ஆதித்யா சக்கரவர்த்தி-3

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்-3
காலையிலேயே ஜாக்கிங் சென்று வந்த மகேஷ் ...வியர்வை வழிய வழிய நியூஸ் பேப்பரை திறந்து படிக்க ஆரம்பித்தான்.



அவனுக்கு சூடாக காபி கொண்டுவந்த சுவாதியும் ...அவனுடன் அமர்ந்து லேசாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தாள்.



"மகி என்னோட லேடிஸ் கிளப் ஃபிரண்ட்ஸ் மோனிகா அண்ட் தாரிகாவ நேத்து நான் ஷாப்பிங் போகும்போது மீட் பண்ணினேன்... பேசிட்டே ஒரு காபி ஷாப் க்கு போனோம்..."என்றவளை அதுக்கு இப்போ என்ன என்பதுபோல் ஒரு பார்வை பார்த்து வைத்தான் மகேஷ்.



அவனது பார்வையை கண்டு கொள்ளாமல்....,



"நா லேடிஸ் கிளப் க்கு வந்து ரொம்ப நாள் ஆகுதே னு விசாரிச்சாங்க...



நானும் என்னோட மாமனார் மாமியார் ரெண்டு பேரும் தவறிடாங்கன்னு சொன்னேன்... அவங்க ரொம்ப வருத்தப் பட்டாங்க ...அப்புறம் நம்ம மலர் வந்ததை கூட சொன்னேனா... எல்லாரும் ஒரு மாதிரி சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க" என்றால் சுவாதி சோகமாக...



கணவன் அவர்கள் அப்படி என்ன சொன்னார்கள்?? என்று கேட்பான் என்று எதிர்பார்த்த சுவாதி ஏமாற்றம் அடைந்தாள்.



அவன் காபியை பருகிக்கொண்டே பேப்பரில் தான் கவனம் வைத்திருந்தான்.



"மகி நான் சொல்றது கேக்குறீங்களா? இல்லையா?"



என்று சுவாதி கோபத்தை மறைத்து கொஞ்சலாகவே கேட்டாள்..



பேப்பரை மூடிவைத்துவிட்டு சொல்லு என்றான் மகேஷ்.



அது என்று தயங்கியவள் "புதுசா யாரையும் குடும்பத்துக்குள்ள விட வேண்டாம் ...நம்ம பிரைவசி போய்டும்... அப்படின்னு மோனி சொன்னா..."



"அதுக்கு நீ என்ன சொன்ன ?"என்று மகேஷ் ஒரு மாதிரியான குரலில் கேட்க...



"நா அப்படினா இல்ல... மலர் ரொம்ப அமைதியான பொண்ணு...வானதி மாதிரி அவளும் எனக்கு ஒரு பொண்ணு தான்னு சொன்னேன்..."



அதைக்கேட்ட மகேஷின் முகம் லேசாக தெளிந்தது.



லேசான புன்னகையுடன் "அப்புறம்?" என்றான்.



"அப்புறம் இந்த தாரிகா இருக்காளே... அவ சொல்றா நாத்தனாரை வீட்டிலேயே வச்சிருந்தா...புருஷனுக்கு பொண்டாட்டி மேல பாசம் முக்கியத்துவம் எல்லாம் குறைஞ்சிடுமாம்...எனக்கு அதைக்கேட்டதும் ஒரு மாதிரி ஆகிட்டு ... ஆனாலும் நானும் விடாம சொன்னேன் என் ஹஸ்பண்ட் நான் சொன்னா எதுனாலும் செய்வார்... அவருக்கு என் மேல தான் பாசம் அதிகம்னு சொன்னேன்... அதுக்கு அவ என்ன பாத்து நக்கலா சிரிச்சா தெரியுமா???"



என்று மீண்டும் முகத்தை சோகமாக வைத்துக் கொண்டால் சுவாதி.



மகேஷ் கண்களின் கூர்மை கூடியது... அப்புறம்...என்றான் குரலில் எதையும் காட்டாமல்...



"நான் சொன்னா ...என்னோட ஹஸ்பண்ட் அவரோட தங்கச்சிய லேடீஸ் ஹாஸ்டல்ல கூட சேர்த்து விடுவார்ன்னு சொல்லி இருக்கேன் மகி...அதனால மலர ஒரு நல்ல லேடிஸ் ஹாஸ்டல்ல சேர்த்து விடுவோம் மகி... நாமளும் அடிக்கடி போய் பார்த்துக்கலாம்" என்றால் சுவாதி பதவிசான குரலில்...



"இங்க பாரு ஸ்வாதி ....இந்த உலகத்திலேயே எனக்கு இருக்கிற ஒரே ரத்த சொந்தம் என் தங்கச்சி தான்... அதே மாதிரி தான் அவளுக்கும் நான்தான் ஒரே ரத்த சொந்தம்... உன் மேல எனக்கு அளவுகடந்த காதல், நேசம்,பாசம் எல்லாமே இருக்கு... அத நா இப்படி தான் ப்ரூவ் பண்ணனும்னு எனக்கு எந்த அவசியமும் இல்ல"



என்றான் மகேஷ் தெளிவான குரலில்...



சுவாதியின் முகம் அவனது பதிலில் கருத்து விட்டது.



"மகி நமக்குன்னு ஒரு ஃபேமிலி இருக்கு... நிறைய ரெஸ்பான்சிபிலிட்டிஸ் இருக்கு ...அதுல புதுசா ஒருத்தியை கொண்டு வந்தா குழப்பம் வரும்னு தான்... அப்படி சொன்னேன்"



என்றாள் சுவாதி மெதுவாக...



அதைக் கேட்ட மகேஷின் முகம் மாறியது.



"இப்பதான் புரியுது ...நேத்து மலர் எதுக்கு இங்கே இருக்க மாட்டேன் வீட்டுக்கு போகப்போறேன்னு சொன்னான்னு... சுவாதி உனக்கு என்ன ஆச்சு? அவ கிட்ட நீ என்ன சொன்ன? பாவம் சுவாதி அவ ஏற்கனவே நொந்து போய் இருக்கா... அவகிட்ட போய் மனசு கஷ்டப்படுற மாதிரி எதையும் சொல்லிட்டு இருக்காத ..."



என்றான் மகேஷ் வெறுப்பான குரலில்...



கணவனின் வெறுப்பான குரலில் வெகுண்ட சுவாதி,



"நான் உங்க பாசமலர் தங்கச்சிய ஒண்ணுமே சொல்லலையே... உங்க கிட்ட வந்த முதல் நாளே என்ன பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லி பத்த வச்சுட்டாளா ..."



என்று ஆவேசத்துடன் கேட்டாள்.



"மலர் என்கிட்ட எதையும் சொல்லல சுவாதி வீட்டுக்கு போறேன்னு மட்டும்தான் சொன்னா...."



"இத நான் நம்பனுமா... நம்ம ரெண்டு பேருக்கும் சண்டை மூட்ட ஆரம்பிச்சிட்டா... மகி நம்ம லவ் பண்ண அப்பவும் சரி... கல்யாணம் ஆன அப்புறமும் சரி... நீங்க என்கிட்ட கோபமா வெறுப்பா பேசினது இல்ல...ஆனா எப்ப அவ நம்ம வாழ்க்கைக்குள்ள வந்தாலோ... அப்ப இருந்து இப்படி தான் பேசுறீங்க" என்று அழுதுகொண்டே பேசியவளை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் திகைத்தான் மகேஷ்.



நீர் வழிந்த தன் கண்களை துடைத்துக்கொண்டே... "இன்னைக்கு அவகிட்ட நான் இதைப் பத்தி பேசியே ஆகணும்..."



என்று விறுவிறுவென்று மாடி ஏறினாள் சுவாதி.



அவள் பின்னாலேயே சென்ற மகேஷ், "நில்லு சுவாதி... இது நமக்குள்ள பேசி முடிக்க வேண்டிய விஷயம்... இதுல நீ மலர இழுக்காத... அவ உன்ன பத்தி ஒரு வார்த்தை கூட தப்பா சொல்லவே இல்ல"



என்று கெஞ்சிக் கொண்டே சென்றது அவளது காதில் விழவே இல்லை.



சுவாதி மலரின் அறைக்கதவை உடைப்பது போல் தட்டினாள்...



பதற்றத்துடன் மலர் கதவை திறக்கவும் ஓவென்று அழ ஆரம்பித்து விட்டாள் சுவாதி.



ஒன்றும் புரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு இருந்த தங்கையை பார்க்க பாவமாக இருந்தது மகேஷுக்கு...



"அண்ணி அழாதீங்க..." என்றவளை பார்த்து கையெடுத்து கும்பிட்ட சுவாதி, "தயவுசெஞ்சு என்னோட குடும்பத்துல குழப்பத்தை உண்டு பண்ணாத.... நான் எதாவது உன்ன தப்பா சொல்லி இருந்தா மன்னிச்சிடு...அதுக்காக என் புருஷன் கிட்ட இருந்து என்ன பிரிச்சுடாத... உன்கிட்ட மடிப்பிச்சை கேக்குறேன்" என்றாள் சுவாதி.



அண்ணி கையெடுத்து கும்பிட்டு பேசியதில் பதறிய மலர்... "அண்ணி நான் அண்ணன்கிட்ட எதுவுமே சொல்லவே இல்லையே..."



அழுதுகொண்டே கூறினாள்.



மலர் தன்னால் கண்ணீர் வடிப்பதை பார்த்த மகேஷ் மனம் வருந்தி...



"ஆமா சுவாதி... மலர் என்கிட்ட ஒண்ணுமே சொல்லவே இல்ல... ஏதோ தப்பா கற்பனை பண்ணி ...ப்ச்ச் தேவையில்லாம உன்ன ஏதேதோ பேசிட்டேன்.



ப்ச்ச்...சாரிமா நீ உன்னோட பிரெண்ட்ஸ் சொன்னதை தானே சொன்ன ...சாரிமா என் மேல தான் தப்பு... நான் உனக்கு புரிய வச்சு இருக்கணும்" என்றான் மகேஷ் சமாதானமாக..



அதைக் கேட்டும் சமாதனம் ஆகாமல் அழுது கொண்டிருந்த மனைவியை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் கைத்தாங்கலாக தங்களது அறைக்கு அழைத்து சென்றான் மகேஷ்.



அவர்கள் சென்றதும் கதவை அடைத்த



மலர் மனதிலோ ...



தனது அண்ணனுக்கு தான் பாரமாக இருப்பது போல் உணர்வு வந்து மனதை பாரமாக்கியது.



"ஆதித்யா சார்.... நீங்க சொன்ன மாதிரியே அந்த சுதாகரன் ஓட பேங்க் அக்கௌன்ட் கிரெடிட் கார்டு எல்லாத்தையும் கேன்சல் பண்ணி ஆச்சு... அப்புறம் அவனோட குடும்பத்தில் உள்ளவங்க எங்க போனாலும் நம்ம ஆளுங்க அவங்களுக்கு தெரிஞ்சே ஃபாலோ பண்றாங்க... அவங்க வீட்ல யாரும் நிம்மதியா இருக்க முடியாது சார்" என்றான் கருணா



"அது மட்டும் போதாதே ..."என்ற ஆதித்யா....



சுதாகரன் வேலைப்பார்க்கும் அலுவலகத்திலும் குழப்படி செய்ய திட்டம் தீட்டினான்.



"சார் நீங்க சொன்ன மாதிரியே செஞ்சிடலாம்... அதுக்கு அந்த ஆபீஸ்ல இருக்கிற ஒருத்தனோட உதவி நமக்குத் தேவை..." என்றான் கருணா.



"இங்க பாரு கருணா... அந்த ஆபீஸ்லேயும் நம்ம தூக்கி போடுற பணத்துக்கு வாலாட்ற நாய் ஒருத்தன் இருக்கத்தான் செய்வான்...அவனை பிடிங்க ... உனக்கு தேவைப்படுற பணத்தை மணி கிட்ட வாங்கிக்கோ..." என்றான் ஆதித்யா அலட்சியமான தோரணையில்



"சரி சார்" என்று அவன் வெளியேறியபின்... தனது வேலைகளில் மூழ்கினான் ஆதித்யா.



வெளியே வந்த கருணாவின் மனதிலோ... "எப்பா ஆதித்யா சார் ஒருத்தன தீத்து கட்டணும்னு முடிவு பண்ணிட்டாருனா.. அவன் எப்பேர்ப்பட்ட பிஸ்தாவா இருந்தாலும் இவர் கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது... அந்த சுதாகரன் எல்லாம் எம்மாத்திரம்" என்று நினைத்துக்கொண்டான்.



சுதாகரன் வேலை செய்யும் அலுவலகத்தின் ரகசியங்களை எதிரி கம்பெனிக்கு சுதாகரன் விற்றதாக போலி குற்றச்சாட்டில் மாட்டி விட்டு அவனை உள்ளே தள்ளுவது தான் ஆதித்யாவின் அடுத்த திட்டம்... அதையும் தங்குதடையின்றி நிறைவேற்றிவிட்டு தான் அடுத்த வேலையைப் பார்ப்பான் அவன்....😣😷



மதிய உணவை சாப்பிடாமல் தவிர்த்துவிட்டு மலர் அறையிலேயே இருந்து விட்டாள்.



அண்ணன் மகேஸ்வரனும் வேலைக்கு சென்று விட்டான். அண்ணியும் வானதியும் சௌமியாவை பார்க்க சென்றிருந்தனர்.



காலையில் நடந்த சம்பவத்திற்கு பின், அவளுக்கு அந்த வீட்டில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் யுகமாகவே கழிந்தது. எங்கு செல்லவும் வழியில்லை... கண்டிப்பாக தன் அண்ணன் வீட்டிற்கும் விடவே மாட்டான் என்ன செய்வது என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தவளுக்கு....



நந்தனின் ஞாபகம் அப்பொழுதுதான் வந்தது.



ச்சே.... எப்படி மறந்து போனாள். நந்தனை பாதி கணவனாக ஏற்றுக்கொண்டு நிச்சயதார்த்தம் வரை முடிந்து விட்டது.



ஆனால் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் அவனைக் கூட மறந்துவிட்டாளே... அந்த அளவிற்கு கெட்டவளா அவள்...



இப்பொழுது இருக்கும் ஒரே வழி ...அவன் சீக்கிரமாக திரும்பி வந்து அவளைத் திருமணம் செய்து அழைத்து செல்ல வேண்டும். அப்பொழுதுதான் இந்த வீட்டில் இருந்த அவளுக்கு விடுதலை கிடைக்கும்.



அதுவரை அவளுக்கு இங்கிருந்து விடுதலை இல்லை.



"கடவுளே சீக்கிரம் நந்தன் ஊருக்கு வரணும்..." என்று வேண்டிக் கொண்டாள் மலர்விழி...



கடவுள் மேல் இருந்து ததாஸ்து சொன்னது அவள் காதில் விழுந்ததோ???



அந்தப் பரந்து விரிந்த தோட்டத்தில் அமைந்திருந்த சிறிய கல் மேடையில் சுவாதி சௌமியா இருவரும் அமர்ந்திருந்தனர் .



அவர்களின் பக்கவாட்டில் வானதி பூக்களைப் பறித்து விளையாடிக்கொண்டிருந்தாள்.



"அக்கா... தயவு செஞ்சு நீயும் என்னோட ஃபீலிங்ஸ் புரியாம ஏதேதோ பேசி என்ன கஷ்டப் படுத்தாத" என்று சௌமியா சொல்ல...



"ப்ச்ச்.. சௌமியா நீ ஏன் இப்படி இருக்க? அவன் இல்லனா உனக்கு வேற யாரும் கிடைக்க மாட்டானா??"என்று கேட்ட தன் அக்காவை ஏளனமாக பார்த்தாள் சௌமியா.



"மகேஷ் அத்தான் இல்லனா நீ என்ன பண்ணி இருப்ப???" என்று கேட்டாள் சௌமியா பதிலுக்கு...



தங்கையே தீ பார்வை பார்த்த சுவாதி...



"அவர எதுக்கு தேவையில்லாம இதுல இழுக்க....? அவரைவிட்டு நான் பிரிய முடியாதுன்னா அதுக்கு காரணம்... நாங்க ரெண்டு பேரும் லவ் பண்றோம்... ஆனா நீதான் சுதாகரன லவ் பண்ணலைன்னு சொல்றியே.... அப்புறம் என்ன வந்துச்சுனு ஏதோ வாழ்க்கையே போன மாதிரி நீ ஓவர் ஆக்ட் பண்ற சௌமி... கஷ்டமான இருக்கும்னு புரியுது அதுக்காக இப்படியே இருக்கப் போறியா???" என்று கேட்டாள்.



எதுவும் பேசாமல் சௌமியா மௌனமாக இருந்தாள்.



தான் இவ்வளவு சொல்லியும் அமைதியாக இருந்த தங்கையை பார்த்தவள்..



"இப்போ நீ என்னதான் பண்ணப் போற சௌமி ...அதையாவது சொல்லித் தொல... அண்ணன் மேல கோவமா இருக்க ...ஒழுங்கா சாப்பிடுறது இல்ல... எப்ப பாரு ஊழு ஊழு னு என அழுதிட்டே இருக்க... இப்படியே காலத்த ஓட்ட போறியா... வாயில கொழுக்கட்டையா வச்சிருக்க என்னதான் பண்ண போற?? சொல்லித் தொல..." என்றாள் சுவாதி கடுப்பாக...



"நான் இனி யார் என்ன சொன்னாலும் மேரேஜ் பண்ண கூடாதுன்னு முடிவு பண்ணிட்டேன் அக்கா ...இதுக்கு மேல என்னால அவமானப்பட முடியாது" என்று அமைதியாக பெரிய குண்டைத் தூக்கிப் போட்ட தங்கையை பார்த்து...



வாட்ட்ட்....!!! என்று அலறினாள் சுவாதி.



இரவு சாப்பாட்டின் போது அண்ணன் அண்ணி இருவரும் பேசிக் கொள்ளாமல் இருப்பதை கவனித்தாள் மலர்.



வானதி குட்டி மட்டும் இருவரிடமும் பேசிக் கொண்டாள்.



ஆனால் அவர்கள் இருவரும் அவர்களுக்குள் பேசிக் கொள்ளவே இல்லை.



அவர்களை நன்றாக கவனித்த மலருக்கு...



அண்ணியின் முகத்தில் கோபமும் அண்ணனின் முகத்தில் கவலையும் தெரிந்தது.



தான் இப்பொழுது என்ன சொன்னாலும் தவறாக முடிந்து விடுமோ!!! என அஞ்சி மலர் எதையும் பேசவில்லை.



ஆனால் மறுநாள் காலையில் மகேஷ் வேலைக்கு சென்ற பின்...



அண்ணியிடம் தனியாக பேச அவள் முன் சென்று நின்றாள்.



ஆனால் சுவாதி மலரை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.



அண்ணியின் அலட்சியப் பார்வையை சகித்துக்கொண்டு...



" அண்ணி ஐ அம் ரியலி சாரி... தெரிஞ்சோ தெரியாமலோ... என்னால அண்ணனுக்கும் உங்களுக்கும் சண்டை வந்துட்டு...இனி என்னால உங்களுக்குள்ள எந்த சண்டையும் வராது அண்ணி... ஃப்ளீஸ் என் மேல கோபப்படாதீங்க..." என்றால் மலர்



அழு குரலில்....



"வேண்டாமா வேண்டாம்... உன்னோட சங்காத்தமே வேண்டாம்... நான் உன்கிட்ட ஏதாவது சொல்லி... அதை நீ உன் அண்ணன்கிட்ட சொல்லி... அப்புறம் அவர் அதை என்கிட்ட கேட்டு சண்டை பெருசாகி... நாங்க ரெண்டு பேரும் தனித்தனியாக பிரிஞ்சு போகணுமா...?" என்றாள் சுவாதி கடுப்பாக...



"அண்ணி ப்ளீஸ் அப்டிலாம் நான் பண்ணவே மாட்டேன்.... "என்ற மலரை நம்பாத பார்வை பார்த்தால் சுவாதி.



"உன்ன எப்படி நம்புறது மலர்.... வந்த ஒரே ஒரு நாள்ல என் புருஷனை முழுசா மாத்திட்ட ...அவர் என்கிட்டயே வெறுப்பா பேசுறார்... நீ வரதுக்கு முன்னாடி அவர் எவ்வளவு பாசமா இருப்பார் னு தெரியுமா???" என்ற அண்ணியிடம்...



"இப்பவும் அண்ணாக்கு அதே அளவு பாசம் உங்க மேல இருக்கு அண்ணி... நீங்க பேசலனு அண்ணன் முகம் எப்படி வாடி இருக்குன்னு பாத்தீங்களா? ஃப்ளீஸ்... அண்ணி... நான் தப்பு பண்ணினா... திட்டுங்க அடிங்க... ஆனா இப்படி கோபமா இருக்காதீங்க அண்ணி" என்று ஏங்கி ஏங்கி அழுதாள் மலர்.



சுவாதிக்கே அவள் மேல் லேசாக பரிதாபம் வந்தது.



"சரி... அழாத மலர்...இனி இப்படி பண்ண மாட்ட ல்ல கண்டிப்பா..." என்று சந்தேகமாக கேட்ட அண்ணியிடம்...



"இனி உங்களுக்கு தெரியாம... எதையுமே அண்ணன்கிட்ட சொல்ல மாட்டேன்" என்றாள் மலர் உறுதியாக...



"சரி விடு" என்று சுவாதி லேசாக சிரிக்க... அவளை பாசத்துடன் அணைத்து கொண்டாள் மலர்.



மலர் அணைத்ததும் சுவாதியின் முகம் ஒரு நிமிடம் சுருங்கி பின் சாதாரணமாக மாறியது.



மாலையில் வீடு திரும்பிய அண்ணனிடம் அண்ணி சகஜமாகப் பேசுவதை பார்த்த மலர் அதன் பிறகுதான் நிம்மதி அடைந்தாள்.



ஆனால் அந்த நிம்மதி சில மணி நேரங்களிலேயே அவர்கள் வீட்டிற்கு வந்த ஆதித்யாவினால் கானலாகி போனது......



தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN