சாதி மல்லிப் பூச்சாரமே !!! 8

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 8

இவர்கள் அனைவரும் காலை உணவை உண்டு முடிக்கும் நேரம் பதநீர் வந்தது. அதைக் குடிக்கப் பிடிக்காமல் தோட்டத்தையே ஓட்டப்பந்தய வீராங்கனை ஹிமா தாஸூக்கு நிகராக சுற்றி வந்தாள் தென்றல். “அப்பா! இவன் ஏதோ கள்ளச் சாராயத்தை காய்ச்சி எடுத்து வந்து என்னைய குடி குடின்னு சொல்லி சாகடிக்கப் பார்க்கிறான் ப்பா” என்று இவள் ஒரு கட்டத்திற்கு மேல் தந்தையிடம் புகார் பட்டியல் வாசிக்க





“அடிக் கழுத! வாய் மேலயே ரெண்டு போடுதேன். நானா உன்னைய சாகடிக்குதேன்? கார்ப்பரேட் கம்பெனிக்காரன் பல கெமிக்கல் கலந்து வெசத்தன்மையோட புட்டியில அடச்சி குடுக்குதான்… அத ஆஹா ஓஹோ சூஸ்னு குடிக்கரீய. அதே இயற்கையா பூம்பாளையைச் ஒனக்குச் சாறெடுத்து தந்தா அது சாகடிக்கற வெசமா? இத குடிச்சி பாரு. பெறவு ஒனக்கு எந்த பூஸ்ட், ஹார்லிக்ஸ், குளுக்கோஸ்னு எதுவும் தேவ இல்லட்டி” என்று பாடம் எடுத்தவன் விடாப்பிடியாக அவளைக் குடிக்கச் சொல்ல





“ப்பா! நீங்களாவது சொல்லுங்க” என்று இவள் மறுபடியும் தந்தையிடம் வந்து நிற்க





“எலேய்! அவளுக்குப் புடிக்கலனா விடுடே” என்று அவர் மகளுக்குப் பரிந்து பேசவும்





“அப்டி எல்லாம் வுட முடியாது மாமோய்! அவளுக்கு நல்ல வெசயத்த நாம எடுத்துச்சொன்னா அவ கேட்டுக்கிடத்தேன் வேணும்....” என்று இவன் பிடிவாதம் பிடிக்க





இருவரையும் பார்த்தவர் “எப்டியாச்சும் போங்க. ஒங்ககூட மல்லுக்கட்ட என்னால முடியாது. எனக்கு நெறைய சோலி கெடக்கு. நான் போய் சோலியப் பாக்குதேன்” என்ற சொல்லுடன் உள்ளே சென்று விட்டார் மாறன்.





இவளோ கோபமான முகத்துடன் அமர்ந்திருக்க, கையில் பதநீருடன் அவள் பக்கத்தில் அமர்ந்தவன், “அத்தைக்கு நத்த கறியும், இந்த பதனியும் ரொம்ப பிடிக்கும். ஒனக்கு ஏன்தேன் புடிக்கல பாப்பு?” என்று இவன் கேட்க





முதன் முதலாக அவன் தன் தாயைப் பற்றி பேசியதில் சற்று நேரம் அமைதியாக இருந்தவள் “இன்னும் வேற என்னென்ன என் அம்மாவுக்குப் பிடிக்கும்?” என்று இவள் ஆவலே வடிவாய் கேட்க





அவள் கையில் பதநீர் சொம்பைத் திணித்தவன், “இத குடிச்சா நான் சொல்லுதேன்” என்று பேரம் பேச, எந்த ஒரு எதிர் வினையும் காட்டாமல் வாங்கி ஒரு துளி வைக்காமல் குடித்தாள் அவனின் பிடிவாதக்காரி.





அதில் திருப்தி ஆனவன், அவளின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று மோட்டார் அறை பக்கம் நிறுத்தி, “தோ இங்கன இருக்கே இந்த கொய்யாமரக் காய்தேன் அத்தைக்கு ரொம்ப புடிக்கும். இது நல்ல சாதிக் காயாம்! மாமா சொல்லுவாக” என்று இவன் விளக்க





“அதென்ன மாமா நீயும் இந்த குடும்பம் மாதிரியே கொய்யாப் பழத்துக்கு எல்லாம் ஜாதி வச்சி சொல்ற! எனக்கு அப்பா மேல கோபம் வர்றதுக்கு காரணமே ஐயாரு தாத்தாவ எதுவும் கேட்காம அவர் சொல்றதுக்கு எல்லாம் ஆமா போடறாரே என்று தான்” என்று இவள் இடைவெட்டி கோபப் பட





அதில் தன்னவளைப் பெருமையாகப் பார்த்தவன், “அது… இங்கன எல்லாம் அப்டிதேன். அதுவுங்கூடி ஐயாரு மாதிரி பெரியவங்கள எல்லாம் மாத்த முடியாது. வேணும்னா நம்ம காலத்துல நாம மாத்திக்கிடுவோம்” என்று உணர்ந்து சொல்லியவன்





“இது நாட்டு காய். அத்தைக்கு ரொம்ப புடிக்கும். இங்க வர்றப்ப எல்லாம் மாமா காட்டிலேயிருந்து பறிச்சி கொண்டு வந்து தருவாக. பெறவு தான் அத்த இங்கிட்டு ஒரு மரம் இருக்கட்டும்னு வெக்கச் சொன்னாக. ஒனக்கு அப்போம் ரெண்டு வயசு. எனக்கு எட்டு வயசு. நான்தேன் என் கையால இங்கன இந்த மரக்கண்ணு வெச்சேன். அத்தைக்கு என் மேல அம்புட்டு பாசம். நான்தேன் அவுகளுக்கு மொத புள்ள தெரியுமா?” அன்றைய நினைவில் இவன் கண்கள் மின்ன பெருமையாய் சொல்ல





அதில் கடுப்பானவள், “உனக்கு அப்போ எட்டு வயசு தான. ஆனால் அதெல்லாம் உனக்கு ஞபகம் இருக்கா?” அவன் பொய் உரைக்கிறானோ என்ற எண்ணத்தில் இவள் கேட்க,





“கொஞ்சம் கொஞ்சம் நெனவிருக்கு. ஆனா நானும் மாமாவும் இங்கன அடிக்கடி வருவோம். அப்போம்லாம் மாமா நெறைய சொல்லுவாக” இவன் முடிப்பதற்குள் மின்னலென வீட்டின் உள்ளே பாய்ந்து சென்றிருந்தாள் தென்றல்.





“ப்பா! அம்மாவுக்கு என்னென்ன ப்பா பிடிக்கும்?”





மகள் இப்படி திடீரென கேட்கவும், மாமன் மருமகனைப் கேள்வியாய் பார்க்க, அவன் கண்ணாலேயே ஏதோ சொல்ல, அதைப் புரிந்து கொண்டவர் பின் மடை திறந்த வெள்ளமாய் மனைவியைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார் மாறன்.





அதில் தாய்க்குப் பிடித்த கொடிசம்பங்கியை மகள் பார்க்க கேட்க, அதைப் பின்புறத் தோட்டத்தில் இருப்பதாக சொல்லி அவர் சென்று காட்ட, “ப்பா! இதே மாதிரி ஒரு கொடிய என் கையால அம்மாவுக்குப் பிடித்த கொய்யா மரத்திற்கு பக்கத்துல நடணும் ப்பா” தந்தைக்கு கட்டளை இட்டாலும் வேந்தனைப் பார்த்து உதட்டை வளைத்து பழிப்புக் காட்டவும் மறக்கவில்லை தென்றல்.





அதை ரசித்தவன், “பார்லா! உரிமப் போராட்டமா? பாத்து, கோணிச்சுரப் போகுது” என்றவன் அவள் சொன்னதை செய்து தர, அன்றே அந்த கொடி சம்பங்கியை வேந்தன் வைத்த கொய்யா மரத்திற்கு பக்கத்தில் தன் கையால் சந்தோஷத்துடன் நட்டாள் தென்றல்.





பின் மாறன் கறி எடுத்து வரச் செல்ல இருக்க, வேந்தனோ “ஏன் மாமோய், பட்டில சொன்னா அங்கன இருக்கறவங்களே எடுத்து வரப் போறாக. நீ ஏன் ஓடிட்டு கெடக்க?” மாமனுக்கு அலைச்சல் வேண்டாமே என்று நினைத்தான் அவன்.





“எலேய்! ஆட்டோட முடிய வெச்சும் தோல வெச்சும் அது என்ன ரகம்னு கண்டு புடிக்கறவன்டே நானு! எம் மவளுக்கு எள ஆட்டுக் கறி வேணும்டே. கூடச்சேர்த்து நாட்டுக்கோழியும் வாங்கணும்லே. ரசம் வெக்க வேணுமில்ல? அப்டியே ஐயாருக்கும் சேர்த்து கறி எடுத்துக் குடுத்துட்டு ஒரு எட்டு அவர பார்துட்டு வரேன்லே. ரெண்டு நாளாச்சி அவுகளப் பாத்து. நீதேன் இங்கன இருக்கல்லோ? தென்றலப் பாத்துக்க. தோ வெரசா போய்ட்டு வருதேன்” என்றவர் அவன் பதிலை எதிர்பார்க்காமல் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு சென்று மறைந்தார் அவர்.





இந்த வீட்டுக்கு வந்தாலே மனைவி முதல் வேந்தன் வரை எல்லோருக்கும் எப்போதும் அவர் கையால் தான் சமையல் என்று தெரிந்தவனுக்கு இன்று மகளுக்காக செய்யத் துடிக்கும் அவரின் குணம் புரியாதா என்ன?





இவன் சமையலறையில் சமையலுக்கு வேண்டிய காய்களை நறுக்கிக் கொண்டிருக்க, உள்ளே ‘டமார்’ என்று ஏதோ விழும் சத்தம் கேட்க கூடவே, “மதிமாமா! மதிமாமா!” என்று தென்றலின் குரல் கேட்கவும்





“தென்றல்!” என்ற சொல்லுடன் இவன் அடித்துப் பிடித்து ஓடிப் போய் பார்க்க, அங்கு கண்ட காட்சியில் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரித்தவன், “ஏட்டி! வாயாடி மங்கம்மா! என்னட்டி வித்தக் காரி மாதிரி தொங்கிட்டு கெடக்கெறவ? இப்போம் மட்டும் மதிமாமாவா? இன்னுங் கூடி நாலு தடவச் சொல்லுட்டி” தொன்றல் பரண் மேலுள்ள விளிம்பில் தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்த்துச் சொன்னவன், அவன் கேட்டதை அவள் சொன்ன பிறகே அவளை இறக்கி விட்டான் இவன்.





திரும்பவும் அவன் விடாமல் அவளின் தொங்கிய கோலத்தை நினைத்து சிரித்துக் கொண்டேயிருக்க “டேய்... கரிபால்டி! சிரிக்காதடா” என்று இவள் கோபத்துடன் பல்லைக் கடிக்கவும்





“ஆமா நான் கரிபால்டிதேன். இவ அப்டியே சொக்க வெக்கும் சொக்க வெக்கும் ஜுவல்லரி பாரு” என்று சந்தானம் மாதிரியே தலையையும் கையையும் அசைத்து இவன் செய்கை பாவனையுடன் சொல்ல





அவன் பாவனையில் விழுந்து விழுந்து சிரித்தாள் தென்றல். தன்னைவளை ரசித்தவன் “இப்டியே சிரிச்சிட்டு இருந்தாதேன் மாமாக்கு புடிக்கும்” என்றவன் “சரி… இப்போம் எதுக்கு பரண் மேல ஏறுனவ?” என்று விசாரிக்க





“அம்மாவுடைய சில பொருள் மேல இருக்கறதா அப்பா சொன்னார். அதான் ஸ்டூல் போட்டு ஏறிப் பார்த்தேன். கடைசியில இப்படி ஸ்டூல் சரிந்து என்னை தொங்க விடும்னு நான் நினைத்துப் பார்க்கல” இவள் சோகமாய் சொல்ல





“சரி விடு, அதேன் நான் வந்துட்டேன்ல. ஆமா… அது என்னட்டி கைல?” இவன் அவள் கையில் உள்ளதை பார்த்து கேட்க





“இது பேரு என்னனு தெரியல. மரத்துல செய்த பொம்மை, அழகா இருந்தது. அதான் நீ இறக்கும்போது கையில் எடுத்துட்டு இறங்கிட்டேன். இது பெயர் என்ன மாமா?”





“இது பேர் மரப்பாச்சி பொம்ம. இதத்தாம்ல சின்ன வயசுல நாம ரெண்டு பேத்துக்கும் வெளையாட அத்த குடுப்பாக. இந்த பொம்மை எப்போம் சோடியாத்தேன் இருக்கும்” இவன் விளக்கம் தர





“ஓ! இது ஆண் மரப்பாச்சியா? அப்போ இதோட ஜோடி பெண் மரப்பாச்சி எங்க மாமா?”





அவளை ஆழ்ந்து பார்த்தவன் “அது இப்போம் ஒனக்கு எதுக்கு? அது இங்கன தான் எங்கனயாது கெடக்கும். பெறவு தேடிக்கிடுலாம்” என்று இவன் முடிக்க





அதை ஏற்றுக் கொண்டவள் “அப்போ இதை நான் எடுத்துக்கிறேன்” என்ற படி ஓடிப் போய் அந்த பொம்மையைத் தன் பையில் திணித்துக் கொண்டாள் தென்றல். அதற்கான ஜோடி பொம்மை வேந்தனிடம் இருப்பதை அறியாமலே செய்தாள் அவள்.





அன்றைய இரவு தன் கையாலேயே மாறன், பிள்ளைகள் இருவருக்கும் உணவு ஊட்டி கதை சொல்ல, இருவரும் ஆளுக்கொரு பக்கமாய் அவரின் கை புஜத்திலேயே தலை சாய்த்து தூங்கிப் போனார்கள்.





அன்று மட்டுமில்லாமல் அதன் பிறகும் திருவிழாவில் வேந்தனுடனே சுற்றினாள் தென்றல். பஞ்சு மிட்டாய், தேன் மிட்டாய் என்று ஆரம்பித்து ஜவ்வு மிட்டாயில் மீசை வாட்ச் வரை அவனை வாங்கிக் கொடுக்கச் சொல்லிக் கேட்டவள் கூடவே ரங்க ராட்டினத்தில் சுற்றும்போது தரையில் ஒரு பொருளை வைத்து விட்டு அவனை எடுக்கச் சொல்லி அந்த கிராமத்து மனிதர்களுக்கே உள்ள விளையாட்டை அவனுடன் விளையாடினாள் தென்றல். அந்த அளவுக்கு தன் அத்தை மகனுடன் ஒன்றினாள் தென்றல்.





ஒரு நாள் மாலை ஐயாரு வீட்டு மாடியில் ஜாதிமல்லி கொடியிருக்க, அதிலுள்ள பூக்களைப் பறிக்க பக்கத்திலேயே சின்னதாக படி ஒன்று இருக்கும். அன்று அதில் ஏறி பூ பறித்துக் கொண்டிருந்தாள் தென்றல். அவள் விரல்களோ பூவைப் பறித்துக் கொண்டிருக்க, அவள் இதழ்களோ

“மல்லி மல்லி இவ சாதி மல்லி பூத்திடுச்சி உன் பெயரை சொல்லி”

என்ற பாடல் வரிகள் மெல்லிய கானமாய் ஒலித்தது.





அழகிய கிளி பச்சை நிற பாவாடை சட்டையில், தலை குளித்து முடி விரித்து அம்மன் சிலையென காட்சி தந்தவளைப் படி ஏறி வரும்போதே தரிசித்த வேந்தன் கூடவே “எம் பேரத் தான பாப்பு?” என்று இவன் சீண்ட, இன்றிலிருந்து அவன் கைப்பேசிக்கு அழைப்பு பாடலாய் ஆனது தான் இந்த பாடல். இன்று வரை அவனுடன் தொடர்கிறது.





திடீரென இவன் குரல் கேட்ட அதிர்ச்சியில் இவள் அதிர்ந்தவள் நின்ற வாக்கில் இருந்து தடுமாறி சட்டென படியிலேயே அமர்ந்து விட, “ஏட்டி! நான்தேன்” என்றவன் அவள் முகம் இன்னும் தெளியாமல் அதே இடத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்து





“என்னட்டி, என்ன செய்து?” என்ற படி இவன் அவளை நெருங்க





“ஒண்ணும் இல்ல மாமா. லேசாய் வயிற்று வலி. நீ போ…” அவள் அவசரமாய் சொல்ல





“என்னது வயித்து வலியா?” என்று இவன் பதறிய படி அவள் வயிற்றில் கை வைக்க வர





அவசரமாக அவன் கையைத் தட்டி விட்டவள் “நீ போ... நீ போன்னு சொல்றேன் இல்ல?” என்று இவள் கோபப் பட





அவள் தன் கையைத் தட்டி விட்டதில் இவனுக்கும் கோபம் எழ, அதில் அவளை அலேக்காகத் தூக்கிக் கொண்டவன் “வலிக்குது வலிக்குதுனா… எனக்கு பதறுதல்லோ?” என்று இவன் பாசமாய் சிடுசிடுக்க





“ஐயோ மாமா! எல்லா பொண்ணுங்களுக்கும் வர்ற சாதாரண வலி தான் இது. என்ன கீழ விடு மாமா” என்றபடி இவள் திமிர





“அத டாக்டர் பாத்து சொல்லட்டும் கேட்டுக்கிடறேன்” என்றவன் அதே பிடிவாதத்துடன் நகர நினைக்க





“அச்சோ! எப்படி சொல்லுவேன்?” என்று முணுமுணுத்தவள் இடது கரத்தால் அவன் சட்டையை கொத்தென பற்றி வலது கரத்தால் அவன் கழுத்தை வளைத்து காதில் ரகசியம் பேச





அவள் சொன்ன செய்தியில்… சந்தோஷத்தில் ஸ்தம்பித்து நின்று விட்டான் வேந்தன். ஒரு பெண் மலர்வதை வழக்கமாக முதலில் தெரிந்து கொள்வது தாய் என்றால் இன்று தன் மனையாள் மலர்ந்திருப்பதை முதன் முதலில் கேட்டவனுக்கு வெட்கம் கூட வந்தது அந்த அரும்பு மீசைக்காரனுக்கு.





ஆமாம்... பூந்தென்றல் பெரிய மனுஷி ஆகி இருந்தாள். இவள் கூட படிக்கும் தோழிக்கும் சமீபத்தில் இதே வைபவம் நிகழ்ந்திருக்க, அவளும் அது சம்மந்தமாய் இவளுக்கு அனைத்து விபரங்களும் முன்பே சொல்லியிருக்க, அதை வைத்தே காலையிலிருந்து ஒரு வித சந்தேகத்துடன் இருந்தவளுக்கு இப்போது உறுதியானது. அதைத் தான் அவள் தன் மாமனிடம் சொன்னாள். இப்படி ஒன்றை சொல்லும் அளவுக்கு இந்த நான்கு நாளில் அவனிடம் நெருங்கி இருந்தாள் அவள். தென்றலுக்கு முன் இரண்டு வயது பெரியவளான நிலவழகிக்கும் போன வருடம் சடங்கு செய்திருந்ததால் மதிவேந்தனுக்கும் இவ்விஷயம் பற்றி கொஞ்சம் தெரிந்திருந்தது.





கண் மூடி ஒரு வித மௌன நிலையில் அதை உள்வாங்கியனோ சந்தோஷத்தில் தன் பொஞ்சாதியின் நெற்றியில் முத்தம் இட்டுவிட்டு கண்ணில் அப்பட்டமாய் காதல் வழிய மேற்கொண்டு அவளை கையில் தாங்கியபடி இவன் நடக்க, தென்றலுக்கு இருந்த மன உளைச்சலில் அவன் கொடுத்த முதல் முத்தம் மனதில் பதியவில்லை. மாறாக அவன் சுமந்து செல்வது பதிய “நான் தான் சொல்றேன் இல்ல? இறக்கி விடு மாமா” என்று முகம் பார்க்காமல் இவள் அதட்ட





“போடி… என் அம்மன கற்பக் கெரகத்துகுள்ளார வெக்கறதுக்காண்டி நேரம் வந்துருக்கு. அதை விட்ருவனா?” என்றவன் விடாப் பிடியாய் தன்னவளைத் சுமந்து வந்து அவள் அறையில் விட்டு விட்டு தாய்க்கு சொல்ல, வீடே பரபரப்பானது





தந்தையான கந்தமாறனுக்கு சந்தோஷம் தாங்கவில்லை. மீசையை முறுக்கிக் கொண்டு மேல் கொண்டு செய்ய வேண்டிய வேளைகளில் பம்பரமாக சுழன்றார் அவர். ஒரு தந்தைக்கு மகள் தன்னை முதல் முறை “அப்பா” என்று அழைத்ததில் அடைந்த சந்தோஷத்தை விட.. மகள் பல சாதனைகளை படைத்து.. முதல் இடத்தில் நின்று பல கோப்பைகளை.. பெற்று வருவதை பார்த்து பூரிப்பதை விட.. மகள் பெரிய மனுஷியாகி நிற்கும் தருணத்தில்… ஏதோ தம் சாம்ராஜ்யத்தை ஆள பட்டத்து ராணி வந்து விட்டதாகவே நினைத்து உணர்ந்து அக மகிழ்ந்து போவார்கள் தந்தைமார்கள். இதில் கந்தமாறன் மட்டும் விதி விலக்கா என்ன? தென்றலுக்கு தண்ணீர் ஊற்றி மாமன் சீருக்கு அமர வைக்க, நிலவழகிக்கு வேந்தன் கையால் செண்பகவல்லி எதையும் செய்யவிட வில்லை. அவளுடைய நான்கு அண்ணன்மார்களும் நிலவழகிக்கு போட்டி போட்டு செய்தார்கள். ஆனால் தென்றலுக்கு ஒரே மாமன் உறவு வேந்தன் தான் என்னும்போது அவனைத் தான் முன்னிறுத்தினார் மாறன்.





அதே நேரம் அங்கு நடந்த கோலாகலத்தில் இன்னும் சுருதி சேர்ப்பது போல் சடங்கு பாட்டைப் பாடினார் பாட்டி.

“குற்றால அடி போட்டு


கும்பகோண தறி போட்டு

முகப்புக்கு சாயமிட்டு

அத்தி சிறு பவள ஆனை முக கண்டாங்கி

குத்தி சிறு பவள குதிரை முக கண்டாங்கி

ஆத்துல மணல் சலுச்சு அதுல ரெண்டு தூணெடுத்து

தூணுக்கு தூணு துணை வாழ தானிறுத்தி

வாழ வகுந்து வளவெல்லாம் பந்தலிட்டு

தேக்கு வகுந்து தெருவெல்லாம் பந்தலிட்டு

முங்கி வகுந்து முத்தமெல்லாம் பந்தலிட்டு

பந்த பளபளங்க பந்தக்கால் சோதி மின்ன

நவரத்ன பந்தலிலே ராசாக்க வந்து நிக்க

எந்திரிடி பெண்ணரசே தாய்மாமாவ கை வணங்க

கையெடுத்த கைகளுக்கு என்னென்ன சீதனமாம்

கையிக்கோர் கணயாழி காலுக்கோர் வீரதண்ட

நெத்திக்கோர் சுட்டி நிலம் பாக்க கண்ணாடி


போடுங்க அம்மாக்க பொன்னான ஒரு குலவ”

என்று அவர் பாட, கூடியிருந்த பெண்கள் எல்லோரும் குலவை இட்டார்கள்.

நம் முன்னோர்களின் பாட்டும் சடங்குகளும் தான் எத்தகையது! இன்பமாய் நமக்குரிய பாரம்பரியத்துடன் மிளிர்ந்தது விழா நடந்த சபை.






பத்தொன்பது வயதுப் பையனான வேந்தன் அரும்பு மீசையுடன் அதிக கர்வமும் கொஞ்சம் வெட்கமும் கலந்த முகத்துடன் முன்வந்து தன்னவளுக்கு மாலை சூட்டி நலங்கு வைத்து மற்றப் பொருளுடன் மூன்று சவரன் அட்டிகையை வைத்துப் பெண்ணவளுக்கு கொடுக்க, அந்த அட்டிகையை அவன் கையாலேயே மகளுக்குப் போட்டு விடச் சொன்னார் மாறன். அந்த செயல் மற்றவர்களுக்கு எப்படியோ? ஆனால் வேந்தனுக்கு தனக்கு உரிமையானவளை ஊரறிய தாலி கட்டி தன்னவளைதா தன் பொஞ்சாதி ஆக்கிக் கொண்டதாகவே அன்று உணர்ந்தான் மண்மனம் மாறாத நெஞ்சம் முழுக்க தென்றல் மேல் காதல் கொண்ட வேந்தன்.
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சாரமே !!! 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அந்த பாடல் வரிகள் அப்பப்பா எவ்வளவு அருமையா இருந்தது.
ஆமாம் சிஸ் அழகான வரிகள்...😍
அன்புகள் சிஸ் 💝
 

Chellam

Member
நம் முன்னோர்கள் பாடல்களை எப்படி உணர்ந்து பாடி இருக்கிறார்கள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN