உறவாக வேண்டுமடி நீயே 18

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 18


வெள்ளிக்கிழமை தோறும் தங்கமும் மேகலையும் கோவிலுக்குப் போவது அவ்வப்போது பழக்கம் தான். அப்போது எல்லாம் வேணியையும் அழைத்துக்கொண்டு போவார்கள். இன்றைய தினமும் அப்படி போக, அங்கு ஒரு வயதான பெண்மணி கோவில் மண்டபத்தில் மயங்கி விழ, அவருக்கு இவர்கள் என்ன ஏது என்று பார்த்து உதவி செய்து விட்டு வருவதற்குள் இவர்களுடன் இருந்த வேணியைக் காணவில்லை.

அவளை அங்கு எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இத்தனைக்கும் கோவிலில் கூட்டமும் அதிகம் இல்லை. பாட்டிகளான இருவருக்கும் பயத்தில் உடல் உதறியது. ‘எங்கெங்கோ என்னென்னமோ கேட்குறோமே! அப்படி ஏதாவது இருந்தால்?’ தங்கத்திற்கு கண்ணிலிருந்து கண்ணீர் வழிந்தது.

இந்த சூழ்நிலையில் இருந்து முதலில் சுதாரித்தவர் மேகலை தான். அந்த நேரத்திற்கு அவர் அபியை அழைக்க, அவனுக்கு தொடர்ந்து நாட் ரீச்சபிள் என்று வரவும் பின் இவர் நந்திதாவுக்கு அழைத்துச் சொல்ல, அவளுக்கு வேணியின் தாத்தா மேல் தான் சந்தேகம் வந்தது. அவரை விசாரிப்பதில் அதற்கான ஆயத்த வேளையில் ஆட்களை வைத்து விட்டு இவள் கோவில் வந்து சேர, மேற்கொண்டு ஒருமணிநேரம் ஆனது.

அங்கு விசாரித்ததில் கோவிலில் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்று சொன்னார்கள். வேணியின் தாத்தா பக்கம் விசாரித்ததில் இதற்கும் அவருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று தெரியவந்தது. அவரே பேத்தி கிடைக்காத சோகத்தில் வெளிநாடு செல்ல இருந்ததாகச் சொல்ல, அது உண்மையா என்று தீர விசாரித்ததில் உண்மை அதுவே என்று தெரியவந்தது.

இவ்வளவு களேபரத்திலும் அபியைப் பிடிக்க முடியாமல் போனது தான் துரதிருஷ்டம். விசாரித்ததில் எங்கு என்று சொல்லாமல் அவனே காரை ஓட்டிக்கொண்டு போனதாக தகவல். மேற்கொண்டு ஒருமணி நேரம் ஆகவும் எந்த தகவலும் வேணியைப் பற்றி இல்லை என்றதும் சுத்தமாக உடைந்து போனாள் நந்திதா.

இன்றைய காலகட்டத்தில் பெண் பிள்ளைகள் படும் கஷ்டத்தை நாளுக்கு நாள் கேட்கப்படுபவளால் ஒரு தாயாக தன் மகளின் நிலை என்னவோ என்ற பயத்தில் ஒடுங்கிப் போனாள். வாய் விட்டுக் கதறி அழவில்லை சரம் சரமாய் கண்ணில் நீர் கோர்க்கவில்லை. ஆனால் எதிலும் ஒரு பிடிமானமோ இல்லை சுற்றி நடப்பதை உணர்ந்து மேற்கொண்டு நடக்க நிதானமாக நடக்கவோ முடியாமல் அல்லாடினாள்.

யாரிடம் இருந்து அழைப்பு வந்தாலும் யார் வீட்டுக்கு வந்தாலும் யார் யாரிடம் பேசினாலும் ‘மகள் கிடைத்து விட்டாள் என்ற வார்த்தையைச் சொல்ல மாட்டீர்களா?’ என்று ஏங்கித் தவித்தது வேணியைப் பெறாத அந்த தாய் உள்ளம். துருவன் கூட அவளைப் பார்த்து விட்டு ‘பல தொழில்களைக் கட்டி ஆண்டவர்களா இவர்கள்?’ என்று எண்ணத் தோன்றியது. அந்த அளவுக்கு பயத்தில் துவண்டு போய் இருந்தாள் நந்திதா. மேகலை அவளை அணைத்து ஆறுதல் படுத்த, மாமியாரின் மடியே ஆறுதல் என்ற நிலையில் தலை சாய்த்திருந்தாள் நந்திதா.

வெளியில் கார் நிற்கும் சத்தம் கேட்க, “அபி வந்திட்டான் போல!’ என்று மேகலை சொன்னது தான் தாமதம், விண்ணுக்கு செலுத்தப்படும் விண்கலத்தை விட வேகமாக,

“ரஞ்சன்!” என்ற அழைப்புடன் வாசலை நோக்கி ஓடி கணவனை அணைத்திருந்தாள் நந்திதா. மனைவியின் வேகத்தில் முன்னே வைத்த கால் சற்றே பின்னே செல்ல, தடுமாறி மனைவியை அணைத்தபடி நின்றான் அவன்.

“ரஞ்சன்! பாப்பா... வேணி... அத்தை….. அம்மா…. கோவில்....” எதையும் கோர்வையாக சொல்லமுடியாமல் தடுமாறியவள் கண்ணீருடன் அவன் மார்பிலேயே முகம் புதைத்து கடைசியாக, “எனக்கு நம்ப மக வேணும் ரஞ்சன்” என்று குமுற,

“யுகா, காம் டவுன்! பாப்பா கிடைத்திடுவா. அதற்கான ஏற்பாட்ட நான் செய்திட்டேன்” இரண்டு முறை இதை அவன் சொல்ல,

கணவனின் சமாதானத்தை ஏற்காமல், “எனக்கு பயமா இருக்கு ரஞ்சன். எனக்கு பாப்பா வேணும்…. அவ இல்லனா என்னால முடியாது….. அவ பிறந்ததிலிருந்து என் கையில தான் வளர்ந்தா ரஞ்சன்….. இப்போ தானே எல்லாம் முடிந்ததுனு நினைத்தேன்…. ஏதேதோ படிக்கிறோம்.... அவளை யாரோ கூட்டிப் போய்... ஏதோ செய்து.....” எதையும் முழுமையாக சொல்ல முடியாமல் தவிப்புடன் பயத்துடன் வலியுடன் பிதற்றினாள்.

இவ்வளவு நேரம் வாயே திறக்காமல் இருந்தவள் தனக்கு ஒரு தோள் கிடைக்கவும் அதுவும் கணவன் வந்து விட்டான் என்றதும் அவன் தான் இதிலிருந்து தன்னையும் தன் மகளையும் மீட்க முடியும் என்ற எண்ணத்தில் அவள் பலதையும் சொல்லி பிதற்றிய படி இருக்க,.அங்கிருந்தவர்கள் அனைவருக்குமே நந்திதாவின் நிலை கண்டு பயமாகிப் போனது. அதிலும் அபி சொன்ன எந்த வார்த்தைகளும் அவளிடம் எட்டாமல் போக, ஒரு முடிவுடன் ஒரு அறையில் மனைவியை தன் புறம் திருப்பினான் அபி. அவள் அதிர்ந்த படி பார்த்திருந்த நேரம் மனைவியை இறுக்க அணைத்தவன்,

“வேணி இருக்கிற இடம் தெரிந்து அதுக்கான உதவிய கமிஷ்னர் அங்கிள் கூடயிருந்து செய்துட்டு தான் வரேன். நிச்சயம் பாப்பா சேஃபா தான் இருக்கா. இனியும் இருப்பா. அதை நேரில் சொல்ல தான் ஓடி வந்தேன். இன்னும் சற்று நேரத்திற்கு எல்லாம் பாப்பா வந்துடுவா பார்” என்று அபி மனைவிக்கு உறுதியாக தைரியம் அளிக்க, கணவனை நிமிர்ந்து பார்த்தவள்,

“உண்மை தானே ரஞ்சன்?” என்று இவள் உயிரைப் பிடித்துக் கொண்டு கேட்க,

“சத்தியமா டி” என்ற அவன் பதிலில் கணவனை இறுக்க அணைத்த படி பெரிய கேவல் ஒன்றை வெளியிட்டாள் நந்திதா.

எப்படிப் பட்ட தைரியமான பெண் என்றாலும் பிள்ளைகள் என்று வரும்போது யாவரும் சாதாரண தாய் தானே? அபி சொன்ன மாதிரியே சற்று நேரத்திற்கு எல்லாம் வேணி இருக்குமிடம் தெரிந்து அவளை மீட்டு அழைத்து வருவதாக தகவல் வந்தது. மகளுக்கு எதுவும் இல்லை என்பதை அவளைப் பார்க்கும் வரை நந்திதா தன் நிலையிலிருந்து வெளிவரவில்லை. அதே போல் கணவனின் கை வளைவில் இருந்தும் விலகவில்லை அவள்.

அப்போது உள்ளே வந்த மகள் முதலில் தாவியது தாயிடம் தான். முகம் வீங்கி அழுது அழுது கண்ணீர் கரையாக இருந்தது வேணியின் முகம். மகளை அணைத்து முத்த மழை பொழிந்தவள்,

“இனிமே அம்மாவை விட்டுப் போவியா குட்டி?” என்று ஏதோ அவள் தானாக காணாமல் போனது போல் தாய் மிரட்ட,

“அம்மா... மட்டும் இல்ல அப்பாவும் விட்டுப் போ மாட்டேன்” என்று இருவரின் கழுத்தையும் கட்டிக் கொண்டு மழலையில் கொஞ்சியது அந்த மைனா.

எவ்வளவு அடியை என் மகள் வாங்கினாளோ என்ற எண்ணம் மனதால் இருந்தாலும் அதை மகளிடம் கேட்காமல் மகளின் மனதையும் தன் மனதையும் மாற்றும் பொறுட்டு,

“அப்படியே அப்பா மாதிரியே சமாளி! கேடி கேடி! பதிலைப் பார்த்தியா அப்பாவையும் விட்டுப் போகாதாம்! உன் அப்பா கேடினா நீ மகா கேடி டி! க்கும்…. உங்க மகள் உங்களை மாதிரியே இருக்கா!” மகளிடம் ஆரம்பித்து கணவனிடன் இவள் முடிக்க,

“பின்ன? என் மக என்ன மாதிரி இல்லாம உன்னை மாதிரியா இருப்பா?” என்று அபி பதில் தர

“அம்மா, அபிப்பாவ திட்டாத” என்றது அந்த வாண்டு அழுத்தமாக.

“யாரு நானா?” இவள் மகளை அடிக்க பொய்யாய் கை ஓங்கிய நேரம்,

“அபிப்பா!” என்ற அழைப்புடன் பக்கத்தில் அமர்ந்திருந்த தந்தையிடம் தாவி அவன் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அவனின் இளவரசி.

இதை எல்லாம் பார்த்து கண்ணில் கண்ணீருடன் கையில் உப்பு மிளகாயுடன் வந்த தங்கம் அவர்கள் மூவரையும் சுற்றிப் போட்டார் அவர். இன்று தான் தன் மகளின் மனதை அறிந்து கொண்டார் இல்லையா? அதுவே அவர் கண்ணில் ஆனந்தக் கண்ணீரை வர வைத்தது. பின் எல்லோரும் அவரவர் நிலைக்குத் திரும்பி யார் செய்தது என்று விசாரிக்க, அனைத்தையும் சொல்ல ஆரம்பித்தான் அபி.

ஜெயக்குமார் ஐயா தனிப்பட்ட முறையில் அபியை ஒரு இடம் விஷயமாக அவனை அனுப்ப, கொஞ்சம் சீக்ரட்டான விஷயம் என்பதால் இவனும் யாரிடமும் எதுவும் சொல்லாமல் சென்றான். அவன் சென்றிருந்த இடம் தொடர்புக்கு அப்பாற்பட்ட இடம் என்பதால் உடனே வேணி கடத்தப் பட்ட விஷயம் அவனுக்கு தெரிவிக்க முடியவில்லை. அதற்குள் இங்கு நந்தித்தா அசிஸ்டன்ட் கமிஷ்னர் வரை போய் நடவடிக்கை எடுத்தாலும் பலன் என்னமோ பூஜ்யமாக இருந்தது.

இதற்கிடையில் எல்லோரும் அபியை மறந்து போக, துருவன் விடாமல் அழைத்த அழைப்பில் ஒன்றில் எடுத்தவன், விஷயம் அறிந்து வேணி இருக்குமிடம் சுலபமாக கண்டுபிடிக்க முடியும் என்பதை சொன்னவன், தான் மகளின் கழுத்தில் GPS பொருந்திய டாலர் செயின் போட்டிருப்பதால் கண்டு பிடிப்பது சுலபம் என்று சொன்னவன் அதற்கான தகவலை இவனே அங்கு சென்று அசிஸ்டன்ட் கமிஷ்னரிடம் சொல்லி விட்டு மகளை மீட்பதற்கான ஆயத்தப் பணியில் இறங்கினான்.

இவ்வளவு தூரம் விஷயம் சுலபமாக இருப்பதால் அண்ணனை அவர்களுடன் போக வேண்டாம் என்று தடுத்த துருவன் நந்திதாவின் நிலையை எடுத்துச் சொல்லி வீட்டுக்கு வரச் சொல்ல, அரை மனதாக இருந்தாலும் நம்பிக்கையான நபரை மகளை மீட்க அனுப்பியவன், பின் வீடு வந்து சேர்ந்தான் அபி.

எல்லோரும் வேணி தாத்தா தான் இதற்கு காரணம் என்று நினைத்திருக்க, வேணியைக் கடத்தியது நந்திதாவுக்கு தற்போது தொழில் போட்டியில் உள்ளவனும் கூடவே பாரதியின் மாமா புகழும் சேர்ந்து திட்டம் போட்டு கோவிலில் இருந்த வேணியை சில பெண்களை வைத்துக் கடத்தியிருக்கிறார்கள்.

பொதுவாக நந்திதா, மகளிடம் முகம் தெரியாதவர்கள் வந்து அழைத்தாள் போகவோ ஏதாவது கொடுத்தால் வாங்கவோ கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறாள் தான். ஆனால் கடத்தியவர்கள் பெண்கள் என்ற நிலையில் இன்னோர் கை குழந்தையை அவளிடம் காட்டிப் பழக விட்டு கடத்தியிருக்கிறார்கள். வேணி வழக்கில் தீர்ப்புக்குப் பிறகு இப்படி செய்தால் அவள் தாத்தா மேல் பழி விழும் என்ற எண்ணம் கடத்தியவர்களுக்கு.

அது மலைக் கோவில் என்பதால் பின்புற மலைச் சரிவில் வேணிக்கு அதிக வீரியம் இல்லாத மயக்க மருந்தைக் கொடுத்து கடத்தியிருந்தார்கள். அவர்களுடைய ஒரு மணிநேர பயணத்தில் எவ்வளவு தூரம் அவர்கள் செல்ல முடியுமோ அவ்வளவு தூரம் சென்றிருக்கிறார்கள். அதற்குள் அபியின் மூலம் அவனின் GPS தகவல் உதவியுடன் வேணியை எந்த சேதாரமும் இல்லாமல் மீட்டனர் காவல் துறையினர்.

ஏ.சியை நேரில் சந்தித்து நன்றி சொல்லியவன் பின் கடத்தியவர்களுக்கு சரியான பாடம் புகட்டி இனி இந்த பிறவி முழுக்க தன் மனைவி மகள் பக்கம் அவர்கள் திரும்ப முடியாத அளவுக்கு அனைத்தும் முடித்து அபி வீடு வர இரவு ஆனது.

இவன் தங்கள் அறைக்கு வந்து கதவைத் தாழ் இட, அடுத்த நொடி கணவனைப் பின்னாலிருந்து அணைத்திருந்தாள் நந்திதா. தன்னவளின் திடீர் தாக்குதலை ரசித்தவனோ, மனைவியை முன்புறம் இழுத்து தானும் அவளை அணைக்க,

“எனக்கும் வேணிக்கும் இப்படி ஒரு பிரச்சனை வரும்னு உங்களுக்கு முன்பே தெரிந்திருக்கு. அதனால் தான் அத்தை மூலமா செயின் போட வைத்தீங்களா?” தழுதழுக்க இவள் கேட்க, உண்மை தான்! இவர்கள் இருவருக்கும் கோவிலில் திருமணம் ஆன மறுநாளே தாயிடம் இப்படி ஒரு செயினைக் கொடுத்து மனைவி மகளுக்குப் போட வைத்திருந்தான் அபி. அப்படி மட்டும் கணவன் செய்யவில்லை என்றால் இன்று தங்கள் மகள் தங்களுக்கு திரும்ப கிடைத்திருக்க மாட்டாளே என்ற எண்ணத்தில் அவள் கேட்க, மனைவியைத் தன் வளைவிலேயே அணைத்தபடி அழைத்து வந்து கட்டிலில் அமரவைத்தவன்,

“ஆமா, எனக்கு வேணி தாத்தா மேலே சந்தேகம் இருந்தது. அதனால் தான் அப்படி ஒரு பாதுகாப்பு வளையத்தை நான் போட்டேன். நீங்க இருவரும் எங்கு போனாலும் எனக்கு தெரிய வந்து என் வட்டத்துகுள்ளேயே உங்களை பாதுகாப்பா வைக்க நினைத்தேன். கடைசியில இவனுங்க இப்படி செய்து உன்னை துடிக்க வைத்துட்டானுங்க!” மனைவி துடித்த துடிப்பில் இப்போதும் அவர்கள் மேல் கோபம் வர விளக்கினான் அவன்.

அவன் மனதை மாற்ற திடீரென்று கணவனின் கழுத்தில் இவள் எதையோ தேடி கைகளால் ஆராய, மனைவியின் எண்ணத்தை உணர்ந்தவனோ,

“என்னை யாரு டி கடத்தப் போறா?” என்று இலகுவாக கேட்க,

“அதெல்லாம் முடியாது. இனி நீங்களும் எங்க போனாலும் எனக்கு தெரிந்தாகணும். அதனால இனி உங்க கழுத்திலும் இந்த செயின் இருக்கணும்” என்றவள், தன்னுடையதைக் கழற்றி கணவனுக்குப் போட்டு விட, மனைவியின் அன்பில் நெகிழ்ந்தவன்,

“ப்ம்ச்… போச்சு டா! போட்டு விட்டுட்டியா? இனி ஒரு கணவனா நான் செய்யும் திருட்டுத் தனத்திலிருந்து உன்னை ஏமாற்ற என்னால் முடியாதே!” என்று போலியாய் அவன் பயப்பட,

“ஏமாத்துற மூஞ்சைப் பாரு!” என்று கணவனை வாரியவள், கூடவே மென்னகையுடன் அவன் தோள் சாய்ந்து கொண்டாள் நந்திதா. நந்திதாவுக்கு இன்று தான் அவளின் மனது புரிந்தது. ஆமாம், அவள் கணவனை விரும்புகிறாள் தான்! ஆனால் அதை கணவனிடம் சொல்லவோ மேற்கொண்டு செல்லவோ தான் முடியவில்லை. அன்று இரவு முழுக்க கணவனின் இறுகிய அணைப்பிலேயே இருந்தாள் அவள்.

எல்லோர் வாழ்க்கையிலும் சிக்கல் பிரச்சினைகள் தீர்ந்து அவரவர் வாழ்க்கையில் ஒன்றி விட, அடுத்ததாக போதும்பொண்ணுக்கும் பபுலுவுக்கும் திருமணம் நடத்தலாம் என்று பேசி முடிவானது. இரு வீட்டாரும் முழுமனதாக அதில் சந்தோஷமாக கலந்து கொண்டார்கள். அதிலும் அபியும் நந்திதாவும் பெண் வீட்டார் என்ற பக்கம் நின்று அவர்கள் முறையில் எல்லாவற்றையும் நிறைவாக எடுத்துச் செய்தார்கள்.

பபுல் முன்பே சொல்லி விட்டான், ஐயர் வைத்து எல்லா சடங்கையும் முழுமையாக தமிழில் அதன் அர்த்தத்தோடு தான் தன் திருமணம் நடத்த வேண்டும் என்று சொல்லி கொண்டவன் அதன்படியே நடத்தினான். பெண் வீட்டார் முறையில் மணமேடையில் அபி நந்திதா நிற்க, ஆண் வீட்டார் முறையில் துருவனும் பாரதியும் நின்றார்கள். மேடையில் நின்று அனைத்து சடங்குகளையும் பார்த்து அதன் அர்த்தங்களை கேட்ட அபிக்குள் ஏதோ உடைவது போலவும் ஏதோ ஒன்று தடம் பதிப்பது போலவும் இருந்தது.

பபுலுவுக்கு இதை எல்லாம் பார்க்க அவ்வளவு ஆனந்தம்! அதிலும் காசி யாத்திரைக்குப் போக இருப்பவனை நிறுத்திப் பெண்ணைக் கொடுப்பதாகச் சொல்ல, தன் பாணியில் சேட்டையும் அலப்பறையும் பிகுவும் செய்தான் அவன். அவனின் செயலில் எல்லோருமே மனம் விட்டு சிரித்தனர்.

இந்த திருமணம் இவ்வளவு சீக்கிரம் நடக்க காரணமே பபுல் தான். அவன் மறுபடியும் இரண்டு வருட ஒப்பந்தத்தில் ஜெர்மன் செல்லவிருப்பதால் தன் காதலியான போதும்பொண்ணைப் பிரிய முடியாத காரணத்தால் இந்த அவசர திருமணம். ஆமாம், போதும்பொண்ணைத் தான் அவன் மனதார விரும்புகிறான். அவனுக்கு நந்திதா மேலிருந்தது எல்லாம் நட்பும் பரிதாபமும் தான் என்பதை அவள் சொல்லும் போது உணராதவன் ஒரு நாள் போதும்பொண்ணுக்கு விபத்து ஏற்பட்டு அவள் இருக்குமிடம் தெரியாமல் கொஞ்ச நேரம் தவித்து துடிதுடித்த போது தான் அவனுக்கு தெரிந்தது அவள் மேல் கொண்ட காதல்.

அதைத் தன் தோழியான நந்திதாவிடம் சொல்லி புரிய வைத்தவன் உடனே இந்த திருமணத்தை முடித்து அவளைத் தன் மனைவியாக அழைத்துச் செல்ல நினைத்தான். அவன் பாட்டிக்கும் இதில் பரம சந்தோஷம். அவர்கள் முறைப் படி இருவருக்கும் ஆஸ்திரேலியாவில் சர்ச்சில் மோதிரம் மாற்றுவது என்று முடிவானது. திருமணம் நல்ல முறையில் நடந்து முடிய, அசதியில் அனைவரும் அவரவர் அறையில் முடங்க, அபி மட்டும் தூங்காமல் மாலை நேர அஸ்தமத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

நந்திதா சிறிது நேரம் தூங்கிய பின் புரண்டு படுத்தவள் கணவன் இன்னும் அதே இடத்திலேயே நின்றிருப்பதைப் பார்த்தவள் எழுந்து வந்து,

“என்ன ஆச்சுங்க? தூங்கலையா?” என்று விசாரிக்க, மனைவி புறம் திரும்பியவன் அவளைத் தூக்கி ஊஞ்சலில் அமர வைத்து அவள் பக்கத்தில் அமர்ந்து அவள் தோளைச் சுற்றி கை போட்டவன் பின்,

“ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கல்யாணம் நடத்த பெரியவர்கள் முடிவு எடுக்கும் போது நம்மை மாதிரி இன்றைய இளைய தலைமுறை என்ன சொல்றாங்க? சும்மா ஒரு மஞ்சள் கயிறு, அதை நீ கட்டினா நான் உனக்கு அடங்கணுமா? என்று பெண்களும் அதை நான் கட்டிட்டா நீ எனக்கு அடிமை தான்! என்று ஒரு சில ஆண்களும் சொல்லிட்டு திரியறாங்க.

ஆனா அது எப்படிப்பட்ட உறவு யுகா! அதை நாம என்ன மாதிரி நிலையிலிருந்து ஒருவருக்கு ஒருவர் வாக்கு கொடுத்து இணைகிறோம்? உயிர் உள்ள வரை தொடர வேண்டிய உறவை ஈகோ பார்த்து விவாகரத்து வரை கொண்டு போறாங்களே! சகிக்கவே முடியாத நிலைனா பரவாயில்லை பிரிவதைப் பற்றி யோசிக்கலாம். ஆனா இங்கே எடுத்ததுக்கெல்லாம் பிரிவு. பிறகு அந்த திருமணத்தை என்னனு தான் மதிக்கறாங்க? இன்று தமிழில் அதற்கான விளக்கங்களைக் கேட்ட போது என் உடம்பே சிலிர்த்துப் போனது. ஏதோ புது ரத்தம் உடல் முழுக்க பாய்ந்தது தெரியுமா? நம் முன்னோர்கள் எல்லாம் கிரேட் யுகா!” என்று அபி உணர்ந்து சொல்ல,

“ஆமாங்க!” என்று கணவனின் கூற்றை ஆமோதித்தவள், “ஆனா அதையே ஒரு பெண்ணைப் பழிவாங்கவும் பெற்றோரைப் பழி தீர்க்கவும் காதல் என்பதே இல்லாம திருமணம் செய்வதும் அதே அறியா வயதில் இது தான் காதல் என்று பொய்யாக நம்பி ஸ்கூல் படிக்கும் பிள்ளைகள் அந்த தாலிக்கயிறைக் கட்டி விளையாடிட்டு இருக்கறதும் இதையெல்லாம் நினைத்தா தாங்க எனக்கு வருத்தமா இருக்கு. நம்ப குழந்தைகளுக்கு திருமணத்தையும் அதோட உறவுகளையும் நாம புரிய வைத்து வளர்க்கணுங்க” என்று நந்திதாவும் உணர்ந்து சொல்ல,

அபி எதுவும் பேசவில்லை. அப்படி சொல்வதை விட அவனால் பேச முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அவனும் அதே தப்பை தானே செய்தான்? ஆனால் அதை மறந்து மன்னித்து இன்று அவனுக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கை சொர்க்கமாகத் தெரிந்தது அவனுக்கு. சிறிது நேரம் மவுனமாக இருந்தவன்

“நமக்கு முறைப்படி சடங்கோட திருமணம் நடக்கலைன்னு உனக்கு வருத்தமோ மனக்கஷ்டமோ இருக்கா யுகா?” என்று அபி மனைவியை அறிந்து கொள்ள கேட்க

கணவனின் தோள் சாய்ந்தவள், “ம்ஹும்.... இல்லவே இல்ல! எனக்கு எப்படிப் பட்ட குடும்பமும் கணவனும் கிடைத்திருக்காங்க! இதை நினைக்காம அதை நினைப்பேனா?” என்று குரலில் சிறு பிசுறும் இல்லாமல் உறுதியுடன் சொல்ல, மனைவியை இறுக்க அணைத்துக் கொண்டான் அபி.

இந்த திருமணம் கொண்ட்டாட்டம் எல்லாம் நான்கு நாட்கள் தான் நீடித்தது. ஐந்தாம் நாள் காலையே அபியின் தந்தை ராகவன் இறந்து விட்டார் என்ற செய்தி வர, கண்ணில் கண்ணீர் கட்ட மவுனமாக ஓரிடத்தில் அமர்ந்து விட்டார் மேகலை.

கணவர் இவரிடம் செலுத்திய காதலும் வாழ்ந்த வாழ்க்கையும் வேண்டுமானால் பொய்யாக இருக்கலாம். ஆனால் மேகலை உண்மைக்கு தானே அவரிடம் இருந்தார்? அதனால் தான் கணவன் செய்த துரோகத்தையும் மீறி அவர் கண்ணில் கண்ணீர் வழிந்தது. தாய் தங்கள் தந்தையை வெறுத்து விட்டார்கள் என்று அறிந்திருந்த பிள்ளைகள் கூட ஒரு நிமிடம் அவர் கண்ணீரைப் பார்த்து துடித்துத் தான் போனார்கள்.

ராகவன் வீட்டு உறவுகள் சிலர் மனைவி என்ற சடங்கை செய்து பூ பொட்டை எடுக்க மேகலையை வரச் சொல்ல, பிள்ளைகளுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. மேகலை மாதிரியே ஒரு பெண்மணி தன் கணவனை விட்டுப் பிரிந்து வாழ ஆனால் கணவனின் தொன்னூறாவது வயதில் அவர் இறக்க நேரிட, ஐந்து வருடம் மட்டுமே வாழ்ந்து அதன் பின் பிரிந்து இப்போது எண்பத்தைந்தாவது வயதிலிருக்கும் அந்த பாட்டிக்கு சடங்கு செய்தார்கள்.

அதைப் பார்த்ததும், ‘ச்சீ! என்ன சமூகம்?” என்று தான் அபிக்குப் பட்டது. அந்த வயதிலும் மனம் ஒப்பாத அந்த பாட்டியைப் பாடாய் படுத்துகிறார்களே!’ என்று தான் அவனுக்கு கோபம் வந்தது. அதனால் தாய்க்கு இப்படி ஒன்றை செய்யக் கூடாது என்ற முடிவில் இருந்தான் அவன்.

‘ஆனால் இப்போதிருக்கும் மனநிலையில் தாய் என்ன சொல்வாரோ?’ என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் மேகலையோ வர முடியாது என்று அத்தனை பேர் முன்பும் மறுத்து விட்டார் அவர். ஏதோ அறியாமல் கணவன் தனக்கு துரோகம் செய்ததாக முதலில் மேகலை நினைத்துப் பிரிய, ஆனால் அவரோ அந்த பி.ஏவுக்குப் பிறகு இன்னும் நான்கு ஐந்து பெண்களுடன் உறவில் இருந்தார். இது தான் மேகலை முழுமையாக அவரை வெறுக்க காரணமாகிப் போனது.

எந்தவொரு தவறையும் முதல் முறைக்குப் பிறகு ஒரு ஆணோ பெண்ணோ அதை சர்வ சாதாரணமாக அது தான் இனி வாழ்வு என்பது போல் இப்படி தான் எடுத்துக் கொள்கிறார்கள் இன்றைய சமூகத்தினர். எவ்வளவு சொல்லியும் கணவன் முகத்தைக் கூட கடைசி வரை பார்க்கவில்லை மேகலை. ராகவனுக்கு வேறு வாரிசு இல்லை என்பதால் துருவனை இறுதி காரியம் செய்யச்சொல்லி அழைக்க, தனக்கு ஒரு நல்ல கணவனாக இல்லை என்றாலும் பிள்ளைகளுக்கு அவர் நல்ல தந்தையாக இருந்ததை எண்ணியவர் துருவனை மட்டும் அனுப்பி வைத்தார்.

முடிந்தது எல்லாம் முடிந்தது, இதோ இன்று ராகவனுக்கு காரியம். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு காசி வந்து கணவனுக்கான சடங்கில் அமர்ந்து விட்டார் மேகலை. அங்கு கணவன் உடல் முன்பு எதையும் செய்ய மாட்டேன் என்று தன் தன்மானத்தால் உறுதியாக இருந்தவர் இப்போது அவர் பிள்ளைகளுக்காகவும் அவர்கள் வம்ச விருத்திக்காகவும் இதோ காசியில் வந்து அமர்ந்து துருவன் கையால் காரியம் செய்கிறார்.

எல்லாம் முடிய அன்றே அங்கேயே பூ பொட்டைக் கலைக்காமல் கணவன் அணிவித்த திருமாங்கல்யத்தை மட்டும் கழட்டி அந்த காசி விஸ்வநாதர் உண்டியலில் போட்டு விட்டார் அந்த பெண்மணி. இதெல்லாம் பார்த்த நந்திதாவுக்கு மாமியாரை நினைத்துப் பெருமையாக இருந்தது.


அன்று தன்னுடைய தன்மானத்தை முன்நிறுத்தி போக மாட்டேன் என்று சொன்னவர் இன்று சமூக கோட்பாடுகளை மதித்து பிள்ளைகளுக்காக இன்று அவர் இப்படி செய்தது எண்ணி தான் அந்த பெருமை. கணவன் மனைவியின் ஒழுக்கமும் அதன் மகத்துவமும் புரிந்தது அபிக்கும் நந்திதாவுக்கும்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 18
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN