சாதி மல்லிப் பூச்சரமே !!! 45(நிறைவு பகுதி)

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 45

சாதி வெறியில் ஒரு முறை தன் வாரிசைத் தன் கையால் கொன்றதை வயதான இந்த நிலையில் தான் உணர்ந்து தவித்து கலங்குகிறார் ஐயாரு. அந்த செயலே அவரைக் கொள்ள… மறுபடியும் ஒரு உயிர் பலியா என்று துடித்தவர், “என்ன ஆத்தா, காலில் விழுதேனு கெஞ்சிகிட்டு கெடக்க என்ட்ட… ஒன் மவன் நான்… என்னைய செவிட்டுலே நாலு அறைய விட்டு இழுத்துகிட்டுப் போவாம… கெளம்பு ஆத்தா, பேசிகிட்டு கெடக்க நேரம் இல்ல. அங்கிட்டு நம்ப புள்ள துடிச்சிகிட்டு கெடக்கா...” எல்லாம் மறந்து தாய்க்கே அறிவுரை சொன்ன ஐயாரு வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்ப, என் மகனா இவன் என்பது போல் அவரைப் பார்த்த பாட்டி, அடுத்த நொடி மகனின் கட்டளைக்குப் பணிந்து காரில் ஏறி இருந்தார்.

அங்கு தென்றலுக்கு வலி அதிகம் வரவும், அழகியைத் தனியே அழைத்த மதிவேந்தன், “நீ அவளுக்கு மயக்க ஊசி போட்டுரு அழகி... நாம ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டு போய் பார்த்துக்கிடலாம்” இவன் தன் முடிவைச் சொல்ல

அவனைப் பரிதாபமாக பார்த்தவள், “அது… வலி எடுக்கிறதுக்கு முன்பே ஊசி போட்டிருக்கணும் மச்சான். இப்போ போட்டா மூன்று உயிருக்கும் ரிஸ்க். ஒரு டாக்டராய் அவள் நிதர்சனத்தைச் சொல்ல

அவனோ அதிர்ந்து இன்னும் துவண்டு போனான். “இதுக்கு மேலயும் என்னால சும்மா நிக்க முடியாது. நான் அந்த வீட்டுக்கே அவளை கூப்டுகிட்டு போகுதேன்... நீ என் மூணு உசுர மட்டும் காப்பாத்திக் குடுத்துடு...” இவன் அவளிடம் கெஞ்சிக் கொண்டிருந்த நேரம்

வாசலில் கார் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கி உள்ளே நுழைந்த ஐயாரு, “என் வம்சம் இங்க துடிச்சிகிட்டு கெடக்கு... நீ என்னயா சொல்லுதேனு ஒன் பொஞ்சாதிய கூட்டிகிட்டு வந்து அந்த வீட்ல தங்கிப் பிரசவம் பார்த்து என் முகரைல கரியப் பூசாம... இன்னும் வளர்த்த பாசத்தை பாத்துகிட்டு சும்மா நிக்க... போதும்லே நீ என் மேல உள்ள பாசத்துக்காண்டி கை கட்டி இருந்தது..” வேந்தனிடம் எகிறியவர், “தூக்குலே ஒன் பொஞ்சாதிய, அதாவது என் பேத்தியை ஆஸ்பத்திரிக்கு கூப்ட்டு போவோம்” அவர் அவனுக்குக் கட்டளையிட, மொத்த குடும்பமும் ஒரு வித நிம்மதியில் பரபரப்பானது.

அதற்குள் அங்கிருந்த வயது முதிர்ந்த மருத்துவச்சி, “ஐயா, புள்ள தலை திருப்பி அடி வயித்துலே முட்டி நிக்குதுங்க. ஆஸ்பத்திரி போற வரைக்கும் தாங்காது... வழியிலயே பிரசவம் ஆகிடுங்க...” அவர் கையைப் பிசைந்த படி எடுத்துச் சொல்ல

“அப்போ அதைப் பாருங்க முதல்ல.. மூணு உசுருக்கும் எந்த பாதிப்பும் வரக் கூடாது..” ஐயாரு கட்டளையிட

“இல்ல… இல்ல… இங்க வேணாம்… என்னை அந்த வீட்டுக்குக் கூட்டிட்டுப் போங்க தாத்தா. என் பிள்ளைங்க நம்ப வீட்டில் தான் பிறப்பார்கள்” தென்றல் உறுதியுடன் மறுக்க.

“நான் தான் இங்கு வந்துட்டனே தாயி? பொறவு என்ன… முதல்ல குழந்தைங்க பிறக்கட்டும்” தன் சம்மதத்தை அவர் சொல்ல,

“ம்ஹும்...” பல்லைக் கடித்த படி அவள் தலை அசைத்து பிடிவாதமாய் மறுக்கவும்,

“என்னலே இன்னும் பாத்துட்டு நிக்க? அதேன் புள்ள சொல்லுதா இல்ல… ஒன் பொஞ்சாதிய தூக்குடே, நம்ப வீட்டுக்குப் போயிரலாம்” ஐயாரு பரபரக்க, அங்கு எல்லோர் முகமும் கொஞ்சம் தெளிந்தது.

உணர்ச்சி துடைத்த முகத்துடன் மதிவேந்தன் மனைவியைத் தன் கைகளில் ஏந்த, ‘பாரு மாமா, இன்னும் கொஞ்ச நேரத்துல நாம ஜெயிக்கப் போறோம்’ இவள் பெருமிதத்தோடு கணவனைப் பார்த்து காதலோடு மனதிற்குள் சொல்ல, அவன் முகமோ யாரையும் பார்க்காமல் எதையும் உணராமல் இறுகிப் போய் இருந்தது.

வண்டியில் ஏறி கிளம்பும் நேரம், “உங்க தோட்டம் வழியா போகச் சொல்லுங்க தாத்தா” என்று ஐயாருவைப் பார்த்து தென்றல் சிறு குரலில் கட்டளையாய் சொல்ல.. அவருக்குப் புரிந்தது. முன்பு செந்தில்நாதன் ஐயா அவர்கள் அவர் மக்களுக்காகக் கேட்ட வழி அது என்று.

தன்னையே நொந்து கொண்டவர், “அந்த வழியே போகச் சொல்லுதேன் தாயி” என்றவர் அதன்படியே டிரைவருக்கு கட்டளையிட, விரைவாகவே வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்.

பின்னாலேயே மொத்த குடும்பமும் வந்து விட, தென்றலைத் தனி அறையில் படுக்க வைத்து பரிசோதனை செய்வதற்குள்... தங்கள் வீடு வந்து விட்ட சந்தோஷத்தில் அந்த நொடியே தாய்க்குப் பெரு வலியைக் கொடுத்து பிரவேசித்தார்கள் மதிவேந்தனின் இரண்டு பிள்ளைகள். இல்லை இல்லை… முன் ஜென்மத்தில் ஐயாருக்குப் பிள்ளையாய் பிறந்து அந்த வீட்டில் தவழ்ந்த இரண்டு வாரிசுகள்.

குழந்தையின் அழு குரல் கேட்டதும் எல்லோரும் நிம்மதியுடன் ஆர்வமாய் அறை வாசலைப் பார்க்க... குழந்தைகளைத் தன் கையில் ஏந்தி வந்த அழகிக்கு யாரிடம் முதலில் குழந்தைகளைக் கொடுப்பது என்பதே புரியாத நிலை. அத்தனை உறவுகளும் பதறித் துடித்து அல்லவா இவர்கள் இருவரின் வரவுக்கு காத்திருந்தார்கள்? யார் முதலில் வாங்குவது என்று அவர்களுக்குள்ளே ஏக்கமும் தயக்கமுமாய் இருக்க...

எந்த தயக்கமும் இல்லாமல், “என்ட்ட குடு தாயி” என்று முன்னே சென்று இரு குழந்தைகளையும் தன் கையில் வாங்கினார் ஐயாரு. ஆர்வமாய் அவர் பிள்ளைகளைப் பார்க்க, அவருடைய இரு பிள்ளைகளுக்கு இருந்த மாதிரியே இப்போது பிறந்திருக்கும் பெண் குழந்தைக்கு புருவத்திற்கு மேல் மரு இருக்க... ஆண் குழந்தைக்கோ கழுத்தில் வேல் கொண்ட மச்சம் இருந்தது. அதைப் பார்த்தவர் திகைத்துப் போய் பின் ஒரு கேவலுடன், “என் சாமிங்க ரெண்டும் இந்தக் கொலைகாரனுக்கு மாப்பு குடுத்து… என் கை புடிச்சி வளர திரும்ப வந்து பொறந்திருக்காக ஆத்தாஆஆ...” தன் தாயிடம் சொன்னவர், சந்தோஷத்தில் பெருங்குரல் எடுத்துக் கதற... அவர் கதறலுக்கு சற்றே அடங்கியிருந்த குழந்தைகளும் கதற... சுற்றி இருந்தவர்களும் அந்தப் பாசப் பிணைப்பில் உருகித் தான் போனார்கள்.

குழந்தைகளைத் தன் மார்போடு அணைத்தபடி சின்னத்தாயிடம் வந்தவர்… “ஒன் பேரப்பிள்ளைங்க… என் வீட்டு வாரிசுங்க.. அப்டியே ஒன்ன மாதிரியே இருக்காக தாயி…” என்றபடி அவர் கையில் இவர் பிள்ளைகளைக் கொடுக்க… அவருக்கோ மகிழ்ச்சியில் கண்ணீர் தான் வழிந்தது.

இதையெல்லாம் அரை மயக்கத்தில் கேட்டுக் கொண்டிருந்த தென்றல், “நம்ம காதல் ஜெயிச்சிடுச்சு மாமா” என்ற முணுமுணுப்புடன் மயக்கத்தில் ஆழ்ந்தாள் அவள்.

அதன் பிறகு வீட்டில் சந்தோஷத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளைத் தரையில் விடாமல் ஒருவர் கை ஒருவர் என்று தான் வைத்திருந்தார்கள். அதிலும் ஐயாரு கையில் தான் எப்போதும் குழந்தைகளின் வாசம்.

ஆனால் இதில் எதிலும் ஒன்றாமல் தணித்தே இருந்தான் மதிவேந்தன். பிள்ளைகளைக் கொஞ்சுவதும், மனைவியை நலம் விசாரிப்பதோடு சரி... பின் அவன் அன்றாட வேலைகளைப் பார்க்க கிளம்பி விடுவான்… இப்படியே சென்றவனை ஒரு நாள் தென்றல் இழுத்துப் பிடித்து வைத்துப் பேச, “பிரசவ நேரத்திலே துடிச்சிகிட்டு கெடக்கும்போதும் கூட ஒனக்கு என்னட்டி அப்டி ஒரு புடிவாதம்?” அன்று பிரசவ நேரத்திலும் இவள் பிடிவாதமாக இருந்ததை இவன் கோபத்துடன் கோட்டிட்டு காட்ட...

எந்தவித அச்சமும்.. தயக்கமும் இல்லாமல், “என் தவம் எல்லாம் நம்ப பிள்ளைகள் இந்த வீட்டில் பிறக்கணும் என்றதுல தான் மாமா இருந்தது. நிச்சயம் அந்த தவத்தின் பலனா இது நல்ல படியா நடக்கும்னு நினைத்தேன். குறைந்த பட்சம் எனக்கு ஏதாவது நடந்திருந்தாலும், நம்ப பிள்ளைகள் நல்ல மாதிரி பிறந்திருப்பாங்க” அவள் உறுதியாய் அழுத்திச் சொல்ல

இவனோ கண்ணில் அடிபட்ட வலியுடன், “நீ இல்லனா நான் மட்டும் உசுரோடு இருப்பேன்னு நெனச்சியா டி?” என்க

தன்னவனின் பதிலில் அவசரமாய் அவன் முகத்தைக் தன் கைகளில் ஏந்தியவள், “இந்த காதலுக்கு முன்னாடி... நான் எதையும் செய்யலாம்னு தோணுச்சு மாமா. ஒரு தாயா என் பிள்ளைகளுக்கு நான் செய்ய இருந்தது மகா பாவம் தான். அதை இவர்கள் பிறந்து இருவரையும் என் கையில் வாங்கின பிறகு யோசிக்கிறேன். ஆனா ஒரு மனைவியா நான் செய்வதில் தவறே இல்லன்னு தான் இப்ப வரை உறுதியா சொல்லுவேன். நம்ப காதலுக்காக நான் எது வேணா செய்வேன் மாமா” அவள் காதலோடு சொல்ல...

“பெரிய புண்ணாக்கு காதல்…. போடி” வெளியில் பல்லைக் கடித்தவனுக்கு மனைவியின் காதலை நினைத்து பிரமிப்பாகத் தான் இருந்தது.

அதில் அவன் தோள் சாய்ந்தவள், “மாட்டுக்கார வேலனாட்டம் மாடு பின்னாடியே போகாதேனு சொன்னா கேட்குறியா? பார்… அழகான காதல் கூட உனக்கு புண்ணாக்கா தெரியுது” என்று ராகத்தோடு சொன்னவள், “நீங்க ஒரு புண்ணாக்கு… இந்த புண்ணாக்கை காதலிக்கற நான் ஒரு புண்ணாக்கு காதலி தான். அதனால் கோபத்தை எல்லாம் விட்டுட்டு என்ன கொஞ்சு மாமா” தன்னவள் சொன்ன பாவனையில் கண்கள் கலங்க சிரித்தவனோ... அவளின் காதலில் அடுத்த நொடி தன்னவளை இருக்க அணைத்திருந்தான் அவன்.

அதன் பிறகு தென்றல் தன் பதவி மூலம் அவள் கிராமத்திற்கு நிறைய மாற்றங்களைக் கொடுத்தால். வெற்றியோ தோல்வியோ எதுவரினும் கடமையைச் செய்வோம். யார் பாராட்டினாலும் பாராட்டாவிட்டாலும் கவலைப் பட வேண்டாம். நமது திறமையும் அறிவும் வெளிப்படும் போது பகைவனும் நம்மை மதிக்கத் தொடங்குவான். என்ற டாக்டர் அம்பேத்கார் அவர்களின் பொன்மொழி படி தன் கடமையைச் செவ்வனவே செய்கிறாள் அவள்.

மூன்று வருடங்கள் சென்று...

கூடத்தில் ஐயாரு தன் கொள்ளுப் பேரப் பிள்ளைகளின் சேட்டைகளை ரசித்துக் கொண்டிருக்க... ஊரில் இருந்த சில பல தலைகள் அவரைக் கண்டு கோவில் திருவிழாவைப் பற்றி விவாதிக்க வந்திருக்க, “இன்னும் என்னைய ஏன்யா கேட்டுகிட்டு... அதேன் என் பேரன் மதிவேந்தன் எல்லாத்தையும் பாத்துக்கிடுறான் இல்ல... இனி அவன் எடுக்கறதுதேன் முடிவு” ஐயாரு தன் மீசையை நீவிய படி சொன்னாலும் திடமாய் சொல்லி மறுத்து விட...

அங்கு வந்த வேந்தன், “நான் பாத்துக்கிடுறேன்... ஆனா ஊர் பெரியவரா நீங்க செல விஷயங்களை சொல்லலாம் இல்ல... இப்படி மொத்தமா ஒதுக்குனா என்ன அர்த்தம்?”

“இனி என் கொள்ளுப்பேரன் புள்ளைங்களோட என்னைய வெளையாட விடுங்கன்னு அர்த்தம். ஒனக்கு எல்லா விதத்துலயும் ஒன் மாமன் கந்தமாறன் தொணையா இருப்பான். கூட நம்ப தர்மாவை வெச்சிக்கிடு... இதுக்கு பொறவு இளைய தலைமுறைங்க நீங்க எல்லாம்தேன் ஒண்ணு கூடி தேர் இழுக்காம என்னைய ஏன்டே... வயசான காலத்தில் கோதாவுல எறங்கச் சொல்லுத...” கேலியாய் அவனுக்குப் பதில் தந்தாலும் இனி என்னைத் தொந்தரவு செய்யாதே என்பதாக இருந்தது அவர் குரல்.

தென்றலின் பிரசவத்திற்குப் பிறகு அங்கை, அவள் பிள்ளைகளிலிருந்து வேந்தனின் இரண்டு அம்மைகள் வரை ஒரே வீட்டில் தான்… அதுவும் இங்கு இவர் வீட்டில் தான் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரையும் ஒற்றுமையாகப் பார்த்த சந்தோஷத்தில் ராஜாத்தி பாட்டி சிவ பதம் அடைந்து விட்டார்.

அழகி, தர்மா காதலுக்கு சாட்சியாய் இப்போது அவர்களுக்கு ஒரு வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. மகள் கரு தாங்கியவுடன், தன் வீம்பை எல்லாம் விட்டுவிட்டு செண்பகவல்லி மகளிடம் பேசி விட்டார். ஆனால் அழகியால் தான் அவருடன் ஒட்ட முடியவில்லை. ஆனால் பெற்ற தாய் ஆயிற்றே... தன் பிள்ளைகளுக்கு அவரின் உறவு வேண்டும் என்பதால் முகம் திருப்பாமல் இருந்தவளைப் பேத்தியின் பாசம் கட்டிப் போட... கணவன், பிள்ளையுடன் மருமகன் வீட்டிலேயே வந்து தங்கி விட்டார் செண்பகவல்லி. ‘சாதியாச்சு... மண்ணாச்சு... வயசான காலத்துல என் பேத்திதேன்டே எனக்கு’ என்ற கொள்கையில் இறங்கி விட்டார் அவர். பின்ன… பேரப்பிள்ளைகள் என்றால் சும்மாவா? நல்லது கெட்டதுக்கு குடும்பத்துடன் ஐயாரு வீட்டில் ஆஜர் ஆகிவிடுவார்கள் இவர்கள் அனைவரும்.

நரேனுக்கு ஒரு ஆண் குழந்தை… இன்னும் நவீனுக்கு குழந்தை இல்லை.

தான் வேந்தனை ஒதுக்கியதற்கு தென்றலின் பிரசவத்திற்குப் பிறகு அவனிடம் ஐயாரு மன்னிப்பு கேட்க… பதறிய அவனிடம், “மாப்பு கேக்கறதுது ஒண்ணும் அவமானம் இல்லடே.. செஞ்ச தப்ப ஒணர்ந்து வருந்துனதுக்கான ஒரு அடையாளம்டே...” என்று அவர் விளக்க... அவர் முழுமையாய் மாறி விட்டதை உணர்ந்தான் வேந்தன். அதன் பின் தான் சாகும் வரை அனைவருமே ஒன்றாகத் தான் இருக்கவேண்டும் என்று கட்டளை இட்டுவிட்டார் அவர்.

இதோ கோவில் திருவிழாவில்... ஜல்லிக்கட்டு நடக்கும் மேடையில், வேந்தனுக்குப் பக்கத்தில் தர்மனுடன் இன்னும் பல தலைகட்டுகளும் அமர்ந்து இருந்தனர். வருடத்தில் ஒரு முறை நடக்கும் திருவிழாவை சமத்துவப் பொங்கலாகவும் கொண்டாடினர் அந்த ஊர் மக்கள்.

திருவிழா இனிதே முடிய... இதோ தங்கள் இரண்டரை வயதுப் பிள்ளைகளைத் தன் சொந்தங்களிடம் உறவுகளிடமும் விட்டுவிட்டு... பூந்தென்றலும், மதிவேந்தனும் வானத்தில்... பாரீஸ் நோக்கி பறந்து கொண்டிருந்தனர். தென்றல் தன் காதலில் ஜெயிக்க சூழ்நிலையால் கலெக்டருக்குப் படித்திருந்தாலும், அதனுடைய அருமையும் மகத்துவத்தையும் உணர்ந்து அவள் அந்த வேலையையே கடைசிவரை தன் கிராமத்தில் தொடர நினைக்க...

ஆனால் வேந்தன் மனைவியை அப்படியே விடவில்லை. அவள் லட்சியத்தை அடைய பல வழிகளில் உறுதுணையாக இருந்தவன், அவள் ஆசைப் படி வெளிநாட்டில் மேல் படிப்பு படிக்கவும் வழி செய்தான் அவன். என்ன… மனைவியைப் பிரிந்திருக்க முடியாமல் அவளுடன் அங்கு சென்று தங்கியவனுக்கு, நாடு ஆறு மாதம்…. கிராமம் ஆறு மாதம் என்று வாழ்க்கை ஆனது.

பாரீஸில் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பதித்து விட்டாள் தென்றால். அங்கிருக்கும் அவளுடைய அலுவலகத்தை மஞ்சு தான் பார்த்துக் கொள்கிறாள். மஞ்சுவுக்கு திருமணம் நடந்து, கணவன் குழந்தைகளுடன் பாரீஸிலேயே செட்டில் ஆகி விட்டாள். சரண் இப்போது டாப் மோஸ்ட் மாடல் ஆகிவிட்டான்.

தன்னுடைய டிசைனர் வேலையை ஆன்லைன் மூலம் பார்த்துக் கொள்ள முடியும் என்பதால் ஆன்லைனில் செய்ய முடியாத கணவனின் விவசாயத்திற்காகவும், அவளின் கலெக்டர் உத்தியோகத்திற்காகவும் இங்கு தங்கள் ஊரிலேயே குடும்பத்துடன் வசிக்கிறாள் தென்றல்.

அவள் நினைத்த படியே... இன்று அவள் வடிவமைத்த ஆடைகளைப் போடாத உலக அழகிகளே கிடையாது. உலக அளவில் அவளின் கம்பெனி வடிவமைப்பு ஆடைகளை நிலை நிறுத்தினாள் தென்றல்.

அதற்கான பாராட்டு விழாவில் கலந்து கொள்ளத் தான் இன்று கணவனுடன் விமானத்தில் அமர்ந்திருக்கிறாள் அவள். தன் சந்தோஷத்தை விவரிக்க வார்த்தை இல்லாமல் அவள் கணவன் தோள் சாய்ந்து அமர்ந்திருக்க... காதலோடு இதமாய் அவளின் தலையை வருடி விட்டது வேந்தனின் விரல்கள்.

விழாவிற்கு கிளம்புவதற்காக வேந்தன் மனைவிக்கு ஏற்ற படி முதல் முறையாக இவன் கோட் சூட்டைப் போட நினைக்க... “அது எல்லாம் வேணாம் மாமா. நானும் விதவிதமா பல உடைகளை டிசைன் பண்ணாலும் புடவை கட்டி தான் மேடை ஏறப் போறேன். இது நம்ப பாரம்பரிய உடை மாமா. அதிலும் என் மாமனுக்கு கம்பீரமே வேட்டி சட்டை தான். நீ அதிலயே வா... அது தான் எனக்குப் பிடிச்சிருக்கு” என்றவள் காதலோடு அவன் இரண்டு பக்க மீசையை முறுக்க...

“எனக்கு என்னமோ இந்த விழா எல்லாம் ஒரு சாக்குனு தான் தோணுது. கூட்டிக் கழித்துப் பார்த்தா... இது நம்ப நாலாவதோ.. ஐந்தாவதோ ஹனிமூனோனு தோணுது...” என்றவளைத் தன் முகம் பார்க்க இறுக்கி அணைத்தவன்,

“அதென்ன தோணுது? நெசமாவே ஹனிமூன்தேன்” என்று அவன் தன்னவளின் இதழில் முத்தமிட்டு காதலோடு சொல்ல... பாகாய் அவனுடன் உருகினாள் தென்றல்.

அவள் சொன்ன மாதிரியே, இவர்கள் பாரம்பரிய உடையில் செல்ல... அங்கு இருந்தவர்களில் இவர்களுக்கு மட்டும் தனி மதிப்பும் மரியாதையும் கூடியது. பின்னே… தமிழர்களின் கலாச்சாரம் என்றால் சும்மாவா?

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்

ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி

சந்தோஷ சாம்ராஜ்யமே.

இப்பாடல் வரிகளை கவிஞர் திரு. வாலி ஐயா எழுதியது. இதில் அவர் சொன்னது போல் நல்ல மனைவி.. அன்பான துணைவி அமைந்தால் மட்டும் வாழ்வில் சந்தோஷம் இல்லைங்க.. அன்பா.. அரவணைப்பா… விட்டுக் கொடுத்து… காதல் என்ற புரிதலோடு… இணைகிற கணவன் மனைவி.. இருவருமே அவர்கள் காதலால் இந்த உலகத்தில் உள்ள சாம்ராஜ்யத்தையே ஆளும் வல்லமை பெற்றவர்கள் தாங்க…

கணவன் என்ற துணையோடு பெண்ணும்… மனைவி என்ற துணையோடு ஆணும்… தங்களின் சுக துக்கங்களைக் காதலோடு பங்கேற்று அப்படிப் பட்ட சாம்ராஜ்யங்களைக் கட்டலாம் வாருங்கள்…

நன்றி
முடிவுற்றது...

வணக்கம் தோழமைகளே...

என்னுடைய ஆறாவது கதையான இக்கதையை... உங்கள் அனைவரின் அன்பாலும்.. ஆதரவாலும்.. முடித்து விட்டேன்... இக்கதையில் ஆரம்பத்தில் இருந்து முடிவு வரை... என்னுடன் பயணித்து லைக்.. கமெண்ட் இட்ட அனைத்து தோழமைகளுக்கும்... என் நெஞ்சார்ந்த நன்றிகள்...💞💞💞💞💞🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
உங்களுக்கு கதை பிடித்து இருந்தால்... கதையை உங்கள் தோழர், தோழமைகளுக்கும் பகிர்ந்து படிக்க சொன்னால்... என்னை மாதிரி வளரும் எழுத்தாளர்களுக்கு உதவியாக இருக்கும்...

என்றும் உங்கள் அன்பையும்... ஆதரவையும்... எதிர் நோக்குபவலாக

நான்
உங்கள்
யுவனிகா

நன்றி🌹
 
Last edited:

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 45(நிறைவு பகுதி)
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.

UMAMOUNI

Member
அன்பிற்கு அப்பாற்பட்டது தான் ஜாதி மதம் கௌரவம் அனைத்தும் என்பதை மிக அழகாகவும் காதலுடனும் கொடுத்துள்ளீர்கள் நன்றி நன்றி விரைவில் அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அன்பிற்கு அப்பாற்பட்டது தான் ஜாதி மதம் கௌரவம் அனைத்தும் என்பதை மிக அழகாகவும் காதலுடனும் கொடுத்துள்ளீர்கள் நன்றி நன்றி விரைவில் அடுத்த கதையை எதிர்பார்த்து காத்திருக்கிறேன்
உங்கள் பேரன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி சிஸ் heart beat heart beat heart beat heart beat
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN