ஆக்ரோசமாய் சப்தம் எழுப்பி மேலே எழும்பி பயம் கொள்ளச் செய்யும் ஆழிஅலை... மழை பொழியும் காரணத்தால் இன்னும் கூட உயரம் கொண்டு மேல் எழ ... அந்த அலையோசையுடன் அங்கே காற்றின் கோபம் புயலாய் மாறி அங்குள்ள தெண்ணை மரங்களை பேயாட்டம் போடச்செய்து கொண்டிருந்த சமயம்.... அலையோசையோ மழைத்துளியோ புயல்காற்றோ எதுவும் என் கண்ணீருக்கு அணையிட முடியாமல் போனது.....

நான் ஆதிரா!!!! அப்பா அம்மா என அழகிய குடும்பம் இருந்தும் என் மனதை புரிந்து கொள்ள ஆழில்லாத அபலையாய் சுற்றியவள்.... நட்பென்னும் உறவு என் வாழ்வின் முக்கிய அங்கம் ... அங்கே மட்டுமே என் எண்ணங்கள் புரிந்துகொள்ளபட்டதே அதற்கு காரணம்.

இருந்தும் மனதில் ஓர் வெற்றிடம்... அதை நிறப்ப வந்த ஓர் உறவு "அவன்". எனக்கு அறிமுகம் ஆகும் முன்னே பரிச்சயம் ஆகிப்போனான் ... அவன் என்னிடம் பேசும் முன்னே அவன் குரலில் ஈர்க்கப்பட்டேன் நான்...

எனக்கான ஓர் உறவாய் என் எதிர்பார்ப்பின் மொத்த உருவம் கொண்டு நின்றான் "அவன்". வாய் ஓயாமல் உரையாடும் நான் அவன் குரல் கேட்கும் நொடியினில் மௌனமாகி போவேன்...

முதல்முறை பேசும்போதே அனைவரும் என்னை அழைக்கும் புனைபெயர் கொண்டு அவன் அழைக்க...அவன் குரலில் என் பெயர் அழகாய் தெரிந்தது எனக்கு.

என் கைப்பேசியில் அவன் எண்ணை சேமிக்க பல போராட்டங்கள் நிகழ்த்தினேன்... பலமுறை சேமிக்கப்பட்டு பலமுறை அழிக்கப்பட்டு என அந்த பத்து எண்களும் பாடாதபாடு பட்டது என் கையில் சிக்கிக்கொண்டு.

அவனே என்னிடம் வந்து எதற்கோ பேச அவனை அண்ணன் என அழைக்க தவித்து கொண்டிருக்கையில் அண்ணா என அழைக்காதே என அவன் கூறிய நொடி என் இதழோரம் ஓர் சிறு புன்னகை.

பேச்சுக்கள் எங்கள் இடையில் வளர வளர அவன் மேல் கொண்ட ஈர்ப்பும் வளர்ந்துகொண்டே போக அந்த உணர்வை அவனிடம் வெளிப்படுத்திவிட கூடாதென சிறு பயம் தோன்றியது.

என்ன நினத்தானோ என்னை மணம்புரிகிறாயா என கேட்டேவிட்டான் அவன்... உள்ளுக்குள் மகிழ்ச்சி ஆனால் தாய் தந்தை முகம் முன்னே வர வேண்டாம் என நிராகரித்தேன் மனவலியுடன்...

என்னை பிடிக்வில்லையா ஆதி ? வெளிப்படையாக கூறிவிடு என அவன் கேட்க எப்படி சொல்லுவேன் பிடிக்கவில்லையென... அவனுக்கு என் நிலையை எடுத்துக்கூறி புரியவைத்து விட்டேன் அவனும் மனம் மாறிவிட்டான். ஆனால் என் மனம் அவன்பால் மேலும் சரியத்தொடங்கி

ஈர்ப்பு காதலாய் மாறிவிட்டது.

அவனிடம் என் காதலை நான் சொல்லி நிற்க இந்த முறை அவன் என் காதலை நிராகரித்துவிட்டான் என் குடும்பத்தை காரணம் காட்டி ஆம் என் காதலை என் வீட்டில் நான் சொன்னால் அவர்கள் என்னை துன்புறுத்தக்கூடும் என ற எண்ணம்.... இருந்தும் எனக்காக யோசிக்கும் அவன் மேல் இன்னும் காதல் கூடத்தான் செய்தது.

இன்பம் துன்பம் என எது நடந்தாலும் என் மனம் முதலில் நாடுவது அவன் அருகாமையைதான்... "

அவன் பேசும் வார்த்தை ஒவ்வொன்றும் என்னை வதைக்க அவன் புன்னகை என்னை மயக்க அவன் செய்கை என்னை இம்சிக்க

என மொத்தமாய் அவன் பக்கம் சாய்ந்து கிடந்தேன்".

அவனே என்னை வேண்டாம் என கூறி நிற்க அவன் மட்டுமே வேண்டுமென நான் நிற்க எனக்கே என்மேல் கோபம் வந்தது. வேண்டாம் என கூறித்தள்ளுபவனிடத்தில் வாழ்வை யாசகமாய் கேட்டு நிற்கிறோமோ என்று....

"இணைப்பிரியா அன்றில் பறவையாய்

உன்னுடன் வாழ மனம் ஏங்கினேன்

ஏக்கங்கள் வெறும் ஏக்கங்களாய் போக

மின்னல் கண்டு மலரும் தாழம்பூவாய்

உன்னை கண்டு மலர்ந்த என் இதழிடம்

மின்னலும் உனக்கு சொந்தமில்லை

உன் மலர்ச்சியும் நிரந்தரமில்லை

என எப்படி புரியவைப்பேன்...."

என் வீட்டில் சொந்தம் யாரோ என்னை பெண்கேட்டு வந்து நிற்க என்ன செய்வது என அறியாமல் அவனிடம் கேட்டேன். எதுவும் யோசிக்காமல் வீட்டில் பார்க்கும் மாப்பிள்ளையை மணம் புரிந்துகொள் என அவன் என் மனம் பற்றி எண்ணாமல் எனக்கு அவனால் எந்த துன்பமும் வரவேண்டாம் என எண்ணி கூற அவனுக்கு எப்படி புரியவைப்பேன் " என் உயிரில் கலந்து அவன் இருக்க வெறும் உடலாக வேறொருவருடன் வாழ்வதற்கு என் உயிர் பிரிந்தால் கூட பராவாயில்லை என".

வீட்டிலும் என் நிலை யாருக்கும் புரியவில்லை... அவர்களின் சாதி பெற்ற பெண்ணின் மகிழ்வைவிட பெரியதாகிபோனது.

அவனுக்கோ என் நிலை புரிந்தும் என்னை விலகச்சொல்கிறான். அவன் நிலையும் கவலையாக உள்ளது.. பிடித்திருந்தும் மறுக்கும் நிலை.

இருந்தும் வேறு ஒருவரை ஏற்கும் நிலையில் நான் இல்லை .

"உன் காதல் எனக்கில்லை

அது தெரிந்தும்

உனக்கான என் காதலை சேமித்தேன்...

சேமிக்கப்பட்ட காதல் விழிநீராய் வீணாக

இப்படியேனும் தீர்ந்துவிடாதா

உன்மேல் நான் கொண்ட காதலென

விழிநீருக்கும் அணையிடவில்லை..."

இந்தனை நிகழ்வும் நான் நினைத்து முடித்த நொடியினில் மாலை நேரம் நடுநிசி நேரமாக மாறி போய் இருக்கிறது.

கடல்அலையின் இறைச்சல் சிறிது மட்டுப்பட்டு இருக்க என் எண்ண அலைகளுக்கு ஓய்வென்பது கிடையாதே...

இதோ எடுத்துவிட்டேன் தீர்க்கமான முடிவொன்று...

சாதி மட்டுமே பெரிதென நினைக்கும் பெற்றோர் வாழ்ந்துவிட்டு போகட்டும் அதனோடே....

என் காதலை விலக்கி வைக்கும் அவனை நானும் விலக்கி வைத்துவிடுகிறேன்... என்னால் அவனுக்கு துன்பம் வேண்டாம்!!!

புரிந்து கொள்ளப்படாத காதல் ஏற்றுக்கொள்ளப்படாத நேசம் நினைக்கையில் உயிர் பிரியும் வலி வருகிறது. ஆனால் நான் ஏன் இறப்பை பற்றி எண்ண வேண்டும் என் காதல் பெற்றோரிடத்தில் இழிவாகத் தெரிய... அவனிடத்திலோ அவனை மறந்து வேறு ஒருவனை மணந்துக் கொண்டால் அவன் மீதான காதல் மறைந்துவிடும் என நினைக்கும் அளவிற்கு என் காதல் தரமில்லாததாய் போக இவர்கள் இருக்கும் இடத்தில் வாழ்வது மட்டுமே என் காதலிற்கு நான் தரும் தண்டனை..

என் காதல் என்ன தவறிழைத்தது தண்டணை அனுபவிக்க ... ஆகையால்

இந்த இருவரும் இல்லாத ஓர் இடம் ... எனக்கென ஓர் புதுவாழ்வு அதில் நான் மட்டுமே எனக்காய்... இனி என் காதல் எனக்குள்ளே வெறும் நினைவு பெட்டகமாய் இருக்க ... என்னை புரிந்து கொள்ளும் நட்புறவை மட்டுமே துணையாக கொண்டு தனித்து செல்கிறேன். இனி இவர்கள் என்னை தேட வாய்ப்பில்லை அப்படியே என்னைத் தேடினாலும் இவர்களுக்கு என் வாழ்வில் இடமில்லை!!!!!!!

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.