சாதி மல்லிப் பூச்சரமே!!! 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 3





மூத்த தலை முறை ராஜேந்திரன்-ராஜாத்தி தம்பதி.





அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவர் மேகநாதன் அடுத்து சிவகுரு. அதன் பிறகு மூன்றும் பெண் பிள்ளைகள்.





மேகநாதனுடைய மனைவி மாரியம்மாள் அவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். மூத்தவன் கந்தமாறன் அவர் மனைவி இலக்கியா. அந்த கிராமத்திற்கு V.A.Oஆக இலக்கியா வர, அதில் இருவரும் காதலிக்க, ஒரே சாதி என்பதால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் திருமணம் செய்து கொண்டார்கள். அவர்களுக்கு ஒரே மகள் பூந்தென்றல். தற்போது அவருக்கு மனைவி உயிருடன் இல்லை.





அடுத்து மூர்த்தி அவன் மனைவி செண்பகவல்லி. அவருக்கு நிலவழகி என்று ஒரு மகளும் கிரி என்று ஒரு மகனும் உள்ளனர்.





மூன்றாவதாக பெண் தாமரை அவர் கணவர் சந்திரன். அந்த ஊருக்கு போஸ்ட்மேனாய் வந்த அவரைக் காதலித்து ஒரே சாதினராய் இருந்தாலும் வீட்டை எதிர்த்து ஓடிப் போய் திருமணம் செய்து கொண்டார் தாமரை. அவர்களுக்கு தான் நம் ஹீரோ மதிவேந்தன் என்ற ஒரு மகன்.





அடுத்து கடைக் குட்டி அங்கை. வீட்டில் பார்த்த மாப்பிளையான பக்கத்து ஊர் பண்ணையாரான கலையரசனைத் திருமணம் செய்து கொண்டவர். அவர்களுக்கு இரட்டையர்கள் நவீன் மற்றும் நரேன். ஆனால் நண்பர்கள் மற்றும் தெரிந்த ஊரார் கூப்பிடுவது ஓணான், பல்லி என்று. இருவரும் பன்னிரெண்டாவது படிக்கிறார்கள். அங்கையைத் தவிர அனைவரும் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாய் தான் வசிக்கிறார்கள்.





ராஜேந்திரன்-ராஜம்மாளின் அடுத்த மகனான சிவகுருவின் மனைவி குணவதி. பெயருக்கு என்ற படி குணவதி. இத்தனைக்கும் அவர் சொந்தம் இல்லை அசல். அவருக்கு மூத்தாரான மேகநாதனும் அவர் மனைவி மாரியாம்மாளும் சீக்கிரமே இறந்துவிட,





இவர் தான் அவர்கள் ஐந்து பிள்ளைகளையும் வளர்த்தார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள். ஆனால் அவர் பிள்ளைகளும் அவரும் தற்போது உயிரோடு இல்லை.





தங்களை சித்தப்பாவாக மட்டும் இல்லாமல் அப்பாவாகவே இருந்து வளர்த்ததால் ஊரார் மட்டும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவருமே சிவகுருவை ஐயாரு என்று தான் அழைப்பார்கள். அவர் தான் அந்த வீட்டுக்கு பெரிய தலை. அவர் மேல் அதிக பாசம், பக்தி, மரியாதை எல்லாம் உண்டு. அவர் பேச்சுக்கு மறு பேச்சின்றி நடந்து கொள்வார்கள் அந்த வீட்டினர். ஆனால் மதிவேந்தன் அதற்கு விதிவிலக்கு.





அதற்காக அவரை அவனுக்கு பிடிக்காது என்று சொல்ல முடியாது அவர் வழி வழியாக வந்த கோட்பாடு படி அப்படி, கொஞ்சமும் வளையாமல் யாரையும் அண்ட விடாமல் நாங்கள் மேலானவர்கள் இவர்கள் எல்லோரும் என் சாதி ஆள் என்ற நிமிர்வுடன் திமிருடன் திரிபவர். அது ரத்ததிலே ஊறியது என்று கூட சொல்லலாம். ஏன், சாதி வெறியர் என்று கூட சொல்லலாம். பழைய ஆள் இல்லையா அப்படி தான் இருப்பார். அது மதிவேந்தனுக்குப் பிடிக்காது அதனாலேயே அடிக்கடி சில பல வாக்குவாதங்கள் இருவருக்குள்ளும் வரும். இன்று வந்தது போல. இத்துடன் குடும்ப உறுப்பினர்கள் அறிமுகம் முடிந்தது. மீண்டும் நிகழ்வுக்கு வருவோம்…





மறுநாள் அம்மனைத் தேரில் அமரவைத்து வடம் இழுக்கும் வைபவம். வேந்தனைத் தவிர ஐயாரு குடும்பத்தாரும் மற்றும் அவர் சாதிக்கார்களும் வடம் இழுக்கத் தயாராகி விட, ஐயாரு தான் வேந்தனை ஒரு வேலையாய் அனுப்பியிருந்தார்.





அதனால், “இருங்கலே இருங்கலே, எங்க வீட்டு சிங்கக் குட்டி வரட்டும்லே” என்று அவர் நிறுத்தி வைக்க, அப்பொழுது வந்து இறங்கினான் வேந்தன். செருப்பை ஒரு பக்கம் ஓரமாக கழட்டி விட்டவன்.





அம்மனைப் பார்த்து கை கூப்பி தலைக்கு மேல் வைத்துக் கும்பிட, அவன் தலைக்கு கட்ட வேண்டிய ஒரு பட்டுத் துணியை வந்து கட்டினார் ஐயர். இது அவர்கள் குல வழக்கத்திற்கு கட்டுவது. பின் இவன் வேட்டியை மடித்துக் கட்ட,





“ஏலே பயலே! இங்கிட்டு வாடே” என்று கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்து தேரின் கயிறை அவனிடன் கொடுத்தார் ஐயாரு.





மதிவேந்தன் பெண் வழி வாரிசாக இருந்தாலும் அவருக்கு பிறகு அவருடைய இடத்தில் நின்று அவர்களின் சாதி சனத்தைக் காத்து வழி நடத்துபவன் இவன் தான் என்பதில் உறுதியாக இருந்தார் ஐயாரு.





இங்கு திருநெல்வேலியில் இப்படி ஆரவாரமாக திருவிழா நடந்து கொண்டிருக்க, அதே சமயம் அங்கே பெங்களூருவில்...





மாலை நேரம் அந்த செவென் ஸ்டார் ஹோட்டல் பார்ட்டி ஹாலில் இளைஞர்கள் பட்டாளம் அப்படி நிரம்பி வழிந்தது. எங்கும் இளம் மங்கையர்கள். அதிலும் மாடலிங் துறையில் மின்னுபவர்கள். இசையும் நடனமும் மட்டுமில்லாமல் அங்கு வந்திருந்தவர்களின் ஆடையுமே மேற்கத்திய பாணியில் மிளிர்ந்தது.





மாலை நேரம் என்பது வெளி உலகத்திற்கு தான் எங்களுக்கு இப்போது இரவு என்பது போல் அந்த இடமே கும்மிருட்டில் மூழ்கியிருந்தது. ஆனால் ஒரு இடத்தில் மட்டும் மேடையில் ரேம்ப் வாக் வருபவர்களையும் அவர்கள் ஆடைகளையும் மட்டும் ஃபோகஸ் செய்து தனியாய் ஒளி வட்டம் வீசியது.





அங்கு மேடையில் வருபவர்களைப் பார்த்துக் கொண்டு முன்பக்க முடியை விரலால் சுழற்றியபடி டென்ஷனுடனே ஓரிடத்தில் நின்றிருந்தாள் லிஸ்மிதா.





“ஹேய்! என்ன டென்ஷன்?” என்று அங்கு வந்த சரண் அவளைக் கேட்க





“ப்ம்ச் போடா!” என்று சலித்தவள், “இது என் முதல் ஷோ டா. இதில் நான் ஜெயிப்பேனா?” என்று இவள் கேட்க





“அடடா! உனக்கு எத்தனை தடவை சொல்றது? நீ நிச்சயம் ஜெயிப்ப! நீ ஃபேஷன் ஷோவுக்காக பிரத்தியேகமா டிசைன் பண்ண மூன்று ஆடைகளுமே எக்ஸ்ஸலன்ட்! அதனால் நிச்சயம் முதல் மூன்று இடத்துல நீ வருவ. அப்படி இல்லனாலும் அடுத்த வருஷம் இதேமாதிரி ஃபேஷன் ஷோ வரும். அப்போ நீ வின் செய்திடுவ லிஸ்மிதா” சரண் நம்பிக்கை ஊட்ட,





“ம்ஹும்.... அடுத்த வருடம் என்பதற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. போன வருடம் நடந்தப்போ எனக்கு வைரல் ஃபீவர் வந்துடுச்சு. சோ கலந்துக்க முடியல. அதான் இந்த வருடம் இவ்வளவு டெடிகேஷனா என்னோட முழு எஃபோர்ட் கொடுத்திருக்கேன். அடுத்த வருடம் இப்படி ஸ்டேட் லெவல்ல நடக்கிற காம்படீஷன் எல்லாம் இல்லை. ஆல் இந்தியா லெவலில் நடக்கிற காம்படீஷன்ல பார்டிசிபேட் செய்ய போறேன். பிறகு இன்டர்நேஷனல் லெவலில் கலந்துக்க போறேன்.





எல்லாத்திலேயும் ஃபர்ஸ்ட் வருவேன். அப்பறம் என் லெவலே வேற வேற தான்” என்றவள் தன் கைகளைக் காற்றில் ஒவ்வொரு படிகளாக உயர்த்தி உயர உயர கண்ணில் போதையுடன் அப்படி சொல்ல கூடாது வெறியுடன் லிஸ்மிதா காட்ட,





“உனக்குள் இவ்வளவு வெறியா?” என்று அசந்தே போனான் சரண்.





இருபது வயது நவநாகரீக மங்கை லிஸ்மிதா. அடுத்த வருடம் ஃபேஷன் டிசைனிங் முடிக்கப் போகிறாள். அவளுடைய கனவு, லட்சியம் ஏன் தவம் எல்லாம் அவள் உலக அளவில் ஃபேஷன் டிசைனராக வேண்டும் என்பது தான். உலகில் எங்கு திரும்பினாலும் அவள் வடிவமைத்த ஆடைகளையே எல்லா மாடல்களும் ஸ்டார்களும் போட்டு வலம் வர வேண்டும் என்பதே அவள் எண்ணம்.





இப்பொழுது நடந்து கொண்டிருப்பது பெங்களூரு கல்லூரிகளுக்கிடையே நடக்கும் போட்டி. மொத்தமே ஏழு கல்லூரிகள் மற்றும் இருபத்தி ஐந்து பேர் பங்கேற்று உள்ளனர். இது தான் வாழ்வின் பெரிய சாதனை என்று இல்லை. ஆனால் லிஸ்மிதா இதை சாதாரண போட்டியாக எடுத்துக் கொள்ளவில்லை.





முதல் அடியாக இருந்தாலும் அதை அழுத்தமாக இந்த ஃபேஷன் டிசைனிங் உலகில் பதிக்க நினைத்தாள். அதனால் தான் இவ்வளவு கேள்விகள்!





திடீரென அங்கு வந்த அவள் தோழி மஞ்சு, “ஹேய்! முதல் பத்து பேர்ல நீயும் செலக்டாகி இருக்கியாம் ஸ்மிதா. மேம் இப்போ தான் சொன்னாங்க. அந்த பத்து பேரையும் திரும்ப ரேம்ப் வாக் பண்ண கூப்பிடுவாங்களாம். அப்போ அந்த மாடல் கூட அதை டிசைன் செய்த டிசைனரும் கூட வரணுமாம். சோ பி ரெடி டி” என்று குதூகலத்துடன் தோழியை அணைத்துக் கொண்டு அவள் உற்சாகப்படுத்த,





“யாக்ஹு!” என்று மண்ணுக்கும் விண்ணுக்கும் குதித்தாள் லிஸ்மிதா. “அப்படியே நான் ஃபர்ஸ்ட் வந்திடணும்” என்றவள் சந்தோஷத்துடனே ஓடி, பெண்களுக்கென்று பிரத்தியேகமாக இருந்த உடை மாற்றும் அறைக்குள் சென்று தான் அணித்திருந்த ஜீன்ஸ் டிஷர்ட்டைக் கழற்றியவள் அழகான மேற்கத்திய உடையான ஸ்லீவ்லெஸ் டாப்பைத் தொடை வரை இறுக்கிப் பிடிக்கப் போட்டவள் மாடலிங் பெண்கள் அணியும் முழங்கால் அளவு பூட்ஸுடன் தன் முடியை சிறிய கிளிப்பில் அடக்கியிருந்தவள் இப்பொழுது கிளிப்பைக் கழற்றி முடியை விரித்துப் போட்டவள் அதீத மேக்கப்புடன் வெளியே வர, அவளைப் பார்த்து வாய் பிளந்தாள் மஞ்சு.





பெங்களூருவில் இந்த படிப்பு படிப்பவர்கள் எல்லாம் மாடர்னானவர்கள் தான். ஆனால் இன்று லிஸ்மிதா படு மாடர்னாக இருந்தாள்.





தோழியைப் பார்த்தவள், “ஹேய்! இனி என் ரேன்ஜே மாறப் போகுது டி. இனிமே மேல்நாட்டு உடையும் அவர்களுடைய ஸ்டைலும் தான் என்னுடைய அப்டேட்டா மாறப் போகுது” என்று இவள் விளக்க





அதே நேரம் அவள் பெயரை மேடையில் கூப்பிட, அழகான மயிலாக ஒயிலாக அந்த அழகிகளுடன் ஒரு அழகியாக இணைந்து நடந்தாள் லிஸ்மிதா.





லிஸ்மிதாவின் எண்ணப் படியே அவளே முதல் பரிசை வாங்க அவளுடைய மகிழ்ச்சிக்கும், ஆரவாரத்திற்கும் அளவே இல்லாமல் போனது.





முதல் வேலையாகத் தன் சந்தோஷத்தை தாய் மலருக்கும் தந்தை சுந்தரத்திற்கும் அழைத்துச் சொல்ல, அவர்களும் அகமகிழ்ந்து போனார்கள்.





இருவரும் தற்போது பெங்களூருவில் இல்லை. சுந்தரத்தின் ஒன்று விட்ட அண்ணன் மகளுக்கு இன்று வளைகாப்பு என்பதால் கணவன் மனைவி இருவரும் திருச்சி வரை சென்றிருக்கிறார்கள். இன்று தான் விசேஷம் என்பதால் இன்றைய போட்டியை கருத்தில் கொண்டு லிஸ்மிதா அவர்களுடன் போகவில்லை. நாளை இரவு வந்து விடுவார்கள். அதுவரை இவள் தனியாகத் தான் இருக்க வேண்டும்.





இது ஒன்றும் லிஸ்மிதாவுக்குப் புதிதில்லை. சுந்தரம் பெரிய கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் உயர்ந்த பதவியில் இருப்பவர். மலர், ஒரு கம்பெனியில் ஆடிட்டராக உள்ளார். அதனால் இருவரும் அடிக்கடி வெளியூர் செல்வது வழக்கம். அப்பொழுதெல்லாம் மலரின் தாய் தான் லிஸ்மிதாவைப் பார்த்துக் கொள்வார். கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு அவர் இறந்து விட, தற்பொழுது லிஸ்மிதா இருப்பது எல்லாம் தனிமையில் தான்.





மறுநாள் அவள் பெற்ற வெற்றியைக் கொண்டாட நண்பர்கள் எல்லாம் பார்ட்டி கேட்க, பெரிய ஸ்டார் ஹோட்டலில் நைட் பார்ட்டி கொடுத்தாள் அவள்.



மஞ்சு, சரண் இருவரும் லிஸ்மிதாவுக்கு நெருங்கிய நண்பர்கள். அவளைப் போலவே கொஞ்சம் மேல்தட்டு வர்க்கம் தான் இவர்கள்.





மஞ்சு மாடர்ன் கேள் தான். ஆனால் அல்ட்ரா மாடர்னாக இருக்க மாட்டாள். இன்றைய பார்ட்டியில் லிஸ்மிதா அல்ட்ரா மாடர்னாக டிரஸ் போட்டதும் இல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து வைன் குடிக்க, அதைப் பார்த்த மஞ்சு,





“என்ன டி இது புதுப் பழக்கம்?” என்று கண்டிக்க





“இனி நான் வேர்ல்ட் லெவல்ல சுற்றப் போறேன் டி. அதனால இதையெல்லாம் நான் பழக்கப் படுத்திக்கணும். எனக்குன்னு ஒரு லிமிட் இருக்கு. அதை நான் தாண்டவும் மாட்டேன் மற்றவரைத் தாண்ட விடவும் மாட்டேன்” என்று இலகுவாகக் கூறி முற்றுப் புள்ளி வைத்து விட்டாள் அவள்.





மறுநாள் காலை இவள் காலேஜ் கிளம்பும் நேரம் தான் வந்தார்கள் சுந்தரமும் மலரும்.





தாய் தந்தையரைப் பார்த்ததும் இவள் ஓடிச் சென்று அவர்களைக் கட்டிக் கொண்டவள், தான் வாங்கின பரிசுகளையும் அப்போது எடுத்த போட்டோக்களையும் காட்ட, மலரின் முகத்தில் கவலை படிந்தது.





“நேற்று பார்ட்டி கொடுக்கறனு பர்மிஷன் கேட்கும் போதே அதிக நேரம் எடுத்துக்கக் கூடாதுன்னு சொல்லி தான் நான் பர்மிஷன் தந்தேன். அதையும் மீறி நீ லேட் செய்ததும் இல்லாமல் வைன் சாப்பிட்டிருக்க...” தாய் முடிக்கக் கூட இல்லை





“மாம்! அதற்கு தான் நான் நேற்றே சாரி கேட்டுட்டனே! இனி அதை எல்லாம் தொட மாட்டேன். மாம் பிலீவ் மீ மாம்!” என்று இவள் லேசாக மூக்கை உறிஞ்ச,





“அது நேற்று நீ போனில் சொன்னது. இப்போ நேரில் பார்த்து ஒரு தாயா உன்னைக் கண்டிக்க எனக்கு உரிமை இருக்கு” என்றவர் அவள் காட்டிய புகைப்படைத்தைக் காட்டி, “என்ன டிரஸ் டி இது? இதை போட்டுக்கிட்டு தான் பரிசு வாங்கினியா” என்று கோபப் பட,





மகளோ கண்ணாலேயே தந்தையை சிபாரிசுக்கு அழைக்க, அவரோ ‘இப்போது நான் வர மாட்டேன்’ என்பது போல் அமர்ந்துவிட, செய்த தப்பிற்குத் தலை கவிழ்ந்தாள் லிஸ்மிதா.





பொதுவாக மலர், மகளுக்கு கொஞ்சம் சுதந்திரம் கொடுப்பார் தான். ஆனால் அதை அளவுக்கு மீறிப் போக விட மாட்டார். செல்லம் கொஞ்சும்போது கொஞ்ச வேண்டும் கண்டிக்கும் போது கண்டிக்க வேண்டும். அது தான் அவள் தாய் மலர்.





கொஞ்சம் நேரம் தலை கவிழ்ந்து நின்றவள், “மாம்! இப்போ தான் வந்தீங்க. அதற்குள்ள என்னைத் திட்டணுமா” என்றவள், “பாருங்க டாட் மம்மிய! டிரஸ்க்கு எல்லாம் கட்டுப்பாடு விதிக்கிறாங்க” என்று சிணுங்க,





“கட்டுப்பாடா? முதல்ல எது கட்டுப்பாடுன்னு தெரிந்துக்க. இருபது வயதுல நாங்க எது சொன்னாலும் உனக்கு கட்டுப்பாடாத்தான் தெரியும். நீ இன்னொருத்தவங்க வீட்டுப் போற பொண்ணு. அவங்க யாரும் நாளைக்கு என்னைப் பார்த்து நீ என்ன டி பொண்ணை வளர்த்து வைத்திருக்கனு கேள்வி...” தாய் முடிப்பதற்குள்,





“ஸ்டாப் இட் மம்மி! அது யாரு அவங்க? எப்போ பாரு என் சாதி, என் குலம், என் இனம்னு சொல்லிட்டுத் திரிவாங்களே அந்த படிக்காத கிராமத்து ஜனங்களா? நீங்க என்ன வேணா சொல்லுங்க நான் கேட்டுக்கிறேன். அவர்களை வைத்து சொன்னீங்கனா நான் கேட்க மாட்டேன். இப்படி தான் டிரஸ் பண்ணுவேன்” என்று கோபாவேசத்துடன் அதிகாரமாக சொன்னவள்





“பை மாம் பை டாட்” என்ற சொல்லுடன் இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அங்கிருந்து விலகியிருந்தாள் லிஸ்மிதா.





லிஸ்மிதா தாய் தந்தையருக்கு அடங்காதவளோ அவர்களின் சொல் பேச்சு கேட்காதவளோ இல்லை. என்ன? இந்த கால பிள்ளைகளைப் போல் கொஞ்சம் இல்லை அதிகமே சுதந்திரத்தை விரும்புபவள். அதிலும் பிடிவாதம் பிடித்தால் அவ்வளவு தான்! ஒன்றை லேசில் விடும் ரகம் இல்லை அவள்.





மலர் கவலையாய் அமர்ந்து விட, மனைவியிடம் வந்த சுந்தரம், “நீ சொல்லியிருந்தா அவ கேட்டிருப்பா. உன்னை யாரு அந்த குடும்பத்து பேச்சை எடுக்கச் சொன்னது? மக பிடிவாதம் தான் தெரிந்ததே! பார், இனி என்ன சொன்னாலும் கேட்க மாட்டா” என்று மகளின் குணத்தை அவர் எடுத்துரைக்க,





“போன முறை ஊருக்குப் போன அப்பவே ஐயாரு என்ன தனியா கூப்பிட்டு என்ன பிள்ளையை வளர்த்திருக்கனு திட்டினார். அதான் கொஞ்சம் கண்டிக்கலாம்னு...”





“இதையும் நம்ப மகள்கிட்ட சொல்லி வைக்காதே. பிறகு ஐயாரு கிட்ட போய் நீங்க எப்படி என் மம்மிய திட்டலாம்னு கேட்டு சண்டை போடுவா”





“ஆமாங்க, நம்ப மேலே பாசம் தான் நம்ப மகளுக்கு” இதை சொல்லும்போதே மலரின் கண்கள் கலங்கியது.






“இது என்ன அபத்தம் மலர்? நம்ப மகளுக்கு நம்ப மேலே பாசம் இல்லாம வேற யார் மேலே பாசம் இருக்கும்?” என்று கண்டித்த படி மனைவியை அணைத்துக் கொண்டார் அவர்.


சாதி மல்லிப் பூச்சரமே!!! 2
 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே!!! 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN