உறவாக வேண்டுமடி நீயே 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 17


இருவரும் சென்னை வந்த பிறகும் வாழ்க்கை அதன் போக்கில் போனது. இன்று ஜெயக்குமார் ஐயா அவர்களின் அக்கா பேத்திக்கு பிறந்த நாள் விழா கொண்டாட்டம். அதாவது முதல்வரின் பேத்திக்கு. அபிக்கு முதல்வரை விட ஜெயக்குமார் ஐயா அதிக பழக்கம் என்பதால் அவருக்காக இன்றைய விழாவிற்கு குடும்பத்துடன் வந்திருந்தான் அபி.


ஆறு வயது குழந்தைக்கு பிறந்தநாள் கொண்டாட்டம் என்பதால் நிறைய குழந்தைகள் வந்திருக்க, வேணிக்கு குதூகலமாகவே இருந்தது. மகளை தன் கண்பார்வையில் வைத்தபடியே அபி அங்கு வந்திருந்த ஆண்களுடன் தன் உரையாடலைத் தொடர, நந்திதாவோ தெரிந்த சிலரிடம் பேசி விட்டு ஓரிடத்தில் அமர்ந்திருக்க, “நான் உன் கிட்ட கொஞ்சம் பேசலாமா மகளே?” என்று ஜெயக்குமார் அவளிடம் அனுமதி கேட்க, அதில் திடுக்கிட்டு எழுந்தவள்

“என்னங்க ஐயா அனுமதி எல்லாம் கேட்டுட்டு! பேசணும்னு சொல்லுங்க ஐயா!” என்று இவள் முறுவலிக்க

“கணவனுக்கு ஏற்ற மனைவி! உன் கணவனும் இப்படி தான் சொல்லுவான். அவன் தான் ஐயானு கூப்பிட்டு என்னைத் தூர வைக்கிறான். நீயாவது என்னை அப்பான்னு கூப்பிடுமா” என்றவர் அவள் பக்கத்திலிருந்த சேரில் அமர்ந்து அவளையும் அமரச் சொல்ல

“சரிங்க ப்பா” என்று அவளும் முழுமனதாக அதை ஏற்றுக் கொண்டாள்.

“அப்பான்னு கூப்பிட்டதால நான் சிலதை சொல்லலாமா மகளே?” என்று தூரத்தில் நின்று யாருடனோ பேசி கொண்டு இருந்த அபியை பார்த்தபடி இவர் கேட்க, நந்தித்தாவுக்குப் புரிந்தது. கணவனைப் பற்றிப் பேசப் போகிறார் என்று தெரிந்தது. “ம்ம்ம்... சொல்லுங்க ப்பா” எனவும்

“என்னம்மா சொல்ல சொல்ற? சரி… நான் நேரடியாவே கேட்கிறேன், உனக்கும் அபிக்கும் என்னம்மா பிரச்சனை? ஒரு அப்பாவா நான் இதை கேட்கிறேன்” இவள் மவுனமாய் தலை குனிய, “எதுவா இருந்தாலும் அபி நல்லவன் மகளே. ரொம்ப ரொம்ப நல்லவன். உங்க பர்சனல் எனக்கு தெரியாது. ஆனா உங்க தொழில் முறை சண்டைகள் எனக்கு தெரியும். அந்த ஊட்டி லேண்ட் விஷயமா தெரிந்துகொண்டேன்” என்றவர் நிறுத்த,

நந்தித்தா அவர் முகம் பார்க்க, “ஒரு பெண்ணைப் பெற்ற தந்தையா அபி செய்கிறது சரியானு கேட்டா இல்லைனு தான் சொல்லுவேன். ஆனா ஒரு தொழிலதிபரா அடி மட்டத்திலிருந்து வந்து ஜெயித்தவனை திரும்ப அடி பாதாளத்தில் தள்ள நினைத்தா அவனுடைய ஒவ்வொரு அடியும் எப்படி இருக்குமோ அப்படி தான் அபி இருக்கான். அதனாலே அவன் செய்யுறது சரின்னு தான் சொல்லுவேன்”

“அது எப்படிப்பா? அவர் தயாரித்த பொருளால் எத்தனை பெண்கள் பாதிக்கப் படுறாங்க?”

“உனக்கு அது மட்டுமே தானே தெரியுது மகளே? அதற்கு முன் மணிமேகலையிடம் இருந்த நேர்மை நியாயம் உனக்கு தெரியுமா?” என்று இவர் கேட்க, ‘இவர் ஏன் அபிக்கு பதில் மாமியாரின் நேர்மையை சொல்லுகிறார்?’ என்பது போல் நந்திதா பார்க்க, அதைப் புரிந்து கொண்டவர்,

“அபி தயாரிக்கும் பொருளுக்கு காப்புரிமை உள்ளவர் உன் மாமியார் தான் என்பது உனக்கு தெரிந்திருக்கும். தன்னுடைய சுய சிந்தனையாலும் உழைப்பாலும் ஒரு பொருளை நியாயமா இந்த உலகத்திற்கு கொடுத்தார் மேகலை. ஆனா அதை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. பகட்டை நோக்கித் தான் போனாங்க.

இவரும் தன் பொருளுக்கு பங்கம் விளைவிக்காத சில வாசனை திரவியம் என்று சில பகட்டுகான பொருட்களை சேர்த்தார். ஆனா என்ன பலன்? இந்த உலகத்தில் நேர்மைக்கு நியாயத்திற்கு திறமைக்கு நல்ல உழைப்புக்கு எங்க மதிப்பிருக்கு? அது தான் மேகலை விஷயத்திலும் நடந்தது. போதாக்குறைக்கு மேகலையின் தயாரிப்பை முடக்கி தொழில் செய்ய முடியாத அளவுக்கு பல பிரச்சினைகள் மேகலையின் எதிரிகள் கொடுத்தாங்க. அப்போ அபி அமெரிக்காவில் இருந்தான். கொஞ்சம் இல்லை ரொம்பவே மேகலைக்கு சரிவு வந்தது. அப்போதும் சமாளித்தார் அந்த இரும்பு பெண்மணி.

ஆனா அபி அப்படி எதுவும் செய்யாமல் இந்தியா வந்ததும் அவன் செய்த முதல் வேலை அவனுங்களை விட பகட்டான பொருளைத் தயாரித்தது தான். நேர்மையால் என் அம்மா இழந்தது போதும். நீங்க என்ன தயாரிக்கறது நானே அப்படிப் பட்ட பொருளைத் தயாரித்து உங்களுக்கு எதிரா உங்களை விட மேலே வரேனு சொன்னவன் அதன்படியே செய்தான். அதனால் மேகலைக்கு கொஞ்சம் விருப்பம் இல்லை ரொம்பவே மகன் மேல் வருத்தம். நிறைய நாள் மகனிடம் பேசாமல் கூட தன் எதிர்பைத் தெரிவித்தார் அவர்.

ஆனா ஒரு மகனா அவரை பாசத்தில் வீழ்த்திட்டான் அபி. பிறகு மக்கள் இவன் பொருளை நோக்கி ஓட ஆரம்பித்தாங்க. அதை அவன் கெட்டியா பிடித்துக் கொண்டான். அதிலே என்ன தப்பு? வாழ்க்கையில் எல்லாம் பெற்றவர்களுக்கு எதிரிகள் கொடுக்கும் தொல்லையும் தோல்வியும் பாதிப்பை ஏற்படுத்தாதுமா. ஆனா அதே அடிமட்டத்திலிருந்து வர்றவனுக்கு அது எவ்வளவு பெரிய வலியையும் மன உளைச்சலையும் கொடுக்கும் தெரியுமா? அவர் உணர்ந்து சொல்ல,

“கண்டிப்பா இருக்கும் ப்பா.. நேர்மையா உண்மையா இருந்தா ஆரம்பத்தில் நிச்சயம் அசிங்கம் அவமானம் வரத்தான் செய்யும். அதுக்காக அந்த வழியிலிருந்து விலகி வேறு பாதையில் போகலாமா? இந்த உலகத்துல உண்மையும் கண்டுபிடித்து அறிவியல் அறிஞர்களையும் தத்துவம் பேசிய தத்துவ ஞானிகளையும் முட்டாள் பைத்தியக்காரன் என்று சொல்லி கேவலப்படுத்தி இருக்காங்க. ஏன்? கொன்று கூட போட்டிருக்காங்க.

அதுக்காக அவங்களைப் பின்பற்றி யாரும் வராமலா போய்ட்டாங்க? ஆயிரம் தடைகள் வந்தாலும் வலி வேதனை இருந்தாலும் தான் எடுத்த கொள்கையிலிருந்து மாறாம தன்னைக் கேவலப்படுத்தினவங்களை தோற்கடிச்சு ஜெயிச்சுக் காட்டணும். அப்படி செய்து மட்டும் அவன் முன்னுக்கு வந்தா, அவனை விட சிறந்த மனிதன் இந்த உலகத்திலே வேறு ஒருவன் இருப்பானா இல்லை அவனை அழிக்கத் தான் முடியுமா?

அபி மட்டும் அப்படி செய்திருந்தா அவருக்கு கை கொடுத்து பாராட்டும் முதல் ஆள் நானாகத்தான் இருந்திருப்பேன். ஆனால் அவர் அப்படியா செய்தார்?” என இவள் எதிர் கேள்வி கேட்க, ஸ்தம்பித்து நின்றார் அந்த அறுபத்தைந்து வயது முதியவர்.

“எனக்கு புரியுது மகளே. ஆனால் அதற்காக அவன் கடைசிவரை அந்த வஜ்ரத்தை கையில் எடுக்கலையே? இந்த உலகத்தில் திரும்பவும் நேர்மையும் நியாயமும் தலை தூக்கும் போது இதை விட்டு விடுவேனு சொன்ன மாதிரியே இன்று தன் மனைவி மூலம் அதை பார்த்த பிறகு விட்டுட்டானா இல்லலையா?” அவர் கேள்வியில் ‘இது என்ன புது கதை?’ என்பது போல் இவள் பார்க்க,

“விட்டுட்டான் மகளே! அவன் தயாரித்த ரசாயனப் பொருளை நிறுத்தியது மட்டுமில்லாமல் இதுவரை தயாரித்ததையும் வெளியில் விடாமல் அழித்து விட்டான்” அவர் உறுதியாக சொல்ல, நந்திதாவுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘அன்று முடியவே முடியாதுன்னு சொன்னவரா இன்று இப்படி செய்திருக்கார்?’ இதை இவரைத் தவிர யார் சொல்லியிருந்தாலும் நந்திதா நம்பியிருக்க மாட்டாள். இதை கேட்டதிலிருந்து அவளுக்குள் ஏதோ ஒன்று தடம் பதித்தது.


“என்னையும் மனைவி என்ற பெயரில் லெப்ட் அண்ட் ரைட் வாங்க ஒருத்தி வந்திருந்தால் நானும் திருந்தியிருப்பேனோ என்னமோ! சரி, இனிமேலாவது என் காதைத் திருக ஒருத்தி வருவாளா என்று பார்க்கிறேன் அவர் சிரிக்காமல் சொல்ல,

நந்திதாவின் முகத்தில் குறும்பு மிளிர்ந்தது. “சொல்லிட்டீங்க இல்ல? மகள் நான் எதற்கு இருக்கேன்? நாளைக்கே உங்களுக்கு ஒரு ஆன்ட்டியைப் பார்த்து விட வேண்டியது தான் ப்பா” என்று இவள் வம்பு வளர்க்க,

“அட நீ வேற ஏன் ம்மா? ஆன்ட்டிக்கு பதில் பாட்டி தான் வருவாங்க. அது எனக்கு தேவையா?” என்று அவர் பயந்தது போல் நடிக்க, அவர் பாவத்தில் வாய் விட்டுச் சிரித்தாள் நந்திதா.

மறுபடியும் அபி விஷயத்துக்கே வந்தவர், “இதையெல்லாம் நான் ஏன் சொல்கிறேனா, நீ அபியைப் புரிஞ்சுக்க இல்லை அவனைப் பற்றி தெரிஞ்சிக்கணும்னு தான் சொல்றேன். கணவன் மனைவிக்குள் புரிதல் என்பது தானா வரணும்” அவர் உணர்ந்து சொல்ல, அதே நேரம் விடைபெறுவதற்காக அபி வர, அதே சிரித்த முகத்துடனே விடை கொடுத்தாள் நந்திதா. கார் வரை வந்து இருவரையும் வழி அனுப்பியவர்,

“நான் சொன்னதை எல்லாம் யோசித்துப் பார் மகளே” என்று மறுபடியும் அவர் சொல்ல, “சரிங்க ப்பா” என்ற ஒப்புதலுடன் விலகிச் சென்றாள் நந்திதா.

தூங்கி விட்ட வேணியைப் பின் சீட்டில் படுக்கவைத்து விட்டு கணவன் மனைவி இருவரும் முன் சீட்டில் பயணித்தார்கள். ஆனால் அங்கு யாருமே இல்லாதது போல் அப்படி ஒரு அமைதி. கொஞ்ச நேரத்திற்கு எல்லாம் அபியின் போனுக்கு அழைப்பு வர, எடுத்துப் பார்த்தவன் ஜெயக்குமார் ஐயாவின் நம்பர் என்றதும் வண்டியை ஓரமாக நிறுத்தி விட்டு ஆன் செய்து இவன் பேச, அந்த பக்கம் அவர் என்ன சொன்னாரோ, “நான் வரேன் ஐயா. இதோ இப்பவே வீட்டுக்குப் போய்ட்டு என் திங்ஸ் எடுத்துகிட்டு கிளம்புறேன்” என்றவன் அழைப்பைத் துண்டித்தபடி

“புனேயில் ஐயா கம்பெனி கட்டின முப்பது மாடி பிளாட் இடிந்து விழுந்திடுச்சாம். சோ என்ன போய் என்னனு பார்த்து சரி செய்யச் சொல்றார். நான் இப்பவே கிளம்புறேன் யுகா” என்று மனைவிக்கு தகவல் சொல்லியபடி காரை வீட்டுக்கு விட்டான்.

வீட்டுக்கு வந்தவனுக்கு முழு மனதாகவே கிளம்ப முடியவில்லை. மகள் முழித்திருந்தாலாவது அவளுக்கு ஏதாவது சமாதானம் சொல்லி கிளம்பியிருப்பான். தூங்கும் மகள் காலையில் எழுந்து தன்னைத் தேடுவாளே என்பதே அவனுக்கு கவலையாக இருந்தது அதை விட முழித்திருக்கும் மனைவியிடம் என்ன சொல்வது என்றே அவனுக்கு தெரியவில்லை.

அதாவது காதலாக இரண்டோர் வார்த்தை சொல்ல அவனுக்கு வரவில்லை. ம்ஹூம்…. முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். இந்த பிரிவு அப்படி ஒரு வேதனையைக் கொடுத்தது. அப்பொழுதும் ஜெயக்குமார் ஐயாவுக்காக கிளம்பினான். தூங்கும் மகளிடம் வந்தவன் அவள் நெற்றியில் முத்தமிட்டு

“அப்பா சீக்கிரம் வந்திடுறேன் டா” என்று சொல்லியவன் பின் மனைவியிடம் வந்து அவள் எதிர்பாராத நேரம் மெல்ல அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு,

“போய்ட்டு வரேன் டி யுகா. வேலை முடித்து வர நாலு நாள் ஆகுமாம். ஆனா இரண்டே நாளில் சரி செய்துட்டு வந்து விடுகிறேன். பாப்பாவை பார்த்துகோ” என்றவன் மறுபடியும் மனைவியை அணைத்து விட்டு மனைவி முகம் பார்க்காமல் விலகிச் சென்றான் அபி.

முதல் முறை போல் இல்லாமல் இந்த முறை பிடிவாதக்கார கணவனின் இதழ் தீண்டலில் உடல் குறுகுறுக்க ஸ்தம்பித்து நின்று விட்டாள் அவனின் யுவராணி. அது கூட ஒரு வினாடி தான். அடுத்த நொடி ‘அவரை வழி அனுப்பாமல் என்ன இப்படி நிற்கிறோம்?’ என்ற எண்ணத்துடன் இவள் வேகமாக வெளியே வந்து கணவனைப் பின் தொடர்ந்து படிகளில் இறங்க, கடைசி படியில் இருந்தவனுக்கு மனைவி தட.. தட... என ஓடி வரும் சத்தம் கேட்கவும் இவன் நின்று,

“என்ன யுகா? என்ன ஆச்சு?” என்று பதற,

சற்றே மூச்சு வாங்கியவள், “உங்களை வாசல் வரை வந்து வழியனுப்ப வரலாம்னு தான்” அவனின் இன்னாள் மறைக்காமல் மனதைச் சொல்ல, அதில் நெகிழ்ந்தவன் மனைவியின் தோள் மேல் கை போட்டு சற்றே அவனுடன் அணைத்தவன்,

“நீயே என்னை ஏர்போர்ட்ல ட்ராப் செய்துவிடு. வரும்போது காரை டிரைவர் ஓட்டி வரட்டும்” என்று அவன் சொல்ல, அதற்கு சம்மதித்து தங்கத்தை வேணியிடம் இருக்கச் சொல்லிவிட்டு கணவனுடன் கிளம்பினாள் அவனின் ராணி.

கணவன் இல்லாத இந்த மூன்று நாட்களும் ஏதோ போல் தான் நடமாடினாள் நந்திதா. ஆனால் அது ஏன் என்பது தான் அவளுக்குப் புரியவில்லை. அதாவது சரியாக யோசிக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அங்கு அபியோ வேறாக இருந்தான். எங்கு பார்த்தாலும் அவனுக்கு மனைவியின் முகமாகத் தான் இருந்தது. அதனால் அவன் நான்கு நாள் வேலையை மூன்றே நாளில் முடித்துக் கிளம்பி வந்தவனை தீ பிழம்பாய் சுட்டெரித்தாள் அவன் மனைவி.

அன்று காலையிலே ஒரு வேலையாக வெளியே சென்றிருந்தவள் அதை முடித்துக் கொண்டு வீட்டிற்கு வர, இவள் வந்தது அறியாமல் தங்கமும் மேகலையும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இந்த பெரியவனுக்காவது என்ன பிரச்சனைனு எனக்கு தெரியும். நாளைக்கு அவன் வாழ்வு சரி ஆகிடும்னு தோணுது. ஆனா இந்த சின்னவன் காதலித்து கல்யாணம் செய்தவனுக்கு என்ன பிரச்சனைனு தெரியல. பார்த்தா இரண்டும் சாதரணமாகத் தான் இருக்குங்க. ஆனா ஏதோ சரியில்லை.

முன்பே அண்ணன் வாழ்வு சரியான தான் நான் என் வாழ்வை வாழ்வேனு சொல்லிட்டு இருந்தான். இப்போ தான் அபிக்கும் நந்திதாவுக்கும் எல்லாம் சரி ஆக்கிடுச்சே பிறகு என்னனு தெரியல. ஒரு வயதுக்கு மேல பிள்ளைகளின் வாழ்வில் நாம் தலையிடக் கூடாது. அதான் கேட்கவும் யோசிக்கிறேன். இப்படி ரெண்டு பையன்களை பெற்றுவிட்டு நான் படற பாடு இருக்கே, அப்பப்பா! ஒன்னும் சொல்ல முடியல தங்கம்!” என்று மேகலை ஒரு தாயின் கவலையுடன் சொல்ல,

இதையெல்லாம் கேட்ட நந்திதாவுக்கு ஏதோ போல் ஆனது. முன்பே இரண்டு முறை துருவன் பற்றி இப்படி சொல்லி இருக்கிறார் தான். ஆனால் அப்போது இவர்கள் இருவரின் வாழ்வைப் பற்றி இணைத்துப் பேசியது இல்லை. இன்று அப்படி இல்லையே? இதே எண்ணத்துடனே இருந்தவள் துருவனை அழைத்துப் பேசுவது என்ற முடிவில் அவனை அழைத்து மேலோட்டமாய் தங்களின் வாழ்வு தான் காரணமா என்று தயக்கத்துடனே கேட்க, அண்ணியின் குரலில் கவலையை உணர்ந்தவன்,

“அண்ணி, அப்படி எல்லாம் இல்லை. இது வேற” என்று அவன் சொல்ல,

அது என்ன என்பது போல் அவனைப் பார்த்தவள், “உங்களுக்கு விருப்பம் இருந்தா சொல்லுங்க” என்று மீண்டும் தயங்கியபடி கேட்க

“அண்ணி, என்ன பேசுறீங்க? விருப்பம் இருந்தானு. நீங்க உரிமையாவே கேட்கலாம். எதுக்கு இந்த தயக்கம்? என் அண்ணிக்கு எல்லா உரிமையும் இருக்கு” என்று அவன் உணர்த்து சொல்ல,

அதை ஏற்றுக் கொண்டவள், “அப்போ சொல்லுங்க தம்பி” என்று நேரடியாவே கேட்க

“அது வந்து அண்ணி” என்று முதலில் தயங்கியவன், பின் பாரதி கட்டுப்பாட்டில் இருந்த ஃபைல் காணாமல் போனதிலிருந்து இன்று வரை இவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை வரை சொல்ல, அனைத்தையும் கேட்டவள் துருவனுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியாமல் திணறினாள் நந்திதா.

ஏனென்றால் இந்த விஷயத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது அபி. அன்று அதை பாரதியிடமிருந்து எடுத்தது அவன் தான் என்பது அவளுக்கு முன்பே தெரிந்திருந்தது. அதாவது அதன் பிறகு அவள் சேகரித்த விஷயம் அது. அதன் பிறகு இவர்கள் இருவரின் திருமணம் வர, பிறகு அதை அவள் வெளியே யாரிடமும் சொல்லவில்லை. பாரதியைப் பற்றி தெரியும். அதனால் அது முடிந்த விஷயம் என்ற எண்ணத்தில் விட்டுவிட, அன்று இவளுக்கு தெரியவில்லை கணவனுக்காக தான் விட்டோம் என்று.

ஆனால் இன்று கணவனை யாரிடமும் விட்டுக் கொடுக்க முடியாத தன்னுடைய மனநிலை தான் அன்று இருந்தது என்பதை அவள் உணர்ந்து கொண்டாள். ஆனால் இன்று துருவன் வாழ்வு அதில் சம்பந்தப் படவும் சிறிது யோசித்தவள், துருவனிடம் அனைத்தையும் அபி சம்பந்தப் பட்டிருப்பதையும் சேர்த்துச் சொல்ல, துருவனுக்கும் முன்பே இதெல்லாம் தெரிந்து தான் இருந்தது. அதை மறைத்தவன்,

“அண்ணி, அண்ணாவுக்கு எங்க விஷயம் தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் பாரதியை மாட்டி விட்டிருக்க மாட்டாங்க. அதனால் இந்த விஷயத்தை விடுங்க. பாரதிக்கும் அண்ணன் தான் இதை செய்தார்னு தெரிய வந்தாலும் பெரிதா எடுத்துக்க மாட்டா. அதனால இந்த விஷயத்தை மறந்திடுங்க அண்ணி. நீங்க இப்போ கேட்கவோ நான் இதை சொன்னேன்” என்று இவன் விளக்க,

‘பிறகு வேற என்ன?’ என்று மனதிற்குள் நினைத்தவள், “சாரி! அவருக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என்று இவள் அவனிடம் மன்னிப்பைக் கேட்க,

“என்ன அண்ணி இது மன்னிப்பு எல்லாம் சொல்லிகிட்டு! இனி அப்படி எல்லாம் சொல்லாதிங்க அண்ணி. அண்ணன் மட்டும் இல்லை அண்ணி நீங்களும் அப்படி என் கிட்ட கேட்க கூடாது” என்று அவன் அன்பாய் கட்டளையிட அதற்கு இவள் சம்மதமாக சிரித்தபடி தலையசைக்க, அதில் ஒரு வினாடி தயங்கியவன் பின்,

“அண்ணன் ரொம்ப நல்லவர் அண்ணி. கொஞ்சம் பிடிவாதம் முன் கோபம் இருக்கும் அவர் கிட்ட. எல்லா விஷயத்திலும் தான் ஜெயிக்கணும் என்று நினைப்பவர். அதனால் சிலதை செய்தார். ஆனா பிறருக்கு பாதிப்புனா உடனே அதை உணர்ந்து ஏற்றுக் கொள்வார் அதிலிருந்து விலகியும் விடுவார். அதனால் தான் உங்க கிட்ட அப்படி நடந்துட்டு இருக்கார். அதற்காக எல்லாம் அண்ணனை வெறுத்திடாதீங்க அண்ணி” என்று துருவன் சொல்ல,

மாமியார் சொன்ன எங்களின் வாழ்வை வைத்து இவர்களின் வாழ்வைக் குறித்த பேச்சு எது என்பதை இப்போது உணர்ந்தவள்,

“வெறுப்பா? உங்க அண்ணா மேலையா? அப்படி எல்லாம் இல்லை. அன்று எனக்கு அவர் மேல கோபம் தான் அதிகமா இருந்தது. அதில் என் தன்மானம் சீண்டப் பட அவர் வாயேலேயே நடந்ததைச் சொல்லி என்னை அவர் மனைவினு சொல்ல வைக்கனும் மட்டும் தான் நினைத்தேன். அதன் படியே அவர் நடத்தியும் காட்டிட்டார். சோ நாங்க இருவருமே இப்போ இயல்பான வாழ்க்கையை ஏற்றுக்கிட்டோம். அதனால் எங்களைப் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம்” என்று நத்திதா உண்மையைச் சொல்ல,

மன திருப்தியில், “தாங்க்ஸ் அண்ணி!’ என்ற சொல்லுடன் அவன் எழுந்திருக்க, அண்ணன் மேலே அவன் கொண்டுள்ள பாசத்தைப் பார்த்தவள்,

“என்னை சாரி சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு நீங்க மட்டும் தாங்க்ஸ் சொல்லலாமா மச்சினரே?” என்று இவள் கேட்க,

“ம்ஹும்.... இனி சொல்லலை. வாபஸ் அண்ணி” என்றவன் சிரித்தபடி அங்கிருந்து விலகிச் சென்றான் துருவன். அண்ணன் வாழ்வு சரியானதில் மனதிலிருந்து அழுத்திய ஒன்று விலக அன்றைய இரவு மனைவுயிடம் இவன் நெருங்க,

“டேய் பொறுக்கி! எப்போதும் போல சும்மா கட்டிப் பிடித்து தூங்குவேன் பார்த்தா இன்று நீ என்னென்னமோ செய்றியே டா!” என்ற பாரதி கணவன் அணைப்பில் பாதி தூக்கத்தில் நெளிய,

“அதான் சொல்லிட்டியே, என்னென்னமோ செய்யுறேனு! அப்போ பேசாம இரு டி” என்றவன் தன் காரியத்திலேயே கண்ணாய் இருக்க அதில் திணறியவள், “உங்க அண்ணன் வாழ்வு சரி ஆகிடுச்சா?” என்று இவள் கேட்க,

மனைவியின் கேள்வியில் குற்ற உணர்வில் ஒரு வினாடி தவித்தவன், “அவர் யாரு டி? சரியான கேப்மாரி இல்லை? எல்லாம் சரியா ஆகிடும். அதுவும் இல்லாமல் அண்ணி சரி செய்திடுவாங்க. இவ்வளவு நாள் அண்ணனுக்காகப் பார்த்து உன்னை நான் கஷ்டப்படுத்தியது போதும். இனி இருபத்தி நாளு மணி நேரமும் நாம் பூட்டிய அறைக்குள்ளே தான் இருக்கப் போறோம்” சிரிப்புடனே இவன் மறைமுகமாக சில பதிலைத் தர

“ஹா… ஹா.. இருபத்தி நாளு மணி நேரமா? இதோ எட்டு மணி நேரத்திலே விடிந்திடும். பிறகு நீங்க ஆபீஸ்க்கும் நான் மாதர் சங்கத்துக்கும் ஓட வேண்டியது தான். அதனால் பொய்யா வாக்கு கொடுக்காதீங்க தொழிலதிபரே!” என்று இவளும் இலகுவாக பதில் கொடுக்க

“இங்கே இருந்தா தானே? அதனால் தான் பத்து நாள் டார்ஜிலிங் நமக்கு ஹனி மூன் ட்ரிப் புக் செய்திருக்கேன். அங்கே பசித்தாலும் நீ என்னை கடித்து திண்ணு நான் உன்னை கடித்து திண்றேன்” என்று இவன் சரசமாக பதில் தர,

அதில் முகம் சிவந்தவள் படு சீரியஸாக, “உங்க அண்ணன் கேப்மாரினா அப்போ நீ யார் டா?” என்று கேட்க

“நான் சரியான மொள்ளமாரி டி” என்று பதில் தந்தவன் அதன் பிறகு மனைவிக்கு கேள்வி கேட்கும் வாய்ப்பையே தரவில்லை அவன். அவளுக்கு ஆபீஸ் போக விருப்பம் இல்லாததை உணர்த்து சமூக சேவையில் தாயுடன் இணைந்து மனைவியைப் பல விஷயங்களை சாதிக்க வைத்தவனுக்கு இப்போது ஒரு கணவனாய் அவளை சமாளிப்பது கஷ்டமா என்ன? இவ்வளவு நாள் இருந்த பிரிவுக்கும் சேர்த்து அன்றைய இரவைக் காதலோடு கழித்தார்கள் இருவரும்.

நந்திதாவுக்குத் தான் மனது கேட்கவில்லை. ‘என்ன இருந்தாலும் கணவன் செய்தது தவறு தான்! அதனால் தானே அவர்கள் இருவரின் வாழ்விலும் கொஞ்சம் இடைவேளை விழுந்தது?’ என்ற எண்ணத்தில் கணவன் வந்ததும் அதையே சற்று கோபமாய் இவள் கேட்க,

“இங்கே பார், துருவனுக்கு அப்போது பாரதி மேல் ஏதோ ஒரு கிரஷ்னு தான் நான் நினைத்தேன். இவ்வளவு தூரம் அவன் விரும்புவான்னு எனக்கு தெரியாது. தெரிந்திருந்தால் நிச்சயம் பாரதியை மாட்டி விட்டிருக்க மாட்டேன். அதுவும் துருவன் சொல்வது எல்லாம் அவர்கள் திருமணத்திற்கு முன்பு நடந்தது. திருமணத்திற்கு பிறகு நான் இதை செய்திருந்தா என்னைக் கேள்வி கேள். தப்புன்னு தெரிந்தா அதை மாற்றிப்பேனே தவிர அதையே தொடர்ந்து செய்ய மாட்டேன். அதற்காக மன்னிப்பு கேட்டுக்கிட்டு கெஞ்சிட்டு இருப்பேனு எதிர்பார்க்காத. அது என் இயல்பு இல்லை” என்று இவன் காட்டமாய் இவனுடைய பாணியில் பதில் தர, விக்கித்துப் போனாள் நந்திதா.

‘இது எதற்கான பதில்? துருவனுக்கா இல்லை எனக்கா? உனக்கு நான் செய்ததும் முன்பு தான். இப்போது அப்படியா? அதற்காக எல்லாம் உன்னிடம் மன்னிப்பு கேட்டு கெஞ்ச மாட்டேன்னு சொல்கிறாரா?’ என்று நினைத்தவளின் மனமோ, ‘ஆனா நான் அப்படி மன்னிப்பை எல்லாம் எதிர்பார்த்து நிற்கும் சராசரிப் பெண் இல்லை என்பது இவருக்கு தெரியவில்லையே?’ என்று தான் அவளுக்குத் தோன்றியது. ‘இருவரின் புரிதலுக்குப் பிறகு இப்படிப் பட்ட எண்ணங்கள் மாறுமோ?” என்று நினைத்தாள் அவள்.

அதன் பிறகு ஒருநாள் கம்பெனியில் போர்ட் மீட்டிங்கில் இருந்த நந்திதாவின் பர்சனல் நம்பருக்கு அவள் கணவனிடமிருந்து அழைப்பு வந்தது. ‘இந்த நேரத்தில் இவர் அழைக்க மாட்டாரே! என்னவாக இருக்கும்?’ என்ற எண்ணத்துடன் இவள் அழைப்பை ஏற்க,

“யுகா, எந்த வேலையா இருந்தாலும் கிளம்பி ரெடியா இரு. நான் வந்து உன்னை அழைச்சிட்டுப் போறேன்” கணவன் குரலிலிருந்த நிதானத்தை உணர்ந்தவள் கிளம்பியிருக்க, கணவன் மட்டும் வராமல் கூடவே மகள் வேணியுடன் வரவும், ‘எங்கே போகிறோம்?’ என்பது போல் இவள் கேள்வியாய் அவனைப் பார்க்க, எதுவும் சொல்லாமல் காரை எடுத்தவன் தாங்கள் வர வேண்டிய இடத்தில் வந்த பிறகு விவரம் அனைத்தையும் சொல்ல, உடல் சில்லிட கண்ணில் மிரட்சியுடன் காரிலேயே அமர்ந்து இருந்தாள் நந்திதா.

மனைவியின் நிலையை உணர்ந்தவன் அவள் கையை இறுகப் பற்றிய படி, “யுகா, நான் தான் இருக்கேனே!” என்று சொல்ல, கணவன் கொடுத்த தைரியத்தில் காரை விட்டு இறங்கினாள் அவள்.

இவர்கள் இப்போது வந்திருந்தது நீதிமன்றத்திற்கு. வேணியின் தாத்தா தன் மகள் வழி பேத்தி தனக்கு தான் என்று அவர் முன்பே உரிமை கொண்டாட, அவருக்கு உரிமை இருந்தாலும் வேணி தன்னுடைய பொறுப்பு அவளை தன்னிடம் தான் ஒப்படைத்தார்கள் என்று நந்திதா வாதாட, அவர் கொஞ்சம் வசதி என்பதால் பல வழியில் நந்திதாவுக்குப் பிரச்சனை கொடுத்தவர், கடைசியாக நந்திதாவுக்கு திருமணம் ஆகவில்லை என்பதை தங்கள் தரப்பு வாதமாக வைத்தார்.

அதை முறியடிக்கிற மாதிரி அபி நந்திதா வாழ்வில் வந்து சேர, கடைசியாக அந்த ஆள் இருவருக்குள்ளும் நடந்த திருமணத்திற்கு சட்டப்பூர்வமான ஆதாரத்தைக் கேட்க, அதையும் நந்திதா பக்கமிருந்து சமர்பித்தார்கள். அப்பொழுதும் வேணிக்கான லீகல் டாக்குமெண்டைக் கேட்க, நந்திதா எங்கு போவாள் அந்த ஆதாதரத்திற்கு?

சாகும் தருவாயில், ‘வேணி இனி உங்கள் பொறுப்பு ராணிமா. என்ன நடந்தாலும் வேணியை என் மாமனார் கிட்ட கொடுங்காதீங்க’ என்று வேணியின் அப்பா தினேஷ் கேட்டுக் கொண்டது மட்டும் தானே இதற்கு சாட்சி! இறந்தவரையா சாட்சியாக கொண்டு வர முடியும்? அப்படி இருக்க இன்று மட்டும் என்ன நடந்து விடப் போகுது? இல்லையே இன்று ஏதோ தங்களுக்கு சாதகமாக முடியும் என்று வக்கீல் சொல்கிறாரே! நம்பிக்கை இல்லை என்றாலும் கணவனுக்காக உள்ளே வந்து அமர்ந்தாள் நந்திதா.

கேஸ் வழக்கப் படி எல்லாம் முதலில் இரு தரப்பும் பேசினார்கள். இறுதியாக வேணியின் தாத்தா தரப்பில் கடைசி வரை ஆதாரத்திலே வந்து நிற்க, அதையும் தாக்கல் செய்தார் நந்திதாவின் வக்கீல். அதை கண்டவளுக்கு கண்கள் விரிந்தது. தங்களுக்கு சாதகமாக முடிய இப்படி ஒரு வழி இருப்பதை உணர்ந்தாள் அவள். அந்த பேப்பரில் இருந்தது இது தான்.

வேணியின் தந்தை இறக்கும் தருவாயில் தனக்குப் பிறகு தன் மகளின் முழு பொறுப்பும் கடமையும் அபிரஞ்சன் யுகநந்திதா தம்பதியையே சேரும் என்றும் தன் சுய சிந்தனையில் தான் அவர்களுக்குத் தன் மகளைத் தத்து கொடுப்பதாகவும் எழுதி சட்டபூர்வமாக கையொப்பமிட்டு இருந்தார் வேணியின் தந்தை தினேஷ்.

இதை எழுதும் போது அன்று கணவன் மனைவியாக இருந்தவர்கள் இடையில் பிரிந்ததாகவும் இந்த சட்டபூர்வமான பேப்பர் அபியிடம் இருந்ததாகவும் இப்போது கணவன் மனைவி இருவரும் சேர்ந்து விட்டதால் தற்போது கோர்ட்டில் அதற்கான பேப்பரைத் தாக்கல் செய்வதாகவும் சொன்னார் நந்திதாவின் வக்கீல்.

இந்த ஒன்று போதுமே வேணி அபிரஞ்சன் யுகநந்திதா தம்பதிக்கு தான் சொந்தம் என்று தீர்ப்பு எழுத? அப்போதும் அந்த பெரிய மனிதர் ஆடித் தீர்த்தவர் கடைசியாக பேத்தியைப் பார்க்க வேண்டும் என்று கண்ணீர் விட்டுக் கேட்க, அனைவர் முன்னிலையிலே அவரிடம் வேணியைக் காட்ட அனுமதி கோரினார்.

அவரோ பேத்தியைக் கூப்பிட, இவளோ வர மாட்டேன் என்று சொல்லி அபி யுகா காலைக் கட்டிக் கொண்டு அழ, இதைப் பார்த்த நீதிபதி இனி எந்த விதத்திலும் வேணியை அவர் தொந்தரவு செய்யக் கூடாது என்றும் குழந்தைக்கு விவரம் தெரிந்து தாத்தா என்று அவரைத் தேடி வந்தால் பார்த்துக் கொள்ளலாம் என்று தீர்ப்பு எழுத, அப்போது தான் நந்திதாவுக்கு உயிரே வந்தது. அந்த நீதிபதி நேர்மையானவர் என்பதால் இப்படி ஒரு தீர்ப்பு நந்திதாவுக்கு கிடைத்தது.

எல்லாம் முடிந்து காரில் வந்து அமர்ந்த நந்திதாவுக்கு அழுகை முட்டிக் கொண்டு வந்தது. மனதால் அவளுக்கு ஏற்பட்ட நிம்மதியை அவளாலேயே வார்த்தையால் விவரிக்க முடியாத நிலையில் இருந்தாள். பத்து மாதம் வலி வேதனையோடு பிள்ளையைப் பெற்றெடுத்த பிறகு ஒரு தாய் நிம்மதியிலும் சோர்விலும் சந்தோஷத்திலும் இருப்பாளே! அப்படி ஒரு நிலையில் தான் கண்களை மூடி அமர்ந்திருந்தாள் நந்திதா.

பிரசவம் காணப் போகும் தாய்க்காவது பத்து மாதம் தான் அலைபுறுதலும் பயமும் இருக்கும். ஆனால் நான் எத்தனை மாதம் தவிப்பில் கழித்தேன்? அதை நினைக்கும்போதே அவள் மூடிய விழியிலிருந்து கண்ணீர் உருண்டு வழிந்தது. அதைப் பார்த்தவன்,

“ஹேய்... யுகா!” மனைவியை இழுத்து தன் தோள் வளைவில் சாய்த்துக் கொள்ள அவளின் நாசியோ கணவனின் கழுத்தை உரச, அந்த நிலையிலும் தன்னவனின் வாசத்தை முதல் முறையாக உணர்ந்தாள் பெண்ணவள்.

“என்னடி? அதான் நமக்கு சாதகமா முடிஞ்சிடுச்சே! பிறகு ஏன் அழற?” அந்த பிடிவாதக்காரன் கோபமே இல்லாமல் அதட்ட, அவள் மடியிலிருந்த மகளோ தாய் அழுவதைப் பார்த்து தானும் அழ,

“அச்சோ! என் செல்லம்மா எதுக்கு அழறாங்க?” என்று கேட்ட படி இவன் மகளைத் தூக்க, மனைவியோ யாரிடமும் அவளை நான் விட்டுக்கொடுக்க மாட்டேன் என்பது போல் மகளை இறுக்கிப் பிணைத்திருக்க,

“யுகா, நான் தான் டி!” என்றவன் அப்போதும் மனைவி தன் பிடியை விடவில்லை என்றதும், மனைவியை இன்னும் நெருங்கி குனிந்து மகளின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட்டு,

“அப்பா நான் இருக்கேன் டா. செல்லக் குட்டி அழக் கூடாது டா” என்று மகளை சமாதனம் செய்ய, அந்த வாண்டோ சமாதானமாகி,

“அம்மாக்கு முத்தி?” என்றது.

“உன் அம்மாவுக்கு இல்லாமையா?” என்றவன் நிறுத்தி நிதானமாக மனைவியின் இரண்டு கன்னத்திலும் முத்தமிட,

ஆனால் அவளோ, ‘நீ எவ்வளவு வேணா முத்தம் கொடுத்துக்கோ. என் மன அலைபுறுதலுக்கு அழுகை ஒரு வடிகால் என்றால் என் மன சந்தோஷத்துக்கு நீங்க கொடுக்கும் முத்தம் தான் இனி என் வசந்தத்தின் திறவுகோல்’ என்றெல்லாம் மனதிற்குள் அவள் சொல்லிக் கொள்ள, தன்னவளின் மவுனத்தை சம்மதமாக எடுத்துக் கொண்டவனோ, மனைவியின் நெற்றி, இரண்டு கண், மூக்கு என்று வரிசையாக முத்தமிட்டவன்,

“பாப்பா பயப்படறா பார் யுகா” என்று அவள் காது மடலில் ரகசியம் பேச, “ம்ம்ம்…” என்றவள் கண்ணைத் திறக்காமலே கணவனின் கழுத்து வளைவில் முகம் புதைத்தாள் அவள்.

‘முன்பு இவரை ஏன் என் வாழ்வில் கொண்டு வந்து சேர்த்தேனு எத்தனையோ முறை கடவுள் கிட்ட சண்டை போட்டிருக்கேன். ஆனா வேணியைக் கொண்டு வந்து சேர்க்கவும் இப்படி ஒரு குடும்பத்தைக் கொடுக்கவும் தான் இவரைக் கொண்டு வந்து சேர்த்தியா?’ என்று மானசீகமாக கடவுளிடம் கேள்வி கேட்டுக் கொண்டாள் அவள்.

நம் வாழ்வில் நடக்கும் கொடுமைக்கு கடவுள் அதையே மையமாக வைத்து ஒரு நாள் நமக்கு நன்மை நடத்திக் காட்டுவார். இதை பலர் சொல்லி நந்திதாவும் அறிந்திருக்கிறாள். இப்போது அவள் வாழ்விலும் அப்படி ஒன்று நடந்திருப்பதாகத் தான் அவளுக்குத் தோன்றியது.

‘உங்களிடம் நேர்மைக்காக சண்டை போட்டேன். ஆனா அந்த நேர்மையை வைத்து என் மகளை என்னால மீட்க முடியலையே? உங்களுடைய வழி தானே என் மகளை மீட்டுத் தந்தது!’ என்று இப்போது கணவனிடமும் மனதால் கேள்வி கேட்டாள் அவள். உண்மை தான்! அப்படி ஒரு பத்திரம் இல்லாமலே இன்று இவனின் அதிரடி செயலால் கொண்டு வந்திருந்தான் அபி.

வீடு வரும் வரையுமே நந்திதா எதுவும் பேசவில்லை. தங்கத்திடம் இந்த விஷயத்தைச் சொல்லி விட்டுப் பிறகு சென்று மேகலையிடமும் சொல்ல, குடும்பத்தில் உள்ள எல்லோருக்கும் சந்தோஷமாக இருந்தது. மேகலா அபியை மனைவி மகளுடன் கோவில் போய் வரச் சொல்ல, அதன்படியே சென்று இரவு டின்னர் முடித்து தான் வந்தார்கள் மூவரும். இரவு படுக்கும் போது முதல் முறையாக மனைவியை அணைத்துக் கொண்டு இவன் தூங்க எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவனுள் அடங்கினாள் அவனின் பட்டத்து ராணி.


எல்லோருடைய இவ்வளவு தூர சந்தோஷமும் ஒன்றும் இல்லை என்பது போல் மறுநாள் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. அது நந்தித்தாவின் மனதையும் அவளுக்கு உணர்த்தியது.
 
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN