உன்னுள் என்னைக் காண்கிறேன் 13

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 13
விமானத்திலியிருந்து இறங்கி வெளியே செல்லும் பாதையில் ருத்ராவுடன் தேவ் முன்னே செல்ல அவன் பின்னே நடந்து வந்தவள் லக்கேஜ் எடுக்க எந்தப் பக்கம் போகவேண்டும் என்று தெரியாமல் குழம்பி அவன் முகத்தை முகத்தைப் பார்த்துக் கொண்டு வர.

தேவ் எதிரே வந்து நின்றான் ஓர் இளைஞன். “குட் மார்னிங் சார்“ என்று சொன்னவனுக்குக் கண்களால் ஏதோ கட்டளை இட உடனே அவன் “எஸ் சார்” என்று கூறிப் பின்னால் திரும்பி யாரையோ அவன் பார்க்க திடீர் என்று இவர்கள் முன் உதயமானார்கள் நான்கு ஆண்கள்.

அவர்கள் அனைவரும் ஒரே நிறத்தில் சஃபாரி சூட் அணிந்திருக்க அதில் ஒருவன் தேவ்விடமிருந்து ருத்ராவை வாங்கிக் கொண்டு பக்கவாட்டில் ஒதுங்க முதலில் வந்த இளைஞனோ “வெல்கம் சார்“ என்று கூற மற்ற மூன்று பேரும் மித்ராவையும் தேவ்வையும் அறனாக சூழ்ந்து கொண்டு அவர்களுடன் நடக்க ஆரம்பித்தனர்.

அங்குப் பணிபுரியும் ஊழியர்கள் சற்று ஒதுங்கி நிற்க ஒருசிலர் அவனுக்கு வாழ்த்துச் சொல்லி புன்னகையுடன் வரவேற்க, அங்கு அவனைத் தெரியாதவர்கள் என வழியில் நின்றிருந்தவர்களை ஒதுங்கும் படி பக்கவாட்டில் இருந்து சைகை செய்து கொண்டு வந்தார்கள் அந்த சபாரி போட்ட ஆண்கள்.
இதையெல்லாம் சினிமாவில் மட்டுமே மித்ரா பார்த்திருக்க இன்று அவளையே ஓர் விஐபி போல் நடத்தவே சற்று கூச்சமாகிப் போனது அவளுக்கு. வெளியில் இருந்த கார்கதவை இருவர் இரண்டு பக்கமும் திறந்து விட அனைவரும் ஏறிக்கொண்டனர். பின் மற்றவர்கள் மற்ற கார்களில் ஏறிக்கொள்ள கார் கிளம்பியது.

இவர்கள் காருக்கு முன்னும் பின்னுமாக இரண்டு கார்கள் எஸ்கார்டாக வர இதைப் பார்த்தவளோ ‘யோவ் என்னைச் சுற்றி என்னையா நடக்குது?’ என்று மலைத்துத் தான் போனாள் மித்ரா. இறுதியில் ஓர் இரும்பு கேட்டின் முன் கார் நிற்க இரண்டு காவலாளிகள் ஓடி வந்து இரண்டு பக்க கேட்டையும் திறந்து விட உள்ளே சென்ற காரிலிருந்து சுற்றியும் தன் பார்வையை ஓட்டிய மித்ரா எங்கும் மரம் செடி கொடி தோட்டம் என்றிருக்க “எங்க தான் இருக்கு இவன் வீடு?“ என்ற சலிப்புடன் நிமிர்ந்தவள் எதிரில் தெரிந்த காட்சியில் தன் கண்களை இமைக்கவும் மறந்தவளானாள். பின்னே வீட்டை எதிர்பார்த்து வந்தவளுக்கு இங்கு மாளிகையே தெரிந்தால்?...

ஆமாம் அது மாளிகையே தான்! புத்தகத்தில் படித்தும் சினிமாவில் பார்த்தும் ரசித்ததை விடவும் மாட மாளிகை கூட கோபுரத்துடன் பன்மடங்கு நிஜத்தில் பரந்து விரிந்திருந்தது. ‘மாளிகையை முழுக்க முழுக்க யானைத் தந்தத்தை இழைத்துக் கட்டி இருப்பார்களோ?’ என்று முதல் முறையாக பார்க்கும் யாவரும் நினைக்கும் அளவுக்கு இருந்தது அந்த மாளிகை.

கார் நின்று காவலாளிகள் கதவைத் திறந்து விட்டது கூடத் தெரியாமல் ‘ஆ’ என்று வாயைப் பிளந்து கொண்டிருந்தவளை “இறங்கு” என்றான் தேவ். இவள்இறங்குகையிலே ஓர் மிதமான வேகத்துடன் உள்ளே நுழைந்த இன்னோர் காரிலிருந்து இறங்கியவனைப் பார்த்த தேவ் “என்ன ஜீவா எல்லா ஃபார்மாளிடிஸ்ஸூம் முடிஞ்சிதா?”

“எஸ் சார் எல்லாம் முடிஞ்சிது” என்றவன் அங்கிருந்த வேளையாட்களிடம் கண்ணசைக்க அந்தக் காரிலிருந்து லக்கேஜ்களை எடுத்துச் சென்றனர் அவர்கள்.

அந்த நேரம் கார் நின்ற சத்தம் கேட்டு “இவ்வளவு நேரமாகியும் இன்னும் உள்ளே வராம என்ன செய்துட்டு இருக்க அப்பு? என்ன ஆச்சி? உள்ளே வாப்பா” என்று சொல்லிக் கொண்டே வெளியே வந்தார் ஓர் பெண்மணி. அவருக்கு எப்படியும் ஐம்பதில் இருந்து ஐம்பத்தி ஐந்துக்குள் வயதிருக்கும்.

வெளியே வந்தவர் ருத்ரா தூங்கி விட்டதைப் பார்த்து உள்ளே திரும்பி “மங்கா! ருத்ராஸ்ரீ தூங்கிட்டா பாரு அவளைத் தூக்கிப் போய் அவ ரூம்ல படுக்கவை“ என்றவர், தேவ்விடம்,


“வா அப்பு ஏன் இங்கேயே நிற்கிற” என்க அவரிடம் இரண்டொரு வார்த்தை பேசியவன் பின் ஜீவாவுடன் தன் அலுவலக அறையில் நுழைந்து கொண்டான் தேவ்.

மித்ராவிடம் திருப்பியவர் “நான் வேறு யாரும் இல்ல தேவ்வுடைய சித்தி! அவங்க அம்மா கூடப் பிறந்த தங்கை” என்றவர் “உன் ரூம் மேல இருக்கு வா காட்றேன்” என்று அவளை அழைத்துச் செல்ல மாடிப் படிகளில் ஏறும்போது எதிரே சுவற்றில் தேவ்வின் மார்பு வரை உள்ள வெளிநாட்டில் எடுத்தப் படம் இருந்தது. கண்களில் கூலிங் கிளாஸ் மற்றும் டிஷர்ட்டுடன் சிரித்த முகமாக பார்க்க இன்னும் அழகாக இருந்தான் தேவ்.

அவள் அறையைக் காட்டிய வேதா “இது தான் உன் ரூம் மித்ரா! உன் திங்ச இங்கே வைச்சாச்சு. ஏதாவது வேணும்னா இண்டர்காமில் இருநூற்றிஇரண்டை அழைத்தால் வேலையாள் வருவாங்க. அவங்க கிட்ட சொல்லு இல்லனா என்கிட்ட கேளு. இப்ப நீ ரெஸ்ட் எடுத்துக்கோ நான் கிளம்பறேன்” என்றவர் சென்று விட,

உள்ளே வந்த மித்ரா‘ என்னை யாரு என்னனு எதுவும் கேட்கல. முகம் திருப்பல ஒட்டுதலும் இல்ல. உன்னைப் பற்றி எனக்குத் தெரியும் நீ இங்கு தான் இருக்கணும் என்ற சுமூக உறவில் பழகுகிறார். இவர் கிட்ட தேவ் எல்லாத்தையும் சொல்லி இருக்கானா, நான் நடிக்க வந்தவனு! ஆனா இப்படி எல்லாம் செய்யக் கூடாதுனு தடுக்காமத் திட்டாம இவர்களும் அவனுக்குத் துணை போறாங்க. இல்லனா யார் என்ன சொன்னாலும் கேட்காமத் தான் என்ற திமிர்ல ஆடுவானோ? அதான் பார்க்கும் போதே தெரியுதே. எல்லாரையும் அடக்கி ஆண்டு அதிகாரம் செய்றவன் என்று.

நான் பார்த்தவரை அவன் போட்டோ தான் இருக்கு. அவன் மனைவி போட்டோ இல்ல. ஏன் அவன் மகள் ருத்ரா போட்டோ கூடத் தான் இல்ல. இவன் வாழ்க்கையில் ஏதோ ரகசியம் மறஞ்சியிருக்கு. அதை வெளி உலகத்துக்குத் தெரியாமல் என்னை வச்சி அழகா பிளான் பண்ணி மறைச்சி சமாளிக்கப் பார்க்கறான். டேய் லம்பா, நீ செம பெரிய தில்லாலங்கடி ஆள் தான்டா. எப்படி எல்லாம் யோசிக்குது உன் மூள...’ என்று அவனை அர்ச்சித்தவளைத் தடை செய்தது அங்கிருந்த இண்டர்காமின் ஒலி. எடுத்துப்பேசியதில் “மித்ரா என்ன செய்துட்டு இருக்க? ருத்ராஸ்ரீ எழுந்து உன்னக்கேட்டு அழுது அடம்பிடிக்கிறா. கொஞ்சம் கீழ வர முடியுமா? என் ரூமுக்குப் பக்கத்து ரூம் தான் ரூம்”

இதோ என்றவள் குளித்துத் தயாராகி ருத்ராவைப் பார்த்துக் கொண்டாள். பிறகு சற்று தூங்கி மாலை எழுந்திருந்த நேரம் கதவைத் தட்டி விட்டு உள்ளே நுழைந்தாள் நித்திலா. பார்க்கக் குறை என்று சொல்ல முடியாத அளவுக்கு அழகான பெண். நடையில் மட்டும் சற்றுத் தடுமாற்றம். “ஹாய் அண்ணி வெல்கம் டு யுவர் பேலஸ்!

நான் முன்னாடியே வந்தேன் அண்ணி. நீங்க அப்போ பாத்ரூமில் இருந்திங்க. ஸோ வெளியவே இருந்து உங்களுக்கும் எனக்கும் காஃபி சொல்லிவிட்டு வந்தேன். அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே காபி ட்ரேயை பணியாள் வந்து வைத்துவிட்டுச் செல்ல.

“என் பெயர் நித்திலா! பி.எல் பண்ணிட்டு இருக்கேன் தேர்ட்டு இயர். நான் தேவ் அண்ணாவின் சித்திப் பொண்ணு. காலை நீங்க இங்க வரும் போது பார்த்து இருப்பீங்களே, அவங்க தான் என் அம்மா வேதா.

இந்தப் பத்து நாளும் எனக்கு ரொம்பப் போர் அடிச்சிது அண்ணி. எப்போதும் காலேஜ் முடிச்சி வந்தா ருத்ராயிருப்பா. ஆனா இந்தப் பத்து நாளும் அவளும் அண்ணாவும் இல்லாதது எனக்கு செம போர். நான் தான் அண்ணாகிட்ட எப்போ வருவீங்கனு கேட்டுட்டே இருந்தேன். அப்பக்கூட நீங்க வருவீங்கனு அண்ணா சொல்லவேயில்ல அண்ணி. இன்னைக்குக் காலையில் தான் அண்ணா போன் பண்ணி பத்து மணிக்குப் பிளைட், நானும் உன் அண்ணியும் வரோம்னு சொன்னார்.

ஐயம் ஸோ ஹாப்பி அண்ணி. நான் இன்னைக்கு லீவ் போடவானு தான் கேட்டேன். அண்ணா தான் அதெல்லாம் ஒன்னும் வேணாம் நீ இருந்தாலும் உன் அண்ணியிடமும் ருத்ராவிடமும் பேச முடியாது. அதை விட காலேஜ் முடிச்சி வந்து பேசு. அப்ப தான் அவங்க தூங்கி எழுந்து ஃபிரஷ்ஸா இருப்பாங்கனு சொன்னார். அவர் சொன்ன மாதிரியே நான் வரும்போது நீங்க தூங்கிட்டு தான் இருந்தீங்க. இது தான் அண்ணா! அவர் எது சொன்னாலும் கரெக்டா தானிருக்கும் என்று மித்ராவுக்குப் பேசவே இடம் கொடுக்காமல் இவளாவே பேசிக்கொண்டு போனாள்.

மித்ராவுக்கு அவள் பேசுவதைக் கேட்டு தலையே சுற்றியது. ‘அம்மாடியோ! நானே ஒரு லொட லொடா பாக்ஸ். இவ எனக்கு மேல இருப்பா போல. மூச்சு விடும்போதாவது வாயை மூடுவாளா? இல்ல இல்ல...’ எனக்குத் தெரிஞ்சி தூங்கும் போது தான் இவ வாயை மூடுவா போல’ என்று நினைத்தவள் வெறும் சினேகப் புன்னகையை மட்டும் அவளுக்குச் சிந்தினாள்.

‘ஆங்… அண்ணி கேட்க மறந்துட்டேன். உங்களுக்கு காஃபி பிடிக்குமா இல்ல டீயா? நான் ரெண்டுமே எடுத்துட்டு வரச் சொன்னேன். உங்களுக்கு எது வேணும்? அப்பா! இப்பவாச்சம் நான் பேச இடம் விட்டியே’ என்று நினைத்தவள் “காஃபி போதும் ருத்ராஸ்ரீக்கு?” என்று இழுக்க “அவளுக்கு பாதாம்பால் இருக்கு அண்ணி. அவ எழுந்த பிறகு சொன்னா எடுத்து வருவாங்க” என்றவள் காஃபியை நீட்ட. அந்தநேரம் எழுந்து கொண்டாள் ருத்ரா.

“ஹாய் ருத்ராகுட்டி! குட் ஈவினிங்” நித்திலா.

“ஹாய்…அத்த்துது!” என்ற கூவலுடன் ஓடி வந்து நித்திலாவின் மடியில் ஏறி அவள் இடுப்பைச் சுற்றிக் கால்களைப் படற விட்டு முகம் பார்த்து அமர்ந்தாள் ருத்ரா.

“என்னடி பம்பிளிமாஸ்! இந்த அத்தைய மறந்துட்டயில்ல?”

“நா ஒண்ணும் பம்பிமாஸ் இல்ல்ல! நீ தா சப்பிளிமாஸ்”

“போடி போடி என் பம்பிளிமாஸ்”

“போ…போ.. என் சப்பிளிமாஸ்.”

“அப்பா…. வாயைப் பாரு வாயை“

“இந்தா.. நல்ல்லாலா.. பாத்திக்கோ ஆ……..”

“போதும்டீயம்மா போதும் உள் நாக்கு வரை தெரியுது. க்ளோஸ் த டோர்!”

“அச்ச்சோ.. அச்ச்சோ…” என்று தன் பிஞ்சுக் கைகளால் நெற்றியிலேயே அடித்துக் கொண்டவள் “அத்த்து உன்க்கு ஒலுங்காவே சொல்ல்ல தெரிய்யல! அது அப்பிடி சொல்லு கூடது! உல்கமே தெரிய்யுது தா சொல்லனு” என்று அவள் அத்தைக்கே பாடம் எடுக்க.

“சரி டி என் டீச்சர் அம்மா”

“நா மிஸ் தா? அப்ப எந்து கை கட்டு வாய் மூடி நில்லு” என்று அதிகாரம் பண்ண”

“சொல்லுவடி என் மாமியாரே! உனக்கு நான் நிக்கணுமா?” என்று கேட்டவள் கிச்சிக் கிச்சி மூட்ட அதில் கலகல என சிரித்தாள் ருத்ரா.

அந்தநேரம் இண்டர்காம் ஒலிக்க நித்திலா தான் எடுத்தாள்.
“……. “

‘ஓ… அப்படியா… இப்பவா…. இதோவரோம்…” என்று கூறியவள் “அண்ணி உங்கள பெரியம்மா பார்க்கணுமாம். வரச் சொன்னாங்க வாங்க போகலாம்” என்க.”

“பெரியம்மாவா? யார் அவங்க?” மனதில் சிறு சந்தேகமிருந்தாலும் கேட்டுவிட்டாள் மித்ரா. அவள் சந்தேகத்தை உறுதிப் படுத்துவது போல் “வேற யாரு? தேவ் அண்ணா அம்மா, உங்க மாமியார் தான்”.

“எதுக்கு என்னை ஏன் பார்க்கணும்?” அவளுக்கு வார்த்தைகள் தந்தி அடிக்க “அது அங்கு போனா தான தெரியும்” என்று கூறி அழைத்துச் சென்றாள் நித்திலா. நித்திலாவின் கால் சரியில்லாததால் லிஃப்டின் வழியாக இறங்கினார்கள் இருவரும். மித்ராவுக்கு ஏன் என்று தெரியாமலே நெஞ்சு பட பட என அடித்துக் கொண்டது. அவர் அறையின் உள்ளே நுழைகையில் அதேநேரம் வெளியில் இருந்து வந்த தேவ்வும் தன் தாயின் அறையின்னுள்ளே நுழைய...

இருவரும் ஒன்றாக சேர்ந்தே நுழைந்ததைப் பார்த்த விசாலாட்சிக்கு மனதில் அப்படி ஓர் நிறைவு. கண்களாலேயே மித்ராவை “வா” என்று அழைத்தவர், பின் தன் மகனை வரவேற்கும் விதமாகத் இடது கையை நீட்ட, அதில் ஓடி வந்து அவர் கையைப் பற்றிக் கொண்டு அவர் அருகில் அமர்ந்தவன் அவர் கையை வருடிக் கொண்டே “என்னமா, இப்ப எப்படி இருக்கு உடம்பு? “என்று கேட்க அவன் கையை தன்னுடைய இன்னோர் கையால் அழுத்திக் கொண்டவர், அந்த அழுத்தத்தின் மூலம் தான் நன்றாகயிருப்பதாக தேவ்வுக்குத் தைரியம் அளித்தார்.

மித்ராவுக்குத் தான் அதிர்ச்சி! அதிலிருந்து அவள் வெளிவரவே முடியவில்லை. அவள் மனமோ ,அடபோங்கையா ஒரு புள்ள எத்தனை தடவையா அதிர்ச்சி ஆவா?’ என்று கவுண்டர் கொடுத்தது. பின்னே தேவ்வுடைய அம்மாவை எதிர்பார்த்து வந்தால் தேவ்வுக்கு அக்கா மாதிரி ஒருத்தரைக் காட்டி அம்மா என்றால் எப்படி இருக்கும் அவளுக்கு?...

என்ன தான் மகன் கேட்கும் கேள்விகளுக்குத் தன் வருடலிலும் கண் அசைவிலும் பதில் தந்தாலும் மித்ராவை உச்சி முதல் பாதம் வரை ஊடுருவியது அவர்பார்வை. அந்த அறையை விட்டு வெளியே வந்த பிறகு தான் மித்ராவால் ஒழுங்காக மூச்சேவிட முடிந்தது.

நாட்கள் அதன் போக்கில் சென்றது. ருத்ராவைத் தன் அறையில் தன்னுடனே வைத்துக் கொண்டாள் மித்ரா. ருத்ராவை ஸ்கூலுக்கு அழைத்துப் போவது முதல் திரும்ப மதியம் அழைத்து வருவது வரை மித்ராவின் பொறுப்பு என்றானது. அந்த நேரம் முழுக்க நித்திலாவின் லேப்டாப்பில் அமர்ந்து விடுவாள் மித்ரா.

மதியம் சாப்பிட்டு ஆட்டம் போட்டுத் தூங்கி எழுந்தால் மாலை நித்திலா வந்து விட, தோட்டத்தில் பேசிக் கொண்டும் இயற்கையை ரசித்துக் கொண்டும் நடக்கவே நேரம் சரியாக இருக்கும். இப்படியாக ஒரு வாரம் சென்றது. அன்று தேவ்வின் தாய் அறையில் தேவ்வைப் பார்த்ததோட சரி. அதன் பிறகு அவனைப் பார்க்க வில்லை மித்ரா. ஏன் அவன் தாயைக் கூடத் தான். இப்படியாகச் செல்ல ஒரு நாள் காலை தேவ்வின் பர்சனல் நம்பருக்கு ஒரு அழைப்பு வர,

“நான் ரம்யா பேசரேன். மித்ராவோட பிரண்ட்! அவ தாத்தா தான் இந்த நம்பர் கொடுத்தார். நீங்க மித்ராவோட கணவர்னும் அவ உங்கள லவ் பண்ணி மேரேஜ் பண்ணிகிட்டதாவும் சொன்னார்.

ஆனா அது உண்மையில்லனு எனக்குத் தெரியும். நீங்க பொய் சொல்லுறீங்க மிஸ்டர் தேவ்! அவ உங்கள மட்டுமில்ல வேற யாரையும் லவ் பண்ணவோ கல்யாணம் பண்ணிக்கவோ மாட்டா. இதை நான் உறுதியா சொல்வேன். ஏன்னா அவ வாழ்க்கையில் என்ன நடந்ததுனு எனக்கு மட்டும் தான் தெரியும். அதைப் பற்றியும் இப்ப அவளைச் சுற்றி என்ன நடந்துட்டிருக்கு என்றதைப் பற்றியும் உங்க கிட்டப் பேச வேண்டும்.

நான் இப்போ கோவையில் தானிருக்கேன். நாம மீட் பண்ண முடியுமா? நான் சொன்னது எல்லாம் உண்மை. நானும் அவளும் சேர்ந்து எடுத்த போட்டோவ உங்களுக்கு வாட்ஸப் பண்ணியிருக்கேன் பாருங்க என்றவளின் அழைப்பைத் துண்டித்தவன் வாட்ஸப்பை ஆன் செய்து பார்த்தவன், பிறகு அவளை அழைத்து நாளை மாலை நான்கு மணிக்கு புரூக் பீல்ட்ஸ் வரும்படியும் அங்கு அவளைச் சந்திப்பதாகவும் உறுதியளித்தான்.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN