உன்னுள் என்னைக் காண்கிறேன் 28

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் - 28



மூன்று முடிச்சைப் போட்ட கையோடு அவளை இழுத்து அணைத்த ஷியாம், “நீ இல்லனா நான் செத்துடுவேன் மித்ரா!” என்றான் கண்ணீர் வழிய. நினைவு வந்தவளாக அவன் அணைப்பிலிருந்து விலகியவள் கையில் இன்னும் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்த இடத்தில் தன் துப்பட்டாவால் இறுக்க சுற்றி முடிச்சிட்டாள்.



“எழுந்திரு ஷியாம் ரொம்பவே இருட்டிடுச்சி. வா இங்கிருந்து போகலாம்!”



அந்த இடத்தை விட்டு கார் இருக்கும் இடத்திற்கு வருவதற்குள் பல கேள்விகள் எழுந்தது மித்ராவின் மனதுக்குள். ‘நானா இது?! இன்று நானா அழுதேன்?! நானா அவனிடம் கெஞ்சினேன்?! அவன் என்ன தான் சாகப் போறேனு சொன்னாலும் நான் என் பிடிவாதத்திலே நிற்காமல் ஏன் மாறிப் போனேன்? ஏன் இப்படி?!’ என்று அவள் கலங்க, அவளுக்கு எங்கே தெரியப் போகிறது அன்பும் பாசமும் அதிகப்படியான அக்கறையையும் ஒருவர் மீது வைத்து விட்டாலோ இல்லை எதிர்பார்த்தாலோ அதற்காக நாம் எந்த எல்லைக்கும் போவோம் என்பதும் எதை இழக்கவும் தயங்க மாட்டோம் என்று!



பிறகு இருவரும் வெளியே வந்து காரில் ஏறி அமர,



“இப்போ நாம எங்கே போறோம்?” - மித்ரா



“என் வீட்டுக்குத் தான். என் தங்கச்சி கல்யாண விஷயமா எங்க வீட்டுல இருக்கறவங்க எல்லாம் அந்தப் பையன் வீட்டுக்குப் போய் பேச நேற்றே கிளம்பிட்டாங்க. அநேகமா இன்னேரம் வந்து இருப்பாங்க. இல்லனாலும் இதுக்கு மேல நீ அங்க தான் இருக்கணும்” - ஷியாம்



அதற்குப் பதில் சொல்லாமல். “முதல்ல உன் போன ஆன் பண்ணு ஷியாம்!” - மித்ரா



அவன் ஆன் செய்ய, அவன் எப்போது ஆன் செய்வான் என்று காத்திருந்தது போல் உடனே அழைப்பு வர, “டாட் தான் கால் பண்றார், இரு கேட்கறேன்” என்று சொன்னவன் அதை ஆன் செய்து



“ஹலோ டாட், ஹவ் ஆர் யூ?” என்றான் குதூகலம் குரலில் பொங்கி வழிய “எங்கடா இருக்க? நான் காலையிலிருந்து கால் பண்ணிட்டு இருக்கன், ஸ்விட்ச் ஆப்னு வருது! சரி சரி, உன் அம்மாவும் மாமாவும் அந்த பையன் வீட்டுல போய் பேசினதுல கல்யாணத்துக்கு ஒத்துக்கிட்டாராம் பையனோட அப்பா. இன்னும் ரெண்டு நாள்ல உன் தங்கச்சிக்கு நிச்சயதார்த்தம். இதோ நான் கிளம்பி ஏர்போர்ட் வந்துட்டன். இன்னும் ஆஃப்பனவர்ல எனக்கு பிளைட். விடியற்காலை மூன்று மணிக்கு நான் ரீச் ஆகிடுவன். நீ வந்து அழைச்சிட்டுப் போ. மீதிய நேர்ல வந்து பேசறேன். இப்போ நான் வச்சிடறன், காலையில் பார்த்து கொஞ்சம் மெதுவா வா” என்று அவன் பேசுவதற்கு இடமே கொடுக்காமல் அவர் மட்டுமே அவசரக் குரலில் பேசி அழைப்பைத் துண்டித்தார்.



ஷியாமோ எதுவும் பேசாமல் யோசனையோடு சற்று நேரம் அமைதி காக்க, அவள் முகத்தைப் பார்த்த மித்ரா “என்ன ஷியாம், என்ன ஆச்சி?” என்று கேட்க



“நான் உன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகத் தான் இவ்வளவும் பண்ணேன்! ஆனா இப்போ..” என்று இழுக்க



“ஏன், இப்போ மட்டும் என்ன ஆச்சி?” - மித்ரா



“தங்கச்சிக்கு அந்தப் பையன பேசி முடிச்சிட்டாங்களாம். இன்னும் ரெண்டு நாள்ள நிச்சயதார்த்தம். அப்பாவும் ஃபாரின்ல இருந்து வராராம். அதான் போன் பண்ணி சொன்னார்” அவள் முகம் பார்க்காமல் தலை குனிந்தபடியே அவன் சொல்ல,



“சரி, இப்போ நீ என்ன சொல்ல வர?” - மித்ரா



“அது வந்து…..” - ஷியாம்



“என் முகம் பார்த்து பேசு ஷியாம்” - மித்ரா



அவள் முகத்தை நிமிர்ந்து பார்த்தவன், “அப்பா ரொம்ப வருஷம் கழிச்சி ஊருக்கு வரப்போறார். இப்போ போய் நாம அவர் முன்னாடி இப்படி நின்னா அவருக்கு எதாவது ஆகிடும்! அதனால நீ கொஞ்ச நாள் ஹாஸ்டல்…..” அவள் கண்ணில் ரௌத்திரத்தைப் பார்த்தவன் சொல்ல வந்ததை முழுமையாக முடிக்க முடியாமல் வார்த்தைகளை பாதிலேயே நிறுத்த



அவள் வாய் திறந்து கேட்கவில்லை என்றாலும் கண்காளேயே, ‘நான் சொன்ன இல்ல? பொறுமையா இரு, அவசரப்படாதனு! கேட்டியா? இப்போ இப்படி ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டு என்ன ஹாஸ்டல்ல இருனு சொல்றனு!’ கேட்காமல் கேட்க



சிறிது நேர அமைதிக்குப் பின் “ப்ளீஸ் மித்ரா! புரிஞ்சிக்கோ, இப்படி திடீர்னு அப்பா வந்து நிப்பாருனு எனக்குத் தெரியாது” என்றான் இறங்கிய குரலில் தலையைக் குனிந்து கொண்டே. மித்ராவோ அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வெளியே வெறித்துப் பார்த்த படி அமர்ந்திருந்தாள்.



பிறகு அவளிடம் எதுவும் பேசாமல் வண்டியை எடுத்தவன் ஹாஸ்டல் வர அதே மவுனத்துடனே அவள் இறங்க முற்பட “மித்ரா! இப்போதைக்கு நமக்கு கல்யாணம் ஆனதா நீ யார் கிட்டையும் சொல்லாத. நாளைக்கு அப்பா வந்த பிறகு அவர் கிட்ட பேசிட்டு உன்ன வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறன். அதனால இந்தா ஷால் போட்டு தாலி கயிறை மறைச்சிக்கோ!” என்று கொஞ்சமும் பிசிர் இல்லாமல் சொன்னவன் தன் கையில் அவள் கட்டியிருந்த ஷாலைக் கழற்றிக் கொடுக்க,



அதை அவன் முகம் பார்க்காமல் வேகமாக பிடிங்கியவள் தன் கழுத்தில் சுற்றிக் கொண்டு அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் காரை விட்டு இறங்கி உள்ளே சென்று மறைந்தாள் மித்ரா. அவள் போகும் வரை அவளையே பார்த்து இருந்தவன் பின் ஒரு பெருமூச்சுடன் காரை அங்கிருந்து நகர்த்தினான் ஷியாம்.



எப்போதும் முடிந்து போன விஷயத்தை யோசிக்க மாட்டாள் மித்ரா! ஆனால் இன்று நடந்த விஷயத்தை அவளால் யோசிக்காமல் இருக்க முடியவில்லை. அவளுக்கு, ‘இப்பவும் ஷியாம் ஏமாத்திடுவானோ? நாளைய தினம் என்ன ஆகுமோ?’ என்ற பயம் இல்லை! அவள் கவலை கஷ்டம் எல்லாம் தாத்தாவுக்கு என்ன சொல்லி புரிய வைப்பது என்று தான்! சொன்னாலும் அவர் புரிஞ்சிப்பாரா இல்லனா அவர் உடல் நிலைக்கு எதாவது நடந்திடுமா?’ என்று பலவாரு யோசித்தவள் இறுதியாக, ‘சரி, இப்போதைக்கு தாத்தா கிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். ஷியாம் வீட்டுல என்ன சொல்றாங்கனு பார்த்துட்டுச் சொல்லுவோம்’ என்று நினைத்தவள் அன்று இரவு முழுக்க தூங்கவே இல்லை.



மறுநாள் தலை பாரமாக இருக்க, ஷியாமிடமிருந்து எப்போது வேண்டுமானாலும் அழைப்பு வரும் என்பதற்காக அன்று காலேஜிக்கு லீவு போட்டவள் ஹாஸ்டலிலேயே இருக்க, ஷியாமிடமிருந்து அழைப்பே வரவில்லை! பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவள் மாலை ஐந்து மணி வாக்கில் அவனுக்கு அழைக்க, அவனோ கட் செய்தவன் உடனே அவளுக்கு ‘டூ டேஸ் பொருத்துக்கோ மித்ரா. தங்கச்சி நிச்சயம் முடிஞ்ச உடனே உன்ன வந்து கூட்டிட்டுப் போறேன்’ என்று மேசேஜ் அனுப்பி விட



அதைப் படித்தவள் கொதித்துத் தான் போனாள். ‘எல்லாம் திமிர்! அதான் தாலி கட்டிட்டோமே இதற்கு மேல் இவ நாம சொல்றத தான் கேட்கணும்னு எண்ணம்! பத்தாததுக்கு அடங்கிப் போகணும்னு நினைக்கிறார் போல...’ என்று பலவாறு நினைத்தாலும் அவளுடைய இயல்பான குணத்திற்கு எதிராக அவன் சொன்னபடியே அமைதி காத்தாள் மித்ரா. அதன் பிறகு மித்ரா அவனை அழைக்கவும் இல்லை அவனும் அவளிடம் பேசவும் இல்லை. ஆனால் அவன் சொன்ன மாதிரியே நிச்சயதார்த்தம் முடிந்த மறுநாள் அவளை அழைத்து காபி ஷாப் வரச் சொல்ல. இவளும் செல்ல, முன்பே அங்கிருந்த ஷியாம் இவள் காலர் வைத்த சுடிதாருடன் வருவதைப் பார்த்தவனோ கொஞ்சம் நிம்மதி அடைந்தான்.



அவனை நெருங்கியவள், “ஹாய் ஷியாம்! ஹவ் ஆர் யூ? உங்க தங்கச்சி நிச்சயதார்த்தம் எப்படி நடந்தது?” என்று சகஜமாக கேட்டுக் கொண்டே அவன் எதிரிலிருந்த சேரில் அமர.



“ஃபைன் மித்ரா! எல்லாம் நல்ல மாதிரியா முடிஞ்சிடுச்சி. சாரி மித்ரா! அந்த பிஸில தான் உனக்கு கால் பண்ண முடியல அப்பாகிட்டையும் பேச முடியல. அதான் ஃபங்ஷன் எல்லாம் முடிஞ்ச பிறகு இன்னைக்கு காலையில தான் அப்பாகிட்ட நம்ம விஷயமா பேசினன். ஃபர்ஸ்ட் கொஞ்சம் கோபப்பட்டார். பிறகு நான் பிடிவாதமா எடுத்துச் சொன்ன பிறகு புரிஞ்சிக்கிட்டார். அதனால நம்ம காதலுக்கு சம்மதம் சொல்லிடார்….”



இதுவரை அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தவள் “காதலா?…. நமக்கு இப்போ கல்யாணம் ஆகிடுச்சி ஷியாம்!” என்று அதிர்ச்சியும் கோபமும் கலந்து மித்ரா சொல்ல “அதையும் சொல்லிட்டேன். அதுக்கு தான் அப்பா ரொம்ப கோபப்பட்டார். ஏன்டா இப்படி செய்த? நீ என்ன அநாதையா? உனக்கு நாங்க எல்லாம் இல்லையா? எப்படி எல்லாம் உனக்கு கல்யாணம் பண்ணம்னு நான் கனவு கண்டேன்! அதுக்குள்ள அவசரப் பட்டு இப்படி பண்ணிட்டியேனு கவலையில சத்தம் போட்டு திட்டக்கூட செய்தார். அப்ப தான் நான் செய்த தப்புமே புரிஞ்சிது. அப்ப தான் நீ அவசரப்பட வேணாம்னு சொன்னதும் சரினு பட்டுச்சி!” என்று கூறி அவள் முகம் பார்த்து நிறுத்த



‘இப்போ நீ என்ன சொல்ல வர அதை எல்லாத்தையும் சொல்லி முடி!’ என்பது போல் அவள் அமைதி காக்க.



“உன்ன அவர் வேண்டாம்னு சொல்லல. நம்ம கல்யாணத்தையும் அவர் மறுக்கல. தங்கச்சி கல்யாணம் மட்டும் இல்லனா இப்பவே உன்ன கூட்டிட்டு வரச் சொன்னார். ஆனா வீட்டில் ஓர் கல்யாணத்த வச்சிகிட்டு வேறு ஓர் இனத்துப் பெண்ண இப்படி யாருக்குமே தெரியாம திடீர்னு கல்யாணம் பண்ணிக் கூட்டிட்டு வந்தா அதனால தங்கச்சி வாழ்க்கை பாதிக்கும்னு நினைக்கிறார். மத்தபடி அவருக்கு சம்மதம் தான்!” என்று. அவன் அவள் முகம் பார்க்க



….. மித்ராவிடம் எந்த சலனமும் இல்லை.



“அதனால தங்கச்சி கல்யாணம் முடிஞ்சதும் முறைப்படி உங்க வீட்டுக்கு வந்து உன்ன பொண்ணு கேட்டு ஊர் அறிய கல்யாணம் பண்ணலாம்னு அப்பா சொல்றார். இந்த கல்யாணம் நடந்ததாவே எங்க வீட்டுக்கும் உங்க வீட்டுக்கும் ஏன் ஊர் உலகத்துக்குமே சொல்ல வேண்டாம், புதுசா சீரும் சிறப்புமா கல்யாணம் செய்யலாம்னு சொல்றார்” அவன் கூறி நிறுத்த





“அதுக்கு நீ என்ன சொன்ன ஷியாம்?” - மித்ரா



“எனக்கும் அவர் சொல்றது சரினு படுது, அதனால நானும் சரினு சொல்லிட்டேன். பட் அதுவரை நீ எப்படி கழுத்தில் மஞ்சள் கயிற்றோட பார்க்கறவங்களுக்கு எல்லாம் பதில் சொல்லிட்டு இருப்ப? அதான் தங்க செயின் வாங்கிட்டு வந்தன். இது சரடு மாதிரி இருக்காது. சாதாரண இரண்டு பவுன் செயின் மாதிரி தான் இருக்கும். சோ அந்த தாலிய இதுல மாற்றிடு மித்ரா!” என்று சர்வசாதாரணமாகக் கூறியவன் அவன் பாக்கெட்டில் இருந்த நகை டப்பாவை எடுத்து திறந்து டேபிளில் வைத்து அதை மித்ரா முன் நகர்த்த



அதைத் தொட்டுக் கூடப் பார்க்காமல் “இவ்வளவு தான் இருக்கா? இல்ல உனக்குப் பேச இன்னும் வேற ஏதாவது இருக்கா?” பட்டென்று மித்ரா கேட்க சற்று திகைத்து அவள் முகம் பார்த்தவன், ‘வேறு இல்லை’ என்று தலையாட்டினான் ஷியாம்.



“இப்ப நீ பேசிட்ட இல்ல? அப்ப நான் பேசுறதையும் கேளு! எனக்கு நீ சொன்னதுல கொஞ்சம் கூட உடன்பாடே இல்ல! ஆமாம், நீ என்ன நினைச்சிட்டு இருக்க? நீ இழுக்கிற இழுப்புக்கு எல்லாம் நான் பறக்கற பட்டம்னா? எனக்கு ஒரு சந்தேகம் ஷியாம்! உங்க அம்மாவையும் தங்கச்சியையும் அதிகாரம் பண்ண முடியல என்றதுக்காக என்ன நீ அதிகாரம் பண்ணி உன் கைப் பிடியில வச்சிருக்க நினைக்கிறியா? கத்தி முனையில இந்த கல்யாணத்த நடத்தினியே, கல்யாணம் உனக்கு மட்டும் சம்பந்தப்பட்டதுனு நினைச்சியா? எனக்கும்தான அதுல சம்பந்தம் இருக்கு?! என் கிட்ட ஒரு வார்த்த முன்னாடியே சொல்லணும்னு உனக்குத் தோனுச்சா? என்கிட்ட சொன்னாலும் நான் சம்மதிக்க மாச்ட்டனு உனக்குத் தெரிஞ்சிருக்கு! பின்ன நீ செய்ய சொல்றத எந்த பொண்ணு சம்மதித்து செய்வா?



முன்னாடியே, இப்படி ஒரு இக்கட்டு என்ன செய்லாம்னு என் கூட உட்கார்ந்து பேசி முடிவு எடுக்க மாட்ட! கல்யாணத்தன்னைக்கும் என் விருப்பதுக்கு மதிப்பு கொடுக்க மாட்ட! உன் வீட்டுக்கு என்ன கூட்டிட்டுப் போய் எனக்கு ஒரு கவுரவத்த கொடுக்க மாட்ட! நாளைக்கு என் எதிர் காலத்தைப் பற்றி யோசிக்காம இப்ப இந்த செயின மட்டும் போட்டுக்க சொல்லுவ! இப்படி என்ன பற்றி எந்த விதத்திலும் யோசிக்காத உனக்காக நான் ஏன் ஒத்துக்கணும்? மாட்டேன், நான் ஒத்துக்க மாட்டேன். நீங்க சொல்ற எதுக்கும் நான் ஒத்துக்க மாட்டேன்!



உன் தங்கை கல்யாணம் முடிந்த பிறகு நீ சொன்ன மாதிரியே நம்ம கல்யாணம் நடக்கப் போறது உண்மைனா உங்க அப்பாவ எங்க தாத்தா கிட்ட வந்து பேசச் சொல்லு. உங்க பேத்தி தான் எங்க வீட்டு மருமக, என் பொண்ணு கல்யாணம் முடிஞ்ச உடனே இவங்க இரண்டு பேருக்கும் பண்ணிடலாம்னு சொல்ல சொல்லுங்க. அப்ப வேணா இந்த செயின நான் கோர்த்துப் போட்டுக்கிறேன். ஆனா இதை எதுவுமே உன்னால செய்ய முடியாதுனா இனி நாம பார்க்க வேண்டாம் பேச வேண்டாம். உங்க தங்கச்சி கல்யாணம் முடிஞ்சி நமக்கு எப்போ கல்யாணம் நடக்கப் போகுதோ அப்ப பார்க்க பேச இருக்கலாம். அதுவரைக்கும் இந்த தாலிய என்னால சுமந்துட்டு இருக்க முடியாது.



நமக்குத் தான் மறுபடியும் கல்யாணம் நடக்க போகுது இல்ல? திரும்ப நீங்க எனக்குத் தாலி கட்ட தான போறீங்க? ஒரு இக்கட்டுல கட்டின இதக் கழற்றி நான் எதாவது ஒரு கோவில் உண்டியல்ல போட்டுறேன். அதுக்காக உங்க மேல அன்பு பாசம் அக்கரை இல்லைனோ உன்ன வேண்டாம்னு சொல்றனோ நினைச்சிக்க வேண்டாம். கொஞ்சம் பிராக்டிக்கலா என் நிலைமையில் இருந்து யோசிச்சிப் பாரு ஷியாம். கல்யாணம் ஆனதுக்கு அறிகுறியா உனக்கு எந்த அடையாளமும் இல்ல. ஆனா எனக்கு இருக்கு. எப்போதும் அந்த மஞ்சள் கயிற்ற நான் என் கழுத்துலையே சுமந்துட்டு இருக்கணும். எத்தனை நாள் நான் காலர் வெச்ச சுடிதார் போட்டு அதை மறைக்க முடியும்? ஹாஸ்டல்ல ரம்யாவுக்குக் கூடத் தெரியாம டிஷர்ட்குள்ள பின் பண்ணிட்டு இருக்கன் தெரியுமா?



இதெல்லாம் இன்னும் எத்தனை நாள் தொடரும்? அதுக்கும் மேல ஒரு பொண்ணுக்கு கல்யாணம் ஆகி தாலி கட்டிட்டப் பிறகு, வெளி உலகத்துக்கு அவளுக்கு கல்யாணமே ஆகாத மாதிரி காட்ட முடியும்னு நினைக்கிறியா? அது சாத்தியப்படுமா? முடியாதில்ல? அப்ப விட்டுடு! ஆனா என் முடிவு இது தான்! உங்களுக்கு ரெண்டு நாள் டைம் தரேன், நீங்க பேசி உங்க முடிவச் சொல்லுங்க. அப்படி எனக்கு சாதகமா முடிவு இல்லனா மூன்றாம் நாள் இதே நேரம் நீங்க கட்டின தாலி எதாவது ஒரு கோவில் உண்டியல்ல இருக்கும். அதுவரைக்கும் என்ன வேற எந்த வகையிலும் கான்டாக்ட் பண்ணாதிங்க, நானும் பண்ணமாட்டேன்” என்று ஒரு நிமிர்வுடனும் உறுதியுடனும் கூறியவள் பின் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பார்க்காமல் அங்கிருந்து விருட்டென்று விலகிச் சென்று மறைந்தாள் மித்ரா.



அவள் பேச்சிலும் செயலிலும் விக்கித்துப் போய் அமர்ந்திருந்தான் ஷியாம்! நிச்சயம் இப்படி ஒன்றை எதிர்பார்த்து அவன் இங்கு வரவில்லை. அதிலும் ‘தாலியைக் கழற்றி உண்டியல்ல போட்டுடுவேனு’ அவள் சொன்ன வார்த்தைகளை அவன் நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. முதலில் கோபப்பட்டாலும் பிறகு அவன் சொல்வதை எல்லாம் கேட்டு ஒத்துக் கொள்வாள் என்று நம்பி தான் அவன் அந்த செயினை வாங்கி வந்தது. ஆனால் அவள் பேசியதும் நாளைய தினம் செய்யப்போவதாக சொன்னது எதையும் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.



அவனுக்குத் தெரிந்தது எல்லாம் ‘தாலினு ஒரு பொண்ணுக்குக் கட்டிட்டா அந்த தாலியையும் அதைக் கட்டியவனையும் மனதால் ஏற்றுக் கொண்டு மதிப்பு கொடுப்பார்கள்!’ என்று. ஆனால் அந்த தாலியைக் கட்டியவனே அந்த தாலிக்கும் அதைக் கட்டிக் கொண்டவளுக்கும் காதலையும் மதிப்பு மரியாதையையும் தந்தால் தான் எந்த ஒரு பெண்ணும் அதை ஏற்றுக் கொள்வாள்னு அவனுக்குத் தெரியல!



அவள் சொல்லிச் சென்ற செய்தி அவனுக்குள் நடுக்கத்தைக் கொடுக்க, உடனே எழுந்து நின்று சுற்றி அவளைத் கண்களால் தேடியவன் அவள் எங்கும் இல்லை என்றதும் அவள் மொபைலுக்கு அழைக்க, ரிங் போனதே தவிர எடுக்கவே இல்லை. அன்று மட்டும் இல்ல அதன் பிறகு வந்த இரண்டு தினமும் அவள் எடுக்கவேயில்லை. அதனால் மூன்றாம் நாள் காலையிலேயே அவள் ஹாஸ்டலுக்கே வந்தவன் அவள் பெயரைச் சொல்லி வெயிட்டிங் ஹாலில் அவன் காத்திருக்க, சரியாக காலேஜ் கிளம்பும் நேரத்தில் இறங்கி வந்தாள் மித்ரா.



அவளைப் பார்த்ததும், “என்ன மித்ரா, போன் பண்ணாலும் எடுக்கமாட்ற? மேசேஜ்க்கும் ரிப்ளை இல்லை. அதான் நேரிலே வந்தன். இன்னைக்கு லீவு போட்டுட்டு உடனே என் கூட கிளம்பி வா. நான் அப்பா கிட்ட எல்லாம் பேசிட்டேன். அப்பாவும் நீ சொன்னதுக்கு எல்லாம் சம்மதம் சொல்லிட்டார். அதனால் உன்ன பார்க்கணும்னு சொன்னார். வா போகலாம்” என்றான் இப்போதும் அவளைப் பற்றி யோசிக்காமல். இதை எல்லாம் கேட்டதும் அவள் துள்ளிக் குதிப்பாள்னு அவன் நினைத்திருக்க,



அவளோ எந்த வித சலனமும் இல்லாமல், “இப்போ முடியாது ஷியாம். காலேஜ்ல ஒரு முக்கியமான பிராக்டிகல் இருக்கு, லீவ் போட முடியாது. சோ ஈவினிங் வரேன். நீங்க எந்த இடம்னு எனக்கு மேசேஜ் மட்டும் பண்ணுங்க. பாய் ஷியாம்!” என்று சொல்லி அவள் சிட்டாகப் பறந்து விட,



மேசேஜில் சொன்னால் அவள் நம்ப மாட்டாள்னும் இதைச் சொல்லும் போது அவள் அடையும் சந்தோஷத்தை நேரில் பார்க்கவும் தான் அவன் ஹாஸ்டல் வந்ததே! அது மட்டுமா? அவள் சொன்னது போல் எங்கே தாலியைக் கழற்றி உண்டியலில் போட்டுவிடுவாளோனு பயந்தும் தான். ஆனால் அவள் எந்த ஒரு சலனமும் இல்லாமல் போக, வேறு வழியில்லாமல் தொங்கிய முகத்துடன் ஏமாற்றத்துடனும் அங்கிருந்து தனியே கிளம்பிப் போனான் ஷியாம்.



அவள் காலேஜ் பக்கத்தில் உள்ள பெருமாள் கோவிலுக்கு வரச் சொல்லி மேசேஜ் பண்ண, அதன் படியே கிளம்பினாள் மித்ரா. வாசலிலே இருந்து அவளை அழைத்துச் சென்றவன் கோவிலின் பின் புற பிரகாரத்தில் சற்றே வயதானவர் உருவத்தில் ஷியாமைக் கொண்டு அமர்ந்திருக்க, தூரத்திலிருந்து பார்க்கும் போதே அவர் தான் ஷியாமின் தந்தை என்று தெரிந்து போனது மித்ராவுக்கு. ‘ஓ… ஷியாமுக்கு வயதானா இப்படி தான் இருப்பார் போல!’ என்று மனதில் நினைத்தவள் ஒருவித படபடப்புடன் அவரை நெருங்க



“டாட் இவ தான் மித்ரா” என்று அறிமுகப் படுத்தினான் ஷியாம்.



“மித்ரா இவர் என் டாட்” என்று சொல்லி அவர் தோளில் கைப் போட்டு அவன் அணைக்க



“வணக்கம் அங்கிள்” - மித்ரா



“நீ தான் என் வீட்டு மருமகளாமா? நல்லா இருக்கியாமா? ஷியாம் எல்லாம் சொன்னான். அவன் கொஞ்சம் அவசரக்காரன்மா, அதான் இப்படி செய்துட்டான். இதனால உனக்கு தான் பாதிப்புனு அவனுக்குத் தெரியல. இன்னும் அவனுக்குப் பக்குவம் பத்தாதுமா. ஆனா ரொம்ப பாசக்காரன்! யாருக்குமே தன்னால கஷ்டம் வரக் கூடாதுனு நினைப்பான்! இதை எல்லாம் நான் யாரோ ஒரு மூன்றாவது மனுஷால்னா சொல்லி இருக்க மாட்டன். நீ அவன் மனைவி என் மருமகள் என்றதால தான் சொல்றன். என்னடா இவர் வந்ததுலயிருந்து மருமக மருமகனு வாய் நிறைய சொல்றாரேனு பார்க்கிறியா? உன்னப்பத்தி ஷியாம் முன்னே சொன்னதும் இப்போ நேர்ல பார்த்த பிறகு உன்ன பிடிச்சிருக்குமா.



எல்லாத்தையும் விட என் பையனுக்கு உன்ன ரொம்பப் பிடிச்சிருக்கு. அவன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம். அதனால நீ தான் என் மருமக!” என்று அவர் எந்த ஒரு அலட்டலும் இல்லாமல் எடுத்த எடுப்பிலேயே கூற



மித்ரா தான் திகைத்துப் போனாள். இந்த வினாடி வரை ‘ஏதோ ஷியாம் சாக்கு போக்கு சொல்லி சமாளிக்க தான் கூப்பிடறான்னு’ நினைத்து வர அவன் தந்தையைப் பார்த்த பின்பு கூட ‘இவர் மட்டும் என்ன சொல்லப் போறாரோனு’ தான் நினைத்திருந்தாள். ஆனால் அவர் இவ்வளவு சுலபமாக ஒத்துக்கொள்ள, அவர் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.



“என்னமா அப்படி பார்க்கற? எனக்கு முழு சம்மதம் தான். ஆனா இப்போ உன்ன என் வீட்டுக்குக் கூட்டிட்டுப் போகவோ இப்போவே உங்களுக்கு கல்யாணம் பண்ணவோ முடியாது. வீட்டுல கல்யாண வயசுல பொண்ண வச்சிகிட்டு ஒரு தகப்பனா என்னால எதுவும் செய்ய முடியாது. நீயும் என் பொண்ணு மாதிரி தான்! அதுக்காக உன்னையும் நான் விட்டுட மாட்டேன். இப்போ என்னால எதுவும் செய்ய முடியாது. முதல்ல பொண்ணு கல்யாணம் முடியட்டும், பிறகு என் மனைவிகிட்டையும் என் மச்சான்கிட்டையும் பேசிட்டு முறைப் படி வந்து உங்க தாத்தாகிட்ட பெண் கேட்டு கல்யாணம் பண்றன். நீ என்ன நம்பலாம்! இதைத் தான் நான் ஷியாம் கிட்ட சொல்லி அனுப்பினன். ஆனா நீ பிடிவாதமா இருந்தியாம்! அதான் நானே உன்கிட்ட நேர்ல பேச வந்தன். இதுல ஒளித்து மறைத்துப் பேச என்ன இருக்கு? அதனால் தான் நீ வந்த உடனே நேரடியா உன்கிட்ட எல்லாத்தையும் பேசிட்டேன்னு!” சொல்லி அவர் சினேகமாகச் சிரிக்க,



முதல் சந்திப்பிலே அவர் பேச்சிலேயே அவரை அவளுக்குப் பிடித்துவிட்டது. பேசாமல் இவளும் சிநேகமாகச் சிரிக்க “என்னமா எதுவும் பேச மாட்டற? வந்ததில் இருந்து அமைதியா இருக்க! ரொம்ப அமைதியான பொண்ணா நீ?” - ஷியாமின் அப்பா



“அப்பா… இவளா அமைதி?! சினிமா தியேட்டர்ல இவ தலை விரி கோலமா போட்ட ஆட்டத்தைப் பார்த்து நான் கூட இவளுக்குப் பேய் பிடிச்சிடுச்சோனு நினைச்சிட்டன்! ஹி…. ஹி…. அப்படிப் பட்ட இவளைப் போய் அமைதினு சொல்றிங்களே?!” ஷியாம் அவளை வம்பிழுக்க



அதற்குப் போலியாக அவனை முறைத்தவள், “நான் அமைதி எல்லாம் இல்ல அங்கிள். ஷியாம் சொல்ற மாதிரி நான் நல்லாவே வாய் அடிப்பன். வந்ததுல இருந்து நீங்க பேசிட்டே இருந்திங்களா, அது வேற இல்லாம நான் முதல் முறையா உங்கள பார்க்கறனா அதான் பேசல. எனக்கு ஷியாம் சொன்னதுல நம்பிக்கை எல்லாம் இல்லாமல் இல்ல அங்கிள்! கல்யாணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம்? ஒரு அவசரத்துக்கே நடந்ததா இருந்தாலும் அது ரெண்டு வீட்டுப் பெரியவங்க யாருக்காது தெரிஞ்சி இருக்கணும்னு நினைச்சேன். அதே மாதிரி பெரியவங்க பேசி முடிவு எடுத்தா நல்லதுனு தோனுச்சி. அதான் அங்கிள் ஷியாம் கிட்ட அப்படி சொன்னன். சாரி அங்கிள் நிஜமாவே காலையில் எனக்கு பிராக்டிகல் இருந்தது. அதான் கூப்பிட்ட உடனே வர முடியல!” என்று கூறி அவள் மன்னிப்பு கேட்க,



“பரவாயில்லமா, சாரிலாம் எதுக்கு? உங்க தாத்தாகிட்ட நான் மட்டும் தனியா வந்து பேசறது நல்லா இருக்காது. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நான் என் மனைவியோட வந்து அவர் கிட்ட பேசறன். அதுவரைக்கும் கொஞ்ச நாள் பொறுமையா இருங்க” என்று அவர் ஓர் பெரியவராக எடுத்துச் சொல்ல,



“ம்ம்ம்… சரிங்க அங்கிள்” என்றாள் மித்ரா



“ஷியாம் அதைக் கொடு” என்று அவர் அவனிடம் கை நீட்ட



சிறு நகை டப்பாவை அவரிடம் நீட்ட. அதை வாங்கியவர் “நீ எப்போதும் அந்த மஞ்சள் கயிற்றோட காலேஜ் போக முடியாது. எனக்கு கல்யாணம் ஆகிடுச்சினு சொல்லி வெளியில தெரியர மாதிரி போட்டுட்டுப் போனாலும் கணவர் யார் என்ன செய்றார்னு பல கேள்விகளுக்குப் பல பேருக்கு பதில் சொல்லனும்.



ஷியாம் தான் கணவன்னு நீ வெளில யார் கிட்டனா சொல்லப் போக அது அப்படியே இவன் அம்மா காதுக்குப் போனா அவ இந்த கல்யாணத்த ஒத்துக்க மாட்டா. அதனால் தான் நானே நீங்க ரெண்டு பேரும் காதலிக்கிறிங்கனு சொல்லி புதுசா ஊர் அறிய திருமணம் செய்யப் போறன். ஆனால் அதுவரை நீ அந்த தாலியைக் கழற்றி கோவில் உண்டியல்ல போட்டுட போறன்னு சொன்னியாமே! என் மகன் முதல் முதல்ல ஆசைப் பட்டு உனக்கு கட்டின தாலிமா அது! அப்படி மட்டும் செய்திடாத! இதை உனக்கு ஒரு அப்பாவா இருந்து நான் சொல்றேன் கேட்டுக்கோ. இந்தா இந்த செயின்ல அதைக் கோர்த்துக்கோ” என்று சொல்லி இரண்டு தினத்துக்கு முன்பு ஷியாம் கொடுத்த அதே நகை டப்பாவை அவர் நீட்ட,



மித்ராவால் மறுக்க முடியவில்லை. உடனே அவளும் அதை வாங்க கை நீட்ட, திடீர் என்று என்ன நினைத்தாரோ?! அதை அவளிடம் கொடுக்காமல் தன்னிடமே வைத்துக் கொண்டவர், “என் கூட ரெண்டு பேரும் வாங்க” என்று கூறி மகாலட்சுமி சன்னதி முன் போனவர் அந்த செயினை மட்டும் எடுத்து ஐயரிடம் கொடுத்து அம்மன் பாதத்தில் வைத்துக் கொடுக்கச் சொல்ல, அதன்படியே ஐயர் செய்து எடுத்து வர அதை ஷியாமை வாங்கச் சொல்லியவர் “அதை என் கண்ணெதிர என் மருமகளுக்குப் போடுடா. இதையே நாங்க உனக்கு போட்ட நிச்சயதார்த்த நகையா எடுத்துக்கோ மித்ரா!” என்று அவர் இருவருக்கும் சொல்ல பிறகு அந்த செயினை மித்ராவின் கழுத்தில் போட்டான் ஷியாம்.



இருவரும் அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்க, ஐயரிடம் இருந்து பூ வாங்கி அவர்கள் இருவரின் தலையிலும் போட்டு ஆசிர்வதித்தார் ஷியாமின் அப்பா.



“ரெண்டு நாள் கழிச்சி கோவில்ல பொங்கல் வெக்கறோம். அப்ப வந்திடு மித்ரா” ஷியாம் தந்தை



“நான் எப்படி……?” என்று மித்ரா இழுக்க





“இனிமே அது உன் வீடு மித்ரா. ஷியாம் மனைவியா இல்லைனாலும் இப்போதைக்கு அவன் ஃபிரண்டா வா. பிறகு எல்லாம் முடிஞ்சி உரிமை உள்ள ஷியாம் மனைவியா அங்கேயே இருக்கலாம்” என்று அவர் கூற பிடிக்கவில்லை என்றாலும் அரை மனதாக “சரி” என்றாள் மித்ரா. பின் அனைவரும் சென்று விட அன்றிலிருந்து கொஞ்சம் அதிகமாகவே மித்ராவிடம் கொஞ்சலும் கெஞ்சலுமாகவே பேச ஆரம்பித்தான் ஷியாம்! கணவன் என்பதால் அனைத்துக்கும் சிரித்து வைத்தாள் மித்ரா.



அன்றைய தினம் மித்ரா தன் தாத்தாவிடம் தன் காதல் விஷயத்தை தெரியப்படுத்த முடிவெடுத்து அவருக்கு போன் செய்ய அவர் எடுக்கவும்,



“ஹலோ தாத்தா நான் மித்ரா பேசறேன்” மித்ரா



“என்னடா இப்ப தான் உனக்கு இந்த தாத்தா ஞாபகம் வந்துச்சா?. எப்படிடா இருக்க? படிப்பெல்லாம் எப்படி போகுது ?” - தாத்தா



“நான் நல்லா இருக்கேன் தாத்தா. படிப்பெல்லாம் நல்லா போகுது. ஒரு பிரச்சினையும் இல்ல. ஒரு முக்கியமான விஷயம் உங்ககிட்ட சொல்லணும். அதுக்குத்தான் கால் பண்ணேன். அது வந்து…” - மித்ரா



“எதுவானாலும் சொல்லுடா. ஏதாவது வேணுமா ?” - தாத்தா



“எதுவும் வேண்டாம் தாத்தா. உங்ககிட்ட எப்படி சொல்றது?.. தாத்தா நான் ஒண்ணு சொல்வேன், கோபப்படாம கேளுங்க. என்ன ஒருத்தர் லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கறேனு சொல்றார் தாத்தா. எனக்கும் அவரப் புடிச்சிருக்கு கல்யாணத்துல எனக்கும் சம்மதம். அவங்க வீட்டிலையும் இதுக்கு ஒத்துகிட்டு என்கிட்ட பேசினாங்க தாத்தா. அவர் வீட்டுல ஒரு பிராப்ளம் தாத்தா. அது முடிஞ்ச பின்னாடி அவங்க எல்லாரும் வந்து உங்ககிட்ட என்ன பொண்ணு கேக்கறதா சொல்லியிருக்காங்க. நீங்க என்ன தாத்தா சொல்றீங்க?” - மித்ரா



“நான் சொல்றதுக்கு என்னமா இருக்கு? அதான் நீயே முடிவெடுத்துட்டியே, அப்பறம் என்ன? நீதான் பிடிவாதக்காரி ஆச்சே! நீ இப்படி தான் சொல்லிட்டு வந்து நிற்பனு எனக்கு முன்னாடியே தெரியும் நல்லவேளை, கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்காம அதுக்கு முன்னாடியே சொன்னியே அதுவரைக்கும் சந்தோஷம். நீ புத்திசாலி. நல்ல யோசிச்சி தான் முடிவெடுத்துருப்பனு நெனைக்கிறேன். நீ நல்லா இருந்தா அதுவே எனக்குப் போதும்டா. எப்பம்மா வீட்டுக்கு வருவ?” - தாத்தா



“இந்ந ஏப்ரலோட என் படிப்பு முடியப் போகுது தாத்தா. அப்ப ஒரேடியா நம்ம வீட்டுக்கு வந்துடுவேன். நீங்க உங்க உடம்ப பார்த்துக்கோங்க. பை தாத்தா” - மித்ரா



“சரிடா, நீயும் பாத்துக்கோ. வச்சிடறேன்டா” - தாத்தா



‘அப்பாடா! ஒருவழியா தாத்தாகிட்ட சொல்லியாச்சி!’ என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் மித்ரா.



ஷியாமின் அப்பா சொன்னபடி அவர்கள் கோவிலுக்குச் சென்று பொங்கல் வைக்கும் நாளும் வர, மித்ரா போக வேண்டாம் என்றே நினைத்தாள். ஆனால் ஷியாமின் அப்பா திரும்பவும் அவளுக்குப் போன் பண்ணி அழைக்கவும் அவர் வார்த்தைக்காக கிளம்பி ரம்யாவுடன் சென்றாள் மித்ரா.



அங்கு ஷியாம் குடும்பத்துடன் அவன் மாமா மற்றும் சித்தப்பா குடும்பமும் இருக்க, அப்போது தான் ஷியாமின் மாமன் மகளையே பார்க்க. அவளோ நவநாகரிகமாக இருந்தாள். அது எதுவும் மித்ரா மனதில் பதியவில்லை. அவளும் டாக்டர் படிக்கிறாள் என்பது மட்டும் தான் பட்டது. ‘ஓ…. டாக்டருக்கு டாக்டர் மனைவினு படிக்க வச்சி இருக்கங்க! பூஜை முடிந்து கோவில் மண்டபத்தில் அனைவரும் அமர்ந்திருக்க, மித்ராவும் ரம்யாவும் மட்டும் சற்று தள்ளி ஆனால் அவர்கள் பேசுவது கேட்கும் தூரத்தில் அமர்ந்து இருந்தார்கள்.



பேசிக் கொண்டிருக்கும் போதே ஷியாமின் அப்பா, “சொந்தத்தில கல்யாணம் செய்தா அது வருங்கால சங்கதிகளுக்கு நல்லது இல்லனு சொல்றாங்க மச்சான்! அதே சமயத்தில ஷியாமும் வேறு ஒரு பொண்ண விரும்பற மாதிரி தெரியுது. குழந்தைகள் சந்தோஷம் தான நமக்கு முக்கியம்? அதனால அம்முவுக்கு (ஷியாமின் மாமன் மகள்) வேற நல்ல இடமா பார்க்கலாம்னு!” அந்த பெண் யார்னு சொல்லாமல் பட்டென்று அவர் போட்டு உடைக்க,



ஷியாமின் மாமா முகமோ அதைக் கேட்டு சிரிப்பைத் துடைத்து யோசனைக்கு மாறியது. அதைச் சமாளித்து, “அதனால என்ன மச்சான்? நீங்க சொல்றது தான் சரி! இன்னார்க்கு இன்னார்னு முடிச்சிப் போட்டத நாம மாற்றவா முடியும்னு?” அவர் அரைகுறையாகச் சொல்லி சமாளித்தார்.





காலையில் இருந்தே ‘இவ ஏன் இங்கு வந்தானு?’ அடிக்கடி அவளையே பார்த்துக் கொண்டிருந்த ஷியாமின் அம்மா, அவன் வேறு ஒரு பெண்ணைக் காதலிக்கிறான்னு தெரிந்த உடனே அவர் மித்ராவைப் பார்த்து முறைக்க, மித்ரா தான் பார்வையை வேறு எங்கோ திருப்ப வேண்டியதாகிப் போனது! பிறகு வேறு எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் அனைவரும் அங்கிருந்து கிளம்பி வந்தார்கள். ரம்யாவுக்கு இருவரும் காதலிப்பது மட்டும் தான் தெரியும். கல்யாணம் ஆனது தெரியாது, மித்ரா மறைத்து விட்டாள்.



அதன் பிறகு ஷியாம் அவளைத் தினமும் பார்க்கணும்னு அடம்பிடிக்க, இது மட்டும் இல்லாமல் வார இறுதி நாட்களில் அவளை வெளியே அழைத்தும் சென்றான். பத்து நாட்கள் இதே போல் சென்றிருக்க, ஷியாம் தந்தை திரும்ப வெளி நாடு செல்ல இருப்பதால் அதற்கு முன் மித்ராவை சந்தித்துப் பேசியவர் ஷியாமுக்கும் அவன் தாய்க்கும் ஏன் விலகல் தன்மை ஏற்பட்டது என்பதையும் சொல்லிச் சென்றார்.



வழக்கம் போல் மாமியார் மருமகளுக்குள் ஒத்துப் போகாததால் ஷியாம் அம்மா தன் கணவனை அழைத்துக் கொண்டு தனிக்குடித்தனம் வந்து விட, அவள் மாமனார் மாமியாரோ ‘என் மகன எங்க கிட்ட இருந்து பிரிச்ச இல்ல? உன் மகனப் பிரிக்கிறோம் பார்னு!’ நினைத்து ஷியாமுடைய நான்காவது வயதில் அவனைப் பிரித்து அழைத்துச் சென்று விட்டனர். அப்போது ஷியாமின் அம்மா இரண்டாவதாக கருவுற்று இருந்ததால் ஷியாமின் அப்பாவும் தடுக்கவில்லை. அப்படி அழைத்துச் சென்றவர்கள் பிறகு அவனை அவன் தாயிடம் சேரவே விடவில்லை.



ஷியாமுக்கும் பொதுவாகவே அவன் தாய் தந்தையரை விட தாத்தா பாட்டி மீது பாசம் அதிகம். அதனால் அவன் முழுமையாக அவர்களுடன் ஒன்றிப் போய் அவன் தாயைத் தேடாமல் இருந்தான். தன் பிள்ளையிடம் தன்னைப் பற்றி ஏதேதோ சொல்லி அவனைப் பிரித்துவிட்டார்கள்னு முதலில் நினைத்தவர் அவன் வளர வளர, அவனுக்கே தன்னைப் பிடிக்கவில்லை என்ற எண்ணத்திற்கு வந்தவர். முழுமையாக ஷியாமிடம் இருந்து விலக ஆரம்பித்தார் அவன் தாய்.



நான்கு வயதில் தாத்தா பாட்டி வீட்டுக்குச் சென்றவன் அவன் காலேஜில் சேரும் போது பாட்டி இறந்து விட தாத்தா படுக்கையில் படுத்து விட இதற்கு மேல் அங்கு இருக்க முடியாததால் திரும்ப அவன் தாயிடமே வந்து விட்டான். அந்த வீட்டிள் அவனும் ஒரு டேபிள் சேர் தானே தவிர அவனைத் தன் மகன் என்று நினைக்கவில்லை அவன் தாய்.





இதையெல்லாம் மித்ராவிடம் கூறியவர் அவனுக்குக் கிடைக்காத அன்பு பாசத்தைக் கொடுத்து அவனை இனி நீ தான் பார்த்துக்கணும்னு சொல்லி வெளி நாடு சென்றார் ஷியாம் தந்தை



மித்ராவும் அவனிடம் பாசமாகத் தான் இருந்தாள். சாப்டியானு கேட்பது முதல் அவனுக்கு உடம்பு சரியில்லைனா வீட்டுக்குப் போய் அவனைப் பார்த்துக் கொள்வது வரை செய்தாள். ஷியாமின் தந்தை என்ன சொல்லிச் சென்றாரோ?! மித்ரா அந்த வீட்டிற்குப் போய் அவனைப் பார்த்துக் கொண்டதற்கு ஷியாமின் தாய் எந்த தடங்கலும் பண்ணவில்லை. பகல் முழுக்க அங்கிருந்தாலும் இரவு ஹாஸ்டலுக்கு வந்து விடுவாள் மித்ரா.



இப்படியே நாட்கள் செல்ல, மித்ராவின் காலேஜில் மூணாறுக்கு டூர் அழைத்துச் செல்ல திட்டமிட, ‘ஐந்து நாள் உன்னப் பார்க்காமல் நான் எப்படி இருப்பேன்னு?’ சொல்லி முதலில் அவளை அனுப்ப மறுத்தவன் பின் வேறு வழியில்லாமல் அறைகுறை மனதோடு சம்மதிக்க மூணார் சென்றாள் மித்ரா. முதல் இரண்டு தினம் பகல் முழுக்க நன்றாக நண்பர்களுடன் கொட்டம் அடித்தவள் இரவு அவனுக்கு அழைத்துப் பேசவும் செய்தாள். மூன்றாம் நாள் காலையிலே அவளை அழைத்தவன், தான் மூணார் வந்து இருப்பதாகக் கூறி அவள் எங்கு இருக்கிறாள் என்று கேட்டு அந்த இடத்திற்கே சென்று பார்த்தவன்,



“உன்னப் பார்க்காம இருக்க முடியல மித்ரா! அதான் வந்துட்டன்” - ஷியாம்



“அதுக்காக இங்கேயே வருவீங்களா? நீங்க எப்படி எங்க கூட மிங்கிள் ஆக முடியும்?” - மித்ரா



“நீ மனசு வெச்சா முடியும். நான் உன் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்தே இருக்கேன். ஸோ பிராப்ளம் இருக்காது. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணு. நான் திரும்பிலாம் போகமாட்டேன். ப்ளீஸ் மித்ரா…” - ஷியாம் கெஞ்ச



“சரி சரி சமாளிக்கிறேன்! இருந்து தொலைங்க!” - மித்ரா



“தேங்க்ஸ் மித்ரா!” - ஷியாம்



பின் அவள் நண்பர்களுடன் சேர்ந்து அவனும் சுற்றியவனுக்கு அதுவும் அலுத்து விட



“என்ன மித்ரா, உன் பிரண்ட்ஸ் கூட சுத்தவா நான் வந்தன்?” - ஷியாம்



“அதுக்காக அவங்கள விட்டுட்டு நாம மட்டுமா சுற்ற முடியும்?” - மித்ரா



“என் மனைவி கிட்ட கொஞ்ச நேரம் கூட டைம் ஸ்பென்ட் பண்ண முடியல. இதுக்கா இவ்வளவு தூரத்திலிருந்து உன்னப் பார்க்க வந்தன்?” - ஷியாம்



“நீங்கதான சொன்னீங்க? சேர்ந்தே இருக்கேனு! இப்ப என்ன மாத்தி பேசறீங்க?” - மித்ரா



“ஆமா, அப்ப சொன்னேன் அதே மாதிரி செஞ்சேன். இப்ப அது போர் அடிக்குது. ப்ளீஸ் மித்ரா, நாம ரெண்டு பேர் மட்டும் தனியா பக்கத்துல எங்கனா சுத்திட்டு இருப்போம். பிறகு சாய்ந்திரம் நீ தங்கி இருக்கிற ரூமுக்கே கொண்டு வந்து விட்டுடறன். இப்போ வா மித்ரா!” - ஷியாம்



அவளுக்கும் பேசாமல் பேவோமா என்றே தோன்றியது. ரம்யா கௌரி எதிரில் அவன் தன்னிடம் மட்டும் காதில் எதையோ சொல்லி சிரிக்கும்போது அவளுக்கு என்னமோ போல் ஆகும்! அதற்காக இவ்வளவு தூரம் தனக்காக வந்திருக்கும் இவனை விட்டுவிட்டு அவர்களுடன் சுற்றுவதற்கும் அவளுக்கு மனம் வரவில்லை. அதனால் அவன் சொல்வது சரியாகப் பட, ரம்யாவிடமும் கௌரியிடமும் மட்டும் உண்மையைச் சொல்லி, மேலும் “எனக்கு உடம்பு சரியில்லை என்ற காரணத்தால் நான் திரும்ப டாக்ஸி புக் பண்ணி ரூம் போய்ட்டேனு மேம் கிட்ட சொல்லிடுங்கனு” அவர்கள் மாட்டாமல் இருக்க வழி சொன்னவள் மாலை தன் ரூமுக்கே வந்துவிடுவதாக சொல்லி அவனுடன் சென்றாள் மித்ரா. அதன் பிறகு குதிரை சவாரியில் இருந்து யானை சவாரி வரை கட்டி அணைத்து சுற்றிப் பார்த்தவர்கள். ரோஸ் கார்டனில் அவள் இடுப்பில் கை போட்டு அவளைத் தன்னுடன் சேர்த்து அணைத்த படி அந்த கையை எடுக்காமலே அந்த பூங்கா முழுக்க அவன் சுற்றி வர. அவளும் அங்கிருந்த மற்ற ஹனி மூன் கப்புல்சை அவ்விதமே பார்த்ததால் அவனிடம் சகஜமாக ஒட்டிக் கொண்டு சுற்ற ஆரம்பித்தாள் மித்ரா.



பின் எக்கோ பாயிண்ட் சென்று ஒருவர் பெயரை மற்றவர் சொல்லி அது திரும்ப அழைக்கும் போது கேட்டு மகிழ்ந்தனர். அங்கிருந்த கடைகளில் கணவனாக அவளுக்கு வேண்டியதை பார்த்துப் பார்த்து வாங்கிக் கொடுத்தான் ஷியாம். அவளும் மறுக்கவில்லை. இத்தனை நாள் இருந்ததை விட கொஞ்சம் அதிகப்படியான நெருக்கத்துடனே இருந்தார்கள் இருவரும்.



மாலை சற்று லேசாக தூரிய மழை பிறகு அதிகமாக வலுக்க, அங்கிருந்து வாகனங்கள் கீழே இறங்க வழி இல்லாமல் மரங்கள் முறிந்து விழுந்து ஒரு இடத்தில் மண்சரிவும் ஏற்பட இவர்கள் பாதி வழியிலேயே மாட்டிக்கொண்டார்கள்.



இருவருடைய போனும் ஸ்விட்ச் ஆப் ஆகி விட, எப்படி ரம்யாவுக்கு தகவல் சொல்வதுனு யோசித்துப் பிறகு போய்விடலாம்னு அமைதி காக்க, ரோட் நாளை காலை இல்லை என்றால் மதியம் தான் சரியாகும் என்றார்கள் அங்கிருந்தவர்கள். அதனால் இரவு எட்டு மணி வரை பொறுத்துப் பார்த்தவன் பின் அவர்கள் இரவு தங்க ரூம் ஏற்பாடு செய்தான் ஷியாம்.



“இல்ல.. எவ்வளவு நேரம் ஆனாலும் நாம இங்கையே இருந்துட்டு போகலாம் ஷியாம்னு” மித்ரா தயங்க “என்ன மித்ரா, நாம ரெண்டு பேரும் கணவன் மனைவினு சொல்லி இருக்கேன்! நீ தயங்கறதால டிரைவர் ஏதோ சந்தேகத்தோட நம்மளப் பார்க்கறான். அதனால நான் சொல்றத கேள்னு!” அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில் அவன் அதட்ட, வேறு வழியில்லாமல் அவனுடன் ஹேட்டல் ரூமுக்குச் சென்றாள் மித்ரா. டிரைவரை அங்கேயே இருந்து காலையில் ரோட் சரியானதும் அழைத்துப் போகும் படி சொல்ல, அவனும் அங்கேயே இருந்தான். ரிசப்ஷனில் போன் வாங்கி ரம்யாவுக்குத் தகவல் சொல்லி சமாளிக்கச் சொல்ல, அவளும் சரியென்றாள். அங்கேயே இருந்த ரெஸ்டாரெண்டுக்குப் போன் செய்து உணவு ஆர்டர் கொடுத்து அதை ரூமுக்கே வரவழைத்தான் ஷியாம். அந்த உணவையும் அவள் சாப்பிடாமல் கொஞ்சம் டென்ஷனுடனே அமர்ந்திருக்க அதைப் பார்த்த அவனோ,



“என்ன மித்ரா, காலையிலிருந்து நல்லா தான இருந்த! இப்ப ஏன் இந்த டென்ஷன்? நாம இதுக்கு முன்னாடி தனியா இருந்ததே இல்லையா? எத்தனையோ தடவை என் வீட்டுல என் ரூம்ல என் கூட இருந்து இருக்க தான?! இது எல்லாத்துக்கும் மேல நாம இரண்டு பேரும் கணவன் மனைவி! என்னமோ யார் கூடையோ தனியா இருக்கிற மாதிரி இல்ல இப்ப இருக்க! அப்படியே ஏதாவது நமக்குள்ள நடந்தாலும் அது எல்லா கணவன் மனைவிக்குள்ள நடக்கற சாதாரண விஷயம் தான? அப்ப நீ இன்னும் மனசார என்ன உன்னோட கணவனா நினைக்கில! நான் மட்டும் தான் உன்ன என் மனைவியாவும் உயிராவும் நினைக்கிறேன்! ச்சே..” என்றவன் அதற்கு மேல் பேசப் பிடிக்காமல் அங்கிருந்து சென்று பால்கனியில் நின்றான் ஷியாம்



பிறகு இவள் தான் அவனைத் தேடி போய் பேச வேண்டியதாகப் போனது. “ஷியாம், சாப்பிட வாங்க. நீங்க என் கணவன் இல்லனு நான் சொன்னனா? காலேஜ் டூர் வந்த இடத்தில மேம்க்கு தெரியாம நான் வந்து இருக்கேன். என்ன அவங்க எல்லோருக்கும் நல்லா தெரியும். நான் அங்க இல்லனு தெரியவந்தா எனக்கும் அசிங்கம், ரம்யாவுக்கும் தான் பிரச்சனை! அதான் நான் கொஞ்சம் டென்ஷனா இருந்தேன். மற்ற படி உங்க கூட தனியா இருக்க எனக்கு என்ன பயம்? நான் என் ஹஸ்பண்ட் கூட தான இருக்கேன்?!” என்று அவனிடம் சகஜமாகப் பேசி முதுகுப்புறமாக அணைத்தபடி அவன் தோளில் சாய “என்ன நம்பு மித்ரா, இந்தப் பிறவியில் நீ மட்டும் தான் என் மனைவி! அப்படி மீறி எங்க வீட்டுல உன்ன வேணாம்னு சொன்னா நான் செத்தாலும் சாவேனே தவிர நிச்சயம் வேற ஒருத்தியை நினைக்க மாட்டேன்னு!” உணர்ச்சிப் பெருக்கில் கூறியவன் அவளை முன்புறம் இழுத்து அவள் முகம் எங்கும் முத்த மழை பொழிந்தான்



பின் அவளிடமிருந்து விலகியவன், “நீ பயப்படவே வேண்டாம்! நிச்சயம் உன் வீட்டு என் வீட்டு சம்மதத்தோட நம்ம கல்யாணம் நடக்க தான் போகுது!” என்றான் சத்தியவாக்காக.



“ம்ம்ம்…. நான் உங்கள நம்பறேன் ஷியாம்” - மித்ரா



இரவு உணவை சாப்பிட்டு முடித்து இருவரும் தூங்க, நடு சாமத்தில் குளிரினால் வந்த தாக்கமோ காலையில் இருந்து அவளுடன் ஒட்டிக் கொண்டே திரிந்ததால் வந்த நெருக்கமோ இல்லை இன்று அவளிடம் பேசியதின் உரிமையோ ஏதோ ஒன்று அவனை அவளிடம் கணவனாக நெருங்க வைக்க, முதலில் தூக்கத்தில் இருந்த மித்ராவும் பின் அவன் தேவைகளை உணர, தன் கணவன் தான் என்ற எண்ணத்திலும் மனைவிக்கே உள்ள கடமை இது என்ற எண்ணத்திலும் அவளும் எல்லா பெண்களைப் போல் ஆசா பாசங்களை உணர அவன் தேடலுக்கு வழி விட்டு அவனுள் புதைந்தாள் மித்ரா.



காலையில் எழும் போது இரவு நடந்தது அனைத்தும் அவளுக்கு நினைவு வர, அதனால் அவளுக்கு ஒரு துளி கூட வருத்தமோ துக்கமோ கோபமோ பயமோ வரவில்லை! ‘மாறாக, என் கணவன்! என்னைத் தொட்டு தாலி கட்டிய கணவனோடு தான் நான் இருந்தேன்! ஊர் அறிய இல்லை என்றாலும் எங்கள் திருமணம் முடிந்தது முடிந்தது தான்!’ என்ற எண்ணத்தில் இருந்தாள் மித்ரா. ரோடு சரியாகி விட இவர்கள் கிளம்பி ரூமுக்குச் சென்றனர். மழையால் மற்றவர்கள் யாரும் வெளியே செல்லாமல் இருக்க, அதுவே மேம்களுக்கு தெரியாமல் சமாளிக்க வசதியாய் போனது. மழை நீடித்ததால் மறுநாளே ஷியாம் உள்பட அனைவரும் ஊர் வந்து சேர்ந்தார்கள். வழக்கம் போல ஷியாம் அவளிடம் உயிராக பாசமாக இருந்தான். அன்றைய சம்பவத்தால் அவனிடம் வருத்தம் இல்லை. ‘நீ என் மனைவி’ என்ற உரிமை தான் இருந்தது.



ஷியாமின் தங்கை திருமணத்திற்கு பத்து நாள் முன்பு மித்ராவுக்கு உடல் அசதியாகவும் சோர்வாகவே இருக்க, பின் நாளடைவில் வாந்தி மயக்கம் என்று அதிகமாக, முதலில் சாதாரணமாக நினைத்தவள் பின் நாட்கள் தள்ளிப் போய் இருப்பதை உணர்ந்து பிரக்னன்ஸி கிட் - இல் பார்க்க, அது பாஸிட்டிவ் என்று காட்டியது. அவள் இதை கொஞ்சம் கூட எதிர் பார்க்கவில்லை. யாராவது பெரியவர்கள் இருந்தால் எடுத்துச் சொல்லி அறிவுரை கூறி இருப்பார்கள். அது தான் அவளுக்கு இல்லையே? முதலில் குழம்பியவள் பின் ஷியாமை அழைத்து அனைத்தும் கூற



“இந்த குழந்த நமக்கு வேண்டாம் மித்ரா. இந்த குழந்தையால நீ எங்க வீட்டுக்கு வர்றது தடங்கல் ஆகும்னா அப்படிப் பட்ட குழந்தை எனக்கு வேண்டாம். எனக்கு நீ தான் வேண்டும், அதுக்கு பிறகு தான் குழந்த! நாம குழந்தையோட போய் நின்னா நிச்சயம் எங்க வீட்டுல சம்மதிக்க மாட்டாங்க. இப்ப என்ன, அம்பத்திஞ்சி நாள் தான ஆகி இருக்கு? பேசாம இந்த குழந்தைய கலச்சிடு!” என்றான் ஷியாம் சாதாரணமாக



“எதுக்கு ஷியாம் இந்த குழந்தைய கலைக்கணும்? நீங்க என் கணவன் தான? இது உங்க குழந்தை தான? நாம என்னமோ செய்யக் கூடாத தப்ப செய்து முறை தவறி தப்பான வழில இந்த குழந்தை தங்கின மாதிரி பேசுறிங்க! இந்த குழந்தைக்கும் உங்க வீட்டுக்கு நான் வர்றதுக்கும் என்ன சம்மந்தம்? நீங்க ஓர் டாக்டர் தான? ஆனா ஒரு உயிர அழிக்கச் சொல்றிங்க! நான் அத செய்ய மாட்டன்! என்ன ஆனாலும் இந்த குழந்தைய பெத்தே தீருவேன்!” என்றாள் அவள். உறுதியாக



“ஏன் மித்ரா இப்படி பிடிவாதம் பிடிக்கற? நான் என்ன சொன்னாலும் நீ கேட்க மாட்டியா? இன்னும் பத்து நாள்ள என் தங்கச்சிக்குக் கல்யாணம். அதுக்குப் பிறகு இன்னும் ஏழு எட்டு மாதத்துல நமக்குக் கல்யாணம் செய்யறதா அப்பா சொல்லி இருக்கார். அப்ப அந்த நேரத்தில வயித்துல குழந்தையோட வந்து நிற்பியா? நாம காதலிக்கிறோம்னு சொல்லி தான் வீட்டுல பேசி கல்யாணம் செய்து வைக்கப் போறாங்க. அதனால தான் இந்த குழந்த வேண்டாம்னு சொல்றன். நான் என் முடிவ சொல்லிட்டன் மித்ரா. பிறகு உன் இஷ்டம்!” என்று கோபமாக கூறியவன் அங்கிருந்து சென்று விட



‘பிறகு எதுக்கு என்ன தொட்ட?’ என்று நினைக்க, ஆனால் அதை வாய் விட்டுக் கூற முடியவில்லை அவளால். அன்று நடந்ததற்கு இவளும் தானே பொறுப்பு? அதனால் இந்த குழந்தையை கலைப்பது இல்லை என்ற முடிவில் அவள் ஹாஸ்டல் வர உடனே ஷியாமிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘ஏதோ சமாதானம் செய்ய தான்!’ அழைக்கிறான் என்று நினைத்து இவள் அட்டன் பண்ண



“மித்ரா, அப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்துட்டாறாம்! இப்போ தான் அப்பா கூட தங்கியிருக்கிற அங்கிள் ஒருத்தர் போன் பண்ணார். ஃபார்மாலிடிஸ் முடிஞ்சி அப்பாவ வாங்கி வர நான் அங்க போறன். சோ டேக் கேர்” - ஷியாம்



இங்கும் அங்கும் அலைந்தது, ஷியாம் அந்த குழந்தையை வேண்டாம்னு கலைக்கச் சொன்னது, இப்போ ஷியாம் தந்தை இறந்த அதிர்ச்சி இவை அனைத்தும் சேர்ந்து அன்றே அந்த கரு இயற்கையான முறையில் கலைந்து போனது! ரூமில் ரம்யாவும் இல்லாமல் அரவணைத்துப் பார்த்துக் கொள்ள தாய் இல்லாமல் அவள் வலியையும் வேதனையையும் கூட இருந்து பங்கேற்க கணவனும் இல்லாமல் ஓர் அநாதையாகவே இருந்தாள் மித்ரா!



அதற்குள் ஷியாமும் அவன் தந்தை உடலை ஊருக்குக் கொண்டு வந்து அவருக்கு இறுதி சடங்குகள் செய்ய, அனைத்துக்கும் மித்ரா கூட இருக்கும் படி பார்த்துக் கொண்டான் ஷியாம். அவள் தயங்க, “நீ என் மனைவி? அப்ப அவர் மருமகளா எங்க அப்பாவுக்குச் செய்ய வேண்டியத செய்!” என்று அவளுக்கு மட்டும் கேட்கும் படி கடித்த பற்களுக்கிடையே அவன் வார்த்தைகளைத் துப்ப பிறகு அவள் அனைத்தும் செய்தாள். எல்லாம் முடிந்த பிறகு அங்கிருந்த பெரியவர்கள் அனைவரும் குறித்த நேரத்தில் குறித்த நாளிலேயே ஷியாம் தங்கையின் திருமணத்தை வைக்கச் சொல்லி முடிவு எடுத்தனர்.



அந்த திருமணத்திலும் விடாப்பிடியாக அவளை வரவைத்து மணமேடையில் அனைத்தையும் அவள் கையால் செய்ய வைத்தான். பல கேள்விப் பார்வைகள்! எதையும் அவன் சட்டை செய்வதாக இல்லை. திருமணம் முடிந்த பிறகு மித்ராவை வழி அனுப்ப வந்தவன், “ஏழு எட்டு மாதம் எல்லாம் என்னால காத்துட்டு இருக்க முடியாது மித்ரா!



அடுத்த மாதமே நம்ம கல்யாணத்தப் பற்றி பேசலாம்னு இருக்கன். நான் உன்ன தான் கட்டிக்கப் போறேன்னு சொல்லாம சொல்லத்தான் இன்று உன்ன எல்லாம் செய்ய சொன்னன். அப்பா இருந்திருந்தா நமக்காக எல்லாம் செய்து இருப்பார்….” என்று சொல்லி நாதழுதழுக்க பேச்சை நிறுத்தியவன் பின் தொண்டையை செருமிக் கொண்டு “நான் தான் இப்போ யாரும் இல்லாத அநாதை ஆகிட்டேனே!” என்று அவன் கஷ்டப் பட, பிறகு மித்ரா தான் அவனை சமாதானப் படுத்தினாள். அதன் பிறகு அவள் கிளம்ப, அன்று தான் ஷியாமை அவள் கடைசியாகப் பார்த்தது!



தங்கையின் திருமணம் நடந்த கையோடு ஷியாம் மித்ராவிடம் தெளிவாகச் சொல்லிட்டான், “அப்பா இல்லாததனால இனிமே அவர் இடத்தில இருந்து எல்லாமே நான் தான் செய்யணும் மித்ரா. மாமா கூட இருக்கறதால எனக்குக் கொஞ்சம் கஷ்டம் இல்ல. அம்மாவும் ரொம்ப ஒடிந்து போய் ஒரு இடமா எதுவும் செய்ய முடியாம உட்கார்ந்து இருக்காங்க. ஸோ நான் தான் பார்த்துக்கணும். இந்த ஒருவாரமும் என்னால உன்ன வந்து பார்க்க முடியாது. பிறகு வந்து பார்க்கறேன்” என்று!



மித்ராவும் அதற்கு சரி என்று சொல்லி வந்து விட்டாள். மாப்பிள்ளைக்கும் பொண்ணுக்கும் மறுவீடு என்று மற்ற சடங்குகள் இருப்பதால் அவனால் பேச முடியாதுனு நினைத்தவள் அவனை அழைக்கவோ இல்லை அவனிடமிருந்து அழைப்பு வராததால் பெரிதாக எடுத்துக் கொள்ளவோ இல்லை. ஆனால் மெசேஜ்ஜில் மட்டும் பேசிக் கொண்டிருந்தனர். ஒருவாரம் கழித்து இவள் மெசேஜ் பண்ணாலும் அதை அவன் பார்க்கவில்லை. என்னவாக இருக்கும் ஏன் பார்க்கலனு கேட்க அவனை அழைக்க ஸ்விட்ச் ஆஃப்னு வந்தது. முதலில் ஏதோ வேலையாக இருந்திருப்பான் அதனால் சார்ஜ் போட்டு இருக்க மாட்டான்னு’ நினைத்தவள் மறுநாள் அவனை அழைக்க மறுபடியும் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது.



அன்று முழுக்க அவள் கொஞ்சம் இடைவெளி விட்டு அழைத்துப் பார்க்க இதுவே வந்தது. அன்று மாலை காலேஜ் முடித்து அவன் வீட்டுக்குச் சென்று அவனைப் பார்க்க வீடோ பூட்டியிருந்தது. போனும் ஸ்விட்ச் ஆஃப் வீடும் பூட்டி இருக்க, என்னமோ ஏதோ என்று கலங்கியவள் கீழே உள்ள வாட்ச்மேனிடம் சென்று அவர்களைப் பற்றி விசாரிக்க, ஏதோ அவசரமா வெளியூர் போறதாகவும் பத்து நாள் கழிச்சி தான் வருவோம்னு அது வரை தன்னை வீட்டைப் பார்த்துக்கச் சொல்லி அந்த அம்மா சென்றதாக மட்டும் சொல்ல



மித்ராவுக்குக் குழப்பம் ஆகிப் போனது. ‘என்ன நடந்து இருக்கும்? எதுக்கு என் கிட்ட சொல்லாம கொள்ளாம குடும்பத்தோடே ஊரை விட்டுப் போகணும்னு?’ நினைத்துக் குழம்பியவள் தினமுமே அவனைத் தேடி அங்கு வந்து பார்த்துச் சென்றாள். ஆனால் பலன் தான் பூஜ்ஜியமாக இருந்தது. ‘தங்கையின் திருமண விஷயத்தை அடுத்து அவனுக்கு முக்கியமான வேலை போலனு!’ அவள் தன்னை சமாதானப் படுத்திக் கொண்டாள்.



அந்த வருட படிப்பு முடிந்து விட்டது. ஆனால் ஷியாமைப் பார்க்காமல் ஊருக்குப் போகக்கூடாதுனு மித்ரா முடிவுடன் ஹாஸ்டலில் இருக்க, அவளைத் தனியாக விட்டுவிட்டுப் போக மனம் இல்லாமல் ரம்யாவும் அவளுடனே இருந்தாள். போதாதற்கு ஹாஸ்டலில் பக்கத்து ரூம் மேட் ஒருத்திக்கு உடம்பு சரியில்லாமல் பெட்டில் அட் மிட் பண்ண, அவளுக்குத் துணையாக மித்ராவும் ரம்யாவும் தான் அவளை பார்த்துக் கொண்டார்கள்.



ஷியாம் அவளிடம் பேசிச் சென்ற பத்தாவது நாள்! ரம்யா ஆஸ்பிடலில் இருக்கும் தோழிக்குத் துணையாக இரவு தங்கச் சென்றுவிட்டாள். தனியேயிருந்த மித்ரா மீண்டும் ஷ்யாமுக்கு அழைக்க, ஸ்விட்ச் ஆஃப் என்றே வந்தது. அவன் நண்பனைக் கேட்க, “எனக்குத் தெரியாது, எனக்கும் அதே தான் வருகிறதுனு!” சொல்ல, ‘அப்போ மொபைல் தொலைந்து விட்டது!’ என்று முடிவு எடுத்தவள் ‘பிறகு ஏன் ஷியாம் புது நம்பர் வாங்கித் தன்னை அழைக்கவில்லை?’ என்று குழம்பினாள்.



பகல் முழுக்க ஆஸ்பிடலில் இருந்ததால் இரவு உணவை முடித்தவுடன் உடல் அசதியில் அவள் தூங்கி விட, இரவு பதினொன்றரை மணிக்கு அவளுக்கு அழைப்பு வர அதை எடுத்துப் பேசியவள் தலையில் இடியாக விழுந்தது அந்த செய்தி, ‘ஷியாமுக்கு விடிஞ்சா கல்யாணம்!’



மித்ராவின் காலேஜ் லெக்சரர் ஒருவர் இந்த தகவலைச் சொல்ல, “வேற யாரோ சொல்லி பொய்யா நான் இதை உன் கிட்ட சொல்லல மித்ரா. இன்று குடும்பத்தோட சென்று அவன் ரிசப்ஷனை முடிச்சிட்டு இப்போது தான் நான் வீடு வந்தன். அங்க மண்டபத்திலேயே நான் உனக்கு போன் பண்ணி சொல்லி இருப்பன். இது என் மாமியார் வீட்டு உறவுல வர்ற விஷேசம் என்பதால் என்னால அங்கு எல்லார் முன்னாடியும் உன் கிட்ட பேச முடியல. அதான் வீட்டுக்கு வந்துட்டு எல்லாரும் தூங்கின பிறகு உனக்கு போன் பண்றேன். நீயும் ஷியாமும் விரும்பறது எனக்குத் தெரியும் மித்ரா. அவன மாப்பிள்ளையா பார்த்த உடனே எனக்கு பயங்கர ஷாக்! உன் கிட்ட சொல்லாம இருக்க முடியல, அதான் சொல்லிட்டேன்” என்றார் அவர் மனிதாபிமானத்துடன். பின் அவள் கேட்காமலே எந்த ஊர் அதற்கு எந்த பஸ்ஸில் எப்படி போகனும் என்ற கூடுதல் தகவல்கள் சொல்லி அவர் வைத்து விட,



மித்ராவுக்கு ஒண்ணுமே புரியவில்லை! ஏதோ தன்னை மின்சாரம் தாக்கியவள் போல் அமர்ந்து இருந்தாள். முதலில் இதை நம்பலாமா வேண்டாமா என்ற குழப்பம் அவளுக்கு. ஆனால் அந்த மேம் தெரிந்தவர் மட்டும் இல்லை, அனாவசியமாக வேற எந்த வம்பு தும்புக்கும் போகாதவர். அதனால் அவர் சொல்வதை நம்பலாம். ‘அதிலும் இப்படி இரவு நேரத்தில் வேலை மெனக்கெட்டுப் புரளி சொல்ல அவருக்கு என்ன இருக்கு? எல்லாம் ஒரு பெண் வாழ்வு அழியக் கூடாது என்ற மனிதாபிமானம் தான்!’ என்று எல்லாம் யோசித்தவள்



‘ஏன் ஷியாம் இப்படி செய்தார்? என்ன காரணத்திற்காக செய்தார்? பொண்ணு யாரு? அவங்க மாமா பொண்ணா? அப்ப அவங்க மாமா எதாவது இக்கட்டு வச்சி மிரட்டி இந்த கல்யாணத்தற்கு சம்மதிக்க வெச்சி இருப்பாரோ? எதுவா இருந்தாலும் ஷியாம் எப்படி இதற்கு சம்மதிக்கலாம்? என்னது சம்மதமா?! அவர் வெறும் சம்மதம் மட்டும் சொல்லலையே, இன்று மணமகனாக மணவரை வரைக்கும் வந்துட்டார்! விடிஞ்சா அவருக்குக் கல்யாணம்! எப்படி அவரால் முடிந்தது?’ என்று பலவாறு தன்னையே கேள்வி கேட்டு மண்டையைப் பிய்த்துக் கொண்டவள் ‘சரி, இதை எல்லாம் அங்கு போய் ஷியாமிடமே கேட்போம். முதல் மனைவி இருக்க அவர் எப்படி இரண்டாவது கல்யாணம் செய்வாருனு பார்க்கறேன்!’ என்று நினைத்தவள் ஓர் வேகத்துடன் கிளம்ப முற்பட, மணியோ இரவு ஒன்று என்று காட்டியது.



‘இந்த நேரத்தில் பஸ் இருக்காதே! டாக்ஸில போலாம் என்றாலும் அதுவும் பாதுகாப்பு இல்லையே? யாரும் இல்லாமல் தனியா இல்ல போகணும்? தனக்கு யாருமே இல்லாமல் இப்படி அநாதையாக நிற்கிறோமேனு?!’ தன் மீதே கழிவிரக்கத்தில் துடித்தவள் விடியும் வரை தூங்காமல் அமைதி காத்தவள். காலை நான்கு மணிக்கு எழுந்து ஓர் சுடிதாரைப் போட்டு கொண்டு வெளியே வந்து பஸ் ஏறி அந்த மேம் சொன்ன இடத்திற்கு வந்து மண்டபத்தின் வாசலில் அவள் கால் வைக்க இருள் விலகி நன்றாகவே புலர்ந்து வெளிச்சம் பரவி மணி ஆறு என்று காட்டியது. ஆறு முப்பதுக்கு முகூர்த்தம். அப்பாடா..அதற்குள் வந்துட்டோம்னு!’ நினைத்தவள் அவசர அவசரமாக உள்ளே நுழைய, மண்டபத்தின் உள்ளே சிக்னல் கிடைக்காததால் வெளியே வந்து பக்கவாட்டில் நின்று யாருடனோ போனில் பேசிக் கொண்டிருந்த ஷியாமின் மாமா அவளைப் பார்த்து விட்டு “அடடே.. யாரு மித்ராவா? என்னமா கல்யாணத்துக்கு இவ்வளவு லேட்டா வரனு?” சொல்லி சகஜமாக அவளை வரவேற்க, ஒரு வினாடி தடுமாறித் தான் போனாள் மித்ரா. ‘அப்ப இவர் கிட்ட ஷியாம் எதுவுமே சொல்லலையா இல்ல இவர் பெண்ண ஷியாமுக்கு கொடுக்கலையா? ஒருவேளை அந்த மந்திரி வீட்டு வழி சொந்தத்தில் கட்டாயப் படுத்தி பெண் கொடுத்து கல்யாணம் பண்றாங்களா? அதுவும் இல்லனா வேற யாரோட வீட்டுப் பொண்ணானு?’ குழம்பியவள்



“அங்கிள், ஷியாம் எங்க? இந்த கல்யாணம் நடக்கக் கூடாது! எனக்கும் ஷியாமுக்கும் ஏற்கனவே கல்யாணம் நடந்துடிச்சி! முதல் மனைவி இருக்க இப்போ அவர் வேற திருமணம் பண்ணா அது சட்டப் படி அவருக்கும் அந்த பொண்ணுக்கும் தான் பிரச்சனை! வாங்க நாம எடுத்துச் சொல்லி இந்த கல்யாணத்த நிறுத்துவோம்..” பதட்டத்தில் என்ன பேசுகிறோம்னு தெரியாம துணைக்கு அவரையே அழைக்க,



“அச்சச்சோ.. என்ன மித்ரா இப்படி சொல்ற?! இதை நீ முன்னாடியே சொல்லி இருந்தா நான் இந்த கல்யாணம் வேணாம்னு பேசி தடுத்து இருப்பேன் இல்ல? சரி, இப்போ ஒண்ணும் கெட்டுப்போகல! வா, நாம அக்கா கிட்ட பேசி இந்த கல்யாணத்த நிறுத்திடுவோம்னு” சொன்னவர் அதே பக்கவாட்டு வழியாக உள்ளே செல்ல,



“ஏன் அங்கிள் இப்படி போகணும்? நாம் முன் வாசல் வழியாகவே போலாமே?!” - மித்ரா



“இல்ல மித்ரா, நாம இந்த வழியாவே போலாம். உன்ன அக்கா ரூம்ல விடறேன். நீ அக்கா கிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டு இரு, அதற்குள்ள நான் போய் ஷியாம கூட்டிட்டு வரேன். நாம எல்லாரும் பேசி ஒரு முடிவு எடுத்த பிறகு வெளிய வந்து சபைல எல்லார் முன்னாடியும் சொல்லலாம்” என்று அவர் நைந்து பேசி வழி சொல்ல, சரி என்று தலையாட்டி அவருடன் சென்றாள் மித்ரா.



போகும் போதே ‘ஏன் ஷியாம் யார் கிட்டையும் சொல்லாமல் மறைச்சி அவசரமா இந்த கல்யாணத்த செய்யணும்? அப்படி என்ன இக்கட்டு அவருக்கு?’ என்று அவனைப் பற்றி நினைத்துக் கொண்டே சென்றவள். ஒரு தனி அறையில் அவளைக் கொண்டு வந்து நிறுத்த, அங்கு ஷியாமின் தாயைக் காணாமல் அவள் சுற்றும் முற்றும் தேடியவள் “என்ன அங்கிள், ஆன்ட்டி எங்க?” என்று கேட்க



அந்த நேரம் பார்த்துக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்து கதவைச் சாற்றித் தாழ் போட்டனர் ஷியாமின் தாயும் ஷியாமின் மாமன் மகளும்! அவள் மணப்பெண்ணுக்கே உரிய லங்காரத்தில் இருக்க, ‘ஓ… அப்ப நீ தான் கல்யாணப் பொண்ணா….’ மித்ரா நினைத்து முடிக்கக் கூடயில்லை!



“இவ எதுக்குடா இங்க வந்தா? இவளுக்கு எப்படி விஷயம் தெரிஞ்சது? ஷியாம் அம்மா



“எப்படியோ தெரிஞ்சி போய் வந்தா! அதான் நைசா பேசி இங்க கூட்டிட்டு வந்துட்டேன். ஏதோ நியாயம் கேட்கணுமா! அந்த நியாயம் என்னனு தான் நீ கொஞ்சம் கேளேன்கா!” என்று ஷியாமின் மாமா நக்கல் அடித்துப் பேச



‘இவ்வளவு நேரம் தன்னிடம் தன்மையா பேசிப் பதறியவரா இவர்?’ என்பது போல் மித்ரா அவரைப் பார்க்க



“என்ன நியாயம் வேணும் உனக்கு? இப்போ என்ன? என் மகன் உன் கழுத்துல தாலி கட்டிட்டானா? இருந்துட்டுப் போகட்டும்! நான் என் கண்ணால பார்க்காத நான் சம்மதம்னு சொல்லாத உங்க கல்யாணத்த நான் ஏத்துக்க மாட்டன்! உன்ன மருமகளாகவும் ஏத்துக்க மாட்டன்! எனக்கு என்னைக்குமே என் அம்மு தான் மருமக!” என்று கூறி அருகிலிருந்த தன் தம்பி மகளின் கையை அவர் பற்றிக் கொள்ள



“ஐய்யோ.. உங்க மகன் எனக்கு வெறும் தாலி மட்டும் கட்டலங்க! நாங்க சேர்ந்தே வாழ்ந்துட்டோம்! அதற்கு சாட்சியா அவர் குழந்த என் வயத்துல தங்குச்சி! என்ன நேரமோ இப்போ அந்த குழந்தையும் கலைஞ்சி போய்டுச்சி!” என்றாள் மித்ரா. என்னமோ அவருக்கு இந்த விஷயம் தெரியாதோ என்பது போல்!



“அது என்னமோ நேரம் இல்ல, எல்லாம் எங்க நல்ல நேரம் தான் அது! உன்ன மாதிரி ஒருத்தி கடைசி வரை என் புள்ள கிட்ட ஒட்டக் கூடாதுனும் நீங்க இரண்டு பேரும் சேர்ந்தே வாழ கூடாதுனும் தான் கடவுளே அதை அழிச்சி இருக்கார்!” என்று ஷியாமின் தாய் சந்தோஷப் பட



“என்ன அத்த இப்படி சொல்லிட்டிங்க?! என் மாமா கூட இவ சேர்ந்து வாழ்ந்து அதற்கு சாட்சியா ஒரு புள்ள என்ன நூறு புள்ள தங்கி இவளுக்குப் பிறந்தாலும் சரி, அப்பவும் இவ கிட்ட இருந்து பிரிச்சி நான் என் மாமா கூட தான் சேர்ந்து வாழ்வேன்! இன்னும் சொல்லப் போனா, தாலியே கட்டாம கூட அவர் கூட நான் வாழ்வேன்! அந்த அளவுக்கு என் மாமாவ எனக்கு அவ்வளவு பிடிக்கும்!” என்று இவ்வளவு நேரம் பேசாத அம்மு வாய் திறக்க



“அப்படி சொல்லுடி என் தங்கம்!” என்று பூரித்துப் போய் அவள் முகம் வழித்து நெட்டி முறித்தார் ஷியாமின் தாய்.



‘அடச் சீய்… நீ எல்லாம் ஓர் பெரிய மனுஷியா? அவ தான் வயசுக் கோளாறுல அப்படி பேசறானா உனக்கு ஏன் இந்த சாக்கடை புத்தினு?’ மித்ரா மனதால் நினைக்க



“நீ ஏன்மா கல்யாணம் பண்ணாம வாழணும்? இவளுக்கும் ஷியாமுக்கும் கல்யாணம் பண்ணப்போ எந்த சாட்சியும் இல்லாம தான் நடந்து இருக்கு. அதனால இப்போ நான் உனக்கும் ஷியாமுக்கும் ஊர் அறிய கல்யாணம் செய்தா உன் கல்யாணம் தான் செல்லும். நீ தான் சட்டப்படி முறைப்படி அவன் மனைவி. இதை எல்லாம் யோசிச்சி தான நானும் உன் அத்தையும் எல்லாம் பக்காவா பிளான் போட்டோம்னு?!” தன் மகளிடம் ஷியாமின் மாமா பெருமை அடிக்க



“சட்டப்படி இல்லைன்னாலும் ஊர் அறிய தாலி கட்டலனாலும் ஒருத்தன் ஒரு பொண்ண விரும்பி அவளோட சம்மதத்தோட அவ கழுத்துல தாலி கட்டினா அது தாலி இல்லையா? அது கல்யாணம் இல்லையா? நீங்க என்னதான் சொன்னாலும் அவர் என் கணவர் தான், நான் அவர் மனைவி தான்! உங்க பொண்ணுக்கும் ஷியாமுக்கும் நீங்க கல்யாணமே பண்ணி வச்சாலும் இது அவருக்கு ரெண்டாவது கல்யாணம்! உங்க பொண்ணு அவருக்கு ரெண்டாவது மனைவி தான்!



நான் அவருடன் வாழ்ந்துட்டனு சொல்றன், அப்பவும் ஒரு பொண்ணான என் வாழ்க்கையை அழிச்சி உங்க பொண்ண வாழ வெக்கணும்னு நெனைக்கிறிங்களே?! உங்களுக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? அதே மாதிரி நான் இன்னொன்னும் கேட்கறேன், வாழ்ந்து இருந்தாலும் பரவாயில்ல இன்னொருத்தியோட புருஷனுக்குத் தான் என் பொண்ண கொடுப்பேனு இருக்கிறிங்களே, ஏன் உங்க பொண்ணு என்ன நொண்டியா முடமா இல்ல வேற யாருக்கும் விலை போகாத அளவுக்கு ஏதாவது குறையானு?” மித்ரா வார்த்தைகளால் குத்திக் காட்ட



“ஏய் வாயை மூடு! யாரைப் பார்த்து என்ன வார்த்தை சொல்லிட்ட? இப்போ நெனைச்சா கூட ஆயிரம் ஆண்கள என் பின்னாடி நான் சுத்த விடுவன்!” என்று பெருமை அடித்தவள் பிறகு “உன் கிட்ட எனக்கு என்ன பேச்சு வேண்டி இருக்கு? அப்பா நீங்க இவள மறைச்சி இந்த வழியா இங்க கூட்டிட்டு வரும்போதே என் ரூம் ஜன்னல் வழியா பார்த்து சந்தேகப் பட்டு அத்தையைக் கூட்டிட்டு இங்க வந்தேன்.



நான் நெனைச்சது சரியாப் போச்சி! இன்னும் ஏன்பா யோசிச்சிட்டு இருக்கிங்க? இவள இந்த ரூம்ல ஒரு மூலையில் கட்டிப் போடுவிங்களோ இல்ல யாருக்கும் தெரியாம இந்த ரூமுலையே அடைச்சி வச்சி வெளிய பூட்டுப் போடுவிங்களோ எனக்குத் தெரியாது! சீக்கிரம் எதையாவது செய்துட்டு வாங்க, நான் அத்தையோட வெளியே போறேன்னு!” அம்மு அவள் தந்தைக்கு வழி சொல்லி விட்டு வெளியே செல்ல நினைக்க



அவள் பேசியதை எல்லாம் கேட்ட மித்ரா, ‘அடப் பாவிங்களா ஒரு பொண்ணோட வாழ்க்கையை அழிக்க என்னமா திட்டம் போடுதுங்க! இப்போ இதுங்க கிட்ட இருந்து தப்பிக்க என்ன வழினு?’ அவள் யோசித்துக் கொண்டிருந்த நேரம்



“யாருப்பா உள்ள? யாரா இருந்தாலும் கதவத் திறங்க, உள்ள ஒரு கொழந்த மாட்டிட்டு இருக்கு!” என்று இவர்கள் பேசிக் கொண்டிருந்த அறையின் வெளி வாசலில் இருந்து ஒருவர் கதவைத் தட்டி குரல் கொடுக்க “ஐயோ என் கொழந்த உள்ள தனியா மாட்டிக்கிச்சேனு!” ஒரு பெண்மணி கதற நிமிட நேரத்தில் அங்கு வரப் போகும் பிரச்சனையை உணர்ந்தவராக ஷியாமின் மாமா மித்ராவின் வலது கையைப் பிடித்து அவளை பின்புறமாகவே சுவற்றில் சாய்த்து அவள் கத்த முடியாத அளவுக்குத் தன் கையால் அவள் வாயை முட அவர் மகளோ மித்ராவின் இடது கையைப் பிடித்துக் கொண்டாள்.





மித்ராவால் அசையக் கூட முடியவில்லை. முன்புறமா தன் காலால் எட்டி உதைக்கலாம் என்றாலும் அதற்கும் வழியில்லாமல் இருவரும் இரண்டு பக்கமாக இருந்தார்கள். “உள்ள யாரும் இல்ல போல! ஒரு வேளை கொழந்த தான் விளையாட்டுத் தனமா தாழ்ப்பாள் போட்டு இருக்குமோ?” என்று வெளியில் யாரோ சொல்ல! “கொழந்த தாழ் போட வழியில்ல! ஏன்னா தாழ்ப்பாள் உயரமா இருக்கும்”. “கொழந்த உள்ள இருக்கறதுக்கான சத்தத்தையே காணோமே?! ஒருவேளை யார் னா கொழந்தைய கடத்துறவன் உள்ள இருக்கானோ?”



“ஐய்யயோ அப்ப என் கொழந்தைக்கு என்ன ஆச்சோ?!” குழந்தையின் தாய் அலற



“ஒண்ணும் ஆகியிருக்காது, இருமா! ஏன்பா யார்னா ரெண்டு பேர் கதவை உடைங்க!” என்று ஒருவர் சொல்ல



‘கொழந்தையா? அது எப்படி இங்கு வந்தது?’ உள்ளிருந்த இவர்கள் குழம்ப, நடந்தது இதுதான்: திருமணத்திற்கு வந்திருந்த சில குழந்தைகள் கண்ணா மூச்சி விளையாடும் போது, அதில் ஒரு ஐந்து வயது குழந்தை யாரும் இல்லாமல் காலியாக இருந்த இந்த அறையின் பாத்ரூமில் வந்து ஒளிந்து கொண்டான். விளையாடிய குழந்தைகள் அனைவரும் வெளியே வந்துவிட, இவன் மட்டும் வரவில்லை. அதனால் மற்ற குழந்தைகள் அவன் பெற்றோரிடம் தெரிவிக்க மண்டபத்தில் பதற்றத்துடன் அனைவரும் தேடினர். ஆனால் இவன் இந்த அறைக்குள் நுழைந்ததைப் பார்த்த வேறு ஒரு சிறுவன் அவர்களிடம் கூறவும் பின்னரே இந்த அறையைத் தட்ட ஆரம்பித்தனர் .



உடனே வெளியில் இருந்த இரண்டு பேர் கதவை உடைக்க, ‘இப்போது என்ன செய்யலாம்?’ உள்ளே இருந்தவர்கள் பதறி மித்ராவைப் பாத்ரூமில் மறைக்க நினைக்க அங்கு தான் அந்த சிறுவன் மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தான்.



விஷயம் கை மீறிப் போய் விட்டதை உணர்ந்த ஷியாமின் மாமா, வேறு வழியில்லாமல் மித்ராவைத் தன் பிடியிலிருந்து விடுவித்து வெளியே இருப்பவர்கள் கதவை உடைப்பதற்குள் தாமே கதவைத் திறப்பது என்ற எண்ணத்தில் கதவைத் திறக்க



அந்தக் குழந்தையின் தாய் முதலில் உள்ளே ஓடிவந்து பாத்ரூமில் இருந்த அவள் குழந்தையைத் தூக்கிக்கொண்டு காற்றோட்டமான மண்டப பகுதிக்கு ஓடினார்.



பிறகு உள்ளே வந்த ஓர் பெரியவர் “என்ன வேலு கதவைப் பூட்டி நீ உள்ள என்ன செய்றனு?” ஷியாமின் மாமாவைப் பார்த்துக் கேட்டவர் பின் அங்கிருந்த அவன் அக்காவையும் மகளையும் பார்த்து “ஓ… இவங்களும் இங்க தான் இருக்காங்களா?” என்றார்



மித்ராவை விட்டு விட்டதால் அங்கிருந்த ஒருவரில் ஒருவராக நின்றிருந்த அவள் கதவைத் திறந்தவுடன் அவசர அவசரமாக வெளியே செல்ல எத்தனிக்க, அவளைப் பார்த்த அந்தப் பெரியவரோ



“என்ன வேலு, யார் இந்த பொண்ணுனு?” கேட்க “எல்லாம் என் பொண்ணுக்குத் தெரிஞ்ச பொண்ணு தான் பெரியப்பா. கூட படிச்சது, அதான் பேசிட்டு இருந்தோம்” என்று அந்தச் சூழலைச் சமாளிக்க ஷியாம் மாமா பொய் சொல்ல



“இல்லயா இல்ல, நான் இவங்க பொண்ணு கூட படிக்கல. இவர் பொண்ணு யாருனே எனக்குத் தெரியாது. இப்போ கல்யாணம் ஆகப் போதே ஷியாம், அவர் என்னோட கணவர் ஐயா! எங்க ரெண்டு பேருக்கும் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சி. இப்போ திரும்பவுமே அவருக்கு ரெண்டாவது கல்யாணம் பண்ணப் பார்க்கறாங்க. அது தெரிஞ்சி நியாயம் கேட்க வந்த என்ன இந்த ரூம்ல அடச்சி வெக்கப் பார்க்குறாங்க. நீங்க எல்லோரும் தான்யா என்ன காப்பாத்தணும்” என்று நடந்தது எல்லாம் அவரிடம் சொல்லி அவள் முறையிட



“இல்ல பெரியப்பா, இந்த பொண்ணு பொய் சொல்றா! என் பையன் அப்படிப் பட்டவன் இல்ல” என்று அந்த நேரத்திலும் தில்லாக வாய் கூசாமல் பொய் சொன்னார் ஷியாமின் தாய்



“இல்லயா இல்ல! ஷியாம் என் கணவர் தான், நான் அவர் மனைவி தான்! நாங்க ரெண்டு பேரும் யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணி சேர்ந்து வாழ்ந்து அதனால் ஒரு குழந்தையும் தங்கி அந்தக் குழந்தையும் கலைஞ்சி போய்டுச்சி. இதோ அவர் கட்டின தாலி இருக்கு பாருங்க!” என்று தன் கழுத்தில் சுடிதாருக்குள் இருந்த தாலிச் செயினை வெளியே எடுத்து மித்ரா காட்ட



“இல்லவே இல்ல! என் பையனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும். அவன் எனக்கு தெரியாம கல்யாணம் செய்திருக்க மாட்டான். அப்படி மட்டும் செய்திருந்தா இந்த கல்யாணத்துக்கு சம்மதிச்சி இருப்பானா?” - ஷியாமின் தாய்



“என்ன காரணத்துக்காக அவர் சம்மதிச்சாருனு எனக்குத் தெரியாது. ஆனா நிச்சயம் அவர் முழுமனசா சம்மதிச்சி இருக்க மாட்டார். கல்யாணம் பண்ணி இருக்க மாட்டாருனு சொல்றிங்க இல்ல? சரி, முதல் மனைவி நான் இருக்க அவருக்கு ரெண்டாவது கல்யாணம் தான பண்ணுறிங்க? பண்ணுங்க! நான் போலிஸோட வந்து லீகலாவே இது நியாயமானு கேட்கிறேன்னு!” சொல்லி மித்ரா வெளியே செல்ல



‘நில்லுமா, அப்படி எதுவும் வேண்டாம்’ என்று அந்த பெரியவர் தடுத்து நிறுத்த நினைக்கும் நேரம் “இங்க என்ன கூட்டம் சேர்த்துகிட்டு? அங்க மாப்பிள மணவரையில உட்கார்ந்தாச்சி. பொண்ணா கூட்டிட்டு வர சொல்றார் ஐயர்னு” சொல்லிக் கொண்டே அம்முவுடைய அம்மா வந்து நிற்க, அதைக் கேட்டு மணவரையின் பக்கம் ஓடினாள் மித்ரா.



அங்கு ஷியாம் மணக்கோலத்தில் அமர்ந்திருக்க, “என்ன ஷியாம், என்ன செய்துட்டு இருக்கிங்க? ஆயிரம் தான் உங்க வீட்டுல இருக்கறவுங்க சொன்னாலும் சரினு சொல்லி வேறு ஒரு பொண்ணு கழுத்துல தாலி கட்ட சம்மதிச்சி மணவரையில உட்காருவிங்களா? பிறகு எதற்கு என்ன விரும்பினிங்க? கத்தி முனையில என்ன நிக்க வச்சி எதுக்கு கல்யாணம் பண்ணிங்க? உங்க அப்பாவோட வந்து என் கிட்ட பேசி எதற்கு என்ன சமாதனப் படுத்துனிங்க? அது மட்டுமா? நீ இல்லனா செத்துடுவனு சொன்னது, என் கூட வாழ்ந்தது, எனக்குக் குழந்தை தங்கினப்பகூட எனக்குக் குழந்தை முக்கியம் இல்ல நீ தான் முக்கியம்னு சொன்னது, உங்க வீட்டில நடந்த அனைத்து நல்லது கெட்டது எல்லாத்துக்கும் எதுக்கு உங்க மனைவியா என்ன முன் நிறுத்தினது எல்லாம் எதுக்காக?” என்று தங்களுக்குள் நடந்ததை எல்லாம் மூச்சு விடாமல் அவனைக் கேட்டவள், “எழுந்துருங்க ஷியாம், இன்னும் ஏன் எதுவும் சொல்லாம அங்கேயே உட்கார்ந்து இருக்கிங்க?” எழுந்து வாங்க!” என அவனை கூப்பிட



அவள் வந்ததில் முதலில் அதிர்ச்சி ஆகி அவள் கேட்ட கேள்விக்கு எதுக்கும் பதில் சொல்லாமல் அந்த இடத்தை விட்டும் எழுந்திருக்காமல் ஷியாம் அமர்ந்திருக்க, “என்ன ஷியாம், நான் சொல்ல சொல்ல கேட்காம உட்கார்ந்து இருக்கிங்க? எழுந்துவாங்கனு” அவன் கையைப் பிடித்து இழுக்க, அப்போதும் எழுந்திருக்காமல் அவன் அமர்ந்து இருக்க



“என்ன நீ பாட்டுக்கு வந்து எனக்கும் இவருக்கும் கல்யாணம் ஆகிடுச்சி! நாங்க வாழ்ந்தோம் கொண்டோம்னு கதை அளக்கிற? ஆமாம் எந்த கோவில்ல உனக்கு கல்யாணம் நடந்துச்சி? அதுக்கு யார் யார் சாட்சி?” என்று ஷியாமின் அத்தை கேட்க



“போட்டோ இருக்கா?” - ஷியாமின் மாமா



“ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணி இருந்தா அந்த சர்ட்டிபிகேட் காட்டு” ஷியாம் தங்கை



“என் புருஷன் இப்போ உயிருடன் இல்ல என்றதால நீ என்ன வேணாலும் பேசுவியா? ஒரு பொண்ணுனா அடக்க ஒடுக்கம் வேணும். அது எப்படி யாருக்கும். தெரியாமா உன் வீட்டுக்குமே தெரியாம கல்யாணம் பண்ணுவியா? அப்ப நீ என்ன மாதிரியான பொண்ணு?! ச்சீ… ச்சீ….” என்று ஷியாமின் தாய் காரித் துப்பாத குறையாக அவளை அசிங்கப் படுத்த



முன்பு பெரியப்பா என்ற உறவு முறையில் பேசிய அந்த பெரியவரே இப்போது, “இருங்க.. இருங்க.. இப்படி ஆள் ஆளுக்குப் பேசினா எப்படி? இதுல சம்மந்தப் பட்டவன் வாய் திறந்து என்ன நடந்ததுனு சொல்லட்டும்!” என்றவர் “இங்க பார் தம்பி, உண்மையாவே இந்த பொண்ணு சொல்ற மாதிரி நீ எதாவது செய்திருந்தா தயங்காம யாரைப் பற்றியும் யோசிக்காம நீ நேரிடையா இந்த சபையில சொல்லு. நாங்க இருக்கிறோம், யாருக்காவும் நீ மறைக்க வேண்டாம்” என்று அந்த பெரியவர் ஷியாமிடம் சொல்லி அவனிடம் இருந்து உண்மையை வாங்க நினைக்க



“……..” ஷியாமிடம் மவுனம் மட்டுமே



“ஆமாம், எதுவா இருந்தாலும் சொல்லுப்பா” என்று சுற்றி இருந்தவர்கள் அனைவரும் சொல்ல சொல்லி கத்த



“இவ சொல்றது எல்லாம் பொய்! இவ யாருனே எனக்குத் தெரியாது. இதற்கு முன்னையோ இல்லை அதற்குப் பிறகோ நான் இவள எங்கையும் பார்த்தது கூட இல்ல. இந்த கல்யாணத்த நிறுத்தணும் என்றதுக்காகவே இவ இப்படி வந்து கலாட்டா பண்றா!” என்று அவள் கண்ணைப் பார்த்துத் தெள்ளத் தெளிவாக சொன்ன ஷியாம் அவள் பிடித்திருந்த தன் கையை அவள் கையிலிருந்து விலக்க



“அடப் பாவி! வேண்டாம் வேண்டாம்னு நான் விலகி விலகிப் போனனே?! அப்ப எல்லாம் வேணும் வேணும்னு வந்து என் வாழ்க்கையையே அழிச்சிட்டு இப்போ இப்படி ஒரு பொய்யா சொல்ற?” என்று கேட்டு அவள் அவன் சட்டையைப் பிடித்து உளுக்கவில்லை. தன் கையால் அவனை ஒரு அடி கூட அடிக்கவில்லை. மாறாக ஷியாம் தன்னைப் பிடித்திருந்த அவள் கையை எடுத்து விட்ட மறு நொடி தொப்பென்று அவன் பக்கத்திலே அமர்ந்தாள் மித்ரா.



இதுவரையுமே மித்ரா கதறி அழவில்லை! அதேபோல் இப்போதும் வாய்விட்டு அழவில்லை. ஆனால் மாறாக அவள் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் அருவியாக கொட்டிக் கொண்டிருந்தது.



“நான் தான் சொன்னன் இல்ல பெரியப்பா? இவ பொய் சொல்றானு! வசதியான ஆம்பளப் பசங்க எங்க இருப்பாங்கனு தேடித் திரிஞ்சி அவனுங்கள தன் வசப்படுத்தி கைக்குள்ள போட்டுக்கிட்டு பொண்டாட்டி மாதிரியே பழகி பிறகு அவன் சொத்து பணத்தை எல்லாம் பிடிங்கிக்க வேண்டியது. அதே மாதிரி அவனுங்க வேற கல்யாணம் பண்ணிக்க முடியாதபடி தன் காலடியிலே வச்சிருந்து அவனுங்க வாழ்க்கையையே அழிக்க வேண்டியது. அவனுங்க அவளுங்கள மீறி வேற ஓர் பொண்ணப் பார்த்து கவுரவமா வாழணும்னு நினைச்சா வாழ முடியாத அளவுக்கு இப்படித் தேடிப் பிடிச்சி வந்து கல்யாண நேரத்துல பிரச்சனை பண்ணி கல்யாணத்தையே நிறுத்த வேண்டியது!



இப்பவும் சொல்றன், என் புள்ள தாலி கட்டி இருக்க மாட்டான்! ஏதோ வயசுக் கோளாறுல தொட்டு இருப்பான்! அதுக்குப் பணமா எவ்வளவு வேணுமோ வாங்கிட்டுப் போகச் சொல்லுங்க. நானும் குடுத்துத் தொலைக்கிறேன். அத விட்டுட்டு இந்த கல்யாணத்த நிறுத்துறது பொண்டாட்டினு உரிமை கொண்டாடறது எல்லாம் இங்க வேணாம்!” என்று தான் ஒரு பெண் என்பதையும் மறந்து மித்ராவை வார்த்தையால் இழிவு படுத்தினார் ஷியாம் தாய்.



“ஆனா அந்தப் பொண்ணு கழுத்துல தாலி இருக்கே!” - அந்த பெரியவர்



“ஒருவேளை அதை அவளே கட்டிக்கிட்டாளோ என்னமோ?!” - ஷியாம் அத்தை



“வேற யார்னா கட்டினதாக் கூட இருக்கலாம்! நிச்சயம் என் அண்ணா வா இருக்க முடியாது” - ஷியாம் தங்கை



“யாருக்குத் தெரியும்? ஒருத்தன் தான் கட்டுனானா இல்ல ஒவ்வொரு முறையும் ஒவ்வொருத்தனோட பழகும் போது ஒவ்வொருத்தனும் கட்டுவானோ?! அதைக் கட்டினது ஒருத்தன் தானா? அந்த ஒருத்தனாது யாருனு தெரியுமா இல்ல அதுவும் தெரியாதா?” - ஷியாமின் தாய்





இவர்கள் பேசிய பேச்சுக்கு யாருக்குமே பதில் வார்த்தைகள் கொடுக்காமல் ஏன் யாரையும் நிமிர்ந்து கூட பார்க்காமல் கண்களில் உள்ள கண்ணீர் மறைக்க ஷியாமையே பார்த்துக் கொண்டிருந்தாள் மித்ரா.



பிறந்ததில் இருந்து எப்பேற்பட்டவறாக இருந்தாலும் தன் நேர் கொண்ட பார்வையால் தூரவே நில் என்று சொல்லாமல் சொல்லி ஒரு அக்னியின் தீச்சன்யத்துடன் வாழ்ந்து வந்தவள் இன்று சாக்கடையில் விழுந்து நெளியும் புழுவாக இருந்தாள் மித்ரா!



“இன்னும் என்ன தாலி தாலினு சொல்லிக்கிட்டு? இப்படி ஒரு தாலிய கழுத்துல போட்டுக்கிட்டு ஊர்ல இருக்கற ஆம்பள பசங்க வாழ்க்கை எல்லாம் கெடுக்கவா?” என்று சொன்ன ஷியாமின் தாய் சற்றும் யாரும் யோசிக்காத ஒரு செயலைச் செய்தார்.



எப்படி அன்று மகாபாரதத்தில் கூடியிருந்த சபையில் திரௌபதியின் மானத்திற்கு பங்கம் விளைவிக்க அவள் துகில் உரியப் பட்டதோ, அதே போல் இன்றும் இந்த சபையில் இருப்போர் அனைவரின் முன்னாள் துரியோதனனாக ஷியாம் வீற்றிருக்க சுற்றியிருந்த மற்றவர்கள் அவளைப் பார்வையாலும் சொல்லாலும் அவளை துகில் உரித்தது பத்தாது என்று ஷியாமின் தாய் துச்சாதனனாக மாறி கூடியிருந்த அனைவரின் முன்னாலேயே அவள் பிள்ளை கட்டின தாலியை அவன் உயிருடன் இருக்கும் போதே அவன் கண்ணெதிரிலேயே மித்ரா கழுத்திலிருந்து கழற்றித் தூர வீசி எறிந்தார் கணவனுடன் வாழ்ந்து தன் வயிற்றில் இரண்டு பெண்களைப் பெற்ற வயதில் முதிர்ந்த அந்த பெண்மணி!



இதுவரை பேசிய பேச்சுக்கும் சரி இப்போது அவன் தாய் இப்படி நடந்து கொண்டது எதற்குமே ஷியாம் வாயைத் திறக்கவில்லை. இவளுக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்பது போல் அவன் அமர்ந்திருக்க



அவள் கழுத்தைத் தொட்டு தாலியைக் கழற்றும் போதும் சரி அதற்கு பிறகும் சரி மித்ரா எதுவும் சொல்லவும் இல்லை தடுக்கவும் இல்லை. ‘இது எல்லாம் உன்னால தானே? உன்ன நம்பி வந்ததுக்கா இந்த பெயர்? இந்த வினாடி வரை உன்னை நம்பினேனே? அதுக்காகவா எனக்கு இப்படி ஓர் நிலைமைனு?’ மித்ரா அவள் கண்களாலேயே அவனிடம் கேள்வி கேட்க அதற்கு மட்டும் அவளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் தலையை வேறு புறம் திரும்பிக் கொண்டான் ஷியாம்.



“அதான் மாப்பிள இல்லனு சொல்லிட்டார் இல்ல? அப்பறம் என்ன? நீங்க மந்திரத்த ஆரம்பித்து தாலிய எடுத்துக் கொடுங்க ஐயரே! நீ ஏன்மா இன்னும் இங்க நின்னுட்டு இருக்க? போய் மணவரையில உட்கார்” என்று தன் மகளுக்கு ஷியாமின் மாமா கட்டளை இட



பிறகு மித்ராவின் கண்ணெதிரிலேயே ஷியாமின் திருமணம் நடந்து முடிந்தது. அவளுக்கு என்று பேசவோ அவளைத் தேற்றவோ யாரும் இல்லாமல் அநாதையாக அமர்ந்திருந்த அவளை நெருங்கிய யார் என்றே தெரியாத ஒரு வயதானப் பெண்மணி அவளைப் பிடித்துத் தூக்கி, “யார் பெத்த பிள்ளையோ நீ? இப்படி இங்க வந்து அசிங்கப் பட்டு நிக்கறியேமா! ஒரு பொண்ணு எதுல வேணா பொய் சொல்லுவா ஆனா தாலி கட்டி ஒருவனுடன் வாழ்ந்துட்டு அதனால் கருவையும் சுமந்து இப்போது அதுவும் இல்லாமல் நிக்கறனு இட்டுகட்டி பொய் சொல்ல மாட்டா! சுத்தி இருக்கிறவங்க எல்லாருக்குமே அது தெரிஞ்சி தான் இருக்கு. ஆனா அதுக்கு சம்மந்தப் பட்ட அந்த பையனே அமைதியா இருக்கும்போது யாரால் என்ன பேச முடியும்? நீயாவது உனக்குத் தெரிஞ்ச நாலு பெரிய மனுஷங்கள கூட்டி வந்து இருக்கலாம்! இல்ல போலிஸோட வந்திருக்கலாம். என்ன பொண்ணோ நீ? இந்த காலத்துல இப்படி ஏமாந்து போய் உன் வாழ்க்கையையே வீணாக்கிட்டியே!” என்று சொல்லி கொண்டே அவளை அணைத்த படியே வெளி வாசல் வரை அழைத்து வந்தவர்.



அங்கிருந்த ஆட்டோ ஒன்றில் அவளை ஏற்றி தானும் கூடவே ஏறி “ஆமாம், உன் வீடு எங்கு இருக்குனு சொல்லு. நானே கொண்டு போய் விடறேன்” என்று கேட்க, அப்போது தான் மித்ரா என்ற சிலைக்கு உயிர் வந்தது. “நீங்க வேண்டாங்க! என் வீடு ரொம்ப தூரம். பஸ் புடிச்சு நான் போய்க்கிறேன்” என்று அவள் மெல்லிய குரலில் சொல்ல, அவள் முகத்தையே பார்த்துக் கொஞ்ச நேரம் யோசித்தவர் பிறகு “சரிமா வா, பஸ் ஸ்டாண்டு வரையாவது நான் வந்து உன்ன பஸ் ஏத்தி விடறேன்” என்று சொன்னவர் அவளின் பதிலை எதிர் பார்க்காமலே “நீ பஸ் ஸ்டாண்டுக்கு ஆட்டோ விடுப்பா” என்றார் ஆட்டோ டிரைவரிடம்.



பிறகு டிக்கெட் வாங்கி அவளை பஸ்ஸில் ஏற்றி விட்ட அவர் “வாழ்க்கையில் கஷ்டம் நஷ்டம் எல்லாம் வந்து போகும். அதுக்காக எந்த ஒரு தப்பான முடிவ எடுக்க மாட்டனு நெனைக்கிறன்! உனக்காக உன்னப் பெத்தவங்க காத்து இருப்பாங்க, அவங்களுக்காகவாது வாழப் பழகு!” என்று அவளுக்கு ஓர் தாயாக அறிவுரை கூறியவர் அந்த பஸ் கிளம்பி அது அவர் கண்ணை விட்டு விலகும் வரை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த பெண்மணி





பஸ்ஸில் சுற்றி இருப்பவர்கள் அனைவரும் தன்னைப் பார்க்கிறார்கள் என்பது தெரிந்து இருந்தும் அது அவள் கருத்தில் பதியாமல் அவளாலும் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீருடன் ஹாஸ்டல் வந்து சேர்ந்தவளை வாசலிலே அவளைப் பார்த்து விட்டு “எங்கடி போய் இருந்த நீ? போன் பண்ணா ஸ்விட்ச் ஆப்னு வருது!” என்று சத்தம் போட்ட ரம்யா அவள் முகத்தைப் பார்த்தவள் என்ன நினைத்தாளோ பிறகு அவளிடம் எந்த கேள்வியும் கேட்காமல் அவளை அணைத்த படி தங்கள் அறைக்கு அழைத்துச் சென்றாள்.



“என்ன ஆச்சிடி? ஏன் ஒரு மாதிரி இருக்க? என்ன பிரச்சனை? காலையில் இருந்து நீ இங்க இல்லையாமே?! அப்படி எங்க போய்ட்டு வர?” என்று கேட்டுக் கொண்டே அவளைக் கட்டிலில் உட்கார வைத்தவள் அவள் தலையை ஒதுக்கி விட்டு அங்கிருந்த டவலால் முகத்தைத் துடைத்து அருகிலிருந்த தண்ணீர் பாட்டிலைத் திறந்து மித்ராவின் வாய் அருகே வைத்து குடிக்கச் சொல்ல வேண்டாம் என்று தலையாட்டி மறுத்தாள் மித்ரா.



பின் அந்தப் பாட்டிலைக் கீழே வைத்தவள் அவள் கன்னத்தை தன் இரு கைகளிலும் தாங்கி முகத்தை நிமிர்த்தி “என்ன மித்ரா, என்ன ஆச்சி? உன்ன காணோம்ன உடனே நான் எப்படி பயந்துட்டன் தெரியுமா? இன்னும் கொஞ்ச நேரம் நீ வர லேட் ஆகி இருந்தா மேம் கிட்ட சொல்லி போலிஸ் கம்ப்ளைண்டு கொடுத்து இருப்பன்” என்று ரம்யா அழாத குறையாக சொல்ல



அவள் முகத்தையே இமைக்காமல் பார்த்தவள் “ஏன் ரம்யா, எல்லாருக்கும் தெரிஞ்சி ஊர் அறிய தாலி கட்டினா தான் அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவியா? யாருக்கும் தெரியாம பண்ணா அப்ப அவங்க கணவன் மனைவி இல்லையானு?” மித்ரா அப்பாவித் தனத்துடன் கேட்க



‘இவள் ஏன் இப்படி கேட்கறானு?’ உள்ளுக்குள் உதறல் எடுத்தாலும் “யார்டி அப்படி சொன்னா? தாலி என்பது நம் தமிழர் பண்பாடு! யாருக்குமே தெரியாம மனசார ஒருத்திய நெனைச்சி அத அந்தப் பொண்ணு கழுத்துல கட்டி அதையும் அந்தப் பொண்ணு மனசார ஏத்துக்கிட்டா அந்த நிமிடமே அவங்க ரெண்டு பேரும் கணவன் மனைவி தான்! இதுக்கு ஊர் அறிய கட்டணும்னு எந்த அவசியமும் இல்ல. கணவனுக்கு அப்பறம் அந்த தாலிக்கு தான நம் முன்னோர்கள் முதல் இன்று உள்ள பெண்கள் வரை மதிப்பும் மரியாதையும் கொடுத்து வராங்க! பிறகு எப்படி கணவன் மனைவி இல்லைனு ஆகும்? ஆமாம் இத நீ ஏன் இப்ப கேட்கற? - ரம்யா



“அப்ப அதத்தான நான் செய்தன்? ஊர் அறிய இல்லனாலும் தாலினு ஒன்னு கட்டிட்டாரு என்னும் போது அவர் தான் என் கணவர் இனி அவர் தான் என் வாழ்க்கைக்கு எல்லாம்னு நெனைச்சி தான அவருடன் வாழ்ந்தேன்?” - மித்ரா



“என்னடி சொல்ற? யார் கூட எப்போ எப்படி கல்யாணம் நடந்தது? நீ என்னைக்கு வாழ்ந்த?” என்று பதட்டத்துடன் கேட்டுக் கொண்டே அவள் கழுத்தை ஆராய்ந்த ரம்யா “எங்கடி எதையும் காணோம்?” என்று கேட்க



“அதைத் தான் கழற்றி வீசி என்னையும் துரத்தி விட்டுட்டாங்களே!” என்று கண்ணிகளில் கண்ணீர் வழிய மித்ரா சொல்ல



“யாருடி ஷியாம் வீட்டுலையா?” என்று கேட்டு ரம்யா அவளை உளுக்க



ஆமாம் என்று தலை ஆட்டிய மித்ரா பின் தன் வாழ்வில் நடந்த அனைத்தையும் தன் தோழியிடம் கூறி முடித்தாள்.



“ஏன் மித்ரா, நீ என்ன பைத்தியமா? உனக்குக் கொஞ்சம் கூட அறிவே இல்லையா? அவன் செத்துடுவனு சொல்லி மிரட்டினானு இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணத்த பண்ணிட்டு வந்து நிக்கிறியே, உன்ன என்ன சொல்ல? அவன் அப்பா சொன்னாரு ஆட்டுக் குட்டி சொன்னாருனு இப்படி ரிஜிஸ்டர் மேரேஜ் கூட செய்யாம தத்தி மாதிரி வந்து நிக்கிறியே உன்னலாம் நான் என்ன செய்ய?” என்று அவளிடம் எறிந்து விழ “நீ தானடி சொன்ன? தாலி கட்டினாலே கணவன் மனைவினு! பிறகு எதற்கு ரிஜிஸ்டர் மேரேஜ்?” - மித்ரா



“அடியேய் பைத்தியக்காரி! ஆயிரம் தான் தாலி கட்டினாலும் சட்டப்பூர்வமா ஒரு அங்கிகாரம் நிச்சயம் ரெண்டு பேருக்கும் வேணும். இந்த காலத்துல பெத்தவங்க பார்த்து வச்சி சட்டப் பூர்வமா நடக்கற கல்யாணமே பல பிரச்சனைகளால பிரிஞ்சி போய்டுது! இதுல இவ யாருக்கும் தெரியாம செய்துட்டு வந்து பேசுறா பாரு பேச்சு! ஆனா நீ எப்படி அவன்கிட்ட ஏமாந்த? எவ்வளவு புத்திசாலி தைரியசாலி நீ? என்னால நம்பவே முடியலடி! இதத்தான் விதி வலியதுனு பெரியவங்க சொல்றாங்க போல!” இதில் அவள் சேர்ந்து வாழ்ந்து கரு வரைக்கும் வந்து விட, அதையும் சொல்லித் திட்ட வந்தவள் பிறகு நொந்து இருக்கும் அவளை மேலும் கஷ்டப் படுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் அதை சொல்லாமல் தவிர்த்து



“சரி போனது தான் போன, இப்போவாது என் கிட்ட சொல்லி துணைக்கு என்னையோ இல்ல வேறு யாரையாவது கூட்டிப் போக வேண்டியது தான?” என்று கேட்க



“எனக்கு தான் யாரும் இல்லையே? நான் தான் அநாதையாச்சேடி!” என்று மித்ரா உதடு பிதுக்கி சொல்ல, அவள் முகத்தை இழுத்து தன் வயிற்றோடு அணைத்துக் கொண்டாள் ரம்யா



“யாருடி உன்ன அநாதைனு சொன்னது? நான் இருக்கன் மித்ரா உனக்கு! எந்த ஓர் சுயநலமும் இல்லாமல் நீ அன்பு பாசம் காட்டி யார் யாருக்கு என்ன என்ன வேணும்னு பார்த்து பார்த்து ஓடி ஓடி உதவி செய்தியே அந்த நல்லவங்க எல்லாருமே உனக்கு சொந்தகாரங்க தான்டி” என்று சொல்லி அவளை ஆறுதல் படுத்தியவள் “எழுந்திரு மித்ரா, வா போகலாம்.



அந்த ஷியாம் கிட்டையும் அவன் குடும்பத்துக்கிட்டையும் உனக்கு செய்த அநியாயத்துக்கு நியாயம் கேட்டு உனக்கு ஒரு வழி சொல்ல சொல்லி கேட்டு உன்ன அங்கையே விட்டுட்டு வரேன். அவனுக்கு நூறு பேர் தெரிஞ்சா நமக்கு பத்து பேர் கூட தெரியாதா? கிளம்பு, நானும் நம்ம பக்கத்தில் இருந்து ஒரு நாலு பேர் கூட வர ஏற்பாடு பண்றன்” என்று ரம்யா அவளை அவசரப்படுத்த



“வேணாம் ரம்யா, வேணாம்! இன்னில் இருந்து அவன் இன்னொருத்தியோட புருஷன்! அவன் எனக்கு வேண்டாம்! இந்த பிறவியில நான் செத்தாலும் ஒருத்தன் மூஞ்சில மட்டும் முழிக்கக் கூடதுனு நினைச்சனா, அது ஷியாம் தான்! இதுக்கு அப்பறம் அவன் மூஞ்ச பார்க்கக் கூட நான் விரும்பல! இப்ப கூட இப்படி ஏமாந்து போய் நம்ம வாழ்க்கையையே அழிச்சிகிட்டோமேனு தான் குமுறுறனே தவிர நிச்சயம் அவனுக்காக இல்ல! நான் உண்மையா தான் சொல்றேன். என் அப்பா அம்மா மேல சத்தியமா இனிமே அவன் எனக்கு வேணாம் ரம்யா, எனக்கு வேண்டவே வேண்டாம்!” என்று உறுதியுடன் சொன்னவள் பிறகு ரம்யாவைத் தன் பக்கத்தில் அமர வைத்து அவள் மடியிலேயே தலை சாய்க்க



ரம்யாவுக்குமே இனிமே அவன் வேண்டாம்னு மித்ரா எடுத்த முடிவு சரி என்றே பட்டது. ‘பின்னே? ஒரு பொண்ண நம்ப வச்சி கல்யாணம் பண்ணி இப்படி ஏமாத்தினவன், ஒரு கட்டாயத்தின் பேர்ல மித்ராவ அவனுடன் நம்பி அனுப்பி வச்சா அவன் எப்படி மனசு ஒத்துப்பட்டு வாழ்வான்? அவன் தான் கோழையாச்சே, அம்மா பேச்ச கேட்டுகிட்டு சாப்பாட்டுல விஷம் கலந்து இவள கொலை செய்யக் கூட தயங்க மாட்டான். அப்படி விபரீதமா ஏதாவது செய்துட்டா என்ன பண்றது?’ என்று யோசித்தவள்



மேல் கொண்டு என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் தலை முடியைக் கோதிக் கொடுத்து கொண்டிருந்தாள் ரம்யா. பிறகு திடீர் என்று நினைவு வந்தவளாக “ஆமாம், உன் போன் எங்க மித்ரா? கால் பண்ணா ஸ்விட்ச் ஆஃப்னு வருது?” என்று கேட்க உடனே எழுந்து அமர்ந்த மித்ரா, “மேம் அட்ரஸ் செண்ட் பண்ணத வச்சி போன கையில எடுத்துட்டு தான் அந்த கல்யாண மண்டபத்த தேடிப் போனன். ஆனா இப்போ என் கையில இல்லனா, அப்போ மண்டபத்திலோ இல்ல பஸ்ஸிலோ தான் நான் தவர விட்டு இருப்பன்” என்று மித்ரா நினைவு கூர்ந்து சொல்ல



“சரி சரி, இனிமே உனக்கு அந்த போன் வேண்டாம்! வேற வாங்கிக்கலாம். இப்போ கொஞ்சமாவது சாப்பிட்டு படுத்து தூங்கு” என்று சொல்ல “எனக்கு எதுவும் வேண்டாம்” என்று மறுத்தாள் மித்ரா. உணவு மட்டும் இல்லை அவள் தூங்கவோ யாரிடமும் பேசவோ ஏன் அழக் கூட இல்லை. எங்கோ வெறித்த பார்வையுடன் அமர்ந்தோ படுத்தோ அன்று நாள் முழுக்க இருந்தாள் மித்ரா.



அவளை அப்படி பார்த்த ரம்யாவோ இதுவரை அவள் வாய் விட்டு அழவில்லை என்பதை அறிந்தவள் “ஏய் லூசு, எதுக்கு இப்படி வெறிச்சி வெறிச்சி பார்த்துட்டு உட்கார்ந்து இருக்க? உன் மனசுல இருக்கிற பாரம் எல்லாம் போகற மாதிரி வாய் விட்டு கதறி அழுது தீர்த்துடு மித்ரா!” என்று சொல்ல



“எனக்கு அப்படி செய்ய வர மாட்டுது ரம்யா” - மித்ரா



அவள் ஏதாவது செய்து கொள்வாளோ என்ற பயத்தில் ரம்யா மித்ராவைக் கண் கொத்திப் பாம்பாக பார்க்க, அப்படி எந்த ஒரு அசம்பாவித முடிவு எதுக்கும் மித்ரா போகவில்லை. இப்படியே அன்றும் மறுநாளும் கடந்தது.



“எழுந்திரு மித்ரா! கிளம்பு, நீ உன் தாத்தா வீட்டுக்குப் போக வேண்டாம். என் கூட என் வீட்டுக்கு வா. கொஞ்ச நாள் நீ அங்க இரு அதற்கு பிறகு நீ போ” - ரம்யா



“இல்லடி நான் எங்கையும் வரல. நான் ஊருக்குப் போய் தாத்தா கூடவே இருக்கன். என்ன பத்தி எந்த கவலையோ பயமோ உனக்கு வேண்டாம். நிச்சயம் நான் எந்த ஓர் தப்பான முடிவையும் எடுக்க மாட்டன்” - மித்ரா



ரம்யா எவ்வளவு சொல்லியும் கேட்காததால் அவள் இஷ்டத்துக்கே இவள் விட்டு விட இருவரும் கிளம்பிச் சென்றனர். ரம்யா அவள் வீட்டுக்குப் போய் விட மித்ரா மட்டும் தான் சொன்ன படி அவள் தாத்தா வீட்டுக்குப் போகாமல் அவள் எப்போதும் போகும் காப்பகத்திற்குப் போய் விட்டாள்.



அவளுக்குத் தனிமை வேண்டும்! இப்போது அவள் இருக்கும் மனநிலைக்குத் தாத்தாவுக்கு அவள் செய்த நம்பிக்கை துரோகத்திற்கு அவளால் அவரைப் பார்க்க முடியாது. அதனால் தான் ரம்யாவிடம் அப்படி சொல்லி விட்டு இங்கு வந்து விட்டாள். பாவம் ரம்யாவும் தான் எத்தனை நாளைக்குத் தன்னை ஓர் குழந்தை போல பார்த்துக் கொள்வாள் என்ற குற்ற உணர்வு வேறு அவளை இப்படி செய்யத் தூண்டியது.



ஹோமுக்கு வந்தவள் தன் வாழ்வில் நடந்ததை யாரிடமும் சொல்லாமல் மறைத்து சாதாரணமாகவே பழகி வர. ஒருவாரம் கழித்து ஒரு நாள் இவள் சமையல் செய்யும் இடத்தில் மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்க, அவளை யாரோ பார்க்க வந்து இருப்பதாகவும் பின் புறத் தோட்டத்தில் காத்து இருப்பதாகவும் சொல்லிச் சென்றார் அங்கு வேலை செய்பவர்.



மித்ராவுக்கோ, ‘என்னையா?! என்னையா?!’ என்ற குழப்பம். ‘இந்த இடமும் நான் இங்கு இருக்கறதும் யாருக்கும் தெரியாதே! நான் இங்கு வந்ததில் இருந்து தாத்தாகிட்ட கூட போன்ல பேசறது இல்லையே?! அப்போ யாரு? ஒருவேளை, ரம்யா கிட்டையும் பேசாததால அவ என்ன தேடி இங்கையே வந்துட்டாளோ?’ என்று பலவாறு நினைத்துக் கொண்டே பின்புறத் தோட்டம் பக்கம் இவள் போக, அங்கு நின்று இருந்ததோ ஷியாம்!



அவனைத் தூரத்தில் இருந்தே பார்த்து விட்ட மித்ராவுக்கோ கை கால்கள் உதறல் எடுக்க நெஞ்சு படபடக்க நாக்கு வரண்டு போய் மேல் அன்னத்தில் ஒட்டிக் கொண்டு மூச்சு விடுவதற்கே சிரமமாக இருந்தது. அவளையும் மீறி அவளிடம் பயம் வந்து குடி கொள்ள மேல் கொண்டு நடக்க முடியாமல் கால்கள் நகர மறுத்து சண்டித் தனம் செய்தது. அன்று தனக்குத் தெரிந்த பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்காக ஒரு ஆண்பிள்ளையையே கை நீட்டி அடித்துத் துவைத்த மித்ரா தான் இன்று தனக்கு நேர்ந்த அநீதியால் இப்படி மற்ற சராசரி பெண்களைப் போல் பலவீனமாகி விட்டாள்.



‘ஏன் இவனைப் பார்க்க வேண்டும்? இவனிடம் இனி பேச என்ன இருக்கிறது? பார்க்க முடியாதுனு யாரிடமாவது அவனிடம் சொல்லச் சொல்லி அனுப்பி விடலாம்!’ என்ற முடிவுடன் உள்ளே செல்ல திரும்பியவள், உடனே அந்த எண்ணத்தை மாற்றித் ‘திரும்ப இவன் மறுபடியும் இப்படி வந்து நிற்க கூடாது! அதற்கு இன்றே ஓர் முடிவு கட்ட வேண்டும்! நான் என்ன தப்பு செய்தேன், இவனைப் பார்த்து பயந்து ஓட?’ என்று நினைத்து ஓர் நிமிர்வுடனே அவனை நெருங்கினாள் மித்ரா.



“இதற்கு மேல் என் கிட்ட பேச என்ன இருக்கு ஷியாம்?” என்றாள் எடுத்த எடுப்பிலேயே



“மித்ரா..” என்று குரலில் காதல் வழிய அவள் பெயரைச் சொல்லிக் கொண்டு அவன் அவளை அணைக்க முயல



“ஏய்…… அங்கேயே நில்!” என்று புலியின் உறுமலோடு அவனை மேல் கொண்டு நகர முடியாத அளவுக்கு தடுத்து நிறுத்தினாள் மித்ரா. அவன் விக்கித்துப் போய் பேசாமல் இருக்க, “சொல்லு ஷியாம், இனி என் கிட்ட பேச என்ன இருக்கு?” என்று கேட்டாள் தன்மையாக.



“என்ன மன்னிச்சிடு மித்ரா! நான் உனக்குப் பெரிய துரோகம் செய்துட்டன். ஆனா நீயும் என் நிலைமையில் இருந்து யோசித்துப் பார். இதுவரை என்னை மகனே என்று என்னிடம் முகம் கொடுத்து கொஞ்சிப் பேசாதவங்க என்னைக் கண்டாலே தூர விலகிப் போனவங்க எனக்கு ஒண்ணுனா துடிக்காதவங்க, இன்று என் மகனே நீ தாண்டா உன் அம்மாவுடைய மானத்த காப்பாத்தணும்னு கால்ல விழுந்து கெஞ்சிக் கேட்கும் போது ஒரு மகனா என்னால் என்ன செய்ய முடியும்? நீயே சொல்லு” என்று அவன் கேட்க



‘ஓ… இப்படி எல்லாம் வேற உன் அம்மா நடிச்சி உன்ன ஏமாற்றி இருக்கா? இன்னும் என்ன எல்லாம் செய்து இருக்கு? அதையும் சொல்லிடு’ என்பது போல் வாய் திறந்து கேட்கா விட்டாலும் அவள் கண்களாலேயே வினாவ, என்ன நடந்தது என்று சொன்னான் ஷியாம்.



ஷியாமின் அம்மா அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு ஒரு சிட்ஃபண்டில் சேர, அவரின் பேராசையைப் பயன்படுத்தி அதன் நிர்வாகியும் இன்னும் பல பேரை சேர்த்து விட்டால் லட்சக் கணக்கில் கமிஷன் தருவதாக ஆசை காட்டியுள்ளான். அதை நம்பிய அவரும், அங்கு பணம் கட்டினால் உங்கள் பணத்திற்கு அதிக வட்டி கிடைக்கும் என்று சொல்லி அவருக்குத் தெரிந்தவர்கள், இன்னும் அந்த தெருக் காரர்களை எல்லாம் நான் பொறுப்பு என்ற பெயரில் சேர்த்து விட அந்த சிட்ஃபண்ட் காரனோ கோடிக்கணக்கான பணத்துடன் ஓடி விட, பணம் கொடுத்த அனைவருமே ஷியாம் அம்மா தான் எல்லா பணத்துக்கும் முழுப் பொறுப்புனு அவர் கழுத்தை நெரித்து கெடுவும் விதித்தனர்.



ஷியாமுக்கோ இருப்பது ஒரு வீடு மட்டும் தான். அந்த வீட்டை விற்றாலும் அவ்வளவு பணம் கிடைக்காது என்பதால் மீதிப் பணத்துக்குத் திணற, அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தை கொடுக்க அவன் தாய் மாமன் முன் வந்தார். ஆனால் அவன் அத்தையோ இங்கே ஒண்ணும் சும்மா கொட்டிக் கிடக்கல என் பெண்ணுக்கனு சேர்த்து வச்ச சொத்து என்னும் போது என் மகளைக் கட்டிக் கிட்ட பிறகு உரிமையாக வாங்கிக்க சொல்லி நிபந்தனை விதித்தார். ஷியாம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவன் அத்தை மாறவில்லை.



‘கடனா கொடுங்க மாமா, நான் சம்பாதித்துப் பிறகு வட்டியோட உங்க கடனை அடச்சிடறேனு’ இவன் மாமாவிடம் எடுத்துச் சொல்லியும் அவர் கேட்க வில்லை. சரி இவர்கள் வேண்டாம், தங்கையைக் கொடுத்து இருக்கும் சம்மந்தி வீட்டில் கடனாகக் கேட்டுப் பார்க்கலாம்னு இவன் தாயிடம் வழி சொல்ல, ‘முடியவே முடியாது! என்னால எல்லாம் சம்மந்தி கிட்ட பிச்சை எடுக்க முடியாது. அதுக்கு நான் சாகறதே மேல்னு’ சொன்னவர் அதன்படியே தற்கொலைக்கு முயல, எப்படியோ தடுத்து நிறுத்தி அவரைக் காப்பாற்றி விட்டான் ஷியாம்.



இப்படி ஒரு சூழ்நிலையில் வேண்டா வெறுப்பாக வேறு வழியில்லாமல் தான் இந்த கல்யாணத்திற்கு சம்மதித்தான் ஷியாம். அவன் சொல்லி முடித்த அனைத்தையும் கேட்டவள், ‘இது எதுவும் உண்மை இல்லை, இவன் மாமா குடும்பமும் இவன் தாயும் செய்த சூழ்ச்சி!’ என்று அறிந்தவள் அது எதுவும் இப்போது தேவை இல்லை என்று உணர்ந்து



“இல்லை ஷியாம், நீ என்ன உண்மையாவே விரும்பல! ஏதோ ஒருவகையில் என் மேல உனக்கு ஆசை இருந்து இருக்கு. ஒரு வகையான ஈர்ப்புனு கூட சொல்லலாம். உன் தாய் தங்கை உன்னை ஒதுக்கினதுக்கு வடிகாலா என்ன பயன்படுத்திகிட்ட. நான் சொல்றத எல்லாம் கேட்டு நடக்க எனக்கு ஒரு அடிமை கிடைச்சிட்டானு எல்லார் கிட்டையும் சொல்லிக்காட்ட தான் நீ என்ன கல்யாணம் பண்ணிக்கிட்ட. உங்க அம்மா மாட்டிக்கிட்டாங்க அதனால உங்க மாமா பண உதவி செய்தாருனு சொன்னியே? அதுக்கு, உங்க அம்மாவுக்கு பதில் உங்க பணத்துக்கு எல்லாம் நானும் என் மனைவியும் முழு பொறுப்பு இன்னும் ஒரு வருஷத்துக்குள்ள உங்க பணத்தை எல்லாம் திருப்பி தந்திடரேனு சொல்லி என்ன கேட்காமலே ஒரு பத்திரத்துல இப்படி எல்லாம் எழுதி அதில் என்ன கையெழுத்து போடச் சொல்லி இருந்தினா, நீ ஒரு சுத்தமான ஆம்பளனு நினைச்சி இருப்பன்! ஏன், நீயும் நானும் படிச்சி இருக்கோம் தான? நாம சம்பாதித்து அந்த கடனை அடைச்சிருக்க மாட்டோமா?



அப்பறம் இந்த விளக்கத்த எல்லாம் இப்போ இந்த வினாடி வந்து சொல்றியே, ஏன்? என்ன இப்போ தான் நீ பார்க்கறியா? அன்று தாலி கட்டறதுக்கு முன்னாடி மண்டபத்துல அத்தன பேர் முன்னாடி இவர் தான் என் கணவர், எங்களுக்கு கல்யாணம் ஆகி நாங்க சேர்ந்து வாழ்ந்து கரு தங்கி அது கலைந்தும் போய்டுச்சினு நான் எல்லார் கிட்டையும் எந்த ஒரு தயக்கமோ அருவருப்போ அசிங்கமோ அவமானமோ படாம சொன்னனே! ஏன்னா நான் முறை தவறி உன் கூட பழகல! தாலி கட்டி முறைப் படி தான் வாழ்ந்தேன்.



அதனால தான் தைரியமா சொன்னேன்! அப்பவும் அந்த நேரத்துல உன் பக்கத்து நியாயத்தை சொல்ல வாய்ப்பு இருந்துச்சே, அப்ப சொல்லி இருக்கலாம் இல்ல? எல்லார் எதிர்லயும் முதுகெலும்பே இல்லாத கோழையா தான உட்கார்ந்து இருந்த? உன் சுயநலத்துக்காக மனசாட்சியே இல்லாம தான என்ன இதற்கு முன்னாடி பார்த்ததே இல்லனு பொய் சொன்ன?! எப்படி எல்லாம் என்ன கேவலப் பட வச்சிட்டு எதுவுமே நடக்காத மாதிரி இப்போ எதுக்கு இந்த விளக்கங்கள்? நான் கேட்டனா? எனக்கு எதுவும் தெரிய வேணாம்! ஸோ நீங்க போகலாம்” என்றாள் மித்ரா மிடுக்காக.



“அப்ப நீ என் கூட வந்திடு மித்ரா, நான் போய்டறேன்” - ஷியாம்



‘வாட்?!.. இவ்வளவு நடந்த பிறகும் இவன் எப்படி என்ன கூப்பிடலாம்னு?’ நினைத்தவள், “நான் எதற்கு ஷியாம் உங்க கூட வரணும்? உங்களுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம் இருக்கு நான் வர?” என்று கேட்க



“நீ என் மனைவி மித்ரா” - ஷியாம்



“இல்ல, நான் உன் மனைவி இல்ல! அந்த பந்தத்த உணர்ந்து அதுக்குண்டான மதிப்பு அறிந்து மரியாதை கொடுத்து அந்த உறவை நீ காப்பாற்ற கூட இல்ல! எல்லாத்துக்கும் மேல நீ சொல்ற மாதிரி அப்படி எந்த அடையாளமும் என்கிட்ட இல்ல! உன் மனைவி, அம்மு தான்! அவ மட்டும் தான்! அதனால் நீ போகலாம்” மித்ரா



“இல்ல, நீ தான் என் மனைவி! அவ இல்ல! அது ஒரு கட்டாயத்துக்காக நான் அவ கழுத்துல கட்டின தாலி. இந்த நிமிஷம் நீ சொல்லு, நாம ரெண்டு பேரும் எங்க வேணாலும் ஊரை விட்டுப் போய்டலாம்” ஷியாம்



“ச்சீ…. வாய மூடு! ஒரு கட்டாயத்துக்காக கட்டினனு சொல்றியே? அப்ப இந்த நிமிஷம் வரை அவ கூட கணவனா நீ சேர்ந்து வாழவே இல்லைனு சொல்லு பார்க்கலாம்!” என்று மித்ரா சவால் விட, அவள் முகத்தை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் அவன் தலை குனிய



“நீ ஒரு கோழை, சுயநலவாதினு தெரியும்! இப்போ தான் தெரியுது நிமிடத்து நிமிடம் நிறம் மாறும் பச்சோந்தியும் நீதானு! போ… போய் அவளுக்காது உண்மையா இரு” மித்ரா



“இல்ல மித்ரா, நீ எனக்கு வேணும்! என் கூட வந்திடு” அவன் திரும்பத் திரும்ப இதையே சொல்ல, “ஏய்.. ஒரு தடவை சொன்னா உனக்குப் புரியாது? வா வானா நான் எப்படி உன் கூட வர முடியும்? நீ கல்யாணம் ஆனவன்! அப்படியே நான் வந்தாலும் என்ன எங்க கூட்டிட்டுப் போவ?” மித்ரா



“உனக்குனு தனியா வீடு எடுத்து வச்சி உன்ன நான் பார்த்துக்கறன் மித்ரா” ஷியாம்



அதைக் கேட்டவள், “எவ்வளவு திமிர்! டேய் பொறுக்கி, என் வாழ்க்கைய வேணா அவ பங்கு போடலாம். ஆனா இன்னொருத்தி புருஷன நான் பங்கு போட்டுக்க மாட்டன். மனைவி என்ற கடமைக்காக ஏதோ கொஞ்ச சலனப் பட்டு ஒரு நிமிடம் நான் செய்த தவறுக்காக ஆயுசு முழுக்க உனக்கு வப்பாட்டியாவும் ஊரார் கண்ணுக்கு வேசியாகவும் என்ன வாழ சொல்றியா? அதெல்லாம் முடியாது, முடியவே முடியாது! மிஸ்டர் ஷியாம், நான் நல்லவிதமா சொல்லும் போதே இந்த இடத்த விட்டுப் போய்டுங்க!” என்று மித்ரா எச்சரிக்க



“நீ இல்லனா நான் செத்துப் போய்டுவன் மித்ரா!” ஷியாம். அவனுக்கு உண்மையிலேயே மித்ரா வேண்டும், ஆனால் அது ஊர் அறிய அல்ல!



எந்த ஓர் தயக்கமும் இல்லாமல் “அப்ப செத்துப் போ!” என்றாள் மித்ரா.



அவளை வர வைக்க முதலில் தன் பக்க நியாத்தை எடுத்துச் சொல்லி பிறகு கெஞ்சியவன் இறுதியாக உயிரை விடுவேன் என்று மிரட்ட, இது எதுக்கும் அவள் அசைய வில்லை என்றதும் வெறி கொண்டவன் போல் “வாடி, நான் கூப்பிட கூப்பிட ரொம்ப தான் மிஞ்சுற?!” என்று கூறி அவள் கையைப் பிடித்து இழுக்க



“டேய் விடுடா!” என்று அவள் அவன் கையை உதர திரும்பவும் அவன் கையைப் பிடிக்க வர, கொஞ்சமும் யோசிக்காமல் அங்கு தோட்டத்தைப் பெருக்கிக் கூட்ட வைத்திருந்த துடைப்பம் அவள் கண்ணில் பட அதை கையில் எடுத்தவள், “என் வாழ்க்கைய அழிச்சி நாசம் பண்ணிட்டு அதற்கும் மேல உனக்கு வப்பாட்டியா என்ன வரச் சொன்னதும் இல்லாம இப்போ கைய பிடிச்சா இழுக்கற? இதுக்கு மேல என் பக்கம் வருவியா? சாகர வரை இந்த அடிய மறப்பியா?’ என்று கேட்டுக் கொண்டே அவள் கையில் உள்ள துடைப்பத்தால் விலாசு விலாசு என்று அவனை விலாச. அதில் துடைப்பக் குச்சிகள் உடைந்து சுக்கு நூராகப் போய் அவன் முகம் கழுத்து மற்றும் கையால் தடுத்ததால் கைகள் என்று எல்லா இடத்திலும் அந்த குச்சிகள் குத்தி ரத்தம் வந்தும் இவள் ஓயாமல் அடித்துக் கொண்டே இருக்க அவள் கைகள் துவண்ட பின்னரே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க அடிப்பதை நிறுத்தினாள் மித்ரா.



“ஏய், நீ என்னையே அடிச்சிட்ட இல்ல? சொன்னாலும் சொல்லாட்டியும் நீ என் பொண்டாட்டி தான்டி! நீ என்ன கன்னியா? என் கூட வாழ்ந்தவ தான? அதனால் எப்படியோ நீ யாருக்கோ வப்பாட்டியா போகப் போற! அதுக்கு நீ எனக்கே இருந்தா என்ன?” - ஷியாம்.



“அடி செருப்பால நாயே! நான் ஏன்டா அப்படி ஓர் வாழ்க்கை வாழணும்? சுயகவுரவத்தோட சுயமரியாதையோட தலை நிமிர்ந்து எல்லா பெண்களைப் போல ஒரு நல்ல குடும்ப வாழ்வு நானும் வாழ்வேன்டா! இன்னும் சொல்லப் போனா எனக்குனு ஒருத்தர் பிறந்து இருப்பார்! அவருடன் நிச்சயம் நான் மனம் ஒத்து நல்ல வாழ்வே வாழ்வேன்!” என்றாள் மித்ரா உறுதியாக. உண்மையில் மித்ராவுக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லை. அதில் அவள் உறுதியாகவும் இருந்தாள். ஆனால் ஷியாமுக்காக அப்படி சொன்னாள்



ஷியாம் நினைத்து வந்ததோ வேறு! ‘தாலி கட்டி சேர்ந்து வாழ்ந்தாச்சி என்னும் போது இவன் கூப்பிட்ட உடனே மித்ரா வந்து விடுவாள், வீட்டுக்குத் தெரியாமல் இவளைத் தனியாக வீடு எடுத்து எப்போதாவது வந்து போய் பார்த்துக்கலாம்’ என்ற கனவுடன் வந்திருந்தான். ‘இது ஒண்ணும் பெரிய தப்பு இல்லையே?! உலகத்தில் எத்தனையோ ஆண்கள் இரண்டு மனைவிகளுடன் வாழவில்லையா? கொஞ்ச நாட்களுக்குப் பிறகு அவரவருக்கு உண்மை தெரிந்த பிறகு அனுசரித்து ஒற்றுமையாக வாழவில்லையா? அதே போல் வாழ வேண்டியது தான்!’ என்ற முடிவுடன் தான் இங்கு வந்தான்.



இவளோ தன்னை அடித்து விட்டு வரமாட்டேன் என்று சொன்னது மட்டும் இல்லாமல் வேறு ஓர் திருமணம் செய்து நல்ல வாழ்வு வாழ்வேன் என்று அவனிடமே சவால் விட, அவள் தைரியத்தையும் தன்னம்பிக்கையும் மட்டும் இல்லாமல் இது தனக்கு நடந்த ஒரு விபத்து என்று கருதி எதார்தத்துடன் அவள் வாழ்வின் அடுத்த நிலைக்குச் சென்று விட்டதை பிரம்மிப்புடன் பார்த்தவனோ அவளைப் பார்த்துக் கொஞ்சம் மிரண்டு தான் போனான். ஆனால் அதை மறைத்து “ஏய்.. உனக்கு இப்படி வேற எண்ணம் இருக்கா? நீ எப்படி வேறு ஒருவனுடன் வாழறனு நானும் பாக்றேன்! நீ போற இடத்துக்கு எல்லாம் உன்ன துரத்தி துரத்தி வந்து உன் நிம்மதியக் கெடுத்து அசிங்கப் படுத்தி உன்ன அழ வெக்கல, நான் ஷியாம் இல்லடி!” என்று அவன் பட்ட அசிங்கத்தாலும் அவமானத்தாலும் சவால் விட



“இப்போ உன்ன அசிங்கப் படுத்தினதுக்காக என்ன அழிப்பனு சவால் விடறியே? அப்போ நீ என் வாழ்க்கையையே அழிச்சிட்டியே! உன்ன எல்லாம் நான் என்ன செய்ய?” என்று சொன்னவள் தன் கை விரலை அவன் முகத்துக்கு நேராக தூக்கி சொடக்கு போட்டு, “இந்த வினாடி உன்ன அசிங்கப் படுத்த ரோட்டில் இறங்கி போராட்டம் பண்ணி கொடி பிடிச்சி கோஷம் போட்டு உனக்குத் தண்டனை வாங்கிக் கொடுக்க என்னால முடியும். ஆனா அதை நான் செய்ய மாட்டன்! அதுக்காக உனக்குத் தண்டனை இல்லைனு நினைச்சிக்காத! உனக்கான தண்டனை எது தெரியுமா? உனக்கு எதிரா நல்ல மாதிரியா நான் வாழ்ந்து காட்டறது! அதுவும் குடும்ப வாழ்க்கைய! நீ என்ன சொன்ன? எவன் வருவானு தான? உன்ன மாதிரி இல்லாம நல்ல ஆண்களும் இந்த உலகத்துல இருக்காங்க. நீ கெட்டவன் என்றதால எல்லா ஆண்களும் கெட்டவங்க இல்ல.



நிச்சயம் நான் வாழ்வேன்! வாழ்ந்து காட்டுவேன் அது தான் உனக்கான தண்டனை! அதனால உனக்கும் எனக்குமான அத்தியாயம் இன்றுடன் முடிந்து போச்சி! நீ போகலாம்” என்றவள் அவனை நிமிர்ந்தும் பார்க்காமல் திரும்பி எதிர் திசை நோக்கி நடந்து தன் அறைக்குள் வந்தவள் இவ்வளவு நேரம் ஓர் சிங்கமென அவனிடம் கர்ஜித்தது எல்லாம் மறைய ஒரு சாதாரண பெண்ணாக மாறி வேர் அறுந்த கொடியாக தரையில் விழுந்து அழுது கறைந்தாள் மித்ரா.



பகல் எல்லாம் எல்லோரிடமும் சகஜமாக சிரித்துப் பேசினாலும் இரவில், ‘தாம் இப்படி ஏமாந்து போனோமே!’ என்று நினைத்து அவள் கண்ணீர் விட, நாட்களும் கடந்தது. ஹோமுக்குள்ளயே இருக்கப் பிடிக்காமல் அவள் வேலைக்குச் சென்று வர முடிவு செய்து ஒரு நாள் இன்டர்வியூக்குப் போக அங்கு மேல் அதிகாரியாக தீபக்கைப் பார்க்க வேண்டி வந்தது. இது பேப்பரில் உள்ள விளம்பரத்தைப் பார்த்து அந்த இடத்திற்கு மித்ரா சென்றதால் இருவருக்குமே தாங்கள் இன்று சந்தித்துக் கொள்வோம் என்று தெரியவில்லை. அவளைப் பார்த்த உடன் வேலை சம்மந்தப்பட்ட அனைத்துக் கேள்விகளையும் முடித்து அவளுக்கு வேலை கொடுக்க சம்மதித்தவன் பிறகு அவளிடம்



“இப்போ எப்படி இருக்க மித்ரா? எங்க இருக்க? ஏன் ரம்யா கிட்ட கூட எதுவும் சொல்லாம அந்த நேரத்தில தாத்தா வீட்டுக்கு போறனு சொல்லிட்டு அப்படி எங்க போன?” என்று கேட்கவும்



‘இவனுக்கு எதுவரை தெரியும்?’ என்பது போல் விழி விரித்து அவனைப் பார்க்க



“ஒரு நாள் ரம்யாவ எதேச்சையா வழில பார்த்தன். உன் வாழ்க்கையில் நடந்தது எல்லாத்தையும் அப்போ தான் சொன்னா” - தீபக்



‘என் வாழ்க்கை நல்லா இருக்கணும்னு நினைக்கிறவ ரம்யா! இந்த வாழ்க்கைய மறந்து வேறு ஒரு திருமணம் செய்ய சொன்னவ. இவனால் என் வாழ்க்கைக்கு விடிவு வராதா என்று நினைத்து தான் எல்லாத்தையும் இவன் கிட்ட சொல்லி இருப்பா!’ என்று தன் தோழியை பற்றி நல்லவிதமாகவே நினைத்தவள்



எந்த ஓர் தயக்கமும் இல்லாமல் அவனை நேருக்கு நேர் பார்த்து “ஆமாம் தீபக், எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி! ஆனா நாங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டோம். இனி எந்த காலத்திலும் நாங்க ஒண்ணு சேர முடியாது. என் வாழ்வில் இது தான் முதலும் முடிவுமான திருமணம்!





சரி நான் கிளம்பறன் தீபக். என்ன இங்க பார்த்ததா ரம்யா கிட்ட சொல்லிடாத. அதே மாதிரி இந்த வேலைக்கு நான் வரவா வேண்டாமானு ஒரு வாரம் கழிச்சி சொல்றேன்” என்று அவள் எழுந்து கொள்ள



இவ்வளவு நடந்தும் கொஞ்சம் கூட துவளாம நிமிர்ந்து நிக்கறாளேனு அவளைப் பார்த்து வியந்தவன் “மித்ரா, நீ என்ன வேண்டாம்னு சொன்ன பிறகு உன்ன மாதிரி வாழ்க்கையில் தோத்து ஒடிஞ்சி போய் இருக்கிற பொண்ண தான் கட்டிக்கணும்னு முடிவு பண்ணன். இப்போ நீயே அந்த இடத்துல இருக்க என்னும் போது உன்ன கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணிட்டன். நீ எப்போனு சொல்லு உங்க வீட்டுல வந்து பேசறன்” என்று தன் பெருமை அடித்து அவளுக்கு வாழ்வு கொடுக்க நினைக்க



“நீங்க எனக்கு வாழ்வு கொடுக்கற அளவுக்கு இப்போ என் வாழ்க்கையில எதுவும் நடந்திடல தீபக்! நீங்கனு இல்ல வேற எந்த ஆண் மகனும் எனக்கு ஒண்ணும் வாழ்க்க பிச்சை போட வேணாம்! இப்போ என் வாழ்க்கையில் என்ன நடந்தது? திருமண வாழ்க்கையில் தோத்துட்டேன்! அவ்வளவு தான? இருக்கட்டுமே! முதல் பகுதியில் தோத்துப் போறவங்க இரண்டாம் பகுதியில் ஜெயிக்கறாங்க. இரண்டாவது பகுதியில் தோத்துப் போறவங்க முதல் பகுதியில் ஜெயிச்சி இருப்பாங்க. இரண்டு பகுதியிலும் ஜெயிக்கறவங்களுக்கு வாழ்வில் ஒரு சுவாரசியம் இல்லாமல் சலிப்பு வரும்.



அதுவே இரண்டிலும் தோத்துப் போனவங்களுக்கு அந்த வாழ்வின் மீது வெறி வந்து அந்த வெறி காதலாக மாறி ஏதாவது வாழ்வில் சாதித்து வெற்றி பெறணும்னு எண்ணம் வரும். நீங்க நினைக்கிற மாதிரி நான் இரண்டாம் பகுதியில மட்டும் தோத்து நிக்கல. வாழ்க்கை முழுவதுமே தோத்து நிக்கறேன். அதனால என் வாழ்க்கைய காதலித்து சாதிக்க நினைக்கிறன். அதுக்கு கல்யாணம் எனக்கு ஒத்து வராது. ஸோ என்ன மன்னிச்சிடுங்க தீபக்.



அதே மாதிரி நீங்க வாழ்வு கொடுக்கற அளவுக்கு நான் மட்டும் இல்ல எந்தப் பொண்ணோட வாழ்வும் இங்கு தரம் இறங்கல என்பது என் கருத்து. அதனால அப்படிப் பட்ட பொண்ண தேடறத விட, சொந்த பந்தம் பணம் காசு வசதியோட வாய்ப்போட இருக்குற நீங்க இது எதுவுமே இல்லாத வசதி குறைந்த பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணி நீங்க நினைக்கிற மாதிரி எல்லாத்தையும் அந்தப் பொண்ணுக்கு கொடுங்க. திரும்ப உங்களப் பார்க்கற வாய்ப்பு இருந்தா நிச்சயம் உங்க கல்யாணத்துக்கு நான் வரேன். இப்போ கிளம்பறேன் தீபக், பாய்!” என்று அவள் இருக்கையை விட்டு எழ



“நில்லு மித்ரா! உன் வாழ்க்கை இப்படி ஆகிடுச்சேனு பாவப் பட்டு வாழ்வு கொடுக்க நான் நெனச்சா, நீ எனக்கே அட்வைஸ் பண்றியா? இவ்வளவு நடந்தும் உன் திமிர் அடங்கல இல்ல? நீ யாரோ ஒருத்தன் கூட கவுரமா இல்லாம மறைமுகமான கேவலமான தரங்கெட்ட வாழ்க்கை வாழ வேண்டி இருக்குமேனு நினைச்சி உனக்கு ஒரு கவுரவத்தை கொடுக்க.......”



“நிறுத்து தீபக்!” என்று அவன் மேல் கொண்டு பேச விடாமல் பாதிலேயே நிறுத்தியவள் “நான் ஏன் அப்படிப்பட்ட கேவலமான தரங்கெட்ட வாழ்க்கைய வாழப் போறேன்? ஆண்களில் நல்லவர்களும் இருக்குறாங்க. நான் திருமணம் செய்யணும்னு நினைச்சா அவங்கள்ள யாராவது ஒருத்தர பண்ணிக்கப் போறேன்! அப்பறம் என்ன சொன்ன? இந்த திமிருக்கு தானா என்றா?! நீ மட்டும் இல்ல, இந்த சமுகத்தில் உள்ள ஆண் பெண் யாரா இருந்தாலும் சரி ஒரு பெண் நிமிர் கொண்ட நடையுடன் நேர் கொண்ட பார்வையுடன் இருந்தால் துணிச்சல்காரி, தைரியசாலி, தன்னம்பிக்கை உள்ளவள் அப்படி இப்படினு புகழ்ந்து பேசுவீங்க!



அதே பெண் உங்க தப்ப சுட்டிக் காட்டி உங்கள எதிர்த்துப் பேசினா அவ அடங்காப் பிடாரி, பிடிவாதக்காரி, திமிர் பிடிச்சவ, ஆணவக்காரி, நடத்த கெட்டவனு சொல்லி இல்லாதது பொல்லாததையும் சொல்லி அவளக் காரித் துப்புவிங்க! சுயமரியாதையோட சுயகவுரவத்தோட இருக்குற எங்களுக்கு நீங்க வைக்கிற பெயர் இது தானா? ஆமாம், நாங்க எல்லாம் அப்படி தான்! உங்களால் என்னெல்லாம் செய்ய முடியுமோ செய்துக்கங்க!” என்று வார்த்தையால் அவனுக்கு சவுக்கடி கொடுத்து விட்டு விருட்டென்று கிளம்பி வெளியே வந்து விட்டாள் மித்ரா.



தீபக்கிடம் பதிலுக்கு பதில் பேசியவளால் ஹோமுக்கு வந்து அழத் தான் முடிந்தது! ‘ஏன் என் வாழ்க்கையில் இப்படி நடந்தது? நான் எங்கு தப்பு செய்தேன்? ஷியாமுக்கும் தீபக்குக்கும் பொய்யாவாது நான் பதிலடி கொடுத்தது சரியா? ஒரு பெண் தன் வாழ்க்கையில் தோற்று நின்றால் அவளத் தப்பான கண்ணோட்டதுடன் பார்த்து அவளை எல்லோரும் தப்பான வாழ்விற்கே தள்ளி விடுவார்களோ?! அதில் என் வாழ்வும் அப்படி ஆகிடுமோ?! அப்படி ஏதாவது நடக்க இருந்தால் நிச்சயம் நான் உயிருடனே இருக்க மாட்டேன்!’ இப்படி பல கேள்விகளைத் தன்னுள்ளே கேட்டுப் புழுங்கியதில் அன்று அவளுக்கு ஜுரம் வந்து விட, அந்த ஹோம் நிர்வாகி டாக்டரை வர வைத்துக் காட்ட சாதாரண ஜுரம் தான் என்றும் அவள் மன உலைச்சலில் இருப்பதாகவும் அது என்ன ஏது என்று கேட்டு சரி பண்ணச் சொல்லி அவர் சென்று விட



“என்ன மித்ரா, உனக்கு என்ன பிரச்சனை? அப்படி எதை மனசுல போட்டு உன்னையே நீ கஷ்டப் படுத்திக்கிற?” என்று கேட்டு அவர் அவள் தலை வருட இதற்காக தான் காத்து இருந்தது போல் மடை திறந்த வெள்ளமாக ஷியாமை சந்தித்தது முதல் இன்று தீபக்கை சந்தித்தது வரை அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள் மித்ரா.





அன்று ரம்யாவிடம் தன் வாழ்வில் நடந்ததைக் கூறினாள். ஆனால் இன்றோ தன் எதிர் கால வாழ்வு என்னாகுமோ என்ற பயத்தில் வாய் விட்டுக் கதறி அழுது தீர்த்தாள். ‘அழட்டும்! இதுவரை இவள் இப்படி வாய் விட்டுக் கதறி அழவில்லை என்று தெரிகிறது. இப்படி அழுதாவது அவளது மன பாரம் குறையட்டும்!’ என்று நினைத்தவர் அவளைச் சமாதானப் படுத்தாமல் அவள் தலையை மட்டும் வருடிக் கொடுத்தார் அவர்.



மித்ராவை வெளியே எங்கும் அனுப்பாமல் தன்னுடனே தன் அறையிலே வைத்துக் கொண்டார். அவளும் எங்கு செல்லவும் ஆசைப் படவில்லை. நேரம் இருக்கும் போது எல்லாம் அவளை ஒரு குழந்தையாக பார்த்துக் கொண்டார். திரும்பத் திரும்ப ஷியாம் விஷயத்தைக் கேட்டு அவளைச் சொல்ல வைத்து அதனால் கதறி அழவைத்து அவளை மனதால் அந்த விஷயத்தில் இருந்து வெளியே கொண்டு வந்தார்.



பிறகு ஒரு நாள் “இங்க பார் மித்ரா, நீ செய்தது தப்பு தான்! ஆயிரம் தான் அவன் உனக்கு தாலி கட்டினாலும் எந்த நம்பிக்கையில் எல்லாத்துக்கும் நீ அவனுக்கு விட்டுக் கொடுத்த? கணவனே என்றாலும் நமக்குனு சுயகவுரவம் இருக்கக் கூடாதா? அதை எப்படி நீ இழந்த? அளவுக்கு மீறி அன்பு பாசம் வைக்கலாம்! ஆனால் இரக்கம்? அதை அளவோடு தான் வைக்கணும்! அன்று நீ அவன் மேல் கொண்ட இரக்கம் இன்று உன் எதிர்காலத்தையே அழித்து உன்னை உரு தெரியாமல் செய்து விட்டது.



அதுக்காக உனக்கு எதிர் கால வாழ்வே இல்லனு சொல்ல மாட்டேன். நிச்சயம் உனக்கு நல்ல வாழ்வு இருக்கு! நீ வாழணும் தான்! ஆனா அந்த வாழ்வில் மனசு ஒன்றினாலும் ஏதோ ஒரு உறுத்தல் உன்னுள் உறுத்திக் கிட்டே இருக்கும்! அந்த உறுத்தலும் விலகி உன் பழைய வாழ்வின் சுவடே உனக்கு மறந்து போகணும்னா, அது இன்னோர் ஆண் மகனால தான் முடியும்! ஷியாம் மாதிரி தீபக் மாதிரி எத்தனையோ ஆண் மகன்கள் இந்த உலகத்தில் இருந்தாலும் நல்லவங்களும் இருக்காங்க.



நீ தனியா வாழ முடியாது அதனால் வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோனு நான் சொல்ல வரல. நீ சொன்ன மாதிரியே உன் வாழ்வில் நடந்தது அப்படி ஒண்ணும் பெரிய விஷயம் இல்ல! நாளைக்கு உனக்குனு வரப்போறவர் கிட்ட எல்லா உண்மையையும் சொல்லி அவர் உன்னப் புரிஞ்சி கிட்ட பிறகு கல்யாணம் செய்துக்க. அதுக்கு முதல் படியா நடந்த இந்த விஷயத்தில் இருந்து கொஞ்ச கொஞ்சமா வெளியே வா” என்று ஒரு தாயாக அவளுக்கு எடுத்துச் சொல்லி அவள் வெளியே வர உதவி செய்தார் அந்த திருநங்கை.





அவர் கேட்டது, படித்தது, மற்றவர் வாழ்வில் நடந்தது இன்று அவர்கள் வெற்றி பெற்று நிற்பது இன்னும் அந்த ஹோமில் இருக்கும் மற்ற திருநங்கைகளின் கதை ஏன் அவர் வாழ்விலே ஒரு வயதுக்குப் பிறகு தன் உடலில் ஏற்பட்ட மாற்றத்தால் பிறந்த வீட்டிலே அவர் பட்ட அசிங்க அவமானம் தன் தந்தையே குடிக்காகத் தன்னை ஒரு வேசி வாழ்வில் தள்ளி விட அசிங்க அவமானப் பட்டு தற்கொலைக்கு முயன்று உயிர் பிழைத்தது நன்றாக கவிதைகள் எழுதும் அவர் இன்று சினிமா துறையில் மயூரா என்ற புனைப் பெயரில் பாடல்கள் எழுதி வெற்றி பெற்று இன்று வரை தன் முகம் காட்டாமல் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பது என்று அனைத்தையும் கூறி அவளைத் தேற்றி நம்பிக்கை ஊட்டினார். மித்ராவும் சற்று தைரியசாலி என்பதால் ஓரே வாரத்திலே மீண்டு வந்து விட்டாள். அதுவும் அவள் குறும்பு குணத்துடனே வந்து விட்டாள்.



இதோ பழைய மித்ராவாக தன் வேலைகளைப் பார்க்கச் சென்று விட்டாள். இரண்டு நாள் கழித்து தாத்தாவைப் பார்க்க ஊருக்குப் போக வேண்டும் என்ற முடிவுடன் ஷேர் ஆட்டோவுக்காக அவள் காத்திருக்க, தாருமாறாக வந்த ஒரு கார் ரோட்டில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த சிறுமியை இடித்துத் தள்ளி விட்டுச் சென்று விட மித்ரா தான் அந்த சிறுமியைக் காப்பாற்றி மருத்துவ மனையில் சேர்த்து உரிய சிகிச்சை அளித்த பின் அவள் யார் எந்த இடம் பெற்றவர்கள் விபரம் அனைத்தும் கேட்டு உரியவரிடம் ஒப்படைப்பதற்காக விசாரிக்க. அப்போது தான் ஸ்கூல் படிக்கும் குழந்தைகளைக் கடத்திக் கொண்டு வந்து இங்கு பிச்சை எடுக்க வைப்பதும் அதற்கு உடன் படாத பிள்ளைகளை அடித்து உதைத்து சித்திரவதை செய்து அந்த குழந்தைகளை வெளி நாட்டில் விற்பதற்கு என்று ஒரு கூட்டமே இருப்பதை அறிந்தாள்.



உடனே அந்த சிறுமியை அழைத்துக் கொண்டு அந்த இடத்திற்குச் சென்று விட்டாள் மித்ரா அன்று தன் ஸ்கூட்டியை எடுத்து வராததால் அந்த இடத்திற்கு சற்று முன்னதாதவே ஆட்டோவில் இருந்து இறங்கியவள் அது எந்த இடம் என்ன ஏது என்று அனைத்தும் தூர இருந்து பார்த்தவள் அந்தச் சிறுமியை ஹோம் அட்ரஸ் சொல்லி தான் வந்த ஆட்டோவிலேயே பத்திரமாக அனுப்பி வைத்து விட்டு பின் ஒரு ரூபாய் தொலைபேசியில் போலிஸுக்கு தகவல் சொன்னாள்.



அவர்கள் வருவதற்குள் உள்ள யார் யார் எல்லாம் இருக்கிறார்கள் போலிஸ் வருவதற்குள் உள்ளே தன்னால் முடிந்தால் யாரையாவது காப்பாற்ற முடியுமா என்ற எண்ணத்தில் அவள் உள்ளே செல்ல, அந்தக் கட்டிடமோ பெரிய ஷாப்பிங் மாலைக் கட்ட ஆரம்பித்து முழுமையாக முடிக்காமல் பாதிலேயே கட்டட வேலை நிறுத்தப் பட்டு செங்கல், மணல், ஜல்லி, கம்பி என்று முழுக்க இருந்தது. ஆனால் வெளியில் யாருமே இல்லை.





அதனால் பதுங்கி பதுங்கி உள்ளே சென்று தேடிப் பார்த்ததில் முதல் தளத்தில் பேசும் குரல் கேட்கவே அந்த அறையின் ஜன்னல் வழியாக மறைந்து இருந்து பார்த்தாள். பத்து சிறுவர் சிறுமிகளும் மூன்று தடியன்களும் இருந்தனர். இது நிரந்தமான இடம் இல்லை என்றும் நாளைக்கு வேறு இடத்திற்குப் போய் விடப் போவதாகப் பேசிக் கொண்டிருக்க, இது வரை அவர்கள் கண்ணில் படாமல் மறைந்திருந்த மித்ராவின் பின்னால் “ஏய்… யார் நீ? இங்க என்ன செய்யற?” என்று ஒரு ஆணின் குரல் கேட்க ‘ஐய்யோ… நல்லா மாட்டிக்கிட்டோம் போல!’ என்று நினைத்தவள் அங்கிருந்து தப்பி ஓட முயன்று வேறு வழியில்லாமல் முதல் தளத்திலிருந்து கீழே கொட்டி வைத்திருந்த ஜல்லியின் மேல் குதிக்க.



அதில் அவள் கால் சுளுக்கிக் கொள்ள உருண்டு அவள் தரை தொட கை கால் முகம் எல்லாம் சிராய்ப்புகள். அதையும் மீறி எழுந்து ஓடியவளின் ஆடை அங்கு சுருட்டி வைத்திருந்த இரும்பு முள் வேளியில் மாட்டி தாறு மாறாக கிழிந்து போனது. அதில் தடுமாறி அவள் கீழே விழ சரியாக நெஞ்சில் அங்கு நீண்டிருந்த கம்பி குத்தி அவள் வலியால் நின்று விட அவளை துரத்தி வந்தவர்களோ தன் கையில் உள்ள உருட்டுக் கட்டையால் அவள் தலையில் இரண்டு அடி போட அதுவரை தான் மித்ராவுக்குத் தெளிவாகத் தெரியும்.



அதன் பிறகு கொஞ்ச கொஞ்சமாக அவள் மயக்கத்துக்குச் செல்ல அவர்கள் பேசிக் கொண்டதில் அவள் காதில் மெலிதாக விழுந்தது. ஒருவன் அவளைத் தூக்கி கடலில் போடச் சொல்ல சரி என்று இன்னொருவன் அவளைத் தூக்கி தோளில் போட இது வரை தான் மித்ராவுக்குத் தெரியும்.



அதன் பிறகு தான் கரை ஒதுங்கி யாரோ ஒருவர் தன்னை விஷ்வாவின் ஆஸ்பத்திரியில் சேர்த்ததாக தன் கதை முழுவதையும் அவள் தேவ்விடம் சொல்லி முடிக்க, “ஆனா விஷ்வா கிட்ட உன்ன பத்தி சொல்லும் போது ஃபிரண்ட்ஸ் கூட பீச்சில குளிக்க வந்தப்போ தெரியாம அலைல சிக்கி கரை ஒதிங்கிட்டதாக தான சொன்ன நீ?” என்று தன் மார்பில் தலை சாய்ந்து இருக்கும் அவளின் தலையை வருடிக் கொண்டே கேட்டான் தேவ்.



அப்போதே இதை விஷ்வா சொல்லும் போதே தேவ்வுக்கு நம்பிக்கை இல்லை. ஏன் என்றால் அவளை அந்த மாதிரி நிலையில் கண்டெடுத்து ஆஸ்பிட்டலில் சேர்த்ததே அவன் தானே? இப்போதும் தேவ், உன்னைக் காப்பாற்றியது நான் தான் என்பதை அவளிடம் சொல்லவில்லை.



“அப்போ நீ நினைச்ச மாதிரி உன்னால அந்த குழந்தைகளை காப்பாற்ற முடியல! இல்லையா ஹாசினி?” தேவ்



தன் வாழ்வில் நடந்ததைச் சொன்னால் தேவ்வின் ரியாக்ஷன் எப்படி இருக்குமோ என்று நெஞ்சு படபடக்க கண்ணில் ஒருவித பயத்துடனும் கண்ணீருடனும் அவனைப் பார்த்தவளுக்கு, தேவ் எந்த ரியாக்ஷனும் காட்டாமல் இது போன்ற கேள்விகளைக் கேட்டது வியப்பாக இருந்தது. ஒருநிமிடம் யோசித்து அமைதி காத்தவள் பின்,



“இல்ல இல்ல! அதுக்கு அப்பறம் போலிஸ் வந்து அவங்கள காப்பாத்திடுச்சி! அந்த செய்தி நியூஸ்பேப்பர்ல வந்தருந்தது.. உங்க வீட்டுல நான் இருந்தப்ப தான் படிச்சேன்”. ம்ம்ம்…. என்று சொல்லி தன் கண்ணத்தை அவள் உச்சந் தலையில் வைத்து அழுத்தினான் தேவ். சிறிது நேர அமைதிக்கு பிறகு “அப்ப நான் உங்கள விட்டுப் போய்டவா தேவ்? நாம பிரிஞ்சிடுவோமானு?” கேட்டு குரலை சிரமப் பட்டு சரி செய்து எழுப்பாத குரலில் அவனிடம் கேட்க ஆனால் அவள் கைகளோ நான் உங்களை விட்டுப் போக மாட்டேன் என்பது போல் அவனை ஆரத் தழுவி தன் முகத்தை அவன் நெஞ்சோடு நெஞ்சாக ஒட்டிக் கொண்டாள் மித்ர.

 

Author: yuvanika
Article Title: உன்னுள் என்னைக் காண்கிறேன் 28
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN