ஆதித்யா சக்கரவர்த்தி-16

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 16

சௌமியாவின் விபத்து பற்றிய தகவல் தெரிந்ததும்...
ஆதித்யாவின் குடும்பமே சௌமியா அட்மிட் செய்யப்பட்டிருந்த கே.கே ஹாஸ்பிடலுக்கு அரக்கப்பரக்க வந்து சேர்ந்திருந்தது.

அவர்கள் வரும்பொழுது டாக்டர்கள் சௌமியாவிற்கு ஐசியூவில் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தனர்.

வந்திருந்த அனைவரும் வெளியே காத்துக் கிடக்க... கிட்டத்தட்ட மூன்று மணி நேரங்கள் கடந்தும் ஒரு தகவலும் இல்லை...
நர்சுகள் மற்றும் அடிக்கடி உள்ளே வருவதும் வெளியே செல்வதுமாக இருந்தனர்.அவர்களிடம் கேட்டால் டாக்டர் சொல்வார்...என்று மட்டும்தான் பதில்.
ஆதித்யா இடிந்து போய் அமர்ந்திருக்க... அவன் அருகில் சுவாதி அமர்ந்து அழுது கொண்டிருந்தாள்.
மலர் வானதியை மடியில் வைத்துக்கொண்டு கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள்.
விபத்து நடந்ததை கேள்விப்பட்ட மீடியாகாரர்களும் ஹாஸ்பிடலை முற்றுகையிட ஆரம்பித்திருந்தனர். அவர்களை உள்ளே விடாமல் அரணாக இருந்தனர் ஆதித்யாவின் பாடி கார்ட்ஸ்...

மகேஷ், சரத்,மலர் வானதி ஒருபுறம் அமர்ந்திருக்க... அவர்களுக்கு எதிரே இருந்த இருக்கைகளில் ஆதித்யா சுவாதி இருவரும் அமர்ந்திருந்தனர்.
யாரும் யாருக்கும் ஆறுதல் சொல்லும் நிலையில் இல்லை.
சரத்திற்கு கூட வருத்தமாக இருந்தது. ஆதித்யா இப்படி அமர்ந்திருப்பது...
சிங்கம் போல் உறுமிக் கொண்டிருப்பவன்... இன்று தலையில் இடி விழுந்தது போல் அமர்ந்திருந்தான்.

கிட்டத்தட்ட 5 மணி நேரங்கள் கடந்து வெளியே வந்த டாக்டர்கள் சொன்னது இதுதான்...கார் கவிழ்ந்து விழுந்ததால் சௌமியாவின் கை கால்களில் நல்ல அடி என்றாலும் தலையில்தான் பலத்த அடி விழுந்துள்ளதாகவும் மூளைக்குச் செல்லும் நரம்புகள் பாதித்துள்ளதாகவும்... என்னதான் சிகிச்சை கொடுத்தாலும் அதன் பாதிப்புகள் கண்டிப்பாக இருக்கும் என்றும்... கோமா ஸ்டேஜுக்கு செல்லக்கூட வாய்ப்பிருக்கிறது என்று சீப் டாக்டர் என்னென்னவோ சொல்ல குடும்பமே என்ன செய்வது என்று தெரியாமல் பரிதவித்து போனது.

ஆதித்யா வந்ததிலிருந்து அப்போதுதான் வாயைத் திறந்தான். "எவ்வளவு செலவானாலும் பரவாயில்ல டாக்டர்...என் தங்கச்சி முழுசா எனக்கு வேணும்" என்ற அவனின் குரலில் அளவுக்கு மீறிய இறுக்கமும் வருத்தமும் இருப்பதை மலரால் உணர முடிந்தது.

இயற்கையிலேயே இளகிய மனம் கொண்டவளுக்கு ஆதித்யாவை பார்க்க பாவமாகத்தான் இருந்தது. அவளுக்கு அவனைப் பற்றி என்ன தெரியுமோ? தெரியாதோ? அவனின் தங்கை பாசம் நன்றாகவே தெரியும்...!!!

"எங்களால முடிஞ்ச அளவு முயற்சி பண்ணி இருக்கோம்... அவங்களுக்கே வாழனும்னு ஆசை இருக்கணும் மிஸ்டர் ஆதித்யா. எங்களோட மருந்து மாத்திரை மட்டும் அவங்கள காப்பாத்திடாது. பேஷன்ட் டோட மன உறுதியும்... நம்பிக்கையும் கூடவே இருக்கணும். அப்பதான் அவங்களால பழையபடி எழுந்து வரமுடியும். இப்ப வரைக்கும் எங்க ட்ரீட்மென்ட்ஸ்க்கு உங்க தங்கச்சி எந்தவிதமான ரெஸ்பான்ஸும் பண்ண மாட்டுகாங்க... நாங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க?" என்றார் டாக்டர் வருத்தத்துடன்....

"நாங்க உள்ளே போய் அவள பாக்கலாமா?" என்று கேட்ட மகேஷிடம்...

"நோ நோ இப்ப பார்க்க முடியாது இன்னும் ஒன் ஹவர் கழிச்சு போய் பாருங்க... அவங்க கூட பேச ட்ரை பண்ணுங்க... அப்பதான் அவங்க சீக்கிரம் ரெக்கவர் ஆவாங்க" என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சீப் டாக்டர். அவரின் பின்னாலேயே மற்ற உதவி டாக்டர்களும் வெளியேறினர்.

சுவாதி அழுதுகொண்டே ஆதித்யாவிடம், "சௌமி எங்க அண்ணா போனா? எதுக்கு நீ அவள தனியா விட்ட.... அவளுக்கு எவ்வளவு கஷ்டம் தான் வரும்?" என்று கதற... மகேஷ் அவளை அணைத்து ஆறுதல் படுத்தினான்.

சுவாதி அதைப்பற்றி கேட்டதும் ஆதித்யாவின் கண்கள் சிவந்து வெறியேறியது. அவனுக்கு தான் சௌமியா எங்கே சென்றாள் என்பது நன்றாக தெரியுமே!!!
அவனையே பார்த்துக்கொண்டிருந்த சரத்,பயந்துபோய்...
என்ன செய்யப் போகிறாரோ? என்பது போல் பார்க்க... மலரும் அவனது கண்களின் சிவப்பை பார்த்து நடுங்கித் தான் போனாள்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து ஒருவர் பின் ஒருவராக சௌமியாவை பார்த்துவிட்டு வந்தனர்.

தங்கையின் நிலையை பார்த்து சுவாதிக்கு உண்மையாகவே அழுகை வந்தது. அவளுக்கு அடுத்து சௌமியாவை பார்த்துவிட்டு வந்த ஆதித்யாவின் முகம் பாறாங்கல்லை போல் இறுகி இருந்தது.
இரவு முழுவதும் அனைவரும் தூங்காமல் மருத்துவமனையிலேயே இருந்ததால் அனைவரும் களைத்துப்போய் தெரிந்தனர்.

மறுநாள் காலையிலேயே... ஆதித்யா எங்கோ கிளம்பி சென்றுவிட்டான்.
மற்றவர்களுக்கு அது சாதாரணமாக தெரிய, சரத் மட்டும் கண்டிப்பாக 'இன்னைக்கு ஏதோ இருக்கு' என்று முடிவு செய்து கொண்டான்...
இத்தனை வருடங்களில் ஆதித்யாவை பற்றி அவனுக்கு ஓரளவு தெரியும் என்பதால் அவன் அவ்வாறு நினைக்க அதுதான் உண்மை....!!!

காலையிலேயே காலிங்பெல் அடித்ததால் தூக்கம் பறி போன ஆத்திரத்தில் கதவைத்திறந்த நந்தன் அதிர்ச்சி அடைந்தான். வெளியே கலைந்த தோற்றத்துடன் கண்கள் சிவக்க நின்றது ஆதித்யா.

நந்தனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், அவனை இறுக்கமாக பார்த்த ஆதித்யா அவனின் அனுமதி இல்லாமல் வீட்டிற்குள் நுழைந்தான்.

வீட்டின் நிலையை பார்த்துவிட்டு நந்தனை பார்க்க....நந்தன் அவனை கோபத்துடன் வெறித்துப் பார்த்து கொண்டு நின்றிருந்தான்.
அவனின் மலர் இப்பொழுது ஆதித்யாவின் மலர் ஆகிவிட்டாள்...
நினைக்க நினைக்க ஆதித்யாவின் மேல் ஆத்திரம் வர, "கெட் அவுட்" என்று நந்தன் ஆத்திரத்துடன் சொல்ல....

நீ என்ன வேணாலும்
சொல்லிக்கோ.... எனக்கு என்ன என்பதுபோல் ஆதித்யாவின் முகம் அலட்சியமாக அவனை பார்த்தது.

அவனது அலட்சிய பார்வையில் வெகுண்ட நந்தன்,
"நேத்து தான் உன் தங்கச்சி வந்து என் உயிரை வாங்கிட்டு போனா.... இன்னைக்கு நீயா? ஒரு நாள் கூட என்னை நிம்மதியா இருக்க விட மாட்டீங்களா ...." என்று எரிச்சலுடன் முகத்தை திருப்ப...

ஆதித்யாவின் கண்கள் சிவந்து நந்தன் சுதாரிப்பதற்குள் அவனின் கழுத்தை இறுக்கி பிடித்திருந்தான்.
"டேய் உன்னால தாண்டா என் தங்கச்சிக்கு இந்த நிலைமை... மரியாதையா சொல்லு? என்ன நடந்துச்சு நேத்து?" என்று கழுத்தில் பிடித்திருந்த கையை மேலும் அழுத்தினான்.

நந்தன் அவனது கையை தன் கழுத்தில் இருந்து எடுக்க போராட பிடி இறுகியதே தவிர குறையவில்லை. வெறி பிடித்த மிருகமாக மாறி இருந்த ஆதித்யாவை நந்தனால் சமாளிக்க முடியவில்லை....

விடுபட முடியாமல் போராடியவன் ஆதித்யா கழுத்தை எட்டி பிடிக்க பார்க்க, அவனது மற்றொரு கையை வைத்து அதையும் பிடித்துக் கொண்டவன்....

"சொல்லு டா என் தங்கச்சிய என்ன பண்ணின... இப்போ ஹாஸ்பிடல்ல மூச்சு பேச்சு இல்லாம இருக்கா... அதுக்கு காரணம் கண்டிப்பா நீ தான்" என்றவன் நந்தன் மூச்சுக்காற்றுக்கு போராடுவதை உணர்ந்து பிடியை தளர்த்தி... அவன் கழுத்தில் இருந்து கையை எடுத்தான்.
ஆதித்யா கையை எடுத்ததும், நந்தன் கழுத்தை நீவிவிட்டு கொண்டு இருமினான்.

ஆதித்யா டேபிளில் இருந்த நீரை எடுத்து அவனிடம் நீட்ட ... அவனுக்கும் அது தேவை என்பதால் அமைதியாக வாங்கி குடித்தான் நந்தன்.

ஆதித்யா அவனது முகம் மாற்றத்தை கவனித்துக்கொண்டே, "உட்கார்ந்து பேசலாமா?" என்று கேட்க.... உடனே சம்மதமாக தலையாட்டினான் நந்தன். அவனுக்குமே சௌமியா ஹாஸ்பிடலில் இருக்கிறாள் என்று தெரிந்ததும் லேசாக குற்ற உணர்ச்சியாக இருந்தது. நேற்று குடிபோதையில் அவன் பேசிய ஏச்சுப் பேச்சுக்கள் அவனுக்கு பெரிதாக தெரியவில்லை... என்றாலும் இப்போது யோசித்துப் பார்த்தால் அதெல்லாம் அதிகம் என்றே தோன்றியது. ஒரு பெண்ணாக இருப்பவள் அதையெல்லாம் தாங்குவது கடினம் தான்... என்று நினைத்து தன் கோபத்தை விடுத்து, ஆதித்யாவை அமரச் சொன்னவன்... தானும் அவனுக்கு எதிரே உள்ள சோபாவில் அமர்ந்தான்.

"நேற்று என்ன நடந்தது?" என்று நந்தனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே ஆதித்யா கேட்க...

தன்மேல் தவறு இருந்தால் நேற்று நடந்ததை ஒன்றுவிடாமல் அவனிடம் சொல்லிவிட்டான் நந்தன்.
ஏற்கனவே மன உளைச்சலில் இருந்த தன் குட்டி தங்கை நேற்று அவன் சொன்ன வார்த்தைகளால் தான் காரை தாறுமாறாக ஓட்டி சென்று விபத்து நடந்துள்ளது... என்பதை உடனே அவதானித்து விட்டான் ஆதித்யா...

தன் எதிரே குற்ற உணர்வுடன் அமர்ந்திருந்தவனை வெறுப்புடன் பார்த்தவன்.... "என் தங்கச்சி ஆசைப்பட்ட எல்லாத்தையும் நிறைவேற்றி கொடுக்கணும்னு நினைப்பேனே தவிர... அவ ஆசப்பட்ட எதையும் நான் தடுக்கவோ வெறுக்கவோ மாட்டேன். அப்படிப்பட்ட நா அவ காதலுக்கு எதிர்ப்பு சொல்வேனா?அந்த நியூஸ் பேப்பர்ல வந்தது... ஃபேக் நியூஸ். அதை பார்த்து தான் என் தங்கச்சிய நீ வார்த்தையால கொன்றுக்கியா?" என்று ஆதித்யா அடக்கப்பட்ட கோபக் குரலில் கேட்க...

நந்தனுக்கு ஆதித்யா சொன்னதைக் கேட்டதும் ...அதிர்ச்சி, குற்ற உணர்ச்சி, இயலாமை எல்லாம் கலந்த உணர்வுதான் வந்தது.

ஒரு தோழியாக ஆறுதல் சொல்ல வந்தவளை என்னென்னவோ சொல்லி விட்டேனே? என்று மனதிற்குள் துடித்தவன்....
வெளியில் இறுகி தலைகுனிந்து அமர்ந்தான்.

நந்தனின் மீது கட்டுக்கடங்காத ஆத்திரம் வந்தாலும் தங்கையின் நிலையை மனதில் வைத்து அமைதி காத்தான் ஆதித்யா.

ஆதித்யாவின் அமைதி நந்தனின் குற்ற உணர்வை மேலும் அதிகரிக்க தான் செய்தது.

முயன்று தன்னை திடப்படுத்தி கொண்டு,
"சௌமியாவுக்கு இப்போ எப்படி இருக்கு?" என்று உள்ளே போன குரலில் நந்தன் கேட்க...

"ஒன்னும் ஆகல உயிரோடுதான் இருக்கா ..."என்று முகத்தில் அடித்தது போல் சொன்ன ஆதித்யா, அதற்கு மேல் அங்கே இருந்தால் எங்கே ஆத்திரம் அதிகமாகி தன்னையும் மீறி இவனை அடித்து விடுவோமோ?என்று நினைத்து தானிருந்த சோபாவை விட்டு எழுந்தான்.

ஆதித்யாவின் பதில் மீண்டும் நந்தனை உணர்ச்சியின் பிடியில் வைக்க...அவனும் எழுந்து
"நான் சௌமியா பாக்கலாமா??"என்று கேட்டான்.
ஆதித்யா பதில் சொல்லவில்லை.அவனது முகத்தை ஒரு நொடி கூர்ந்து பார்த்துவிட்டு... சரி என்பதுபோல் தலையாட்டிவிட்டு விடுவிடுவென்று வெளியேறி விட்டான்.

நந்தன் வேகமாக கிளம்பி வெளியே வர ஆதித்யா அவனது காரில் அவனுக்காக காத்திருந்தான்.

இங்கு மருத்துவமனையில்... மலரையும் சரத்தையும் மட்டும் சௌமியாவிற்கு துணையாக வைத்துவிட்டு... மகேஷ் அழுது அழுது முகம் வீங்கி போய் இருந்த சுவாதியையும், வானதியையும் வீட்டிற்கு கூட்டி சென்றிருந்தான்.

மலர் முகம் சோர்வாக இருப்பதை கவனித்த சரத் ... மருத்துவமனை கேண்டீனுக்கு சென்று காபி வாங்கி கொண்டுவந்து,
"சோர்ந்து போய் இருக்கீங்க அண்ணி... இந்தாங்க காபி குடிங்க" என்று நீட்ட...

மலர் வேண்டாம் என்பது போல் தலையசைத்தாள்.

"ஏன் அண்ணி? நீங்களும் பாஸ் மாதிரி லோக்கல்ல காபி டீ எதுவும் குடிக்க மாட்டீங்களா?" என்று சரத் முகம் வாட கேட்டதும்...

"அப்படினா இல்ல அண்ணா... எனக்கு காபி பிடிக்காது. ஏலக்காய் போட்ட டீ தான் பிடிக்கும்"
என்றாள் மெல்லிய குரலில்...

ஓஓஓ... என்றவன் சிறிது நேரத்திலேயே டீ வாங்கிவந்து மலருக்கு கொடுத்தான்.

"தேங்க்ஸ் அண்ணா" என்று வாங்கிக்கொண்ட மலருக்கு ஆதித்யா எங்கு சென்றான் என்று என்பது மனதின் ஓரத்தில் ஓடிக் கொண்டிருந்தது.

"அண்ணா" என்று சரத்தை அழைத்தவள்...

"அவரு எங்க போயிருக்கார்?" என்று தயங்கிக்கொண்டே கேட்டாள்.

சரத், "எவர் எங்க போயிருக்கார்?" என்று திரும்பி கேட்க...

மலர் அவனைப்பார்த்து லேசாக முறைத்துவிட்டு,
"சௌமி அண்ணா எங்க போயிருக்கார்?" என்று கேட்டாள்.

"ஓஹோ பாஸா யாரையோ வெட்ட போயிருக்கார்..." என்று சரத் சாதாரணமாக சொல்லிவிட்டு தனது காபியை பருக ஆரம்பித்து விட... இங்கு மலருக்கு வியர்த்துக் கொட்ட ஆரம்பித்து விட்டது.
தனது கற்பனையில் ஆதித்யா யாரையோ வெட்டுவது போலும், பின் அவனை போலீஸ் கைது செய்து கொண்டு செல்வது போலும் நினைத்துப் பார்த்த மலர்விழி பட்டென்று இருக்கையை விட்டு எழுந்தாள்.

அவள் எழுந்ததை அப்பொழுதுதான் பார்த்த சரத்,
"என்ன அண்ணி ஏதாவது வேணுமா?" என்று கேட்க...

"அ... அது...அவர் கிட்ட பேசணும்..." என்று மலர் பயந்து கொண்டே சொல்ல...

மலரின் பின்னால் இருந்து வந்து கொண்டிருந்த ஆதித்யாவை பார்த்த சரத், "அதோ பாஸ் வந்துட்டாரே..." என்று கைகாட்ட மலர் சட்டென்று திரும்பி பார்த்தாள்.

வீட்டிற்கு சென்றானோ இல்லையோ உடைமாற்றி வந்திருந்தான் அவன்... கண்களில் சோர்வு இருந்தாலும் அழுத்தம் குறையவில்லை...
"பாஸ் எப்பவுமே கெத்துதான்..." என்று சரத் சொல்ல, மலர் அவனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவனின் கம்பீரமான நடையும்... அழுத்தமான காலடி ஓசையும்... அடங்காத முடியை இடது கையால் அவன் கோதி விட்ட ஸ்டைலும் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது என்றே சொல்லவேண்டும்...
மலர் அவன் வருவதை விழி அசைக்காமல் பார்த்துக்கொண்டிருக்க... ஆதித்யாவிற்கு பின்னால் வந்து கொண்டிருந்தவனை பார்த்ததும் அவளின் கண்களில் அப்பட்டமான அதிர்ச்சியை காட்டியது.
அவளது அதிர்ச்சியை அவதானித்தவாறு தான் ஆதித்யாவும் வந்தான்.

அவர்கள் அருகில் வந்து விட்ட இருவரையும் பார்த்த சரத்,
"பாஸ் இவர் யாரு?" என்று ஆதித்யாவிடம் கேட்க... அவனின் பார்வை மலரை ஒரு முறை பார்த்துவிட்டு, சரத்திடம் திரும்பி "சௌமியா ஃப்ரெண்ட்... அவள பாக்க வந்து இருக்காரு" என்றான்.
மலர் இன்னும் நந்தனையே பார்த்துக் கொண்டிருக்க.... ஆதித்யாவின் முகம் நெருப்பில்லாமல் எரிந்தது.

நந்தனும் தூரத்திலிருந்தே மலரை கவனித்து விட்டான். அவளது பார்வை முழுதும் ஆதித்யாவின் மேலே இருப்பதையும்,அவளது கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த மாங்கல்யத்தையும் பார்த்தவன்... அவளது முகத்திலிருந்து பார்வையை திருப்பிக் கொண்டான்.
நெஞ்சில் பெரும் வலி எழுந்தாலும் இனி அவள் தனக்கில்லை என்பதை மனதில் பதித்துக் கொள்ள முயற்சி செய்தான்.

தன்னையே பார்த்துக் கொண்டிருந்த மலரின் பார்வையை தவிர்த்து விட்டு,
"நான் சௌமியாவை பார்க்க போலாமா?" என்று கேட்டவன் ஆதித்யா சரி என்று சொன்னதும் மலரை கண்டுகொள்ளாமல் உள்ளே சென்றுவிட்டான்.

மலர் ஒன்றும் காதலோடு நந்தனை பார்க்க வில்லை. அவனது முகத்தில் இருந்த தாடி, சோர்வு தூக்கமின்மையால் கண்ணிற்கு கீழ் உள்ள கருவளையம் தான்... அவளை பார்க்க வைத்தது. அதுவும் ஆராய்ச்சியாக தான் பார்த்தாலே தவிர அதில் வேறு எதுவும் இல்லை... அதை புரிந்துகொள்ள வேண்டியவன் புரிந்து கொள்ளாமல் உள்ளுக்குள் எரிந்து கொண்டிருந்தான்.

நந்தன் உள்ளே சென்ற சிறிது நேரத்திலேயே சுவாதி மகேஷ் இருவரும் வானதியை ஆயாவிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பி வந்திருந்தனர்.

நந்தன் வந்திருப்பதை கேட்டதும் சுவாதிக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி... "அப்பாடி இனி சௌமியா சீக்கிரம் நல்லாகிடுவா" என்று வாய்விட்டே சொல்லியவள் மகேஷின் முகத்தை பார்க்க தவறினாள்.

தங்கையை அவ்வளவு கேவலமாக பேசி விட்டு இன்று எவ்வளவு தைரியம் இருந்தால் மீண்டும் வந்திருப்பான் என்று மகேஷ் கொதித்துக் கொண்டிருக்க... அதை உணராமல் இவள் வாய்விட்டு சொன்ன ஒரு வார்த்தை மகேஷை லேசாக சந்தேகப்பட வைத்தது.

கணவனின் சந்தேகத்தை கூட கவனிக்காமல், ஆதித்யாவின் அருகே சென்று அமர்ந்து ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள் சுவாதி.

மகேஷ் தங்கையின் முகத்தை பார்க்க, அதுவோ லேசான வேதனையில் சுருங்கி இருந்தது.
அவள் அருகில் சென்று அமர்ந்தவன்... ஆதரவாக அவளது கையைப் பிடிக்க, மலரின் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் அவளது துக்கத்தின் அளவை கூறியது.

"என்னாச்சும்மா?" என்று அண்ணன் கேட்டதும் கண்ணீரை வேகவேகமாக துடைத்தவள்... ஒன்றும் இல்லை என்று தலையாட்டி வைத்தாள்.
சுவாதியுடன் பேசிக் கொண்டிருந்தாலும் மலரின் மீதும் ஒரு பார்வை வைத்திருந்த ஆதித்யாவின் கண்களிலிருந்து மலரின் கண்ணீர் தப்பவில்லை.

மலரின் கண்ணீர் எதற்கு? என்று தெரிந்துகொள்ளாமல்...
நந்தனை இன்னும் விரும்புகிறாள்? என்று தவறாக நினைத்தான் ஆதித்யா. அதி மிஞ்சிய கோபத்தினால் அவனின் முகம் இறுகி தாடை புடைத்துக் கொண்டிருந்தது.

அவனது மனக்கண்ணில்,
"த்தூ...விருப்பமில்லாதவள கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்து விபச்சாரம் பண்ணி புள்ள பெத்து வச்சிருக்கியே... உனக்கெல்லாம் அசிங்கமா இல்ல நீ எல்லாம் ஆம்பளையா..." என்ற பெண் குரல் கேட்க....
"புள்ளைங்க முன்னாடி இப்படியெல்லாம் அசிங்கமா பேசாத மா ... கல்யாணத்து தவிர உனக்கு விருப்பம் இல்லாம எதுவும் நடக்கல" என்ற ஆண் குரலும் சேர்ந்து கேட்டது.
அவர்கள் இருவரையும் மலங்க மலங்க பார்த்தவாறு சிறுகுழந்தைகள் மூவர் அமர்ந்திருக்க... அவர்களை அரவணைத்து அமர்ந்திருந்தான் ஒருவன்... அவன் கண்களில் அத்தனை கலக்கம்...

கண்களை இறுக்க மூடி உணர்ச்சியைக் கட்டுப்படுத்தியவன் மலரை உணர்ச்சி துடைத்த பார்வை பார்த்துவிட்டு சுவாதி சொல்வதை கவனிக்கலானான்.

"அண்ணா இது தான் சரியான சந்தர்ப்பம்... நம்ம சௌம்யாவுக்கு நந்தன கல்யாணம் பண்ணி வச்சிடலாம்... நந்தன் கண்டிப்பா சௌமியாவை நல்லபடியா பார்த்துப்பான்..." என்று சுவாதி மெல்லிய குரலில் கூறுவதை கேட்டவன்...

"விருப்பம் இல்லாதவனை கல்யாணம் பண்ண சொல்லி கட்டாயப்படுத்தக்கூடாது சுவாதி மா வாழ போறது நம்ம பொண்ணு" என்று கூறி பேச்சினை முடித்துவிட்டான்.

ஆனால் சுவாதிக்கு தான் மனது கேட்கவில்லை சௌமியாவின் வெகுநாள் புலம்பல் நந்தனை திருமணம் செய்து கொள்வதுதான் .. அது நடந்து விட்டாலே சௌமியா எழுந்து வருவாள் என்று அவள் நினைக்க...
விதி அவளைப் பார்த்து சிரித்து வைத்தது.

உள்ளே சௌமியாவை பார்க்கப் பார்க்க நந்தனின் குற்ற உணர்ச்சி அதிகமாக...
நேற்று அவளை பேசிய ஒவ்வொரு வார்த்தையும் இப்பொழுது அவன் காதில் ஒலித்து மனதை ரணமாக வதைத்தது....
அவள் தன் தனிமையை போக்குவதற்கு தான் 'நான் இருக்கிறேன்' என்றெல்லாம் சொல்லி இருப்பாள் என்று நினைத்தவன்...
அவள் தன்னை திருமணம் செய்ய கேட்டது அப்போதுதான் நினைவு வந்தது. ஆனால் அதைப் பற்றி மேலும் யோசிக்காமல் ஒதுக்கித் தள்ளியவன்,
சௌமியாவின் அருகே சென்று மெல்லிய குரலில் பேசலானான்....

"சௌமி ஐ அம் வெரி சாரி... உண்மை தெரியாம நேத்து என்னென்னவோ பேசிட்டேன்... தயவுசெஞ்சு என்ன மன்னிச்சிரு.. இந்த குற்ற உணர்ச்சி நான் சாகுற வரை என் நெஞ்சுக்குள்ள அரிச்சிக்கிட்டே இருக்கும் சௌமி.. நான் சாகுற வரை என்ன இது தொரத்திகிட்டே இருக்கும்.. தயவு செய்து எனக்காக எழுந்து என்ன மன்னிச்சிட்டேன்னு சொல்லு சௌமி... என்ன பழிவாங்கிடாத" என்று கண்களில் நீர் முட்ட அவன் பேசப்பேச சௌமியா கருமணிகள் அங்குமிங்கும் அசைந்தது.

அதைக் கவனிக்காமல் நந்தன் மேலும் குற்ற உணர்ச்சியால் பேசிக்கொண்டே இருக்க...
சௌமியாவின் கை அவனின் கையை பற்றியதும் தான் அவளைப் பார்க்கவே செய்தான்.

"சௌமியா எழுந்துட்டியா?" என்று நந்தன் மகிழ்ச்சியுடன் கத்தி விட அவனது சத்தத்தில் வெளியே இருந்தவர்கள் கூட உள்ளே வந்துவிட்டனர்.

சௌமியா கண் விழித்து விட்டதை பார்த்ததும், இறுக்கம் குறைந்து அனைவரின் மனது லேசாக... மகேஷ் தான் டாக்டரை அழைத்துவந்தான்.
சௌமியாவை செக் செய்து விட்டு வெளியே வந்த டாக்டர்... "நவ் சி இஸ் ஆல் ரைட் இன்னும் கொஞ்ச நேரத்துல நார்மல் வார்டுக்கு மாத்திடலாம்..." என்றதும் தான் அங்கிருந்த அனைவருக்கும் நிம்மதியே வந்தது.

மலர் நேற்று போட்ட உடையிலேயே இருந்ததால், அதை சாக்காக வைத்து அவளை வீட்டிற்கு செல்ல சொன்னாள் சுவாதி.

மகேஷ் தங்கையை வீட்டிற்கு கூட்டி சென்றுவிட... சரத்தும் ஆதித்யாவிடம் கேட்டுவிட்டு தனது வீட்டிற்கு கிளம்பிவிட்டான்.

ஆதித்யா சுவாதி நந்தன் மூவர் மட்டும் சௌமியாவின் அறைக்கு வெளியே இருந்தனர் .

சிறிது நேரத்தில் அலுவலகத்திலிருந்து ஆதித்யாவிற்கு போன் வர, அவனும் தனக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொல்லி... சுவாதியை சௌமியாவுடன் இருக்க சொல்லிவிட்டு அவசரமாக அலுவலகம் சென்று விட்டான்.

அவனை அடுத்து நந்தனும் கிளம்ப போக, அவனைத் தடுத்த சுவாதி சௌமியாவை பற்றி பேச ஆரம்பித்துவிட்டாள்.
நிச்சயதார்த்தம் இரண்டு முறை நின்று போனதால்... அவள் அழுத அழுகை,வெறுப்பு, கவலை என்று அனைத்தையும் சொன்னவள்... அவனுடனான நிச்சயதார்த்தத்திற்கு பின் மலர் ஆதித்யாவை விரும்புவது பிடிக்காமல் சௌமியா அவனுக்காக அழுததாகவும்... அதையும் மீறி மலர் ஆதித்யாவை விரும்பி விட்டதாகவும் கதை விட்டவள் ...
மேலும் அவனுக்கும் அவளைப் போல் நிச்சயதார்த்தம் நின்றுவிட்டதால் சௌமியாவிற்கு அவன்மேல் ஒரு சாப்ட் கார்னர் உருவாகியதாகவும் சொல்லிவிட்டு நந்தனின் முகம் பார்க்க அது குழம்பிய குட்டையாக இருந்தது.
அதைப்பார்த்து உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள்...

"இங்க பாருங்க நந்தா... அந்த நியூஸ் பேப்பர்ல வந்த செய்தி பொய்யா இருந்தாலும்... இந்த உலகத்தைப் பொறுத்தவரை அது உண்மைதான். இனி சௌம்யாவுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணினாலும் வர்றவன் அவள புரிஞ்சுபான்னு சொல்லமுடியாது. பேசாம நீங்களே என் தங்கச்சியை கல்யாணம் பண்ணிக்கோங்க... உங்கள பத்தி அவளுக்கும் நல்லா தெரியும்.அவள பத்தி உங்களுக்கு நல்லா தெரியும். ரெண்டு பேருக்கும் நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு... சோ நீங்க ரெண்டு பேரும் லைப்ல ஒன்னு சேர்ந்தா நோ ப்ராப்ளம்" என்று சொல்லிவிட்டு அவனுக்கு யோசிக்க நேரம் கொடுத்து விட்டு நகர்ந்து விட்டாள் சுவாதி.

நந்தன் குழப்பத்தோடு யோசிக்க... சுவாதி சொன்னதெல்லாம் சரி என்றே தோன்றியது.
ஆனால் தன்னுடன் நிச்சயமான மலரின் கணவனின் தங்கையை தான் திருமணம் செய்வதா? என்று கேட்டு ஒரு மனம் முரண்டியது....
என்ன செய்வது? என்று தெரியாமல் வெகுநேரம் யோசனையிலேயே இருந்தவனுக்கு... தனது வலியை சௌமியா உணர்ந்திருக்கிறாள் என்பதே ஓரளவு போதுமானதாக இருந்தது. அதுமட்டுமல்லாமல் அவள் தனது தோழி தன்னை நன்றாக புரிந்து கொள்வாள். திருமண வாழ்க்கையில் தேவையற்ற மன கஷ்டம் வராது...
மேலும் தன்னால் தான் அவளுக்கு ஆக்சிடெண்ட் ஆகியுள்ளது என்ற குற்ற உணர்ச்சி வேறு இன்னும் மீதம் இருந்தது. அதைப் போக்குவதற்காக துடித்த மனதுடன் யோசித்தவனுக்கு
சௌமியாவை திருமணம் செய்து கொள்ளலாம் என்றே தோன்றியது.
திருமணம் முடிந்த கையோடு அமெரிக்காவிற்கு சென்றுவிடவேண்டும்....
இங்கிருந்தால் அனைவருக்கும் தேவையில்லாத மனக் கஷ்டங்கள் வரலாம் என்று நினைத்தவன் சுவாதி இடம் சௌமியா உடனான திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான்....!!!

இங்கு அலுவலகத்தில் இருந்த ஆதித்யாவோ, தனது வக்கீலுக்கு தொடர்பு கொண்டு விவாகரத்து பத்திரத்திற்கு ஏற்பாடு செய்ய சொன்னான்......

வேறொருவனை மனதில் சுமப்பவளை மறக்க வேண்டும் தனது வாழ்க்கையிலிருந்து விலக்க வேண்டும் என்று முடிவெடுத்தான்.

மலரின் நிலை??


தொடரும்....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN