சாதி மல்லிப் பூச்சரமே!!! 10

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 10

அதன் பிறகு தென்றல் எக்காரணத்தைக் கொண்டும் தந்தை வீட்டுக்கு வரவே இல்லை, அதற்கு அவள் பாட்டியும் விடவில்லை. படிப்பைக் காரணம் காட்டி மறுத்தாள். பத்தாவதில் பள்ளியிலேயே அவள் முதலாவதாக வர, அந்த வருடம் அவளை டூர் அழைத்துச் சென்று விட்டார்கள் அவள் சித்தப்பாவும் சித்தியும்.





பனிரெண்டாவதிலும் இவள் பள்ளியிலேயே முதல் வர, பெருமைப் பட்ட மாறன் மகளை அழைத்து வந்து ஐயாருவிடம் ஆசீர்வாதம் வாங்க வைக்க, அது முடிந்ததும் வந்த சுவடு தெரியாமல் அன்றே ஊருக்கு கிளம்பி விட்டாள் அவள். அவள் வந்த நேரம் வேந்தன் சிமெண்ட் பாக்டரி விஷயமாக வெளியூர் சென்று விட்டான். அதன் பிறகு இன்று வரை இருவரும் சந்தித்துக் கொள்ளவேயில்லை. என்று தன் காதலைச் சொல்லி அவளுக்கு முத்தமிட்டானோ அன்றே அவனின் தேவதை அவனுக்கு முன்பை விட ஓர் உயிராகிப் போனாள்.





ஓடிக் கொண்டிருக்கும் நதி என்றாவது ஒரு நாள் கடலைத் தான் வந்து சேரும் என்பதால் தன்னை வந்து தன்னவள் சேர்வாள் என்ற எண்ணம் இவனுக்கு. நித்தமும் பார்த்துக் கொண்டிருப்பதை விட பார்க்காமல் இருக்கும் காதலுக்கு ஆழமும், பிரியமும் அதிகம் என்று நினைத்தான் வேந்தன். அன்று நடந்த சம்பவத்தை தென்றல் யாரிடமும் சொல்லவில்லை. சொன்னால் எங்கே திருமணம் செய்து வைத்து விடுவார்களோ என்ற பயம் அவளுக்கு. இப்படியான இருவரின் மனநிலையில் இதோ ஒரு வாரத்தில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடியும் வருகிறாள் வேந்தனின் தேவதை!





பழைய கனவுகளுடன் வேந்தனுக்கு அன்றைய விடியலும் விடிந்து விட, அன்று இருக்கும் தனக்கான வேலைகளைப் பார்க்கச் சென்றான் அவன்.





மூன்றாம் நாள் காலையிலேயே இவன் கரும்பு உற்பத்தியாளர்கள் சங்க கூட்டத்திற்கு கிளம்பிச் சென்று கொண்டிருக்க, அதே நேரம் ஒரு உயர் ரக B.M.W கார் அதி வேகத்தில் ஊருக்குள் வந்து கொண்டிருந்தது. வேகமென்றால் வேகம் அப்படி ஒரு வேகம் அந்த காருக்கு. கண்மண் தெரியாமல் அது சென்றதில் ஒருவேளை அதை ஓட்டியவர் அதன் கட்டுப்பாட்டை இழந்து விட்டாரோ என்று தான் வேந்தன் முதலில் பார்த்ததும் நினைத்தது.





ஆனால், போகும் பாதையில் ஒரு குழந்தை குறுக்கே வரவும்

அந்த வண்டி கொஞ்ச தூரத்திற்கு எல்லாம், கிரீச்ச்.... என்று பிரேக் போட்டு நிறுத்தவும் தான் அவனுக்குப் புரிந்தது இது வேண்டும் என்றே திமிராக ஓட்டியது என்று. இவனுக்கு வந்த கோபத்திற்கு காரை விட்டு இறங்கி அந்த காரை ஓட்டி வந்தவனை இழுத்து நாலு மிதிமிதிக்க நினைக்க





அதே நேரம் அவனுக்கு வந்த கைப்பேசி அழைப்பில் தன் வேலையைப் பார்க்க வேண்டி வந்ததால், “எங்கன போயிரப்போற? நான் வார்ற வரைக்கும் இரு. பெறவு நான் வந்து ஒனக்கு வாசிக்குதேன் கச்சேரி” என்ற முணுமுணுப்புடன் அந்த வண்டியைப் நோக்கி எச்சரித்து விட்டு விலகிச் சென்றான் அவன்.





உடனே சற்று நேரத்திற்கு எல்லாம் அவன் வண்டியை ஓவர் டேக் செய்த படி ஒரு டிராக்டர் வண்டி முந்த, அதற்கு பின்னே பல்சரில் வந்த இரண்டு இளைஞர்கள் இவன் ஓட்டி வந்த காரிடம் நிறுத்தி யாரோ ஒருவனுக்கு அடிபட்டு இருப்பதாகவும் இப்போது ஆஸ்பிடல் அழைத்துச் செல்வதாகவும் தகவல் சொல்ல, வேந்தனுக்குப் புரிந்தது இப்போது கடந்து சென்ற காரால் நடந்த விபத்து இது என்று. செலவுக்கு சில ரூபாய் தாள்களை அவனுங்க கையில் திணித்தவன் பின் இவன் தனக்கான வேலையை முடித்துக் கொண்டு வீட்டுக்கு வர...





ஏற்கனவே உஷ்ணமாய் வந்தவன் தன் வீட்டு வாசலில் நிறுத்தியிருந்த காரிலிருந்து சரண் எதையோ எடுத்துக் கொண்டிருக்க, நீங்கள் யூகிப்பது சரி தான் தோழமைகளே! நம்ப லிஸ்மிதாவின் நண்பன் தான் இந்த சரண். அவனையும் அந்த காரையும் மாறி மாறி பார்த்த வேந்தன் ஒரு முடிவுக்கு வந்தவனாக வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு சரணை நெருங்கி அவன் முகத்திலும் கன்னத்திலும் சில பல குத்துகளை விட்டவன், இறுதியாய் அவன் கையை முறுக்கி, குனியவைத்து அவன் முதுகை பதம் பார்க்க, சரண் தான் வாங்கிய அடியில்





“லிஸ்மிதா! லிஸ்மிதா!” என்று தோழியின் பெயரை மட்டும் அழைத்துக் கூப்பாடு போட





“என்னலே, யாரு ஊர்ல வந்து ஒன் சேக்காளிய கூப்பிடுத? அவனோ அவளோ வரட்டும்டே நானும் ஒரு கை பாக்குதேன்” என்றபடி தன் மீசையை முறுக்கியவன், தன் கையில் இருந்த காப்பை முன்னுக்குத் தள்ளி அவன் முகத்தில் ஒரு குத்து விட, அடுத்த குத்துக்கு கையைத் ஓங்கிய நேரம்,





“மாமா, அவர் என் பிரண்ட் மாமா!” என்றபடி வேந்தனின் கையைப் பிடித்து தடுத்து இருந்தாள் தென்றல்.





ஆமாம்! நாம் பெங்களூரில் பார்த்த அதே லிஸ்மிதா தான் தென்றல்! அதாவது தனக்குத் தானே பெயரை மாற்றி வைத்துக் கொண்ட ஒப்பற்ற நவநாகரீக மங்கை இவள்.





அவளைத் திரும்பியும் பார்க்காமல் தன்னவளின் குரலை வைத்தே தென்றலைக் கண்டு கொண்டவன் அப்போதிருந்த மனநிலையில், “அதுக்காண்டி இவன் பிளஷர வேகமா ஓட்டியாந்து எல்லாரையும் சாகடிப்பான், என்னைய பாத்துட்டு சும்மா இருக்கச் சொல்லுதியா?” இவன் கடும் கோபத்தில் கேட்க





“அவன் காரை ஓட்டிட்டு வரல மாமா. நான் தான் ஓட்டிட்டு வந்தேன்” இவள் மெல்லிய குரலில் பதில் அளிக்க





தன்னவளை திரும்பி பார்த்தவனின் முகம் உக்ர நரசிம்மர் என கோபத்தில் மிளிர்ந்தது. அதற்கு காரணம் அவள் உடுத்தியிருந்த ஆடை, தலைவிரி கோலமாக கை இல்லாத சின்னதாய் ஒரு டிஷர்ட்டும், தொடையை இறுக்கிப் பிடித்த படி இருந்த ஜீன்ஸ் டிரவுசரைப் போட்டிருந்தாள் அவள்.





சரணை வேந்தன் அடிக்கும்போதே சுற்றி வேலையாட்கள் இதை பார்த்துக் கொண்டிருந்தார்கள் தான். ஆனால் வேந்தனை தடுக்கும் துணிவு அங்கு யாருக்கு இருக்கிறது? இப்போதும் எல்லோரும் அங்கேயே நின்று நடப்பதை சுவாரசியமாய் வேடிக்கை பார்க்க, அதிலும் தென்றலை பார்த்துக் கொண்டிருக்க, நிமிர்ந்து வேந்தன் சுற்றி இருந்தவர்களை ஒரு பார்வை பார்க்க, அதில் பயத்தில் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்கள் வேலையாட்கள்.





அடுத்த நொடி இவன் தன் மாமன் மகளை இழுத்துக் கொண்டு உள்ளே செல்ல, “லிஸ்மிதா! நான் இப்படியே ஊருக்குப் போறேன். போதும்… உன்னை நம்பி வந்ததற்கு நல்லா வச்சி செஞ்சிட்ட என்ன!” என்றான் சரண் மூக்கிலிருந்து வடியும் ரத்தத்தைத் துடைத்த படியே.





அவன் வார்த்தையில் ஒரு வினாடி நின்ற வேந்தன் பின் அங்கு வீட்டு மூலையில் நின்று கொண்டிருந்த அந்த வீட்டு கணக்குப் பிள்ளையை இவன் ஒரு பார்வை பார்க்க, அதைப் புரிந்து கொண்டு சரனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அவர்.





கூடத்தில் அமர்ந்திருந்த ராஜாத்தி பாட்டி இவனைப் பார்த்ததும், “கங்கையில மண்ணெடுத்து அதுக்கூட நாட்டுச் சக்கர, உப்பு, பனைவெல்லம், கருப்பட்டி, கடுக்காய் எல்லாம் சேர்த்துப் பெணஞ்சு தங்க வண்டி சக்கரத்துல வெச்சி பான செஞ்சு, யான அடிச்சி சோறு பொங்கி, போறவைய்ங்க வர்றவைய்ங்களுக்கு எல்லாம் ஒரு கவள உருண்டையில தங்க காச பொதச்சி வெச்சி சோறு போட்ட ராச பரம்பரடா நாம! நம்ப வம்முச பேரச் சொன்னா எட்டு சில்லாவும் நடுங்கிட்டு எழுந்து நிக்கும்டே. அப்பேர்ப்பட்ட குடும்பத்துல பொறந்துட்டு இன்னக்கி இப்டி ஒடம்பு தெரிய உடுப்பு போட்டுகிட்டு திரியறாளே! ஏன் டா பேராண்டி, இதப் பாக்கவாம்லே என் உசுரு இன்னும் கெடக்கு?” என்று கிழவி நீட்டி முழங்கி மூக்கைச் சிந்த, தென்றலின் அறைக்குச் செல்ல படிமேல் காலை வைத்தவன்,





“இப்போம் வாய மூடுதியா” என்று கர்ஜிக்க, கப் சிப் ஆனார் பாட்டி.





அவளை இழுத்து வந்து அவளின் அறையில் தள்ளியவன், அவளின் எதிர்ப்பை எல்லாம் ஒன்றும் இல்லாமல் தடுத்து, அங்கு டிரெஸ்ஸிங் டேபிளில் இருந்த கிளிப்பை எடுத்து அவளின் விரித்த முடிக்குள் அடைத்தவன், பின் கூடவே அதே இடத்திலிருந்த லிப்ஸ்டிக்கை எடுத்து அவளுக்கு நெற்றியில் வட்டமாய் பொட்டு இட்டவன்,





“ஒழுங்கு மரியாதையா இதைக் கழட்டி தூரப் போட்டுட்டு பொடவையோ இல்ல தாவணியோ கெட்டிட்டு வா. இந்த வீட்ல இருக்குற வரையில நீ அதத்தாம்ல உடுத்தணும்” என்று கட்டளை இட்டவன் “ஏட்டி! நம்ப பண்ணையிலும், வீட்லயும் எத்தன ஆம்பளைங்க சோலி பாக்குறாங்க தெரியும் தான? அவிங்க முன்னாடி இப்டிதேன் வந்து நிப்பியளோ” கண்ணில் ரவுத்திரத்துடன் இவன் கேட்க, அவளைப் பேச விடாமல் இழுத்து வந்து இப்படி செய்ததில் கடுப்பில் இருந்தவள்,





“ஏன்... இந்த டிரஸ்க்கு என்ன? இப்படி ஒரு டிரஸ்ல ஒரு பெண்ணை எந்த ஆணும் இதுவரை பார்த்தது இல்லையா? இது என்ன புதுசா?” இவளும் இடக்காய் கேட்க, அவள் கேள்வியில் பல்லைக் கடித்தவன்,





“பாத்து இருக்காங்கதேன் பாத்து இருக்காங்கதேன். இந்த ஒலகத்துல இருக்குற ஆம்பளைங்க எல்லாம் எங்கனயோ இருக்கற பொண்ணுங்கள இப்டி பாத்து இருக்காங்கதேன். ஆனா பண்ணையார் கந்தமாறன் மவள என்னோட வருங்கால பொஞ்சாதிய அவிங்களோட வருங்கால எசமானிய யாரும் இப்டி பாக்கக் கூடாதுட்டி” இவன் மீசையை முறுக்கிக் கொண்டு கடுமையாய் சொல்ல





‘மனைவியாம் மனைவி! அதற்கு தானே இப்போ நான் வந்திருக்கேன்? பார்ப்போம் எப்படி நடக்குதுன்னு!’ என்று மனதிற்குள் கருவிக் கொண்டவள் விடாப்பிடியாய் சிலையாய் அமர்ந்திருக்க,அவளைப் பார்த்தவன்,





“நான் ஒன்னைய பொடவ கட்டச் சொன்னம்ல” என்று கடித்த பற்களுக்கு இடையே இவன் மறுபடியும் ஞாபகப் படுத்த





“என் கிட்ட புடவை இல்லை” என்றாள் இவள் ஒற்றை வரி பதிலாய்.





உடனே எங்கோ சென்றவன் சற்று நேரத்திற்கு எல்லாம் புடவைக் குவியலையே அவள் முன் கொண்டு வந்து போட, அதில் புடவை மட்டும் இல்லாமல் தோதாக ரவிக்கையும் உள்பாவடையும், உள்ளாடைகளும் இருக்க, அவைகளைப் பார்த்து ஒரு வித லஜ்ஜையில் முகம் சிவந்தாள் தென்றல். இவளுக்கான உள்ளாடையை மட்டும் தாயிடம் சொல்லி அவர் வாங்கி வைத்ததை பாவம் தென்றல் அறியவில்லை.





“இப்போம் நீயா மாத்திக்கிடுனா சரி. செய்யலனா, இப்டி வித விதமா ஒனக்கு வாங்கிக் குவிச்சவனுக்கு இத வம்படியா ஒனக்கு உடுத்திப் பாக்கவும் தெரியும். எப்டி புள்ள வசதி? மாமா மாத்தி விடுதா?” எச்சரிக்கையில் ஆரம்பித்து குழைவாய் இவன் முடிக்க





‘செய்தாலும் செய்வான்’ என்று நினைத்தவள் “நான் கிராமத்துல வளரனாலும் ஆடை வடிவமைப்பு பற்றி படிக்கிறேன். சோ புடவை கட்ட தெரியும்” என்றவள் ஒரு புடவையை கையில் எடுக்க





“என்னடே ஒன் மாமன் மவ இப்டி ஏமாத்திட்டாளே!” என்று போலியாய் நொந்தவன் சின்ன சிரிப்புடன் விலகிச் சென்றான் வேந்தன்.





இவன் வெளியே வர, கையைப் பிசைந்த படி படிக்கட்டின் முடிவிலேயே நின்றிருந்தார் அவன் தாய் தாமரை. இன்று அவருக்கு விடுமுறை.





மகனைப் பார்த்ததும், “என்னய்யா கோபத்துல அவள அடிச்சிப் போட்டுர்ல இல்ல? அண்ணே வேற ஊர்ல இல்லாத நேரத்துல அப்டி செய்யாதய்யா” என்று விசனப்பட





வாய் விட்டு சிரித்தவன் “யம்மா! ஒன் மறுமவளயாவது நான் அடிக்கறதாவது. அவ என்ன செஞ்சாலும் மெரட்டுவனே காண்டி அடிக்க மாட்டேன்மா. போ… போய் சோலியப் பாரு” என்று இவன் பதில் தர, மகன் சண்டிவீரன் மாதிரி எல்லோருக்கும் பயத்தைக் காட்டுபவன் தென்றலிடம் மட்டும் மெல்லினவனாய் இருப்பதைக் கண்டு உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவர், பின் கவலை தோய்ந்த முகத்துடன்,





“அவ இன்னைக்கு போட்டுகிட்டு வந்த டிரஸ்க்கு... நல்ல வேள அண்ணே வீட்டுல இல்ல. இருந்திருந்தா அம்புட்டுதேன்! ஆனா ஐயாரு இருந்தாக. ஒரே சத்தம் காலைலயே” என்று இவர் சொல்ல





இவனுக்கும் முகத்தில் கவலை படர, தாயின் கையைப் பற்றியவன் தள்ளியிருந்த உணவு மேசையின் நாற்காலியில் அவரை அமர வைத்து தானும் அமர்ந்து, “அவுக ஊருக்குப் போனதும் நல்லதுதேன். இதுக்கு முந்தியே இவ விசயத்துல மாமா வெசனத்துல இருக்காக. அதனால இது எதுவும் நீ சொல்லிர வேணாம். ஐயாருவையும் நான் பாத்துக்கிடுறேன் மா!” என்று இவன் உறுதி அளிக்க, அங்கே மவுனம் நிலவியது.





கந்தமாறன மற்றும் மூர்த்தி இருவரும் இப்போது இங்கு இல்லை. நண்பர்களுடன் சேர்ந்து இருவரும் கேரளாவில் உள்ள சில கோவில்களைத் தரிசிக்கச் சென்று உள்ளனர்.





பிறகு தென்றல் கீழே வர, அவளைப் புடவையில் பார்த்த தாமரை, மகனை மெச்சுதலாய் நினைத்தார். அந்நேரம் மதிய உணவுக்காக உணவு மேசையில் அனைவரும் அமர, அதே நேரம் உள்ளே நுழைந்த ஐயாரு தானும் மேசையில் அமர்ந்தவர்,





“அடுத்த வாரம் வாரேனு சொன்ன புள்ள எந்த தகவலும் இல்லாம இப்டி திடீர்னு வந்து நின்னா என்ன வெசயம்? அங்கிட்டு உன் சித்தப்பா சித்திக்கு எங்களுக்குத் தகவல் சொல்லுதனும்னு கூட கூறு இல்லயோ” அடுத்த வாரம் வருகிறேன் என்று சொன்னவள் இன்று திடீரென்று வந்து நிற்கவோ தான் ஐயாரு அவளை இப்படி கேட்டது





அவரின் இடக்கான கேள்வியில், “இது என் அப்பா வீடு. எனக்கும் சகல உரிமை இருக்கு. நான் எப்போ வேணா வருவேன் போவேன். இதுக்கு எதுக்கு என்னை வளர்த்தவங்களை இழுக்குறீங்க? ஏன், இப்ப கூடத் தான் நீங்க வெளியே போயிட்டு வந்திங்க. வர்றதுக்கு முன்ன எங்களுக்கு என்ன டெலகிராமா போட்டுட்டு வந்திங்க?” என்று இவளும் துடுக்காய் பதில் தர,





கண்ணை மூடி ஒரு உஷ்ண மூச்சை வெளியிட்டார் ஐயாரு. அந்த வீட்டில் அவரை எதிர்த்துப் பேசும் ஆட்கள் வேந்தனும் தென்றலும் தான்.





“குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராதுன்னு சொல்லுவாக. எப்டி என் மகன்ட்ட மல்லுக்கு நிக்கா பாரு இந்த சீமக்காரி! ஒன்னைய வரவேணாம்னு யார் சொன்னாக? இப்டி வர என்ன அவசரமுன்னுதேன் கேக்குதான் என் மகன்” என்று பாட்டி மகனுக்காக நீட்டி முழக்க





உடனே வேந்தன் தென்றலைக் கண்டிக்கும் பார்வை பார்க்க, அதில் தலை குனிந்தவள், “என் கூட படிச்ச ஸ்கூல் பொண்ணுக்கு இங்க அம்பாசமுத்திரத்துல கல்யாணம். அதற்கு தான் வந்தேன். கூட என் நண்பர்களும் கிளம்பி வந்தாங்க. நான் தான் மம்மி கிட்ட தகவல் சொல்ல வேணாம்னு சொன்னேன்” என்று விளக்கியவள் “இதோ அப்படி வந்த என் நண்பர்களைத் தான் உங்க பேரன் அடித்து துரத்திட்டார். வந்தவங்க என்னை என்னனு மதிப்பாங்க? போன் செய்தாலும் எடுக்க மாட்டேங்றான்” இவள் குறை பட





இவள் சொல்வது உண்மை என்றாலும், தென்றல் தற்போது ஊருக்கு வருவதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது.





“சாப்ட்டு முடி, ஒரு எடத்துக்குப் போய் வரலாம்...” வேந்தன் திடீர் என சொல்ல





‘நான் சொல்றது என்ன? இவர் பண்ற அதிகாரம் என்ன’ என்பது போல் இவள் அவனைப் முறைக்க, ‘சாப்பிட்டு முடி டி’ என்பது போல் கண்ணாலேயே காதலுடன் தன்னவளுக்கு மறுபடியும் பதில் கொடுத்தான் அவன்.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

Chellam

Member
அவனவள் என்ன குண்டை தூக்கிப் போடப் போகிறாள் என்று தெரியவில்லை, இவன் என்னடா வென்றால் சந்தோஷமாக இருக்கிறான்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN