உறவாக வேண்டுமடி நீயே 19

R

Rukkuraj

Guest
உறவு 19


நாட்கள் அதன் வழக்கப் படி செல்ல, ஒரு நாள் விடியற்காலையில் நந்திதாவுக்கு விழிப்பு தட்ட, எழுந்தவளின் பக்கத்திலிருந்த டேபிளில் ஒரு பரிசுப் பெட்டகம் அழகாய் இருக்க, ‘இது யாருக்கு? இங்கு ஏன் இருக்கு?’ என்ற குழப்பத்தில் அதை அவள் கையில் எடுத்துப் பார்க்க, அதன் மேலேயே ‘advance happy birthday யுகா பேபி’ என்று எழுதியிருந்தது. நந்திதாவுக்கு சந்தோஷத்தில் ஒன்றும் புரியவில்லை.

இது கணவன் வைத்தது தான் என்பது மட்டும் அவளுக்குத் தெரிந்தது. ‘ஆனால் பிறந்த நாளுக்கு இன்னும் ஏழு நாள் இருக்கே. இப்போது ஏன் இந்த பரிசு?’ என்று நினைத்தவள் அதை அவசரமாகப் பிரித்துப் பார்க்க, உள்ளே அவளுக்குப் பிடித்த நிறத்தில் அழகிய புடவை அதனோடு கண்ணாடி வளையல், பூ மற்றும் தங்கத்தால் ஆன குங்குமசிமிழில் இரண்டு இதயங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்க ஒன்றில் மஞ்சளும் இன்னொன்றில் குங்குமமும் இருந்தது.

முதல் முறையாக கணவன் வாங்கிக் கொடுக்கும் பரிசு! அதிலும் அவளுக்கு மிகவும் பிடித்த கண்ணாடி வளையல் இருக்க, ஆனந்தத்தில் திக்கு முக்காடிப் போனாள் நந்திதா. கூடவே அதனுடன் ஒரு தாளில், ‘விலை கொடுத்து வாங்க முடியாதததும், ஒரு பெண்ணுக்கு விலை மதிக்க முடியாத பொருளான உன்னுடைய இந்த மங்களத்துக்கு இந்த பிறவியில் சொந்தக்காரன் நான் ஒருவன் மட்டுமே!’ என்று எழுதியிருக்க, ‘சார்க்கு இப்பவும் ஆர்டர் தான் பார்த்தியா?’ என்று மனதிற்குள் கணவனைச் சாடியவளின் நெஞ்சம் பூவாய் மலர்ந்திருந்தது.

இதை ஏன் கணவன் தன் கையில் கொடுக்கவில்லை என்ற எண்ணமோ சுணக்கமோ நந்திதாவுக்கு வரவே இல்லை. அவள் இயல்பு இது தான். ‘சர்ப்ரைஸ்னா தெரியாம தான் இப்படி வைப்பாங்க’ என்று சொல்லிக் கொண்டவள் ‘சர்ப்ரைஸ் கொடுத்துட்டு தூங்கறார் பார் கேடி!’ என்பதற்கு மேல் வேறு எதுவும் நினைக்கவில்லை அவள்.

காலையில் கணவன் கொடுத்த புடவையையே அதற்கு தோதான ஜாக்கெட்டுடன் அணிந்து இவள் கண்ணாடி முன் நிற்க, குளியல் அறையிலிருந்து வெளியே வந்தவன் மனைவியைப் பார்த்து விசில் அடித்தவன்,

“ச்சே! என்ன கலர் இது? உனக்கு சூட் ஆகலையே யுகா. எந்த மடையன் இதை செலக்ட் செய்தான்? எனக்கு பிடிக்கவே இல்லை யுகா” என்று இவன் பொய்யாய் சீண்ட, கணவனின் குணத்தை உணர்ந்தவள்,

“உங்களுக்கு பிடிக்கலையா? அச்சச்சோ! சரி விடுங்க. அப்போ என் கணவருக்கு பிடிக்காததை வாங்கி நான் அவரைப் பழி தீர்த்துக்கிறேன். ஆனா இது எனக்கும் என்னவருக்கும் பிடித்திருக்கு” என்று அவள் அகம் மகிழ்ந்து சொல்ல, அதில் சிரிப்புடன் மனைவியைப் பின்புறமாக அணைத்து அவள் காது மடல் உரச,

“அழகா இருக்க டி” என்று மனைவியைக் கொஞ்சினான் அவன்.

அன்று மட்டும் இல்லை, அதற்கு மறுநாளும் அதே நடு ஜாம நேரத்தில் அவள் பக்கத்தில் பரிசு இருந்தது. அதில் கொலுசு இருக்க, கூடவே ‘உன் பாத சுவடு அறியும் கொலுசாக நானே இருக்க வேண்டும்’ என்று எழுதியிருக்கவும், வாழ்வில் முதல் முறையாக போடயிருக்கும் அந்த கொலுசை கணவனின் பரிசை பொக்கிஷம் என ஏற்றுக் கொண்டாள் அவள்.

மூன்றாம் நாள் பரிசாக அழகிய கைக்கடிகாரம். அதனுள் சுற்றி நம்பர்களுக்கு பதில் காதலின் சின்னமான அழகான தாஜ் மஹால்கள் இருக்க, சின்ன முள்ளில் அவள் உருவமும் பெரிய முள்ளில் இவனுடைய உருவத்தையும் பதித்திருக்க, ‘காலம் முழுக்க இதை போலவே என் காதல் உன்னையே சுற்றி இருக்குமடி’ என்று எழுதியிருந்தான் அவன்.

இவ்வளவு நாள் கணவன் நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று சொன்னது இல்லை இவளும் சொல்லவில்லை. இருவரும் அதை வாய் மொழியாக சொல்லவில்லை என்றாலும் இருவரும் ஒருவர் மேல் மற்றவர் வைத்திருந்த காதலை அக்கறையால் செயலால் உணர்ந்தி கொண்டு தான் இருந்தார்கள் கூடவே உணர்ந்தும் இருந்தார்கள். இதோ இன்று முதல் முறையாக கணவனின் காதல் வார்த்தைகளை எழுத்தால் உணர்கிறாள் நந்திதா. அதை படித்தவள் “என் காதலும் உன்னை சுற்றி தான் டா என் புருஷா” என்று சொல்லிக் கொண்டாள் அவள்.

இதே கண்ணாமூச்சி ஆட்டமாக நான்காம் நாள் இரவு அழகிய ஒரு போட்டோ ஆல்பம் ஒன்றை மனைவிக்குப் பரிசாக வைத்திருந்தான் அவன். அதை பிரித்துப் பார்த்தவளின் விழிகளில் கண்ணீர் தேங்கி நின்றது. ஆல்பம் முழுக்க அவள் ஏழாம் வயதிலிருந்து இன்று வரை எடுத்த புகைப்படங்கள்.

அதிலும் அனைத்திலும் அந்தந்த வயதில் அவளுடன் அபியும் இணைந்திருந்தான். மனைவியின் ஏக்கம் புரிந்தவனுக்கு அவள் சிறு வயதில் தனியாக இருந்ததை எல்லாம் போக்குவதைப் போல் இருந்தது அந்த ஆல்பம். அதே மாதிரி நாளைய தினம் தங்கள் பிள்ளைகளிடம் இதை காட்டும்போது முன்பிருந்த தனிமை மனைவிக்கு நினைவு வரக் கூடாது என்பதற்கே இப்படி செய்திருந்தான் அவன். இன்றைய இரண்டு வரியாக, ‘நிழலாக மட்டும் இல்லை, உன் உயிராகவும் நானே இருக்க வேண்டுமடி’ என்று தன் காதலை அவளிடம் எழுதி சொல்லியிருந்தான் அவன்.

இப்படியாக ஒவ்வொரு நாளும் பரிசையும் தன்மனதில் தோன்றிய கவிதைகளையும் தன் காதலால் தன்னவளின் இதயமென்னும் காகிதத்தில் அவன் எழுதி வர, தினமும் இந்த பரிசுகளையும் கணவன் தன் மேல் வைத்திருந்த காதலையும் பார்த்த போது நந்திதாவுக்கு அவளையும் மீறி அழுகை வந்தது. அதுவும் ஆனந்தத்தில் தான்!

இப்படி ஒவ்வொரு நாளும் பரிசைத் தந்தவன் ஐந்தாம் நாள் இரவு மட்டும் தரவில்லை. ‘பிறகு தருவார் போல! இதோ இப்போ தருவார். ம்ஹூம்… இல்லை இல்லை இதோ இப்போ வரும்’ என்று இவள் நினைத்து ஒவ்வொரு நொடியும் எதிர்பார்த்திருக்க, அன்று பகல் கடந்து இரவும் வர அப்போதும் அவன் தரவில்லை. இதுவரை கேட்காத மாதிரி இன்றும் அவளுக்கு கேட்கத் தோன்றவில்லை. தனக்கே தெரியாமல் இப்படி வைத்து விளையாடும் கணவனின் விளையாட்டு அவளுக்குப் பிடித்து தான் இருந்தது.

‘இன்றைய நாளும் முடிந்து நாளையும் வரப் போகுது. இதோ இரவு தூக்கத்தையும் தொடரப் போகிறோம் இன்னும் என்ன இவர் தரல? மறந்துட்டாறா?’ என்ற எண்ணத்தில் சிறு கோபமும் இயலாமையினால் அழுகையும் ஒருங்கே வந்தது அவளுக்கு. அதனால் தூங்க முடியாமல் இவள் புரண்ட படியே இருக்க,

“என்ன டி தூங்கலையா?” என்று ‘என் தூக்கத்தைக் கெடுக்கறியே!’ என்பது போல் கணவன் அவளை அதட்ட,

“உங்களுக்கு தூக்கம் வந்தா ஷேமமா தூங்குங்க. நான் தான் இவர் தூக்கத்தைக் கெடுக்கிறேனாம். தூக்கம் வந்தா தூங்க மாட்டாங்களா? நீங்க மேலே படுங்க, நான் கீழ பெட் போட்டு படுத்துக்கிறேன்” என்று இவள் அலுப்பும் சலிப்புமாக இவள் கீழே படுக்க எழ, அதே நேரம் மனைவியின் கையை அதிரடியாகப் பிடித்து இழுத்து அவள் நெற்றி முட்டி மூக்கோடு மூக்கை உரசியவன்,

“மேடம்க்கு கோபத்தைப் பாரு!” என்றவன் அவள் கையில் ஒரு கவரைத் திணித்திருந்தான், “இதை போட்டுட்டு வந்து தூங்கு” என்று சொல்ல, அதைப் பிரித்துப் பார்த்தவளின் கண்களோ வியப்பில் விரிந்தது என்றால் முகமோ வெட்கத்தில் சிவந்தது.

“ச்சீ! இதை எப்படி நான் உடுத்திட்டுப் போகுறது?” என்று அவள் போலியாய் பிகு செய்ய

“உன்னை யார் வெளியே போகச் சொன்னா? இது எனக்கே எனக்கானது டி” என்று அவன் மனைவியை அணைத்தபடி சரசமாகச் சொல்ல, இன்னும் சிவந்து போனாள் அவள்.

அவன் கொடுத்த ஆடை அப்படி ஒன்றும் மோசம் இல்லை. ஸ்லீவ்லெஸ், முன் பக்கமும் பின் பக்கமும் கழுத்து கொஞ்சம் இறக்கமாகவும் நீளமும் தொடை வரை மட்டுமே இருந்தது அந்த ஆடை. உலகத்தில் உள்ள முக்கால் வாசி கணவனுக்கு உள்ள ஆசையே இப்படி ஒரு ஆடையைத் தன் மனைவிக்குப் தனிமையில் போட்டுப் பார்க்க வேண்டும் என்பது தானே? அதில் அபி மட்டும் அதற்கு விதி விலக்கா என்ன? அன்று இரவே பிடிவாதமாக அந்த ஆடையைப் போட்டுக் காட்டச் சொல்லி அழகு பார்த்தானே தவிர ஒரு கணவனாய் மனைவியை நெருங்கவில்லை அவன்.

இருவரும் செய்த அலப்பறையில் இரவு பனிரெண்டைத் தாண்ட, அடுத்த நாள் பரிசான இரண்டு பேரின் முதல் எழுத்தான AYயை மோதிரமாக வைரக் கற்களில் பதித்து இரண்டு எழுத்தையும் தொட்டார் போல தலையில் இதய வடிவில் கிரீடம் வைத்திருக்க, அதை தன்னவளின் விரலுக்குப் போட்டு அனைத்து விரல்களுக்கும் முத்தம் வைத்தான் அவன்.

இப்படியே ஆறு நாட்கள் செல்ல, அந்த இரவுப் பரிசைத் தவிர மற்ற நேரத்தில் இருவரும் இயல்பாக இருந்தார்கள். ஏனோ… ஆறாம் நாள் அன்றே நந்திதா சொல்லி விட்டாள் தன்னுடைய பிறந்த நாளைத் தன் கணவன் வீட்டில் அனைவருடனும் கொண்டாட வேண்டும் என்று.

“நான் என்ன பிளான் வைத்திருக்கேனே உனக்கு தெரியாது. பிறகு எப்படி அங்க கொண்டாடலாம்னு சொல்ற ?”

“ஒரு மருமகளா நான் அங்கே தானே இருக்கணும்? அத்தை ரொம்ப ஸ்வீட்டுங்க. இனியும் நாம் இங்கே இருக்க வேண்டாமே! அம்மேயையும் கூட்டிட்டு நாம எல்லோரும் அங்கேயே போய்டுவோம். ஒரே வீட்டிலேயே இருப்போங்க” என்று இவள் பிடிவாதமாய் சொல்ல, அவளை ஆழ்ந்து பார்த்தவன் மனைவியை இறுக்க அணைத்துக் கொண்டான் அபி.

ஏழாம் நாள் இரவு நந்திதாவின் பிறந்த நாள் அன்று இரவு பனிரெண்டு மணி தாண்டியதும் மனைவியின் கண்ணைப் பொத்தியபடி இவன் ஒரு அறைக்கு அழைத்துச் செல்ல அங்கு அறை முழுக்க வண்ணக் காகிதங்களால் பிறந்தநாளுக்கே உள்ள பொலிவுடன் நடுவில் கேக்குடன் அலங்கரித்திருக்க, அங்கு வெளியாட்கள் யாரும் இல்லாமல் முழுக்க முழுக்க குடும்பத்தார் மட்டுமே இருந்தார்கள். இதுபோல் ஒன்று இவள் வாழ்வில் நடக்கும் முதல் நிகழ்வு இது. சந்தோஷத்தில் கணவனை இறுக்க கட்டியவள்,

“தாங்க்ஸ் தாங்க்ஸ்!” என்று பல முறை அவள் சொல்ல,

“எனக்கு தாங்க்ஸ் இப்படி வேண்டாம்” என்று அவன் யாருக்கும் கேட்காத குரலில் காதில் ரகசியம் பேச, கணவனை மேலும் இறுக்க அணைத்துக் கொண்டாள் அவனின் இன்னாள்.

பிறகு கேக் வெட்டி எல்லோருடைய பரிசையும் பெற்றுக் கொண்டு அறைக்கு வர, மனைவி முன் பத்திரத்தை நீட்டினான் அபி அவள் வாங்கிப் பிரித்துப் பார்க்க, அபியின் அணை ஆடைக்கான கம்பெனியைத் தன் மனைவி பெயரில் எழுதியிருந்தான் அவன். கூடவே, ‘பல சாதனைகளை விட என் வாழ் நாள் முழுக்க கடைசிவரை என் ஜென்மம் முழுவதும் எந்தன் உறவாக வேண்டுமடி நீயே!” என்று ஒரு காகிதத்தில் எழுதியிருந்தான் அவள் கணவன்.

இதுவரை நான் உன்னைக் காதலிக்கிறேன் என்று அபி சொன்னது இல்லை. அப்படி ஒரு வார்த்தையை அவளும் எதிர்பார்க்கவும் இல்லை. யாருக்கும் அடங்காதவன் யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதவன் இன்று அவளிடம் சரணாகதி அடைந்து என் உயிர் என் உடைமை என் செல்வம் பேர் புகழ் அனைத்தும் நீ மட்டும் தான் டி என்பதை அவன் ஒவ்வோர் இடத்திலும் நிரூபிக்க, கணவனைக் கட்டிக் கொண்டு முத்த மழை பொழிந்தாள் அவள்.

அதில் திணறியவன், “உன் முத்தம் மட்டும் இல்லை, இன்று நீயே எனக்கு வேண்டும் டி..” என்று அவன் கெஞ்ச, இந்த விஷயத்தில் கெஞ்சும் கணவனிடத்தில் தன்னை ஒரு ராணியைப் போல் உணர்த்தவள், அடுத்த நொடியே கணவனுடன் ஒன்றாக கலந்து தான் போனாள் அவனின் யுகா!

ஒரு நாள் இரவு இவள் கணவன் முன் சில பேப்பர்களை வைக்க, அதை எடுத்துப் பார்த்தவன், “எதுக்கு யுகா இந்த முடிவு? வேணாம் டி” என்று மறுக்க

“இது இப்போ எடுத்தது இல்லை. உங்களைப் பற்றி ஜெயக்குமார் ஐயா சொன்ன உடனே இந்த முடிவை நான் எடுத்துட்டேன். சோ இதுக்கு வேண்டாம் சொல்லாம மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பாருங்க” அவள் உறுதியாய் இருக்க

“அப்போ ஐயா சொல்லி தான் உனக்கு என்னைப் புரிந்தது இல்ல?”

“என்ன பேசுறீங்க நீங்க? அப்போ நாம் வாழ்ந்த வாழ்வு, சூழ்நிலை வேற. ஆனா இப்போ அவர் சொல்லாமலே உங்க குணத்தை நான் புரிஞ்சிகிட்டேன். அதனால் என் பெயர்ல நீங்க எழுதின ஃபாக்டரி மட்டுமல்லாமல் என்னுடைய ஃபாக்டரியையும் உங்க பெயரில் தான் எழுதப் போறேன். அந்த அணை ஆடை தயாரிப்பும் வேணி அப்பா தயாரித்தது தான். இப்போ வேணி அப்பா நீங்க தானே. அதனால் இனி அதுவும் உங்களுக்கு தான் சொந்தம். சோ இனி நோ எக்ஸ்கியூஸ்!” என்று இவள் உறுதியாகச் சொல்லி விட, முழுமனதாக இல்லையென்றாலும் அரை மனதாக அதற்கான வேலையில் இறங்கினான் அபி.

ஆமாம்! அன்று இருவரும் போட்டுக் கொண்ட சவாலின் படி இன்று இருவரும் அதில் ஜெயித்தார்கள். அதாவது கணவனிடம் மனைவி தோற்று இவள் அவனை ஜெயிக்க வைக்க, மனைவியடம் கணவன் தோற்று இவன் அவளை ஜெயிக்க வைத்திருந்தான். கணவன் மனைவிக்குள் இருக்கும் புரிதலானது தாம்பத்தியத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து ஜெயிக்க வைப்பது தானே!

இரண்டு மாதங்களுக்குப் பிறகு... அபி வீடு...

காலை நேர பரபரப்பில் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருக்க, அப்பொழுது தான் சோர்வுடன் சாப்பிட அமர்ந்த நந்திதா, உணவை வாயில் வைத்த நேரம் சாப்பிட முடியாமல் ஓடிச் சென்று வாந்தி எடுத்தவள் அசதியில் மயங்கி விழ, தங்கத்திற்கும் மேகலைக்கும் ஒரு சிறு சந்தேகம் இருக்க, அதை உறுதிப் படுத்தினார் வந்து அவளை பரிசோதித்த டாக்டர்.

ஆமாம்! நந்திதா இரண்டு மாதம் கருவுற்றிருக்கிறாள். வீட்டில் அனைவருக்கும் சந்தோஷம்! இதுவரை இரண்டு பேரும் சிரித்துப் பேசி மேகலை பார்த்தது இல்லை. அதனால் சின்னவன் இந்த விஷயத்தில் முந்துவான் என்று அவர் நினைத்திருக்க, இந்த செய்தி அவருக்கு மன அமைதியையும் ஆனந்தத்தையும் தந்தது. பபுலுவுக்கு சொல்ல, வீடியோ காலிலேயே நந்திதாவை ஓட்டி எடுத்து விட்டான் அவன்.

இதைக் கேட்டு அபி மற்ற கணவரைப் போல் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. ஆனால் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷமும் நந்திதாவைப் பார்த்து கனிவும் வந்து போனது. இரவின் தனிமையிலும் இருவரும் மற்ற கணவன் மனைவி போல் ஆர்ப்பாட்டம் செய்யவில்லை. மாறாக ஒருவர் அணைப்பை மற்றவர் விரும்பினர்.

அதுவே அவர்களுக்குள் ஆயிரம் வார்த்தைகளையும் காதலையும் கொஞ்சலையும் கெஞ்சலையும் சொல்லியதோ என்னமோ? ஆனால் மனைவியின் சோர்வைப் பார்த்து சிறிது நேரத்திற்கு எல்லாம் அவள் தூங்க படுக்கையைச் சரி செய்தவனோ அவள் படுத்ததும், அவளின் நைட் பைஜாமை விலக்கி வயிற்றில் முத்தம் கொடுத்தவனோ,

“ஆயிரம் நினைவுகளும் எத்தனை அழகான கனவுகளும் வந்தாலும், என் மனசுக்குள் நீ வந்த அந்த ஒரு நிமிடத்திற்கு ஈடாகாது டி! எப்போது அதை நினைத்தாலும் சுகம் தான் டி”. என்றவன் தன் மகளையோ இல்லை மகனையோ சுமந்திருக்கும் தன் மனைவியின் ஆழிலை வயிற்றில் முத்தமிட்டவன்

“இந்த பிறவி மட்டும் இல்லை எத்தனை பிறவி எடுத்தாலும் நீயே எனக்கு மனைவி என்ற உறவாக வேண்டுமடி !” என்று அவன் முதல் முறையாக கண்கலங்க சொல்ல, கணவனை மூச்சுத் திணற இறுக்க அணைத்துக் கொண்ட நந்திதா மனதிற்குள் பூத்த நிறைவான நிம்மதியும் சந்தோஷமும் தேகமெங்கும் பரவியது.

‘கருமணியிற் பாவாய்நீ போதாயாம் வீழும்
திருநுதற்கு இல்லை இடம்’
என்பது வள்ளுவர் வாக்கு.
அதாவது எனது கருமணியிலுள்ள பாவையே! நீ அவ்விடத்தை விட்டுப் போய்விடு. ஏனெனில் நான் விரும்புகின்ற இவள் இருக்க வேண்டிய இடம் அது தான் என்பது பொருள். இது அபிக்கும் நந்திதாவிற்கும் பொருந்துமளவிற்கு இருவரும் ஒன்றிப் போனார்கள்.

ஒருவரை அன்பு கொண்டு நேசிப்பது அழகானது. அதே உரிமை கொண்டு நேசிப்பது மிகவும் ஆழமானது. அதைத்தான் அபி செய்தான், செய்கிறான்! மௌனத்தில் வார்த்தைகளையும், கோபத்தில் அன்பையும் உணர்ந்து கொள்வது தான் கணவன் மனைவி உறவு. புரிதல் இருக்கும் இடத்தில் பிரிதல் இல்லை! அதை உணர்ந்ததால் தான் இன்று கணவனின் உயிரை இவள் சுமந்தாலும் அபியின் உயிராவே மாறிப் போனாள் அவனின் யுகா!

நன்றி

முடிவுற்றது
 
R

Rukkuraj

Guest
அருமையான கதை.அபி,நந்திதா உன்னதமானவர்கள்.தான் பெறாத பிள்ளைக்கு தாய் தந்தையாக இருந்து படத்தை பொழிவதில் உயர்ந்தவரகள்.
 
R

Rukkuraj

Guest
அருமையான கதை.அபி,நந்திதா உன்னதமானவர்கள்.தான் பெறாத பிள்ளைக்கு தாய் தந்தையாக இருந்து பாசத்தைபொழிவதில் உயர்ந்தவரகள்.
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நேசங்கள் ம்மா🤗🤗🤗 ரொம்ப நாள் சென்று உங்க கமெண்ட்♥️♥️♥️ சந்தோஷமா இருக்கு💟💟💟
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN