தீராக் காதல் திமிரா-1

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்-1

பபுள் கம்மை மென்றுகொண்டே தன் முன்னால் அலட்சிய பார்வையுடன் நின்று கொண்டிருந்த அதிதியை ஆச்சரியமாகப் பார்த்தார் அந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்....
சாதாரண பெண்களுக்கு இருக்கும் போலீஸ் ஸ்டேஷன் என்ற பயம் அவளது கண்களில் துளியும் இல்லை அலட்சியம் அலட்சியம் அலட்சியம் மட்டுமே....


சிக்னல் ஒன்றில் நிற்காமல் ட்ராபிக் போலீசுக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு சென்றவள்... சாலை ஓரத்தில் நிறுத்தி இருந்த வாகனத்தில் மோதி வசமாக மாட்டிக்கொண்டாள்.... அதற்குள் அவளைத் துரத்திக் கொண்டு ட்ராபிக் போலீஸ் வந்து இருக்க உடனடியாக ஸ்டேஷனுக்கு கொண்டுவரப்பட்டாள் அதிதி.
மறுப்பு எதுவும் சொல்லாமல் அவள் வந்துவிட்டதால் அது சுலபமாகவே இருந்தது போலும்.


அவள் ஸ்டேஷனுக்கு கொண்டு வரப்பட்டு முழுதாக ஒரு மணி நேரம் கூட முடியவில்லை ....அதற்குள் அவளை வெளியே எடுக்க அவளது குடும்ப வக்கீல் துரைசாமி வந்துவிட்டார்...


அதன்பிறகுதான்
'இவள் என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா' என்பதுபோல் அனைவரின் கவனமும் அவள் மீது பதிந்தது...


ஒல்லியான தேகம்... அழுக்கான ஜீன்ஸ் தொளதொள டீ சர்ட் முதுகை தாண்டிய கூந்தலை அள்ளி மொத்தமாக ஒரு ஜிலேபி கொண்டை.... முகத்தை பராமரிக்காமல் விட்டதால் முகத்தில் ஓரிரண்டு பருக்கள் வெயிலில் அலைந்து திரிந்ததால் மஞ்சள் நிற தேகம் மங்கி தெரிந்தது.... அழகுதான் என்றாலும் தன்னை பராமரிக்க தெரியாத அழகி.... என்று நினைத்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் வழக்கறிஞர் துரைசாமியின் குரலில் நிமிர்ந்து அமர்ந்தார்....


"சார் இது ராகவேந்தர் கன்ஸ்ட்ரக்ஷன் முதலாளி பொண்ணு
கொஞ்சம் பெரிய இடம்.... அப்பப்ப ஏதாவது வம்புல மாட்டி உசுர வாங்கும்" என்று வக்கில் சொன்னவுடன்...


அதிதியின் உஷ்ணமான பார்வை வழக்கறிஞரை சுட்டெரித்தது....


ஆனால் அதையெல்லாம் அவர் கவனிக்கவேயில்லை.... அவர் பாட்டிற்கு தான் வந்த விடயத்தை பற்றி அந்த போலீஸ் அதிகாரியிடம் முறையிட்டு கொண்டிருந்தார்.


"இந்த பொண்ண வெளிய எடுக்கணும் சார் .... இன்னைக்கு அவங்க வீட்ல முக்கியமான ஃபங்ஷன் வேற ... தேவையான கோர்ட் பேப்பர்ஸ் எல்லாம் ரெடியா இருக்கு செக் பண்ணிக்கோங்க..." என்று வக்கீல் கொடுத்த பேப்பரை வாங்கிய அதிகாரியின் பார்வை அதை அலசி ஆராய்ந்தது.....


எல்லாம் சரியாக இருக்கவும்....
"சரி கூட்டிட்டு போங்க சார்... இனி இப்படி நடக்கக் கூடாது" என்று எச்சரித்து அவளை அழைத்து செல்ல அனுமதியளித்தார் இன்ஸ்பெக்டர்.....


தேங்க்யூ சார் என்று வழக்கறிஞர் விடை பெற்றுக் கொள்ள .... அவர் பின்னாலேயே காவல் நிலையத்தில் இருந்து வெளியே சென்றாள் அதிதி.


அவர்கள் சென்றதும்,
"சார் அந்த பொண்ண பாத்தா பெரிய இடத்து பொண்ணு மாதிரியே இல்லையே?!"என்று தனது அவ்வளவு நேர சந்தேகத்தை கேட்டார் எஸ் ஐ சுகுமாரன்....


இன்ஸ்பெக்டர் "இதைத் தெரிஞ்சுகிட்டு என்னத்த கிழிக்கப் போற?"என்று கேட்க ...


"இல்ல சார் ஒரு சின்ன டவுட் தான்..." என்று கப்சிப் ஆகி அங்கிருந்து நகர்ந்து விட்டார் சுகுமாரன்....


தனது வண்டி சாவியை கேட்க.... மீண்டும் உள்ளே வந்த அதிதியின் காதுகளில் அவரது கேள்வி விழ அவளது இதழ்கள் அலட்சியமாக பிதுங்கியது.....


விடுவிடுவென்று உள்ளே சென்று தனது வண்டி சாவியை வாங்கியவள்.... தன் வண்டி பழுதாகி விட்டதால் தன்னை வீட்டில் டிராப் செய்யுமாறு இன்ஸ்பெக்டரிடம் கேட்க.... அங்கிருந்த அனைவருமே அதிர்ந்துதான் விழித்தனர்....


இன்ஸ்பெக்டரும் கோபமாக ஏதோ சொல்ல வர....


" சார் நான் வேணா போய் மேடத்த டிராப் பண்ணிட்டு வரட்டுமா? உங்களுக்கு வேலை இருக்கும்ல..." என்று கரடியாக மூக்கை நுழைத்தார் சந்தேகப் பிராணி சுகுமாரன். அவருக்கு ஒரு சந்தேகம் வந்து விட்டால் அதை தீர்த்தே ஆக வேண்டும் இல்லையென்றால் அவருக்கு தூக்கம் வராது ...அப்படி ஒரு வியாதி.... அதைத் தீர்ப்பதற்கு ஒரே வழி அதிதியை ட்ராப் செய்வது என்று முடிவு செய்தே அவர் அப்படி கேட்டது.....


அதிதி ஏளனச் சிரிப்புடன் இன்ஸ்பெக்டரை பார்க்க.... "போய் தொலயா..." என்று சுகுமாரிடம் எரிந்து விழுந்தார் அவர்....


போலீஸ் வாகனத்தில் தனது மாளிகை வீட்டின்முன் இறங்கினாள் அதிதி....


அன்று அவளது தந்தையின் திருமண நாள் ....அவளது தந்தையின் தொழில்முறை நண்பர்களும் முக்கிய உறவினர்கள் மட்டுமே அவர்களின் வீட்டில் அணிவகுத்து இருந்தனர்.


ஹை கிளாஸ் பார்ட்டி என்பார்களே அந்த அளவிற்கு பெரிய அளவிலேயே அன்றைய தின ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது....


மாலை நேரத்திலேயே பார்ட்டி ஆரம்பித்துவிட்டதால்.... ஒவ்வொருவராக வந்து கொண்டு இருந்தனர். அப்பொழுது போலீஸ் வாகனத்தில் வந்து இறங்கிய அதிதியே அங்கு அனைவராலும் அதிகமாக பேச பட்டாள்....


பின் அத்தனை உயரத்தில் இருப்பவரின் பெண் அடங்காபிடாரியாகவும் யாருக்கும் அடங்காத திமிரோடு.... இருப்பதோடு தன் தந்தைக்கு அத்தனை வசதி இருந்தும் சாதாரண கடையில் மெக்கானிக்காக இருப்பவள் அவள் அல்லவா!!! அதனாலேயே சமீபகாலமாக அவளைப் பற்றி அதிகமாக பேசப்பட்டு வருகிறது.


எஸ்ஐ சுகுமாரும் வாயிலில் நின்ற பாதுகாவலர்கள் அதிதிக்கு கொடுத்த மரியாதையை பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக் கொண்டு சென்றுவிட... தனக்கு அக்மார்க் ஏளனச் சிரிப்புடன் உள்ளே வந்தாள் அதிதி.


அவளது அழுக்கான உடையை பார்த்து அங்கிருந்த அனைவரும் தங்களுக்குள் ஏதேதோ பேசிக் கொள்ள ....அவமானத்தில் முகம் சிவந்து நின்றது என்னவோ அவளது குடும்பத்தினர் தான்....


அதிதி எதிர்பார்த்ததும் இதுதானே...


அவளது தந்தை ஜெயேந்திரன் தான் அதிதி போலீஸ் ஸ்டேஷனில் இருப்பதை தெரிந்து வக்கீலை அனுப்பியது ... ஆனால் அவள் இப்படி போலீஸ் வாகனத்தில் வந்து இறங்குவாள் என்று அவர் எதிர்பார்க்கவில்லை....


தங்களது குடும்ப விவகாரத்தை கேலிக்கூத்தாக்க விரும்பாமல் ....


"எக்ஸ்கியூஸ் மீ லேடீஸ் அண்ட் ஜென்டில்மேன் ....நீங்க பார்ட்டிய கண்டின்யு பண்ணுங்க... "என்று மரியாதையாக பேசி மற்றவர்களை திசை திருப்பிய ஜெயேந்திரன் கோபமாக அதிதியின் அருகே வந்து "தேவையில்லாம சீன் கிரியேட் பண்ணாம உள்ள போய் ரெடி ஆகிட்டு வா அதிதி..." என்று கட்டளையிட....


"முடியாது" என்று அலட்சியமாக பதில் வந்தது அவளிடமிருந்து....


"நீங்க சொல்ற பேச்சை கேட்க இவ என்ன என் பேத்தி ராகி யா ....இந்த திருந்தாத கழுத என்னைக்கு உங்க சொல்ல கேட்டு இருக்கு மாப்புள்ள... தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை" என்று முகத்தை சுளித்துக் கொண்டே அங்கே வந்தார் மங்களம்.... அதிதிக்கு மட்டும் தாய்க்கிழவி...


அதிதி அவரை தீப் பார்வை பார்த்து ஏதோ சொல்ல வர.... அதற்குள் "அவ ரெடி ஆகிட்டு வருவா... நீங்க ரெண்டு பேரும் சும்மா இருங்க" என்று தன் கணவரையும் தன் அம்மாவையும் அமைதி ஆக்கினார் சுகுணா....


சுகுணாவை எதிர்த்துப் பேச விரும்பாத அதிதி கோபத்துடன் அவளது அறைக்கு செல்வதற்காக மாடி ஏற....
அவள் கிளம்பி வருவாள்... என்று நினைத்து நிம்மதிப் பெருமூச்சுடன் ஜெயேந்திரன் சுகுணா இருவரும் விருந்தினர்களை உபசரிக்க சென்றனர்...


அவர்கள் இருவரும் சென்றதும் மங்களத்தின் கண்கள் மாடி ஏறிக்கொண்டிருந்த அதிதியின் முதுகை வன்மத்துடன் வெறித்தது...


அன்று துரும்பாக தெரிந்தவள்.... இன்று அவரது கண்களில் விழுந்து உறுத்திக் கொண்டிருக்கிறாள்.


கூடிய விரைவிலேயே இவளை ஒழித்துக்கட்ட வேண்டும் அப்பொழுதுதான் தனக்கு நிம்மதி என்று அவரது வஞ்சக மூளை திட்டமிட ஆரம்பித்தது.


அப்பொழுது "பாட்டி..." என்று கூவிக்கொண்டே சந்தோஷத்துடன் பின்னிருந்து அணைத்துக் கொண்டது இரண்டு கைகள்....


அந்த கைகளுக்கு சொந்தமானவளை உடனே கண்டுபிடித்த மங்களம்... "என் தங்கமே..." அவளை முன்னே இழுத்து பாசத்துடன் அணைத்துக் கொண்டார்.


அது அவரது செல்லப் பேத்தி ராகினி தான்.... அவரைப்போலவே குணம் கொண்டவள் என்பதால் பேத்தியின் மீது ரொம்பவும் பாசம் அவருக்கு...


பார்லர் உதவியுடன் பளிங்கு சிலை போல் நின்ற பேத்தியை பார்த்த மங்கலத்தில் விழிகள் மின்னியது.


அவளின் தலை முதல் நுனி வரை பணத்தின் செழுமை கொட்டிக்கிடந்தது.... அவளின் ஆடையின் விலையே லட்சத்தை தொட்டிருக்கும்... தனது பேத்தியின் அழகில் வியந்து அவளுக்கு திருஷ்டி கழித்தார் மங்கலம்.


"பாட்டி எனக்கும் எனக்கும்..." என்று ராகினியை தள்ளிவிட்டு போட்டி போட்டு கொண்டு முன்னே வந்து நின்றான் கௌதம்... ராகினியின் உடன்பிறந்த சகோதரன்...


"நீயும் என் ராசாதான் ..."என்று அவனுக்கும் திருஷ்டி கழித்த மங்களம்....


ராகினியின் உடை விலகி இருப்பதை பார்த்து சரி செய்ய முயல.... "பாட்டி வெயிட் வெயிட் என்ன பண்றீங்க... இதான் இப்ப நியூ ஃபேஷன்..." என்று ஒரு கை சரியாகவும் இன்னொரு கை தோள்பட்டையை மறைக்காமல் இறங்கி கோணலாகவும் இருக்கும் தனது உடையை அப்படியும் இப்படியும் காட்டி சொல்ல....


கண்றாவியாக இருக்கும் அந்த உடையை பார்த்து....
'என்ன எழவு ஃபேஷனோ...' என்று உள்ளுக்குள் நினைத்தாலும் தன் செல்ல பேத்தியின் மன நிலையை கெடுக்க விரும்பாமல் அமைதியாக இருந்தார் ....


இப்போதைக்கு மங்களத்தின் ஒரே விருப்பம் ராகினியை ஒரு மிகப் பெரிய பணக்காரன் ஒருவனுக்கு திருமணம் செய்துவைத்து விட வேண்டும் என்பதே.....


அதற்கு முதல் தடை அதிதி தான்... அவள் ராகினியை விட இரண்டு மூன்று வருடங்கள் மூத்தவள் என்பதால் அவளது திருமணம் முடிந்தபின் தான் ராகினிக்கு முடிக்கவேண்டும் என்று முடிவாகச் சொல்லிவிட்டார் ஜெயேந்திரன்...


தன் திட்டம் எல்லாவற்றிற்கும் முட்டுக்கட்டை போடும் அதிதியை பார்க்க பார்க்க இப்பொழுதெல்லாம் அவரின் வெறுப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது...


சரி அது போகட்டும் தனது பேத்தி பணக்காரர்களின் முன்னால் சென்று நின்றாலே போதுமே... அவளின் காலடியில் விழ பலரும் வரிசையில் நிற்பார்கள்.... என்று அலட்சியமாக நினைத்தவர் தனது பேரன் பேத்தி இருவரையும் அழைத்துக் கொண்டு பார்ட்டி நடக்கும் ஹாலிற்கு சென்றார்.


ராகவேந்திரன் சரஸ்வதி தம்பதியரின் ஒரே புதல்வன் ஜெயேந்திரன்... கல்லூரிப் பருவத்திலேயே சுபத்ரா என்ற பெண்ணின் மீது காதலில் விழுந்து பெற்றோரின் ஆசியுடன் திருமணம் செய்து கொண்டார்... அவர் திருமணத்திற்கு முன் இருந்த காதல் திருமணத்திற்கு பின் மறைய திருமணமான மூன்று வருடத்தில் கருத்து வேறுபாட்டினால் கணவன் மனைவி இருவரும் விவாகரத்து வாங்கி கொண்டு பிரிந்துவிட்டனர்.... அவர்களின் ஒரே புதல்வியான அதிதியை வளர்க்கும் பொறுப்பு தாயான சுபத்ராவிடம் கொடுக்கப்பட்டது. அப்பொழுது இருந்த சூழ்நிலையில் மனைவி மீது இருந்த வெறுப்பு மகளின் மீதும் இருக்க குழந்தையை பற்றி கவலைப்படாமல் இருந்துவிட்டார் ஜெயேந்திரன். அது பெரும் தவறு என்று இப்பொழுது அவர் வருந்தாத நாள் இல்லை.....


விவாகரத்துக்கு பின் வாழ்வில் பிடிப்பின்றி சுற்றி கொண்டிருந்த மகனை பார்த்து கவலையடைந்த அவரின் தாய் மகனை உருட்டி மிரட்டி தனது அண்ணன் மகளான சுகுணாவை திருமணம் செய்து வைத்தார் ... முதலில் சுகுணாவை பிடிக்கவில்லை என்று முரண்டு பிடித்தாலும் பின்பு அவரின் தூய்மையான அன்பில் கட்டுண்டு சாதாரண திருமண வாழ்வை வாழ ஆரம்பித்தார் ஜெயேந்திரன். அதன்விளைவாக அடுத்தடுத்த வருடங்களில் ராகினி கௌதம் என்று இரண்டு குழந்தைகளுக்கு தந்தையும் ஆனார். அப்பொழுது கூட அவருக்கு தன் முதல் மகளான அதிதியின் நினைவு வரவில்லை என்பது ஆச்சரியம்தான்....


அவர்கள் மகிழ்ச்சியில் கண்பட்டது போல் விபத்து ஒன்றில் சிக்கி ஜெயேந்திரனின் தந்தை ராகவேந்திரன் காலமாக கணவரின் இழப்பால் ஜெயேந்திரனின் தாய் நன்றாகவே ஓய்ந்து விட்டார். சுகுணாவினால் சின்னஞ்சிறு குழந்தைகளை வைத்துக்கொண்டு தன் அத்தையையும் குடும்பத்தையும் சரிவர கவனித்துக் கொள்ள முடியவில்லை.
ஜெயேந்திரன் முழு கவனத்துடன் தன் தந்தை விட்டுச் சென்ற தங்களது குடும்ப தொழிலான கன்ஸ்ட்ரக்ஷன் தொழிலில் முழுமூச்சுடன் இறங்க அவருக்கும் வீட்டை கவனிக்க முடியாமல் போனது....அப்பொழுது தன் மகளுக்கு ஆதரவாக அவ்வீட்டில் காலடி எடுத்து வைத்தார் சுகுணாவின் தாய் மங்களம்... அவர் வந்த ஒரு சில மாதங்களில் உடல்நலக்குறைவால் ஜெயேந்திரனின் அன்னை சரஸ்வதியும் இறந்துவிட... அப்பொழுது இருந்து வீட்டின் முழுப்பொறுப்பும் குழந்தைகளின் பொறுப்பும் மங்களத்தின் கையில் வந்தது. சுகுணாவுக்கு ஓரளவு தன் தாயின் குணம் தெரிந்தாலும் பெற்றவர் என்ற மரியாதையாளும் பயத்தாலும்.... தன் தாய் தனக்கு நல்லதே செய்வார் என்ற நம்பிக்கையிலும் அவரை எதுவும் சொல்ல மாட்டார்.... வெளுத்ததெல்லாம் பால் என்று நினைக்கும் குணமுடையவர் அவர்...


வருடங்கள் பல கடக்க.... தொழிலிலும் குடும்பத்திலும் எவ்வித பிரச்சினையும் இல்லாமல் வாழ்க்கை வசந்தமாக சென்றது ஜெயேந்திரனுக்கு .... அந்த வசந்தத்தில் தன் முதல் திருமணத்தையும் அதனால் ஏற்பட்ட மனக் கசப்புகளையும் சுத்தமாக மறந்தே விட்டார் ஜெயேந்திரன். அதை நினைவு படுத்தவே அவரின் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது ஒரு கடிதம்.


முதலில் அந்த கடிதத்தை பொய் என்று நினைத்து ஒதுக்கியவருக்கு மனது கேளாமல் ஆள் வைத்து விசாரிக்க அதிதியை பற்றிய உண்மை தெரியவந்தது....


அவரின் அத்தனை கோடி மதிப்பிலான சொத்துக்களுக்கும் மூத்த வாரிசான அதிதி வறுமையின் பிடியில் ஒரு குப்பத்தில் மெக்கானிக்காக இருந்தாள்....


அவரின் இளைய பிள்ளைகள் ராகினி கௌதம் இருவரும் இங்கு ஏசி அறையில் சொகுசாக தூங்க.... அங்கு அதிதி கொசுக்கடியில் சாக்கடை நாற்றத்தில் இருந்திருக்கிறாள்.... இங்கே இவர்கள் புகழ்பெற்ற பள்ளியில் நன்றாக படித்துக் கொண்டிருக்க அவளோ அவளை வளர்த்த தாத்தாவின் உடல்நிலை பாதித்ததால் பாதியிலேயே பள்ளிப்படிப்பை நிறுத்தி விட்டு மெக்கானிக் கடையில் வேலை பார்த்து கொண்டிருக்கிறார் ... இப்பொழுது அவளை வளர்த்த தாத்தாவும் இறந்துவிட அவர் இறந்ததும் அவர் எழுதிய கடிதம் ஜெயேந்திரனுக்கு வந்து சேர்ந்திருக்கிறது
என்ன கொடுமை இது.....


கடிதத்தில் இருந்த அனைத்தும் உண்மை என்று தெரிந்து கொண்ட ஜெயேந்திரன் மகளை கூப்பிட சென்றார் .....


அந்த குப்பத்தின் நடுவே வந்து நின்ற வெளிநாட்டு காரை அங்கு வசிக்கும் மக்கள் அனைவரும் திறந்த வாய் மூடாமல் தான் பார்த்தனர்....


காரிலிருந்து இறங்கிய ஜெயேந்திரன் தன் மகள் அதிதியை பற்றி விசாரிக்க அவள் வேலை செய்யும் கடைக்கே கொண்டு சென்று விட்டனர் அந்த பாசமான குப்பத்து மக்கள்...


பல வருடங்கள் கழித்து தன் மகளை பார்க்கப்போகும் ஆர்வத்துடன் ஜெயேந்திரன் காத்திருக்க...


ஆணின் உடையணிந்து முகமெல்லாம் அழுக்கும் கரையுமாக கையில் ஸ்பேனர் உடன் வியர்வை வழிய வந்து நின்ற அதிதி ...
அவரை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி.... நீங்கள் யார்??? என்பதுதான். இதைவிட கொடுமை ஒரு தந்தைக்கு இல்லவே இல்லை... அவளது தோற்றத்தைப் பார்த்து உள்ளுக்குள் நொறுங்கி இருந்தவர்... அவள் கேட்ட கேள்வியில் ஒரு தந்தையாக தான் தோற்றதை உணர்ந்தார்.


குமுறிக் கொண்டு வந்த வேதனையை உள்ளுக்குள் அடக்கி அவளின் தந்தை என்று தன்னை தானே அறிமுகப்படுத்திக் கொண்டவர்.... தனக்கு வந்த கடிதத்தை பற்றி எடுத்துரைத்து அவளை கூப்பிட....
ஏற்கனவே தாத்தாவிற்கு செய்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டிருந்த அதிதியும் அவருடன் சென்றாள்....


ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத்தான் சென்றது... ஜெயேந்திரன் அதிதியின் விட்டுப்போன அவளின் பள்ளிப் படிப்பை தன் இளைய மக்கள் படிக்கும் பள்ளியிலேயே படிக்க வைத்தார். சித்தி சுகுணா தேனே... மானே... மகளே... என்று உருக வில்லை என்றாலும் ...பரிவுடன் நடந்து கொண்டார்.


ஆனால் அவ்வளவு சொத்துக்கும் உரிமையாக தன் மகள் வயிற்று பிள்ளைகள் இருக்கையில்... புதிதாக முளைத்து வந்த அதிதியை மங்களம் ரொம்பவே வெறுத்தார்.
அதனால் சரியான தருணம் கிடைக்கும்போதெல்லாம் அவளின் அம்மாவை அசிங்கமாக பேசுவது ஓசி சோறு என்று குத்திக் காட்டுவது... அடிப்பது... அவள் சாப்பிடும்பொழுது உணவை தட்டி விடுவது என்று பல கொடுமைகள் செய்ய ஆரம்பித்தார். தாயின் மீது இருந்த பயத்தால் சுகுணா முதலில் அதை கண்டும் காணாமல் விட்டாலும் அதிதியின் மீது இருந்த பரிவால் தன் தாயிடம் அவளுக்காக பேசினார். ஆனால் அதற்கும் சேர்த்து அனுபவித்தது என்னவோ அதிதி தான்... தன் மகளையே தனக்கு எதிராக திரும்புகிறாள் என்று கோபம் அவள் மீது தான் பாய்ந்தது. மருமகன் மகள் இல்லாத நேரத்தில் அவர் கூறும் ஒவ்வொரு சொல்லும் அதிதியின் பிஞ்சு இதயத்தை கிழித்து ரணமாக தைத்தது.


தான் அதிதியை வெறுத்து ஒதுக்கியது போதாமல்
தன் பேரப் பிள்ளைகளையும் வெறுக்க வைத்தார் மங்களம்...


குப்பத்தில் இருக்கும் பொழுது அத்தனை வறுமையிலும் பூசிய உடல் வாகாக இருந்த அதிதி மாளிகைக்கு குடி வந்து குச்சியாக தேய்த்தாள்....


அதிதியின் உடல் மெலிவை பற்றி ஜெயந்திரன் விசாரித்தாலும் ...
"இந்த காலத்து பிள்ளைங்க யார் பேச்சை கேட்கிறாங்க மாப்புள... உடம்ப இறகு போல லேசாகத் தான் பட்டினி கிடக்கிறாங்க..." என்று சொல்லி அதிதியின் மேலேயே பழியைப் போட்டார் மங்களம்...


வீட்டில் மங்களத்தின் கொடுமை போதாது என்று அவள் படிக்கும் பள்ளியில் ராகினி கௌதம் இருவரும் அங்கு படிக்கும் ஹைகிளாஸ் மாணவர்களின் முன்னால் அவளை குப்பத்து பெண் என்று அசிங்க படுத்தினர்....


அவர்கள் செய்யும் கொடுமை எல்லாம் தாங்கிக்கொண்டே இருக்க அதிதி ஒன்னும் பூமாதேவி அல்லவே....?


'பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா' என்பதுபோல் அவளும் திருப்பிக் கொடுக்க ஆரம்பித்தாள். ஓசி சோறு என்று மங்களம் திட்டினால் "எங்க அப்பா காசு" என்று திரும்ப பேசினாள்...


"குப்பத்து பெண்" என்று ராகினி கிண்டல் செய்தால் ....
"போடி பவுடர் டப்பா மூஞ்சி" என்று பதிலுக்கு அவளை வாரினாள்...


என்னதான் பதிலுக்கு பதில் அவர்களுக்கு கொடுத்தாலும் உள்ளுக்குள் அவள் அடைந்த துன்பம் அவளுக்கு மட்டுமே தெரியும்!! ....


கொஞ்சம் கொஞ்சமாக அதிதிக்கு அக்குடும்பத்தில் தனது நிலை புரிய ஆரம்பித்து இருந்தது .... அத்தனை வருடங்களில் தன்னைப்பற்றி ஒருமுறைகூட விசாரிக்காத தந்தையின் மீது கோபம் வந்தது... தன் தந்தைக்கு அவரின் குடும்பம் தான் முக்கியம் என்பது புரிந்தது.


இடையில் வந்த தான் அந்த குடும்பத்தில் ஒருவர் இல்லை... தனக்கென்று யாருமில்லை... என்று நினைத்து நினைத்து அம்மாவின் நினைவில் அவளின் இதயம் அழுதது... ஆனால் தன் உணர்வுகளை வெளியே காட்டினால் மற்றவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக வேண்டும் என்று நினைத்து உணர்வுகளை புதைத்து வாழ ஆரம்பித்தாள் அதிதி.


தவறு என்று தோன்றினால் தந்தையையே எதிர்த்து பேசினாள்... அமைதியாக இருந்தவள் அடாவடித்தனமாக மாறினாள்.... நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் மங்களத்தின் பிபி-யை ஏற்றி விளையாடுவதை அவள் வேலையாகிப் போனது....


அவ்வீட்டில் சித்தி சுகுணா அப்பாவி என்பது புரிந்ததால் ...அவரின் சொல்லுக்கு எப்பொழுதுமே மரியாதை கொடுப்பாள் அவள்...


இப்பொழுதெல்லாம் அவளின் தம்பி கௌதம் இவள் இருக்கும் பக்கமே எட்டிப் பார்க்க மாட்டான்... ஆனால் அதிதிக்கு ஏனோ வெள்ளையாக கொழுகொழுவென்று இருக்கும் அவனை ரொம்பவும் பிடிக்கும் ....


விவரம் தெரியாத வயதில் அதிதியை திட்டி பேசினாலும் வளர்ந்த பிறகு அவளின் மனம் நோக எதுவும் அவன் சொன்னதில்லை... அதனால்தானோ என்னவோ அவனின் மீது மட்டும் அவளுக்கு பரிவு இருந்தது....


வெட்டிங் கேக் ரெடியாகி விட அதிதியின் வருகைக்காக காத்திருந்தனர் ஜெயேந்திரன் சுகுணா தம்பதியினர்.....


"கண்டவளுக்காக என்னோட மம்மி டாடி கேக் கட் பண்ணாம காத்திருக்க வேண்டியிருக்கு..." என்று தன் பாட்டியிடம் கடுப்பாக முணுமுணுத்தாள் ராகினி.


மங்களத்திற்கும் அது பிடிக்கவில்லை என்பதால் எரிச்சலுடன் ....


"நீங்க ரெண்டுபேரும் கேக் வெட்டுங்க... அந்த சிங்காரி சிங்காரிச்சிட்டு வர நேரம் ஆகும்.." என்று சொல்லி வாய் மூடவில்லை அவருக்கு அருகில் நின்ற கௌதம் "அதிதி வந்துட்டா" என்று மாடியை கைகாட்டினான்.


எப்பொழுதும் போல ஜீன்ஸ் டீ ஷர்ட் அணியாமல் சுகுணா பார்ட்டிக்கு என்று வாங்கிக் கொடுத்திருந்த லெஹங்காவில் அளவான அலங்காரத்துடன் தேவதைபோல் படிகளில் இறங்கி வந்தவளின் தோற்றம் அங்கிருந்த அனைவரையும் கவர்ந்தது என்று தான் சொல்லவேண்டும்...


ஜெயேந்திரன் அருகே நின்ற சுகுணா தான் தேர்ந்தெடுத்த உடையில் தேவதை போல் வரும் தன் பெறாத மகளை பார்த்து 'சூப்பர்' என்று சைகையில் சொல்ல... அங்கிருந்த அனைவரையும் தவிர்த்து தன் சித்திக்கு மட்டும் அழகாக புன்னகைத்தாள் அதிதி.


அந்த புன்னகையில் தான் எத்தனை காந்தம்... அங்கிருந்த அனைவருமே இதற்கு முன் அவள் இருந்த நிலையையும்... இப்பொழுது அவளின் அளவில்லா அழகையும் ஒப்பிட்டுப் பார்த்து வியந்து தான் போயினர்...


பல ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை செலவழித்து பார்லர் உதவியுடன் பளிங்கு சிலை போல் நின்ற ராகினி... அனைவரின் கவனமும் அதிதியின் மீது இருப்பதை பார்த்து பொறாமையில் உள்ளுக்குள் புகைந்து... தன் பாட்டி மங்களத்தின் காதில் ...
"பாருங்க பாட்டி நானும் கொஞ்சம் லேட்டா என்ட்ரி கொடுத்து இருக்கலாம்... இப்ப பாருங்க லேட்டா வந்த இவ ஹீரோயின் ஆயிட்டா... நான் இங்க ஜோக்கர் ஆயிட்டேன்" என்று அழுவது போல் உதட்டைப் பிதுக்க....


தன் ஆருயிர் பேத்தியின் கவலை படிந்த முகத்தை காண சகிக்காத மங்களம்...
"என்னதான் பன்னிய குளிப்பாட்டி நடு வீட்ல வச்சாலும்... அது திரும்ப சாக்கடைக்கு தான் போகும் ராகி மா... நீ கவலைப்படாத இன்னைக்கு இந்த ராங்கி காரிய என்ன வழி பண்றேன்னு மட்டும் பாரு" என்று படையப்பா நீலாம்பரி போல வசனம் பேசிவிட்டு அதிதியை அவமானப்படுத்த திட்டம் தீட்டினார்.


ஆனால் அதில் பாதிக்கப்பட்டது என்னவோ அவரின் செல்ல பேத்தி ராகினி தான்...

தொடரும்......:)
 

Attachments

  • eiDCSW553086.jpg
    eiDCSW553086.jpg
    246 KB · Views: 3
Last edited:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN