன் வீட்டுக்காரர் என்னதான் தப்பு பண்ணியிருந்தாலும் இப்படி முறைத்து பயமுறுத்தலாமா???”

“ஓ... அப்போ நாங்க முறைத்தால் நீங்க பயந்துவிடுவீர்கள்... அப்படி தானே..”

“யாஸ் ஆப் கோஸ்...இதில் உனக்கு என்ன டவுட்டு..”

“அடிங்க.... நிம்மதியா தூங்கிட்டு இருந்தவளை பாட்டு பாடி எழுப்பிட்டு இப்போ வியாக்கியானமா பேசுறீங்க...” என்று பொரிந்தவளை சமாதானப்படுத்தும் விதமாக

“ஐயோ நம்பு ஷிமி.... நான் நிஜம்னு நினைத்து தான் பாட்டு பாடினேன்... அதுவும் உன்னோடு ரொமன்ஸ் பண்ணுறப்போ ஒரு ஹைலைட்டா இருக்கட்டுமேனு தான் பாட்டு பாடுனேன் மா.. அது கடைசியில் கனவாகி எனக்கு பல்பு கொடுத்துவிட்டது...” என்று குழந்தையின் பாவனையுடன் சொன்னவனை பார்த்து வந்த சிரிப்பை கட்டுப்படுத்த முடியாமல் சிரித்தே விட்டாள் ரேஷ்மி...

அவள் சிரித்தும் அமைதியடைந்தவன் ரேஷ்மியை சீண்டும் பொருட்டு

“அது கனவு தான் ஷிமி... ஆனால் அதில் நீ வெட்கப்பட்டு நின்றபோது அவ்வளவு அழகாக இருந்தது.. அந்த கனவு வருவதற்கு காரணம் நான் உன்னை முதன்முதலில் சந்தித்த அனுபவத்தை நினைத்து ரசித்துக்கொண்டிருந்தேன்.... அது எனக்கு அந்த சுகமான கனவை பரிசாக கொடுத்தது... உன்னுடைய நினைவுகளே எனக்கு நான் விரும்பும் பரிசுகளை கொடுக்கின்றதே.... அப்போ நீ என் காதலை ஏற்றுக்கொண்டால் எனக்கு நான் நேசித்த, நேசிக்கின்ற அனைத்தும் கிடைத்துவிடும்.... அது எனக்கு கிடைக்குமா?? ஷிமி... உன்னை முதன் முதலாக பார்த்தப்போ என் மனதில் தோன்றிய உணர்வுகளை சொல்ல வார்த்தைகளே இல்லை.. எந்த பெண்ணோடும் அவங்களுடைய கண்ணை மட்டும் பார்த்து பேசுற என்னுடைய குணம் உன்கிட்ட மட்டும் செயல்படாமல் போய்விட்டது..... உன்னுடைய அழகை தாண்டி என்னவள் என்ற எண்ணம் தான் என்னை அப்படி நடந்துகொள்ள வைத்தது... ஆனால் அதை நினைத்து என்னை நானே தூற்றிக்கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு.... ஆனா அப்போ என்னுடைய மனம் என்னிடம் கேட்ட ஒரு கேள்வி.. அவளை வேறு யாராவது நீ பார்ப்பது போல் பார்த்தா உனக்கு பரவாயில்லையா... அந்த கேள்வி தான் என் மனதை எனக்கு காட்டிக்கொடுத்தது.... அது உன் புற அழகை தாண்டி உன்னுடைய அக அழகை நேசிக்கனும் என்று அறிவுறுத்தியது.... வாலிப பருவத்தில் தடுமாறிய என்னை வழிப்படுத்தியது உன்மீது நான் கொண்ட காதல்... அந்த காதல் பெண்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டும் என்று எனக்கு கற்றுக்கொடுத்தது....

அம்மா மட்டுமே போற்றப்பட வேண்டிய பெண் என்று என் மனதில் அழுத்த செதுக்கப்பட்டிருந்த எண்ணத்தை திருத்தியமைத்தது உன் மேல் நான் கொண்ட காதல்...
என் ஒரு தலைக்காதலுக்கே இத்தனை மாயங்கள் செய்யமுடிந்த போது உன் காதல் கிட்டினால் நான் பிறவிப்பயன் அடைந்துவிட மாட்டேனா..??” என்று தன் உள்ளத்தை வெளியிட்டவனை பார்த்து வாயடைத்து போயிருந்தாள் ரேஷ்மி..

காதல் என்ற வார்த்தைக்கு பலபேர் பல வரைவிலக்கணங்கள் கூறி கேள்விப்பட்டவள் வினயின் காதலின் அர்த்தத்தில் பிரம்மித்துவிட்டாள்..... ஒருவரை ஒருவர் மனதால் விரும்புவதையே காதல் என்று எண்ணியிருந்தவளுக்கு வினயின் விளக்கம் அவளது எண்ணம் தவறு என்று உணர்த்திவிட்டது.....

காதல் என்கின்ற பெயரில் காவியங்களில் கூட ஒருவருக்காய் மற்றவர் உயிரை துறந்து தம் காதலை நிஜமென்று உணர்த்தினர்... ஆனால் உண்மைக்காதல் என்பது காதலிக்கப்படுவது மட்டும் அல்ல... அதையும் கடந்த ஒன்று என்று நிரூபித்துவிட்டான் வினய்....

ரேஷ்மி வினயின் காதலில் பேச்சற்று நிற்க வினயோ

“ஐயோ மறுபடியும் கனவா...அப்போ இவ்வளவு நேரம் பக்கம் பக்கமா டயலொக் அடித்தது எல்லாம் வேஸ்டா... கடவுளே.... எதுக்கு என்னை மட்டும் வைத்து இப்படி காமடி பண்ணுற??? முதல்ல ஒரு ஜக்கு தண்ணீர் தான் இப்போ ஒரு குடம் தண்ணியை என் தலையில கொட்டப்போறாளே...” என்று அவனது புலம்பலில் சிரித்துவிட்டாள் ரேஷ்மி...

“ஹே... ஷிமி சிரிக்கிறா.... அப்போ இது கனவில்லை... தாங்க் காட்..... ஒரு நிமிஷம் கதி கலங்கிட்டேன்......” என்றவனின் செய்கையில் சிரித்து நின்றவள்

“இந்த வாய் மட்டும் இல்லைனா.... அந்த நாய் தூக்கிட்டு போயிரும் உங்களை ..”

“ஓய்... என்ன நக்கலா... நான் 75கேஜி... என்னை எப்படி நாய் தூக்கிட்டு போகும்... லாஜிக்கோட பேசுடி என் மக்கு பொண்டாட்டி...”

“பழமொழி சொல்லுற நான் மக்கு... அதை ஆராய்கின்ற நீங்க அறிவாளியா??? எல்லா நேரம்டா சாமி...” என்று சலித்துக்கொண்டவளை கலைத்தது கதவு தட்டும் சத்தமும் அனுவின் குரலும்...

“சித்தி ஓபன் த டோ....அனு பேபி வெயிட்டிங் போர் யூ...” என்று அனுவின் குரலை கேட்டவன்

“எனக்கு வில்லன் வெளியில எங்கேயும் இல்லை.... வீட்டுக்குள்ளே தான் இருக்கான்..... அவன் பொண்டாட்டியோட என்ஜாய் பண்ண அவன் பிள்ளையை இங்க அனுப்பிட்டான்.... எங்களுக்கும் பொண்டாட்டி இருக்கா... அவ கூட நாங்களும் ஜல்சா பண்ணனும் அப்படிங்கிற எண்ணமே இல்லை.. டேய் அண்ணா... இதுக்கெல்லாம் நீ அனுபவிப்ப... எனக்கு ஒரு பிள்ளை பிறந்ததும் அதை உன்கிட்ட ஓட்டிவிட்டு நான் உன்னை வெறுப்பேற்றவில்லைனா என் பெயரை நான் மாற்றிக்கொள்கின்றேன்...” என்று சபதமெடுத்தவனை பார்த்த ரேஷ்மியிற்கு அவனை பார்க்க பாவமாக இருந்தது... அதே சமயம் அவன் எடுத்த சபதத்தை எண்ணிப்பார்த்தவளுக்கு வெட்கமும் மகிழ்ச்சியும் ஒருசேர வந்து ஒட்டிக்கொண்டது..

சென்று கதவை திறந்தவளை கட்டிக்கொண்டது குழந்தை...

“குட் மானிங் சித்தி... அனு பேபி இஸ் வெயிட்டீங் போர் யூ போ லோங் டைம்...” என்ற குழந்தையை தூக்கி எடுத்து அணைத்து முத்தமிட்டவள் குழந்தையை அறையினுள் தூக்கி வந்தாள்...

கட்டிலில் அமர்ந்திருந்த வினயிடம் சென்ற குழந்தை அவனுக்கும் காலை வணக்கத்தை கூறிவிட்டு அவனுடம் அளவளாவிக்கொண்டிருந்தது.. அதற்குள் குளியலறை சென்று குளித்துவிட்டு வந்தவள் வினயிற்கு காபியும் அனுவிற்கு பாலும் எடுத்து வந்திருந்தாள்..
வினயும் அனுவும் தம் கோப்பைகளை ரேஷ்மியிடம் இருந்து வாங்கி ஏதோ கதைபேசியபடி அதை குடித்துக்கொண்டிருந்தனர்..அதை ரசித்தபடி நின்றிருந்தாள் ரேஷ்மி..

வினய் தன் கால்களை மடித்து கட்டிலில் அமர்ந்திருக்க அவன் ஒருகாலில் குழந்தை அமர்ந்து தன் சிறு கால்களை தொங்கவிட்டபடி அவனுடன் கதை பேசிக்கொண்டிருந்தது... குழந்தை கேட்கும் கேள்விக்கு அதற்கேற்ற விதத்தில் அவன் பதில் சொல்லி சிரித்து விளையாடிய வினயை பார்த்திருந்தவளுக்கு தன் குழந்தையையும் அவன் இவ்வாறு தான் பார்த்துக்கொள்வான் என்ற எண்ணத்தை தோற்றுவித்திருந்தது...

அந்த எண்ணம் தோன்றிய அடுத்த கணம் அவளது மனமோ அப்போ நீ உன் காதலை உணர்ந்துவிட்டாயா?? என்ற கேள்வியை எழுப்ப பதில் தெரியாது திண்டாடியவள் அமைதியாய் இருக்க அவளது மனமோ உன் நினைப்பிற்கு அடிப்படை தான் என்ன ??? என்ற வினாவினை எழுப்பி அவளை தெளிவு பெறச்செய்ய முயல, தெளிவு பெற விடமாட்டேன் என்று அவளை ஆட்டிப்படைத்தது அவளது இன்னொரு மனம்......

அதற்குள் உன் மனம் அவனை சரணடைந்துவிட்டதா?? இது தான் நீயா?? காதல் என்ற வார்த்தைக்கு கூட உன் வாழ்வில் இடமுண்டா..?? என்று அவளது மனதில் படையெடுத்த கேள்விகள் தெளிய முயன்றவளை இன்னும் குழப்பியது....

குழப்பங்கள் அவளை ஆட்டி படைக்க அங்கிருந்து செல்ல முயன்றவளை அழைத்தான் வினய்...

“ஷிமி நாம இன்னைக்கு அனு பேபி கூட வெளிய போகலாமா??”

“ நீங்க போங்க.. நான் வரவில்லை....”

“என்ன ஷிமி... ரொம்ப நாளைக்கு பிறகு இன்று தான் வெளியே போறோம்... எனக்காக வரமாட்டாயா??”

“அதான் வரவில்லை என்று சொல்லிட்டேனே.... அப்புறம் எதுக்கு நை நைனுகிட்டு இருக்கீங்க...”

“இப்போ நான் என்ன கேட்டுட்டேன்னு நீ இப்படி கோபித்துக்கொள்கின்றாய்???”

“நீங்க ஒன்றும் கேட்கவில்லை... நான் தான் தப்பு.... இப்படியே என்னை விட்டுவிடுங்கள்...”

“ரேஷ்மி இப்போ எதுக்கு டென்ஷனாகுற?? வெளிய போகலாமா என்று கேட்டது தப்பா??”

“ஆமா தப்பு தான்... எல்லாம் உங்க இஷ்டப்படி தானே நடக்க வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்.... என்னை பற்றி உங்களுக்கு என்ன கவலை?? நான் இஷ்டப்பட்டா உங்களுக்கு என்ன... இஷ்டப்படாட்டி உங்களுக்கு என்ன??? உங்க காரியம் நடந்தால் உங்களுக்கு சரி..” என்றவளின் பேச்சில் கடுப்பானவன் அவளிடம் மேலும் சண்டையிட முயன்றவனின் சிந்தையை கலைத்தது அனுவின் தொடுகை.... அப்போது தான் குழந்தை அங்கிருப்பதை உணர்ந்தவன் குழந்தை தங்களது வாய்த்தகறாறில் பயந்திருப்பது அவன் கண்ணில் பட்டது... உடனே குழந்தையை திசை திருப்பும் முகமாக

“அனு பேபி சித்தி சூப்பரா ஆக்ட் பண்ணாங்களா??” என்ற கேள்வியில் குழந்தையும் ரேஷ்மியும் வினயை பார்த்தனர்...

வினயோ ரேஷ்மியை பார்க்காது அனுவை மட்டும் பார்த்தவாறு

“சித்தியும் சித்துவும் டெய்லி மார்னிங் இப்படி பைட் பண்ணுற மாதிரி ஆக்ட் பண்ணுவோம்... யாரு கடைசி வரைக்கும் சிரிக்காமல் சூப்பரா ஆக்ட் பண்ணுறாங்களோ அவங்க தான் அன்னைக்கு வின்னர்.... இன்று யாரு வினரென்று அனுபேபி தான் சொல்லப்போறீங்க....” என்றவனது கூற்றை உண்மையென நம்பிய குழந்தை குஷியாகி வெற்றியாளரை தெரிவு செய்யும் வேலையில் இறங்கிவிட ரேஷ்மியோ அங்கிருந்து சென்றுவிட்டாள்...

அறையை விட்டு வெளியே வந்த ரேஷ்மி ஹாலில் இருந்த சோபாவில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்... தன் நடத்தையை எண்ணி வருந்தினாள் ரேஷ்மி.... வினயிடம் தான் அவ்வாறு குழந்தையின் முன் சண்டையிட்டது ரேஷ்மியனுள் குற்றவுணர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.. சம்பந்தமே இல்லாமல் தன் இயலாமையை அவனிடம் கோபமாக வெளிப்படுத்தியது அவளது குற்றவுணர்ச்சியை இன்னும் அதிகப்படுத்தியது...

எப்போதும் ஒரு நிதானத்துடனும் அமைதியாகவும் செயல்படும் தான் இவ்வாறு மாறியதற்கான காரணம் என்ன?? எதனால் என் மனம் வினயின் காதலை ஏற்க மறுக்கின்றது??? ஒருமனம் விரும்பும் காதலை ஏன் மறுமனம் மறுக்கின்றது??? ஏன் வினயின் விடயத்தில் இவ்வாறு என் மனம் தத்தளிக்கின்றது??? அவனது காதல் பார்வையில் கசிந்துருகும் என்மனம் ஏன் என் கட்டுப்பாட்டை மீறி சிலிர்த்து எழுகின்றது??? என் பெற்றோருடன் இருந்த காலத்தில் கூட நான் இப்படி கடுமையாக நடந்து கொண்டதில்லையே... நான் ஏன் இவ்வாறு மாறிப்போனேன்... இதே நிலை தொடர்ந்தால் எனது வாழ்க்கை மட்டுமின்றி வினயின் வாழ்வும் பாழகிவிடுமே... எப்போதும் குறும்பு கூத்தாட சிரித்து மகிழ்பவனை என் குணம் மாற்றிவிடுமோ?? இருமனம் இணையாமல் தாம்பத்தியம் சாத்தியப்படுமா???? என்னால் வினயின் வாழ்வு சூன்யமாகிவிடுமா??? என்று அவளது எண்ணங்கள் கட்டவிழ்ந்த குதிரைகளாய் தறிகெட்டோட

அதை தடை செய்யும் விதமாக வந்தது ரியாவின் தொடுகை...
திடீரென்று தொடுகையை உணர்ந்தவள் முதலில் பதறி பின் ரியாவை பார்த்ததும் ஆசுவாசமடைந்தாள்...

“என்ன ரேஷ்மி... பயந்துட்டியா??”

“ஆமா அக்கா... நான் ஏதோ யோசனையில் இருந்தேன்... திடீர்னு உங்க தொடுகையில் யாரோ எவரோனு பயந்துட்டேன்...”

“என்ன ரேஷ்மி அனு வந்து உங்களை எழுப்பிட்டாளா???? பாதி தூக்கத்தில் எழும்பி வந்த மாதிரி இருக்க???”

“இல்லைகா... உங்க கொழுந்தனாரு தான் ஏதோ கனவு கண்டு கத்தி என்னை எழுப்பி விட்டுட்டாரு.... அவளை தெளிய வைத்துக்கொண்டு இருக்கும் போது தான் அனு வந்தா... அதான் இரண்டு பேருக்கும் குடிக்க கொடுத்துட்டு இங்க வந்து உட்காந்துட்டேன்.... அவங்க இரண்டு பேரும் ஏதோ கதை பேசிட்டு இருக்காங்க...”

“அங்கேயும் வந்து ஆட்டத்தை கலைத்து விட்டுட்டாளா?? வினய் அண்ணாவை அனு தூங்கவிடாம டிஸ்டப் பண்ணவும் பாட்டிக்கிட்ட போங்கனு அனுவை வெளிய அனுப்புனாரு... அவ அங்க போகாம உங்க ரூமுக்கு வந்துட்டா போல... இந்த வாண்டுகள் எல்லாம் ரொம்ப தெளிவா தான் இருக்குதுங்க... நாங்க ரெண்டு பேரும் தான் அவசரப்பட்டு ஒரு வருசத்துக்குள்ள பேபினு மாட்டிக்கிட்டோம்... நீயும் வினயும் நல்லா ஒருவருஷம் லப்பை என்ஜாய் பண்ணிட்டு பிறகு குழந்தை பற்றி யோசிங்க.... இங்க இருக்கும் போதும் வேலை வேலைனு அபியும் வீடு குழந்தைனு நானும் அலைந்தேன்.... சரி அங்கே போய் ஜாலியாக இருப்போம் என்று நினைத்தால் அங்கு அதை விட மோசம்... பாவம் அனு அப்பா... எங்களோடு டைம் ஸ்பென்ட் பண்ண முடியாமல் ரொம்ப பீல் பண்ணுவாரு... நான் இருக்கும் போது அவருக்கு இருக்க நேரம் இருக்காது.... அதே அவர் இருக்கும் போது நான் வேலைக்கு கிளம்பனும்... குழந்தையும் பாவம்.... எங்களுக்கு கிடைக்கின்ற ஓய்வு நேரத்தில் வீட்டுவேலையை செய்து முடிக்கவே சரியாக இருக்கும்.... மன்த்லி வன்ஸ் எங்கயாவது வன் டே டூர் போவோம்.... அதுவும் குழந்தை குழந்தைனு அவளுடனேயே கழிந்துவிடும்....

அவருக்காக நானும் எனக்காக அவரும் நேரம் செலவழித்த நேரம்னா எங்களுடைய ஹனிமூன் டைமை தான் சொல்லமுடியும்... அதுசரி நீங்க இரண்டு பேரும் எங்கே ஹனிமூன் போனீங்க???” என்ற ரியாவின் திடீர் கேள்வியில் என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றாள் ரேஷ்மி...

“அது வந்து அக்கா......”

“என்ன ரேஷ்மி இழுக்குற??? எங்க ஹனிமூன் போனீங்கனு தானே கேட்டேன்... அதுக்கு ஏன் மா இந்த இழு இழுக்குற???”

“இல்லை கா.... இன்னும் அதை பற்றி நாங்க இரண்டு பேரும் யோசிக்கவில்லை...”

“என்ன ரேஷ்மி இன்னும் யோசிக்கவில்லைனு சொல்லுற???? உங்க இரண்டு பேருக்கும் திருமணம் முடிந்து கிட்டத்தட்ட மூனு மாசம் ஆகப்போகுது..... இன்னும் யோசிக்கலைனு சொல்லுற?? உன்னை ஹனிமூன் கூட்டிட்டு போகாமல் என் கொழுந்தனார் என்ன வெட்டி முறிச்சிட்டு இருக்காரு... கூப்பிடு அவரை.... அவர்கிட்டயே கேட்டுடுவோம்...” என்றவளிடம்

“ஐயோ அவரு எதுக்கு அக்கா.... நானே ரீசனை சொல்லுறேன்.. எங்க மேரேஜ் முடிந்ததும் அவர் ஒரு பிராஜெக்ட்டில் பிசி ஆகிட்டாரு... அதன் பிறகு போகலாம்னு இருந்தபோது தான் அம்மா அப்பா தவறிட்டாங்க...” என்றவளது குரல் கம்மியதும் அவளது கையை ஆதரவாய் பற்றிக்கொண்டாள் ரியா....

“ஐயம் சாரி ரேஷ்மி... எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.. உன்னுடைய கஷ்டத்தை வேறு யாராலும் அனுபவிக்க முடியாது... ஆனா அதை பகிர்ந்துகொள்ள உனது உறவுகளான நாங்கள் அனைவரும் உள்ளோம்.... பிறப்பு, இறப்பு என்பது இயற்கையின் நியதி... அதை யாராலும் மாற்ற முடியாது... ஆண்டி அங்கிளோட உடல் தான் நம்ம கூட இல்லை... ஆனா அவங்களோட ஆசிர்வாதமும் துணையும் உனக்கு எப்பவும் உண்டு.... நீ இப்படி அழுதா அவங்க கஷ்டப்பட மாட்டாங்களா??? சோ கண்ணை துடைத்துக்கொள்.... உனக்காக கூடப்பிறக்காத அக்காவாக நான் எப்பவும் உனக்கு துணையாக இருப்பேன்... புரிந்ததா??” என்று ரேஷ்மியின் கையை ஆறுதலாக தடவிக்கொடுத்தாள் ரியா....

ரியாவில் பேச்சில் சற்று தெளிந்த ரேஷ்மி கலங்கியிருந்த கண்களை துடைத்துக்கொண்டு

“தாங்க்ஸ் அக்கா.... உங்களுக்கு காபி எடுத்துட்டு வரவா???”

“நீ குடிச்சிட்டியா ரேஷ்மி...??”

“இல்லை கா..”

“சரி வா... இரண்டு பேரும் சேர்ந்து மற்றவர்களுக்கும் சேர்த்து காபி போடுவோம்....” என்று ரேஷ்மி மறுக்க மறுக்க அவளுடன் சமையலறைக்குள் புகுந்தாள் ரியா...

சமையலறையில் அவர்கள் இருவரும் பேசியபடி காபி கலந்துகொண்டிருக்கும் போது வீரலட்சுமி வர அவருக்கு ஒரு கப் காபியினை கொடுத்துவிட்டு ரியா தனக்கொன்று அபினயனுக்கு ஒன்று என்று இரு கோப்பைகளையும் ஏந்திக்கொண்டு தன்னறைக்கு செல்ல ரேஷ்மி தன் காபி கோப்பையினை எடுத்துக்கொண்டு தன்னறைக்கு செல்ல விழைந்தவள் சற்று நேரத்திற்கு முன் நடந்த சம்பவம் நியாபகம் வர ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டாள்...ஆனால் அவளை அறைக்கு வருவித்தான் வினய்..

ஏதோ யோசனையில் ஆழ்ந்தபடி காபி குடித்தபடி இருந்த ரேஷ்மியை கலைத்தது அனுவின் குரல்...

“சித்தி ஐ வான்ட் டு சீ யோர் வெடிங் போர்ட்டோஸ்...”

“சித்துகிட்ட கேளுங்க அனுமா... அவரு எடுத்து கொடுப்பாரு...”

“ஹு டோல்ட் டு ஆஸ்க் ப்ரம் யூ....”

“சரி வாங்க எடுத்து தருகிறேன்...” என்று குழந்தையை அழைத்துக்கொண்டு அறைக்கு சென்றாள் ரேஷ்மி...

அறையினுள் வினய் கட்டிலில் அமர்ந்து அறை வாசலையே பார்த்துக்கொண்டிருந்தான்...
ரேஷ்மி அறையை விட்டு சென்றதும் அவள் இன்று இரவுவரை அறைக்கு வரமாட்டாள் என்று யூகித்தவன் அவளை மீண்டும் அறைக்கு வர வைப்பதற்காக அனுவை தூது அனுப்பினான்....
இந்த இரண்டரைமாத கால திருமண வாழ்க்கையிலும் மூன்று வருடங்கள் ரேஷ்மியின் பின்னால் அவளறியாமல் சுற்றிய அனுபவத்திலும் வினய் ரேஷ்மியை பற்றி தெரிந்து கொண்ட விடயங்கள் தாராளம்....

அவளது மனதுக்கு நெருக்கமானவர்கள் ஏதும் தீங்கிழைத்தால் அதை அவள் அவ்வளவு சீக்கிரம் மன்னிக்க மாட்டாள்...அதே போல் அவள் தவறிழைத்து விட்டால் அந்த குற்றவுணர்ச்சி அவளை விட்டு நீங்கும் வரை அவர்கள் முகம் பார்க்க மாட்டாள்....

இன்று ரேஷ்மி தன்னுடன் நடந்து கொண்டது தவறு என்று உணர்ந்தாலேயே அறைக்கு வராமல் நேரம் கடத்திக்கொண்டு ஹாலில் அமர்ந்திருக்கின்றாள் என்று அனுவை தூக்கிக்கொண்டு அறையை விட்டு வெளியே வந்த வினய் பார்த்து தெரிந்து கொண்டான்..

அவளது தற்போதைய நிலைக்கு இது நல்ல முன்னேற்றமே என்று உணர்ந்தவன் அவளை வருந்த விரும்பாது அனுவின் மூலம் அவளை அவர்களது அறைக்கு திரும்ப வரச்செய்தான்...
அறைக்குள் வந்த ரேஷ்மி வினயை பார்க்காதது போல் பாவனை செய்து கொண்டு தங்களது வாட்ரோபை திறந்து அதில் கடைசித்தட்டில் இருந்த ஆல்பத்தினை எடுத்தவள் அதை அனுவிடம் கொடுக்க குழந்தை அதை தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு வந்து வினயிடம் கொடுத்தது...

வெளியேற முயன்ற ரேஷ்மியை தடுத்த அனு அவளையும் தங்களுடன் வந்து அமருமாறு வற்புறுத்த மறுக்கும் வழியறியாது அவர்களுடன் வந்து அமர்ந்தாள்...

அதி புத்திசாலியான குழந்தையோ மூவரும் தனித்தனியே அமர்ந்தால் மூவராலும் ஒரு சேர ஆல்பத்தை பார்க்க முடியாது என்று கண்டறிந்து தன் சித்துவையும் சித்தியையும் அருகருகே அமரச்செய்து நடுவில் அவர்களது மடியில் அமர்ந்து கொண்டு ஆல்பத்தை புரட்டத்தொடங்கியது.....

குழந்தை ஆல்பத்தை புரட்டி தன்பாட்டில் கதை சொல்ல பெரியவர்கள் இருவரும் வெவ்வேறு மனநிலையில் இருந்தனர்...

வினய் மனைவியின் அருகாமையில் தடுமாறி அவனது எண்ணங்களும் உணர்ச்சிகளும் தறிகெட்டு ஓட அதனை கட்டுப்படுத்த தன் பின் மண்டையை தடவிக்கொடுத்து தலையை அங்கும் இங்கும் அசைத்து குழந்தையின் பேச்சினை கவனிக்க முயன்றான் வினய்... ஆனால் அதற்கும் வழிவிடவில்லை ரேஷ்மியின் உரசல்....
குழந்தையிடம் ஏதோ கூறும் போது அவள் சற்று அசைய அதனால் அவளது தேகம் அவன் மீது உரச அதில் கிளர்ந்து எழுந்த அவனது உணர்வுகளை அடக்கும் வழி தெரியாமல் தடுமாறியவன் சற்று நகர்ந்து அமர முயல அனுவோ

“சித்து கான்ட் யூ சிட் ப்ரோப்பளி இன் வன் பிளேஸ்... யு ஆர் இன்டரப்டீங் மீ....” என்று சிணுங்க அதில் ரேஷ்மியும் அவனை என்னவென்று நோக்கினாள்.

வினயோ தன் மைண்ட் வாயிசில்

“ஒருத்தி உரசி உரசியே ஆளை கொல்லுறா... இன்னொருத்தி என் நிலைமை புரியாமல் சிணுங்குறா... எங்க இருந்து தான் எனக்குனு கிளம்பிவருதுங்களோ....இதை தான் சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்வது என்று சொல்வார்கள் போல... சும்மா இருந்த அனுவை ஆல்பம் பார்ப்போம் என்று ஆசை காட்டி அவ இப்போ என்னை இப்படி ஒரு இக்கட்டில் மாட்டி விட்டுட்டாளே...அவ சும்மாவே செம்ம ஷாப்... நான் தடுமாறுவதை பார்த்து என்ன ஏதுனு கேட்டால் என் பிழைப்பே நாறி போயிரும்... அப்புறம் இந்த ரேஷ்மி இதுக்கும் கோவித்துக்கொண்டு எனக்கு டிமிக்கி காட்டிடுவாளே.. என்னை இந்த இக்கட்டில் இருந்து காப்பாற்ற யாருமே இல்லையா??” என்று மனதிற்குள் மன்றாடியவனுக்கு அபய கரம் நீட்டினாள் ரியா..

அனுவை ரியா அறை வாசலில் இருந்து அழைக்க பார்த்துக்கொண்டிருந்த ஆல்பத்தை மடித்து ஓரமாக வைத்துவிட்டு தன் அன்னையிடம் ஓடினாள் அனு...

அனு சென்றதும் பெருமூச்சொன்றை வெளியேற்றிய வினயை வித்தியாசமாக பார்த்தவாறு எழும்பிய ரேஷ்மியை கைபிடித்து இழுத்தான் வினய்..

அவனின் செயலில் தடுமாறி அவன் மடியில் விழுந்தாள் ரேஷ்மி..

உன்னாலே உனதானேன் 6

உன்னாலே உனதானேன் 8
 

Author: Anu Chandran
Article Title: உன்னாலே உனதானேன் 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN