பூச்சரம் 35

தங்கள் இருவருக்கும் நடந்த திருமணத்தை அழகி சொல்லி முடிக்கக் கேட்ட தென்றலின் மனது ஒரு புறம் சந்தோஷம் அடைந்தாலும் மறுபுறம் பதறத்தான் செய்தது. தங்கள் குடும்பத்தைப் பற்றி தெரிந்திருந்து, ஏற்கனவே தங்கள் குடும்பத்தில் இப்படி கலப்பு திருமணத்தால் ஓர் உயிர் அழிந்ததை நினைத்துப் பார்த்தவளுக்கு அவள் கலெக்டர் என்பதையும் மீறி உடலில் நடுக்கம் ஓடியது.

சொன்னது போலவே மனைவியைத் தானே வந்து வீட்டுக்கு அழைத்துச் சென்றான் வேந்தன். ஏதோ இன்றே தன் மகன் வாழ்வு சரியாகி விட்டது போல் நினைத்த சின்னத்தாய் இருவரையும் வாசலிலே நிற்கவைத்து சாமந்தி கையால் ஆலம் சுற்றிய பிறகு தான் இருவரையும் வீட்டின் உள்ளே அழைத்து சென்றார் அவர்.

தாமரை எதிலும் கலந்து கொள்ள வில்லை. சாமந்திக்கு அதிர்ச்சி கலந்த சந்தோசம். சற்று நேரத்திற்கு எல்லாம் சாமந்தியும் தென்றலும் தோழிகள் என்று மாறிப் போனார்கள். “ஆத்தாடி ஆத்தா! அன்னைக்கு பிளசர்ல வரும்போது கூட நீங்கதேன் மச்சான் பொஞ்சாதின்னு சொல்லவே இல்ல...” தன் வெள்ளேந்தி குரலில் இருவருக்கும் தனிமை கிடைத்த போது சாமந்தி பூந்தென்றல் யிடம் கேட்க

“நீ எங்கமா எங்க இருவரையும் பேச விட்ட? எங்களுக்கும் சேர்த்து நீ தானே அன்று பேசிட்டு வந்த... இதில் கலெக்டரான என்னை வேற ரோடு சரி இல்லைனு போட்டுத் தரச் சொன்ன...”

“ஹி... ஹி... ஹி... அது வந்து…” என்று நெளிந்தவள், “ஆமா, நீங்க ஏன் மச்சான விட்டுப் பிரிஞ்சு போனீங்க? அவர் உங்க மேல எம்புட்டு பாசம் வச்சிருக்காக தெரியுமா?” இவள் தன் மனதில் அரித்து கொண்டிருந்த கேள்வியை திடீரெனக் கேட்க

‘என் மாமன் என் மேல் வைத்துள்ள அன்பை நேற்று வந்த இவள் சொல்லிக் நான் கேட்க வேண்டி இருக்கிறதே என்று மனதால் நொந்தவள், “உன் மச்சான் என் மேல் அன்பு காதல் தான் வைச்சிருக்கார். ஆனா நான் என் மாமன் மேலே உசுரையே வைத்திருக்கேன்” அவள் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இவள் வேறு விதமாய் பதில் தர

“ஹான்!” என்று முழித்தவள் “அது நிசம்னா அவரை விட்டுப் பிரிஞ்சிருக்கமாட்டீக...” சாமந்தி விடுவதாய் இல்லை.

“அது நிசம் என்பதால் தான் இந்த ஜென்மம் முழுக்க அவர் கூட வாழ இப்போ அவரைத் தேடி வந்திருக்கேன்”

“அது சரிதேன்... ஆமாம்… எங்க உங்க மாமனுக்கு என்னென்ன புடிக்கும்னு ஒரு பொஞ்சாதியா சொல்லுங்க பாக்கலாம்” இவள் யார் என்னைக் கேள்வி கேட்பது என்ற நிலைப்பாடு இல்லாமல் தென்றல் அவளுக்கு பதில் தர, அது சாமந்தியை அடுத்ததாக இப்படி ஒரு கேள்வியை கேட்க வைத்தது.

இவளுக்கு தான் ஏன் பதில் சொல்ல வேண்டும் என்று நினைக்காமல் தன் மனதில் உள்ள பாரம் குறைந்தால் போதும் என்று நினைத்தவள், “என்ன பிடிக்குமா? சொல்றேன் கேட்டுக்கோ… இந்த மண்ணையும் விவசாயத்தையும் ரொம்ப பிடிக்கும். எங்க குடும்பம் தான் அவருக்கு கோவில். அதிலும் என் அப்பாவை ரொம்ப ரொம்ப பிடிக்கும். அவர் மாமன் பெத்த மகளான நான்தான் அவரோட உசுரு. கபடி பிடிக்கும், நுனி காலால் தூக்கிக் கட்டற வேஷ்டி சட்டை பிடிக்கும். காலை நேரப் பனிக் காற்று, கோவில் மற்றும் ஆடு மாடு கழுத்துகளில் இருக்கும் மணியோசை பிடிக்கும். எல்லாவற்றையும் விட இடி சட்டினியோட நீர் ஆகாரத்தை கொடுத்தா என் மாமா அன்னைக்கு முழுக்க சோறு தண்ணீ இல்லாம அதையே தின்னுட்டு சுற்றிகிட்டு இருக்கும். {இடி சட்டினி திருநெல்வேலியின் தனித்துவமான சட்டினி வகை)” தன் கணவனுக்குப் பிடித்ததை இவள் அடுக்கிக் கொண்டே போக, சாமந்தியோ திறந்த வாய் மூடாமல் இருக்க,

“இன்னும் சொல்லவா? இன்னும் சொல்லவா என்றவள் அவள் மாமனிடம் அவளுக்கு பிடித்ததையும் சொல்ல ஆரம்பித்தாள் அவள்… நானும் என் மாமனும் சின்ன வயசுல விளையாடும்போது அவர் கீழ விழுந்ததில் நெற்றியில் ஏற்பட்ட தழும்பு இன்னும் அவர் முகத்திலே இருக்கும். கறுத்த தேகமான அவர் பின்புற கழுத்தில் அடர்ந்த பச்சை நிறத்தில் ஒரு மச்சம் இருக்கும். எப்போதோ ஒரு முறை எனக்கு உடம்பு சரியில்லாம நான் சீரியஸா இருந்தப்போ எனக்கு சீக்கிரம் உடம்பு சரியாகணும்னு வேண்டிகிட்டு மாமா வருஷம் வருஷம் முதுகில அலகு குத்தி தேர் இழுப்பார். அதனுடைய வடு அவர் முதுகில இருக்கும். ஆனா இன்னையவரை நான் அதைப் பார்த்தது இல்ல” இவள் காதலோடு தன்னவனிடம் உள்ள அடையாளத்தைச் சொல்ல, அதே காதலோடு இவை அனைத்தையும் மறைவாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தான் மதிவேந்தன்.

அதே நேரம் வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து கம்பீரமாக இறங்கினார் கந்தமாறன். “ஹய்! உங்க அப்பா வந்துட்டாக போல. உங்களை பார்த்தா ரொம்ப சந்தோசப் படுவாக… வாங்க வாங்க” சாமந்தி சொல்லியபடி முன்னே செல்ல

சற்று தயங்கியவள் பிறகு அவளின் பின்னே, “அப்பா” என்ற மெல்லிய அழைப்புடன் சென்றாள் தென்றல். “என்ன தாயி, அப்பா வண்டிச் சத்தம் கேட்ட ஒடனே என்னையத் தேடி வாசலுக்கே வந்துட்ட... அப்பாருக்கு அப்படி என்ன வச்சிருக்கவ?” என்று சாமந்தியிடம் கேட்ட படி கந்தமாறன் உள்ளே வந்தவர்

அங்கு மகளைக் கண்டும் காணாத மாதிரி தன் கை வேலையில் இறங்க, ஒரு நிமிடம் அங்கு கனத்த மவுனம் நிலவியது.

யாருக்கு யாரை அறிமுகம் படுத்துவது? அப்பாவுக்கும் மகளுக்குமா? எப்போ ஆத்தா வந்தனு தந்தை மகளிடம் கேட்டிருக்க வேண்டும். எப்படி ப்பா இருக்கீங்கனு மகள் அவரை விசாரித்திருக்க வேண்டும். இப்படி எதுவுமே இல்லாமல் இருவரும் மவுனமாய் இருக்கவும், மற்றவர்களும் அங்கு மவுனம் காத்தனர்.

“ஆத்தா, செம்ம பசில வந்திருக்கேன். அப்பாவுக்கு சோறு எடுத்து வை தாயி” என்று கந்தமாறன் சாமந்தியிடம் கூறியபடி உணவுக் கூடத்துக்கு விரைய

தந்தையே தன்னை ஒதுக்கவும், இதற்கு மேல் அங்கிருக்கப் பிடிக்காமல், “அப்போ நான் கிளம்பறேன்...” என்று எல்லோரிடமும் பொதுப்படையாகச் சொன்ன தென்றல் வாசல் பக்கம் விரைய

இவ்வளவு நேரம் மனைவி தன்னைப் பற்றிப் பேசிய பேச்சில் ஆனந்தத்துடன் இருந்தவன் அது ஒரு நொடியில் மறைய, ஆத்திரத்துடன் போனா போடி என்ற என்ற மனநிலையுடன் மதிவேந்தன் தன் அறைப் பக்கம் செல்ல எத்தனிக்க, “வேந்தா, இருட்டிருச்சு… இனி அவ தனியா போக வேண்டாம். நீ கூப்பிட்டு போய் விட்டுட்டு வா” தாமரை மகனுக்குக் கட்டளையிட, தாய் சொல்லைத் தட்டாதவனாக இவனோ விடுவிடு என்று வெளி வாசல் நோக்கி செல்ல

தன்னை இருக்கச் சொல்லாமல், ‘போவதாக இருந்தால் போ’ என்ற படி நடந்து கொள்ளும் உறவுகள் மத்தியில் இருக்க முடியாமல் கண்கள் கலங்க, தான் வந்திருந்த மனநிலைக்கு எதிர்மறையான மனநிலையுடன் அங்கிருந்து கிளம்பிச் சென்றாள் தென்றல்.

காரில் கனத்த மவுனமே நிலவியது. இவளையும் மீறி இவளுக்குக் கண்ணில் நீர் தட்டவும் அதை கணவனுக்குக் காட்டாமல் மறைத்தபடி இவள் வர...

அதைக் கண்டு ஒரு நிலைக்கு மேல் கோபம் கொண்டவன் வண்டியை ஒதுக்குப் புறமாக நிறுத்தி விட்டு, “மெத்தப் படிச்ச கலெக்டர் அம்மா, இப்போ எதுக்கு கோழை கணக்கா அழுவுதீய? ஒங்களுக்குதேன் யார் ஒறவும் வேணாமே... அன்பு பாசத்தைக் குடுக்கவும் மாட்டீய... மத்தவங்க கிட்டருந்தும் அத எதிர்பாக்க மாட்டீய. நேரா வானத்திலிருந்து தேன நீங்க குதிச்சு பூமிக்கு வந்துருக்கீய! அப்படிப்பட்ட அதிசய பெறவி நீங்க அழலாமா?” இவன் குத்தல் பேச்சில் முடிக்க

இவளிடம் இன்னும் அழுகை பெருகியது. “பொட்டப் பிள்ளைங்களுக்கு எல்லாம் அப்பான்னா உசுருன்னு சொல்லிக் கேட்டுருக்கேன். ஆனா ஒனக்கு என் மாமனைப் புடிக்கல இல்ல? இம்புட்டு நாள் தூரயிருந்து ஒன் பிடிவாதத்த காட்டுன. இன்னைக்கி அவரைப் பார்த்தும் ஓடிப் போய் அவுக தோள் சாய்ஞ்சிக்காம அதே பிடிவாத்தோட நிக்குத. எல்லாம் ஒனக்குப் புடிக்காத இந்த கிராமத்தானை கட்டி வச்சாருன்னு தேன?” தன் மாமனிடம் பேசவில்லையே என்ற கோபத்தில் இவன் மனைவியை வார்த்தையால் விலாச

“மாமா, அது காரணம் இல்லை மாமா”

“கூப்பிடாத… என்னைய மாமானு கூப்பிடாத. என் மாமன்ட்ட பேசாத இந்த வாய் என்னையும் அப்டி கூப்ட கூடாது”

“இது தான்… இது தான் மாமா பிரச்சனையே. அப்பா உனக்காக என்னை ஒதுக்கிறார். நீ அப்பாவுக்காக என்னை ஒதுக்கிற. அப்போ உங்க இரண்டு பேருக்கும் நான் யார் மாமா? முன்னாடி நான் உன் காதலி… இப்போ உன் மனைவி. அதை யோசிக்க மாட்டியா? அவரும் நான் அவர் பெத்த மகள் என்றதையே மறந்து இனி நான் செத்தாலும் என் முகத்தில் முழிக்காதேனு சொல்லி என்னைத் துரத்துறார். என்ன நடந்தாலும் என் அப்பா எனக்கு தானே பேசணும்?” இவள் தன் ஆதங்கத்தைக் கொட்ட

“நெருப்புன்னு சொன்னா நாக்கு பொசிங்கிருமா? இல்ல… சக்கரைனு சொன்னாதேன் தித்திக்குமா? ஒறவுகளுக்குள்ள வார்த்தைங்கலாம் தண்ணியில கலந்த உப்பு போல தேன். கோழி மிதிச்சு குஞ்சு மொடமாகிடுமா என்ன? இப்டி எல்லாம் அவுக பேசினதால ஒன் மேல அவருக்கு பாசம் இல்லனு நெனைச்சிட்டியா? ஊசியோட கண்ணுல ஆகாசத்தப் பாத்த மாதிரிதேன் ஒன் வறட்டுப் புடிவாதத்துலயே நிக்க. பொஞ்சாதி எறந்த கையோட இன்னோர் கல்யாணம் கட்டிக்குற ஆம்பளைங்களுக்கு மத்தியில், ஒனக்காக அதச் செய்யாம இருந்தாரே அது ஒனக்கு பாசமா தெரியலையா?

ஒன் மேல அம்புட்டு பாசம் வச்சிருந்தும் தன் மகளுக்கு அம்மையோட அன்பும் அரவணைப்பும் முழுசா கெடைக்கணும்னு மனச கல்லாக்கிட்டு, ஒன்ன மலர் அத்த கிட்ட குடுத்துட்டு துக்கத்தோட பிரிஞ்சு இல்லையா அவர்? அப்போ எல்லாம், ராவுல முழுக்க என் மவ சாப்ட அடம் பண்ணுச்சா... தூங்குச்சா... அம்மையத் தேடி அழுதிருக்கும் இல்ல மாப்ளன்னு... தூங்காம மாமா எத்தனை தடவை என்ட்ட சொல்லி கஷ்ட்டப்பட்டு இருப்பார் தெரியுமா?

காற்றை அனுபவிச்சிக்கிடலாம்… தேடி கண்டுபிடிக்கக் கூடாது. மீறி தேடுனா கொழப்பம்தேன் மிஞ்சும். அது போலத் தேன் ஒறவுகள்ட்ட இருந்து கெடைக்கிற அன்பு பாசமும். அது நெசந்தானானு ஆராய்ச்சி செய்யக் கூடாது. மீறுனா நல்ல ஒறவுகள தொலைக்கிறது மட்டுமில்லாம நிம்மதியையும் சேர்த்துத் தேன் தொலைக்கணும்” என்று மனைவிக்கு எடுத்துச் சொன்னவன் பின் வண்டியை எடுத்தான் வேந்தன்.

தென்றல் மறுத்து எதுவும் சொல்லவில்லை. வேந்தன் சொன்னது எல்லாம் உண்மை தானே? இவள் தன் தந்தையின் அன்பை பொய்யோ என்று யோசித்ததால் தானே அவர் சொன்ன வார்த்தையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் இன்று வரை அவருடன் பேசாமல் இருக்கிறாள்.

ஒருவர் அன்பு மிகுதியால் கோபத்தில் நம்மை நோக்கி வீசும் வார்த்தைகளை அதே அன்பு மிகுதியால் புரிந்து அனுசரித்துக் கொள்வோம். அதே அந்த அன்பை சந்தேகிப்பவர் அந்த வார்த்தைகளின் வீரியத்தைத் தாங்க முடியாமல் போவார். அதில் தன் மனைவி இரண்டாவது என்பதால் அவர் பேச வில்லை என்றாலும் இவள் அல்லவா பேசி இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தன் மனைவி என்பதால் அனைத்தையும் எடுத்துச் சொன்னான் மதிவேந்தன்.

அவள் வீட்டு வாசலில் கார் நிற்க, “சாரி மாமா!” அதை உணர்ந்தே சொன்னவள் காரை விட்டு இறங்க, “வீட்டுக்கு வந்த என் மவளுக்கு சோறு கூட போடாம பசியோட அனுப்பிட்டீங்ங்களானு நான் போனதும் ஒன் அப்பா என்ட்ட சண்டைக்கு வருவாக. அதனால் சாப்டுட்டு ஒழுங்கா அவருக்குப் போன் போட்டுப் பேசு” இவன் மறைமுகமாய் மாமனிடம் மனைவியைப் பேசச் சொல்ல

அவளோ தன்னவனிடம் வம்பு வளர்க்கும் எண்ணத்தில், “என் அப்பாரு கிட்ட எப்போ பேசணும் எதுக்கு பேசணும்னு எனக்குத் தெரியும். நீ ஒன்னும் சொல்ல வேணாம் மாமா” என்றபடி இவள் முகத்தைத் திருப்ப

“திமிருடி...” என்று இவன் வாய் விட்டே முணுமுணுக்க

“ஆமா, உன் பொஞ்சாதி இல்ல? அதான் எனக்கு திமிர் ஜாஸ்தி. பொஞ்சாதி சாப்பிடாம வந்தாளேன்னு உனக்கு கொஞ்சமாவது கவலை இருக்கா இல்லை சாப்பிடத் தான் சொன்னியா?”

இவனோ, “யாரோ ஒரு கலெக்டர் அம்மாவுக்காண்டி நான் ஏன் வெசனப் படணும்? என் பொஞ்சாதியா இருந்தா சாப்டுடினு சொல்லிட்டுருக்க மாட்டேன்... ஊட்டி விட்டுருப்பேன்” என்றவன் காரை பட்டென்று வேகம் எடுத்துக் கிளம்பிவிட

உண்மை தானே… கணவன் எத்தனை முறை ஊட்டி விட்டிருப்பான்?அதை நினைக்கும் போதே கண்ணில் நீர் கோர்த்தது இவளுக்கு. இப்போதெல்லாம் கணவனின் அன்பு பாசம் காதலுக்காக தென்றலின் மனது அதிகமாக ஏங்கியது. கணவனின் கார் தன் கண்ணிலிருந்து மறையும் வரை பார்த்துக் கொண்டிருந்தவள் பின் தன்னை மீறி கண்ணில் நீர் வழிய, “ஐ லவ் யூ மதிமாமா!” என்று முணுமுணுத்தாள் பூந்தென்றல்.

Last edited:
Author: yuvanika Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 35 Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.