ஆதித்யா சக்கரவர்த்தி-11

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 11

மலர் மயக்கம் ஆனதும் பதறிய ஆதித்யா நொடியும் தாமதிக்காமல் அவள் அறைக்கு தூக்கி சென்று படுக்கையில் கிடத்தினான். பணியாளரை கூப்பிட்டு மருத்துவரை அழைக்க சொன்னான். எல்லாவற்றிலும் வேகம் மட்டும் தான் இருந்தது.

ஆதித்யாவிற்கு மனது ஒரு நிலையில் இல்லை முதல்முறையாக படபடப்பாக உணர்ந்தான்.

இங்கோ மின்னல் வேகத்தில் ஆதித்யா மலரை தூக்கி சென்றதை பார்த்த நந்தன் கல்லாக சமைந்திருந்தான். அவனது கைகளைப் பிடித்துக்கொண்டு அவனது முகத்தை தான் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தாள் சௌமியா. தோழியாக ஒருபுறம் நந்தனின் மனநிலை குறித்து கவலையாக இருந்தாலும், மறுபுறம் பொறாமை பிடித்த மனதிற்கு சந்தோஷமாக இருந்தது.

"யார் அந்த பொண்ணு?" என்று கேட்ட நண்பர்களிடம் தன் சகோதரி கணவனின் தங்கை என்று சுருக்கமாக சொன்னாள் சௌமியா.

அங்கு நடந்த களேபரத்தில் சௌமியாவின் நண்பர்களும் ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். கிளம்பும்பொழுது சுகன், "சௌமியா உங்க அண்ணனுக்கு அந்த ஏஞ்சல் மேல எவ்வளவு அக்கறை... ரெண்டு பேரும் மேட் ஃபார் ஈச் அதர்... சீக்கிரமே உனக்கு அண்ணி கிடைக்க போறாங்க போல வாழ்த்துக்கள்" என்று சொல்லிவிட்டு தான் சென்றான்.

சௌமியா என்ன சொல்வதென்று தெரியாமல் முழித்துக் கொண்டிருக்க... அதை அருகில் இருந்து கேட்டு கொண்டிருந்த நந்தனுக்கு பைத்தியம் பிடிப்பதுபோல் வெறி வந்தது. அவன் எதற்காக மலரை விட்டுக்கொடுக்க வேண்டும். அதான் ஏற்கனவே ஊரறிய இருவருக்கும் நிச்சயதார்த்தம் ஆகிவிட்டதே! எனக்கு இல்லாத உரிமை ஆதித்யாவிற்கு எப்படி வரும்? என்று பலதும் சிந்தித்த நந்தன் மலரை எக்காரணத்தைக் கொண்டும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று தாமதமாக முடிவெடுத்தான். ஆனால் இப்பொழுதும் மலர் தவறு செய்திருக்க மாட்டாள் என்ற நம்பிக்கை அவனுக்கு வரவில்லை. ஒரு உறவிற்கு அஸ்திவாரமே நம்பிக்கைதான். அதுவே குறைவாக இருக்கும் பொழுது சௌமியா,ஆதித்யா என்ன... யார் நினைத்தாலும் அவர்களை ஒரு நொடியில் பிரித்துவிட முடியும் என்பதை நந்தன் அறியவில்லை.
நந்தனுக்கு மட்டும் நம்பிக்கை என்ற ஒன்று இருந்திருந்தால் எல்லா பிரச்சனைகளும் ஒரு நிமிடம் என்ன ஒரு நொடியில் கூட சரியாகி இருக்கும். இப்பொழுது ஆதித்யா மலரை தூக்கி செல்வதை பார்த்தவுடன் உரிமை உணர்வு மட்டும்தான் எழுந்தது. நம்பிக்கை எல்லாம் வரவில்லை.

மற்றவர்கள் கிளம்பினாலும் நந்தன் கிளம்பவில்லை. அங்கே தான் இருந்தான். மருத்துவர் வந்து மலரின் காயத்திற்கு மருந்திட்டு கட்டு போட்டுவிட்டார். மேலும் செப்டிக் ஆகாமல் இருப்பதற்கு ஒரு இன்ஜக்ஷனும் போட்டுவிட்டு,வெளியே நின்ற மூவரிடமும், மலருக்கு ஓய்வு தேவை என்றும், அப்படி பார்க்க வேண்டுமானால் ஒவ்வொருவராக பார்த்துவிட்டு வாருங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விட்டார்.

மயக்கத்தில் இருந்த மலரை முதலில் சௌமியா தான் பார்த்துவிட்டு வந்தாள். அடுத்து உள்ளே செல்ல போன ஆதித்யாவை தடுத்து நிறுத்திய நந்தன், தானே செல்வதாக சொன்னான். ஆதித்யா ஒற்றை புருவத்தை தூக்கி ஏன்? என்பது போல் அவனை பார்க்க, அவனோ சற்றும் பயமில்லாமல் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு
"ஷி இஸ் மை பியான்சி" என்று அழுத்தம் திருத்தமாக சொல்லிவிட்டு ஆதித்யாவை தாண்டி மலர் இருந்த அறைக்குள் சென்றான்.

சௌமியாவின் முகம் சுருங்கி ஆதித்யாவை பார்த்தாள். ஆதித்யா அழுத்தமாக நின்றானே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. ஆதித்யாவின் முகத்திலிருந்து எதையும் கணிக்க முடியாமல் சௌமியா அமைதியாக அவனருகில் நின்றாள்.

உள்ளே சென்ற நந்தன் வாடிய மலராக கிடந்த மலரை பார்த்து வருந்தினான். அவளின் இந்த நிலைக்கு அவனும் ஒரு காரணம் அல்லவா! அவள் அருகில் சென்று அமர்ந்தவன் அவளது கையை பிடித்து தனது கன்னத்தில் வைத்துக் கொண்டான்.

" ஐ அம் ரியலி சாரி மலர் என்னன்னவோ நடந்துட்டு... என் மேலேயும் தப்பு இருக்கத்தான் செய்யுது எதுவா இருந்தாலும் நம்ம பேசி முடிவு எடுத்திருக்கலாம்... சீக்கிரம் உனக்கு சரியாகிடும்...இந்த நந்தன் எப்பவுமே உன் கூடத்தான் இருப்பேன்" என்று அவளது கையில் அழுத்தம் கொடுத்தான். உண்மையிலேயே இன்று அவனுக்கே அவனின் செயல் சற்று அதிகப்படியாக தான் தெரிந்தது. அதனால் தான் மன்னிப்பு கேட்டான்.
மலரின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. அதைப்பார்த்து வருந்திய நந்தன் அதை மென்மையாக துடைத்து விட்டான்.

உண்மையிலேயே மலருக்கு தன்னை பிடித்துள்ளதா?
பிடிக்காமலா கண்ணீர் வடிக்கிறாள் என்றது மனது...

மலர் மயங்குவதற்கு முன்பு, கடைசியாக அவனை பார்த்த பார்வை நினைவிற்கு வந்து அவனது நெஞ்சுக்குள் வலியைக் கொடுத்தது.அவளது தலையை வருட சென்ற நந்தனுக்கு சௌமியாவின் குரல் வெளியே கேட்டது.

"நந்தா மாஸ்டர் இங்க கொஞ்சம் வாங்க... உங்களுக்கு போன் கால்" என்று சௌமியா அழைத்ததும், மலரிடம் இருந்து விலகியவன் வெளியே வந்தான்.

அவன் வெளியே சென்ற சில பல நிமிடங்கள் கழித்து லேசாக மயக்கம் தெளிந்தாள் மலர். இவ்வளவு நேரம் நந்தன் தானா பேசியது? கனவில்லை அல்லவா! கண்ணைத் திறப்பதற்குள் தலை வெடிப்பது போல் வலித்தது. போதாததற்கு அவளது கண்களுக்கு எல்லாமே மங்கலாக தெரிந்தது.
அவள் படுத்திருந்த படுக்கையின் எதிர்புறம் நந்தன் நின்றான். நந்து என்று உளறிய கொண்டே, முயன்று எழுந்தவள் தட்டுத்தடுமாறி நடந்து அவன் அருகில் சென்றாள். அவளுக்கு முதுகு காட்டி நின்றவனை கண்ணீரோடு
பார்த்தவள்,

"நந்து அந்த ஆதித்யா நல்லவன் இல்ல... அவன் நம்ம ரெண்டு பேரையும் பிரிக்க பார்க்குறான். என்னால இங்க இருக்கவே முடியல. என்ன இங்க இருந்து கூட்டிட்டு போயிடுங்க ப்ளீஸ்" என்று பின்னிருந்து அவனை அணைத்துக் கொண்டே கேவினாள் மலர்.

அவளுக்கு என்ன சொல்லி தன்னை புரியவைப்பது என்று தெரியவில்லை. வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு மனம் முழுவதும் துயரம் மட்டுமே இருந்தது. பேசாமல் தானும் அப்பா அம்மாவிடம் போய் விடுவோமா... என்று கூட பலமுறை நினைத்து விட்டாள்.பின்பு அது கோழைத்தனம் என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டு தன்னையே திடப்படுத்திக் கொண்டு இருந்தாள் மலர். தனது பிரச்சினையை யாரிடம் சொல்வது? எப்படி சொல்வது? என்று கூட அவளுக்கு புரியவில்லை தனக்கென யாரும் இல்லாத நிலை நந்தன் கூட தன்னை நம்ப மறுக்கிறான் என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை இயலாமை கண்ணீராக பெருக்கெடுக்க அவன் முதுகில் சாய்ந்து ஏங்கி ஏங்கி அழ ஆரம்பித்தாள்.

திடீரென்று ஏதோ உடையும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு மலர் திரும்ப, அங்கு நந்தன் பூச்சாடியை கீழே போட்டு உடைத்து விட்டு கொலைவெறியோடு நின்று கொண்டிருந்தான். அவனருகில் சௌமியா நின்றாள். அவளது கண்களிலும் அடிப்பாவி என்பது போல் ஒரு உணர்வு இருந்தது.
மலருக்கு ஒரு நிமிடம் மூச்சே நின்று விட்டது. திடுக்கிட்டு திரும்பி தான் அணைத்திருந்தவனை பார்க்க, அவன் ஆதித்யா... அவன் முகம் வெகு சாதாரணமாகத்தான் இருந்தது.
மலருக்கு தான் தலை சுற்றியது.
இருவருமே அன்று ராயல் ப்ளூ கலரில் தான் ஷர்ட் அணிந்திருந்தனர். நந்தன் அணிந்திருந்த உடையின் நிறத்தை கவனித்த மலரின் மூளை, தன்னை தூக்கி வந்த ஆதித்யாவின் உடையின் நிறத்தை கவனிக்க வில்லையே...!!

"மலர்...ச்சே நீ இப்படிபட்டவளா?" என்று சௌமியா முகம் சுளிக்க, அதை கவனித்த நந்தனின் முகத்தில் இன்னும் ஆத்திரம் கூடியது.

"இல்ல சௌமி நா அப்படி இல்ல..." என்று சொன்ன மலர் மீண்டும் தலை சுற்றியதால் நிற்க தடுமாறினாள். அவளை விழாமல் பிடித்து நிறுத்தினான் ஆதித்யா.

நந்தன் அளவுக்கு மீறிய கோபத்துடன் மலரிடம், "இனி உன்னோட வாழ்க்கையில இந்த நந்தன் குறுக்க வரமாட்டான். நீயும் வராத" என்று கூறிவிட்டு...
அதற்கு மேல் அங்கு நின்றவர்களின் முகத்தை கூட பார்க்க விருப்பமில்லாமல் விறுவிறுவென்று வெளியேறினான்.

இனி எக்காரணத்தைக் கொண்டும் இந்தியா வரக்கூடாது.சென்றுவிட வேண்டும். இங்கிருந்து சென்று விட வேண்டும் என்பது மட்டுமே... அவனது மனதில் ஓடிக்கொண்டிருந்த வாக்கியம்...

அவன் பின்னாலேயே ஓடிவந்த சௌமியா "நந்தா மாஸ்டர் நில்லுங்க" என்று கூறியவாறு நந்தனின் கைகளைப் பிடித்து நிறுத்தினாள்.

"ப்ச்ச் சௌமி ப்ளீஸ்... லீவ் மை ஹான்ட் அண்ட் லீவ் மீ அலோன் என்னால இங்க இனி ஒரு நிமிஷம் கூட இருக்க முடியாது... ஐ ஹேட் திஸ்" என்று அவளது கைகளை உதறிவிட்டு தனது காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான் நந்தன்.
செய்வதறியாமல் திகைத்து நின்றாள் சௌமியா.

இங்கு அறையிலோ பிரமை பிடித்தது போல் நின்ற மலரை மீண்டும் கட்டிலில் அமர வைத்த ஆதித்யா, அவளது கண்களிலிருந்து நீர் வடிவதை பார்த்து துடைத்து விட்டான்.

"தயவுசெஞ்சு என்ன தொடாதீங்க ப்ளீஸ்" என்று அருவருப்புடன் கூறிய மலர் முயன்று அவனிடமிருந்து விலகி அமர்ந்தாள். ஆதித்யாவின் முகம் சிரிப்பை காட்டியது.

"இன்னைக்கு நீயேதான் என்ன கட்டி அணைச்ச மலர்" என்றதும் மலருக்கு அவமானத்தினால் முகம் சிவந்தது. தன்னை நினைத்தே ஆத்திரம் ஆத்திரமாக வந்தது.
அவளது முகம் மாறுதல்களை கவனித்தாலும் ஆதித்யா விடாமல் மேலும் சொன்னான்.

"உன்னோடு ஹாட் பீட் என்ன ஹக் பண்ணதும் எவ்வளவு ஸ்பீடா இருந்துச்சுன்னு என்னால பீல் பண்ண முடிஞ்சது மலர் ...ஐ லைக் இட் வெரி மச்... திரும்பவும் அப்படி ஒரு ஹக் கிடைக்குமா?" என்று ஆவலோடு கேட்டவனை தீ பார்வை பார்த்தாள் மலர்விழி.

"இதேதான் மலர்... இந்த கண்ணுதான் என்னோட தூக்கத்தை கெடுக்குது... உன்னையே நினைக்க வைக்குது...
நான் இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் உணராத உணர்வுகள் உன்னால எனக்குள்ள நடக்குது மலர், இதுவரை எந்த பொண்ணு கிட்டயும் நா இவ்வளவு நெருங்கினதே இல்ல.
உன்ன நெருங்குனதுக்கு காரணம் ஐ லவ் யூ மலர் ஐ லவ் யூ சோ மச்... நீயும் உன்னோட விருப்பத்தோடு என்ன லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கோ... உன்ன ராணி மாதிரி நான் வச்சிக்கிறேன்... உன் கண்ணுல இருந்து ஒரு துளி கண்ணீர் கூட வராம நான் பாத்துக்குறேன்... வாழ்க்கை பூராவும்..." என்று சொல்லிக்கொண்டே சென்றவனை இடைமறித்தாள் மலர்,

"நிறுத்துங்க சௌமி அண்ணா... முதல் விஷயம் நா ஆல்ரெடி நிச்சயம் ஆனவ. இரண்டாவது விஷயம் நான் உங்கள அந்த மாதிரி நினைச்சு பார்த்ததே இல்ல. மூணாவது காதல் தானா வரணும் கட்டாயப்படுத்தி வரக்கூடாது" என்றாள் தெளிவாக...
அப்பொழுது அறைக்குள் வேகமாக வந்த சௌமியா, மலர் இருப்பதை மறந்து "அண்ணா நந்தாவும் என்னை விட்டு போய்டுவான் போல" என்று அழுதாள்.

மலர் திடுக்கிட்டு சௌமியாவை பார்த்தாள். அவளது இதழ்கள் 'துரோகி' என்று முணுமுணுத்தது. மலரின் கண்கள் சௌமியாவை சுட்டெரிக்க ஆரம்பித்தது.
மலரின் முகத்தை ஒரு முறை பார்த்தாலும் ஆதித்யா தங்கையே சமாதானப்படுத்தினான்.

"கவலைப்படாதடா சௌமி..." என்றவனிடம்,
"அண்ணா இன்னொரு தோல்வியை என்னால ஏத்துக்கவே முடியாது" என்று மீண்டும் கண் கலங்கினாள் சௌமியா.

ஆதித்யா சௌமியாவிடம் ஏதோ சொல்ல வருவதற்குள்,
"ச்சே... நீங்கள்லாம் மனுஷங்க தானா... கண்டிப்பா இத நடக்க விடமாட்டேன்" என்று ஒரு முறையாக கோபத்தை வெளிப்படையாக காட்டினாள் மலர்.

சௌமியா திடுக்கிட்டு அவளைப் பார்க்க...
ஆதித்யா எப்பொழுதும்போல் அலட்சியமாக தான் பார்த்தான்.

"நீங்க நினைக்கிற மாதிரி நந்தன் என்னை விட்டு அவ்வளவு சீக்கிரம் போய்டமாட்டார்..." என்று சீரிய மலரை இப்பொழுது சௌமியா முறைத்தாள்.

சௌமியாவை கடலளவு வெறுப்புடன் பார்த்த மலர்,
"இவ்வளவு கேவலமான ஒருத்திய ஃபிரண்டா நெனச்சிருக்கேன்னு நினைக்கும்போது எனக்கு என்ன நெனச்சாலே கோவமா வருது... ஒருத்திக்கு சொந்தமானது இப்படி குறுக்கு வழியில சொந்தமாக்கிக்க நினைக்கிறியா உன்னல்லாம் என்ன சொல்றது? இதுக்கெல்லாம் நீ கடவுளுக்கு பதில் சொல்லித்தான் ஆகணும் சௌமியா" என்ற மலர் அடுத்து அதே உக்கிரத்துடன் ஆதித்யாவின் புறம் திரும்பினாள்.

ஆதித்யா கைகளிரண்டையும் கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்தவாறு அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான். அவள் கோபப்படுவது கொஞ்சம் வித்தியாசமாக தோன்றியது அவனுக்கு.. மூக்கு நுனி சிவந்து கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருக்க மனதில் உள்ளதை எல்லாம் படபடவென்று கோபமாக சொன்னாலும் கண்களை துடைத்து கொண்டே தான் இருந்தாள் மலர். கோபமாக திட்டி பழக்கமில்லாததால் அவள் கூறும் ஒவ்வொரு சொல்லும் அவளுக்கே கண்ணீரை வரவழைத்து கொண்டிருந்தது.
ஆதித்யா இப்படி சிந்தனையோடு அவளைப் பார்க்க மலர்
தீப்பொரியாய் பொறிந்தாள்.

"இப்போ எனக்கு நல்லாவே புரியுது உங்க தங்கச்சிக்கு நந்தன கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறீங்க... அதுக்காக என்னையும் நந்தனையும் பிரிக்க பாக்குறீங்க... அதுக்காக தான என்னையும் காதலிக்கிறேன் பேர்ல கல்யாணமும் பண்ணிக்க நினைக்கிறீங்க... இது எவ்வளவு கேவலமான விஷயம்ன்னு தெரியுமா? கடவுள் அநியாயம் பண்றவங்கள சும்மா விடமாட்டார் ...கட்டாயம் தண்டனை கொடுப்பார்...ஆனால் சௌமி அண்ணா நீங்களும் ஒரு தங்கச்சிக்கு அண்ணன் தான். நீங்க எப்படி உங்க தங்கச்சி மேல உயிரையே வச்சு இருக்கீங்களோ... அதே மாதிரி எனக்கும் என் மேல உயிரையே வச்சிருக்க அண்ணன் இருக்கான்னு உங்க ரெண்டு பேருக்குமே மறந்து போயிடுச்சா? நீங்க தூக்கி போட்டு விளையாட நான் ஒன்னும் பொம்மை இல்ல... ஆறறிவுள்ள மனுஷி தான்...அதே மாதிரி நான் ஒன்னும் அனாதை இல்லை. எனக்கு என்னோட அண்ணன் இருக்கார். என்னோட அண்ணன் வந்தா அவர்கிட்ட கண்டிப்பா எல்லாத்தையும் சொல்லுவேன். கண்டிப்பா அவர் உங்களை எல்லாம் சும்மா விட மாட்டார்.அவர்கிட்ட நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்." என்று இருவரையும் வார்த்தைகளால் விளாசியவள்... அறையைவிட்டு செல்வதற்கு முன், சௌமியாவை ஒருமுறை திரும்பிப் பார்த்து...
"உன்னோட நிச்சயதார்த்தம் உடைஞ்சு போனதுக்கு நீயே ஒரு காரணம்தான். இப்படி கேவலமான சாக்கடை எண்ணங்களை மனசில
வச்சி இருந்தா... எப்படி நல்லது நடக்கும்" என்று சொல்லிவிட்டு புயலாக அங்கிருந்து சென்றாள் மலர்.

சௌமியா நேரடியாக தனது விருப்பத்தை சொல்லியிருந்தால் கூட மலர் தவறாக நினைத்திருக்க மாட்டாள். ஆனால் ஒளிந்திருந்து முதுகில் குத்தியவளை என்ன சொல்வது அதுவும் தோழி என்று நினைத்தவளின் துரோகம் நெஞ்சுக்குள் தீயாய் எரிந்தது.
மலரின் கடைசி வாக்கியத்தில் சௌமியா உடைந்து அழுதுகொண்டே அறையை விட்டு ஓட, அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஆதித்யாவின் கண்களில் நெருப்பு பொறி பறந்தது.
என் தங்கையை அழவைத்து விட்டாளே! அவளுக்கு என்ன தைரியம் என்று கோபம் வந்தது அவனுக்கு....

கோபத்தின் உச்சியில் இருக்கும்போது, யாருடைய குரலோ ஆதித்யாவின் மனதில் ஓங்கி ஒலித்தது.

'தங்கச்சிகள நல்லா பாத்துக்க பா... ஒரு அண்ணனா மட்டுமில்லாம தாய் தகப்பனா நீதான் அவங்க கேட்டது எல்லாத்தையும் நிறைவேற்றி கொடுக்கணும் ... அவங்க கண் கலங்காம பாத்துக்கணும்... அவங்க வாழ்க்கையே உன்னோட பொறுப்புதான்'

கண்களை மூடி தலையை அழுத்த கோதினான் ஆதித்யா.
இப்பொழுது இன்னொருவனின் அகங்கார சிரிப்பு மனதில் வந்து போனது...

அடுத்த நிமிடமே ஆதித்யாவின் முகத்தில் ஒரு கடினமும், எதிரில் நிற்பவர்களை துச்சமாக பார்க்கும் பார்வையும்... இதழ்களில் ஒரு ஏளனப் புன்னகையும் குடி வந்தது.

தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN