சாதி மல்லிப் பூச்சரமே !!! 6

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பூச்சரம் 6

மதிவேந்தனின் தந்தை சந்திரன் அவர் குடும்பத்திற்கு ஒரே மகன். தாய் தந்தையரின் பொறுப்பு கடைசிவரை தனக்கு தான் என்பதில் உறுதியாக இருந்தவர். தாமரை வசித்த ஊருக்கு போஸ்ட் மேனாய் வந்தவருக்கு தாமரையைப் பிடித்துப் போக, அவளிடம் காதலைச் சொன்னவர், தாய் தந்தையரிடமும் அவள் தான் என் மனைவி என்று சொல்லி விட்டார்.





அவரின் தாய் தந்தையர்க்கு மகன் காதலிப்பதே பிடிக்கவில்லை என்றால் அதிலும் தாமரையை சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதற்கு காரணம் தாமரையின் வசதி. சந்திரனின் குடும்பம் நடுத்தரக் குடும்பம். அதனால் மகனின் காதலை அவர்கள் மறுக்க, சந்திரனோ தன் காதலில் உறுதியாக இருந்தார்.





அதனால் பிறந்த வீட்டு உறவே தாமரைக்கு இருக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் அவர்கள் சம்மதிக்க, அதன்படியே தான் இருவரின் திருமணமும் நடந்தது. மதிவேந்தனின் மூன்றாவது வயது வரை சந்திரனின் தாய் தந்தையர்கள் உயிரோடு தான் இருந்தார்கள். அதன் பிறகு ஒருவர் பின் ஒருவர் மறைந்துவிட, அதன் பின்னும் தாய் வீட்டுக்கு வரவில்லை தாமரை. பிரிந்த உறவு அப்படியே இருக்கட்டும் என்று தான் அவர் நினைத்தார். ஆனால் விதி தாமரை சந்திரன் தம்பதிகளை அப்படி விடவில்லை.





மதிவேந்தனின் ஐந்தாவது வயதில் சந்திரனுக்கு ஒரு விபத்து நடந்து அவர் இறந்துவிட, அநாதையாக நின்ற தாமரை கணவனின் கடைசி நேர வார்த்தைக்கு கட்டுப்பட்டு அதன் பின் தாய் வீடு வந்து சேர்ந்து விட்டார் அவர்.





துவண்டு போய் வாழ்வின் மேல் பிடிப்பே இல்லாமல் வந்து நின்ற அண்ணன் மகளைத் தாங்கி அணைத்துக் கொண்டார்கள் சிவகுருவும் அவர் மனைவி குணவதியும். தன் மகள் போல் வளர்த்ததே அவர்கள் தானே! பிறகு விட்டுவிடுவார்களா என்ன?





அவர்கள் மட்டுமல்ல தாத்தா பாட்டி கூட, ‘காலம் போன வயதில் நாங்கள் இருக்கிறோம். ஆனால் உனக்கு இப்படி நடந்துவிட்டதே!’ என்று வருந்தியவர்கள் தாமரையை இரு கரம் நீட்டி அழைத்துக் கொண்டார்கள்





“என்ன தாயி! அண்ணே நான் இருக்கும் போது நீ அநாதை ஆயிருவியா? தோ, ஒன் மவன் இருக்குதான். இதுக்கு மேல ஒன் வாழ்க்கைக்கு என்ன புடிப்பு வேணுங்கிறவ? நாங்க இருக்கோம் தாயி” என்ற மாறன்

“எலேய் மருமவனே! மாமா கிட்ட வாடே” என்று வேந்தனை அழைக்க





அந்த ஐந்து வயதிலும் மாமானின் கத்தை மீசை பிடிக்க தாவிச் சென்று அவரிடம் ஏறி அவர் மீசையைப் பிடித்து அவரிடம் சலுகை கொஞ்சினான் வேந்தன்.





திருமணம் முடிந்து பத்து வருடம் சென்றும் குழந்தை இல்லாததால் கந்தமாறன் இலக்கியா தம்பதிகளுக்கு வேந்தனே மகன் என்றும் உலகம் என்றும் ஆனான்.





அந்த வீட்டில் இரண்டு வயதில் நிலவழகி, மூர்த்தியின் மகளாக இருந்தாலும், செண்பகவல்லி தன் மகளை அந்த வீட்டில் யாரிடமும் ஒட்ட விட மாட்டார். அவர் பிறந்த வீடு பெரிய தனவந்தர் குடும்பம். பெரியவர்கள் பார்த்துக் கட்டின பெண் தான் அவர். ஐந்து அண்ணன்களுக்கு ஒரே தங்கை. அதனால் அந்த சலுகையும் அதிகாரமும் அவரிடம் எப்போதும் இருக்கும்.





இப்போதும் அவர் பிறந்த வீட்டில் அவர் கை ஓங்கியிருக்க, அதே அதிகாரத்தை அவர் புகுந்த வீட்டில் எதிர்பார்த்தது தான் தப்பாகிப் போனது. செண்பகவல்லியின் எண்ணத்தை அறிந்த பாட்டி ராஜாத்தி, அவர் கொட்டத்தை அடக்க எல்லோரும் கையாளும் தவறான யுக்தியான ஒரு மருமகளைத் தூக்கியும் மற்றவளை இறக்கியும் அவர் நடத்த, இதுவே எல்லோர் குடும்பத்துக்குள்ளும் வரும் பிரச்சனையை உருவாக்கியது.





மனைவி எப்படி இருந்தாலும் மூர்த்தி சொந்தபந்தங்களை அரவணைத்தே இருந்தார். வாழ்வு இழந்து வந்த தங்கை தாமரையையும் அவர் விடவில்லை. தங்கையையும் தங்கை மகனையும் அவர் தாங்க, தன் அண்ணன்கள் தன்னைத் தாங்கலாம், ஆனால் தன் கணவன் அவர் தங்கையைத் தாங்கக் கூடாது என்ற எண்ணத்தில் செண்பகவல்லி பிரச்சனை செய்தார்.





அதன் விளைவால் மூர்த்தி குடும்பத்திற்கும் தாமரைக்கும் சற்றே விலகல் ஏற்பட்டது. விலகல் மட்டுமா? மதிவேந்தனும் தாமரையும் இங்கு தண்ட சோறு சாப்பிடுவதாக ஒவ்வொரு முறையும் செண்பகவல்லி தன் பேச்சில் குத்திக் காட்ட,





அதனால் தாமரை தனியாக செல்ல நினைக்க, அது கூட்டுக் குடும்பம் என்பதால் ஐயாரு அதற்கு மறுக்க, தன் சுயகவுரவம் தான் முக்கியம் என்ற எண்ணத்தில், பி.எட் முடித்திருந்த தாமரை வேலைக்குச் செல்ல ஆரம்பித்தார். இதோ இன்று வரை அதே கிராமத்தில் அரசாங்கப் பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார் அவர்.





சின்ன அண்ணன் உறவு தான் இப்படி ஆனது என்றால் தங்கை அங்கையின் உறவோ வேறு மாதிரி ஆனது, தாமரை கணவனை இழந்து இங்கு வருவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு தான் அங்கைக்கு திருமண நிச்சயம் நடந்திருந்தது. ஓடிப் போன அக்கா திரும்ப வர மாட்டாள் என்ற எண்ணத்தில், வீட்டுக்கு ஒரே மகளான அங்கையைக் கட்டி, தான் மட்டும் தான் இங்கு மாப்பிள்ளை என்ற பந்தாவைக் காட்டி, தனக்கும் வருங்காலத்தில் தன் பிள்ளைகளுக்கும் மதிப்பு மரியாதை கவுரவத்தை தன்னுடைய பந்தாவால் அவர் தேடி வைக்கவிருந்த நேரம் வந்து சேர்ந்த மதிவேந்தனை அவருக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை.





அதனால் எப்போதும் எல்லோர் முன்பும் தன் சிடு சிடுப்பைக் காட்ட ஆரம்பித்தார் அவர். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் தான் தன்னுடைய ஐந்தாவது வயதில் தன் தாய் வீட்டு சொந்தங்களிடம் வந்து சேர்ந்தான் மதிவேந்தன்.





இப்படி என்ன தான் உறவுகளுக்குள் ஆயிரம் பிளவுகள் இருந்தாலும், தன் அண்ணன், தங்கையுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை தாமரை. மதிவேந்தனும் வளர்ந்த பிறகு அவரவர்களின் குணநலன் படியே ஏற்று அரவணைத்துக் கொண்டான்.





அதன் பின் மதிவேந்தன் வளர வளர, அவனுடைய புத்திக் கூர்மை, சமயோஜித செயல், நன்னடத்தை, ஆளுமை எல்லாம் புரிபட, ஐயாரு தன்னுடைய அடுத்த வாரிசாகவே அவனை நினைத்தார். இவன் வந்த நேரம் பத்து வருடம் கழித்து இலக்கியா கரு ஈன்று விட, மதிவேந்தன் வந்த ராசி தான் என்று கொண்டாடிய கந்தமாறனுக்கு சகலமுமே மதிவேந்தன் என்று ஆகிப் போனது.





இலக்கியா அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுக்க, முதன் முதலில் மகளை வாங்கிய மாறன் “இந்தாடே மருமவனே! ஒன் பொஞ்சாதிய நல்லா பாத்துக்கலே” என்று சொல்லி மகளை அவன் மடியில் இட.





ஐந்தரை வயது பாலகனான மதிவேந்தனுக்கு, அந்த குழந்தை காலையில் மாமன் தோட்டத்தில் காட்டிய பன்னீர் ரோஜாவைப் போலவே தெரிய, “இது பெரிய பூவா” என்று அவன் கேட்க, தாய் உட்பட அவன் கேள்வியில் எல்லோரும் சிரிக்க, அவன் மடியிலிருந்த பட்டு ரோஜாவோ கண்ணை தட்டி இரண்டு முறை சிமிட்டி விட்டு, உதடு கோணி அழ, அதில் பயந்து கலவரமானவன் குழந்தையை எடுக்கச் சொல்லி அவன் மாமானிடம் கெஞ்ச,





“என்னலே மாப்ள! இப்பவே ஒன் பொஞ்சாதிய பாத்து பயப்படுத?” என்றவர் மகளைத் தூக்கிக் கொண்டார் அவர். இனி தங்கள் வாழ்வில் வீச இருக்கும் தென்றலாக மகள் இருக்கப் போவதால் கணவன் மனைவி இருவரும் அவளுக்குத் தென்றல் என்று பெயர் சூட்ட நினைத்தவர்கள், மதிவேந்தன் பூவா என்று கேட்டதைச் சேர்த்து பூந்தென்றல் என்று பெயர் சூட்டி மகிழ்ந்தனர்.





இந்த மகிழ்ச்சி எல்லாம் மூன்று வருடம் தான் நீடித்தது. ஒரு முறை இலக்கியாவுக்கு மஞ்சள் காமாலை வர, அந்த நோயிலிருந்து மீள முடியாமல் இறந்தே போனார் அவர். பிறகு வாழ்வையே வெறுத்துப் போயிருந்த கந்தமாறனுக்கு உலகமே மகள் என்று ஆனது.





சித்தி குணவதி மற்றும் அவர் மகள் உதவியால் ஐந்து வயது வரை மகளை வளர்த்து விட்டார் மாறன். அதன் பிறகு தான் அப்படி ஒரு சம்பவம் நடந்தது. ஐயாரு மகள் வேற்று ஜாதிப் பையனைக் காதலிக்க, அதனால் அவர்கள் ஜாதிக்காரர்களுக்கும் இவர்களுக்கும் நடந்த சண்டை கலவரமாக மாறியது. அதில் ஐயாரு மகள் தற்கொலை செய்து இறந்துவிட, அந்த அதிர்ச்சியிலேயே மனைவி குணவதியும் இறந்து விட்டார்.





கலவரத்தில் தாத்தாவுக்குக் கால் போய் விட, முழு நேரமும் அவரைப் பார்த்துக் கொள்வது பாட்டி என்று ஆகி விட, இனி பூந்தென்றலை வளர்ப்பது யார் என்ற கேள்வி வந்து நின்றது. அந்த வீட்டில் இப்போது எஞ்சியிருந்த பெண்கள் சென்பகவல்லி மற்றும் தாமரை தான். செண்பகவல்லி பூந்தென்றலை திரும்பியும் பார்க்க மாட்டார். பிறகு எங்கு வளர்க்கப் போகிறார்? தாமரை தான் வேலை முடித்து வந்து தென்றலைப் பார்த்துக் கொள்வார்.





குழந்தையை வளர்க்கவாது மாறனை ஐயாரு மறுமணம் செய்யச் சொல்ல, முடியவே முடியாது என்று மறுத்து விட்டார் அவர். பகலில் வேலைக்கார்கள் பார்த்துக் கொள்ள, ஒரு நாள் கீழே விழுந்த குழந்தை ஜுரத்தில் தாயைக் கேட்டு அனத்த, அதே நேரத்தில் கர்ப்பப்பைக் கட்டியால் கர்ப்பப்பை எடுக்கப்பட்டு குழந்தை இனி இல்லை என்ற நிலையில் தென்றலைக் காண வந்த இலக்கியாவின் தங்கை இந்த நிலையைப் பார்த்தவர், பல வார்த்தைப் போராட்டங்களுக்குப் பிறகு தன்னுடனே தென்றலை அழைத்துச் சென்று விட்டனர் அவர் சம்மதித்து தான். அதனால் பூந்தென்றலுக்கு அவளுடைய சித்தி, சித்தப்பாவே தாய் தந்தையர் ஆனார்கள்.





மகளை சீக்கிரத்தில் அனுப்பவில்லை மாறன். இனி உலகமே அவள் தான் என்று இருப்பவர் எப்படி மகளை விட்டு விடுவார்? ஐயாரு தான் ஒன்று திருமணம் செய், இல்லை என்றால் தென்றலை அவர்களுக்கு கொடுத்து விடு. குழந்தைக்குத் தாய் வேண்டும் என்று தான் உன்னைத் திருமணம் செய்யச் சொல்வது. அந்த தாய் அவள் சித்தியாக இருப்பதில் ஒன்றும் தவறில்லை என்று முடித்து விட்டார் அவர்.





தென்றல் ஜுரத்தில் தாயைக் கேட்டு அனத்தினாள் என்றால் உடல்நிலை குணமாகி சித்தியுடன் செல்லும் போது “மதிமாமா... மதிமாமா... நான்... போல....” என்று வேந்தனைப் பிரியமுடியாமல் அழுது கொண்டு தான் சென்றாள் அவள். இதனால் பத்து வயது வேந்தனுக்கும் மாமா மேல் கோபம் வர, இரண்டு நாள் அவரிடம் பேசவில்லை அவன்.





என்ன தான் தென்றலைத் தங்களுடன் அழைத்து வந்தாலும் தாங்கள் அவளுக்கு சித்தப்பா சித்தி தான் என்பதைச் சொல்லி தான் அவளை வளர்த்தார்கள் அவர்கள். இவர்கள் குடித்தனம் சென்னையில் என்பதால் வருடத்திற்கு ஒரு முறை இவர்கள் ஊர் பக்கம் தென்றலுடன் போவார்கள். இல்லை என்றால் மாறன் வந்து மகளைப் பார்த்து விட்டுப் போவார். அப்போதெல்லாம் மாமனுடன் மதிவேந்தனும் வருவான்.





ஒரு முறை “மாப்ள! ஒன் பொஞ்சாதி ஒன்னய பாத்து சிரிக்கா பாருடே” என்று இவர் வெள்ளேந்தியாய் தன் மகளின் சிரிப்பை வேந்தனிடம் காட்டி மகிழ்ந்து சொல்ல, அதைக் கேட்ட தென்றலின் வளர்ப்பு தாய் தந்தையர் எதுவும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் தென்றலின் பாட்டி, அதாவது இலக்கியாவின் தாய் அதைக் கண்டு கொண்டார். ‘தன் மகள் தான் இவன் மாமனைக் காதலித்து அந்த பட்டிக்காட்டில் எங்களை எல்லாம் வேண்டாமென்று சொல்லி வாழ்ந்தாள் என்றால் இப்போது இந்த வாண்டுப் பையன் என் பேத்தியைத் தட்டிட்டுப் போகப் பாக்கிறானா?’ என்று நினைத்தவர், மதிவேந்தன் அங்கு வந்து போகும் நேரம் எல்லாம் அவனை ஜாடை மாடையாக திட்ட ஆரம்பித்தார்.





‘அவர் மகளைக் கட்டிக் கொண்ட காரணத்தால் தான் பொறுத்துப் போகலாம், என் குடும்பம் ஏன் பொறுத்துப் போக வேண்டும்?’ என்ற எண்ணத்தில் பிறகு வேந்தனை அழைத்து வருவதையே நிறுத்தி விட்டார் மாறன். அதன் பின் அவர் வருவதையும் நிறுத்தவில்லை மறந்தும் மகள் மனதில் அவள் வேந்தன் மனைவி என்ற எண்ணத்தை விதைக்காமலும் இருக்கவில்லை. என்றைக்கு இருந்தாலும் தன் மகள் தன் பேச்சை மறுக்க மாட்டாள் என்ற எண்ணம் அவருக்கு. தந்தை இல்லையா? கூடவே இங்கிருந்து மகளையும் அவர் அழைத்துச் செல்லவில்லை. அவளை வளர்ப்பவர்கள் தான் பெற்ற மகளை விட மேலாக வளர்ப்பதை கண்கூடாகப் பார்த்தவரால் அப்படி செய்ய முடியவில்லை. மாறன் நினைத்தபடியே எல்லாம் சென்றிருக்கலாம்.





ஆனால் அவர் மாமியார் அப்படி நடக்க விடவில்லை. தென்றல் மனதில் ‘உன் அப்பனுக்கு வேந்தன் தான் முக்கியம். அதற்குப் பிறகு தான் நீ. அவனை விட்டு உன் அப்பனால் இருக்க முடியாது, அதே உன்னை விட்டு எத்தனை நாள் இருக்கான் பார்! இதை வைத்தே நினை, யார் மேல் உன் அப்பனுக்குப் பாசம் என்பதை’ என்றெல்லாம் சொல்லிச் சொல்லி அவள் மனதில் நஞ்சு கூட விலகலையும் விதைத்தார்.





அவளும் மனதால் தந்தையிடம் மட்டுமல்ல அந்த குடும்பத்தை விட்டே விலகிப் போனாள். அதிலும் சிறு வயதில் ‘மதிமாமா’ என்று கொஞ்சியவனை வெறுத்து ஒதுக்கினாள் அவள்.





அதற்கு முழுமுதற் காரணம் அவள் தந்தை மாறனே தான். மாமியாரிடமிருந்து மகளை வழிநடத்த நினைத்தவர், முதலில் அவளிடம் இதமாய் சொல்லிப் பார்க்க, மகள் கேட்கவில்லை என்றதும் அதட்டி உருட்டி மிரட்ட, அதுவே தென்றலை தந்தையிடமிருந்து விலகவைத்தது.

 

Author: yuvanika
Article Title: சாதி மல்லிப் பூச்சரமே !!! 6
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Purinjiduchi
Hoom
Ediri ah varavala pakalam
Kelaviiiii😈😈😈😈😈

பார்க்க... நானும் ரெடி பேபி.... smilie 49 smilie 49 smilie 49 smilie 49 smilie 49
லவ் யூ டியர் Kissing SmilieKissing SmilieKissing SmilieKissing Smilie
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Vendanuku vera heroin parunka akka...

:eek::eek::eek::eek:
அதற்கு அவன் ஒத்துக்கணுமே டா....:confused::confused::confused::confused:
பயபுள்ள லவ் செய்து தொலைச்சிடானே :cry::cry::cry:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN