சாதி மல்லிப் பூச்சரமே!!! 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 16

வேந்தன் பண்ணை வீட்டில் இருக்க மருமகனைத் தேடி வந்தார் மாறன்....

அவரைப் பார்த்ததும் “வா மாமா... வா. சந்தோசமானு கேட்டுட்டுப் போறா உன் பொண்ணு. இல்ல... இல்ல... என் பொஞ்சாதி. நீ சொல்லு மாமா... நான் சந்தோசப்படுவனா?” நன்றாகக் குடித்து விட்டு நாக்கு குழற அவரைக் கேட்டான் அவன்.


அவன் எதிரில் முழுக்க சரக்கு பாட்டில்கள். “பொருத்தம் கேக்குதா மாமா அவ... பொருத்தம். மன பொருத்தத்த பாக்கச் சொல்லு மாமா அவள...” என்றவன் ஒரு பாட்டில் சரக்கை அப்படியே அவன் வாய்க்குள் கவிழ்த்தவன்.


“இங்க பார்... அவ ஒனக்கு பொண்ணு, என் அம்மாவுக்கு அவ மருமவ, எனக்கு பொஞ்சாதி.... அப்டிதேன் எல்லாரும் நெனைக்குறீய? ஆனா... ஆனா....” தலைக்கு கீழே இரண்டு கையை கொடுத்து அப்படியே தரையில் மல்லாக்க படுத்தவன் வானத்தில் மிதந்த நிலவைப் பார்த்து,


“நிலவைப் பார்த்து வானம் சொன்னது என்னைத் தொடாதே.... அப்டிதேன் மாமா.... என் பொஞ்சாதி என்னைய புடிக்கலன்னு சொல்லிட்டா....” என்றவன் திரும்பவும் பழைய பேச்சுக்கே வர,


“அவ என் உசுரு மாமா. ஒனக்கு அவ சாமினா... எனக்கு என் வாழ்க்கையே அவதேன் மாமா...” என்றவன் தன் கையைக் கொண்டு போய் நெஞ்சில் வைத்து அழுத்தி “யோவ்... அவ இங்க மட்டும் இல்லையா... என் ஒடம்பு முச்சூடும் ஓட்ற ரத்தமா அவதேன் யா இருக்குதா...” என்றபடி பட்டென எழுந்து அமர்ந்தவன்


“இதுக்கு மேல ஒரு பொண்ணுக்கு என்னையா வேணும்? எங்கன இருந்தாலும், என்னைக்கி இருந்தாலும் அவளத் தூக்கிருவேன் யா. ஆனா... என்னைய பெத்த ஆத்தா.... அதேன் ஒன் தங்கச்சி... மவராசி இருக்கே, அது வேணாம்னு இல்லையா சொல்லிருச்சி...” துக்கத்தில் தலையைத் தொங்க போட்டு ஒரு நிமிடம் அமர்ந்தவன்


“நீ சொல்லு யா... மவனோட காதல் முக்கியமா... இல்ல மானம் முக்கியமாயா? அவ என் பொஞ்சாதியா! அத ஒன் தங்கச்சிட்ட சொல்லு...” நிமிர்ந்து குடியால் சிவந்திருந்த கண்களால் மாமனைப் பார்த்து “என் மானம்... என் காதல் ரெண்டுமே எனக்கு ஒன் பொண்ணுதேன். அவளை கெட்றது தான் இதுக்கு ஒரே வழி... ஒன் தங்கச்சிட்ட சொல்லி சம்மதம் வாங்கித் தாயா....” இன்னும் அவன் என்ன சொல்லி இருப்பானோ அதற்குள் போதை தலைக்கேற கீழே சரிந்தான் வேந்தன்.


“மாப்ள...” என்று கட்டி அணைத்தவர் அவன் படுக்க, படுக்கையைச் சரி செய்து படுக்க வைத்தார் அந்த தாய் மாமன்.


தென்றல் அங்கு பேசப் பேச வேந்தனுக்கு கோபமும் ஆத்திரமும் தான் இருந்தது. ஆனால் இங்கு தனியே வந்தவனுக்குத் தன் மனக் குமுறலைக் கொட்ட வழியானது. இவ்வளவு பேசின மாப்பிள்ளை மறந்தும் தன் பெண் விரும்புவதை இழிவாக ஒரு வார்த்தை பேசவில்லை என்று அப்போதும் மருமகனை உயர்வாகவே நினைத்தது அந்த மாமன் மனம்.


மகனைத் தேடி தன் சின்ன அண்ணன் மூர்த்தியோடு அங்கு வந்த தாமரை, இதை எல்லாம் கேட்க நேரிட, “முதல்ல எல்லாம் என் மகன் நல்லா வாழணும்னு நெனைப்பேன் ணே. ஆனா இப்போ என் மகன் வாழ்ந்தா போதும்னு நெனைக்க வச்சிட்டாணே அவ...” வந்தவர் தானும் தன் மனக்குமுறலைக் கொட்ட


“அந்த புள்ள செஞ்சதுக்கு இந்த அண்ணனை வெறுத்துராத தாயி...” மாறன் கெஞ்ச


“என்னண்ணே இப்டி சொல்லுத! என் மகனை அஞ்சு வயசுல இருந்து அப்பாவா கைத் தாங்கி, தாய் மாமனா தோள் தாங்கி வளர்த்ததே நீ தானணே? எனக்கே இப்டி இருந்தா அவனை இப்டி பாக்க ஒனக்கு மட்டும் எப்டிணே இருக்கும்...” என்று தன் அண்ணனை சமாதனப் படுத்தினார் அவர்.


பெரியவர்கள் சண்டை போட்டால் சின்னப் பிள்ளைகள் தான் அதை மறந்து பழம் விட்டுப் பழகிக் கொள்வார்களா? இதோ இங்கு சிறியவர்கள் சண்டை போட... பெரியவர்கள் சமாதானம் ஆகிப் பழகினார்கள்.


திடீர் என்று மூர்த்தி என்ன நினைத்தாரோ, “ஏன் தாயி... என் மவ நிலவழகியை உன் மருமவளா ஏத்துக்கிறுவியா?” அவர் கேட்க, தாமரை தயங்க...
“ஏன்ணே... என் மவனுக்கு வேற பொண்ணே கிடைக்காதுன்னு முடிவு செய்துட்டியா?” தங்கை இப்படி கேட்பாள் என்று அண்ணன்மார்கள் இருவருமே நினைக்கவில்லை.


“தாயி!” என்று இருவரும் அதிர்ந்தவர்கள்


“என்ன தாயி இப்டி சொல்லுத? நம்ப வீட்டு சிங்கக் குட்டி தாயி இவன். அப்டிதேன் நாங்க வளத்தோம். யாரோ ஒரு பொண்ணு வந்து இவனை கெட்டிக்கிட்டு இவன் மனச புரிஞ்சிக்காம பேசிருச்சினா… அது எங்களால தாங்க முடியுமா இல்ல பாக்கதேன் முடியுமா? அதே அழகினா மாப்ள குணத்தையும் அறிஞ்சிக்கிடும்... இவன் பழைய காதலையும் உணர்ந்துக்கிடும்.... அதாம்ல தாமரை சொல்லுதேன்...” மூர்த்தி விளக்கம் தர, அப்போதும் தங்கையின் முகம் தெளியாததைக் கண்டவர்


தம்பியின் பேச்சை, ஆமோதிப்பது போல் “எல்லாம் என்னாலதேன்.... எல்லாம் என்னாலதேன்... நான் ஒழுங்கா பொண்ணை வளக்கலையே...” தலையிலேயே மாறன் அடித்துக் கொள்ளவும்.


“அண்ணே! நீங்க ரெண்டு பேரும் இப்படி அவனுக்காக பாக்கும்போது எனக்கு அவனைப் பத்தி என்னணே வெசனம்?” என்ற தங்கை “இவன் மனசுல ஒருத்தியை நெனைச்சிட்டு இருக்கும்போது எப்டினுதேன் யோசனையா கெடக்கு...” சின்ன அண்ணனுக்கு தன் மனதை மறைக்காமல் தாமரை சொல்ல


“இல்ல தாயி… மூர்த்தி சொல்றதுதேன் சரி. நீ சம்மதம்னு சொல்லு. ஆக வேண்டிய காரியத்தை நான் பாத்துக்கிடுதேன்” மாறன் கிடுக்கிப் பிடி போட


“ஆமா... ஒன் தங்கச்சியை சம்மதம்னு சொல்லச் சொல்லு.... வேணாம் வேணாம்.... சரின்னு தலையை மட்டும் ஆட்டச் சொல்லு.... பொறவு நானாச்சி என் பொஞ்சாதி ஆச்சி....” வேந்தன் இவர்களுக்குள் நடப்பது அறியாமல் உளற


மருமகனை திரும்பி பார்த்த மாறன், “என்ன நடந்தாலும் இவனை நான் இப்டியே விட்ற முடியாது. என் பேச்சுக்கு என் மாப்ள கட்டுப்பட்டுதேன் ஆகணும். சின்னவன் சொன்னதுதேன் சரி. நான் ஐயா கிட்ட பேசுதேன்” என்றவர் அதற்கான வேலையைப் பார்க்க வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு அப்போதே கிளம்பினார் வேந்தனின் மூத்த மாமா.


தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, மறுபேச்சு பேசி தன் மகளை மருமகளாய் ஆக்கச் சொல்லி அதிகாரம் செய்யாமல் இப்போதும் தன்னுடைய மகனின் வாழ்வுக்காக ஓடும் அந்த பாசமிகு அண்ணனையே கண்ணில் நீர் தட்ட பார்த்துக் கொண்டிருந்தார் தாமரை.


அதன் பிறகு வேந்தன் இரண்டு நாள் வரை பெரிய வீட்டுக்கே வரவில்லை. பிறகு வந்தவனை, “ஒன் தாத்தாவுக்கு குடிகாரனுவளை புடிக்காது... அப்படி வர்றவனுவள வீட்டுக்குள்ளாற சேத்துக்கிட மாட்டார். அதாம்ல மாமனும் மருமவனும் ஆரம்பத்தில இருந்து பண்ணை வீட்டுக்கு கெளம்பிட்டீய. ம்ஹும்.... தொர வீட்டுக்கு வந்து ரெண்டு நாளாச்சு. இப்டியாலே அந்த மேனாமினிக்கி ஒன்னைய ஆட்டிப் படைக்குதா? குடிகாரா... குடிகாரா....” பாட்டி மனது தாங்காமல் பேரனை வைய


அவர் எதிரில் மண்டியிட்டு அமர்ந்து அவரின் கன்னம் இரண்டையும் பிடித்து இழுத்து குழந்தையென தலையாட்டி ரசித்தவன், “இந்த மேனகை என் தாத்தாவ மயக்கினதை விட அவ என்னைய நூறு மடங்கு மயக்கிட்டா... என்ன செய்ய?” என்றவன் “அப்புறம்… நாங்க எல்லாம் குடிகாரங்க இல்ல மதுப் பிரியர்கள்! அரசாங்கமே சொல்லிருச்சி....” இவன் அவரைத் திருத்த, வாய் மேல் கை வைத்து அதிசயத்தார் பாட்டி.


இவன் சாப்பிட்டு முடிக்கும் வரை வீட்டில் வேறு யாரும் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் தாய் முதல் நிலவழகி வரை அனைவரும் அங்கு வீட்டில் தான் இருந்தார்கள். அப்போதே அவனுக்கு தெரிந்து விட்டது ஏதோ விஷயம் பேச என்று…


உணவுக்குப் பின் ஐயாரு எதிரே வந்து நின்றவன், “என்ன விசயம்” என்று கேட்க


மீசையை முறுக்கிக் கொண்டே பேரனை மெச்சுதலாய் ஒரு பார்வை பார்த்தவர், “இப்டி ஒக்காரு வேந்தா ஒன் கிட்ட செத்த பேசணும்...” என்று அவர் பக்கத்தில் இருந்த இருக்கையைக் காட்ட


இவன் அமர்ந்ததும் “ஒன் கல்யாணத்தைப் பத்தி பேசிரலாம்னுதேன்...” அவர் ஆரம்பிக்க


“இதுல பேச என்ன இருக்கு?” இவன் பதிலில் பேரனை ஆழ்ந்து பார்த்தவர்


“என்ன இல்ல? மொதல்ல அதச் சொல்லுடே. நீ என் பேரன்... இந்த வீட்டு ஆண் வாரிசுடே”


இதைக் கேட்க நேர்ந்த செண்பகவல்லியோ, “இந்த வீட்டுக்கு ஆண் வாரிசா பத்து வயசுல என் பையன் இருக்குதான். ஆனா பொண்னு பெத்ததை போய் வாரிசுனு சொல்றாக பார் இந்த ஆக்கங்கெட்ட மனுசன்...” சத்தமில்லை என்றாலும் வாய்க்குள்ளே முனங்கிக் கொண்டார் அவர்.



“எனக்குப் பொறவு இந்த குடும்பத்தையும் நம்ப சாதி மக்களையும் வழி நடத்தப் போறவன் நீ தேன். அப்போம் ஒனக்கு ஒரு கல்யாணத்தை செஞ்சு பாக்கறது எங்க கடமையா இல்லையா சொல்லு…” அவர் கேள்வியில் முடிக்க


“பாப்பு கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டாளா மாமா?” இவன் அங்கிருந்த மாமனிடம் எதிர் கேள்வி கேட்க, அதாவது அவள் தான் என் மனைவி என்ற பிடிவாதத்தில் இவன் நிற்க


“அங்கிட்டு என்னடே கேள்வி கேக்க? நான் இங்கிட்டு ஒருத்தன் பேசிட்டு இருக்கேனல்லோ?” என்றவர் “பொண்ணு பூந்தென்றல் இல்ல.... அந்த புள்ளதேன் வேற ஒருத்தனை காதலிக்குதானு சொல்லிருச்சு அல்லோ?”


அவரை முடிக்க விடாமல் “அவ பொண்ணு இல்லனா… பொறவு எதுக்கு என் கல்யாணத்தை பத்தி பேசுறீய? அவளப் பத்தி என்ன தெரியும் ஒங்க எல்லாருக்கும்?”


மகனின் குணம் அறிந்தவர் அவனை முடிக்க விடாமல் இப்போது தாமரை இடை புகுந்தவர் “அவளப் பத்தி பேசறதா இருந்தாலோ இல்ல அவளத் தான் கெட்டிக்குவேன்னு பிடிவாதம் பிடித்தாலோ... இனி நான் இந்த வீட்டிலே இருக்க மாட்டேன்...” ஒரு தாயாய் இவர் தன் பிடிவாதத்தில் அனைவர் முன்னும் நிற்க


தாயை ஒரு தீர்க்கப் பார்வை பார்த்தவன் சலிப்புடன், “இப்போம் எதுக்கு இம்புட்டு அவசரம்?” என்க


“ஒன்னைய இப்டி பாக்க முடியலையாம் ஒன் மாமன்களுக்கு. எங்க நீ இப்டியே நின்னுருவியோனு பயப்பட்ரானுவ...” ஐயாரு சொல்ல, உண்மை தான்! மாமன்கள் தன் மருமகனை எந்த விதத்திலும் சோர்ந்து போகாமல் பார்த்துக் கொள்ளத் தான் நினைத்தார்கள்.


“இப்போம் என்ன நான் மொடா குடிகாரனா மாறி எங்கனாயாச்சும் விழுந்து கெடக்குதனா... இல்ல தேவதாஸ் கணக்கா தாடி வெச்சிகிட்டு வாழ்க்கையே முடிஞ்சிருச்சுன்னு ஒக்காந்துட்டனா? சில விசயங்கள மறக்க சில முடிவுகளை எடுக்கறதுக்காண்டி ரெண்டு நாள் எனக்கு தேவைப்பட்டுச்சு. அதுகுள்ளாற நான் என்ன செ...” செத்தா போய்ட்டேன் என்று சொல்ல வந்தவன் சுற்றத்தாரின் அன்பை உணர்ந்தவனாக கண்களை மூடி ஒரு வினாடியில் தன்னை நிலைப்படுத்தியபடி “சரி... கல்யாணத்தைப் பத்தி பேசணும்னு வந்தீய… அதச் சொல்லுக” ஐயாரு முன்பு பேசிய விஷயத்துக்கு இவன் தாவ


ஐயாரு ஒரு முறை தன் மீசையை முறுக்கிக் கொண்டவர், தொண்டையை ஒரு கனைப்பில் சரி செய்தபடி “ஒனக்கு வேற பொண்ணு பாத்து வெச்சிருக்குதோம்...” என்க


“எவ அவ?” இவன் நக்கல் தொணியில் கேட்க


“எல்லாம் நம்ப நிலவழகிதேன்!” ஐயாரு போட்டு உடைக்க


“என்னது?” ஒப்பாத அந்த வார்த்தையில் அதிர்ந்தான் வேந்தன்.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Nice story... previous epi link enga
அன்புகள் சிஸ்😍
மேல "சாதி மல்லிப் பூச்சரமே!!!16" என்ற வாக்கியத்து கீழ center ah அதே வாக்கியத்துடன் 9 னு இருக்கும் பாருங்க
அது எல்லாம் previous தாங்க சிஸ்... நீங்க இதே மாதிரி click செய்து 1st epi போய் படிக்கலாங்க சிஸ்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN