மண்ணில் தோன்றிய வைரம் 4

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சாரு ஒவ்வொரு நாளும் வகுப்புக்கள் முடிந்த பின் அந்த மரத்தடி பெஞ்சில் அமர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாக்கிக் கொண்டாள். காரணம் அஸ்வின் மாலையில் தன் குடும்பத்தாருடன் அந்த இடத்தில் அமர்ந்து தான் உரையாடுவான். அவனது உரையாடல்கள் ஏனோ சாருவின் ஏக்கங்களை போக்குவதாகவே அமையும். அதனால் இச்செயல் தொடர்ந்தவாறே இருந்தது. அஸ்வினிற்கு இது குறித்து சந்தேகம் வராமல் இருப்பதற்கு அவள் பல பிரம்மப்ரயத்தனங்கள் செய்ய வேண்டியதாய் இருந்தது. எங்கே தான் செய்வது தெரிந்து அவ்விடம் வருவதை அவன் தவிர்த்துவிட்டால் இப்போது கிடைக்கும் சொற்ப இன்பமும் கிடைக்காமல் போய்விடுமோ என்று எண்ணி ஒவ்வொரு நாளும் விதவிதமான யுக்திகளை கையாண்டு அவ்விடத்தில் சரியான நேரத்தில் ஆஜராகி விடுவாள். இவ்வாறு அஸ்வினின் தொலைபேசி உரையாடல்களை கேட்க ஆவலாய் அவனை தொடரும் சாருவிற்கு தெரியாத விஷயம், தான் பின் தொடரும் நபர் தான் தேஜஸ்வின் என்பது. அவன் பேசுவதை மட்டும் கேட்கும் சாருவிற்கு எதிர்புறத்தில் அவனது குடும்பத்தார் அவனை அஸ்வின் என்று அழைப்பதை கேட்டிருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவன் யாரென்று தெரியாமலே சாருவின் மனதில் அவன் மேல் ஒருவித உரிமையுணர்வு வேரூன்ற ஆரம்பித்தது.

இவ்வாறு நாட்கள் சென்றுக்கொண்டிருக்க தான் பின்தொடரும் நபர் அஸ்வின் என்று சாரு அறியும் நாளும் வந்தது. அன்று சாருவின் வகுப்பில் பொருளியல் விரிவுரையாளர் பாடவிளக்கத்தை நடத்திக்கொண்டிருக்கையில் அஸ்வின் அவரது அனுமதி கேட்டு வகுப்பினுள் நுழைந்தான். அவனை அங்கு பார்த்த சாருவிற்கு ஏதோ இனம் புரியாத மகிழ்ச்சி.. ஆனால் மகிழ்ச்சிக்கான காரணம் மட்டும் தெரியவில்லை. தன்னுள் அதற்கு விடை காண முயன்றவளின் செவிகளில் அவன் கூறிச்சென்ற செய்தி விழவில்லை. அவன் சென்ற பின் ஒலித்த மணியோசையே அவளை நிகழ்காலத்திற்கு அழைத்து வந்தது. அப்பொழுது அஸ்வினை தேடிய விழிகளுக்கு அவன் பதிலாக கிடைக்காமல் சிறு ஏமாற்றம் கிடைத்தது.

"சாரு நீ தேஜஸ்வின் அண்ணாவை பார்க்க போகிறாயா??"என்ற நிஷாவிடம்

"நான் எதுக்குடி அவரை பார்க்க போகனும். அப்படியே பார்க்க போகனும்னாலும் ஆள் யாருனு தெரியாம எப்படி பார்க்கிறது?" என்ற சாருவை இவள் என்ன லூசா என்ற ரீதியில் ஒரு பார்வையை பார்த்து வைத்தாள் நிஷா.

" என்னடி லுக்கு இது?? எதுக்கு இப்படி கொடூரமா என்னை சைட் அடிக்கிறாய்??"

"ஓ மேடமிற்கு அப்படி ஒரு நினைப்பு வேற இருக்கா?? நீ கெட்ட கேட்டுக்கு இது ஒன்று தான் குறை. சரி உனக்கு தேஜஸ்வின் அண்ணா யாருனு தெரியாதா??"

"தெரியாதுனு தான் இவ்வளவு நேரம் சொல்லிட்டு இருக்கேன். அது உன் காதிலே விழவில்லையா?? அந்த ரௌடி பேபி யாருனு எனக்கு தெரியாதுடி" என்ற சாருவிடம்

"உனக்கு உட்கார்ந்துகொண்டே தூங்கும் வியாதி ஏதும் இருக்கா?"என்ற கேள்வியை எழுப்பிய நிஷாவிடம்

" இப்போ எதுக்கு சம்பந்தம் இல்லாம கேள்வி கேட்கிற?"

"சம்பந்தம் இல்லாம ஒன்றும் கேட்கல..இப்போ அவரு வந்து தன்னை அறிமுகப்படுத்திகிட்டு ஆகெஸ்ரா குரூப்பில் ஜாயின் பண்ண விரும்புவர்களை தன்னை வந்து சந்திக்குமாறு சொல்லிட்டு போனாரு... இவ்வளவு நடந்த பிறகும் அவரை தெரியவில்லைனு சொன்னா வேறு எப்படி கேட்குறதாம்?"

"ஓ அப்படியா??"என்று வாயால் நிஷாவிடம் கூறிவிட்டு மைன்ட் வாய்சில் " நம்ம ஆள் தான் ரௌடி பேபியா?? இது இவ்வளவு நாள் நமக்கு தெரியாம போய்விட்டது.." என்று மனதினுள் வழக்கடித்துக்கொண்டிருக்க அவளை உலுக்கிய நிஷா "என்னடி மறுபடியும் தூங்குறியா?" என்று கேட்க

"நான் என்னா உன்னை மாதிரினு நினைத்தாயா? ஆர்கெஸ்ரா ஜாயின் பண்ணலாமா வேணாமானு என்னோட ஏழாம் அறிவுகிட்ட கேட்டுட்டு இருந்தேன்" என்று நிஷாவை சமாளிக்க அவளோ

"எல்லாம் விவரமா தான்டி இருக்கீங்க"என்று விட்டு காண்டின் நோக்கி நகர்ந்தாள்.

தனக்கு கிடைத்த அந்த தனிமையில் தன் மனம் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினாள் சாரு. நான் ஏன் அஸ்வினை கண்டதும் தாய்முகம் பார்த்த குழந்தையை போல் மகிழ்ந்தேன்??.ஏன் மாலையில் அவன் தன் குடும்பத்தாருடன் உரையாடுவதை கேட்கவேண்டி மைதானத்திற்கு அவனறியாமல் செல்கின்றேன்???...
அன்பிற்கு ஏங்குவதால் அப்படி செய்கிறேன் என்று எடுத்துக்கொண்டாலும் அவனை பார்க்கும் போது ஏன் ஒரு இனம்புரியாத உணர்வு தோன்றுகிறது???
அவனை நிஷா அண்ணா என்று கூறும் ஒவ்வொரு முறையும் ஏன் எனக்கு அண்ணா என்று கூற நா எழவில்லை?? அவன் யாரென்று தெரியாத போதே அவனுக்கு செல்லப்பெயர் வைத்தது மட்டுமல்லாமல் இப்போது அதையே அவனது பெயராக மாற்றியதன் காரணம் என்ன???....

இவ்வாறு பல கேள்விகள் அணைப்புடைந்த வெள்ளமாய் பெருக்கெடுக்க அதற்கு பதில் தெரியாது மனம் ஊசலாட அதன் விளைவால் தலைவலி அவளை சிறையெடுத்தது. தற்காலிகமாக தன் மனம் கேட்ட கேள்விகளை கிடப்பில் போட்டுவிட்டு காபி குடிப்பதற்காக காண்டின் சென்றாள்.

அன்றும் வழக்கம் போல் மரத்தடி பெஞ்சில் புத்தகம் படிப்பதாக பந்தா பண்ணிக்கொண்டு அமர்ந்திருந்தாள் சாரு. அஸ்வினின் வருகையை மட்டும் எதிர்பார்த்திருந்த சாருவிற்கு அவனுடன் அவள் வகுப்புத்தோழி ரோஹினியும் வந்தது ஏதோ தனக்கு எதிரான சம்பவம் ஒன்று இடம்பெற இருப்பதை உணர்த்தியது. தான் அங்கிருந்தால் ரோஹினி கண்ணில் பட்டுவிட நேருமென்று எண்ணிய சாரு தன் அலைபேசியை ஏரோப்லேன் மோடில் வைத்துவிட்டு பின் வாய்ஸ் ரெகாடரை ஆன் செய்து தன் கையோடு கொண்டு வந்திருந்த புத்தகத்தினுள் வைத்து புத்தகத்தை அவள் வழமையாய் அமரும் பெஞ்சின் ஓரத்தில் வைத்துவிட்டு சற்று தொலைவில் இருந்த மரத்தின் பின் மறைவாக வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு தெரியாதவாறு நின்றுக்கொண்டாள்.

ரோஹினியுடன் வந்த அஸ்வின் ரோஹினியை அமரச்சொல்வதும் பின் அவள் ஏதோ சொல்லி பின் அழகான பளிச்சிடும் நீல நிற உறையால் ராப் செய்யப்பட்டு சிவப்பு நிற ரிப்பனால் முடிச்சிடப்பட்ட ஒரு பரிசுப்பொதியை அவனிடம் நீட்டுவதும் அவன் அதனை வாங்காமல் மறுப்பதும் பின் ஏதோ சொல்ல அவள் கண்கலங்கியவாறு செல்வதும் என்று ஒரு ஊமைப்படம் பார்த்துக்கொண்டிருந்தாள் சாரு. ரோஹினி சென்ற அடுத்த நிமிடமே அஸ்வினும் அவ்விடம் விட்டு நகர்ந்தான்.

அவன் சென்ற அடுத்த நிமிடம் அவ்விடம் நோக்கி விரைந்த சாரு புத்தகத்தில் ஒளித்து வைத்திருந்த வாய்ஸ் ரொக்கோடரை நிறுத்திவிட்டு அதனை சேவ் செய்தாள்.

பின் தனக்குள்ளே
"இந்த ரோஹினி நிச்சயமா ரௌடி பேபிக்கு பிரபோஸ் பண்ண தான் வந்திருப்பா. ஆனா நம்ம ஆளு பயங்கர டோஸ் குடுத்திருச்சு போல.. அதான் புள்ள அழுதுகிட்டே போகுது.. இதே மத்த பசங்களா இருந்திருந்தா இன்னேரம் ஓகே பண்ணி வா அவுட்டிங் போகலாம்னு கூட்டிட்டு போய் இருப்பாங்க.. ஆனா நம்ப ஆளு... சான்சே இல்லை.. என்னான்னாலும் நம்ம ஆளு கெத்து தான்..." என்று அஸ்வின் ரோஹினியின் ப்ரபோசலை மறுத்ததை எண்ணி மகிழ்ந்த சாருவிற்கு அந்த ஆடியோவில் தனக்கான அணுகுண்டு காத்திருக்கின்றது என்ற உண்மை தெரியவில்லை...

ஹாஸ்டலுக்கு சென்ற சாரு அன்றைய பாடங்களை படித்துவிட்டு இரவு உணவை முடித்துவிட்டு படுக்கையில் விழுந்தவள் தன் ரூம்மேட் நிஷா மற்றும் ஆதிரா உறங்கும் வரை காத்திருக்கலானாள். அவர்களும் உறங்கிய பின் தன் இயர் போனின் உதவியுடன் அஸ்வின் மற்றும் ரோஹினியின் உரையாடலை கேட்கத் தொடங்கினாள்.

"இப்போ சொல்லுங்க.. என்ன பேசனும்" இது அஸ்வின்.

" சொல்கின்றேன். அதுக்கு முதல்ல நீங்க என்னைப்பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்"

" நீங்க என்னோட ஜூனியர். அதை தவிர வேறு எதுவும் தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் எனக்கில்லை. சரி அதை விடுங்க என்னிடம் என்ன பேச வேண்டும் அதை சொல்லுங்க." அவனது குரலினை தொடர்ந்து ஏதோ சலசலக்கும் சத்தம் கேட்டது."இது என்னது??"

"ஏங்க இதை பார்த்தா என்னவென்று தெரியவில்லையா??"

"இல்லை தெரியவில்லை நீங்களோ சொல்லுங்க என்னனு??"

" சின்ன கிப்ட்.."

"எனக்கு எதுக்கு நீங்க கிப்ட குடுக்கனும்?? சும்மா கிப்ட் குடுக்க நான் என்ன மலையனூர் மகாராஜாவா??"

" நீங்க மகாராஜா தான். ஆனா மலையனூருக்கு இல்லை. இந்த ரோஹினியின் மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் மன்னவன்"
அதை கேட்டு பலமாக சிரித்த அஸ்வினின் குரல் தொடர்ந்து பேசியது.

"ஏம்மா ரோஹினி நேற்று ஏதும் கட்டபொம்மன் படம் பார்த்தியா?? இப்படி மகாராஜா மதகஜராஜானு வசனம் பேசுற? "

"நான் என்ன சொல்ல வர்ரேனு உங்களுக்கு புரியலையா??"

"அது நீ என்கூட தனியா பேசனும்னு சொன்னப்போவே புரிந்தது. தெரிந்தும் ஏன் உன்கூட பேசிக்கிட்டு இருக்கேனா என்னோட நிலமையை உனக்கு தெரியப்படுத்த வேண்டிய கடமை எனக்கு இருக்குமா.. இங்க பாரு ரோஹினி நீ எனக்கு தங்கை மாதிரி. நீ என்று இல்லை. இந்த காலேஜில் இருக்க எல்லோரையும் நான் என்னோட அக்கா தங்கையா தான் நினைக்கிறேன். நீ என்னை ஒரு சீனியர் என்ற முறையிலோ அல்லது அண்ணன் என்ற முறையிலோ என்னுடன் பேசுவதாய் இருந்தால் மட்டும் இனிமேல் என்னிடம் பேசு. வேறு ஏதாவது எண்ணத்தோடு என்னை நெருங்கனும்னு நினைத்தாயேயானால் அப்போது என்னுடைய கோபத்தை நீ சந்திக்க வேண்டி வரும். என்னடா பையன் சாப்டா இருக்கானேனு நினைச்சிராத..இப்படினா என்னோட ஆட்டிடியூட் வேற மாதிரி இருக்கும். சோ பார்த்து நடந்துக்கோ.. சொன்னது எல்லாம் புரிந்து இருக்கும்னு நினைக்கிறேன். இப்போ இடத்தை காலி பண்ணுங்க சிஸ்டர்."என்று அந்த ரெகோடிங் முடிவடைந்திருந்து.

அந்த ரெக்கோடிங்கை கேட்டு முடித்த சாருவிற்கு அஸ்வினை எந்த வகையில் சேர்ப்பது என்று தெரியவில்லை. ஆண்மையின் உச்ச பிரதிபலிப்பாய் திகழ்ந்த அஸ்வின்பால் பெண்கள் மையம் கொள்வதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் அவர்களை தெறித்து ஓடச்செய்யும் அவனது பேச்சு சாருவை கிலி கொள்ள வைத்தது. என்னதான் ஒருபுறம் மனம் கர்வப்பட்டுக்கொண்டாலும் மறுபுறும் உனக்கும் இதே நிலைமை தான் என்று மனம் குட்டுவது அவளை நிலை தடுமாறச்செய்தது. இதற்கு விடை காண முடியாமலே அவளது அந்த வருடம் முடிந்ததோடல்லாமல் அவள் தன் காதலை வெளிப்படுத்தாமல் இருக்க அஸ்வின் கல்லூரியின் இறுதியாண்டினை முடித்துவிட்டு மாஸ்டர்ஸ் செய்ய ஆஸ்ரேலியா பறந்துவிட்டான்.

சாரு தான் அஸ்வினை விரும்பிய கதையை கூறி முடித்த பின் சஞ்சய் பலமாக சிரிக்க ஆரம்பித்தான். அவன் சிரிப்பில் காண்டான சாரு

"சஞ்சு ஏன்டா சிரிக்கிற?? என்கதையை கேட்டா உனக்கு சிரிப்பா இருக்குல்ல?? நீ எல்லாம் ஒரு பிரண்டா டா?? துரோகி.." என்று சாரு சஞ்சயை வசைபாட

"சாரு சத்தியமா சொல்லுறேன். இதுவரைக்கும் என்னோட வாழ்க்கையில இப்படி ஒரு ஸ்டோரிய கேட்டதோ பார்த்ததோ இல்லை." என்று மறுபடியும் சிரிக்க..

"ஏன்டா சொல்ல மாட்ட உன்கிட்ட போய் சொன்னேன் பாரு எனக்கு இது தேவைதான்"

"பின் என்ன சாரு நீ கதை சொல்ல ஆரம்பிக்கும் போது என்னமோ நீ உருகி உருகி காதலிச்ச மாதிரியும் அவன் உன்னை வேணாம்னு சொல்லி அப்படி ஏதாவது சம்பவம் நடந்திருக்குமோனு நினைத்தேன். ஆனா இங்கே ஸ்டோரியே வேற மாதிரி இருக்கு. இதுல காமடி என்னனா அவனுக்கு நீன்னு ஒரு ஆள் இருப்பதே தெரியல. இந்த மேட்டரை என்னமோ அம்பிகாவதி அமராவதி அமரக்காவியம் ரேஞ்சுக்கு அனுபவிச்சி சொன்னா கேட்பவனுக்கு சிரிப்பு வருமா வராதா??"

"டேய் உனக்குமா என்னோட நிலைமை புரியலை. எங்க பிரபோஸ் பண்ணா சிஸ்டர்னு சொல்லிருவாரோங்கிற பயத்தில் நான் பிரபோஸ் பண்ணல. அதுக்கு இப்படியா வச்சி ஓட்டுவ??"

"ஓகே கூல்... அதுக்கு பிறகு நீ அஸ்வினை மீட் பண்ணவே இல்லையா..??"

"இல்லடா. நான் செகெண்ட் இயர் படிக்கும் போது அப்பா தவறிட்டாரு. அப்போ தான் நான் கம்பனியை டேக்கோவர் பண்ற நிலைமை வந்தது. அதுக்கு பிறகு தான் உனக்கே தெரியுமே.."

"ஆனாலும் சாரு நீ சும்மா இருந்திருக்க மாட்டியே.." என்று தன் தோழி பற்றி நன்கறிந்த சஞ்சய் வினவ

"ஹாஹா.. இருந்தாலும் நீ இவ்வளவு ப்ரில்லியண்டா இருக்க கூடாது சஞ்சு... அதுக்கு பிறகு சோசியல் மீடியாவில் எல்லாவற்றிலும் அவனை தேடினேன். அப்போ தான் அஸ்வினோட இன்ஸ்டா, பேஸ்புக், லிங்ட்இன் அக்கவுண்டை கண்டுபிடித்தேன். அதனுடைய தயவால் அவனை பற்றிய அனைத்து தகவல்களும் அப்டேட் ஆகிட்டே இருக்கு"

"அடிப்பாவி இவ்வளவு வேலை பார்த்திருக்கியா... அதுசரி ஏன் லிங்டின் அக்கவுண்டையும் அப்ரோச் பண்ண??"

"அதுவா அந்த அக்கவுண்டில் தான் ஒருத்தரோட உண்மையான தகவல்களை தெரிந்து கொள்ளலாம். மோஸ்ட்லி பிசினஸ் பீல்டில் இருப்பவர்கள் அந்த அக்கவுண்டை அப்டேட் பண்ணிட்டே இருப்பாங்க. எப்படியும் என் ஆளு அந்த விடயத்தில் எல்லாம் கரைக்டா இருக்கும்னு தெரியும். அதான் அந்த அக்கவுண்டையும் அப்ரோச் பண்ணேன். அதனுடைய உதவியால் தான் அஸ்வின் அவுஸ்ரேலியாவில் இருப்பது தெரியவந்தது.."

"பா.. சாரு நீ வேற லெவல்..சரி இப்போ அஸ்வின் கிட்ட எப்படி லவ் பிரபோஸ் பண்ண போற..??"

"அதான் தெரியலை டா. அவரு மாறி இருப்பாருனு நினைத்தேன். ஆனா இன்னமும் அப்படியே தான் இருக்காருடா.."

"ஏன் சாரு அப்படி சொல்லுற??"

"நம்ம ஸ்டாப் கீதாவுக்கும் அன்னைக்கு ரோஹினிக்கு கிடைத்த அதே டோஸ் கிடைத்தது."

"என்னா சாரு சொல்ற?? இது எப்போ நடந்தது??"

"லாஸ்ட் வீக் நான் காபி ஷாப் போயிருந்தேன். அப்போ தான் இது நடந்தது. ரோஹினிக்கு என்ன சொன்னாரோ அதை அப்படியே வார்த்தை மாறாம கீதாகிட்டயும் சொன்னாரு."

"அதை நீ ஒட்டு கேட்ட.. அப்படி தானே.."

"நான் கேட்கலடா.. அது காதுல விழுந்தது..."

"நல்லா சமாளிக்கிற சாரு. ஆனாலும் உன் ஆளுக்கு இவ்வளவு அலும்பு இருக்க கூடாதே."

"நான் என்னடா பண்ண இந்த ரௌடி பேபி பெண்ணை பார்த்தா மண்ணைப் பார்த்து நடக்கிற ரகமா இருக்கு. இதை எப்படி என்னை பார்க்க வைப்பதென்று தெரியவில்லை.."

"பெண்ணை மட்டும் இல்லை ... பெண் சிற்பத்தை கூட திரும்பி பார்க்க மாட்டாரு போல இருக்கே.. நீ இவருக்கு வைத்த பெயர் சரி தான்.ஶ" என்று சிரித்த சஞ்சயை முறைத்தாள் சாரு. "ஓகே கூல் சாரு. விட்டால் கண்ணாலே பஸ்பமாக்கிடுவ போல.. சரி சொல்லு இனி என்ன பண்ண போற" என்று கேட்ட சஞ்சுவிடம் "ஒரு பிளான் வைத்திருக்கேன். அதை தான் எக்சிகியூட் பண்ணலாம்னு இருக்கேன்" என்று தன் படு மாஸான பிளானை சஞ்சயிடம் விளக்கத்தொடங்கினாள் சாரு.
சாருவின் பிளானை கேட்ட சஞ்சய் "பிளான் எல்லாம் பக்காவா தான் இருக்கு. ஆனால் இதுக்கு உன்னோட ஆள் எப்படி ரெஸ்பான்ஸ் பண்ணுவாருனு தான் கெஸ் பண்ண முடியாம இருக்கு. ஏதாவது எக்குத்தப்பா நடந்துருச்சினா என்ன பண்ணுவ?"என்று சற்று கவலையுடன் கேட்ட சஞ்சயிடம் "அதுக்கு தான் நீ இருக்கியே.. நீ மேனேஜ் பண்ண மாட்டா??" என்ற சாருவை "அடிப்பாவி எனக்கு தர்ம அடி வாங்கிகுடுக்கனும்னு முடிவே பண்ணிட்டியா??"

"யெஸ் ஆப் கோஸ்"

"சிறப்பு மிகச்சிறப்பு" என்ற சஞ்சயை பார்த்து பலமாக சிரித்தாள் சாரு. "சாரு எனக்கு இந்த சிட்டுவேஷனுக்கு ஒரு பாட்டு பாடனும் போல இருக்கு என்றுவிட்டு

"சகலகலாவல்லி... எதையும் செய்வா சொல்லி ..."என்று ஒரே வரியை திரும்பத்திரும்ப பாடிய சஞ்சயின் பாட்டில் கடுப்பான சாரு."ஏய் லூசு அதான் அதுக்கு பிறகு தெரியலைல அப்போ எதுக்கு திரும்ப திரும்ப ஒரே வரியை பாடி இப்படி கழுத்தறுக்குற??"

"அதுக்கு பிறகு உள்ள வரியை பாடுனா நீ என் தலையையே அறுத்துபோட்டுருவ "என்று சஞ்சய் சொல்ல அந்த பாடலில் அப்படி என்ன இருக்கு என்று அறிய யூடூப்பில் அப்பாடலை கேட்டாள். பாடலை பாதியிலே நிறுத்திய சாரு மேசை மீதிருந்த பைலினால் சஞ்சையை அடிக்க ஆரம்பித்தாள். "ஏன்டா இது உனக்கு சிடிவேசன் சாங்கா...? எங்க இருந்துடா உனக்கு மட்டும் இப்படி பாட்டெல்லாம் கிடைக்குது."

" இப்படி கைவசம் நம்மகிட்ட பல விஷயம் இருக்கு சாரு."

"ஓ அப்படிங்களா சார். சரி இன்னைக்கே இதை ஆது காதுக்கு கொண்டு போய்ற வேண்டியதுதான்" என்று சாரு கூறிய மறு நொடி தன் இருக்கையை விட்டெழுந்த சஞ்சய்

"ஏன் சாரு உனக்கு இந்த கொலைவெறி ?? எல்லாம் நல்லா தானே போய்கிட்டு இருக்கு.. ஆ ஊனா இப்படி என் அடிவயிற்றில் கை வைக்கிற?" என்று புலம்ப

"அந்த பயம் இருக்கட்டும். இருந்தாலும் நீ ஆது பேபிக்கு இவ்வளவு பயப்படக்கூடாது" என்று சிரித்த சாருவிடம்

"நீ ஏன்மா சொல்லமாட்டா எல்லாவற்றையும் எப்படி வத்திவைக்கனுமா அப்படி வத்தி வச்சிட்டு நீ சைலண்டா இருப்ப. அவ கேள்விக்கு பதில் சொல்லுவதற்குள் எனக்கு முழி பிதிங்கிரும். சம்பந்தமே இல்லாம சிங்க் பண்ணி டிசைன் டிசைனாக கேப்பா பாரு கேள்வி.. யப்பா சாமி.. ஏன் சாரு அவ மட்டும் அப்படியா இல்லாட்டி பொண்ணுங்க எல்லோரும் அப்படியா??" என்ற சாருவிடம்

"இப்படி எல்லாம் உங்களை படுத்துனா தான் பசங்க நீங்க பொய் சொல்ல பயப்படுவீங்த அதான் இப்படி பண்ணுறோம்"

"யப்பா சாமி என்ன ஒரு புத்திசாலித்தனம்.." என்ற சஞ்சையை பார்த்து சிரித்த சாரு பின் நியாபகம் வந்தவளாக

"சஞ்சு நான் அஸ்வினை லவ் பண்றேனு நீ எப்படி கண்டு பிடிச்ச??"

"ஹாஹா.. சொல்லமாட்டேனே என்ன பண்ணுவ?" என்று ராகம் பாட

"ஆதுகிட்ட போட்டு குடுப்பேனே"என்று அவளும் இசைந்து பாட

"அம்மா தாயே அவசரப்படாத.. இப்ப என்ன நீ அஸ்வினை லவ் பண்ணுவதை நான் எப்படி கண்டுபிடித்தேனு தெரியணும் அவ்வளோ தானே சொல்றேன். நீ அன்னைக்கு ரெஸ்டாரன்டில் அஸ்வினை தெரியும்னு சொல்லும் சொன்னப்போவே எனக்கு ஒரு டவுட்.பிகாஸ் நீ சொன்ன மாடிலேஷன் அப்புறம் நீ அவனை விட்ட லுக்கு எல்லாமே ஒரு மார்க்கமா இருந்துச்சி.அப்போவே கெஸ் பண்ணேன். பிறகு ஒரு நாள் நாம மூன்று பேரும் ஒரு கிளையண்ட் மீட்டிங்கிற்கு தாஜிற்கு போனமே அப்போ நான் வாஸ்ரூம் போயிட்டு வரும் போது நீ அவனை சைட் அடிச்சிட்டு இருந்த.ஆனா அவன் அதை கவனிக்காம உனக்கு ஏதோ எக்ஸ்பிளைன் பண்ணிட்டு இருந்தான். அப்பவே கன்பாம் ஆகிவிட்டது. ஆனாலும் சந்தேகத்தை உறுதிப்படுத்த அன்னைக்கு ஈவினிங் அஸ்வினை பற்றி விசாரிப்பது போல் உன்னை டெஸ்ட் பண்ணேன். நீ அவனைப்பற்றி பேசும்போது உன் கண்ணில் ஒரு ஆர்வம்,மகிழ்ச்சி,விருப்பு இப்படி எல்லாம் கலந்த உணர்வை பார்த்தேன். அதே வெளிப்பாட்டை ஆது எனக்கு ஓகே சொல்லும் போது பார்த்திருக்கேன். அப்போ தான் எனக்கு இருந்த சின்ன டவுட்டும் கிளியர் ஆகிச்சி."

"ஆனாலும் சஞ்சு நீ ப்ரில்லியண்டுக்கெல்லாம் ப்ரில்லியண்ட் டா."

"இனி சரி ஐயாவோட இன்டர்லிஜன்சியை புரிந்துக்கோ"என்று சஞ்சு தன் காலரை தூக்கி விட

"சரிங்க குருவே..."

"சரி சாரு எப்போ உன்னோட பிளானை எக்சிகியூட் பண்ண போற??"

"இன்னைக்கே தொடங்கலாம்னு தான் இருந்தேன். ஆனா அங்கிளுக்கு இப்போ உடம்பு சரியில்லை. சோ என் பேபி ரொம்ப பிசியா இருக்கும். அதுனால நெக்ட் வீக்ல இருந்து என்னோட கேம் ஸ்டார்ட்"

"ஓகே ஆல்திபெஸ்ட்"என்று தன் தோழியை வாழ்த்தினான் சஞ்சய்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN