ஆதித்யா சக்கரவர்த்தி-14

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 14

நகரத்தின் மையப் பகுதியில் இருந்த மிகப்பெரிய ரிசார்ட்டில் ஆதித்யா-மலர் திருமண ரிசப்ஷன் வெகுசிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. திருமணத்திற்கு அதிக பேரை அழைக்கவில்லை என்பதால் ரிசப்ஷனுக்கு நிறைய பேருக்கு அழைப்புகொடுக்கப்பட்டிருந்தது.

ஆதித்யாவின் தொழில்முறை நண்பர்கள்,செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள், அவர்களின் தொண்டர்கள் என்று ஒரு பெரிய கூட்டமே வந்திருந்தது. ஆதித்யாவின் கம்பெனி சில திரைப்படங்களையும் தயாரித்துள்ளதால், சினிமா துறையில் இருந்தும் டைரக்டர்கள் மற்றும் சில முன்னணி நடிகை, நடிகர்கள் வருகை தந்திருந்தனர்.
ஆதித்யா.... மகேஷ் மற்றும் அவனது பி.ஏ சரத்திற்கும் முக்கியமான விருந்தினர்களை கவனிக்கும் பொறுப்பை கொடுத்திருந்தான். அவர்களும் தங்களின் பணியை செவ்வனே செய்து கொண்டிருந்தனர்.

சுவாதியின் லேடிஸ் கிளப் ஃபிரண்ட்ஸ்க்கும் சௌமியாவின் ஃப்ரெண்ட்ஸ்க்கும் அழைப்பு விடுத்திருந்ததால் அவர்களும் வந்திறங்கி... அப்போதே கலாட்டாவை ஆரம்பித்திருந்தனர். அவர்களை கவனிக்கும் (கண்காணிக்கும்) பொறுப்பு முதலிலேயே சௌமியா சுவாதி இருவருக்கும் கொடுத்துவிட்டான் ஆதித்யா. வேறு யாரிடமும் கொடுக்கவும் முடியாது....

மீடியாவில் இருந்து வந்திருந்த நபர்கள்... வந்திருந்த சில முக்கிய தலைகளையும்... சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களையும், அன்றைய நட்சத்திரங்களான ஆதித்யா-மலரையும் வளைத்து வளைத்து போட்டோ எடுத்தனர்.
வேறு ஏதாவது கசமுசா எழுதுவதற்கு ஏதாவது துருப்புச்சீட்டு கிடைக்காதா என்பது போல் அவர்களின் பார்வை அங்கிருந்த ஒவ்வொருவரையும் அங்குலம் அங்குலமாக பார்க்கத்தான் செய்தது....

ஆதித்யாவின் பாடி கார்ட்ஸ் ஒரு புறம் அரசியல்வாதிகளின் தொண்டர்களை உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பகுதிக்கு அனுப்பி கொண்டிருந்தனர். மொத்தமாக ஒரே இடத்தில் அனைவரையும் வைத்தால் சிறிது நேரத்திலேயே... 'என் கட்சி பெரிது' 'என் தலைவர் பெரியவர்' என்று கைகலப்பு ஆகிவிடும்... என்பதால் ஒவ்வொரு கட்சி தொண்டர்களுக்கும் தனித்தனிப் பிரிவுகளாக உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

விஐபிகளுக்கு ஒருபுறம் தனியாக உணவும் மதுபானங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அனைவருக்குமே ஆதித்யா திருமணம் முடித்தது அதிசயமாகத் தான் தெரிந்தது. வெளியே உறுமும் புலியாக இருப்பவன் இனி மனைவியின் கையில் தங்களைப்போல் பாடுபட போகிறான் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர். ஆதித்யாவை எதிரியாக நினைக்கும் சிலர் மலரை பற்றி விசாரித்துக் கொண்டனர்.
பார்க்க சிறு பெண்ணாக தெரிந்ததால், ஆதித்யா மைனர் பெண்ணை திருமணம் செய்து இருப்பானோ? என்று சந்தேகம் அவர்களுக்கு ...ஏதாவது காரணம் கிடைத்தால் ஆதித்யாவை பத்திரிக்கையில் கிழி கிழி என்று கிழித்து விடலாம் அல்லவா அதற்காகத்தான்...!!!

ஆனால் மலரின் இயற்கையான உடல்வாகு அதுதான் என்பது அவர்களுக்கு தெரியாது அல்லவா...
விசாரித்தவரை மலருக்கு 23 வயது என்று தெரிந்ததும் ஆஃப் ஆகி விட்டனர். ஆதித்யாவின் கட்டுமஸ்தான உடம்பிற்கு அருகில் நிற்கும்போது மலர் சிறுமி போல் தான் இருந்தாள்.

மளமளவென குவிந்த கூட்டத்தை பார்த்து, மலர் நடுங்கிய கோழி குஞ்சாக ஆதித்யாவின் அருகில் நிற்க... தங்கையின் டென்ஷனை அவ்வளவும் வேலைகளுக்கு இடையிலும் பார்த்த மகேஷ், சுவாதியை அழைத்து மலருக்கு ஜூஸ் கொடுத்து அனுப்பினான்.
பெரிய பாசமலர் என்று உள்ளுக்குள் நொடிந்து கொண்டாலும் மலருக்கு ஜூசை கொடுக்கத்தான் செய்தாள் சுவாதி.

உதட்டில் போடப்பட்டிருந்த சாயம் மலர் ஜூஸ் குடித்ததும்.... லேசாக அழிந்திருக்க அதை மேடையின் ஓரத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த டச்சப் செய்யும் ஒருத்தி சரி செய்துவிட்டு சென்றாள். வானதி வேறு அத்தையிடம் தான் நானும் இருப்பேன் என்று அடம்பிடித்து சுவாதி இடம் அடிவாங்கி தந்தையின் தோளில் அடைக்கலமாகி இருந்தாள்.

ஆதித்யா மேடைக்கு வரும் ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்த வேண்டும் என்ற கடமைக்காக மட்டும் மலருக்கு அறிமுகப்படுத்தி கொண்டிருந்தான். மலருக்கு அவர்கள் யார்? என்று தெரியவில்லை.... என்றாலும் லேசான புன்னகையுடன் கைகூப்பி வணக்கம் சொல்வாள் அவ்வளவுதான்.... மனதிற்குள் எவ்வளவுதான் கஷ்டம் இருந்தாலும் வெளியே தனது பொன் சிரிப்பினால் அதை சாமர்த்தியமாக மறைத்தாள் மலர்.

ஆதித்யாவும் முகத்தில் எதையும் காட்டாமல் ரோபோ போல் தான் நின்றான். அவனது கண்கள் மறந்தும் மலரின் கண்களை சந்திக்க வில்லை. சந்திக்க விரும்பவில்லை என்று கூட சொல்லலாம்.

ஒவ்வொருவரும் பரிசினை கொடுத்துவிட்டு மணமக்களை வாழ்த்திவிட்டு செல்ல... மலர் நின்று கொண்டே இருந்ததால் சோர்ந்து போனாள். கால்கள் மிகவும் வலிக்க ஆரம்பித்ததால், அங்கேயும் இங்கேயும் நகர்ந்துகொண்டே நிற்க முடியாமல் நின்றாள்.
அதை உணர்ந்த ஆதித்யா தனது பணியாளர் ஒருவனை கண்ணசைத்து கூப்பிட்டு, அவன் காதில் ஏதோ சொல்ல... சிறிது நேரத்திலேயே மேடையில் மணமக்களுக்கான இருக்கைகள் போடப்பட்டது. இதை கவனிக்காமல் கவனித்த மகேஷுக்கு திருப்தி என்றால் சௌமியாவிற்கும் சுவாதிக்கும் பயங்கர புகைச்சல் . வெளியே கருகிய நாற்றம் வராதது ஒன்றுதான் குறை.

தோழியுடன் பேசிக் கொண்டிருந்த சௌமியா தன் அண்ணனின் நடவடிக்கையை கவனித்து விட்டு கோபத்துடன் அங்கிருந்து நகர...தனக்கு மிகவும் பிடித்த சினிமா நடிகை ஒருத்திக்கு ஸ்பெஷலாக ரெட் வைன் கொடுத்துவிட்டு ஆட்டோகிராஃப் வாங்கலாம் என்ற கனவுடன் வந்துகொண்டிருந்த சரத் மீது மோதி இருவருமே கீழே விழுந்தனர். சரியாக அந்த நேரம் ஏதாவது கிசுகிசு எழுதுவதற்கு கிடைக்காதா? என்று ஏங்கி கொண்டிருந்த மீடியா ஆட்களில் ஒருவன் அதைப் பார்த்ததும் யாருக்கும் தெரியாமல் தனது சைலன்ஸர் கேமராவில் புகைப்படமாக எடுத்துக் கொண்டான்.

ஒரு நொடியில் நடந்துவிட்ட செயலில் அனைவரும் ஸ்தம்பித்து நின்று விட்டனர். சௌமியாவின் சந்தன நிற லெஹங்காவில் சரத் கையில் வைத்திருந்த வைன் முழுவதும் கொட்டி அபிஷேகம் செய்து விட,
சரத் சரியாக சௌமியாவின் மேலேயே விழுந்து இருந்தான்.
அதை அப்பொழுதுதான் கவனித்த ஆதித்யா மின்னல் வேகத்தில் மேடையிலிருந்து இறங்கி தங்கையிடம் விரைய... அதற்குள் மகேஷ் சுவாதி இருவருமே வந்துவிட்டனர்.

எழ முடியாமல் எழுந்த சரத்தின் கன்னத்தில் இடியென அறைந்தான் ஆதித்யா. அதை புகைப்படம் எடுக்க நினைத்த மீடியா காரர்களை ஆதித்யாவின் பாடிகார்ட்ஸ் எடுக்க விடாமல் மறைத்துக் கொண்டனர். ஆனால் அதையும் மீறி ஓரிருவர் புகைப்படம் எடுத்து விட்டனர். சௌமியா இன்னும் கீழேயே மல்லாந்து கிடக்க, சுவாதி அவளுக்கு எழுந்து நிற்பதற்கு உதவினாள். பின்பக்க தலை தரையில் வேகமாக மோதியதால், தலை லேசாக சுற்றியது கண்கள் கலங்க எழுந்து நின்றாள் சௌமியா. அதைவிட அத்தனை பேர் முன்னிலையில் விழுந்து வாரியதால் அவமானமாக வேறு இருந்தது. அனைவரும் தன்னை கிண்டலாக பார்ப்பதுபோல் இருக்கவும் உதட்டைப் பிதுக்கி அழுதுகொண்டே தலையை குனிந்து கொண்டாள்.

தங்கையின் அழுகையைக் கண்டு
மேலும் ஆத்திரம் கொண்ட ஆதித்யா, சரத்தை எரிப்பதை போல் முறைக்க,
அடிவாங்கிய கன்னத்தில் கைவைத்துக் கொண்டு ஆதித்யாவை பாவமாக பார்த்தான் சரத்...

கிட்டத்தட்ட நான்கைந்து வருடங்களாக ஆதித்யாவின் நிழலாக இருக்கும் பிஏ சரத்திற்கு...பலமுறை கிடைக்கும் வரப்பிரசாதம் தான்.... இருந்தாலும் அனைவரின் முன்னாலும் வாங்கியதால் என்னவோ கொஞ்சம் ஒரு மாதிரியாக இருந்தது. அதைவிட அடுத்ததாக ஆதித்யா கத்துவதை வேறு... எருமை மாட்டின் மேலே மழை பெய்தது போல் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும். அதுவும் அவன் ஆட்டோகிராப் வாங்க வேண்டும் என்று நினைத்த நடிகை வேறு அவன் அடி வாங்கியதை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இன்று யார் முகத்தில் நான் முழித்தேன்? என்று சரத் நொந்துபோய் ஆதித்யாவை பாவமாக பார்க்க அவனோ...
"இடியட் அறிவு இருக்கா...கண்ண எங்க வெச்சுட்டு வர... எவ்வளவு தைரியம் இருந்தா... என்னோட தங்கச்சியே இடிப்ப உன்ன......" என்று மீண்டும் அவனை ஆத்திரத்துடன் அடிக்கப் போக, அப்பொழுது சரியாக அவனது கைகளை பிடித்து தடுத்த மகேஷ், சுற்றுப்புறத்தை நினைவு படுத்தினான்.

சுற்றியுள்ள அனைவரும் ஏதோ சினிமா பார்ப்பது போல் பார்த்துக்கொண்டிருக்க முயன்று கோபத்தை கட்டுப் படுத்திக் கொண்டான் ஆதித்யா.

அதுவரை மேடையில் நின்று அங்கு நடப்பதை கவனித்துக்கொண்டிருந்த மலருக்கு... ஆதித்யாவின் கோபத்தை பார்த்ததும் உடல் தூக்கி வாரிப் போட்டது. இவனோடான வாழ்க்கை எப்படி இருக்கப் போகிறது? என்று எண்ணி நடுங்கியபடி நின்றாள் மலர்.

மகேஷ் சரத்திடம் ஏதோ கூறி அவனை அங்கிருந்து நகர்த்த... மற்றவர்களை பாடிகார்ட்ஸ் ஒழுங்கு படுத்தினர். மீடியாகாரர்கள் வெளியேறுவதற்கு முன் அவர்கள் எடுத்த போட்டோக்களை ஒரு முறை பார்த்த பின்னே விட்டனர். ஆனாலும் அவர்களின் கண்ணை தப்பி இருவர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை வெளியே கொண்டு சென்று விட்டனர். சற்று நேரத்தில் சலசலப்பு குறைந்தது...

சுவாதி இடம் சௌமியாவை பார்த்துக்கொள்ள சொல்லிவிட்டு... மீண்டும் மேடைக்கு சென்று வேண்டாவெறுப்பாக நின்றான் ஆதித்யா.

நேரம் ஆக ஆக முக்கியமான கட்சி தலைவர்கள், நடிகர்கள், அனைவரும் விருந்தினை முடித்துவிட்டு ஒவ்வொருவராக கிளம்ப ஆரம்பித்தனர். அவர்களுடனே அவர்களது அல்லக்கைகள் தொண்டர்கள் அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக கிளம்ப கூட்டம் குறைந்தது.

கூட்டம் குறைந்ததும் மணமக்கள் ஆன மலர்-ஆதித்யா உடன் மகேஷ் ஸ்வாதி சௌமியா சரத் மற்றும் ஆதித்யாவின் கம்பெனியில் வேலை பார்க்கும் சில விசுவாசிகள் அனைவரும் உணவருந்த தொடங்கினர்.

உணவருந்தும் வேளையில் ஆதித்யா அடிக்கடி சரத்தை முறைக்க... சௌமியா சரத்தை பார்வையாலேயே எரித்துக் கொண்டிருந்தாள்.

உணவு பிரியனான சரத் வாயில் உணவை வைப்பதும்... அவர்கள் இருவரையும் மாறி மாறி குறுகுறுவென பார்ப்பதும் மீண்டும் வாயில் உணவு வைப்பதுமாக இருந்தான்.
அவனின் நடவடிக்கையை கவனித்த மகேஷ், அவனது பின் தலையில் தட்டி... ஒழுங்காக சாப்பிடுமாறு சொல்ல.... அவனது காதருகில் குனிந்த சரத்... "மகேஷ் சார் நான் என்ன தப்பு பண்ணிட்டேன்னு இவங்க ரெண்டு பேரும் என்ன இப்படி பார்வையாலேயே கற்பழிக்கிறாங்கனு தெரியல... சொல்லப் போனா நான்தான் கோவம் என்னோட கனவுக்கன்னி மானசா கிட்ட இவங்களால தான் ஆட்டோகிராப் வாங்க முடியாம போயிட்டு... அதான் நானும் முறைக்கிறேன்..." பதிலுக்கு பதில் பார்வை என்று மெதுவாக கிசுகிசுத்தான்.

அவனை முறைத்த மகேஷ்,
"உன்னோட வாய்க்கொழுப்பு க்கு கண்டிப்பா ...இன்னைக்கு உன்னோட பல்ல தட்டாம விடமாட்டான் ஆதித்யா பாத்துக்கோ..."
என்று எச்சரிக்க...

"அடப் போங்க மகேஷ் சார்... ஆல்ரெடி போன மாசம் பாஸ் அடிச்சதுல இரண்டு பல்லு கீழே விழுந்திட்டு... அத நான் தானே அசால்டா பல்லன் பழனி டாக்டர்கிட்ட போய் இரண்டையும் பட்டி டிங்கரிங் பண்ணி ஒட்டி வைச்சிருக்கேன்" என்றான் ரகசியமாக,

"சரி கவலைப்படாதே... என் மச்சான் கிட்ட சொல்லி இன்னும் ரெண்டு பல்லு சேர்த்து தட்ட சொல்றேன்" என்று மகேஷ் சிரிக்காமல் சொல்ல...

"மகேஷ் சார் தயவு செஞ்சு இப்படியெல்லாம் சொல்லிடாதீங்க... என் சிரிப்புதான் அழகுன்னு என்னோட செத்துப் போன பாட்டி அடிக்கடி சொல்லும் சார்... இப்டி அழகா சிரிக்கிற பல்லு போச்சுன்னா அம்புட்டுதான் ...பல் செட்டு மாட்டிகிட்டு தாத்தா கணக்கா இருப்பேன்... அப்புறம் யாரும் எனக்கு பொண்ணு தர மாட்டாங்க சார்... 90s கிட்ஸ் பாவம் உங்களை சும்மா விடாது பாத்துக்கோங்க" என்றான் சரத் பாவமாக முகத்தை வைத்துக்கொண்டு,

ஆதித்யா, "என்ன அங்க முணுமுணுப்பு?" என்று சரத்திடம் கேட்க...

"ஒன்னும் இல்ல பாஸ்... " என்ற சரத் நல்ல பிள்ளை போல் முகத்தை வைத்துக் கொண்டு... உணவில் கவனம் ஆனான்.

பின் தானே வழிய வாய்விட்டு பல்லை பறிகொடுக்க அவன் என்ன இளிச்சவாயனா?என்ன?

அண்ணனின் அருகே அமர்ந்திருந்த மலருக்கு சரத்தின் பேச்சு நன்றாகவே கேட்டது. லேசாக சிரிப்பு கூட வந்தது. ஆனால் தன் வலப்பக்கமாக அமர்ந்திருந்த பூச்சாண்டிக்கு பயந்து... சிரிப்பை அடக்கி உணவை கொரிக்க ஆரம்பித்தாள்.

சௌமியா சுவாதியிடம், "அக்கா இந்த அரை லூசுவ அண்ணன்கிட்ட சொல்லி சீக்கிரம் வேலையை விட்டு தூக்கணும்... இவனால தான் இன்னைக்கு எவ்ளோ பேருக்கு முன்னாடி எனக்கு அசிங்கம்" என்று பொருமி கொண்டே சொல்ல...

"நீ உன்னோட கண்ண எங்க வச்சுட்டு போன?"என்று சுவாதி அவளைத் திட்ட...

"எனக்கு நீ சப்போர்ட் பண்ண மாட்டேங்குற ...."என்று சௌமியா கண்ணை கசக்க,

"இவ டேங்க ஓப்பன் பண்ண ஆரம்பிச்சுட்டா டா" என்று மனதில் கடுப்பான சுவாதி,
அவளை திசைதிருப்ப, "மலர் உனக்கு நான் வெஜ் பிடிக்காதுல்ல" என்று சந்தேகமாக கேட்டாள்.

அவ்வளவு நேரம் கண்ணை கசக்குவது போல் இருந்த சௌமி மலரை பார்க்க....
அண்ணியின் திடீர் கேள்வியில், மலர் தயங்கிக்கொண்டே..."ஆமா அண்ணி உங்களுக்கு தான் தெரியுமே" என்றாள் அமைதியாக...

சுவாதியும் விடாமல்,
"இல்ல மலர் இப்படி நான்வெஜ் திங்காம நீ பார்க்க ரொம்ப சின்ன பொண்ணு மாதிரி இருக்கியா... என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் உன்னோட சைஸை பார்த்து குழந்தை திருமணம்னு நினைச்சுட்டாங்க" என்று ஏதோ ஜோக் சொல்வதுபோல் சொல்லிவிட்டு சிரிக்க....
ஆதித்யாவின் பார்வை ஒருமுறை மலரை வருடிவிட்டு மீண்டது.
மலருக்கு தான் சங்கடமாக இருந்தது.
அத்தனை பேர் முன்னிலையில் இவ்வாறு சொன்னது....

மகேஷ் மலரின் முகத்தை கவனித்துவிட்டு, சுவாதியிடம்
"அவ எங்க அம்மா மாதிரி... என்னதான் சாப்பிட்டாலும் அவளோட ஜீன்ல எப்படி டிசைன் பண்ணி இருக்கோ அதே மாதிரிதான் இருப்பா" என்றான்.
சுவாதி,

"வந்துட்டாரு பாசமலர் சிவாஜி 2.0" என்று முகத்தை சுளித்து விட்டு உணவில் கவனமாக இருப்பது போல் குனிந்து கொண்டாள்.
சௌமி மலரை பார்த்தாள் தன்னையும் பார்த்தாள்... மீண்டும் தாழ்வுமனப்பான்மை தலைதூக்க தலையை குனிந்து கொண்டாள்.
ரிசப்ஷன் முடிந்து அனைவரும் வீடு வந்து சேரவே இரவு பத்தை தாண்டி விட்டது.

அன்றிரவு தனிமையில் அனுப்பப்பட்ட மலருக்கு பயத்தினால் காய்ச்சலே வந்துவிட்டது. சுவாதி தான் அவளை உள்ளே அனுப்பினாள். மலர் அவளிடம் ஒன்றும் பயந்த மாதிரி காட்டிக்கொள்ளவில்லை. ஆனால் நெஞ்சுக்குள் பயம் அப்பிக்கொண்டு தான் இருந்தது...

முன்பே ஒரு மாதிரி பேசுவான்...
இப்பொழுது எப்படி நடந்து கொள்வான்? என்று தெரியாமல் மலர் உள்ளுக்குள் உதறலோடுதான் அறைக்குள் சென்றாள்.
ஆனால் அவள் நினைத்தது போல் ஆதித்யா அவளிடம் எதுவும் பேசவில்லை. ஏன் ஒரு பார்வை கூட பார்க்கவில்லை. ஒரு பெட்ஷீட்டையையும் தலையணையையும் தரையில் தூக்கி போட்டவன்... அவனது பெட்டில் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டான்.
சில நிமிடங்கள் அதே இடத்திலேயே வேரூன்றி நின்ற மலர்... கையிலிருந்த பால் செம்பினை படுக்கையை ஒட்டி இருந்த டீப்பாயில் வைத்துவிட்டு அவன் கீழே போட்டு இருந்த பெட்ஷீட்டை விரித்து தலையணையையும் போட்டு அவனுக்கு முதுகு காட்டி படுத்துக்கொண்டாள். அவளுக்கு பேச விருப்பமில்லை... பேசவும் ஒன்றுமில்லை.
அவளைப் பொறுத்தவரை அவளது வாழ்வே முடிந்துவிட்டது. இதை பற்றி பேசி என்ன பயன்? என்று ஏதேதோ யோசித்த மலர்.... அசதியாக இருந்ததால் சீக்கிரம் தூங்கியும் விட்டாள்.

மறுநாள் காலையில் ஐந்தரை மணிக்கு போல் கண் விழித்தாள் மலர். கண்களில் தூக்கம் மிச்சம் இருந்தாலும் எழுந்து சோம்பல் முறித்தவள் ஏதோ உள்ளுணர்வின் உந்துதலில் திரும்பி பார்த்தவள் அதிர்ந்தாள்.

படுத்திருந்த ஆதித்யாவின் கண்கள் அவளைத்தான் இமை தட்டாமல் பார்த்து கொண்டிருந்தது.
அவனது பார்வை என்ன சொல்லியதோ?? அவனையே புருவங்கள் சுருங்க யோசனையாக பார்த்துக் கொண்டிருந்தவள் அப்பொழுது அடித்த அலாரம் சவுண்டில் சுய நினைவுக்கு வந்தாள்.
என்ன பார்வை இது? என்று அவளால் யூகிக்க முடியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று அவனது பார்வையில் இருந்தது அது கண்டிப்பாக தவறான எண்ணம் மட்டும் இல்லை என்பதை அவள் மனதுக்கு புரிந்தது.
ஆனால் அவன் மீது ஏற்கனவே இருந்த தவறான எண்ணம் அதற்கு மேல் எதையும் அவளை யோசிக்க விடவில்லை.

முடிந்தளவு அவனது பார்வையை தவிர்த்துவிட்டு, தனது சூட்கேஸில் இருந்த உடையை எடுத்து கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவளை ஆதித்யாவின் பார்வை தொடரத்தான் செய்தது.

மலர் ரெடியாகி வரும்பொழுதும் ஆதித்யா படுத்திருந்தான் எழவில்லை...
ஏன் எழவில்லை? என்று
அவனிடம் கேட்கவும் தயக்கமாக இருந்தது...

கையை பிசைந்து கொண்டு கீழே போகவா? வேண்டாமா? என்று புரியாமல் அவனைப் பார்த்தபடியே நின்றவளிடம்...
"நீ கீழ போ நான் வரேன்" என்றான் ஆதித்யா...
குரலில் ஏகத்திற்கும் கடுப்பும் வெறுப்பும் இருந்தது.
அவனது கடுமையான குரலில் பயந்து வெளியே செல்ல திரும்பியவளை...
"ஒரு நிமிஷம்" என்று நிற்க சொன்ன ஆதித்யா அவள் அருகில் வந்தான்.
அவனைப் பார்த்து மலர் பயந்து கொண்டே ...பின்னால் நகர வாட்ரோபின் மேல் முட்டி நின்றாள். இன்னும் ஒரு இன்ச் நகர்ந்தால் இருவரும் மோதிக்கொள்ளும் அபாயம் இருந்தது.

ஆதித்யாவின் திடீர் நெருக்கத்தினால் ஏற்பட்ட பயத்தில் எச்சிலை விழுங்கிக் கொண்டே மலர் அவனைப் பார்க்க, அவனோ அவளை பார்க்காமல் அவளது கைகளை தான் ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டிருந்தான்.

மலர் புரியாமல் முழிக்க, உன்னோட கைல உள்ள இந்த பிரேஸ்லெட் அப்புறம் அந்த ரிங் ரெண்டையும் கழட்டு என்றான் அதிகாரமாக...

அவன் எதற்காக சொல்கிறான் என்பதை புரிந்ததால்... பயந்து வேக வேகமாக கழட்டினாள் மலர். அவை இரண்டையுமே வாங்கி கொடுத்தது நந்தன் தானே.... இனி அதை போடுவது சரியல்ல என்பது அவளுக்கே புரிந்தது.

கழட்டி அவனிடமே கொடுத்துவிட்டு அவ்வளவுதானே என்பதுபோல் மலர் பயத்துடன் ஆதித்யாவை பார்க்க...
அவளை தீர்க்கமாக பார்த்த ஆதித்யா, "இனி உன்னோட மனசுல என்னைத் தவிர யாரும் இருக்க கூடாது... அத நல்லா மண்டையில ஏத்திக்கோ இல்லனா அதோட விளைவுகள் ரொம்ப மோசமா இருக்கும்" என்றுவிட்டு அவளை விட்டு விலகினான் ஆதித்யா.

மலர் நிம்மதி பெருமூச்சு விட்டு நகர போக... "எனக்கு உன் கையால காபியும் நியூஸ் பேப்பர் வேணும்" என்றான் ஆதித்யா எப்பொழுதும்போல் அதிகாரமாகவே....

சரி என்பதுபோல் மண்டையை உருட்டிய மலரும் அதற்கு மேல் அங்கே நிற்காமல் வெளியே ஓடி வந்துவிட்டாள். அந்த அறையில் அவனுடன் இருக்கும்பொழுது ஏனோ அவளுக்கு மூச்சு முட்டியது.

நேற்றிரவு ஆதித்யா அவளிடம் கணவன் என்ற உரிமையை எடுத்துக் கொள்ளாததால் மலருக்கு சற்று ஆசுவாசமாக இருந்தது.... ஆனால் இன்று திடீரென்று நெருக்கம் காட்டிய அவனின் செயலில் பழையபடி பயம்தான் அதிகரித்தது. நேற்றை போல் இனி தினமும் தப்பமுடியாதே என்று உள்ளுக்குள் மருகினாள் மலர்.

ஆதித்யா சொன்னதுபோலவே... காபியையும் நியூஸ் பேப்பரையும் எடுத்துக்கொண்டு மலர் அறைக்கு வரும்பொழுது ஆதித்யா... ஃப்ரெஷ் ஆகி இருந்தான். கொண்டு வந்ததை டீபாயில் வைத்துவிட்டு மலர் நழுவ பார்க்க... அவளது எண்ணத்தை புரிந்து கொண்டவன் போல்,
" நமக்கு மேரேஜ் ஆகிட்டு... இனி டெய்லி என்னோட முகத்தை பார்த்து தான் ஆகணும்... எங்கேயும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... மரியாதையா இப்போ இங்க உட்காரு" என்று நான் அமர்ந்திருந்த சோஃபாவில் அமரச் சொன்னான்.
மலர் அமராமல் தயங்கி நிற்க,
"ஒரு தடவ சொன்னா உட்கார மாட்டியா?" என்று ஆதித்யா சிடு சிடுக்கவும் பயத்தில் பட்டென்று அமர்ந்தாள்.

காபியை பருகி கொண்டே,
"உனக்கு டீ எடுத்துட்டு வரலையா?" என்று ஆதித்யா கேட்க... அவனை ஆச்சரியமாக பார்த்தவள்... இல்லை என்று தலையசைத்தாள்.

"நாளையிலிருந்து எனக்கு காபி கொண்டு வரும்போது... உனக்கு டீ கொண்டு வந்துடு" என்று அவளைப் பார்க்காமலே சொன்னவன்... நியூஸ் பேப்பரை பிரிக்க, அதில் முதல் பக்கத்தில் இருந்த செய்தியை பார்த்து உச்சகட்ட அதிர்ச்சியை அடைந்தான் ஆதித்யா...

தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN