பாகம்– 25
உன் ஓர விழி பார்வைக்காய்
ஏங்கித் தவித்துக் கொண்டிருந்தேனடி..
நெற்றியில் ஓர் முத்தத்துடன் கூடிய ‘லவ் யூ அத்தான்’ என்ற வார்த்தை, இன்று தோட்டத்தில் எந்த முத்தத்தைக் கேட்டு அவளிடம் வம்பு செய்தானோ அந்த முத்தம்! தன் காதலால் அவள் மனதை வென்று அவள் வாயாலே காதலை என்னிடம் சொல்ல வைப்பேன் என்று இறுமாப்புடன் இருந்தானோ அந்த வார்த்தை! இதை எல்லாம்விட முகத்தில் வெட்கப் புன்னகையோடு கண்ணில் காதலோடு அவள் தன்னைப் பார்த்துச் சொல்வாள் என்று நினைத்தான்! ஆனால் இன்று நடந்ததோ வேறு. உயிருக்குப் போராடும் நிலையில் முகத்தில் வலியோடு கண்ணில் ‘இனி திரும்ப நான் உங்களைப் பார்க்கவே மாட்டனா?’ என்ற நிராசையில் அவள் அப்படி ஓர் முத்தத்தையும் அந்த வார்த்தையும் சொல்லுவாள் என்று அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை!
மனதில் பெரும் வலி அலை போல் எழும்ப, அதை “நோ” என்ற இறைச்சலோடு கத்தி அந்தக் கட்டிடமே நடுங்கும் படி வெளியிட்டவன், தன் இயலாமையைத் திரட்டி அங்கிருந்த கண்ணாடிக் கதவில் கையை மடக்கி ஒரு குத்துவிட, அந்தக் கண்ணாடியோ அவன் மனதைப்போல நொறுங்கியது. தேவ் தன் கட்டுபாட்டை இழந்து இப்படி நடந்து கொள்ளவும் அவனிடம் நெருங்கினான் கௌதம்.“அண்ணா, என்ன இது? ஏன் இப்படி நடந்துக்கிறீங்க? அண்ணிக்கு ஒண்ணும் ஆகாது” என்று அவன் கையைப்பிடித்து இழுத்து சமாதானம் செய்தான்.
ஆனால் தேவ்வோ நிதானத்தில் இல்லை.மற்றொரு கதவையும் உடைக்கப் போக, அதற்குள் அங்கு வேலை செய்பவர்களும் அந்த ஊர்ப் பெரியவர்களும் அவனதுஉறவினர்களும் அவனைத் தடுத்து நிறுத்த, அவர்களிடம் இருந்து திமிறியவன் அவர்களை எல்லாம் ஒதுக்கித் தள்ளி விட்டு வெறி கொண்ட வேங்கை என வாசல் புறம் செல்ல, அவனுக்கு முன்னே சென்று அவனை வழி மறித்து அவனை அணைத்த கௌதம்,
“அண்ணா இப்போ அவசரத்தில் எந்த முடிவும் எடுக்காத. அண்ணி கண் முழிச்சிப் பார்க்கும் போது நீ அவங்க பக்கத்துல இருக்கணும்” என்று சொன்னவன் அவனை மேல் கொண்டு போக விடாமல் அணைத்த படியயே அவனைப் பின்புறமாக தள்ளிச் செல்ல, அதற்குள் மற்றவர்களும் மறுபடியும் வந்து பலமாகப் பிடித்துக் கொள்ள தேவ்வை ஒரு கையால் பிடித்துக் கொண்டே, அங்கிருந்த டாக்டரிடம் மயக்க மருந்து ஊசியைப் போடச் சொன்னான் கௌதம். அதன்படியே அவரும் செய்தார்.அப்போதும் திமிறிய அவனை அதே மருத்துவமனையில் இன்னொரு அறையில் படுக்க வைக்க, அதன் பிறகு அன்றைய சூழ்நிலையைத் தன் கையில் எடுத்துக் கொண்டான் கௌதம்.
இப்போது மித்ராவோடு சேர்த்தது, தேவ் அவன் மக்களுக்காக அந்த ஊரிலேயே கட்டிக் கொடுத்த மருத்துவமனை தான். அங்கு சகலவித வசதிகளும் இருக்கிறது என்று கௌதமுக்குத் தெரியும். இருந்தாலும் அவனால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. உடனே தன் கைப்பேசியில் விஷ்வாவுக்கு அழைத்தவன், இப்படியொரு சம்பவம் நடந்து மித்ராவை இங்கு சேர்த்து இருப்பதாகச் சொல்லி அவனை உடனே வரச் சொல்ல, இங்கு என்ன நிலவரம் என்று தெரியவில்லை என்றாலும் அந்த மருத்துவமனையில் நல்ல தரமான வசதிகள் இருப்பதாகவும், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அனைவரும் கைதேர்ந்தவர்கள் என்பதால் எந்த கவலையும் பட வேண்டாம்என்றும் தைரியம் கூறியவன், தான் உடனே கிளம்பி வருவதாகவும்கூறினான்.
மேலும் டாக்டர் வசீகரன் என்று ஓர் பெரிய சர்ஜென் அமெரிக்காவில் இருந்து அவர் தாய் தந்தையரைப் பார்க்க அவருடைய கிராமத்திற்கு வந்துள்ளதாககேள்விப்பட்டதாகவும் அவருடைய ஊர் தேவ்வுடைய ஊருக்கு சற்று தூரம் தான் என்றாலும் பாலம் வழியாக வந்தால் மிகவும் அருகில்தான் என்று சொன்னவன் அவரிடம் பேசி அவரையும் துணைக்கு அனுப்புவதாகக்கூறி அதன்படியே பேசி அவரை அனுப்பியும் வைத்தான் தேவ். அங்கு மருத்துவமனை கட்டும்போதும் கட்டிமுடித்த பின்னரும் ஒரு மருத்துவராகச் சென்று ஆய்வு செய்து அங்கு என்னென்ன தேவை என்று சொல்லி வாங்கிப் போட்டு அங்கு வேலை செய்பவர்களை நியமித்தது எல்லாம் விஷ்வா தான். விஷ்வாவிடம் பேசிய பிறகு சற்று தெளிவடைந்தான் கௌதம். பிறகு மீராவைக் கைப்பேசியில் அழைத்து வீட்டில் பக்குவமாகச் சொல்லி அனைவரையும் வரச் சொன்னான்.
மித்ராவுக்கு முதலுதவி செய்து கொண்டிருந்த போது வீட்டிலிருந்து அனைவரும் அழுதபடியே ஓடிவந்தனர். அவர்களை எல்லாம் சமாதானப் படுத்தி உட்கார வைத்தான் கௌதம். இதற்கிடையில் என்ன தான் மயக்க மருந்து ஊசி போட்டிருந்தாலும் அதையும் மீறி தன் கட்டுபாட்டை இழந்து வெளியே செல்ல நினைத்து நிதானம் இழந்து விழுந்து பிதற்றிய தேவ்வைக் கட்டுப்படுத்திப் படுக்க வைக்க என்று அனைத்தையும் செய்யச் சற்றுத் திணறித்தான் போனான் கௌதம்.
விஷ்வா சொன்ன டாக்டர் வந்துவிட, அங்கிருந்த அனைத்து வசதிகளையும் பார்த்தவர் உடனே ஆப்பரேஷனுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்ல மூன்று பேர் கொண்ட டாக்டர் குழுவால் நான்கு மணிநேர போராட்டத்திற்குப் பிறகு நல்லபடியாகவே முடிந்தது ஆப்பரேஷன். மித்ராவையும் ஐ.சி.யூவுக்கு மாற்றிவிட, அனைவரும் என்னாகுமோ ஏதாகுமோ என்று இருந்த பயம் விலகி நிம்மதி அடைந்தனர். விஷ்வாவுக்குத் தகவல் சொன்னான் கௌதம். ஏற்கனவே ஆப்பரேஷன் நல்ல மாதிரி முடியும் என்று தெரிந்திருந்தாலும் இப்போது அங்கு நல்ல மாதிரியாக முடிந்து விட்டது என்பதைக் காதால் கேட்ட பிறகே நிம்மதி கலந்த சந்தோஷம் விஷ்வாவுக்கு!.
ஆனால் இன்னமும் தேவ் மட்டும் அவன் அறையில் பிதற்றியபடியே படுக்கையில் புரண்டு கொண்டிருக்க. அவனை நெருங்கிய அப்பத்தா, “என்ற ராசா, உன்ற ஊட்டுக்காரிக்கு ஒண்ணும் இல்லய்யா. ஆப்பரேஷன் நல்லபடியா முடிஞ்சிருச்சு கண்ணு. நீ செத்த அமைதியா தூங்கு யா. உன்ற அப்பத்தா சொல்றேன்ல?” என்று கூறி அவன் கையயைத் தன் கையில் வைத்துத் தடவி ஆறுதல் படுத்த, அவர் சொன்னதைக் கேட்டதற்கு அவன் பதில் கொடுக்கவில்லை என்றாலும் அவனுடைய பிதற்றல் அடங்கி தூங்கிப் போனான் தேவ். அதன் பிறகு வந்தவர்கள் அனைவரையும் வீட்டிற்கு அனுப்பி வைத்த கௌதம், மித்ராவுக்கும் தேவ்வுக்கும் துணையாக ஆஸ்பிட்டலிலேயே தேவ் அறையிலேயே தங்கியவன் அசதியில் தேவ் அருகிலேயே உறங்கிப் போனான்.
திடீர் என்று நடுசாமத்தில் முழிப்பு கலைந்த தேவ், தான் எங்கு இருக்கிறோம் என்று அறிந்தவன் அவசரமாகக் கட்டிலை விட்டு இறங்க. தேவ் எழுந்த சத்தத்தில் தூக்கம் கலைந்து எழுந்த கௌதம், “அண்ணா? என்னாச்சு? உடம்பு ஏதாவது பண்ணுதா?”என்றுகேட்க, அவன் கேள்விக்கு “ஹாசினி!” என்றான் தேவ் ஒற்றைச் சொல்லாக.“அண்ணி நல்லா இருக்காங்க– னா, ஐ.சி.யூ - ல இருக்காங்க. முதல்ல நீங்க வேற டிரஸ் மாத்துங்க” என்று கூறி தான் வீட்டில் இருந்து எடுத்து வரச் சொன்ன டிரஸ்ஸைக் கொடுக்க,“ஏன், இந்த டிரஸ்ஸுக்கு என்ன?” என்று குனிந்து தன்னைப் பார்த்ததில், அதில் முழுக்க மித்ராவின் ரத்தக்கரை இருந்தது.
‘நெஞ்சில் வலியோடு எப்படி அவ்வளவு வலிகளைத் தாங்கினாள் என் கண்மணி?!’ என்று நினைத்தவன் கண்களை மூடித் திறந்து ஓர் பெருமூச்சுடன் குளியலறை சென்று தன்னைச் சுத்தம் செய்துவேறு உடை அணிந்து அவளைக் காணச் செல்ல, அங்கு ஓர் குழந்தையைப் போல் தூங்கிக் கொண்டிருந்தாள் மித்ரா. அவளை நெருங்கி,“என் கண்ணம்மா” முணுமுணுத்தபடி அவள் நெற்றியில் இதழ் பதித்தவன் வெளியே வந்து “நீ வீட்டுக்கு போ கௌதம். நான் இங்கஇருக்கேன்” என்று கௌதமிடம் கூற,“இல்லண்ணா நான் இங்கேயே இருக்கேன். நீங்க வேணா வீட்டுக்குப் போய்ட்டு காலையில் வாங்க” என்று வீட்டில் இருப்பவர்கள் கவலைப்படுவார்கள் என்ற எண்ணத்தில் அவன் கூற “இல்லடா, அவ கண் முழிச்சி என்னப்பார்த்துப் பேசற வரை நான் இங்கிருந்து வரல.” என்றான் தேவ் உறுதியாக. பின் அறைக்கு வந்து படுத்ததேவ் சற்று நேரத்திலே தூங்கியும் விட்டான்.
‘காலையில் வந்து விடுவேன்’ என்று விஷ்வா சொல்லி இருக்க, அவன் வரவை நினைத்தே படுத்து இருந்த கௌதம் எழுந்து அவன் சொன்ன நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவனை அழைக்க முதல் ரிங்கிலேயே எடுத்த விஷ்வா,“ஆஸ்பிட்டல் வாசல்ல தான்டா இருக்கேன். இதோ உள்ள வரேன்” என்று சொல்ல தன் அறையை விட்டு வெளியே வந்த கௌதம் அவனை எதிர்கொண்டு அழைத்து ஐ.சி.யூ வுக்கு அழைத்துச்சென்று வெளியிலேயே காத்திருந்தான். மித்ராவின் ரிப்போர்ட் அடங்கிய ஃபைலைப் படித்தவிஷ்வா, அவள் கிரிட்டிகல் ஸ்டேஜ்ஜைத் தாண்டி விட்டாள் என்று அறிந்து பெருமூச்சைவிட, அப்போது தான் தன் கண்களை சிரமப்பட்டு திறந்த மித்ரா அவனைப் பார்த்ததும் தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை நீக்கினாள்.
“அவரு எங்க? அவருக்கு ஒண்ணும் இல்லதானே? அவர நான் பார்க்கணும் அண்ணா” என்று சற்று சிரமமாக மெல்லிய குரலில் கேட்க‘எங்கே அதன் பிறகு அவர்கள் தேவ்வை ஏதாவது செய்து இருப்பார்களோ?’ என்ற பயமும் தவிப்பும் அவளுக்கு. அவனைக் கண்ணால் பார்த்தால் தான் அந்த தவிப்பு அடங்கும் என்று அறிந்ததால் தான் அப்படி கேட்டாள் மித்ரா. முதல் முதலில் அவள் ‘அண்ணா’ என்று அழைப்பதை உணர்ந்தவன் “அவனுக்கு ஒன்றும் இல்லம்மா அவன் நல்லா தான் இருக்கான். இதோ வரச் சொல்றேன்” என்று குனிந்து அவளிடம் சொன்னவன் “அது வரைக்கும் இந்த மாஸ்க்கை போட்டு இரும்மா” என்று சொல்லி மாஸ்க்கை சரி செய்து வெளியே வந்து கௌதமிடம் சொல்லி தேவ்வை வரச் சொன்னான்.
ஓடிவந்த தேவ்விடம்,“ஷி இஸ் ஆல்ரைட். பயப்படும் மாதிரி எதுவும் இல்ல. இப்பநீ போய் பாரு, ரொம்ப உணர்ச்சி வசப்படாமப் பார்த்துக்கோ. சீக்கிரம் பேசிட்டு வா” என்று அவனுக்குத் தைரியம் கூறி அனுப்பி வைத்தான்விஷ்வா. தேவ் உள்ளே செல்ல, இவன் வருகைக்காக கதவையே பார்த்துக் கொண்டிருந்தவள், அவன் வந்ததும் அவன் உச்சி முதல் பாதம் வரை கண்களாலேயே ஆராய, அவள் பார்வையை உணர்ந்தவனோ அவசரமாக அவளை நெருங்கி “எனக்கு ஒண்ணும் இல்லடி நான் நல்லா தான் இருக்கேன்” என்றான் குரல் உடைய.அவள் தன் முகத்தில் இருந்த மாஸ்க்கை கழற்ற,“வேண்டாம் கண்ணமா” என்று கூறி தடுத்தான் தேவ்.‘வேண்டும்’ என்று கண்ணால் சொல்லி கழற்றியவள் “ரொம்ப பயந்துட்டீங்களா?” என்றாள் மெல்ல. அவன் ‘ஆமாம்’ என்று தலை அசைக்க,“அதான் பிழைச்சிட்டேனே” என்றாள் விரக்தியாக அதைவிட மெல்லிய குரலில்.
தேவ் இருந்த மனநிலையில் அவள் சொல்வதை சரியாக கேட்காததால் “சிரமப்படாமல் தூங்குடா” என்றான் சற்று அழுத்தி.பிறகு அவள்“தாத்தா?” என்றாள் ஒற்றை வார்த்தையாக. ‘இப்படி நடந்ததை அவர் எப்படித் தாங்கினாரோ?’ என்ற பயம் அவளுக்கு.“அவருக்கும் பயம் தான். ஆனா நீ சரியாகி வந்திடுவன்னு அவருக்கு தெரிஞ்சி தான் இருக்கு” என்றான் வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பார்க்காத குற்ற உணர்ச்சியில்“இன்னைக்குக் காலையில் கட்டிடத்த திறப்பிங்க தான?” என்று அவள் கேட்க,“நிச்சயம்டா! இப்போ வீட்டுக்குப் போய் அதற்கான வேலையைத்தான் பார்க்கப் போறேன்” என்றான் உறுதியான குரலில் அவள் கையைப் பிடித்து சற்று அழுத்தி.
“ம்ம்ம்…” என்று அவள் சோர்வடையவும் “நீ எதையும் யோசிக்காமல் ரெஸ்ட் எடு” என்று சொன்னவன் மறுபடியும் அவளுக்கு மாஸ்க்கை மாட்டி அறையை விட்டு வெளியே வந்தான் தேவ். அவளிடம் பேசியதும்மனது சற்று தெளிவடைய, விஷ்வாவிடம் வந்தவன் மேற்கொண்டு அவள் உடல் நலத்தைப் பற்றி விசாரிக்க, மித்ராவின் வலது காலில் மட்டும் சற்று பெரிய ஃபிராக்சர் என்றும் அது குணமாவதற்கு இரண்டு மாதங்களாகும் என்பதால் அதுவரை முழுக்கமுழுக்க பெட்ரெஸ்ட் தேவை என்றான். மேலும், கத்திக்குத்து தான் என்றாலும் அது நேரிடையாக வயிற்றில் இறங்காமல் சற்றே தள்ளி விலாவில் பட்டதால் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் மித்ரா தப்பிக்க முடிந்தது என்று விவரித்தான்.
காயம் கொஞ்சம் ஆழம் தான் என்றாலும் டாக்டர்களின் சிகிச்சையும் கௌதம் கொடுத்த ரத்தமும் சரியான நேரத்தில் வந்து உதவி செய்த டாக்டர் வசிகரனின் உதவியையும் சொன்னவன், இவர்கள் எல்லோராலும் மட்டும் இல்லாமல் கௌதம் எல்லா வகையிலும் கூடவே இருந்து சரியான நேரத்தில் செயல்பட்டதால் தான் மித்ராவைக் காப்பாற்ற முடிந்ததாக விஷ்வா கூறி முடித்தான்.
அனைத்தும் கேட்டு விலகி வந்தவன் கௌதமைக் கட்டி அணைத்து உணர்ச்சிப் பெருக்கில் “தாங்ஸ்டா” என்றான் குரல் கம்ம தேவ். “என்னண்ணா, தாங்க்ஸ் எல்லாம் சொல்லிக்கிட்டு? என் அண்ணாவுக்காவும் அண்ணிக்காவும் நான் செய்ய உரிமை இல்லையா?” என்று அவன் கேட்டு சற்று வருந்த,“உனக்கு இல்லனு யார் சொன்னது? உனக்கு மட்டும் தான்டா எல்லா உரிமையும் இருக்கு எங்களுக்குச் செய்ய” என்று நெகிழ்ச்சியில் கண் கலங்க, கௌதமும் சற்று கலங்கித்தான் போனான். பின் நர்ஸிடம் ஏதாவது என்றால் தகவல் சொல்லும் படி கூறி விட்டு அனைவரும் கிளம்பி வீட்டிற்குச் சென்றனர்.
வீட்டிற்கு வந்தவுடன் மித்ரா தாத்தாவிடமும் வீட்டில் இருந்த அனைவரிடமும் டாக்டர் என்ற முறையில் விஷ்வாவே மித்ராவின் உடல் நிலையைப் பற்றிக் கூறி இனி அவளுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை என்று தெரிவித்தான். இருப்பினும் தேவ் தனிப்பட்ட முறையில் மித்ராவின் தாத்தாவிடம் அவளின் நலம் பற்றி எடுத்துக் கூறி அவருக்கு ஆறுதல் கூறினான்.
பிறகு வீட்டில் இருந்தவர்கள் யாரையும் திறப்பு விழாவிற்கு வர வேண்டாம் என்று சொன்னவன் விஷ்வா மற்றும் கௌதமுடன் தான் மட்டும் சென்று திறப்பு விழாவை முடித்தான். அங்கிருந்து நேரே தன் மனைவியிடம் சென்றவன் கண் மூடியிருந்த அவளிடம் குனிந்து,“கட்டிடத் திறப்பு விழா நல்ல மாதிரி முடிஞ்சிடுச்சி கண்மணி. எனக்கும் யாருக்கும் ஒண்ணும் ஆகல. உன் புருஷன் ஜெயிச்சிட்டான்டி பொண்டாட்டி.” என்றான் குரல் கம்ம. அவன் வார்த்தைகளைத் தன் காதில் வாங்கியவள் தன் இமைகளைப் பிரித்து அவன் முகத்தை ஓர் வெற்றிப்பார்வை பார்க்க, அதற்குள் அவன் அவள் வலது கையை எடுத்து தன் கன்னத்தில் வைத்துக் கொண்டு “என்னடா?” என்று கேட்க “நான் சாகும் போது, நீங்க யார்கிட்டையும் தோற்கக் கூடாது என்ற எண்ணம் தான் என் மனசுல இருந்துச்சி”என்றாள் மனதில் எதையோ வைத்துக் கொண்டு பின் அவள் கண்களை மூடிக் கொள்ள, அவளை தொந்தரவு செய்யாமல் வெளியே வந்து விட்டான் தேவ்.
மறுநாள் மித்ராவை நார்மல் வார்டுக்கு மாற்றிவிட, அனைவரும் வந்து அவளிடம் நலம் விசாரித்தனர். அவள் தாத்தா மட்டும்,“ஏன் மித்ரா இப்படி யார்கிட்டையும் சொல்லாம தனியா அங்க எதுக்கு போன? பாரு எவ்வளவு பெரிய சிக்கல்ல மாட்டிக்கிட்டு இன்னைக்கி உயிர் பொழச்சி வந்து இருக்க உனக்கு என்னைக்கு தான் பொறுப்பு வருமோ? இன்னும் சின்னப் பிள்ளையாவே இருக்கிற” என்று சற்று கோபத்துடனும் கரிசனத்துடனும் கேட்க, அவள் முகம் சோர்ந்து விட்டது.
அதைப் பார்த்த தேவ்,“தாத்தா, அவளே உடம்பு முடியாம இப்போ தான் கொஞ்சம் சரியாகி எழுந்து உட்கார்ந்து இருக்கா. அதுக்குள்ள ஏன் அவள திட்டுறீங்க? அவ செய்தது தப்பு தான் சொன்னா புரிஞ்சிப்பா தாத்தா” என்று மனைவிக்காக அவன் பேச, அதற்கு மேல் அவர் பேசுவாரா என்ன? அவள் அங்கு எப்படி எதனால் போனால் என்பது மாட்டிக் கொண்ட அந்த நான்கு ரவுடிகளில் ஒருவன் அடித்து உதைத்ததில் அனைத்தும் சொல்லிவிட, அது தேவ்வுக்குத் தெரியும் என்பதால் தன் மனைவி தனக்காகத்தான் அங்கு போனாள் என்ற காரணத்தை அறிந்தவனால் அவளிடம் கோபப்பட முடியவில்லை. அதனால் அவளை அப்படியேவிட மனமில்லாமல் தனிமையில்,“எனக்கு எதாவது ஒண்ணுன்னா இப்படி தான் எதையும் யோசிக்காம உடனே கெளம்பிடுவியா நீ? என் மொபைலுக்குப் போன் பண்ணவோ இல்ல மத்தவங்க கிட்ட உண்மையானு கேட்டு செய்யவோ மாட்டியாடி நீ?” என்று குரல் தாழ்த்திக் கேட்டவன் “இப்படி எல்லாம் இனிமேல் செய்யாதடி கண்ணம்மா.” என்றான் மெல்லிய குரலில்.
அந்த குரலே அவளுக்கு வலிக்குமோ என்ற எண்ணத்தில் இருக்க, அவள் “சரி” என்று வாய் திறந்து சொன்ன பிறகே அங்கிருந்து விலகிச் சென்றான் தேவ். மறு வாரமே அவளை வீட்டிற்கு அனுப்பி விட்டனர். நித்திலாவுக்கு காலேஜ் என்பதால் வேதா, தேவ் அம்மா, ருத்ரா என்று அனைவரும் முன்பே ஊருக்குக் கிளம்பிவிட அதுவும் அவள் சரியாகி அவளைப் பார்த்துப் பேசின பிறகே கிளம்பினர். தேவ்வும் அவள் தாத்தா மட்டும் அங்கு இருக்க, வீட்டில் அவளை நர்ஸ் வைத்துப் பார்த்துக் கொண்டான் தேவ்.
மறுநாளே வீட்டிற்கு வந்தவளிடம்,“இன்னைக்கு நான் ஊருக்கு போகலாம்னு இருக்கேன்டா!” என்று அவன் மனமே இல்லாமல் சொல்ல, அவன் சொன்னதில் திடுக்கிட்டு பரிதாபமாக அவன் முகம் பார்த்து வாயால் இல்லை என்றாலும் அவள் கண்ணாலேயே ‘இன்று போகணுமா?’என்றுகேட்க, அதில் உருகியவனோ “நான் என்னடா செய்ய முடியும்? நாம இங்கு வந்து இருபது நாளுக்கு மேல் ஆகிடுச்சி கண்ணம்மா வேலை எல்லாம் அங்க தான இருக்கு? நானே மனசு இல்லாம தான் போறேன். தினமும் உன்கிட்ட பேசறன். எப்போது எல்லாம் நேரம் கிடைக்குதோ அப்ப எல்லாம் நிச்சயம் உன்ன வந்து பார்க்கறேன் பேபி” என்று அவள் கையைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு சொல்ல,
அவளும் தான் என்ன சொல்ல முடியும்? ஒரு மனது அவன் அருகாமையைத் தேடுகிறது, இன்னோர் மனதோ அவனை விட்டு விலகி இருக்கச் சொல்கிறது. இப்படி அவளுக்கே தெளிவு இல்லாத போது, அவளால் எந்த மனநிலையில் அவனைப் போக வேண்டாம் என்று தடுக்கமுடியும் என்று குழம்பியவள்.‘என்ன இருந்தாலும் அவன் வேலையை எல்லாம் விட்டு விட்டு எத்தனை நாள் இங்கு இருக்க முடியும்?’ என்று நினைத்து,“நீங்க போய்ட்டு வாங்க. எனக்கு ஏதாவது வேணும்னா அப்பத்தா கிட்ட கேட்டுக்கிறேன், அவங்க பார்த்துப்பாங்க” என்று குரல் அடைக்கக் கூற,“தாங்க்ஸ்டி பொண்டாட்டி” என்றுசொல்லி கட்டிலில் அவள் பக்கத்தில் அமர்ந்தான்.
அவள் முகத்தைத் தன் கையில் ஏந்தி அவள் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தவன், அவள் இதழிற்கு வருகையில் சற்று தயங்கி பின் அதை உதறி மென்மையாக என்றாலும் நீண்டநேர முத்தத்தின் பிறகு அவளை விடுவித்தான் தேவ். முன்பு அவன் தனக்காகத் துடித்தது, இப்போது தன்னைப் பிரிந்து இருக்கப் போகிற தவிப்பு என்று இரண்டும் அந்த முத்தத்தில் உணர்ந்தவள், முதல் முறையாக அவனுக்கு நீண்ட நேர முத்தத்திற்கு வழி செய்து கொடுத்தவள், பின் எனக்கும் இந்த பிரிவு கஷ்டம் தான் என்பதை அவனுக்கு அந்த ஒற்றை முத்தத்திலே உணர்த்தினாள் அவள். அதை உணர்ந்தவனோ சிறிது நேரம் கழித்து சிரித்த படி அவளைவிட்டு விலக,அவன் முகம் பார்க்கத் தயங்கியவள் வெட்கத்துடன் தலை குனிய, அதை உணர்ந்து அவள் முகத்தைத் தன் மார்பில் வைத்து அழுத்தியவனோ, “ஒழுங்கா நேராநேரத்துக்கு சாப்பிடுடி. மருந்து மாத்திரையும் மறக்காம எடுத்துக்க. உன்னையும் கூட்டிட்டுப் போய்டலாமானு விஷ்வாகிட்ட கேட்டேன், அவன் இப்ப வேண்டாம் கொஞ்ச நாள் போகட்டும்னு சொல்றான். அப்பத்தா, ஏன் நாங்க எல்லாம் பார்த்துக்க மாட்டோமானு என் கிட்ட சண்டை போடறாங்க. இன்னும் கொஞ்சம் உன் உடம்பு தேறட்டும், நான் உன்ன வந்து கூட்டிட்டுப் போறேன் கண்ணம்மா.” என்று அவள். உச்சியில் தன்கன்னம் பதித்துச் சொன்னவன் பின் அவள் உச்சியில் இதழ் பதித்து விட்டு விலகிச் சென்றான். அன்றே அவன் ஊருக்குச் சென்றுவிட, ஏதோ யாரும் இல்லாமல் மறுபடியும் தான் அநாதை ஆகி விட்டதாக உணர்ந்தாள் மித்ரா.
அவள் தூங்கும் நேரத்தைத் தவிர மற்ற நேரங்களில் அப்பத்தாவோ அவள் தாத்தாவோ அவளிடம் பேசிக் கொண்டு இருப்பதும் அவளுக்கு ஏதாவது தேவை என்றால் வாங்கி வந்து தருவதுமாக இருந்தார்கள். ஊரில் இருந்து வேதா, நித்திலா, ருத்ரா என்று போனில்பேச தேவ்வோ நேரம் கிடைக்கும் போது எல்லாம் அவளிடம் பேசுவதும் மேசேஜ் பண்ணுவதுமாக இருந்தான். அனைவரும் அவளிடம் அன்பையும் பாசத்தையும் பொழிய, அவளுக்குத்தான் அதை ஏற்க முடியவில்லை. ‘இப்போது இப்படி இருக்கும் அனைவரும் நாளைக்கு என் வாழ்வில் நடந்ததைப் பற்றி தெரிய வந்தால் என்ன செய்வார்கள்? என்ன சொல்வார்கள்? நிச்சயம் இந்த வீட்டை விட்டும் தேவ்வுடைய வாழ்க்கையை விட்டும் துரத்திடுவாங்க இல்ல? அப்படி ஒன்று நடக்கக் கூடாது தானே நான் எதுவும் வேண்டாம்னு விலகிப் போனேன். சரி, இனிமேலாவது தேவ்வை நினைக்கவே கூடாது!’ என்று முடிவு செய்தாள்மித்ரா.
என்ன தான் முடிவு செய்தாலும் அதை செயல்படுத்த முடியாமல் பார்த்துக் கொண்டான் தேவ்.‘வீட்டுக்கு வந்துட்டேன், சாப்டேன், நீ என்ன செய்ற? தூங்குனியா? இப்போ எப்படி இருக்கு?’ என்று ஆரம்பித்து ‘பேக்டரி போறேன், இப்போ மீட்டிங், ஃபிரண்ட பார்க்க வந்தேன்’ என்று அவனின் செயல்பாடுகளை நிமிடத்திற்கு நிமிடம் சொல்லி மேசேஜ் பண்ணிக் கொண்டிருந்தான் தேவ். ஏற்கனவே அவனை மறக்க முடியாமல் தவித்தவள், அவன் இப்படி எல்லாம் செய்யவோ ரொம்பவும் திணறித்தான் போனாள். மறுநாள் அவன் ஊருக்கு சென்ற நேரம்வர அது அவளுக்கு முழுதாக ஒருநாள் பிரிவை ஞாபகப்படுத்த, அந்த ஒருநாளே ஒருயுகமாகத் தோன்றி அவளுக்கு அவன் பிரிவைத் தெரியப்படுத்த யாரிடமும் பேசாமல் படுத்தே இருந்தாள் மித்ரா.
அன்று இரவு அவனைப் பார்க்காததால் தூக்கம் வராமல் முழித்துக் கொண்டே கண் மூடிப்படுத்திருக்க, பதினொன்று முப்பது மணி வாக்கில் யாரோ அவள் அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வருவது தெரிய, திடிக்கிட்டு கண் விழித்துமித்ரா பார்க்க, உள்ளே வந்த உருவமோ லைட்டைப் போட்டு விட்டு அவளைப் பார்த்தது. அவளும் பார்க்க, அங்கு நின்று இருந்ததோ தேவ். லைட் வெளிச்சத்தில் அந்த அறையில் இருந்த நர்ஸும் விழித்து எழுந்துவிட, அவரிடம் நெருங்கியவன் “நீங்க பக்கத்து அறையில் தங்க வசதி செய்யச் சொல்லி இருக்கன். நீங்க அங்க தங்கிக்கங்க” என்று சொல்ல,“சரி” என்று கூறிவிலகிச் சென்றார் நர்ஸ்.
அவர் சென்ற பிறகு கதவை சாத்தி தாழ் போட்டவன் தன் உடைகளைக் களைந்து வேறு உடைக்கு மாறினான். அது வரை ‘இது கனவோ?!’ என்று அவன் மேல் வைத்த கண்ணை எடுக்காமல் இவள் பார்த்துக்கொண்டிருக்க, லேசாக இதழ் பிரித்து சின்னதாக ஓர் சிரிப்பை உதிர்த்தவன் கட்டிலில் அவளை நெருங்கி உட்கார்ந்து அவளைத் தூக்கி அமரவைத்து தன் மார்பில் சாய்த்தவன்,“கனவு இல்லடி பொண்டாட்டி. இது நிஜம் தான், நான் உன் புருஷன் தான் வந்திருக்கேன்” என்று சொல்லி அவள் கன்னத்தில் விரலால் கோலம் போட்டபின்னரேஅவள்நிஜமென்றுஉணர்ந்தாள்.
“நீங்க நைட் பேசும்போது கூட வர்றதா சொல்லவே இல்லையே?” என்று அவள் முகம் நிமிர்த்திக் கேட்க,“சர்ப்ரைஸா இருக்கட்டும் என்று தான் உன் கிட்ட சொல்லல. பட் அப்பத்தா கிட்ட சொல்லிட்டன். உன்ன பார்க்காம இருக்க முடியலடி. முழுசா ஒரு நாள் உன்ன பார்க்காம இருந்ததே ஏதோ பல யுகங்கள் பார்க்காத மாதிரி இருக்கு. அதான் உடனே கிளம்பி வந்துட்டேன்” என்றுஅவன் சொல்ல,‘எனக்கும் தான்!’ என்று வாய் விட்டு சொல்லாமல் மனதிலேயே சொல்லிக்கொண்டவள் அவனுடன் ஒட்டிக்கொண்டாள்.
சிறிது நேரம் கழித்து “இனிமே தினமும் நைட் இங்கு வந்துடுவன். காலையில் கிளம்பி ஆபிஸுக்கும் பாக்டரிக்கும் போய்க்கிறேன்” என்று அவன் சாதாரணமாகச் சொல்ல,‘ஏதோ இன்று ஓர் நாள்’ என்று நினைத்தவள் அவன் அப்படி சொல்லவும், ‘என்ன தினமுமா?அதுவும் அவ்வளவு தூரத்தில் இருந்தா?’ உள்ளுக்குள் ஆசை இருந்தாலும் அவன்மேல் உள்ள கரிசனத்தால் “வேண்டாம். வேண்டாம்.” என்று மறுத்தாள் மித்ரா.“ரொம்ப தூரம் இல்லடி, ஜஸ்ட் த்ரீஹவர்ஸ் தான்!” என்று அவன் சொல்ல “அப்ப எனக்காக பாலத்து பக்கம் வரீங்களா?” என்று இவள் கேட்க, அவ்வளவு நேரம் முகத்தில் இருந்த இலகு தன்மை மறைய,“இல்ல! அவன் ஊர் பக்கமா தான் வரேன்” என்றான் தேவ்குரல் இறுக.
“அப்ப நீங்களே அவ்வளவு வேகமா கார் ஓட்டிட்டு வரீங்களா?” என்று இவள் கவலைப் பட,“எனக்கு ஒன்றும் ஆகாது ஹாசினி! நான் பார்த்துக்கிறேன்” என்று அவன் சொல்ல “இல்ல வேண்டாமே…” என்று அவள் ஏதோ சொல்ல வர,அவளைத் தடுத்து,“நான் அங்க இருந்தா என்னால நிம்மதியாவே இருக்க முடிய மாட்டுது. அதுக்குநான் வந்து போகறது எவ்வளவோ மேல்.” என்று அவன் சற்று அழுத்திச் சொல்ல, அதற்கு மேல் அவளும் அவனிடம் வாதம் பண்ணாமல் அடங்கி போனாலும்‘என்ன இருந்தாலும் நமக்காகத் தானே இவர் இப்படி வந்து போறார்?’ என்று நினைத்து மனதிற்குள் வருந்தினாள் மித்ரா. ஆனால் அவனை தினமும் பார்க்க வேண்டும் என்ற எண்ணமும் இருந்ததால் அவனைத் தடுக்க வழி தெரியாமல் இருந்தாள்அவள்.
தினமும் ஆபிஸ் முடிந்து இங்கு வருவதும் பின் காலையில் இங்கிருந்து போவதுமாக அவன் இருக்க, நான்கு நாள் சென்ற பின் ஐந்தாம் நாள் இரவு ஒன்றறை மணிக்கு வீட்டுக்கு வந்தவன் உடல் அசதியில் சிறு குழந்தையைப்போல் வாய் திறந்து தூங்க, அதைப் பார்த்தவளோ மனதால் மிகவும் வருந்தினாள். முன்பே இங்கு வந்தாலும் தூங்காமல் நடு ராத்திரியிலும் அவன் லேப்டாப்பில் வேலை செய்வதைப்பார்த்தவள்,‘இதற்கானதீர்வை சீக்கிரம் யோசிக்க வேண்டும்’ என்று முடிவுசெய்தாள்.
மறுநாள் காலையில் அவன் ஆபிஸ் போன பிறகு வந்த அப்பத்தா, பக்கத்து ஜமீன்தாரும் மித்ராவைக் கடத்தியவனும் இன்றுநடந்தஏதோஒருவிபத்தில்மாட்டி உயிரும் உணர்வும் இருந்தும் படுத்த படுக்கையாகப் போய்விட்டான் என்று சொல்லியவர்எதற்கும் தேவ்வை சற்று கவனமாக இருக்கச் சொல்ல வேண்டும் என்று அவர் மனதில் இருந்ததை அவளிடம் கொட்டி விட்டு செல்ல, ஆனால் மித்ரா அதை நம்பவில்லை. ‘நிச்சயம் இதுதானாக ஏற்பட்ட விபத்து இல்லை. என்னைக் கடத்தியதற்காக தேவ் உருவாக்கிய விபத்து இது. இவ்வளவு நாள் காத்திருந்து நேரம் பார்த்து இப்போ செய்து இருக்கார்.’ என்று நினைத்தவள்,
‘அப்போ அவர்களால் தேவ்வின் உயிருக்கு நிச்சயம் ஆபத்து வரும். அதுவும் அவர் அவன் ஊர் பக்கமாகத்தான் வருகிறார். அப்படி இருக்க, நிச்சயம் அவங்க ஆளுங்க விடமாட்டாங்க. இன்று இதற்கு ஓர் முடிவு கட்டியே தீர வேண்டும்.’ என்ற நினைப்பில் அன்று முழுக்க யார் என்ன சொல்லியும் சாப்பிடாமல் இருந்தாள் மித்ரா. தேவ்வின் அழைப்பையும் எடுக்காமல் இருக்க, அப்பத்தாவில் இருந்து நர்ஸ் வரை அவள் மருந்து மாத்திரை சாப்பிடவில்லை என்று அவனை அழைத்துச் சொல்ல, இரவு சற்று சீக்கிரமாகவே அடித்துப்பிடித்து ஓடிவந்தவன், நேராக அவளிடம் வந்து,“என்ன ஹாசினி நினைச்சிட்டு இருக்க? நீ என்ன சின்ன குழந்தையா? சாப்பிடாம அடம்பிடிக்க. எவ்வளவு வேலைக்கு நடுவுல வந்து இருக்கன் தெரியுமா? என்ன டார்ச்சர் பண்றதே உனக்கு வேலையா போச்சா?” என்று அவன் கோபத்தில் கத்த
‘நான் டார்ச்சரா?’ என்று மனதில் நினைத்தவள், அவளையும் மீறி அவள் கண்களில் கண்ணீர் வழிய “எனக்கு இதுக்கு மட்டும் பதில் சொல்லுங்க. அந்த ஜமீன்தாருக்கு நீங்க தான ஆக்ஸிடன்ட் பண்ணிங்க?” என்று இவள் கோபமாக கேட்க, ஓர் வினாடி அவள் முகத்தையே உற்றுப் பார்த்தவன் “ஆமாம். நான் தான் செஞ்சேன். இப்ப அதுக்கு என்னடி?” என்று அவன் விட்டேற்றியாக கேட்க “நீங்க ஏன் செய்திங்க? அவன போலீஸ்ல பிடிச்சிக் கொடுக்க வேண்டியது தான? அவங்க பார்த்துக்கப் போறாங்க. உங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை?” என்று இவளும் பதிலுக்குக்கு கத்த. “என்னது? என் பொண்டாட்டிய ஒருத்தன் கடத்திகிட்டு போய் குத்திப் போட்டுட்டானு நான் போய் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணி தண்டனை வாங்கிக் கொடுங்கனு போலீஸ்கிட்ட கெஞ்சனுமா? அது முடியாது. நெவர். உன் புருஷன நீ என்ன நினைச்சிட்டு இருக்க, கையாலாதவன்னா? என்ன சுத்தி இருக்கிறவங்களுக்கு ஏதாவது ஒன்னுனாலே நான் சும்மாவிட மாட்டன். இன்னைக்கி என் பொண்டாட்டி மேலையே ஒருத்தன் கைய வச்சிருக்கான், என்ன பார்த்துட்டு சும்மாவிட சொல்றியா? அந்த நாலு பேரையும் வேற கேஸ்ல உள்ள போடச்சொல்லிட்டேன், திரும்ப வரவே முடியாத அளவுக்கு.” என்றவன் “இப்ப என்ன தான் சொல்ல வர?” என்று அவன் குரலை உயர்த்தி கத்தினான்.
“நான் சொல்ல வர்றதுக்கு என்ன இருக்கு? ஏற்கனவே நீங்க எனக்காக அங்கேயும் இங்கயுமா அலைச்சல் படுறதே எனக்கு குற்ற உணர்ச்சியா இருக்கு. இதுல நீங்க எனக்காக வேற அவன இப்படி செய்து இருக்கிங்க. பத்தாததுக்கு நீங்க அவன் ஊர் வழியா தான் போக வர இருக்கிங்க. அப்ப அவனால உங்களுக்கு ஏதாவது ஆபத்து வந்து ஏதாவது நடந்துச்சினா?”என்று சொல்லி சிறிது நேரம் நிறுத்தியவள், பிறகு அவன் முகம் பார்த்து “அதுக்கு அப்பறம் நான் உயிருடனே இருக்க..” என்று கூறி முடிக்க முடியாமல் கையில் முகம் புதைத்து கதறி அழ,அதுவரை அவளிடம் கோபமாக இருந்தவன் அவள் அழவும் சற்று இளகி அவளிடம் நெருங்கியவன், அவளை அணைத்து “ஹாசினி, இங்க பாருடி. எனக்கு ஒண்ணும் ஆகாதுடி” என்று சமாதானப் படுத்தியவன் “இப்ப என்ன என்ன தான்டி செய்ய சொல்ற?” என்று அவன் சற்று இறங்கி விட்ட குரலில் கேட்க, அவன் அணைப்பில் இருந்து கொண்டே நிமிர்ந்து அவன் முகம் பார்த்தவள்,“கொஞ்ச நாள் நீங்க இந்த பக்கம் வர வேண்டாம். இனி நானும் இங்க இருக்க மாட்டன். என்ன உங்க வீட்டுக்குக் கூட்டிட்டுப் போய்டுங்க” என்று அவள் தேம்ப “யார்வீட்டுக்கு?” என்று அவன் கண்ணில் கூர்மையுடன் கேட்க, என்ன சொன்னோம் என்று புரிந்தவள் “ஸ்ஸ்ஸ்ஸ்……” என்ற சத்தத்துடன் அவள் நாக்கையே தன் பல்லால் கடித்தவள் பிறகு “நம்ம வீடு” என்று சொல்ல, அவள் செய்கையில் கவரப்பட்டவனோ வாய் விட்டு சிரிக்கவும் அங்கு நிலவிய கோபமான சூழல் குளுமையாக மாறியது. “உனக்கு இன்னும் உடம்பு சரியாகல. இன்னும் கொஞ்ச நாள் இங்கு இருடி”என்று சொல்ல “முடியாது. நான் இங்கு இருக்க மாட்டன். நீங்க கூட்டிட்டுப் போற வரைக்கும் நான் சாப்பாடு மாத்திரை எதுவும் சாப்பிட மாட்டன்.” என்று அவள் அடம்பிடிக்க “ரொம்ப பிடிவாதம்டி உனக்கு.” என்று அவன் சிரிக்க
“உங்களவிட குறைவு தான்!” என்று அவள் சிணுங்க, சுழிந்த அவள் உதட்டுக்கு முத்தம் வைத்து விட்டு விலகியவன் விஷ்வாவுக்கு போன் பண்ணி அவளை அழைத்துப் போகலாமா என்று கேட்டு டாக்டரை வரவழைத்து செக்கப் செய்து இருவரும் டிராவல் செய்யலாம் என்று சொன்ன பிறகே அவளைஅழைத்துபோகஅவன் சம்மதித்தான். அவளை அழைத்துச் செல்லக் கேரவனை (பிரபலங்கள் பயன்படுத்தும் படுக்கை, பாத்ரூம் உள்ளிட்ட சகலவசதிகள் கொண்ட பஸ்) ஏற்பாடு செய்திருந்தான். அப்போதும் அவளையும் தாத்தாவையும் மட்டும் பாலத்தின் பக்கமாக அனுப்பி விட்டு இவன் மட்டும் ஊர்பக்கமாக போக நினைக்க, அதற்கும் முடியாது அவனுடன் தான் வருவேன் என்று அவள் பிடிவாதம் பிடிக்க வேறு வழியில்லாமல் கேரவனில் ஊர்பக்கமாக அவள் கூடவே சென்றான் தேவ்.
வீட்டிற்கு வந்த பிறகு அங்கும் அவளைப் பார்த்துக் கொள்ள நர்ஸ் இருந்தாலும், தேவ் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரைப் பார்த்துக் கொள்ளச் சொல்லியவன், மீதி அவன் அங்கு இருக்கும் நேரங்களில் எல்லாம் அவனே அவளைப் பார்த்துக் கொண்டான். அவளுக்கு உடம்பு துடைக்க, ஆடை மாற்ற என்று அவன் செய்ய, முதலில் மித்ரா ஒத்துக் கொள்ளவில்லை. இவள் அவனைத் தடுக்க அவன் பிடிவாதத்துடன் நிற்க பின் இவள்தான் பிடிவாதத்தை விட வேண்டியதாகப் போனது. அவள் எவ்வளவு கெஞ்சிப் பார்த்தும் அவன்விடவில்லை. வெட்கத்தில் ஒரு முறை “எனக்கு கூச்சமா இருக்கு, தயவுசெய்து நீங்க செய்யாதிங்க”என்று அவள் சொல்ல “புருஷன் கிட்ட என்னடி கூச்சம்?
இதே எனக்கு இப்படி நடந்திருந்தா நீ நர்ஸ் வெச்சி பார்த்துப்பியா? நீயேதான என்ன பார்த்துப்ப? அதேமாதிரிதான் இதுவும். ஆனா நான் உனக்குச் செய்யும்போது அதுல துளி கூட காமம் இருக்காது, முழுக்கமுழுக்க காதல்தான் இருக்கும்!”என்று சாதாரணமாகச் சொல்லி அவன் முற்றுப்புள்ளி வைத்து விட்டான்.
அதன் பிறகு ஓர் நாள் அவன் கட்டிலில் அமர்ந்து லேப்டாப்பில் வேலையாக இருக்க, அந்த நேரம் பார்த்து அவளுக்கு இயற்கை உபாதையைப் போக்க வேண்டும் போல் இருக்க,“ஏங்க, நீங்க வெளியே போய்ட்டு கொஞ்சம் நர்ஸ்ச வரச் சொல்லுங்க” என்று மித்ரா சொல்ல “எதுக்குடி? என்றான் லேப்டாப்பில் இருந்து கண்ணை எடுக்காமல். அப்போதும் அவள் சொல்லாமல் தயங்க,“என்ன ஹாசினி?” என்று அவள் முகம் பார்த்துக் கேட்க ‘ஐய்யோ! இவர் கிட்ட சொன்னா நானே செய்றனு சொல்வாரே! ஆனா எனக்கு இப்போ அவசரமா இருக்கே!’ என்று நினைத்தவள் வேறு வழியில்லாமல் தலையைக் குனிந்து கொண்டே “எனக்கு பெட்பான் வைக்கணும்” என்று அவள் தயங்கித் தயங்கிச் சொல்ல, அவள்நினைத்தது போலவே அவனும்“இதுக்கு எதுக்கு நர்ஸ்? நானே எடுத்து வரேன்” என்று சொல்லி அவன் எடுத்து வந்து வைத்து திரும்ப எடுத்துப் போக மனதால் மிகவும் துடிதுடித்துப் போனாள் மித்ரா.
முதன் முதலில் ஆஸ்பிடலில் அவளைப் பார்க்கும் போது இருந்த தேவ், தன் தாத்தா வீட்டிற்கு வந்த போது இருந்த தேவ், ஏர்போர்ட்டில் அவனுக்குக் கிடைத்த மரியாதையை ஏற்ற தேவ், ஆஸ்பிடலில் அவளை மிரட்டி திருமணத்திற்குப் பணிய வைத்த தேவ், தன்னிடம் சவால் விட்ட தேவ், கடைசியாக அவன் ஊர் மக்களிடம் ராஜாவாக வலம்வந்த தேவ், என்று இப்படி ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்தவள்,அப்படி எல்லாம் இருந்த தேவ் இன்று தனக்காக இப்படி எல்லாம் செய்வதைப் பார்த்தவள் இதெல்லாம் என் மேல் உள்ள அன்பு பாசத்தாலும் மனைவி என்ற உரிமையாலும் தான் என்று நம்பியவள் ‘ஐய்யோ… அவருடைய அன்புக்கும் பாசத்திற்கும் அவர் மனைவி என்ற இடத்திற்கும் எனக்குத் தகுதியில்லையே!’ என்று அவள் உள்ளுக்குள் குமுறி ‘நாளைக்கு என்வாழ்வில் நடந்தது தெரிஞ்சா, என்னை வீட்டை விட்டுத் துரத்திடுவாரே. அதற்குள் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் அவர விட்டு விலகிப் போய்டணும்’ என்று அவள் மனதுக்குள் வேண்ட, இதுவரை பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அவள் மனசாட்சி இப்போது வெளியே வந்து கேள்வி கேட்க ஆரம்பித்தது.
‘சரி. எனக்கும் அவனுக்கும் எந்த சம்மந்தமும் இல்ல. நான் அவன விட்டுப் போக போறனு சொல்ற. இதை எல்லாம் கல்யாணத்துக்கு முன்னாடி சொன்ன. அப்ப நீ சொன்னத நான் ஒத்துக்கிறேன். ஆனா கல்யாணத்துக்குப் பிறகும் நீ அப்படி சொல்றத ஒத்துக்க முடியலையே’–அவள்மனசாட்சி
‘ஏன்?’ - மித்ரா
‘ஆமாம். குழந்தைக்காகத் தான கல்யாணம் பண்ண. பிறகு எதுக்கு பூ உதிர்ந்ததுக்கு அப்படி அழுத.” - மனசாட்சி
‘என் வாழ்க்கையில் என்ன நடந்ததுனு உனக்குத் தெரியும். திரும்ப அப்படி ஏதாவது நடந்திடுமோனு நெனைச்சி தான் அழுதன்’ - மித்ரா
‘அதன் பிறகு ஓர்நாள்உன்ன அடிச்சிட்டு அவன் அப்படி நடந்துக்கிட்டானே,அப்படிநடந்துகிட்ட அவன நீ எப்படி சும்மா விட்ட? எனக்குத் தெரிஞ்சி நீ சும்மா போறவள் இல்லையே. அன்று அவன் உன்னை அணைத்துச் சொன்ன வார்த்தைகளும் மனசால் நீயுமேஅவனைக் கணவனாக நினைத்ததாலே தான அமைதியா இருந்த?’ - மனசாட்சி
‘…….’ மித்ராவிடம் பதில் இல்லை
‘அங்க ஊருக்குப் போய் அவனுக்கு கிடைச்ச மரியாதை அனைத்திலும் பங்கெடுத்து என் புருஷன் என் புருஷனு சொல்லிக்கிட்டு சுற்றி வந்தியே. அது எப்படி மனசார புருஷனே நினைக்காம சும்மா சொன்னியா?’ - மனசாட்சி
‘இல்ல நான் அதை உண்மையா தான் சொன்னன். யாருமே இல்லாம எந்த ஓர் சொந்த பந்தமும் இல்லாம அனாதையா வளர்ந்த எனக்கு அவர் வீட்டில் உள்ள உறவுகளையும் அவர்கள் தேவ் மீதும் மற்றவங்க மீதும் காட்டும் பாசத்தையும் பரிவையும் பார்த்து என்னுடைய ஏக்கத்தப் போக்க நினைச்சேன். அப்படி அவங்க எல்லாரும் என்கிட்ட அவ்ளோ அன்பாவும் அரவணைப்பாவும் மரியாதையாவும் நடந்துகிட்டது எல்லாம் தேவ்வாலதான் எனும்போது அவர என் புருஷனா, அவர் மனைவிக்கு கிடைக்கறதா நினைச்சேன். அதுக்காக அன்பு பாசம் காதல் எல்லாம் இல்ல. ஏன்? எனக்கும் இப்படி ஓர் புருஷன்,இப்படி ஓர் நல்ல வாழ்வு வாழணும்னு ஆசை இருக்காதா? நான் சாகும் வரை பழசையே நினைச்சிட்டு இருக்கணுமா?’ - மித்ரா
‘நாங்க யாரும் அப்படி சொல்லலையே? நீயே தான் அப்படி சொல்லிட்டு இருக்க. இங்க யாரு உன்னைஅப்படி சொன்னாங்கனு சொல்லு பார்ப்போம்.’ - மனசாட்சி
‘…….’ மித்ராவிடம் பதில் இல்லை
‘அன்பு பாசம் எல்லாம் இல்லையா? அப்படி எதுவுமே இல்லாதவ எதுக்கு அவனுக்கு உயிருக்கு ஆபத்துனு அப்படி துடிச்சி ஓடின?’ - மனசாட்சி
‘…..’ மித்ராவிடம் பதில் இல்லை
‘ஓ! காதலும் இல்லனு சொன்ன இல்ல? அப்போ ஆப்பரேஷன் தியேட்டருக்கு போகும் போது ஐ லவ் யூ அத்தானு எதுக்கு நீ சொன்ன?’ - மனசாட்சி
‘அதை நான் காதலிக்கிறேன் என்றதுக்காக சொல்லல. என் புருஷன் யார்கிட்டையும் தோத்து போக கூடாதுனு நினைக்கிறவநான். நான் சாகும் போது கூட, அன்னைக்கு அவர் என்கிட்ட விட்ட சவால் தான் ஞாபகம் வந்துச்சி. நான் நிச்சயம் செத்துடுவனு முடிவு பண்ணி என்கிட்டகூட தோற்கக்கூடாதுனு நினைச்சி தான் நான் அப்படி சொன்னன் ஒருவேளை எனக்கு காதலே வந்திருந்தாலும் சாகும் வரை அதை என் மனசுக்குள்ளேயே போட்டு புதைச்சி என் உயிர் போகும் வரை மறைச்சி இருப்பேனே தவிர நிச்சயம் சொல்லி இருக்க மாட்டேன்’ - மித்ரா
‘ம்ம்ம்….. அன்பு இல்ல, பாசம் இல்ல, காதல் இல்ல. அப்ப நீங்க இல்லனா நான் செத்தே போய்டுவனு சொன்னதும், அவன் தோற்க கூடாதுனு நினைச்சதும் எதனால்?’ - மனசாட்சி
‘ஐய்யோ! எனக்கு அன்பு பாசம் காதல் எல்லாமே இருக்கலாம். ஏன் அவருக்குக் கூட என் மேல இருக்கலாம். ஆனா நாங்க சேர்ந்து வாழ முடியாது. ஒருவேளை என் வாழ்வில் நடந்தது தெரிஞ்சா வேணா நாங்க வாழறத பற்றி யோசிக்கலாம்.’ - மித்ரா
‘அப்போ அவர் கிட்ட எல்லா உண்மையையும், உன் வாழ்க்கையில் நடந்த எல்லாத்தையும் சொல்லு. முன்பு தான் தேவ்யாரோ. இப்போ உன் புருஷன் தான? அப்ப சொல்லிடு.’ - மித்ரா
‘ஆமாம்! நான் சொல்ல தான் போறேன். நிச்சயம் நான் சொல்ல தான் போறேன்.’ என்று இந்த ஒன்றறை மாத காலமாக படுக்கையில் இருந்த தனக்காகதேவ் செய்யும் வேலைகளைப் பார்த்து குற்ற உணர்ச்சியில் மருகிய போது எல்லாம் அவள் மனசாட்சி கேட்ட கேள்விகளுக்கு அவள் தந்த பதில்கள்இவை.
இறுதியில் தேவ் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று சொல்வதற்கான நாளைஎதிர்பார்த்து அவள் காத்துக் கொண்டிருக்க, அதற்கான நேரமும் வந்தது.
அன்றும் அப்படி தான். இந்த ஒன்றறை மாதத்தில் அவளே சற்று எழுந்து நிற்கும் அளவுக்கு வந்திருந்ததாள். பாத்ரூம் போக நினைத்து எழுந்து நின்றவள்,பேலன்ஸ் தவறி சற்று தடுமாறிவிழப்போக, அங்கிருந்த தேவ்வோ அதைப் பார்த்து அவளைப் போக விடாமல் இருக்கச் சொல்லி தடுத்தவன், தானே பெட்பான் எடுத்து வருவதாக கூற வேண்டாம் என்று கூறி அவனைத் தடுத்து விட்டு அன்றேவெடித்துச் சிதறி விட்டாள் மித்ரா.
“என் மேல அன்பு பாசம் காதல் எல்லாம் வச்சிருக்கிங்க. அதை ஒவ்வொரு செயல்லையும் நான் உணர்ரேன். ஆனா அந்த காதல ஏத்து என்னால உங்க கூட ஒட்ட முடியாத அளவுக்கு என் வாழ்வில் நடந்தது என்னைத்தடுக்குது. அதைக் கேட்டு அதன் பிறகு உங்கவாழ்க்கைகாக நீங்க என்ன சொன்னாலும் சரி. ஒருவேளை எனக்கு நடந்தத உங்க கிட்ட சொன்னாலாவாது என் மனசுல இருக்கிற பாரம் குறையுமா?” என்று அவள் அவன் மார்பில் சாய்ந்து கதறினாள்.
“ஹாசினி, இங்க பாரு. உன் வாழ்வில் உனக்கு எது நடந்து இருந்தாலும் அது எனக்கு தேவை இல்லைடா” என்று அவன் சமாதானப் படுத்த,அவள் ‘இல்லை’ என்று பிடிவாதத்துடன் தலையாட்டினாள்.
“சரி சொல்லு. ஆனா முதலில் நீ பாத்ரூம் போய்ட்டு வா.” என்றவன் அவளை இரண்டு கையிலும் தூக்கிச் சென்று பாத்ரூமில் விட்டு வெளியில் நின்றவன், அவள் வெளியே வர திரும்ப தூக்கி வந்து கட்டிலில் உட்கார வைத்து. அவளைத் தன் தோள் மீது சாய்த்துக் கொண்டு “ம்… இப்ப சொல்லு.” என்று கேட்க
அவளோ அன்னாந்து அவன் முகம் பார்க்க,“சொல்லுடி! நீ தான சொல்லணும்னு சொன்ன? அப்ப சொல்லு.” என்று சொன்னவன் ஏற்கனவே அவனுக்கு அனைத்தும் தெரிந்திருந்தாலும் ‘அவள் வாயால் சொன்னால் ஒருவேளை அவளுக்கும் தெளிவு பிறக்குமோ?’ என்று நினைத்து அவன் அப்படிச்சொல்ல அவள் வாழ்வில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தாள் மித்ரா.

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 25
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.