முன் ஜென்ம காதல் நீ - 8

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
bad4b0f588946c8703031b23c08579f5.jpg


அமைதியான மரணம்

அவனின் கண்டுபிடிப்புகளையும் அந்த அழிவு எந்திரங்களையும் நினைத்து மகிழ்ந்தாள். அவனை பற்றி நினைத்து ஆச்சரியமும் கொண்டாள். அந்த ஆயுதங்கள் விளைவிக்கும் அழிவினை நினைத்து பயமும் கொண்டாள். ஆனால் ஒன்று மட்டும் தெரிந்தது அந்த ஆயுதங்களின் துணையிருந்தால் தன் நாட்டினை அடைவது யாராலும் இயலாது என்பது உறுதியாக தெரிந்தது. அவற்றை வார்த்தைகளிலும் வடித்தாள் " இவை எல்லாம் தாங்கள் உருவாக்கியவையா? மிகவும் ஆச்சரியமாக உள்ளது. எத்தனை பயங்கரமான ஆயுதங்கள். எத்தனை திறமை " என சொல்லிக் கொண்டே சென்றவளை இடைமறித்து " தேவி தாங்கள் புகழ அவசியம் இல்லை இவை எல்லாம் பல ஆண்டுகள் என் சிந்தனையில் உருவாகியவை. என் நாட்டை காப்பதற்காக இப்பொழுது நம் நாட்டிற்காக பயன்பட போகின்றன. " என்றான் சலிப்புடன். பின் பல பேச்சுகள் பல திட்டங்கள் நடந்தன சில நாட்கள் அது கழித்து. ஒரு ஒலை வந்தது கபாடபுரத்தில் இருந்து.


" நண்பா உன்னுடன் போர் புரியும் எண்ணமும் அவசியமும் இல்லை. நீ முத்தூர் நாட்டையும் உன் மனம் கவர்ந்த பெண் இந்திர ராணியையும் வைத்துக் கொள். முத்தூர் என்றும் கபாடாபுரத்தின் நட்பு நாடாக இருக்கும் " இப்படிக்கு அருள்வர்மன். என எழுதிய ஒலையை அரண்மனை அறையில் இருந்த விளக்கொளியில் படித்துக் கொண்டிருந்தான் அருள்வர்மன். உடன் அரசரும் இந்திர ராணியும் இருந்தனர். அவனுக்கு பின்பு ஒருவர் ஒருவராக அந்த ஒலையை படித்தனர். அரசர் முகத்தில் புன்னகை " அருள்வர்மா அனைத்தும் நலமாக முடிந்தது. போர் தேவையில்லை நாம் நினைத்ததும் நடக்கிறது " என்றார். இந்திர ராணியும் அதனை ஆமோதிக்கும் வகையில் புன்னகை புரிந்தாள். ஆனால் அருள்வர்மன் முகத்தில் பெரும் சிந்தனை. அந்த சிந்தனையுடன் கூறினான் " அரசே இது மகிழ்ச்சியான செய்தி தான் ஒரு வேளை உண்மையாக இருந்தால் " என்றான். அரசர் உடனே " வீரரே ஏன் அப்படி சொல்கிறீர்கள் " என்றார். அவன் உடனே " அரசே என் நண்பனை அறியமாட்டீர்கள். அவன் போரில் வெல்ல என்ன வேண்டும் என்றாலும் செய்வான். நாங்கள் ஒன்றாக போர் புரிந்த காலங்களில் அதில் வெல்ல எத்தனையோ தந்திரங்கள், நாடகங்கள், என பல புரிந்துள்ளோம். அவை எல்லாம் உங்களுக்கு தெரிந்தால் நீங்களும் சந்தேகம் படுவீர்கள் " என்றான் புன்னகையுடன். அதில் பெருமையும் தெரிந்தது.



அரசருக்கு புரியவில்லை இது தேவையில்லாத பாதுகாப்பு என நினைத்தார். ஆனால் இந்திர ராணிக்கு புரிந்தது. அருள்வர்மன் மேலும் தொடர்ந்தான். " அரசே அனாவசிய அலட்சியத்தை விட அனாவசிய பாதுகாப்பு நல்லது அல்லவா?. போர் ஏற்பாடுகள் முழுவீச்சில் நடக்கட்டும். இந்த செய்தி உண்மையா அல்லவா என்பதை நான் கண்டுபிடிக்கிறேன் விரைவாக " என்றான். அவரும் ஒத்துக் கொண்டார் இது நடந்து மூன்றாவது நாள் விளைந்தது விபரீதம்.



நண்பகல் முடிந்து மாலை நேரம் தொடங்கும் சமயம். கோட்டையின் உள்ளே போர் ஏற்பாடுகளும் பயிற்சிகளும் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தன. அனைத்தும் அமைதியாக ஒழுங்காக நடந்து கொண்டிருந்தன. மூடப்பட்ட கோட்டை வாயிலை முட்டி தள்ளிக் கொண்டு உள்ளே புகுந்தது அதே வெள்ளை நிறப் புரவி பெரும் வேகத்துடன் அதன் மேல் கிடந்தான் அருள்வர்மன். மேனி எங்கும் இரத்தம். அவனின் குருதி குதிரை மேலும் படிந்திருக்க. குதிரை மேல் இருந்து அவனை தூக்கிக்கொண்டு சென்றனர்.


நினைவற்ற நிலையில் பஞ்சணையில் கிடத்தப்பட்டிருந்தான் அருள்வர்மன். அவனை கவலை தேய்ந்த முகத்துடன் உற்று நோக்கி கொண்டிருந்தாள் இந்திர ராணி. அவனின் கழுத்தில் பட்டிருந்த வெட்டு காயம் பஞ்சால் அமுக்கி கட்டப்பட்டிருந்தாலும் அப்பொழுதும் சிறிது இரத்தம் வருவதாக தோன்றியது அவளுக்கு. அந்த காயம் நேரடி போரில் ஏற்பட்டது இல்லை என்பதும் புரிந்தது. மேலும் அவனை நேரடி போரில் அப்படி வெட்டுவது சாத்தியம் இல்லை எனவும் அவள் உறுதியாக நம்பினாள். அவன் எங்கே சென்றான்? என்ன நடந்தது? என்று யாருக்கும் தெரியவில்லை. அந்த நாள் காலையில் மாலைக்குள் வந்து விடுவேன் என சொல்லி சென்றவன் தான். ஆனால் மாலைக்கு முன்பே இரத்த காயத்துடன் சுயநினைவு இன்றி வந்துள்ளான் அவ்வளவு தான். இனி நடந்ததை அவன் தான் சொல்ல வேண்டும் என அவளுக்கு தோன்றியது. அவனுக்கு மருத்துவம் பார்த்த மருத்துவரிடம் " எப்படி இருக்கிறார்? " என கேட்டாள் கவலை நிறைந்த குரலில் அவரோ " கஷ்டம் தான் தேவி கழுத்தில் வெட்டு காயம் என்பதால் அதிகப்படியான இரத்தம் வெளியேறிவிட்டது. காயம் ஆழம் என்பதால் இரத்தம் வருவது முற்றிலும் நிற்கவில்லை. நாடி வேறு குறைந்து கொண்டே வருகிறது. என்னால் முடிந்த அளவு முயற்சி செய்கிறேன் " என்றார். அவளுக்கும் நிலமை புரிந்தது. தனக்காக போட்டியில் அவன் பங்கேற்றது, தன்னை யாரென தெரியாமாலே விரும்பியது, போட்டியில் அவன் காட்டிய வீரம், இறுதியாக தனக்காக தன் காதலுக்காக தன் சொந்த நாட்டையே எதிர்க்க துணிந்தது, அதன் விளைவாக அவன் உருவாக்கிய யமபொறிகள் என அனைத்தும். அவளுக்கு நினைவு வந்தது இப்பொழுது எதிர்பாராமல் அவனுக்கு ஏற்பட்ட மரண காயம் என அனைத்தையும் நினைத்து கண்ணீர் சிந்தினாள்.



மருத்துவரும் வருந்தினார் அவள் அழுவதை கண்டு ஆனால் தன்னால் அவனை காக்க இயலாது என்றும் புரிந்தது. ஆயினும் முழு முயற்சி செய்தார். அப்பொழுது அருள்வர்மன் மெல்ல கண்களை திறந்தான். அதனை கண்டு அவள் " அங்கே பாருங்கள் கண்களை திறக்கிறார் " என்றாள் மகிழ்ச்சி பொங்க. ஆனால் மருத்துவர் முகத்தில் மகிழ்ச்சி இல்லை " தேவி அவர் மரணித்து கொண்டு இருக்கிறார் " என்றார். அதிர்ந்து போய் விட்டாள்


அவள் அருள்வர்மன் முகத்தில் சிறு புன்முறுவல் அதனை கேட்டு " பொய் சொல்லாதீர்கள் இவர் சிரிக்கிறார். பின் எப்படி மரணம்? " என கேட்டாள். அதற்கு அவர் " தேவி சாதாரண மனிதர்கள் தான் மரணத்தை கண்டு பயம் கொள்கிறார்கள். மரண வேளையில் நடுங்குகிறார்கள். ஆனால் உண்மை வீரர்களும் ஞானிகளும் அமைதியாகவே மரணத்தை தளுவி கொள்கிறார்கள். அது அவர்களுக்கு அமைதியை தருகிறது " என்றார் கவலை பொங்க.


அவளோ பெரும் குரலில் அழ தொடங்கிவிட்டாள் " ஆம் இவர் உண்மை வீரர் தான் " என்றாள் அழுகையின் இடையே. அப்பொழுது அவனது செல்ல புரவி கட்டுகளை பிய்த்துக் கொண்டு ஒடி வந்தது. பெரும் குரலில் கனைத்துக் கொண்டு.அதனை தடுக்க முயன்ற வீரர்கள் அனைவரையும் முட்டி தள்ளிக் கொண்டு வந்தது. அவனை தவிர அதனை அடக்குவோர் யார்? அவனிருந்த அறையை அந்த குதிரை அடைந்தது.


தன் உடலில் அப்பொழுதும் அவனது இரத்த கறைகள் இருந்தன. அவனிருந்த பஞ்சணையை சுற்றி சுற்றி வந்தது. இந்திர ராணியை செல்லமாக முட்டியது, கனைத்தது. அதன் கண்களிலும் கண்ணீர் பெருகியது. அதனை கண்டு இந்திர ராணியின் அழுகை அதிகமானது. ஆனால் அருள்வர்மன் எதையும் கவனிக்கும் நிலையில் இல்லை அவன் அமைதியாக மரணித்துக் கொண்டிருந்தான்.


நடுங்கிய மாநகர்
சரியாக முத்தூரை விட்டு மூன்று காதம் தள்ளியிருக்கும் காட்டு பகுதியில் பல நூறு கூடாரங்கள் அமைந்திருந்தன. அங்கே வெளியே உலாவி கொண்டிருந்த புரவிகளும் யானைகளும் அவை எல்லாம் சொகுசு கூடாரங்கள் அல்ல போர் கூடாரங்கள் என்பதை அறிவித்தன. அங்கே காணப்பட்ட போர்படைகளின் பயிற்சியும். செய்யப்பட்ட ஆயுதங்களின் ஒலியும் அந்த பிரதேசத்தை போர்களமாகவே மாற்றிவிட்டது.


அந்த கூடாரங்களின் எண்ணிக்கையில் இருந்து அங்கே இருப்பது ஒன்றும் சிறிய படை அல்ல என்றும் யானை புரவி தேர் படைகளையும் சேர்த்தால் மொத்தம் மூன்று லட்சம் வரை இருக்கும் என தோன்றியது. அந்த கூடாரங்களில் பல நிற கொடிகள் பல வித்தியாசமான முத்திரைகளில் பறந்தது. அவை தனி மன்னனின் படை அல்ல பல நாடுகளின் கூட்டுப்படை என புரிந்தது. அத்தனை நாடுகளுக்கும் பொதுவாக எதிரி ஒருவன் அருகே இருக்கிறான் என்றும் அவனது முடிவு நெருங்குவதையும் அந்த மாபெரும் படைகள் அறிவித்தன. அனைத்திற்கும் நடுவே பெரும் கூடாரம் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது.


ஒரு பெரிய மேஜையும் அதனை சுற்றி பத்து பன்னிரண்டு நாற்காலிகள் போடப்பட்டிருந்தது. அவற்றில் அமர்ந்திருந்த மனிதர்களின் தோற்றமும் அவர்கள் தான் அந்த மாபெரும் படையின் தலைவர்களாக இருக்க வேண்டும் என தோன்றியது. அதன் முன்பே ஒரு நான்கைந்து வீரர்கள் நின்றிருந்தன. அவர்கள் நின்றிருந்த தோரணை விசாரணைக்காக நிற்கும் கைதிகளை நினைவுபடுத்தியது.


அந்த பன்னிரண்டு நாற்காலிகளின் மையத்தில் இருந்த கஜவர்மன் " வீரனே தெளிவாக சொல் நடந்ததை " என்றான் அலட்சியமாக. ஒரு மாமன்னனே தன்னிடம் நேராக கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் தயங்கினான். " பயப்படாமல் சொல் " என்றான் அந்த பன்னிரண்டு பேரில் இருந்த மற்றொரு மன்னர். ஆகவே அவன் பேச தொடங்கினான் " பிரபு நாங்கள் படையின் முன்னோடிகளாக சென்று கொண்டிருந்த போது. ஒரு வெள்ளை நிறப் புரவி வீரன் நம் படையில் நின்று விலகி சென்றதை கண்டு அவனை அழைத்தேன். அவன் திரும்பவில்லை. ஆகவே நெருங்கி சென்று விசாரித்தோம் அவன் அளித்த பதில்கள் திருப்தியாக இல்லை ஆகவே அவனை தங்களிடம் அழைத்து வர நினைத்து அழைத்தோம். அவன் மறுக்கவே அவனை கைது செய்தோம் அப்பொழுது அப்பொழுது...." என தடுமாறி பேச்சை நிறுத்தினான் அவன். அதனை கண்டு கஜவர்மன் பக்கத்தில் இருந்த மற்றொரு வீரனை நோக்கி " நீ சொல் " என்றான். " அவனை கைது செய்ய முயன்ற போது மின்னல் வேகத்தில் அவன் கையில் வாள் தோன்றியது. சுற்றியிருந்த நான்கைந்து பேரை அலட்சியமாக வெட்டி போட்டான். அதனால் மேலும் பத்து வீரர்கள் அவனை சூழ்ந்து கொண்டோம். அவன் முகத்தில் அலட்சிய புன்னகை மடியில் இருந்து தொடர்ந்து பல கத்திகளை எடுத்து படபட என்று அவனை எதிர்த்து வந்த வீரர்கள் இதயத்தில் ஏறிந்தான்.


அடுத்தடுத்த சில நிமிடங்களில் ஆறு வீரர்கள் இறந்து மண்ணில் சாய மீதருந்த நால்வரை வெட்டி போட்டு விட்டான். இவை அனைத்தும் நடந்தது சில நிமிடங்களில். வீரர்கள் அனைவரும் வாயடைந்து அங்கே நடந்த வீர ஜாலத்தை கண்டனர். பின்னர் மொத்தமாக ஐம்பது பேர் அவனை பிடிக்க பாய்ந்தோம். அவன் அவர்களை தடுத்து சிலரை வெட்டி போட்டு அங்கிருந்து ஓட தொடங்கினான். நாங்கள் தொடர்ந்தோம் அவன் புரவி ஓட பின்னால் திரும்பாமலே பல குறுவாள்களை ஏறிந்து கொண்டே சென்றான். அவற்றில் சிக்கி சிலர் மாண்டனர் அடுத்து நானும் ஒரு கோடாரியை அவன் கழுத்தை பார்த்து ஏறிய அவன் பின் கழுத்தில் சரியாக பதிந்தது. அதனை பிடுங்கி ஏறிந்து விட்டு ஓடினான் சிறிது தூரம் சென்று குதிரையின் மேலே மயங்கி சாய்ந்தான் அவன். அவனை பிடிக்கலாம் என எண்ணி நெறுங்கினோம். ஆனால் அந்த புரவி அவன் மயங்கி விழுந்த பின் முன்னை விட பல மடங்கு வேகத்தில் காற்றில் ஓடி மறைந்தது. நம் புரவிகளால் அதனை நெருங்க கூட இயலவில்லை " என முடித்தான்.


அவன் பேசி முடித்ததும் அந்த அறையில் பல சலசலப்புகள் வந்தவன் ஒற்றன். அவன் இறந்திருப்பான். என பல பேச்சுகள். கஜவர்மன் மட்டும் சில நிமிடங்கள் சிந்தித்தான் பின் " அவனின் குதிரை வெள்ளை நிறம் தானே " என்றான். அந்த வீரனும் " ஆமாம் மன்னா " என்றான். அதன் வால் முடிகள் இரண்டாக வகுந்து முடியப்பட்டிருந்தனவா? " என கேட்க அவன் " ஆம் மன்னவா " என்றான் .பின் கஜவர்மன் " வந்தது அருள்வர்மன் " என்றான் உறுதியாக. அனைவர் முகத்திலும் ஈயாடவில்லை அந்த பேரை கேட்டு. " என்ன சொல்கிறீர்கள் " என மற்றவன் கேட்க. " ஆம் நாங்கள் படையெடுத்த காலங்களில் எதிரி படையை ஆராய ஒற்றர்களை பயன்படுத்தாமல் அவன் தான் செல்வான் மேலும் அந்த புரவி வீராவை அடக்க கூடியவன் என்னை தவிர அவன் ஒருவன் மட்டுமே " என விளக்கினான் கஜவர்மன். அதனை கேட்டு அனைவரும் மகிழ்ந்தனர். " அப்படி என்றால் யுத்தத்தில் இப்பொழுதே வென்று விட்டோம் " என்றான் ஒரு தலைவன். " அப்படி அவசரப்பட கூடாது. அதுவும் அருள்வர்மன் விஷயத்தில் தெளிந்து தெரிந்து தான் முடிவு எடுக்க வேண்டும் " என்றான். மேலும் " முத்தூரில் உள்ள நம் ஒற்றர்கள் செய்தி கொண்டு வரட்டும் " என முடித்தான்.



சில நாட்களில் செய்தியும் வந்தது அருள்வர்மன் இறந்து விட்டான். அந்த நாடே தூக்கம் கொண்டாடியது. இதனை அறிந்த கஜவர்மன் வருந்தினான் சிறிதளவு. ஆயினும் தன் எதிரி மடிந்ததில் மகிழ்ச்சியும் கூட. அவன் இறப்பை அறிந்த அவன் படை மகிழ்ந்தது. அது சாதாரண படை அல்ல. மொத்தமாக ஐந்து நாடுகள் சேர்ந்த படை. அருள்வர்மன் போர் திறமையை அறிந்து அவனை வெற்றி பெற போர் வீர்கள் எண்ணிக்கையிலேயே அவனை அழிக்க வந்திருந்தான். மொத்தம் நான்கு லட்சம் வீரர்கள். வெறும் இருபதாயிரம் வீரர்களை அழிக்க. அதுவே அவன் பெருமையை காட்டியது. ஆனால் ஐந்து நாடுகளுக்கும் பொதுவாக எதிரி அருள்வர்மன் இறந்து விட்டான்.



ஆகவே பிற படை மன்னர்கள் பின்னடைந்தனர். " முத்தூர் எங்களுக்கு எதிரி நாடு அல்ல அருள்வர்மனுக்காக வந்தோம் அவன் இறந்து விட்டான் ஆகவே நாங்கள் திரும்புகிறோம் " என கூறி கிளம்பினர். நான்கு லட்சம் படை வீரர்கள் வெறும் இரண்டு லட்சம் ஆனார்கள். கபாடபுர படைகள் 150000 மற்றும் நட்பு மன்னர் படை 50000. 20000 போர்வீரர்கள் கொண்ட படையை அழிக்க 200000 படை வீரர்கள் செல்கிறார்கள்.



அங்கே முத்தூரில் அவன் இறப்பிற்கு பிறகு இந்திர ராணியே படைக்கு தலமை வகிப்பதாக கூறினர். அவள் சிறுபெண் என அனைவரும் கூறிய போது அவள் அடம் பிடித்து போராடி அந்த பதவியை அடைந்தாள். அவள் செய்த ஏற்பாடுகள் பயம் கொடுப்பவையாக இருந்தன. அருள்வர்மன் செய்த ஏற்பாடுகளை குலைப்பதே அவள் முதல் பணியாக இருந்தது.நான்கு கோட்டை வாயில் மேலே அவன் வடிவமைத்த விற் பொறிகளையும் தீயம்பு பொறிகளையும் அவன் வைத்திருந்தான் அவனை காணாமல் போயினர். இருக்கும் இடம் தெரியவில்லை. கடற்புறத்தில் கடற்படையின் இருபது மரக்கலங்களை தொடர்ந்து நிறுத்தி அரண் அமைத்து இருந்தான். அந்த கப்பல்களும் ஐந்து ஐந்தாக காணாமல் கடலில் பயணம் சென்றனர். அவளை மனமார சபிக்கவும் செய்தனர். ஆனால் அவள் எதனையும் கண்டு கொள்ளவில்லை தன் செயல்களில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்த மாநகர் நடுங்கி கொண்டிருந்தது.
 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN