உன்னுள் என்னைக் காண்கிறேன் 17

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 17

நியூயார்க் நகரம் உறங்கும் நேரம்

தனிமை அடர்ந்தது பனியும் படர்ந்தது
கப்பல் இறங்கியே காற்றும் கரையில் நடந்தது
நான்கு கண்ணாடி சுவர்களுக்குள்ளே நானும் மெழுவர்த்தியும்
தனிமை தனிமையோ கொடுமை கொடுமையோ


ஏ.ஆர். ரஹ்மானின் பாடல் பின்னனியில் ஓடிக் கொண்டிருக்க தேவ்வோ சிந்தனையில் மூழ்கியிருந்தான்.தேவ் ஊருக்குப் போய்விட்டு வருகிறேன்னு சொல்லி எப்போது வீட்டிலிருந்து கிளம்பினானோ அந்த வினாடியிலிருந்து இந்த வினாடி வரை ஒரு வாரமாகத் தன் தாயையும் தன் மகள் ருத்ராவையும் நினைத்தானோ இல்லையோ மித்ராவைத் தான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தான்.

அதிலும் கடைசியாக அவளிடம் சொல்லி விட்டுக் கிளம்பும் போது அவள் சொன்ன ‘அப்போ இந்த ஏழு நாளும் நீங்க வாக்கிங் வர மாட்டீங்களா...’ என்ற இந்த வார்த்தை அவனை ரொம்பவும் இம்சித்தது. அவளுக்கும் என் அருகாமை பிடித்திருக்கிறது. என்னிடம் பேச நேரத்தை செலவழிக்க என்று. ஆனால் இதெல்லாம் ஒரு நல்ல நண்பனாகத் தான். அதில் துளியும் காதல் இல்லை. நான் தான் பார்த்தேனே... கிளம்பும் போது அவள் கையை நான் பிடித்த நேரம் சங்கடத்தில் அவள் எப்படியெல்லாம் நெளிந்தாள் என்று.

ஆனாலும் அவளை இப்படியே விட முடியாதே. அவள் மனதிலிருக்கும் நட்பு காதலாக மாறனுமே. வாழ்க்கையை வெறுப்பவளிடம் காதலை எதிர்பார்க்க முடியாது தான். இருந்தாலும் என் பேச்சு என் செயல் என் அருகாமை இது எதுவுமா அவள் மனதை மாற்றவில்லை? இல்லையே... உண்மை தான் அவளை மாற்றவே இல்லையே. முதலில் என்னைக் கண்டாலே விலகிப் போனாள். பிறகு வேற்று மனிதனிடம் பேசுவது போல் பேசினாள். இப்போது நட்பாகப் பேசுகிறாள் அவ்வளவு தான்.

காதல் மனைவியாக எப்போடி என்னைப் பார்த்து பேசுவ என் ராட்சஸி...’ என்று தன்னுள் கேட்டுக் கொண்டான் தேவ். ‘அவளை உன் பெயர் சொல்லி அழைத்து நட்புறவோடு சகஜமாகப் பேச வைக்கவே நீ படாதபாடு பட்டுட்ட. இதுல காதல் வேறையா...’ என்று கேட்ட மனசாட்சிக்கு ‘ஆமாம் ஆமாம்... அதுக்கு இன்னும் வேற என்னெல்லாம் செய்யணுமோ’ என்று நொந்து போனான் தேவ்.

அவன் கிளம்பின அந்த வினாடியில் இருந்தே இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் பதிலாக அவன் யோசித்தது ஒன்றே ஒன்று தான். ‘அவள் மனதில் காதல் வருதோ இல்லையோ என்னைக் கொஞ்சமாவது அவள் நினைக்கனும்னா இந்த ஏழு நாளும் நானா அவளைத் தொடர்பு கொள்ளக் கூடாது’ என்ற முடிவுதான் அது.

அது அவனுக்கும் சற்று சிரமம் தான். ஆனால் இதை விட்டால் வேறு வழியில்லை என்ற முடிவுடன் அதை செயல்படுத்தவும் ஆரம்பித்தான் தேவ். அவன் வந்த வேலையும் அப்படிப் பட்டது என்பதால் அவனாலும் வேறு எதையும் பேசவோ நினைக்கவோ முடியவில்லை. இவன் இந்த முடிவுடன் இருக்க….

அங்கு மித்ராவோ மண்டைக் குழம்பி தன்னைத் தானே பல கேள்விகள் கேட்டு மிகவும் நொந்து போனாள். இவளுக்கு எப்போதும் வரும் வாழ்த்துச் செய்தி அவனிடமிருந்து வரவில்லை. ‘சரி அவன் டிராவல்ல இருப்பான். அதனால் முதன் முறையா நாமாக அனுப்புவோம்’ என்று நினைத்து அவனுக்கு குட் நைட் ஹாப்பி ஜெர்னி என்று இரண்டு மெசேஜ் அனுப்பி வைத்தாள்.

பிறகு மறுநாள் ருத்திராவை மதியம் ஸ்கூலில் இருந்து அழைத்து வரும் வரையிலும் அவன் ஊருக்குப் போய் சேர்ந்ததுக்கான எந்த தகவலும் கிடைக்கவில்லை. ஏன் வாட்ஸப்பில் இவள் நேற்று நைட் அனுப்பின மெசேஜ்ஜைப் பார்த்ததுக்கான புளு கலர் டிக்கும் காட்டவில்லை. ஆனால் அவள் ருத்ராவை ஸ்கூலில் இருந்து அழைத்து வரும் போது ஹாலில் அமர்ந்திருந்த அவள் தாத்தா “என்னமா கொஞ்சம் முன்னாடி வந்து இருக்கக் கூடாது? இப்ப தான் மாப்பிள்ள போன் பண்ணார். நல்ல மாதிரியா அமெரிக்கா போய் சேர்ந்துட்டாராம். இப்ப தான் என்கிட்ட பேசி வைத்தார்” என்று அவர் கூற,

“ஓ… அப்படியா? சரி தாத்தா நான் அவர் கிட்ட பிறகு பேசிக்கிறேன்” என்று கூறி தன் அறைக்கு வந்தவள் தன் உடையைக் கூட மாற்றாமல் ஹாண்ட்பேக்கில் இருந்து மொபைலை எடுத்து அவன் ஏதாவது மெசேஜ் அனுப்பி இருக்கானா என்று அவசரமாகப் பார்க்க எந்த மெசேஜ்ஜூம் இல்லை. ஆனால் அவள் அனுப்பின மெசேஜ்ஜைப் பார்ததுக்கான புளு கலர் டிக் மட்டும் காட்டியது.

‘சரி நாமே மெசேஜ் பண்ணிடுவோம்’ என்று நினைத்து ‘தாத்தா சொன்னார் நீங்க சேஃபா போய் சேர்ந்துட்டிங்கனு. இப்ப தான் ருத்ராவ ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வந்தேன். அவளை நான் பார்த்துக்கறேன். இப்ப அங்க நைட் இல்ல? சாப்டாச்சா? சரி போய் தூங்குங்க. டேக் கேர் பாய் குட் நைட்’ என்று எழுதி மெசேஜ் செய்தாள் மித்ரா. பிறகு வந்த வேலையில் அவனையும் அவன் மெசேஜ்ஜையும் மறக்க அன்று இரவு படுப்பதற்கு முன்பு போனை எடுத்து மெசேஜ் ஓபன் பண்ணிப் பார்க்க அதில் அவள் அனுப்பின மெசேஜ்ஜைப் பார்த்து விட்டான் என்று மட்டும் காட்டியது.

ஆனால் அவனிடமிருந்து எந்த பதில் தகவலும் இல்லை. அதைப் பார்த்தவள் ‘சரி மறுபடியும் நாமே மெசேஜ் பண்ணுவோம்’ என்று நினைத்து தினமும் ‘குட் மார்னிங்’ என்று அனுப்பி வைத்தாள். இப்படியாக நான்கு தினங்கள் சென்றது. இவள் அனுப்பும் வாழ்த்து, சாப்டாச்சா என்ற கேள்வி, நான் ருத்ராவைப் பார்த்துக் கொள்கிறேன் என்று இப்படி ஏதாவது ஒரு வார்த்தையாவது அனுப்புவாள். ஆனால் இது எதற்கும் அவனிடமிருந்து பதில் மெசேஜ் இல்லை. இவள் ருத்ராவை அழைத்து வரும் நேரத்தில் போன் பண்ணி அனைவரிடமும் பேசினான்.

அதே மாதிரி இவள் தாத்தாவுடன் வாக்கிங் போயிருந்த நேரத்தில் ருத்ராவிடம் பேசினான். முதலில் இதையெல்லாம் சகஜமாக எடுத்துக் கொண்டவள் ஐந்தாம் நாளிலிருந்து சற்று யோசிக்க ஆரம்பித்தாள். ‘இவன் வேண்டும் என்றே என்னை தவிர்க்கறானோ?’ என்று நினைத்தவள் ‘சரி... இன்று எங்கும் போகாமல் வீட்டில் இருந்து பார்ப்போம்’ என்ற எண்ணப் படி வீட்டில் தவமிருக்க அன்று முழுக்க அவனிடமிருந்து போனே வரவில்லை.

சற்று ஆழ்ந்து யோசித்த போது தான் அவன் தன்னை வேண்டும் என்றே தவிர்ப்பது மித்ராவுக்குப் புரிந்தது. ‘ஏன்? எதற்காக இப்படிச் செய்றான்? போகும் போது நல்லா தானே பேசி எல்லோரையும் நீ தான் நல்லபடியா பார்த்துக்கணும்னு சொல்லிட்டுப்போனான்? பிறகு இப்ப என்ன ஆச்சி?’ என்று பலவாறு யோசித்தவள் ‘ஆமாம்! போகும் போது என்ன சொல்லிட்டுப் போனான்? ஏதோ மாற்றம் வரும் அதுவும் கேஸ் விஷயமா என்று தானே சொன்னான்? ஓ… ஒருவேளை கேஸ் அவனுக்குச் சாதகமா முடியப் போகுதா? அதற்குத் தான் அமெரிக்கா போனானா?

ச்சே.. அதற்கு ஏன் அமெரிக்கா போறான்?’ என்று சிந்தித்தவள் திடீர் என்று மனதில் தோன்றிய மகிழ்ச்சியுடன் “வாவ்வ்வ்…” என்றாள் வாய் விட்டு. “ஒருவேளை தேவ்வும் அவன் மனைவியும் சமாதானம் ஆகிட்டாங்களோ? அன்று கூட ஃபங்ஷன்ல தேவ்வுடைய மனைவி அமெரிக்கால இருக்கறதாதானப் பேசிக்கிட்டாங்க? அதனால் அவரைப் பார்த்துப் பேசி சமாதானம் பண்ணிக் கூட்டி வரத் தான் போய் இருக்கானா? ஐய்யா… இது எவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயம்?! இதை என்கிட்ட சொல்லியிருந்தா நான் எவ்வளவு சந்தோஷப்பட்டு இருப்பேன்?

சரி, இதை சொல்றதுக்கு என்ன ஏன் தவிர்க்கிறான்? ஒருவேளை நீ நடிக்க வந்த வேலை முடிஞ்சிடுச்சி. அதனால் நீ கிளம்பலாம்னு என்கிட்ட எப்படி சொல்றதுனு யோசிக்கறானா? அட ராமா... அதற்காக நான் இங்கயே இருக்க முடியாதே. எப்படி இருந்தாலும் நான் இங்கிருந்து போய் தானே ஆகணும். என்ன... அப்பாடா, கேஸ் முடிஞ்சிடுச்சி என்ற நிம்மதியில் முன்பு போய் இருப்பேன். ஆனா இப்போ ருத்ராவுக்கு அவ அம்மாவே வந்துட்டாங்கனும் தேவ் அவன் மனைவியோட சேர்ந்து வாழப்போறான் என்ற சந்தோஷத்துடன் போகப் போறேன்.

கடவுளே இது மட்டும் நடத்திக் கொடுத்திடு அதுபோதும் எனக்கு’ என்று கடவுளிடம் வேண்டினாள். இது தான் காரணமா இருக்கும் என்று முடிவு செய்தவள் ‘பிறகென்ன... அவன் வரட்டும். அவனிடம் பேசிப் புரியவைக்கலாம்’ என்று நல்ல தோழியாக தன் நண்பனின் வாழ்வு அமையப் பிரார்த்தனை செய்தவள் கூடவே அவள் நினைத்தபடியே இங்கிருந்து கிளம்புவற்கான தருணமும் வரப்போவதை எண்ணி சந்தோஷமும் அடைந்தாள்.

இவள் இப்படி ஒரு முடிவில் இருக்க, அங்கு தேவ்வோ வேறொரு முடிவில் இருத்தான். தான் வந்த வேலையை முடித்தவன் பின் இந்தியா திரும்பும் வேளையில் விஷ்வாவை அழைத்துத் தன்னை வந்து அழைத்துப் போகும்படி சொல்ல.

அவன் சொன்னபடியே தேவ் இந்தியா வந்ததும் அவனை அழைத்துப் போக விஷ்வா வந்திருந்தான். தேவ் காரில் ஏறியதும் “எங்கடா வீட்டுக்கு தான?”

“இல்லடா கெஸ்ட் ஹவுஸ் போ” என்றவனை திரும்பிப் பார்த்து “ஏன்டா அப்ப நீ வரனு இன்னும் வீட்டில சொல்லலையா?” என்று விஷ்வா கேட்க “இன்னும் இல்லடா. நாம கொஞ்சம் பேசணும் அதான்” என்று கூறிக் கண்களை மூடி சீட்டில் தலை சாய்த்துக் கொண்டான். தேவ்வின் கெஸ்ட் ஹவுஸில் வண்டியை நிறுத்த, இருவரும் இறங்கி உள்ளே போனார்கள்.

தேவ் எதுவும் பேசாமல் ஸோஃபாவில் அமர்ந்திருக்க “என்னடா அங்க ஏதாவது பிரச்சனையா? எல்லாம் நல்லபடியா தானே முடிஞ்சது?” என்று விஷ்வா கவலையுடன் ஆரம்பிக்க.

“அங்க ஒண்ணும் பிரச்சனை இல்லடா. எல்லாத்தையும் பக்காவா முடிச்சிட்டேன். இன்னும் சொல்லப் போனா பவித்ரா என் வாழ்க்கையில் இருந்ததுக்கான தடயங்கள் எதுவும் இல்லாமல் அழிச்சி சரி பண்ணிட்டுத் தான் வந்திருக்கேன். அதனால் யூ டோண்ட் வொர்ரி” என்று நண்பனுக்குத் தைரியம் அளிக்க.

“பின்ன இப்ப என்னடா யோசனை?”

“இது மித்ராவைப் பற்றியது”

“மித்ராவுக்கு இப்போ என்னடா...”

“அவளை நான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்”

“டேய் இப்ப மட்டும் என்ன? மித்ரா உன் மனைவி தான்”

“நீ ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணத வச்சி சொல்ற. அது உனக்கும் எனக்கும் நம் வீட்டில் இருக்கிறவங்களுக்கு மட்டும் தான் தெரியும். ஆனா அது இன்னும் அவளுக்குத் தெரியாது இல்ல? அதனால் தானோ என்னமோ அவ என்னையும் என் காதலையும் புரிஞ்சிக்க மாட்றா. சட்டப்பூர்வமா அவள் என் மனைவியா இருக்கறத விட உரிமைபூர்வமா உணர்வுபூர்வமா என் பக்கத்துல என் மனைவியா இருந்தா தான் என்னால் என் காதலை அவளுக்கு உணர்த்த முடியும்”

“சரிதான்டா நீ சொல்றது. அதுக்காக ஏன் இவ்வளவு அவசரப்படணும்? கொஞ்ச நாள் கழிச்சி பண்ணிக்கோ”

“இல்லடா பவித்ராவோட விஷயத்துக்காகத் தான் நான் பொறுமையா இருந்தேன். லீகலா அந்தப் பிரச்சனைகள் எல்லாம் தீர்ந்து நான் ஓர் தனி மனிதனா நிக்கணும்னு நினைச்சேன். அதன் படியே இன்று நின்னுட்டேன். ஸோ இதற்கு மேல நான் வெய்ட் பண்ண விரும்பல” என்று பிடிவாதம்பிடிக்க.

“சரி அப்ப உன் இஷ்டம். ஆனா மித்ராகிட்ட உன் காதல சொல்லி தான கல்யாணம் பண்ணிக்கப் போற?”

இல்ல என்று அவன் தலை அசைக்க.

“வாட்... இல்லையா? அப்போ எப்படி” என்று அதிர்ச்சியோடு கேட்டவனை.

“முன்னே எப்படி அவளைக் கட்டாயப் படுத்தி நடிக்க வச்சனோ அதே மாதிரி தான் இப்பவும் செய்யப் போறேன்” என்றான் திடமாக.

“வேணாம்டா... அன்பு பாசம் எதுவும் இல்லாமல் கட்டாயத்தின் பேரில் நடக்கற கல்யாணமும் அந்த வாழ்க்கையும் நல்லா இருக்குமா? கொஞ்சம் யோசிச்சிப் பாரு”

“நீ சொல்றது சரி தான்டா. ஆனா அதில் இரண்டு பேருக்குமே அன்பு பாசம் இல்லனா தான் சரிவராது. இங்க அவளுக்கு இல்லனாலும் எனக்கு அன்பு பாசம் மட்டும் இல்ல அளவு கடந்த காதலும் அவ மேல இருக்குதே. அது நிச்சயம் அவளை மாற்றும்” என்றான் இரும்பென இறுகிப் போய் இருந்த குரலில்.

“அதற்கு நீ நிறையவே கஷ்டப்பட வேண்டியிருக்கும் தேவ். மித்ராவுடைய பழைய வாழ்க்கையைத் தெரிஞ்சி இருந்துமா இப்படிப் பேசற”

“அது தெரிஞ்சதனால் தான் இனி அவளத் தனியே விட முடியாது என்ற உறுதியினால் தான் நான் இந்த முடிவையே எடுத்தேன்” என்றான் விஷ்வாவின் கண்களைப் பார்த்து.

தன் நண்பனிடமிருந்த காதலையும் உறுதியையும் பார்த்த விஷ்வா தாவி அவனை அணைத்துக் கொண்டு “யூ ஆர் கிரேட் டா மாப்பிள! இந்த அன்பும் பாசமும் காதலும் நிச்சயம் மித்ராவை ஒரு நாள் மாற்றும். நீங்க ரெண்டு பேரும் நல்ல மாதிரியா ஆயுள் முழுக்க சந்தோஷமா காதலோட வாழத்தான் போறிங்க”என்று கண் கலங்கியவன் பின் விலகி அமர்ந்து “சொல்லு, இதுல என் பங்கு ஏதாவது இருக்காடா?” என்று கேட்க.

“இதுவரைக்கும் நான் எதையும் யோசிக்கலடா. ஆனா அப்படி ஏதாவது வந்தா நான் உனக்கு சொல்லணும்னு அவசியம் இல்ல நீயாவே தயங்காம யோசிக்காம எதுவா இருந்தாலும் செய்டா” என்று தன் ஆருயிர் நண்பனுக்கு அனுமதி கொடுத்தான். பின் தன் காரிலேயே கொண்டு வந்து தேவ்வை அவன் வீட்டில் விட்டவன் தன் அவசர வேலை முன்னிட்டு சென்று விட்டான்.

எந்த முன் அறிவிப்பும் இல்லாமல் தேவ்வை அங்குப் பார்த்ததில் வீட்டில் உள்ள அனைவருக்கும் ஏக சந்தோஷம். அனைவரிடமும் பேசியவன் மித்ராவைத் தேடி அவள் அறைக்குப் போனவன் கதவைத் தட்டி விட்டு எந்த சத்தமும் எழுப்பாமல் உள்ளே சென்று நிற்க.

துணி வைக்கும் கஃபோர்டில் வேலையாக இருந்த மித்ரா “யாரோ கதவைத் தட்டினாங்க. ஆனா சத்தமேயில்லையே...” என்று நினைத்துக் கஃபோர்டின் கதவைச் சற்று நகர்த்திப் பார்க்க.

ஒரு கையைப் பேண்ட் பாக்கெட்டில் விட்டபடி ஒரு பக்கமாகத் தலை சாய்த்தபடி கதவில் சாய்ந்து நின்றிருந்தான் தேவ். திடீர் என்று அவனைப் பார்த்ததில் ஒண்ணும் புரியாமல் ஆச்சரியத்தில் அவனையே பார்த்துக் கொண்டிருக்க. ஏழு நாட்கள் பிரிவின் காரணமாக இவனும் இமைக்கவும் மறந்து அவளையே பார்த்துக் கொண்டிருக்க.

அப்படி அந்தப் பார்வையிலிருந்து முதலில் தெளிந்தவள் மித்ரா தான். “வாவ்... ஹலோ தேவ்! வாங்க வாங்க. என்ன ஸார் அமெரிக்காவில் இருக்கறவங்க உங்களை விட்டுட்டாங்களா? நான் கூட நினைச்சேன், நான் இந்தியாவுக்கே வரலை அமெரிக்காவிலேயே செட்டில் ஆகப் போறேனு சொல்வீங்கனு. பரவாயில்ல வந்துட்டிங்க, அதுவும் திடீர்னு. வாட் ஏ சர்ப்ரைஸ்” என்று பேசியவளின் கண்ணிலும் முகத்திலும் நட்பைத் தவிர ஒரு துளி கூட காதலோ தவிப்போ இல்லை. அதைப் பார்த்த தேவ்வின் மனம் வாடியது.

அதை மறைத்தவன் “ஹா.. ஹா.. இப்பதான் வந்தேன். நீ எப்படி இருக்க மித்ரா?” என்று அவளின் நலம் விசாரிக்க.

“ஓ… பரவாயில்லையே?! என்னையும் என் பெயரும் கூட உங்களுக்கு ஞாபகம் இருக்கே? எங்க என்ன மறந்திட்டீங்களோனு நினைச்சேன்! இப்பவும் எனக்கு சந்தேகம் தான்! இருங்க இருங்க என்னையே நான் கிள்ளிப் பார்த்துக்கிறேன்” என்று சொன்னவள் சொன்னது போல் தன்னை கிள்ளியும் பார்த்துக் கொண்டாள்.

அவளை அப்படி ஒரு சந்தோஷமான மனநிலையில் பார்த்த தேவ் “இது தான்டி நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறது. இந்த சிரிப்பும் சந்தோஷமும் என்னைக்கும் உனக்குக் கொடுக்கணும்னு தான் நான் ஆசைப்படறேன்” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டவன்.

அவள் செய்கையில் வாய் விட்டுச் சிரித்தவன் “இல்ல மித்ரா கொஞ்சம் வேலை இருந்தது. அதான் உன் கிட்ட பேசவோ உன் மெசேஜ்க்கு ரிப்ளை பண்ணவோ முடியல. இப்பவும் வேலை இருக்கு. ஈவினிங் சீக்கிரம் வரப் பார்க்கறேன். உன் கிட்ட பேசணும்” என்றான் இலகுவாக. அதெப்படி என் கிட்ட பேசும் போது மட்டும் இந்த ஏழு நாளும் நேரம் இல்லாமல் போகும் என்று கேட்க நினைத்தவள் பிறகு வேண்டாம் என்று தவிர்த்தாள்.

அவனும் என்ன விஷயம் என்று சொல்லவில்லை இவளும் என்ன விஷயம் என்று கேட்கவில்லை. “சரி” என்று மட்டும் கூறினாள் மித்ரா.

எப்படி இருந்தாலும் அவளிடம் சொல்லித் தானே ஆக வேண்டும் என்ற முடிவுடன் அன்று மாலை மித்ராவின் அறைக்கு வர இவனைப் பார்த்ததும் “வாங்க” என்று ஒரு சினேக பாவத்துடன் வரவேற்றாள்.

அவள் எதிரில் ஸோஃபாவில் அமர்ந்தவன் மௌனமாக இருக்க அதைப் பார்த்தவளோ “ஒன்றும் இல்லாத விஷயத்துக்கு இவன் ஏன் இவ்வளவு தயங்குகிறான்?” என்று நினைத்து “ஏதோ பேசணும்னு சொன்னீங்க தேவ்! எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லுங்க” என்று இவளே ஆரம்பிக்க.

அப்போதும் சிறிது நேரம் அமைதியாக இருந்தவன் ஓர் நீண்ட மூச்சை உள்ளிழுத்து விட்டுப் பின் பேச ஆரம்பித்தான். “வேறொண்ணுமில்ல என் கேஸ் சம்பந்தப்பட்ட விஷயமா தான். நீ இப்போ என் மனைவியா நடிக்க வந்திருக்க இல்லையா?” என்று அவளிடமே கேள்வி கேட்டு நேரடியாகவே விஷயத்துக்கு வந்தான்.

“ஆமாம்” என்றாள் ஒற்றை வார்த்தையாக.

“இப்போ அந்த கேஸில் ஓர் சிக்கல் மித்ரா!”

“என்ன சிக்கல்?” குழப்பமாகக் கேட்க.

“அது என்னனா இந்த கேஸ் ஃபைல் பண்ணி இருக்கற ஆப்போசிட் பார்ட்டிக்கு நீ என் மனைவி இல்லனும் நான் உன்ன அப்படி நடிக்க வைக்கறனும் தெரிஞ்சிடுச்சு” என்றான் நிதானமாக.

“ஐய்யோ.. இப்ப என்ன செய்யறது?” என்றாள் கலவரமாக.

“இதுக்கு என்ன செய்யறதுனு நம்ம வக்கீல் கிட்ட கேட்டேன். அதுக்கு அவர் ஒரு வழி சொன்னார். ஆனா அதுக்கு நீ என்ன சொல்வனு தான்…” என்று தேவ் இழுக்க.

“அது என்ன வழினு முதல்ல சொல்லுங்க அப்பறம் பேசி முடிவு பண்ணலாம்” என்றாள் மித்ரா அவசரமாக.

“………” தேவ் அமைதியாக இருக்க…

“என்ன தேவ் ரிஜிஸ்டர் மேரேஜ்கான பேப்பர்ஸ் ஏதாவது கேட்கறாங்களா? சரி கொடுங்க நான் கையெழுத்துப் போட்டுத் தரேன். எப்படி இருந்தாலும் கேஸ் முடிக்க சும்மா தான செய்யப் போறோம்? அதனால் என்ன டோன்ட் வொர்ரி தேவ் பார்த்துக்கலாம்” என்றாள் ஓர் தோழமையுடன்.

“அதையும் நான் சொல்லிட்டேன் மித்ரா. அப்பவும் அது வெறும் பேப்பர் தான். அதனால் இதையும் நம்ப முடியாதுனு எதிர் பக்கத்தில் இருந்து எதிர் வாதம் வைப்பாங்கனு வக்கீல் சொல்றார். அதனால் அதுவும் முடியாது” என்றான் கவலையாக.

“அப்ப இதற்கு வேற என்ன தான் செய்யணுமா?” என்று கேட்கும் போதே அவள் மனதிற்குள் அபாய மணியடித்தது.

“…………” மீண்டும் அவன் அமைதி காக்க.

“என்னனு தான் சொல்லுங்களேன்” என்றாள் மித்ரா இதுவரை இருந்த இலகுத் தன்மை மாறி குரலில் ஓர் கூர்மையுடன். அந்தக் குரலில் இவளுக்கு ஏதோ புரிந்து விட்டது என்றறிந்த தேவ், “அதனால் நாம ரெண்டு பேரும் உண்மையான கணவன் மனைவி தான் என்றதுக்கு சாட்சியா நம்ம கல்யாண வீடியோவையும் போட்டோவையும் கோர்ட்டுல சப்மிட் பண்ணனுமா” என்று கூறி அவள் முகம் பார்க்க,

‘சரி அதனால் நீ இப்போ என்ன சொல்ல வர்ற அதையும் சொல்லி முடி’ என்பது போல் அவள் கண்களாலே கேட்க, அந்தக் கண்களைத் தளராமல் பார்த்தவன் “அதனால் நம்ம ரெண்டு பேருக்கும் முறைப்படி கல்யாணம் முடித்து அந்த வீடியோவையும் போட்டோவையும் வச்சிட்டா போதும். ஆனா சும்மா கோர்ட்டுக்காகத் தான் இந்த கல்யாணம்” என்று அமைதியாக ஆனா உறுதியாக தேவ் சொல்ல.

“தெரியுமே உன்னைப் பற்றி... நீ தான் ஓர் ஃபிராடாச்சே? நீ எல்லாம் மனுஷப் பிறவியே கிடையாது. அரக்கனாச்சே! உன்னைப் பற்றி எல்லாம் தெரிந்திருந்தும் உன்னை நம்பினது என் தப்புதான். பழைய பகையையும் கோபத்தையும் எல்லாம் மறந்து கொஞ்ச நாளா நீ நல்லவன் மாதிரி நடிக்கும் போதே எனக்கு சந்தேகம் தான். நீ ஒரு சுயநலவாதியாச்சே எப்படி மாறியிருப்பேனு...

உனக்கு ஆதாயம் இல்லாமல் எதையும் செய்து இப்படி எல்லாம் நடந்துக்க மாட்டியேனு அப்பவே நினைச்சேன். அப்ப நான் நினைச்சது சரியா போச்சு. இந்த கேஸ் சம்பந்தப்பட்ட டீடெய்ல்ஸ் எல்லாம் உனக்கு முன்பே தெரிஞ்சிருக்கு. ஸோ உனக்குச் சாதகமா முடியணும் என்றதுக்காகத் தான் இத்தன நாள் நல்லவன் மாதிரி என் கிட்ட நடிச்சிருக்க.

அதிலும் நான் ஜூரம் வந்து ஒரு வாரம் படுத்தக்கிடந்தப்ப நடிச்சியே... அப்பப்பா என்னா நடிப்புடா சாமி. யார் யாருக்கோ ஆஸ்கர் அவார்டு கொடுக்கறாங்க. ஆனா அது தப்பு அந்த அவார்ட் உனக்கில்ல தரணும். நடிப்பு நடிப்பு எல்லாம் நடிப்பு!”

‘இவன் என்னைப் பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கான்? இவன் ஆட்டி வைக்கற பொம்மையா நான்? என்னைப் பற்றியும் என் வாழ்க்கையைப் பற்றியும் யோசிக்கவே மாட்டானா...’ என்ற கோபத்தில் இத்தனை நாள் இருந்த சகஜநிலை மாறி மித்ராவும் வார்த்தை மழை பொழிய.

அதுவரை அவள் பேச்சுகளைக் கேட்டுக் கொண்டு வந்த தேவ் அவள் நடிப்பு நடிப்பு என்று அவன் காதலைச் சாடவும் “சும்மா நிறுத்துடி... என் அன்பு பாசத்தைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? நான் உன்கிட்ட பழகினது காட்டின அன்பு பாசம் எல்லாம் உண்மை. அதில் எதுவும் நடிப்பு இல்ல நான் பழைய தேவ்வும் இல்ல. நான் மாறிட்டேன் என்ன நம்பு மித்ரா!” என்று கோபத்தில் ஆரம்பித்தவன் இறுதியில் தவிப்பாக முடித்தான் தேவ்.

“முடியாது முடியாது முடியவே முடியாது... இந்த ஜென்மத்துல எந்த நேரத்திலும் எந்தக் காலகட்டத்திலும் நான் உன்ன நம்பவே மாட்டேன்” என்றாள் ஆணித்தரமாக. அந்தக் குரலாலும் அவள் வார்தையாலும் தன் நெஞ்சை அவள் கத்தியால் குத்தித் திருகுவது போல் உணர்ந்தவன் தன் கண்களை இறுக்க மூடி அந்த வலியையும் வேதனையையும் மறைத்தவன்.

“சரி என்னை நம்ப வேண்டாம். இந்த விஷயத்துக்கு வா. இப்போ நாம இருக்கிற மாதிரியே தான் பொய்யா மறுபடியும் ஒரு கல்யாணம் பண்ணி இப்படியே தான் இருக்கப் போறோம். பிறகு இதுல உனக்கு என்ன பிரச்சனை?” என்று கேட்க.

“எனக்குக் கல்யாணத்துல இஷ்டம் இல்ல. பொய்யாகக் கூட நான் கல்யாணமே பண்ணிக்கப் போகறது இல்ல” என்று சொல்லிக் கொண்டு வந்தவள் அவன் இடையில் ஏதோ பேச வரவும் கை உயரத்தி அவனைத் தடுத்து நிறுத்தி “அது ஏன் எதுக்குனு உங்ககிட்ட எல்லாம் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்ல. அது என் சொந்த விஷயம். அது உங்களுக்குத் தேவையில்லாததும் கூட” என்று கூறியவள் இது தான் என் முடிவு என்பது போல் உறுதியாக நிற்க.

“நீ தான் என் மனைவினு ஊர் அறிய சொல்லி இப்போ கேஸ் ஃபைல் பண்ணியாச்சி மித்ரா. நீ இப்போ பின் வாங்கினா எனக்கு தான் அசிங்கம். என் கேஸ்சுக்கும் பல பிரச்சனைகள் வரும். சரி உனக்கு ஊர் அறிய கல்யாணம் பண்ணித் தாலி கட்டினா தான பிரச்சனை? ஊர் கூட்டியோ கோவில்லையோ வேண்டாம். என் தாத்தாவ நான் தெய்வமா மதிக்கறேன். அதனால என் வீட்டில அவர் படத்துக்கு முன்னாடி பண்ணிப்போம்” என்று இப்படி ஒரு இலகுவான வழியைக் கூற.

‘இவன் என்ன லூசா...’ என்று நினைத்தவள் “ஊர் அறியக் கட்டலைனாலும் தாலி தாலி தானே? அதுவும் கல்யாணம் கல்யாணம் தானே?” என்றவள் மேற்கொண்டு ஏதோ சொல்ல வந்தவள் முடியாமல் குரல் உடையத் தன் உதடுகள் துடிக்கப் பற்களால் தன் கீழ் உதட்டைக் கடித்துப் பேச்சை நிறுத்தியவள் தன்னையே சமாளிக்க முடியாமல் அவள் இரண்டு கைகளாலும் முகத்தை மூடிக்கொண்டு அழுது கரைய.

‘இப்ப நாம என்ன சொல்லிட்டோம்னு இவ இப்படி அழறா?’ என்று யோசித்தவன் தான் எதுவும் சொல்லவில்லை அவள் தான் ஏதோ சொன்னாள் என்று நினைத்தவன் அவள் சொன்னதையெல்லாம் மனதில் கொண்டு வந்து ஆராய்ந்தவன் அடுத்த வினாடி தன் உடல் விறைக்க கண்கள் ரத்தமென சிவக்க ‘இதுக்குத் தான்டி இப்படி நீ உனக்குள்ளேயே கறைந்து புழுங்கிச் சாகக் கூடாதுனு தான்டி உன்ன என் கண்ணுக்குள்ள வச்சிப் பார்த்துக்கணும்னு ஆசைப் படறேன்.

அது ஏன்டி உனக்குப் புரியல?’ என்று தன்னுள் சொல்லிக் கொண்டவன் தன் எதிரே அவள் விடும் கண்ணீரைப் பார்க்கவோ இல்லை தடுக்கவோ வழி தெரியாமல் அவளை அணைத்து ஆறுதல் படுத்தத் துடிக்கும் தன் மனதையும் கையையுமே அடக்கவும் வழி தெரியாமல் அந்த அறையில் இருந்த அவன் இடுப்பளவு உயரம் கொண்ட செராமிக்கால் ஆன பூ ஜாடியைத் தூக்கித் தரையில் போட்டு உடைத்தான் தேவ்.

அழுகையில் கரைந்து கொண்டிருந்த மித்ரா அவன் அப்படி உடைக்கவும் அழுகையை நிறுத்திவிட்டு அவனைப் பார்க்க அவனோ ஜன்னலின் புறம் தன் முகத்தைத் திருப்பி அவளுக்கு முதுகு காட்டி நின்றான்.

“இப்ப இறுதியா என்ன தான் சொல்ற?” என்று திரும்பி அவள் முகம் பார்க்காமலே கேட்க.

“நீங்க எத்தனை முறை கேட்டாலும் என் இறுதியான உறுதியான முடிவு இது தான். அதில் எந்த மாற்றமும் இல்லை” என்றாள் மித்ரா அந்த உறுதியைத் தன் குரலில் காட்டி.

“இப்படி நீ பின் வாங்குவதால் உனக்குப் பல பிரச்சனைகள் வரும் மித்ரா. நீ கையெழுத்துப் போட்டுக் கொடுத்த பேப்பர் இன்னும் என்கிட்ட தான் இருக்கு. அதை வைத்து நான் ஒரு கம்ப்ளைண்ட் கொடுத்தால் போதும் நீ ஜெயிலுக்குப் போக வேண்டி இருக்கும். ஸோ ஒண்ணுக்கு இரண்டு தடவையா நல்லா யோசிச்சிக்கோ” என்று திரும்பி அவள் முகம் பார்த்துக் கூற.

“பரவாயில்லை நான் ஜெயிலுக்கே போனாலும் பரவாயில்லை. ஆனா நான் இந்தக் கல்யாணத்துக்கு மட்டும் சம்மதிக்க மாட்டேன்” என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாகத் தன் உறுதியிலிருந்து பின் வாங்காமல் பதில் தந்தாள் மித்ரா.

மனதால் சோர்ந்து போன தேவ் “உன் தாத்தா பிரச்சனை எல்லாம் தீர்ந்துடுச்சின்ற தைரியத்துல இப்படி எல்லாம் பேசுறியா நீ?” என்று மிரட்டும் தொனியில் கேட்க.

“திரும்ப என் தாத்தாவுக்கு ஏதாவது புதுசா பிரச்சனையே வந்தாலும் சரி அப்பவும் நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன்” என்று தன் பிடிவாதத்திலேயே நின்றவள் பின் “ஸாரி மிஸ்டர் தேவ்! நீங்க உங்க பணபலத்தையும் ஆள் பலத்தையும் வைத்து உங்களுக்கு ஏத்த மாதிரி வேறு ஒரு பெண்ண உங்க மனைவியா நடிக்க வைங்க.

இப்ப நான் இந்த நிமிஷம் ஸாரி இந்த நொடியிலிருந்து விலகிக்கிறேன். உங்களோட கேஸ் நல்ல மாதிரியா முடித்துக் கொடுத்துட்டுத் தான் போகணும்னு நினைச்சேன். ஆனா இப்ப அதை என்னால் செய்ய முடியல. அதனால நான் இந்த வீட்டை விட்டும் போகலாம்னு முடிவு பண்ணிட்டேன். அதுவும் இந்த நிமிடமே” என்று கூறியவள் அதே வேகத்துடன் தான் கொண்டு வந்த ஆடைகளை மட்டும் அவன் கண்ணெதிரிலேயே ஒரு பையில் எடுத்து வைத்தவள்.

அவன் கொடுத்த நகைகள் ஆடைகள் ஏன் போன் உள்பட அனைத்தும் அங்கேயே வைத்தவள்.

தாத்தாவை அழைத்துக் கொண்டு வெளியே வந்தவள் கார் கதவைத் திறந்த டிரைவரிடம் “வேண்டாம்” என்று மறுத்துவிட்டு இரவு எட்டு மணி வாக்கில் தன் தாத்தாவுடன் தனியே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தாள் மித்ரா.
 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 17
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN