சாதி மல்லிப் பூச்சரமே!!! 24

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 24

தாமரை சொன்ன பதிலில், அங்கிருந்தவர்களை விட, ஏன் வேந்தனை விட அதிகம் அதிர்ந்தது ஐயாரு தான். நிச்சயம் இப்படி ஒரு விஷயம் தாமரை வாழ்வில் நடந்திருக்கும் என்றோ இல்லை தான் பெறாத மகள் இப்படி ஒரு விஷயத்தை மறைத்திருப்பாள் என்பதையோ அவர் அறிந்திருக்கவில்லை. அதிர்ச்சியில் மனம் நூறு சுக்கலாய் உடைந்தது அவருக்கு.


எப்படிப் பட்ட இமாலய மனக் கோட்டையை அவர் கட்டியிருந்தார்! தனக்குப் பிறகு தன் சாதி சனத்தை அரவணைத்து ஆதரிப்பவன் வேந்தன் தான் என்று நினைத்து இருப்பார்? எத்தனை முறை வேந்தனின் ஆளுமையிலும் அதிகாரத்திலும் மனம் பூரித்துப் போக சொக்கிப் போய் அதையெல்லாம் ரசித்திருப்பார்? அதெல்லாம் இன்று அவன் யாரோ ஒரு சாதியின் வழி வந்தவன் என்பது தெரிய வரவும், யாருக்கும் அடங்காத என்னை வேற்று சாதிக் காரனான இவன் தன்னை அடக்கினானே என்ற எண்ணத்தில் ருத்ரமூர்த்தியாகவே மாறிப் போனார் ஐயாரு.


“தோ... இப்போம் என்ன சொல்லுதீய...” செண்பகவல்லி முகவாயைத் தோள்பட்டையில் இடித்துக் கொள்ள


“என்ன தாமரை சொல்லுத நீ! ஒன்னைய வளத்து ஆளாகினத்துக்கு நீ காட்ற நன்றிக் கடனா இது? யாரோ ஒரு சாதிக்கார அநாதைப் பயலை ஒன் மகன்னு சொல்லி என் வீட்டுக்கு கூப்ட்டு வந்திருக்க... எப்டி பட்ட குடும்பம் நாம... வீதியில போறத எல்லாம் என் குடும்ப வாரிசா ஏத்துக்கிட முடியுமா? ச்சீ... நீ எல்லாம் என் வம்சமா?” தன் சாதி என்னும் மமதை அவர் கண்ணையும் கண்ணியத்தையும் மறைக்க, இவ்வளவு நாள் வேந்தன் அந்த குடும்பத்திற்கு செய்த நல்லதை எல்லாம் மறந்தவர் இல்லை இல்லை…. தன் மனதிலிருந்து அழித்தவர் அக்கினியாய் வார்த்தைகளைக் கொட்ட அதிர்ச்சியில் சுற்றியிருந்தவர்கள் தங்களுக்குள் தாழ்ந்த குரலில் சலசலக்க,


“சொல்லு தாமரை! நீ சொல்றது நெசமா?” வார்த்தையைக் கொட்டிய பிறகு நம்ப முடியாமல் ஐயாரு மறுபடியும் கேட்க


அந்நேரம், இரவு முழுக்க காட்டில் காவல் இருந்து விட்டு உள்ளே நுழைந்த மூர்த்தி இதைக் கண்டவர் என்ன விஷயம் என்று விசாரிக்க, “எல்லாம் ஒங்க தங்கச்சிதேன்! முழுப் பூசணிக்காவ சோத்துல மறைத்து இருக்காக... இன்னமும் மறைக்கப் பாக்குறாக” என ஏளனமாய் பேச


“ச்சீ... நல்ல குடும்பத்திலே வந்து நான் பொண்ணு எடுத்திருக்குதேன். என்ன நடந்ததுன்னு ஒடச்சி சொல்லச் சொல்லுக” கவியரசன் ஒரு பக்கம் தன் பங்குக்கு பத்தவைக்க


ஆதங்கம் தாங்காத பாட்டி, “என் பேத்தி யாருக்கும் வெளக்கம் குடுக்க மாட்டா. இது எங்க குடும்ப விசயம். ஏலா தாமரை! என் பேரனை கூப்டுகிட்டு உள்ளாற வாடி” அவர் இந்த பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்க நினைக்க


“முழுசா நனஞ்ச பொறவு முக்காடு எதுக்கு? அதேன் விசயம் சபைக்கு வந்திருச்சி அல்லோ? இங்கனயே முடிச்சிருவோம்” செண்பகவல்லி உசுப்பி விட, மூர்த்தி மனைவியை அடக்க


“என்ன வல்லி இது… அதெப்டி பெரிய குடும்பத்து விசயத்தை இப்டி சபையில வைத்து பேச முடியும்? சிவகுரு நீ சொல்லுலே...” பெரியவர் ஒருவர் சென்பகவல்லியை அடக்க


“எலேய் மூர்த்தி! ஒன் வீட்டுக்காரி சொல்றது சரிதேன். சபைக்கு வந்த பொறவு மறைக்க என்னலே கெடக்கு? ஒன் தங்கச்சிய நெசத்த சொல்லச் சொல்லுடே” தன் மகளாய் வளர்த்த பெண் நம்பிக்கை துரோகம் செய்துவிட்டாளே என்ற கோபத்தில் ஐயாரு சபையிலேயே சொல்லச் சொல்ல, கண்களைத் துடைத்துக் கொண்டு ஒரு முடிவுடன் தன் வளர்ப்பு மகனின் பிறப்பின் ரகசியத்தைச் சொல்ல ஆரம்பித்தார் தாமரை.


தாமரை சந்திரன் தம்பதியினருக்கு திருமணம் நடந்த உடனே குழந்தை தங்கவில்லை. ஏற்கனவே மகன் காதல் திருமணம் அதிலும் இரண்டு வருடம் சென்றும் இன்னும் மருமகள் உண்டாகவில்லை என்றதும் சந்திரனின் தாய் தினம் தாமரையை வசப் பாட்டு பாட, பின் கணவன் மனைவி இருவரும் சென்று பரிசோதனை செய்து பார்த்ததில் தாமரைக்கு சில குறைபாடு உள்ளதாக சொன்ன மருத்துவர் அதை சரி செய்ய முடியும் என்று சொல்லி தம்பதிகளின் சம்மதத்துடன் அதற்கான வழி வகைகளில் இறங்க, தாமரையும் சந்திரனும் குழந்தைக்காக முழு மனதாக ஈடுபட்டார்கள்.


ஆனால் மறந்தும் சந்திரன் தாமரைக்கு உள்ள குறையைத் தன் தாயிடம் சொல்லவில்லை, இந்த வருடமும் தாமரைக்கு குழந்தை தங்கவில்லை என்றால் மகனுக்கு வேறு திருமணம் செய்வதில் அவர் தாய் இருக்க, மனைவி மேல் உயிரே வைத்திருக்கும் சந்திரன் அதற்கு சம்மதிக்க மாட்டார் என்றாலும் வீண் வாக்கு வாதம் எதற்கு என்ற காரணத்தால் இந்த விஷயத்தைத் தாயிடம் முழுமையாக சொல்லாமல் மறைத்தார் அவர்.


அப்படி மருவத்துவமனைக்கு தாமரை சென்று வர ஒரு நம்பகமான ஆளாக, அந்த ஏரியா ஆட்டோகார்ராக இருந்து தாமரையை அழைத்துச் சென்று வந்தவர் தான் அன்பழகன். அவர் மனைவி சின்னத்தாய், இருவரும் காதலித்து திருமணம் செய்ததால் இவர்கள் இருவர் மட்டும் தனித்து வாழும் தம்பதிகள் ஆனார்கள்.


நல்ல தரமான மருத்துவ சிகிச்சையால் தாமரை அந்த வருடமே கருவுற, அந்த கருவும் நல்ல முறையில் வளர்ந்து வருவதாக சொன்னார்கள் மருத்துவர்கள். சந்தோஷத்தில் மருமகளை நல்ல முறையிலே பார்த்துக் கொண்டார் சந்திரனின் தாய். இதே நேரம் அன்பழகனின் மனைவி சின்னத்தாயும் கருவுற்றிருக்க, அவருக்கு பெரியவர்கள் இல்லாததால் தனக்கு மாமியார் எது செய்தாலும் அதை சின்னத்தாய்க்கும் கொடுத்தனுப்புவார் தாமரை. அதனால் ஆட்டோகாரர் என்பதையும் மீறி இரு தம்பதிகளும் ஒரு உறவாக பழகினார்கள்.


இதற்கு இடையில் ஒரு நாள் ஆறு மாத கருவுடன் இருந்த சின்னத்தாய், பக்கத்து வீட்டு ஆட்கள் துணையுடன் வெளியே சென்றிருந்த நேரம் ஒரு கார் மோதி அவருக்கு விபத்து ஏற்பட, மருத்துவமனையில் சேர்த்து பரிசோதிக்க வயிற்றில் வளரும் குழந்தைக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என்றார்கள்,


ஆனால் தலையில் அடி பட்டதால் சின்னத்தாய் உணர்வுகள் அற்று படுத்த படுக்கையாய் கோமாவிற்கு சென்று விட்டார். மருத்துவ துறையில் இப்படி சில அதிசயங்கள் நிகழ்வது சாத்தியமே. வயிற்றிலிருக்கும் குழந்தை மேல் உள்ள பாசத்தால் தன் உயிர் சுவாசத்தை நிறுத்தாமல் தன் பிள்ளைக்காக தன் சுவாசத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தார் சின்னத்தாய்.


மருத்துவமனையில், “நான் வந்து வாங்கித் தரேன்டினு அப்பவே சொன்னேன்... நான் சவாரி போன நேரம் பார்த்து இவ ரேஷன் கடைக்குப் போய் இப்படி படுத்திருக்கா. அவளுக்கு நான் எனக்கு அவ தான் இருந்தோம். இப்போ என்ன அநாதையா ஆக்கிடுவா போல...” ஒரு கணவனாய் அன்பழகன் தலையில் அடித்துக் கொண்டு அழுது புலம்ப


சின்னத்தாயை விபத்துக்கு உள்ளாக்கிய மனிதர் பெரிய இடம் மற்றும் கொஞ்சம் மனிதாபிமானம் உள்ளவர் என்பதால் இதையெல்லாம் பார்த்துக் கேட்டவர், சின்னத்தாய்க்கு குழந்தை பிறக்கும் வரை தானே மருத்துவ செலவைப் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல, அதனால் கொஞ்சம் பெரிய மருத்துவமனையிலே கோமாவில் இருக்கும் சின்னத்தாய்க்கு பிரசவம் பார்ப்பது என்று முடிவானது.


நாட்கள் இப்படியே செல்ல, ஏழாம் மாதம் தாமரையின் வளைக்காப்பிற்கு உறவினரை அழைக்க சந்திரன் தாய் ஊருக்குச் சென்றிருந்த நேரம், தாமரை கீழே விழுந்ததில் வயிற்றில் அடி பட, மருத்துவமனையில் பரிசோதித்ததில் தாய்க்கு ஒன்றும் பெரிதாக இல்லை ஆனால் குழந்தை இறந்து விட்டது என்றார்கள். அதே நேரம் இந்த பக்கம் சின்னத்தாயின் குழந்தை முழு வளர்ச்சி அடைய, அறுவை சிகிச்சையினால் நல்ல ஆரோக்கியத்தோடு பிறந்தது அவரின் குழந்தை.


தனக்கு குழந்தை பிறந்தது கூட தெரியாத நிலையில், பிள்ளையை தூக்கி அணைத்து உச்சி முகர்ந்து தன் ரத்தத்தை பாலாய் கொடுக்க முடியாத நிலையில் இங்கு சின்னத்தாய் படுத்து இருக்க. அன்னாடாங் காய்ச்சியான அன்பழகனுக்கோ தனக்கு மகன் பிறந்தான் என்பதை விட அவனை எப்படி வளர்க்கப் போகிறோம் என்ற கவலை. இன்னோர் பக்கமோ தன்னுடைய குழந்தை இறந்தது கூட தெரியாத மயக்க நிலையில் தாமரை!


“இந்த கடவுள் ஏன் எங்க வாழ்க்கையில் மட்டும் இப்படி சோதிக்கறார்னு தெரியல. இப்படி எங்க மகனை (ஆமாம் அவருக்கும் மகன் தான் பிறந்திருந்தான்) அழைச்சிக்கிட்டதுக்குப் பதில் என்னையும் என் மனைவியையுமே அழைச்சிட்டு இருக்கலாம். இப்போ அவள் கண்ணு விழித்து கேட்டா நான் என்ன சொல்லுவேன்? ஏன் இந்த கடவுள் இப்படி விளையாடறான்! தாமரைக்கு ஏதாவது ஆச்சு… நானும் இருக்க மாட்டேன்” சந்திரன் துக்கம் தாங்காமல் தன் போக்கில் புலம்ப


அதேநேரம் அவர் பக்கத்தில் அமர்ந்திருந்த அன்பழகன் கையில் அவருடைய மகனைக் கொடுத்தார் நர்ஸ். என்ன நினைத்தாரோ அவர்? “சந்திரன் சார்! நான் ஒண்ணு சொல்லவா? இவனை என்னால வளர்க்க முடியாது சார். ஒருவேளை நான் சுயநினைவை இழந்து படுத்த படுக்கையா இருந்திருந்து... என் மனைவி இவனை நல்ல ஆரோக்கியத்தோட பெத்து இருந்தாள்னா நிச்சயம் தைரியமா, தன்னம்பிக்கையோட தனி ஆளா இந்த உலகத்துல எதிர் நீச்சல் போட்டு இவனை வளர்த்து வாழ்ந்து காட்டியிருப்பா.


ஆனா எனக்கு அந்த தன்னம்பிக்கை தைரியம் இல்லை சார். ஏன்னா என் உலகமே அவ தான் சார். இவனை யாருக்குனா தத்து கொடுக்கவோ இல்ல அநாதை இல்லத்திலோ சேர்க்கற முடிவுல தான் நான் இருந்தேன். இப்போ நீங்களே வளர்த்துக்குங்க சார். தாமரை அம்மா கிட்ட உங்க பிள்ளை இறந்ததை சொல்ல வேணாம். இதோ உங்க மகன்... என் மனைவி என்ன கண்ணு முழிச்சி குழந்தை எங்கேனா கேட்கவா போறா?


நான் முழு மனதா சொல்றேன் சார்... பிடிங்க சார் இவனை.... தாமரை அம்மா உயிரைக் காப்பாத்துங்க சார். இதை ஏன் சொல்றனா, தனக்கு உயிரான மனைவி இல்லாமா ஒருத்தன் உயிர் வாழறது எப்படிப் பட்ட நரகம்னு எனக்குத் தெரியும் சார். இவனை நான் எப்பவுமே கேட்க மாட்டேன். நானும் என் மனைவியும் ஆசைப் பட்ட மாதிரி இவனுக்கு மதிவேந்தன்னு பெயர் மட்டும் வைங்க சார். பிடிங்க சார் .... அட... இந்தாங்க சார்.....” நிதர்சனத்தை உணர்ந்து தன் மனக்குமுறலை எல்லாம் கொட்டி அன்பழகன் மதிவேந்தனை சந்திரனின் கையில் திணிக்க,


அதே நேரம் அங்கு நுழைந்த சந்திரனின் தாய், “என்னடா என்ன ஆச்சு? ஒரு நாள் இப்படி போய் வர்றத்துக்குள்ள இப்படி சிறுக்கி மவ விழுந்து கிடக்கிறாளேடா... என் வீட்டு வாரிசுக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்…. அப்புறம் இந்த நாயை வீட்டுக்குள்ளே சேர்க்க மாட்டேன்!” ஒரு அக்மார்க் மாமியாராய் அவர் பேச


“என்ன டி.... இந்த பேச்சு பேசுற... அதான் அவன் கையில குழந்தை இருக்கே! அப்பவே தெரிய வேணாம் நம்ப வீட்டு வாரிசுக்கு ஒண்ணும் ஆகலன்னு....” சந்திரனின் தந்தை மனைவிக்கு சுட்டிக் காட்ட


“அட ஆமா... கொடுடா குழந்தைய....” தன் கையில் ஆட்டோகாரரான அன்பழகனின் குழந்தையை வாங்கிக் கொண்டவர் “அம்மு தங்கம் செல்லம் எங்க வீட்டு சாமி” என்று குழந்தையைக் கொஞ்சியவர் திடீரென்று “நீயும்... உன் மனைவியும் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்னு முடிவு செய்து இருக்கீங்கடா?” மகன் பேச இடம் கொடுக்காமல் இவர் கேள்வி கேட்க


கண்ணில் நீருடன், சந்திரனின் உதடுகளோ தன்னை மீறி “மதிவேந்தன்!” என்று உச்சரித்தது.


“அட! பையன் பிறந்திருக்கானா? அப்போ எங்க வீட்டு ராஜா குட்டி இவன்!” இப்படியாக சந்திரனின் தாய் பேரன் உலகத்தில் கலந்து விட்டார்.


அதன் பிறகு டாக்டரிடம் விஷயத்தைச் சொல்லி கெஞ்சி, கேட்டு பல சமாதான வார்த்தைகளுக்குப் பிறகு சந்திரனின் குழந்தை தான் மதிவேந்தன் என்பதை வெளி உலகத்திற்குச் சொல்லி பிறப்பு சான்றிதழிலும் அதையே எழுத வைத்தார்கள் சந்திரனும் அன்பழகனும். அதன் பிறகு மறந்தும் வேந்தனைத் தன் மகன் என்று உரிமை கொண்டாடவில்லை அன்பழகன். ஏழை இல்லையா? பிள்ளைப் பாசத்தையும் மீறி சத்தியத்துக்குக் கட்டுப்பட்டு இருந்தார் அவர்.


இந்த உண்மையை முதலில் மனைவியிடம் மறைத்த சந்திரன் பின் தன் வேலை நிமித்தமாக வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு குடும்பத்துடன் சென்று விட்டார். அதன் பின் மதிவேந்தனைப் பெற்ற தாய் தந்தையர் வாழ்வில் என்ன நடந்தது என்பது அவருக்கு தெரியாது. அதனால் எந்த வித சிக்கலும் இல்லாமல் அனைவரின் வாழ்வும் சென்றது.


இந்நிலையில் தன் மனைவியிடம் ஒளிவு மறைவு இல்லாமல் உண்மையாய் வாழ வேண்டும் என்று நினைத்து தாமரையைக் கைப்பிடித்த சந்திரனுக்கு இந்த உண்மை, நெருஞ்சி முள்ளாய் மனைவியிடம் நெருங்க விடாமல் அவரைத் தடுத்தது. இதே குற்ற உணர்ச்சியில் இருந்தவருக்கு உண்மையைக் கடைசி வரை மறைக்க முடியாமல் தன் தாய் இறந்து காரியம் முடிந்த கையோடு இவர் வேந்தனை பற்றிய உண்மையை மனைவியிடம் சொல்லி விட, முதலில் துடித்து கதறிய தாமரை அழுதாலும் மதிவேந்தன் தான் கடைசிவரை தன் மகன் என்பதில் உறுதியாக இருந்தார் சொந்த மகனை இழந்த அந்த தாய்.


நான் மேல் சாதி நீ வேற்று சாதி என்ற பாகுபாடு பார்க்காமல் கல்லூரி வரை படித்திருந்து உலகத்துடன் ஒன்றி வாழ்ந்து வந்த தாமரை, வேந்தன் வேற்று சாதி பிள்ளை என்றோ ஏன்... அவன் இன்னோர் தாய் பெற்ற மகன் என்றோ நினைக்கவில்லை அவர். இன்னும் சொல்லப் போனால் தரிசு நிலமாய் போக இருந்த அவர் வாழ்விற்கு, மதிவேந்தனை அவருக்கு கிடைத்த கற்பக விருட்சகமாகவே நினைத்தார் அவர்.


இந்த ரகசியம் கடைசிவரை வேந்தன் வாழ்வில் மறைக்கப் பட வேண்டும் என்று கணவன் மனைவி நினைத்து வைத்திருக்க... இன்று தெரிய வந்ததால் மகன் எடுக்கப் போகும் முடிவு என்ன என்று யோசித்தது அந்த தாய் உள்ளம்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN