உறவாக வேண்டுமடி நீயே 16

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு 16


காலையில் போதும்பொண்ணு வந்து டிபன் தட்டை அறைக்குள் வைக்கும் சத்தத்தில் தான் கண் விழித்தாள் நந்திதா. தந்தையும் மகளும் எப்போது தூங்கி எப்போது எழுந்தார்களோ? இப்போது பாத்ரூமுக்குள் இருவரும் சிரித்து விளையாடும் சத்தம் கேட்டது.

“ஜயா பாப்பாவுக்கு டிபன் எடுத்து வரச் சொன்னார். உங்களுக்கும் எடுத்து வரவா ராணிமா?” என்று வந்தவள் கேட்க, ‘என்ன இந்த காலையில் டிபனா?’ என்று நினைத்தபடி இவள் மணியைப் பார்க்க, அது ஒன்பது என்று காட்டியது. ‘அட! இவ்வளவு நேரமா தூங்கினோம்?’ என்று இவள் அடித்துப் பிடித்து எழுந்தவள்,

“எனக்கு எதுவும் வேண்டாம் பொண்ணு. ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு. நான் அவசரமா கிளம்பணும்” என்று இவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே அபியும் வேணியும் குளியலறையில் இருந்து வெளியே வர வேணி,

“குட் மார்னிங் மா” என்ற படி தாயின் காலைக் கட்டிக் கொள்ள, மகளைத் தூக்கி உச்சியில் முத்தம் இட்டவள், “அம்மா அவசரமா கிளம்பணும் டா” என்றவள் அதே வேகத்துடன் பாத்ரூமுக்குள் புகுவதற்கு முன், “காபி சாப்பிட்டீங்களா?” என்று கணவனைக் கேட்கவும் மறக்கவில்லை.

அவள் எல்லாம் முடித்துக் கிளம்பி வெளியே வர, அபி மகளுக்கு கதை சொல்லிய படி உணவு ஊட்டிக் கொண்டிருந்தான். அதை பார்த்தவளுக்கு, ஒரு வினாடி! ஒரே ஒரு வினாடி, ‘தந்தை என்றால் மகளுக்கு இப்படி தான் கதை சொல்லி ஊட்டி விடுவாரோ?’ என்ற ஏக்கம் நந்திதாவின் மனதிற்குள் வராமல் இருக்கவில்லை.

பின் அந்த வீட்டுத் தலைவியாய் “நீங்க சாப்பிட்டு கிளம்புங்க. எனக்கு அவசரம் நான் கிளம்பறேன்” என்றவள் லேப் டாப் பேகை எடுத்த படி கிளம்ப எத்தனிக்க, சட்டென மனைவி முன்னாள் வந்து நின்றவன்,

“சாப்பிட்டுப் போ” என்று சொல்ல,

“ம்ப்ச்... டைம் இல்லப்பா” என்று இவள் சொல்ல,

“எல்லாம் இருக்கும் டி. நீ இப்படி வந்து உட்கார்” என்று கையைப் பிடித்து இழுத்து வந்து அவன் அவளை அமர வைக்க, அவள் முன்னாள் காலை டிபன் இருந்தது. ‘நான் எடுத்து வரச் சொல்லலையே? அப்போ இவர்தான் போதும்பொண்ணு கிட்ட எடுத்து வரச் சொன்னாரோ?’ என்று இவள் யோசிக்க,

“மேடம் ரெடி ஆகிட்டா சாப்பிட மாட்டிங்களோ? சரி, அப்போ நானே ஊட்டி விடுறேன்” என்றவன் சொன்னபடியே எந்த தயக்கமும் இல்லாமல் மனைவிக்கு ஊட்ட, கொஞ்ச நேரத்திற்கு முன் கணவன் மகளுக்கு ஊட்டியது நினைவு வந்து கண்ணைக் கரித்தது நந்திதாவுக்கு.

அவளால் அவன் கொடுக்கும் உணவை மறுக்கமுடியுமா என்ன? அதுவும் தந்தையாய்! அவனைப் பார்த்த பிறகு உணவை வாங்கியவள், ‘ஒரே இரவில் இவ்வளவு மாற்றமா?’ என்று இவள் யோசிக்க, ஓர் இரவு என்ன? தன்னுடைய பிடிவாதத்தை சாதிக்க அவள் கணவனுக்கு ஒரு வினாடி போதும் என்பதை அவள் நினைக்கவில்லை.

நாட்கள் இப்படியே தான் சென்றது. தன் மனைவி தன் மகள் என்ற உரிமையை அபி எங்கும் விட்டுக் கொடுக்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் உரிமையை நிலைநாட்டினான் என்று தான் சொல்ல வேண்டும். இவன் இப்படி என்றால் அபி குடும்பமே நந்திதாவையும் வேணியையும் கையில் வைத்து தாங்கியது.

தினமும் மாலை மேகலை, பாரதி, அவள் அப்பா என்று எல்லோரும் நந்திதா வீட்டுக்கு வந்து விடுவார்கள். சில நாட்களில் துருவனும் வந்து விடுவான். அந்த நேரத்தில் வீடே ரணகளப்படும். எவ்வளவு லேட்டாக வந்தாலும் துருவன் கையில் வேணிக்கு என்று ஏதாவது ஒரு பரிசு இருக்கும். அதே மாதிரி என்ன தான் அசதியாக இருந்தாலும் வேணி சொல்லும் விளையாட்டை விளையாடவும், சில நேரத்தில் அவள் யானை சவாரிக்கு ஆசைப்பட்டால் அவளை முதுகில் ஏற்றிக் கொண்டு சுற்றவும் சுணங்க மாட்டான் துருவன்.

அதையெல்லாம் பார்க்கும் போது, ‘நாமே ஒரு வாழ்வைத் தேடி இருந்தால் கூட வேணிக்கு ஒரு நல்ல தந்தை தான் கிடைத்திருப்பார். ஆனால் இப்படி ஒரு குடும்பம் கிடைத்திருக்குமா?’ என்று நந்திதாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.

மாமியாரைப் பார்க்கும்போது மட்டும் சங்கடமாய் இருக்கும் இவளுக்கு. ‘எங்கே நான் தான் குடும்பத்தைப் பிரித்து மகனை அழைத்து வந்து விட்டேன் என்று ஒரு சொல்லிலோ செயலிலோ காட்டி விடுவார்களோ?’ என்று. ஆனால் மேகலை அப்படி செய்யாததே நந்திதாவுக்குள் இன்னும் சங்கடத்தை அதிகப் படுத்தியது.

இதற்கிடையில் மலேசியாவில் தொழில் அதிபர்களுக்கான மீட்டிங் நடை பெறவிருக்க, அதற்கு அபியும் நந்திதாவும் அவரவர் கம்பெனி சார்பாக கலந்துகொள்ள வேண்டி அழைப்பு வந்தது. அதற்கு இருவரும் எந்த வித மறுப்பும் சொல்லாமல் கிளம்பினர்.

அங்கு நந்திதாவின் கெஸ்ட் ஹவுஸில் மனைவியுடன் தான் தங்கினான் அபி. வீட்டிலிருந்து கிளம்பும் போதே சோர்வாக கிளம்பியவளுக்கு மலேசியா வந்ததும் சோர்வில் தூங்கி விட, வெளியே போய் விட்டு வந்து பார்த்த அபிக்கு ஜுரத்துடனும் அனத்தலுடனும் படுத்திருந்த மனைவி தான் கண்ணில் பட்டாள். இவன் டாக்டரை அழைத்து வந்து காட்ட, அம்மை நோய் என்றார் அவர். என்ன தான் மருந்து மாத்திரை சாப்பிட்டாலும் இந்நோய்க்கு ஒரு சில விஷயங்களைக் கடைபிடிக்கவேண்டும் என்றார் அந்த வீட்டில் வேலை செய்யும் வயது முதிர்ந்த பெண்மணி.

டாக்டர் வந்து தன்னை பரிசோதனை செய்தது கூட தெரியாமல் மயக்கத்தில் இருந்தாள் நந்திதா. மருந்து கொடுத்தும் அவள் மயக்கம் தெளியவில்லை, அனத்தலும் நிற்கவில்லை. பார்த்த அபிக்கு கஷ்டமாகி விட, ஜுரம் என்று தாயிடம் சொல்லியிருந்தவன் இப்போது தாய்க்கு அழைத்து அனைத்தும் சொல்ல,

“என்ன அபிப்பா இப்படி சொல்ற? இந்த காலத்தில் இது பெரிய நோய் இல்லைனாலும் கூட இருந்து சிலதை செய்து பார்த்துகிட்டா நல்லது. நான் இப்பவே கிளம்பி வரவா? இதோ தங்கம் கூட கிளம்புறேனு சொல்றா. அப்போ நாங்க இரண்டு பேருமே கிளம்பி வர்றோம்” என்க

“ம்மா…. ஏன் ம்மா இப்படி? ஒரு ஜுரம் வந்தா என் மனைவிய பார்த்துக்க முடியாத அளவுக்கு நான் என்ன குழந்தையா இல்லை கல்நெஞ்சக்காரனா? அதெல்லாம் என்னால பார்த்துக்க முடியும். என்ன? இந்த ஜுரத்திற்கு கூடுதல் கவனமா பார்த்துக்கணும் அவ்வளவு தானே? நான் பார்த்துக்கிறேன்” என்றவன் தங்கத்திடம் போனைக் கொடுக்கச் சொன்னவன்

“அத்த, அவ உங்களுக்கு மகள்னா இப்போ என் மனைவி. அதெல்லாம் என் மனைவியை என்னால நல்லாவே பார்த்துக்க தெரியும். அதனால இரண்டு பேரும் கிளம்பி வரோம் என்ற பாட்டை விட்டுட்டு அங்கேயே இருங்க” என்றவன் பின் “என்ன மாதிரி செய்யணும்?” என்று கேட்க, அவர் சொன்னதை அனைத்தையும் அச்சு பிசகாமல் கடைபிடித்தான் நாத்திகவாதியான அபிரஞ்சன்.

முதலில் குளித்து முடித்து வேறு ஆடைக்கு மாறியவன், மனைவிக்கு வேண்டிய தளர்வான பருத்தி ஆடையும் அவள் கீழே படுக்க வெள்ளை விரிப்பையும் வாங்கி வந்தவன் வேலைக்கார பெண்மணியிடம் சொல்லி மனைவிக்கு வேறு உடை மாற்றியவன் அறையில் மஞ்சள் நீர் தெளிக்கச் சொல்லி தரையில் வெள்ளை விரிப்பில் அவளைப் படுக்க வைத்து அவளின் தலை மற்றும் கால் பக்கமாக வேப்பிலையை வைத்து அவள் பக்கத்திலேயே படுக்கை விரித்து தானும் படுத்து, அவள் அனத்தும் போது எல்லாம் மனைவியின் கை பிடித்த படி இரவு தூங்கியும் தூங்காமலும் இருந்தான் அபி. ஆனால் இது எதுவுமே தெரியாத நிலையில் இருந்தாள் அவனின் மனைவி.

மறுநாள் காலையில் தான் ஜுரம் குறைந்து அவளைச் சுற்றி நடப்பது அவளுக்கு தெரியவந்தது. எழுந்து அமர்ந்தவளைப் பார்த்தவன், “ஓய், ஒரு ஜுரம்! அதற்கு போய் இப்படி படுத்திட்ட. எத்தனை நாள் கனவு என்னை இப்படி உனக்கு சேவை செய்ய வைக்கணும்னு?” என்று மனைவியிடம் வம்பு வளர்த்தாலும் அபியின் குரலில் ‘அப்பாடா! இவளுக்கு ஒன்றும் இல்லை’ என்ற நிம்மதி இருந்தது.

“இன்னும் ஜுரம் இருக்கா யுகா?” என்று கேட்ட படி இவன் மனைவியின் நெற்றியில் கை வைக்க, அவள் விலக “என்ன ஆச்சு? ஏதாவது செய்தா?” என்று இவன் பதற

“இல்ல.... இது சிக்கன் பாக்ஸ். உங்களுக்கும் வந்துடும்னு தான்” அவள் விளக்க

“ஹா... ஹா... மேடம்! அது நைட் முழுக்க என்னை கட்டிப் பிடிச்சிட்டு தூங்கும்போது தெரியலையா உங்களுக்கு?” என்று இவன் கேட்க

“ஐயோ! அப்படியா செய்தேன்?” என்ற சொல்லுடன் நந்திதா சங்கடத்துடன் தலைகுனிய,

மனைவியின் தாடையில் ஒற்றை விரல் கொடுத்து அவள் முகம் நிமிர்த்தியவன், “அப்படி எல்லாம் நாம் தூங்கினாலும் தப்பு இல்ல யுகா. நைட் நான் தான் உன் அனத்தல் குறைய உன் கையை பிடிச்சுக்கிட்டு தூங்கினேன்” என்று பதில் தந்தவன் “நீ சாப்பிட்டு தூங்கி ரெஸ்ட் எடு. உன் கம்பெனி சம்மந்தப்பட்டதையும் நானே மீட்டிங்கில் பேசிக்கிறேன். அதற்கான பாயிண்ட்ஸ் மட்டும் சொல்லிடு யுகா” என்று இவன் கேட்க, இந்த நிலையில் கணவன் சொல்வது சரி என்றே பட்டது அவளுக்கு. அதன் பிறகு ஜுரம் குறைந்தாலும் அம்மை இறங்காததால் எப்போதும் போல அவளைப் பார்த்துக் கொண்டான் அபி.

ஐந்தாம் நாள் அம்மை இறங்கியதும் மஞ்சள் நீர் ஊற்றிய பிறகு தங்கள் அறையை விட்டு கீழே வந்தவளுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது போரடித்தது. வேலைக்கார பெண்மணியிடம் சமையலில் ஏதாவது உதவி வேண்டுமா என்று கேட்க,

“என்ன பெரிய சிரமமான சமையல் மா? பத்திய சாப்பாடு. உப்பு காரம் அளவா போட்ட தயிர் சாதம், சாம்பார் சாதம். அதனால் இதிலே என்னமா எனக்கு சிரமம்னு உதவி செய்யவானு கேட்குறீங்க? நானே பார்த்துக்கிறேன்மா” என்று அவர் மறுக்க,

“ஏன் ஐயாவுக்கு தனி சாப்பாடு, அசைவம் மாதிரி எதுவும் செய்யலையா?”

“என்னது அசைவமா? க்கும்…. சாதா சாப்பாடு கூட வேணாம்னு உங்களுக்கு கொடுத்த பத்திய சாப்பாட்டைத் தான் அவர் சாப்பிட்டாங்க. அவ்வளவு பாசம்மா உங்க மேலே. என்னமா துடித்துப் போயிட்டாரு தெரியுங்களா?” என்று இவள் கேட்காத தகவலையும் அவர் தர, நந்திதாவுக்கு யோசனையாக இருந்தது.

‘இவ்வளவு பாசக்கார புருஷனா நீங்க?’ என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டவள், ‘பின்னே இல்லையா?’ என்று அதற்கும் பதில் சொல்லிக் கொண்டவளுக்கு, மதியம் மஞ்சள் நீர் ஊற்ற கணவன் செய்த அலப்பறைகள் நினைவு வந்தது.

ஐந்தாம் நாள் காலையிலேயே ஒரு குடத்தில் நீரில் மஞ்சள் வேப்பிலை கலந்து சூரிய ஒளி பட வைத்து மதியம் அதை அம்மை போட்டவர்களுக்கு ஊற்ற வேண்டும் என்று மேகலை சொல்ல, அதன்படியே மொட்டை மாடியில் வைத்தவன் அங்கேயே இருந்த பாத்ரூமில் வைத்து ஊற்ற நினைத்து மனைவியைக் கூப்பிட, இவள் தயங்க, விடாப் பிடியாக அவளை இழுத்துச் சென்றவன்,

“இந்தா இந்த கவுனைப் போட்டுக்கோ” என்று ஒரு மெல்லிய கவுனைக் கொடுக்க,

“இதையா?” என்று அவள் மறுபடியும் தயங்க,

“நல்லதுக்கே காலம் இல்லைடா அபி. ஒரு காதலனா சினிமாவில் வர்ற ஹீரோயின் மாதிரி உன் மனைவியை துண்டுல பார்க்க ஆசைப் பட்ட. ஆனா அதை வேண்டாம்னு ஒரு கணவனா இதைக் கொடுத்துப் போடச் சொன்ன பாரு.. இது உனக்கு தேவை தான்!” என்று வாய் விட்டு நொந்தவன், “நீ ஒன்றும் கவுனை போட்டுக்க வேண்டாம். நானே நீ போட்டிருக்கிறதை ரிமூவ் செய்திட்டு இந்த டவலைச் சுற்றி விடுறேன்” என்று சர்வசாதாரணமாக சொல்லிய படி இவன் மனைவியை நெருங்க,

“ஹாங்!” என்று அதிர்ந்தவள், ‘டவலை விட இந்த கவுன் தான் டா சங்கடம்’ என்று யோசித்தவள், “அட ச்ச! பேச்சைப் பாரு” என்றவள் கணவனின் பிடிவாதத்தை அறிந்து “நீங்க போங்க நான் மாற்றிட்டு கூப்பிடறேன்” என்று சொல்லி அனுப்பியவள், ஆடை மாற்றிய பிறகும் கணவனை நிமிர்ந்து பார்க்காமல் சங்கடத்துடனே அமர்ந்திருக்க, வழமை போல மனைவியை நெருங்கி அவள் தாடையில் விரல் வைத்து முகம் நிமிர்த்தியவன்,

“நான் இப்போ உன் கணவன் இல்லை. தங்கம் அம்மா மாதிரி நானும் உனக்கு ஒரு அம்மா! அப்படி நினைத்துக்கோ” என்று இவன் சொல்ல, கணவனின் வார்த்தையில் அவன் இத்தனை நாள் செய்த பணிவிடையில் நந்திதாவுக்கு கண்ணைக் கரித்தது. அதை உணர்ந்தவனோ, “அச்சோ அம்மான்னு சொல்லிட்டேன், ஆனா என் முகத்துல மீசை இருக்கே! என்ன பண்ண? முக மூடி போட்டு மறைத்துக்கவா? வேண்டாம் வேண்டாம்… அதற்கு பதில் நீ கண்ணை மூடிக்கோ” கேள்வியும் கேட்டு அவனே பதிலும் தர, நந்திதாவும் அவன் வார்த்தைக்கு கட்டுப்பட்டு கண்களை மூட, மனைவியை இன்னும் நெருங்கியவன், “இப்போ நான் உனக்கு யார் யுகா?” என்று இவன் ரகசிய குரலில் கேட்க,

“அம்மா... அபிம்மா!” என்று இத்தனை நாள் கணவனின் கவனிப்பை வைத்து இவள் சொல்ல, “தட்ஸ் குட்” என்ற மெச்சுதலுடன் மனைவி மேல் அந்த மஞ்சள் நீரை ஊற்றினான் அபி.

அதெல்லாம் இப்போது நினைத்துப் பார்த்தவளுக்கு பெருமையும் கூடவே சிறு முறுவலும் தோன்றியது. அது மட்டுமா செய்தான்? இவளுக்கு ஒரு நாள் உடலில் அதிக எரிச்சலும் அரிப்பும் இருக்க, மனைவிக்காக கோவில் போய் வேண்டி வந்து விபூதி பூசி விட்டான் அவள் கணவன். அதாவது கோவில் என்று தனியே சென்று எந்த வேண்டுதலும் வைக்காதவன் இன்று மனைவிக்காக செய்தான்.


மீட்டிங்கில் நடந்த அனைத்தும் மனைவியுடன் பகிர்ந்து கொள்வான். ஆனால் மறந்தும் ஒரு சொல்லிலோ செயலிலோ ‘உன் பிசினஸ் சம்மந்தப் பட்டது என் கைக்கு வந்து விட்டது பார்த்தியா?’ என்று பெருமை அடிக்கவில்லை. அவன் இயல்பு போலவே இருந்தான். ஆனால் எதற்கும் மனைவியின் ஆலோசனை படியே அனைத்தும் செய்தான்.
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 16
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN