சாதி மல்லிப் பூச்சரமே !!!4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 4





திருநெல்வேலி…





கிராமத்திற்கே உள்ள காலை நேரத்து ரம்மியத்துடன் ஒரு பக்கம் வாழைத் தோட்டம் மறுபக்கம் மஞ்சள் காடு இன்னோர் பக்கம் பருத்தித் தோட்டம் மறுபுறம் கரும்புத் தோட்டம் என்று நாலா புறமும் தோட்டத்தில் மிளிர்ந்தது அந்த இடம்.





பறவைகளின் இசையையும் காலை நேர காற்றையும் அனுபவித்த படி தன் வயலில் உள்ள ஏற்றத்தில் நீர் இறைத்து ஏற்றமா என்று கேட்டால் ஆமாம் ஏற்றம் தான்! பழைய காலத்தில் நீர் இறைக்கப் பயன்படுத்திய அதே ஏற்றம் தான்! பலர் தன் நேர விரயத்துக்கும் உடல் உழைப்புக்கும் பயந்து கை விட்ட அதே ஏற்றத்தைத் தான் தன் வயற்காட்டில் வைத்திருக்கிறான் வேந்தன்.





அந்த கிணறும் நீர் வற்றாமல் இன்று வரை நீரை சுரந்து கொண்டு தான் இருக்கிறது. பட்டணத்தில் எல்லோரும் எழுந்து உடற்பயிற்சி கூடத்திற்குச் செல்ல இன்று வரை தன் காலை நேர உடற்பயிற்சிக் கூடத்தை இந்த ஏற்றமாகத் தான் வைத்திருக்கிறான் வேந்தன்.





கை இல்லாத பனியன் அணிந்து இடுப்பில் வேட்டியை தார்பாய்ச்சி கட்டியிருந்தவனின் கால் ஏற்றத்தில் வைத்த அடுத்த நொடியே அவன் உதடுகள் இந்த பாடலைப் பாட ஆரம்பிக்கும்.



“முந்தி முந்தி விநாயகரே


முப்பத்து முக்கோடி தேவர்களே

நீர் கொடுத்த நீரையெல்லாம்

நீர் கொடுத்த நிலத்துக்கே பாய்ச்ச போறேன்

சீராக ஏரோட்டி பார் முழுக்க

சோரு கொடுத்து காக்க போறேன்

ஆதரிக்க வேணுமையா….”





“ஏத்தமையா ஏத்தம்….

ஏலோலங்கடி

ஏத்தமையா ஏத்தம்…

ஏத்தமையா ஏத்தம்….

ஏலோலங்கடி

ஏத்தமையா ஏத்தம்….

எக்கப்பன் உன் பாட்டன்….

முப்பாட்டன் சொத்து இது….

ஏத்தமையா ஏத்தம்….

ஏலோலங்கடி

ஏத்தமையா ஏத்தம்….

ஏலோலங்கடி


ஏத்தமையா ஏத்தம்…..”

என்று வேந்தன் பாட





அதே நேரம் தலையில் சும்மாடு மீது கூடையோடு கண்டாங்கி சேலை சரசரக்க காலில் தண்டையுடன் சும்மாடுவைத் தாளமிட்ட படி





“ஏலோலங்கடி


ஏத்தமையா ஏத்தம்….

உனக்கு ரொம்ப

ஏத்தமையா ஏத்தம்…

ஏத்தமையா ஏத்தம்…

உனக்கு ரொம்ப

ஏத்தமையா ஏத்தம்…..”






என்று அவனுக்கு எதிர் பாட்டு பாடிய படி வரப்பில் நடந்து வந்தாள் அழகி.





அங்கு அவளைப் பார்த்ததும் அவள் பாட்டுக்கும் சேர்த்து வேந்தன் பளிச்சென்று சிரிக்க,





“மச்சான் கேப்ப களியும் வெள்ளாட்டுக் கொழம்பும் எடுத்து வந்திருக்கேன். சீக்கிரம் சாப்பிட வா மச்சான்” என்று இவள் அழைக்க





“செத்த இரு புள்ள, தோ வாரேன்” என்ற சொல்லுடன் கை காலை அலம்பிக் கொண்டு வந்தவன் கையோடு தையல் இலையோடு அவள் முன் அமர அதில் அவள் களியை வைத்துக் குழம்பை ஊற்ற, ருசித்து உண்டான் வேந்தன்.





அவனுடைய காலை நேர உணவு எப்போதும் கேழ்வரகு களி தான். என்ன, எப்போதும் நேற்று வைத்த மீன் குழம்பையோ கருவாட்டுக் குழம்பையோ அவன் தாய் எடுத்து வைத்து விடுவார்.





ஆனால் அழகி கல்லூரியிலிருந்து வந்து விட்டால் காட்டுக்கே காலை நேர உணவாக கேழ்வரகு களியுடன் கறிக்குழம்பும் அவனுக்கு வந்துவிடும். தன் மச்சான் ருசித்து சாப்பிடுவதை இவள் கண் கொட்டாமல் பார்த்திருக்க,





“எப்போம் புள்ள காலேச்? அழகி! நல்லா படிக்கிறியா” என்று இவன் உணவு உண்ட படி விசாரிக்க





“அதெல்லாம் நல்லாதேன் படிக்கிறேன். நாளைக்கு காலேஜ் போகணும் மச்சான்” என்று இவள் மொழிய





“அடுத்த வருசம் படிப்பு முடியுதுல்ல? பொறவு என்ன செய்யப் போறவ? மேக்கொண்டு படிக்க ஆசப்படுதியா? நான் வேணா மாமாகிட்ட சொல்லி படிக்க வெக்க சொல்லுதேன்” என்று இவன் கேட்க





“அதெல்லாம் வேணாம் மச்சான். நான் கல்யாணம் செய்துக்கலாம்னு…” அங்கிருந்த புற்களைக் கிள்ளிய படி முகம் சிவக்க இவள் சொல்ல,





“ஏட்டி போக்கிரி! அவ்ளோ அவசரமா இந்த காலேச் தான் வேணும்னு நீ வேற எங்கயும் படிக்கப் போகாம ரெண்டு வருசம் வூட்டுக்குள்ளாரயிருந்து சத்தியாகெரகம் பண்ணவோ தான் மாமா ஒனக்கு சிரமப்பட்டு நீ கேட்ட காலேச்ல சீட் வாங்கி குடுத்திருக்காக. அதுக்காண்டி ஒழுங்கா படிக்குற வழிய பாரு புள்ள” என்று அவன் செல்லமாய் மிரட்ட, அதில் அவள் முகம் திருப்ப,





அதற்கும் “பார்லா!” என்றவன் “கொஞ்சநாளா நீ இப்டி கறிகஞ்ச தூக்கிட்டு வரும் போதே நான் யோசிச்சி இருக்கணும் புள்ள. நம்ம வூட்ல இருக்கவைய்ங்க பண்ற சோலிதான்னு வுட்டுட்டேன். மனசுக்குள்ளார எதுனா இருந்தாலும் எல்லாத்தையும் தூர வெச்சிட்டு ஒழுங்கா படி புள்ள. பொறவு மாமாகிட்ட சொல்லி நானே ஒனக்கு புடிச்சவனோட கல்லாணம் செஞ்சி வெக்குதேன்” என்று இவன் பொறுப்பானவனாய் சொல்ல, அதில் அழகி பல்லைக் கடித்துக் கொண்டவள்,





“மச்சான்….” என்று ஆரம்பிக்க, அதே நேரம் அவன் போனுக்கு அழைப்பு வர, எடுத்தவன்





“சொல்லுடே தர்மா! வடக்கே வயக்காட்டுல. இங்கன வாரியா? சரி சரி” என்று பேசிய படியே எழுந்து கையைக் கழுவியவன் “ஒரு எடத்துக்கு அவசரமா போகணும் அழகி. தர்மா வர்றாப்ல” என்று இவன் அவளிடம் சொல்லிக் கொண்டிருந்த நேரம் தன் பைக்கில் மாநிறத்தில் ஒரு இளைஞன் ஜீன்ஸ் பேண்ட், டிஷர்ட், கண்ணில் கூலிங்கிளாசுடன் வந்தவனின் பார்வை முழுக்க அழகி மீதே இருந்தது.





‘என்ன? இன்னைக்கி நிலா பளிச்சுனு கண்ணுக்கு குளுமையா பவுர்ணமி நெலவாட்டம் மின்னுரா!’ என்று மனதிற்குள் கவுன்டர் கொடுத்த படி இவர்கள் முன் தர்மா வந்து வண்டியை நிறுத்த, நண்பன் கண்ணாடி அணிந்திருந்ததால் அவனின் கள்ளத்தனம் தெரியாமல்





“போலாம்டே தர்மா...” என்றவன் “வாரேன் அழகி” என்ற ஒரு தலை அசைப்புடன் அவசரமாக விலகிச் சென்றான் மதிவேந்தன்.





வேந்தனுடைய இரண்டாவது மாமா மூர்த்தியின் மகள் தான் நிலவழகி. அவனை விட மூன்று வயது சிறியவள். பட்டணத்தில் தங்கி டாக்டர் படிக்கிறாள். சிறுவயதிலிருந்தே மதிவேந்தன் என்றால் அவளுக்கு கொள்ளைப் பிரியம். அதுவே இப்போது கடந்த ஐந்து வருடமாக அவன் மேல் காதலாக மாறியிருந்தது.





அதை அவள் நேரிடையாக அவனிடம் சொன்னது இல்லை. எப்போதும் மறைமுகப் பேச்சு தான் அவளிடம் இருக்கும். அதற்கு காரணம் அவளின் தாய். எல்லார் குடும்பத்திலும் வரும் அண்ணி நாத்தனார் பிரச்சனை இங்கு அவருக்கும் தாமரைக்கும் வர, அதனால் அழகியின் தாய் செண்பகவல்லிக்கு வேந்தனைப் பிடிக்காமல் போனது.





அழகிக்குத் தான் அப்படி ஒரு எண்ணமே தவிர வேந்தனுக்கு அவள் மேல் அப்படி ஒரு ஈடுபாடு எல்லாம் இல்லை. நவீன் நரேனைப் போல இவளும் ஒரு தங்கை உறவு. அதற்கு காரணம் அவள் அவன் பக்கத்திலேயே இருந்து வளர்ந்ததால் இருக்கலாம். கூடவே அவன் மனதில் சிறுவயதில் இருந்தே வேறு ஒருத்தி இருக்கிறாள்.





இப்படியே, அவரவர் நிலைப்பாட்டின் படி வாழ்க்கை போக, ஒரு நாள் தன் நண்பருடன் டூவீலரில் சென்று கொண்டிருந்த கலையரசனை ஒரு கார் இடித்து விட, ஓட்டி வந்த நண்பனுக்கு பெரிய அடி இல்லை. ஆனால் உட்கார்ந்து வந்த கலையரசன் தான் பலத்த அடி வாங்கினார்.





விபத்து நடந்தது அவரின் ஊர் எல்லைக்கு சற்றுத் தள்ளி என்பதால் அவருக்குத் தெரிந்தவர்கள் கூடி ஆம்புலன்சுக்கு அழைத்து அவருக்கு என்ன ஏது என்று பார்க்க, அதே நேரம் வேந்தனுக்கு செய்தி போக, அன்று வெளியே கார் எடுத்துக் கொண்டு போயிருந்தவன் விபத்து நடந்த இடத்திற்கு பக்கத்திலே இருக்கவும், உடனே வந்து அவரை டவுனில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான்.





ரத்தம் தேவைப்படும் என்று டாக்டர் சொல்ல, அவருடையதும் இவனுடையதும் ஒரே வகை என்பதால் இவனே ரத்தம் தர, மறுநாள் தான் கண் விழித்தார் கலையரசன்.





இனி பயம் இல்லை ஆனால் காலில் ஏற்பட்ட அடியால் இனி அவர் நடப்பது சிரமம் என்று மருத்துவர் சொல்லி விட, அவர் பிழைத்ததே போதும் என்று நினைத்தார்கள் குடும்பத்தார்கள்.





அவரை மருவத்துவமனைக்கு அழைத்து வரும் போதே வீட்டில் உள்ளவர்களுக்கும் சித்தி அங்கைக்கும் அழைத்துச் சொல்லி விட்டான் மதிவேந்தன்.





அந்த வினாடியே அண்ணன்களுடன் வந்தவர் தான் அங்கை. கணவன் கோலத்தைப் பார்த்து துடித்தவர், மருத்துவர் இனி பயம் இல்லை என்று சொல்லவும், கணவன் கண் விழிக்கும் வரை ஊண் உறக்கமின்றி அந்த இடத்தை விட்டு அசையாமல் இருந்தார் அவர்.





அவர் அப்படி இருக்க, கூடப் பிறந்தவர்களும் பிள்ளைகளும் விட்டு விடுவார்களா என்ன? ஐயாரு முதற்கொண்டு அங்கையைத் தாங்கிக் கொண்டார்கள்.





ஒரு மாதம் மருத்துவர் கண்காணிப்பில் இருந்து விட்டு தான் வீட்டுக்கு வந்தார் கலையரசன். அப்பொழுதெல்லாம் பகலில் மனைவியும் இரவில் பிள்ளைகளும் மதிவேந்தனும் பார்த்துக் கொண்டார்கள். ஏன், சில நாளில் அவரைப் பார்த்துக் கொள்ள இரண்டு மைத்துனர்களுமே இரவில் தங்கிக் கொண்டார்கள்.





இயற்கை உபாதைக்கு மற்றவர்களிடம் சகஜமாக உதவி கேட்க முடிந்தவரால் மதிவேந்தனிடம் மட்டும் உதவி கேட்க முடியவில்லை அவரால். அதற்கு காரணம் சங்கோஜம் இல்லை. இவனிடம் உதவி கேட்க வைத்து விட்டானே அந்த ஆண்டவன் என்ற ஆத்திரம்.





கலையரசனுக்கு கூடப் பிறந்தவர்கள் எட்டு பேர். மூன்று அக்கா, இரண்டு அண்ணன், இரண்டு தம்பி. ஐயாரு குடும்பம் போல் இவர்களிடம் ஒற்றுமை இல்லை. அதனால் எல்லா சொத்துக்களையும் பிரித்து அவரவருக்குக் கொடுத்து விட, வசதியில் மனைவி குடும்பத்தை விட மேலே இருந்தவர் தற்போது தாழ்ந்து போனார்.





அதனால் மனைவி குடும்பத்தினரிடம் மரியாதை போனதாக அவருக்கு ஒரு எண்ணம். அதெல்லாம் அவரளவில் மாயை தான். மாப்பிள்ளை என்ற கெத்துடன் இந்த வீட்டிற்கு அவர் வந்த போதே கந்தமாறனுக்கும் மூர்த்திக்கும் அவரின் குணம் தெரிய வர, இந்த வினாடி வரை அனுசரித்துத் தான் போகிறார்கள்.





அவருடைய ஆட்டமும் அதிகமாகத் தான் இருக்கும். அதெல்லாம் மதிவேந்தன் வரும் வரை தான். தன் கணவருடன் எங்கோ சென்று வாழ்ந்து வந்த தாமரை திரும்பி தன் மகனுடன் தாய் வீட்டுக்கு வந்த போது அதிலும் அனைத்துக்கும் வேந்தனே ஐயாரு குடும்பத்திற்கு என்று ஆன போது அவருடைய பாச்சா பலிக்காமல் தான் போனது.





அப்பொழுதும் அவருடைய சிடு சிடுப்பு குறையாமல் போக, அவர் பெற்ற பிள்ளைகளே அவருக்கு கலையரசன் என்ற பெயருக்கு பதில் சிடுசிடுஅரசன் என்று பட்டப் பெயர் வைத்துப் பேசிக் கொள்வார்கள். மற்றவர்களிடம் எப்படியிருந்தாலூம் மனைவி பிள்ளைகள் விஷயத்தில் கலையரசன் தங்கமான மனிதர் தான்.

சாதி மல்லிப் பூச்சரமே !!!3
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!!4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Lovely update dear
Ivan manasula anda ava irupa pola
Mkum villangam tan

ரொம்பவே வில்லங்கம் தான் யா :D:D:D:D thank you dear :love::love::love:💚💚💚💚
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN