முன் ஜென்ம காதல் நீ - 2

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மதியழகி

Capture.JPG

தமிழகத்தின் வீரத்தையும் செல்வ வளத்தையும் ஒரே இடத்தில் கண்டதால் மெய் சிலிர்த்து தன் நிலை மறந்து நின்று ஒளியை பாய்ச்சிக் கொண்டு இருந்தது வானில் இருந்த பௌர்ணமி நிலவு. முழு மதி நாளில் பிற நாட்களை விட கடலின் அலைகளின் வேகம் அதிகமாக இருந்தது. அதே சமயம் காற்றின் வேகமும் அதிகமாக இருந்தது.அதில் தங்கள் கூடாரங்கள் பறந்து விடக் கூடாது என இறுக்கமாக கட்டியிருந்தனர் ஆயினும் வாயில் சீலைகள் காற்றில் பறக்கத் தான் செய்தன. கடற்கரையில் துணிகளால் கட்டப்பட்ட ஊர் போல இருந்தது அந்த வணிக வளாகம். தனித்தனி கூடாரங்களாக இருந்தாலும் நெருக்கமாக இருந்த காரணத்தால் ஓரே அமைப்பாக தெரிந்தது. அதில் நடப்பட்டிருந்த பந்தங்கள் தங்கள் ஒளியால் இரவை பகல் போல் மாற்றினர். அதில் நடைபெற்றது முத்து வணிகம். அதில் பல நாட்டினரும் குமரிக் கடலில் எடுக்கப்பட்ட முத்துக்களை போட்டிப் போட்டுக் கொண்டு வாங்கி கொண்டிருந்தனர். அந்த திடலில் தமிழர்,கிரேக்கர், எகிப்தியர், சீனர், அரேபியேர் என பலர் கூடியிருந்தனர்.அதில் நடை பாதையில் அரசாங்க வீரர்கள் காவல் காத்து வந்தனர். முத்துகளுக்கு பாதுகாப்பு அளித்து வந்தனர். மற்றொரு புறம் குதிரைகளின் ஆங்கார ஒலியும், அதனை அடக்கும் வீரர்களின் அதிகார ஒலியும் கேட்டது. நூற்றுக்கணக்கில் புரவிகள் பல நூறு வீரர்களால் பழக்கப்படுத்தப்பட்டன. அவை காட்டில் இருந்து பிடிக்கப்பட்ட புரவிகள் சிலவை அரேபியாவில் இருந்து வாங்கப்பட்டவை அவற்றை வீரர்கள் அடக்கி கட்டளைக்கு கீழ்படியவையாக மாற்றிக் கொண்டிருந்தனர். அப்பொழுது நடந்தது விபரீதம். ஒரு சாம்பல் நிற குதிரை மட்டும் புரவிகள் கூட்டத்தில் இருந்து விலகி முத்து சந்தைக்குள் புகுந்து விட்டது. அதனை அடக்க வீரர்கள் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. அது காட்டுப்புரவி என்பதால் அதன் கடிக்கும் குணமும் முட்டும் பழக்கமும் மாறவில்லை ஆகவே எதிர்பட்டவர்களை முட்டிக் கொண்டு ஓடியது. அதனை பிடிக்க முயன்ற வீரர்களை கடித்து தள்ளியது. சத்தமாக கத்திக் கொண்டு அந்த புரவி சந்தை கூட்டத்தில் புகுந்து ஓடியது. அதனால் அந்த சந்தையினுள் கலவரம் ஏற்பட்டது. வணிகர் யாவரும் கூச்சல் போட்டுக் கொண்டு அதன் பாதையை விட்டு விலகினர். ஆனால் அந்த புரவி கூட்டத்தையும் அங்கிருந்த பந்தங்களில் இருந்த நெருப்பையும் கண்டு பயந்து மீண்டும் மீண்டும் அந்த கூட்டத்தினுள்ளே ஓடியது. அப்பொழுது அனைவரும் அதன் பாதையை விட்டு விலகி நிற்க ஒரே ஒரு வாலிபன் மட்டும் அதன் பாதையில் நின்றான் இடையில் சிங்க தலை கொண்ட வாள் தொங்க புரவி அவனை நெருங்க அவன் பயந்து ஓடவில்லை. " ஸ்கரம் ஸா " என கத்தினான். அதனை கேட்ட புரவி அப்படியே நின்றது. அதன் அருகே சென்ற அவன். அதன் குதிரையின் கயிறு கட்டப்பட்டிருக்கும் இடத்தை நோக்கினான் வயிற்று பகுதியில் கட்டப்பட்டிருந்தது. உடனே அதன் வாலும் உடலும் இணையும் இடத்தை பிடித்து திருகினான் பின் முதுகின் மேல் இரண்டு தட்டு தட்டினான். உடனே புரவி சாதுவாக ஓடியது விரைந்து சென்று தன் குழுமத்தில் சேர்ந்து கொண்டது.

கண்முன்னே நடைபெற்ற அந்த வீர வித்தையை கண்டு அந்த மக்கள் கூட்டம் முழுவதும் ஆச்சரியத்தில் முழ்கியது.வணிக கூச்சல் பெரும்பாலும் அடங்கி அமைதி நிலவியது. தமிழர்கள் அனைவரும் வீர உணர்வு கொண்டவர்களாகவும் வீரத்தை யாரிடமும் விரும்புபவர்களாகவும் இருந்தபடியினால் அந்த அதிசய வீரனை ஆர்வமாக பார்த்தனர்.யாருக்கும் அடங்காத அந்த புரவியை அவன் அடக்கியதை கண்டு அவனை புகழ்ந்தனர். ஆனால் அவன் புகழ்ச்சியை விரும்பாதவனாக அந்த கூட்டத்தை விட்டு நகர தொடங்கினான் அங்கே தள்ளி இருந்த இருண்ட பகுதியை நோக்கி. அவனின் வெண் நிற புரவியும் அவனை தொடர்ந்தது." உன்னை போல தான் அவனும் வீரா சிறந்த புரவியாக வருவான் " என்றான். அதனை புரிந்து கொண்ட புரவி தலையை ஆட்டியது. " வா வீரா நாம் இரவு தங்க ஒரு இடத்தை பார்க்க வேண்டும் " என கூறிக் கொண்டு சென்றான். திடீரென " பின்னால் வருபவர்கள் பார்த்து வரவும் இங்கே பள்ளம் உள்ளது " என கூறிக் கொண்டு நின்றான். பின்னால் வந்த உருவத்திற்கு தூக்கிவாரிப் போட்டது. " நான் வந்தது தங்களுக்கு எப்படி தெரிந்தது " என அந்த உருவம் கேட்க இவனோ " என் புரவி சொன்னது மேலும் நீங்கள் பூசியுள்ள ஸ்கந்த பொடியின் மணமும் சொல்லியது " என கூறிக் கொண்டு திரும்பினான். திரும்பியவன் மலைத்து போய் நின்றான் ஏனென்றால் அந்த உருவம் ஒரு பெண் அதுவும் அழகான ஒரு பெண். சூரியன் இல்லாத அந்த இரவில் அவள் வதனம் சூரியன் போல் பிரகாசித்தது. அவளின் நிறம் அந்த நிலவுடன் போட்டி போட்டது. அவள் கன்னங்கள் மட்டும் தோலின் நிறத்தை விட சற்று சிவப்பாக இருந்தது. கண்கள் சற்று பெரியதாக மானின் கண்களை நினைவுபடுத்தியது. கூந்தல் கடல் அலைகளை போல் காற்றில் பறந்தது. அவள் சேலை அணிந்திருந்தாள் அதன் தலைப்பை அதிகமாக சுருட்டி முடியிருப்பது அவள் கண்ணியத்தை காட்டியது. இவ்வாறு அவளை பற்றிய ஆராய்ச்சியை அரை நொடியில் முடித்து விட்டு பேச தொடங்கினான். " யார் நீங்கள் ஏன் பின்னால் வருகிறீர்கள்? " என கேட்டான். " உங்கள் வீரத்தை கண்டேன் அதனால் யாரென தெரிந்து கொள்ள வந்தேன் " என்றாள். அவனும் " என்னை பற்றி தெரிந்து கொள்வதற்கு முன்னே தங்களை பற்றி கூறலாம் அல்லவா தாங்கள் யார்? " என கேட்டான். அவளோ " நான் இந்த சந்தையில் உள்ள அங்காடியில் பணிபுரியும் பெண் " என்றாள். இதனை கேட்ட அந்த வாலிபன் இகழ்ச்சியாக சிரித்தான் மேலும் கேட்டான் " நீங்கள் சிறிது உண்மை பேசினால் நலமாக இருக்கும் " என்றான். அவளும் "என்ன பொய் சொல்லி விட்டேன் நான் " என்றாள். அந்த வாலிபன் " பெண்ணே நீங்கள் அணிந்திருக்கும் உடை சாதாரணம் தான் ஆனால் காலில் அணிந்துள்ள காலணியை கவனியுங்கள் அதின் முகப்பில் உள்ள கலை வேலைபாடுகள் அதிகம் அவற்றை சாதாரண மக்களால் வாங்க இயலாது மேலும் தங்கள் இடையில் தங்கள் பாதுகாப்பிற்காக வைத்துள்ள குறுவாள் மற்றும் உங்களுக்காக சந்தை முகப்பில் காத்திருக்கும் உங்கள் தோழிகள் இவை போதும் உங்களை பற்றி கூற நீங்கள் அரச குடும்பத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும் அல்லது பெரும் செல்வந்தர் வீட்டு பெண்ணாக இருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் பணிபெண் அல்ல " என்றான் அலட்சியமாக. அந்த பெண் மலைத்தே போய் விட்டாள். அந்த வாலிபன் வீரமும் அறிவும் ஒருங்கே வாய்க்கப்பட்டவன் என புரிந்து கொண்டாள். மேலும் அவன் கண்களில் இருந்து எதுவும் தப்புவதில்லை என புரிந்து கொண்டாள். ஆகவே சொன்னாள் " மிகவும் நன்று நான் அரண்மனை வைத்தியரின் மகள் பெயர் மதியழகி. இளவரசியும் நானும் தோழிகள் அவள் பயன்படுத்திய பொருட்களை எனக்கு தருவாள். அவை தான் இந்த காலணி " என முடித்தாள். வாலிபனும் " நீங்கள் இளவரசியின் தோழியா " என்றான் அதில் ஆர்வமும் தெரிந்தது. அவளும் " ஆமாம் நான் சிறு வயது முதலே தோழிகள் இப்பொழுது சொல்லுங்கள் தாங்கள் யார்? " என்றாள். இவனும் " நான் அருள்வர்மன் பக்கத்து நாட்டை சேர்ந்தவன் இளவரசிக்காக நடைபெறும் போட்டியில் பங்கேற்க வந்துள்ளேன் " என்றான். அவளும் ஆர்வமாக " இளவரசியை மணம் புரிய ஆசையா? " என்றாள். அதற்கு வாலிபன் " இல்லை மற்றொரு காரணம் உள்ளது " என்றான். இதனை சொல்லும் போது அவன் முகம் கோபமாக மாறியது. முகத்தில் கோபச்சுடர் தெரிந்தது. இந்த உணர்சிகள் சில நொடிகளில் மாறி அவன் பழையபடி சாந்தம் ஆனான். அவளும் " என்ன காரணம்? " என்றாள். " அதனை நாம் மீண்டும் சந்தித்தால் கூறுகிறேன் மதியழகி " என்றான் மென்மையான குரலில். அவளும் " என்னை பெயர் சொல்லி அழைக்கிறீர்கள் உறவு கொண்டாட துவங்கிவிட்டிர்களா? " என்றாள் சற்று கோபத்துடன். அவனும் "இல்லை இல்லை உங்கள் பெயர் அழகாக இருக்கிறது அதனால் அழைத்து பார்த்தேன் " என்றான் விஷமத்துடன் மேலும் " பொருத்தமான பெயர் தான் " என்றான். அவளுக்கு அவன் சொன்னது புரிந்தது ஆயினும் கேட்டாள் " புரியவில்லை " என்றாள். இவனும் " மதியை விட அழகான பெண்ணிற்கு பொருத்தமான பெயர் தான் " என முடித்தான். அதனை கேட்டதும் அவளின் சிவந்த கன்னங்கள் வெட்கத்தில் மேலும் குங்கும சிவப்பாக சிவந்தன. சிறிது நேரம் கழித்து மெதுவாக அவள் " மறுமுறை சந்திக்கும் போது நீங்கள் போட்டியில் பங்கேற்கும் காரணத்தை நிச்சயம் சொல்லுங்கள் அருள்வர்மா " என புன்னகையுடன் கூறிச் சென்றாள்.
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதை flow சூப்பர் சகோ😍😍😍👌👌👌ஆனா ரொம்ப குட்டி epi யா இருக்கு... 🙄🙄கொஞ்சம் நீளமா கொடுங்க பா🌺🌺🌺
 
OP
ழகரன் தமிழ்

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்ன ஆச்சி பா 🙄🙄 english & தமிழ் இரண்டிலும் reply செய்து இருக்கிங்க பா🤔🤔
frank ah sonna innum intha site a correct a use panna theriyala ma :rolleyes::rolleyes::rolleyes:..........previous a delete pannan but agala :oops::oops:.....
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
frank ah sonna innum intha site a correct a use panna theriyala ma :rolleyes::rolleyes::rolleyes:..........previous a delete pannan but agala :oops::oops:.....
சீக்கிரம் பழகிடும் சகோ... பிறகு நீங்களே மற்றவர்களுக்கு சொல்லி தருவீங்க
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN