🌹மையலுடைத்தாய் மழை மேகமே.. -பாகம் 15🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரியமுள்ள மாடசாமிக்கு... இறுதி முறையாக தங்களை அவ்வாறு அழைத்துக் கொள்கிறேன்.இந்த முட்டாளை ஏமாற்றுவதற்கு காதல் என்ற புனித உணர்வை நீங்கள் கையில் எடுத்திருக்க வேண்டாம். எனக்குத் தெரியும் மனதார தங்களால் என்னை எப்பவும்
காதலிக்க இயலாது என்று.


நான் செய்ய நினைத்த தவறை நீங்கள் தெரிந்தே செய்து விட்டீர்கள். மனதளவில் உங்களுக்கு எந்த துரோகமும் நான் நினைக்கவே இல்லை. பெட் கட்டி வருவதற்கு காதல் ஒன்றும் பொருள் இல்லை என்பதை மனதார உணர்ந்த பின்பே,உங்களுக்கு விளையாட்டுக் கூட அந்த வலியை நான் தந்து விடக் கூடாது என்பதற்காக பூரணியிடம் பெட் ல தோத்துப் போயிட்டதாய் சொன்னேன். நிஜமாகவே நான் காதலில் கூட தோத்துதான் போயிட்டேன்.

காதல் வலி இப்படித்தான் இருக்கும் என்பதை நான் உணர்ந்துக் கொண்டு விட்டேன். இதை பற்றி என்னிடம் நேராகவே கேட்டு இருந்திருக்கலாம் நீங்கள். எந்த தருணத்திலும் என்மேல் தங்களுக்கு நம்பிக்கை என்பது சிறிதளவு கூட இருந்ததில்லை என்பதுதான் உண்மை.பிரியம் காட்டி,அன்பொழுக பேசி,ஆசைநாடகம் நடத்தி என்னை இப்படி செய்யும் அளவிற்கு தாங்கள் தரம் தாழ்ந்து இருக்க வேண்டாம்.

ஆங், நமக்கு நடந்த பொம்மை கல்யாணத்தில் இருந்து நான் முழு மனதாக தங்களுக்கு மணவிலக்கு அளிக்கிறேன்.இனி தாங்கள் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்துகொள்ளலாம்.என் தொந்தரவு இனி தங்கள் வாழ்க்கையில் இருக்காது.இதுவரை என்னை பூப்போல் தாங்கி கவனித்து வந்ததற்கு எனது நன்றிகள்.

இனி மென்சஸ் வலி கூட என்னை ஒன்றும் செய்து விடாது. அதற்கு மேலான பெரும் வலியை என் இதயம் பெற்று விட்டது. அதற்கு முன் இந்த வயிற்று வலி எம்மாத்ரம்? உலகிலேயே நான் அதிகம் நேசித்தது உங்களைத்தான்.
இப்பொழுது அதிகம் வெறுப்பதும் உங்களைத்தான். உங்கள் கையில் இருக்கும் பச்சையை அழித்து விடுங்கள். அதற்கு சிறிதும் அங்கு வேலையில்லை. கானல் நீராகி விட்டவளை நினைத்து இனி எப்போதும் நீங்கள் கலங்க வேண்டாம். என்னை தேடிஅலையவும் வேண்டாம்.மீறி தேடினால் என் முடிவு நம் குடும்பத்தை கலங்க வைத்து விடும் விதமாகத்தான் அமையும். செல்கிறேன்... கருப்பாயி...

யாரோ அவன் இதயத்தை பிடுங்கி எறிந்து விட்டது போன்ற ஒரு வலி. அவனுடைய வண்ண மயில் எங்கோ சென்று விட்டாள். சிறு வயது முதல் அவனை சீண்டி சீண்டி சண்டை பிடிக்கும் அவனுடைய ஒரே அழகான எதிரி எங்கேயோ மாயமாகிவிட்டாள்.
எங்கு சென்று அவளைத் தேடுவான். பசித் தாங்காத தன்னவளை எங்கு சென்று தேடுவான். மாத விலக்கு நே ரத்தில் உயிர் நோகிப் போகிறவள், அவன் அணைப்பில் மட்டுமே அமைதி காணும் அந்த வளர்ந்த குழந்தையை தன் அறியாமையினால் ,கோபத்தினால் வீட்டை விட்டு போகும்படியே செய்து விட்டானே.

அவள் இல்லாத வீடு அவனுக்கு நரகம் போல் இருந்தது.சதா சிரிப்பொலியும் பாட்டும் கூத்துமாய்,தன்னோடு மல்லுக்கு நிக்கும் மயில் இல்லாத வீட்டில் அவனால் மட்டும் எப்படி இருக்க முடியும்? தினம் தினம் அவள் ஞாபகம் கொல்லுமே.
அழுதறியாத ருத்ரன் அன்று கதறி அழுதான்.

"அழுகிறாயா ருத்ரா? இப்போ நல்ல அழு. என் கண்மணியை என்கிட்ட இருந்து பிரிச்சிட்டியே. உனக்கு அவள் என்ன பாவம் பண்ணினா?எதுக்கு அவளுக்கு இவ்வளவு பெரிய தண்டனையை குடுத்தே? எங்கே எப்படி இருக்காளோஅத்தை அத்தைனு என்னையே சுத்தி சுத்தி வருவாளே. அவள் இல்லாமல் நான் எப்படி இருப்பேன்னு கூட அவ யோசிக்கல பாரு. இப்படியா நான் உன்னை வளர்த்தேன்.எனக்கு உன்னை நெனைச்சாலே வெக்கமா இருக்குடா '' பவானி உடைந்து கதறினார்.

"அம்மா அம்மா நான் அவள் இப்படி செய்வானு நெனைக்கலமா. அவள்தானே என் உசிரு.பவி.. பவி..நீ சொல்லு அம்மாகிட்ட மயிலு மேலேதானேநான் என் உயிரை வெச்சியிருக்கேனு சொல்லு பவி.நானும் சாதாரண மனுஷன் தானேமா. என் காதலை விளையாட்டு பொருளாக்கறளோனு வலிமா... ஏமாந்த வேதனைமா..ஆனால் அவள் இப்படி பண்ணுவானு நான் நெனைக்கவே இல்லயே'' ருத்ரன் தன் தாயைக் கட்டிக் கொண்டு அழுந்தான்.

சாம்பவி மயூராவின் கவலையை விடுத்து ருத்ரனை தேற்றுவதிலே குறியாக இருந்தார். அனைவருக்கும் அவன் நிலைமை புரிந்தது. தங்களுடைய தவறும் பெரியவர்களுக்கு புரிந்தது.ஒரு வயதிற்கு பின் இருவருக்கும் அவர்கள் பால்ய விவாகத்தைப் பற்றி கூறியிருந்திருக்கலாம். அது போல் செய்யாமல் விட்டது பெரும் தவறு என்பது மயூரா சென்ற பிறகே தெரிந்தது. யாரும் யாரையும் குறை சொல்லி ஒப்பாரி வைத்துக் கொள்வதில் பயன் இல்லையே .

மயூராவின் தெளிவான கடிதம் அவர்களுக்கு நம்பிக்கையூட்டியது. எந்த வலிக்கும் தீர்வு தன்னால் மட்டும்தான் தர இயலும் என்பது மயூராவிற்கு தெரியும்.சிறுவயது முதல் அப்படிதான்.கோவமோ கவலையோ ஓரிரு நாள் தனிமையில் இருப்பாள். பின் தன்னை மீட்டுக்கொண்டு விடுவாள்.இப்பொழுதும் அவள் அதைத்தான் செய்துயிருக்கிறாள் என்பது அவர்களுக்கு புரிந்தது. அவள் மனதின் இரணம் அவ்வளவு ஆழமா இருந்திருக்கிறது என்பதை அவர்கள் புரிந்துக் கொண்டார்கள்.

காலம் இனி இவர்களின் இரணங்களை எவ்வாறு மாற்றும் என்பது கேள்விக்குறியாக இருந்தது. அதற்கு பிறகு ருத்ரா பெரிதும் இறுகி போய்விட்டான். வசந்த சாரல் அவர்கள் வீட்டு வாசலை தழுவாமலே சென்று விட்டது. மதுவும் அக்கா துணையில்லாமல் ஆதரிக்கும் அத்தான் இல்லாமல் பெரிதும் துவண்டு போனாள். அந்நாளில் பெரும் துணையாக அவளுடன் நின்றது அந்தரன் மட்டுமே.

தன்னிடம் கூட சொல்லாது தன் தேவி எங்கே சென்று விட்டாள்.அந்தரன் மனசு துடித்தது.அவனுடைய ஒரே ஒரு நல்ல தோழி அவள் தானே. யாரோடு சண்டை பிடித்தாலும் துணைக்கு அவனை தானே அழைப்பாள். சிறு வயது முதல் மயூராவிற்கு அந்தரன் தானே நல்ல தோழன்.

ருத்ரனை விடவும் அந்தரன் தானே மயூராவை முழுமையாக புரிந்துகொண்டவன்.எவ்வளவு வேதனைகளை அவள் மனம் சுமந்திருந்தால் இப்படி தனக்கும் கூட சொல்லாமல் சென்றிருப்பாள்.
அவனுக்கு ருத்ரன் மேல் கடுங்கோபம் வந்தது.அவன் சட்டையை பற்றி நான்கு வார்த்தைகள் கேட்டால் ஒழிய அவனுக்கு மனசு ஆறாது. நேரே ருத்ரனை தேடி அவன் அறைக்கே சென்று விட்டான்.கலங்கிய கண்களும் கசங்கிய உடையுமாய் ருத்ரனை பார்த்தாலும் அந்தரன் மனதில் கனன்று கொண்டிருந்த வேதனைத்தீ மட்டும் அணையவே இல்லை.
 

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே.. -பாகம் 15🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN