முன் ஜென்ம காதல் நீ - 9

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Chandra-Nandini-Wallpaper-14.jpg

போர் கூத்து
இரண்டு லட்சம் படைவீரர்கள் யானை படை குதிரை படை என பல அணிவகுப்புகள். அனைத்தும் முத்தூரை சூழ்ந்து கொண்டது. அந்த நாட்டினை சூழ்ந்து அரணாக காத்து இருந்த கோட்டை சுவரை வழைத்துக்கு கொள்ள விரைந்தன. முத்தூர் கோட்டை பலம் வாய்ந்தது நான்கடி அகலம் கொண்டது. சுமார் ஐம்பது அடி உயரம் கொண்டது. வீரர்கள் ஏறவும் இறங்கவும் உள்பக்கம் படிகளையும் ஏணிகளையும் கொண்டது.
மொத்தம் நான்கு வாயிகள் உள்ளது ஒரு வாயில் காட்டு பக்கமும் மற்றொரு வாயில் கடல் புறத்தையும் நோக்கி இருந்தது. மற்றொரு வாயில் கிழக்கு பக்கமும் மற்றொரு வாயில் மேற்கு புறமும் இருந்தன. அதன் வாயில் கதவுகள் வயிரம் பாய்ந்த மரங்களால் செய்யப்பட்டிருந்தன. அந்த மரங்களிலும் யானை தந்தங்கள் பதிக்கப்பட்டிருந்தன. அவற்றின் கூரிய முனைகள் வாயிலுக்கு வெளிப்பக்கம் தெரியுமாறு அமைக்கப்பட்டிருந்தன. ஆகவே அதன் வாயிலை எந்த மரத்தினாலும் மோதி உடைக்க முடியாது என பறைசாற்றின.
காட்டு புறம் இருந்த வாயிலுக்கு முன்பே இரண்டு லட்சம் வீரர்களும் அணி வகுத்து நின்றன. சொல்லப் போனால் அவர்கள் அணிவகுக்க இடம் கூட இல்லை ஆகவே காடுகளுக்குள் பாசறை அமைத்து தங்கவும் முற்பட்டனர். கோட்டையை ஆராய்ந்து அதன் பலாபலங்களை அலசி அதனை தாக்கும் முறைகளையும் உள்ளத்தே வகுத்துக் கொண்டான். அவ்வளவு பெரிய படையை கண்டு உள்ளே அனைவரும் பேரச்சம் கொண்டனர். மக்கள் மட்டும் இல்லை வீரர்களும் கூட. ஆனால் யுத்த பொறுப்பை வழி நடத்தும் இந்திர ராணி மட்டும் கவலை ஏதுமின்றி சுற்றி வந்தாள். படை ஆக்ரமிப்புக்கு பிறகு கூட அவள் கோட்டை காவலை அதிகரிக்கவும் இல்லை.
படை தலைவர்களுக்கு பதில் ஊர் ஆளுநர்களை அழைத்து " இப்பொழுது நடைபெறும் வணிகம் நடைபெறலாம். ஆனால் உணவு பொருட்கள் எதுவும் நம் நாட்டை விட்டு செல்ல கூடாது. மாறாக நம் செல்வங்களுக்கு பதிலாக உணவு தானியங்களை வாங்கி சேர்க்க வேண்டும். " என உத்தரவு பிறப்பித்தாள். அதனை அறிந்த வணிகர்கள் குழப்பம் அடைந்தனர். போர் காலத்தில் செல்வங்களை பாதுகாப்பதுக்கு பதில் உணவுகளை சேர்க்க சொல்கிறாளே என்ற குழப்பம். படைகளை மீறி வணிகம் கடினம்.
அவ்வாறு செய்து உணவு பொருட்களை பாதுகாக்க சொல்கிறாள். படை வீரர்களும் குழம்பினர். பாதுகாப்பு சம்மந்தமாக எந்த ஒரு உத்தரவோ வழிகாட்டுதலோ வரவில்லை. சாதாரணமாக இருக்கும் காவலே தொடர்ந்தது. ஆறுதலாக இருந்த அருள்மர்மனும் இல்லை அவன் வடிவமைத்து தந்த யமப்பொறிகளும் இருக்கும் இடம் தெரியவில்லை. கடற்படையை அரணாக காத்து இருந்த இருபது மரக்கலங்களும் சென்ற இடம் தெரியவில்லை. போர்காலத்தில் தடை செய்யப்படும் கூத்தும் கேளிக்கை நிகழ்ச்சிகளும் எந்ததொரு தடையும் இல்லாமல் நடைபெற்றன. அனைத்தும் அவளின் கட்டளை.
அரணாக காத்து இருந்த கோட்டை சுவர்களும் சில இடங்களில் சதுர வடிவில் உடைக்கப்பட்டன. துளையிடப்படவில்லை ஆனால் சிறிய சந்து போல் இரண்டடி ஆழத்தில் நான்கடி அகலத்தில் உடைக்கப்பட்டன. அதுவும் வாயில்களுக்கு அருகே அவை கதவினை பலத்தை குறைக்கும் வேலை என தெரிந்தும் அதனை பற்றி இந்திர ராணியிடம் எச்சரித்தும் அவள் அதனை செய்தாள். அனைவருக்கும் பயம் அதனை விட குழப்பமும் சஞ்சலமும். அதே குழப்பம் கஜவர்மனுக்கும் இருந்திருக்க வேண்டும். படை எடுத்து வந்து முற்றுகையிட்டு நாட்கள் மூன்று கழிந்த பின்பும் எதிரியிடம் எந்த முன்னேற்றமும் இல்லை.
அவன் சமாதான தூது அனுப்பவில்லை. யுத்த அழைப்பும் இடவில்லை. என்ன நடக்கிறது அங்கே. நாம் தான் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறோம். இங்கே அமர்வதற்கு கூட இடமில்லை. படைகள் காடுகளுக்குள் பதுங்கியிருக்கிறது. கதவை உடைக்க முயன்று போர் தொடரலாம். ஆயினும் இவ்வளவு அலட்சியமாக இருப்பதிலேயே ஏதேனும் சூழ்ச்சி இருக்கலாம். ஆகவே நாமே தூது அனுப்பலாம். அவர்கள் எண்ணம் அறிய அவர்கள் பலத்தையும் அறிய என எண்ணி தனது தூதுவனை ஓலையுடன் அனுப்பினான்.
நாட்டின் முக்கியஸ்தர்கள் அரசர் மற்றும் இந்திர ராணி ஆகியோர் அமர்ந்திருந்த அவையில் அந்த ஓலையை படித்தான் தூதுவன் அதில் " எங்கள் படைபலத்தை அறிந்து இருப்பீர்கள். இந்த நாட்டினை பிடிப்பது எங்களுக்கு பொருட்டன்று. ஆனால் இரத்த களரியை நாங்கள் விரும்பவில்லை. நடைபெற உள்ள உயிர் இழப்புகளை தடுக்க ஒரு முயற்சி. வருடம் இரண்டு லட்சம் பொற்காசுகளை கப்பமாக செலுத்தி எங்களுக்கு பணிந்த நாடாக இருக்க சம்மதித்தால் போர் நிறுத்ப்படும். நீங்கள் பதில் அனுப்பவில்லை எனில் இன்றிலிருந்து இரண்டாம் நாள் இரவு மூன்றாம் சாமத்தில் எங்கள் தாக்குதலை மேற்கு வாயிலில் தொடர்வோம் " என எழுதியிருந்தது.
அவனை அனுப்பி விட்டு அவர்கள் பேச தொடங்கினர். சிலர் சரணாகாதியை விரும்பினர். ஆனால் இந்திர ராணி உறுதியாக பேச தொடங்கினாள். " அந்த கஜவர்மன் அனுப்பிய தூதினை துளியளவும் நம்ப கூடாது. சில நாட்களுக்கு முன் அமைதியை விரும்புவதாக அனுப்பிய ஓலை இது. இது வந்த பின் சில வாரங்களுக்குள் பெரும் படையுடன் வந்துள்ளான். ஒரு கணம் நாம் நம்பினாலும் நம் மொத்த நாடும் இல்லாமல் போய்விடும். என்பதை உணருங்கள் " என கூறினாள். இதனை கேட்டு அனைவரும் பயந்தனர்.
அவள் ஆறுதலாக " யாரும் அச்ச வேண்டாம் இந்த போரில் நாம் நிச்சயம் வெல்வோம். நம் வீரர்களிடம் நான் பேசுகிறேன். " என்றாள். அவள் குரலில் உறுதி இருந்தாலும் பலர் அவற்றை நம்பவில்லை. ஆனால் அந்த போரையும் வேறு வழியில்லை என உணர்ந்தனர். இருபதனாயிரம் வீரர்கள் முன்பு அவள் பேச தொடங்கினாள். அவள் பேசுவதை அனைவருக்கும் கேட்கும்படி கூற ஆங்காங்கே சில கட்டியகாரர்கள் இருந்தனர். " வீரர்களே வணக்கம் நான் இந்த போரை தொடங்குவது எனக்காகவோ என் வீரத்தை காட்டவோ இல்லை. மாறாக என் நாட்டிற்காக நாட்டு மக்களுக்காக மட்டுமே. உங்கள் அனைவருக்கும் ஈடாக என் உயிரை கேட்டால் தாராளமாக கொடுப்பேன். ஆனால் அவன் வந்திருப்பது அதற்காக அல்ல நம் நாட்டினை தடம் தெரியாமல் அழிக்க. நீங்களும் உங்கள் வீரத்தை காட்ட போர் புரிய கூடாது. மாறாக உங்கள் குடும்பத்திற்காக உங்கள் நாட்டுக்காக. இரண்டு லட்சம் வீரர்களை இருபதனாயிரம் வீரர்களை கொண்டு எதிர்ப்பது முட்டாள் தனமாக கூட பலர் நினைக்கலாம். ஆனால் அதற்கு காரணம் நீங்கள் தான். என் படையின் ஒவ்வொரு வீரனும் அவர்களின் பத்து வீரனுக்கு சமம் என்பதில் எனக்கு எள்ளளவும் சந்தேகம் இல்லை நாம் நிச்சயம் வெல்வோம் வாருங்கள் யுத்தத்திற்கு ஒரு வேளை தோற்றால் யாரும் அடங்காமல் கடைசி வரை போராடிய மாவீரர் கூட்டம் என உலகம் நம்மை கொண்டாடும் " என முடித்தாள்.
அவள் குரல் ஒலிக்க ஒலிக்க வீரர்கள் அனைவரும் உற்சாகம் கொண்டனர். வீரம் கொண்டனர். வீழ்ந்தாலும் தங்கள் முழு பலத்தையும் வீரத்தையும் காட்டி விட்டு வீழ்வோம் என மனதில் உறுதி கொண்டனர். " ஒரு வேளை அருள்வர்மன் உயிரோடு இருந்தால் இந்நிலையை அவன் சமாளித்து இருப்பான் ஆனால் அவன் இல்லை. அது நமக்கு இழப்பு தான் ஆனால் அவன் இயந்திர ஆயுதங்கள் இப்பொழுதும் நம்முடன் உள்ளன. அவை போதும் அவர்களை அழிக்க " என முடித்தாள்.
அருள்வர்மனை பற்றி பேசும் போது அவள் குரல் தழுதழுத்ததை கண்ட வீரர்களுக்கு அதன் காரணமும் புரிந்தது. அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் விரும்பியது. அவளுக்காக அந்த போட்டியில் வென்றது. தங்கள் நாட்டை காக்க அவன் சொந்த நாட்டையும் அழிக்க செய்த முயற்சி என அனைத்தும். முடிவாக இரண்டில் ஒன்று பார்போம் என உறுதி கொண்டனர். முத்தூர் நாட்டில் நடைபெற்ற பல கூத்துக்களில் " போர் கூத்தும் " சேர்ந்து நடைபெற தொடங்கியது.

நிலையில்லா வெற்றி

வீரர்களிடம் வீரமாக பேசிய பின்பும் போர் ஏற்பாடுகள் எதுவும் தீவிரப்படுத்தப்படவில்லை. பகலில் வீரர்கள் சில பயிற்ச்சிகளை மட்டும் மேற்கொண்டனர். அந்த நாள் மாலை அவளை காண சென்று போரை பற்றி பேச நினைத்த படைதளமதியை கூட " நாளைக்கு தானே போர் " என அலட்சியமாக கூறி அவள் அனுப்பிவிட்டாள்.
இரவு சாமங்களில் கோட்டை தளங்களில் உடலை எல்லாம் போர்வையால் மூடிய வண்ணம் அடையாளம் தெரியாதவாறு உலாவினாள். எதிரி படையை அணுவணுவாக ஆராய்ந்தாள். துலாவினாள். எப்படி வேண்டுமானாலும் கொள்ளலாம். யாருக்கும் தெரியாமல் திட்டிவாயில் வழியாக வெளியே சென்று கிழக்கு வாயிலை ஆராய்ந்தாள். அதனுடன் மேற்கு வாயிலையும் ஆராய்ந்து காலை தொடங்கும் விடியும் வேளையில் இருள் அகல்வதற்கு முன்னே கோட்டைக்கு திரும்பி நன்றாக உறங்க தொடங்கினாள்.
அவள் செய்கை ஆராய்ச்சி எதுவும் எவருக்கும் புரியவில்லை. ஆனால் இரவு தொடங்கும் மாலை வேளையில் படைதளபதியை அழைத்தாள். " தலைவரே இன்று பௌர்ணமி முடிந்து ஐந்தாவது நாள் நிலவு புறப்பட சில நாழிகைகள் ஆகும். அதுவும் பிறை நிலவு தான் வரும் அதனை நாம் சாதகமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். நீர் இப்பொழுது சென்று நம் படையில் சிறந்த வில்லாளர்களான ஒரு ஐயாயிரம் வீரர்களையும் வேல் வீரர்களில் சிறந்த ஐயாயிரம் வீரர்களையும் பிரித்து எடுங்கள் " என்றாள்.
அவர் அவள் கூறுவதை கேட்டு கொண்டிருந்த அவர் ஒரு சந்தேகம் கேட்க எத்தனித்தார். அவரை தடுத்த அவள் " சந்தேகங்களை பிறகு கேளுங்கள் தலைவரே " என கூறினாள். மேலும் " சிறந்த வீரர்களை அழைத்து கொண்டு கிழக்கு வாயிலை மெல்லமாக திறந்து கொண்டு வெளியே செல்லுங்கள். நினைவில் கொள்ளுங்கள் இவை அனைத்தையும் நிலவு புறப்படும் முன்னே நீங்கள் வெளியே சென்று இருக்க வேண்டும். அங்கே ரதி நதியின் கிளை நதி ஒன்று ஓடுகிறது. இப்பொழுது வெயில் காலம் என்பதால் நீர் குறைவாக தான் பாயும். அதன் கரையில் இறங்கி கவனமாக உள்பக்கம் முதலில் வில்லாளிகளை நிறுத்தி பின் புறம் வேல் வீரர்களையும் நிறுத்துங்கள். ஒவ்வொருவருக்கும் நிறைய அம்புகளையும் வேல்களையும் கொடுத்து அழைத்து செல்லுங்கள். நம் கோட்டை தளத்தில் இருந்து சைகை கிடைத்ததும் நீங்கள் தாங்க வேண்டும். அம்புகளும் வேல்களும் நூற்றுக்கணக்கில் பறந்து வந்து கோட்டை வாயிலில் உள்ள வீரர்களை தாக்க வேண்டும் மறு சைகை கிடைத்ததும் அனைவரும் கோட்டைக்குள் வந்து விட வேண்டும். வடக்கு புறம் எதிரியின் பெரும் படை உள்ளது. அவர்கள் கண்ணில் படாமல் நிலவு புறப்படும் முன்பு நீங்கள் ரதி நதி கரையின் உள்புறத்தை அடைந்து இருக்க வேண்டும். உங்கள் வீரத்தையும் திறமையும் நம்பி தான் உங்களை அனுப்புகிறேன் கவனம் " என்றாள்.

இவை அனைத்தையும் கேட்ட அவர் " தேவி உங்கள் திட்டம் அருமை ஆனால் நீங்கள் கிழக்கு வாயில் என கூறுகிறீர்கள். ஆனால் அவன் மேற்கு வாயில் என கூறி உள்ளான். நான் கிழக்கு வாயில் சென்று யாரை தாக்க?. மேலும் அவர்களுக்கு பல அம்புகளையும் வேல்களையும் வழங்க சொல்லி உள்ளீர்கள் அவ்வளவு ஆயுதம் " என இழுத்தான். அவள் அவனை இடைமறித்து "தலைவரே நம் நாட்டில் இப்பொழுது ஒரு கொல்லரை கூட பிடிக்க இயலாது அனைவரும் ரகசிய இடங்களில் தங்கி ஆயுதம் தயார் செய்கிறார்கள். அவை நம் ஆயத கிடங்கில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றை நான் காட்டுகிறேன். இதை போன்று இரண்டு மடங்கு படையையும் சமாளிக்கும் ஆயுதங்கள் உள்ளன "
மேலும் " போரின் நம் யுத்திகளை நம் சிந்தனை போல் அமைக்க வேண்டும் எதிரியை நம்ப கூடாது அதுவும் கஜவர்மனை ஒரு கணம் நம்பினாலும் அழிந்தது நம் மொத்த நாடும் ஆகவே சொல்வதை மட்டும் செய்யுங்கள்" என அழைத்து சென்று ஆயுத கிடங்கின் திட்டி வாசலை திறக்க ஒரு பாதை திறந்தது. அதனுள் செல்ல அது போர் காலத்தில் அனைவரும் தப்பி செல்லும் பாதை அதன் முழுவதும் ஆயுதங்கள். அவன் அசந்து போனான் இவை அனைத்தும் அருள்வர்மன் இருந்த போது உருவாக்கியவை என நம்பினான். உற்சாகத்துடன் போர் காரியங்களை தொடங்கினான். ஆனாலும் ஒரு கேள்வி கிழக்கு வாயிலில் யாரை தாக்க? என. ஆயினும் தலைவி உத்தரவை நிறைவேற்ற தொடங்கினான்.அவளின் உறுதி அவனுக்கு நம்பிக்கை கொடுத்தது.

மாலை மயங்கும் வேளை எங்கும் இன்பமான சூழல். தாவரங்கள் பசுமை நிறம். பறவைகளின் மனதை மயக்கும் குரலோசைகள் என அழகான இனிமையான நிகழ்வுகளும் சூழல்களும். அனைத்தும் இயற்கை அமைத்தது. ஆனால் அவை அனைத்தையும் கெடுப்பவை மனிதனின் செயல்பாடுகளும் தான் என உணர்த்துவது போல் அந்த இனிமையை குறைக்கும் செயல்கள் அங்கே அரங்கேற தொடங்கியது. அது தான் போர் செயல்பாடுகள். அவை அனைத்தையும் பார்க்க விரும்பாமல் கோபம் கொண்டது போல் தன் தீக்கதிர்களை பரப்பி அந்த பகுதி எல்லாம் பரப்பி விட்டு மறைந்தான் ஆதவன்.

அதனை பார்க்க நிலவு வருவதற்கு முன்னே கிழக்கு வாயில் கதவினை ஓசை படாமல் திறந்து கொண்டு பத்தாயிரம் வீரர்கள் கையில் வில்லும் அம்புறத்துணிகளும் கொண்டு வேல்களை பல முதுகில் வைத்துக் கொண்டு சென்றனர். ரதி நதியை அடைந்து அதன் கரையில் உள்பக்கம் இறங்கி கவனமாக குவிந்து நின்றனர். வீரர்கள் அமைதியாக இருந்தாலும் தலைவன் மனதில் மட்டும் யாரை தாக்குவது என்ற கேள்வி? ஒலித்துக் கொண்டு இருந்தது. இந்த நிகழ்வுகளை எல்லாம் கோட்டை தளத்தில் இருந்து இருகண்கள் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தன.
இரண்டாம் சாமம் பாதி முடிந்த சமயத்தில் எதிரி வீரர் கூட்டத்தில் ஒரு ஐம்பதாயிரம் வீரர்கள் தனியே பிரிந்து மெதுவாக கிழக்கு வாயிலை அடைந்து நின்றன. அசந்து போனான் படைத்தலைவன். கஜவர்மனின் தந்திரத்தை எண்ணி ஆச்சரியமும் மகிழ்வும் கொண்டான் அந்த தந்திரத்தை முன்னரே ஊகித்து அதனை உடைத்த இந்திர ராணியின் திறமையை எண்ணி. அந்த ஐம்பது ஆயிரம் வீரர்கள் வந்து கிழக்கு வாயிலை அடைந்து நின்றனர். அந்த கதவினை உடைக்கும் வழிகளை பற்றிஆராய்ந்தன.
அப்பொழுது திடீரென கோட்டை தளத்தில் இருந்து ஒரு பந்தம் இரண்டு முறை ஆடி நின்றது. கோட்டையை கதவினை உடைக்க முயன்ற வீரர்கள் பேராபத்தில் சிக்கினர். ஆயிரக்கணக்கான அம்புகளும் வேல்களும் பறந்து வந்து அனைவர் மேலும் பாய்ந்தன. விர்விரென அனைவரும் குழப்பத்திலும் பயத்திலும் அலறின எதிரிகள் எந்த பக்கம் இருந்து தாக்குகிறார்கள் என தெரியும் முன்னே சில நிமிடங்களில் உயிரிழப்புகள் அதிகமாயின. இரத்த கறைகளும் மண்னை நிரப்பின. அலறி துடித்த வீரர்கள் தப்பிக்க எண்ணி கதவை பெரும் வேகத்துடன் உடைக்க போயினர். அப்பொழுது அந்த ஆச்சரியம் நடந்தது. கதவுகள் தானாகவே திறந்தன. அவர்கள் அனைவரும் வெகு வேகத்துடன் உள்ளே புகுந்தனர். தடால் தடால் என.
பாதி வீரர்கள் உள்ளே புகுவதற்கும் கோட்டை கதவுகள் பெரும் வேகத்துடன் பூட்டப்படுவதற்கும் சரியாக இருந்தன. வெளியே இருந்தவர்கள் பின்னாலே இருந்து வந்த வேல்களுக்கும் அம்புகளுக்கும் சிறிது நேரத்தில் பலியாகினர். அவர்களை அரண் போல் நெருக்கமாக வரிசையாக நெருங்கிய வீரர்கள் ஒருவரையும் விடாமல் கொன்றனர். அவர்கள் கதவினை திறக்க அனைவரும் உள்ளே புகுந்தனர். உள்ளே கண்ட காட்சி அதிர செய்தது. உள்ளே புகுந்தவர்களில் பாதி பேர் என்ன ஆனார்கள் என தெரியவில்லை. மீதி பேர் எரியம்புகளுக்கு பலியாகி கிடந்தனர். ஆங்காங்கே இறந்து கிடந்தனர் தீயம்புகளுக்கு பலியாகி கிடந்தனர்.
தீயம்புகள் எங்கிருந்து வந்தன என்ற கேள்வியுடன் பார்த்தவர் அதிர்ச்சி அடைந்தனர். அவள் கோட்டை சுவரை உடைத்த திட்டுகளில் எல்லாம் அருள்வர்மன் அமைத்த எரியம்பு பொறிகள் இருந்தனர். அவை தீ நாக்குகள் என உணர்ந்தனர். சுவரை உடைத்தது கோட்டை கதவுகளை திறந்து எதிரிகளை உள்ளே விட்டது என அனைத்தையும் தொடர்ச்சியாக கோர்த்து பார்த்தனர்.எவ்வளவு முன்யோசனையுடன் நடந்துள்ளாள் என பார்த்தான். அவளது அறிவும் திறமையும் புரிந்தது.
மறுநாள் காலை முத்தூர் வீரர்களுக்கு நல்ல நாளாக முடிந்தது. அனைவரும் தங்கள் முதல் வெற்றியை மகிழ்ந்து கொண்டாடினர். ஆனால் அவள் மட்டும் எதிலும் கண்டு கொள்ளாமல் அமைதியாக இருந்தாள். பெற்ற வெற்றி நிலையில்லா வெற்றி என உணர்ந்தாள். அவளது புத்தி துரிதமாக எதையோ யோசித்து கொண்டிருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN