ஆதித்யா சக்கரவர்த்தி-17

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 17

ஹாஸ்பிடலில்...
ஐசியூவில் இருந்து நார்மல் வார்டுக்கு மாற்றப்பட்டாள் சௌமியா.
உடல் தேறி வந்து கொண்டிருந்தாலும் அடிக்கடி விட்டத்தை வெறித்துக் கொண்டு தான் அமர்ந்திருப்பாள்.

ஆதித்யா அலுவலகம் செல்வதற்கு முன் தங்கையை காண வருவான்... அதுபோல் அலுவலகம் முடியும் நேரத்திலும் சிறிது நேரம் வருவான். அவ்வளவுதான்... இதில் எங்கிருந்து தங்கையை ஆராய்ந்து பார்க்க?

சுவாதிக்கோ... தனது பெருமைகளை அள்ளி விடவே நேரம் சரியாக இருக்கும் அதனால் அவளும் தங்கையின் முக மாற்றங்களை கவனிக்கவில்லை.
ஆனால் சௌமியா அவளைப் பார்க்க வந்த அனைவரிடமும் ஒட்டாதது போல் பேசிவிட்டு....அடிக்கடி யோசனையிலேயே இருந்ததை யார் கவனிக்கவில்லை என்றாலும் மலர் கவனித்துக் கொண்டுதான் இருந்தாள். அவளிடம் கேட்கவோ பேசவோ விருப்பம் இல்லாததால் அமைதியாக இருந்தாள்.

இங்கு சுவாதியோ ஆதித்யாவிடம்,
நந்தன் சௌமியா உடனான திருமணத்திற்கு சம்மதித்ததை கூறி சந்தோஷப்பட...
ஆதித்யாவோ சௌமியா முழுதும் குணமான பிறகே எதைப்பற்றியும் பேச வேண்டும் என்று கூறிவிட்டதால் இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லாமல் அடக்கி வாசித்தாள் சுவாதி.

சௌமியாவிடம் கூட அதைப் பற்றி வாயை திறக்கவில்லை....
இரண்டு வாரங்களில் சௌமியா டிஸ்சார்ஜ் ஆகிவிட... குடும்பமே நிம்மதிப் பெருமூச்சு விட்டது என்றே சொல்ல வேண்டும்.

இந்த இடைப்பட்ட இரண்டு வாரங்களில் ஆதித்யா மலரின் முகத்தைப் பார்க்கவும் இல்லை. அவளிடம் பேசவும் முயற்சி செய்யவில்லை.
மலர் அதை கண்டு கொள்ளவும் இல்லை. நிம்மதி என்று இருந்து விட்டாள். ஒரே அறையில் இருந்தாலும் இருவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொள்வது கூட இல்லை....

இப்படியே நாட்கள் நகர்ந்து கொண்டிருக்க.....
குற்ற உணர்ச்சியால் அவதிப்பட்ட நந்தனும் அடிக்கடி சௌமியாவை பார்க்க ஆதித்யாவின் வீட்டிற்கு வந்து போனான்.

நந்தன் வரும் நேரம் மலர் தன் அறையை விட்டு வெளியே வருவதில்லை. அவனின் வருகை தங்கைக்கு பிடிக்காததால் தான் என்னமோ...
மகேஷுக்கும் நந்தனின் வருகை சுத்தமாக பிடிக்கவில்லை. அதை சுவாதியிடம் அவன் சொல்ல,
அவளோ,"சௌமியாவ தான நந்தன் பார்க்க வர்றார்... என்னமோ உங்க தங்கச்சியை பார்க்க வர்ற மாதிரி சீன் கிரியேட் பண்றீங்க"என்று அலட்சியமாக சொல்லிவிட... மகேஷுக்கு எங்கேயோ இடிப்பது போல் இருந்தது. ஆனால் வெளியில் எதுவும் சொல்லாமல் இருந்து விட்டான்.

இதற்கிடையில் சௌமியாவின் பிறந்தநாள் வேறு வர இருந்தது.
வருடா வருடம் விழா போல் கொண்டாடும் தங்கையின் பிறந்த நாள் என்பதால்... இந்த வருடம் அவளுக்கு என்ன செய்யலாம்? என்று ஆதித்யா யோசனையில் மூழ்க...
சுவாதி தான் அவனிடம்...

"சௌமியா ஆசைப்பட்ட மாதிரியே நந்தன அவ பிறந்தநாள் அன்னைக்கே சர்ப்ரைஸா கல்யாணம் பண்ணி வச்சுடலாம் அண்ணா... கல்யாணம் கோவில்ல சிம்பிளா வச்சாலும் ரிசப்ஷன் நல்ல கிராண்டா செலப்ரேட் பண்ணிடலாம்" என்று ஐடியா கொடுத்தாள்.

சுவாதியின் யோசனை ஆதித்யாவிற்கும் சரியென பட அவனும் சம்மதித்து விட்டான்.

அண்ணன் சம்மதித்த உடனே நந்தனுக்கும் அழைத்து பேசி அவனிடமும் சம்மதம் வாங்கி விட்டாள் சுவாதி

எல்லாம் தான் நினைத்தது போல் நடக்கிறது என்று நினைத்த சுவாதி... "இந்த விஷயம் மட்டும் தெரிஞ்சா சௌமியா ரொம்ப சந்தோஷப்படுவா" என்று தன் அண்ணனிடம் மகிழ்ச்சியுடன் சொல்ல...
அவனோ அப்பொழுதுதான்,
"சுவாதி நான் சௌமியா கல்யாணம் முடிஞ்சதும் நான் மலர டைவர்ஸ் பண்ணலாம்னு இருக்கேன்..." என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டான்.

தன் அண்ணனை அதிர்ச்சியுடன் பார்த்த சுவாதி,
"அதுக்குள்ளே வா..பாவம் அண்ணா மலர்" என்று லேசான கவலையுடன் சொல்ல...

"என்னோட கண்டிஷன் ஞாபகம் இருக்குல்ல?" என்று ஆதித்யா கடுப்புடன் சொன்னதும்... கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டாள் சுவாதி.
ஆனால் உள்ளுக்குள், மலரை ஆதித்யா டைவர்ஸ் செய்து விட்டால் மகேஷ் கண்டிப்பாக வருத்தப்படுவான்... தன் அண்ணனின் மீதும்... தன் மீதும் கோபம் கூட வரலாம்... என்று நினைத்தவள் அதை தடுப்பதற்கு என்ன செய்யலாம்? என்று யோசித்தாள்.

ஏதாவது வழி கிடைக்காதா? என்று யோசித்தவளுக்கு ஒரு அருமையான யோசனை வந்தது.
"நம்ம அண்ணன கொஞ்சம் பொறுமையா இருக்க சொல்லிட்டு... மலரையே முதல்ல டைவர்ஸ் கேட்க சொல்லிட்டா... மலருக்கு தான் இந்த கல்யாணத்துல இஷ்டம் இல்லாம போயிட்டுன்னு சொல்லிடலாம்... மகேஷுக்கு ஆதித்யா மேல எந்த சந்தேகமும் வராது" என்று திட்டமிட்டாள் சுவாதி.
பின்னால் இதற்கெல்லாம் சேர்த்து விதி... அவளை வைத்து செய்யப் போவதை அறியாமல்!?

சௌமியாவின் விபத்தில் இருந்து மகேஷ் குடும்பம் ஆதித்யா வீட்டில் தான் இருந்தது.

சுவாதி தன் தங்கையை பக்கத்திலிருந்து தானே பார்த்துக்கொள்ள வேண்டும்... அவளுக்குத்தான் தான் உதவியாக இருக்கவேண்டும்... என்று அடம்பிடித்து மகேஷை அங்கேயே தங்க வைத்திருந்தாள்.
ஆனால் உண்மையை சொல்லப்போனால் சௌமியாவிற்கு எல்லா உதவியையும் முகம் சுளிக்காமல் செய்தது மலர்தான்.
அப்பப்ப சென்று சௌமியாவை லேசாக எட்டிப் பார்த்துவிட்டு வருவாள் சுவாதி அவ்வளவே!!!

அவளைப் பொருத்தவரை மலர் ஒரு சம்பளம் இல்லாத வேலைக்காரி. அதனால் தன் தங்கைக்கு பணிவிடை செய்வதில் தவறே இல்லை என்று நினைத்தாள்...
அவள்!!!

என்னதான் மலர் அவளுக்கு உதவி செய்தாலும் சௌமியாவிடம் ஒரு வார்த்தை கூட அவள் பேசவே இல்லை.
அவளாகவே ஏதாவது கேட்டாலும் ஆம்... இல்லை... என்ற தலையாட்டல் தான் பதிலாக கிடைக்கும்.

அன்று வழக்கம் போல் மகேஷ் ஆதித்யா இருவரும் அலுவலகம் கிளம்பி விட...
மலர் சௌமியாவிற்கு உதவி செய்துவிட்டு... அவளது அறையை விட்டு வெளியே வர அவளிடம் தனியாக பேசவேண்டும் என்று தோட்டத்திற்கு அழைத்துச் சென்றாள் சுவாதி.

வெகு நாட்களுக்குப் பிறகு தன் அண்ணி தன்னிடம் பேச வேண்டும் என்று சொன்னதும் மலருக்கு குழப்பமாக இருந்தாலும் அமைதியாக அண்ணியின் பின் சென்றாள்.

தோட்டத்தில் இருந்த கல் மேடையில் இருவரும் அமர... சுவாதி தான் முதலில் பேச்சை ஆரம்பித்தாள்.
மலரின் கைகளை பிடித்து கண்களில் வைத்துக் கொண்ட சுவாதி...
"மலர் நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன்... என்ன மன்னிச்சிடு" என்று போலியாக கண்ணை கசக்க...
மலர் பதறி கைகளைக் இழுத்துக்கொண்டு என்னவென்று கேட்க...
"என்னோட அண்ணன கல்யாணம் பண்ண சொல்லி உன்னோட வாழ்க்கையை வீணாக்கிட்டேன்.. எனக்கெல்லாம் மன்னிப்பே கிடையாது..." என்று சுவாதி நீலிக்கண்ணீர் விட...
மலர் அதற்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அமைதியானாள்.

அதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்த சுவாதி...
"உன்னோட தங்கமான குணத்துக்கு எந்த வகையிலும் பொருத்தமில்லாத என்னோட அண்ணன் உனக்கு வேண்டாம் மலர்... பேசாம அவன டைவர்ஸ் பண்ணிடு" என்று அவள் சொன்னதுதான் தாமதம்...

"அது மட்டும் என்னால முடியாது" என்று உணர்ச்சி வசப்பட்டு கத்திவிட்டாள் மலர்.

மலரின் இந்த எதிர்ப்பை எதிர்பார்க்காத சுவாதி தடுமாறித்தான் போனாள்.

அவளுக்கு தான் இந்த திருமணத்தில் உடன்பாடு இல்லையே... என்று யோசித்த சுவாதி
ஏன்? என்பது போல் மலரை பார்க்க....
அண்ணியின் பார்வையை உணர்ந்த மலரும்...
"அண்ணி தமிழ்நாட்டுல பொறந்த டிபிக்கல் தமிழ் பொண்ணுதான் நா... 'கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்' கொள்கை தான் எனக்கும்... என்னால இப்ப என்னோட புருஷன ஏத்துக்க முடியலைன்னாலும் கூடிய சீக்கிரம் ஏத்துக்க முயற்சி செய்வேன்... காலம் தான் எல்லாத்துக்கும் மருந்து... நம்பிக்கை வச்சா சீக்கிரம் எல்லாம் சரியாகும்" என்று தெளிவாக பேசியவளை வாயைப் பிளந்து பார்த்தாள் சுவாதி.

மலர் இந்த விஷயத்தில் இவ்வளவு தெளிவாக பேசுவாள் என்று சுவாதி எதிர்பார்க்கவில்லை.....
அதன் பிறகு அதைப்பற்றி அவளிடம் பேசுவதை விட்டு விட்டாள் சுவாதி.

ஆனால் மனதிற்குள்ளேயே,
"ஆனா என் அண்ணன் உன்ன டைவர்ஸ் பண்ணிடுவானே... அப்புறம் எங்க போவ?" என்று கேலியாக நினைத்துக்கொண்டாள் .

அந்த மாத இறுதியில் சௌமியாவின் பிறந்தநாளும் வந்துவிட.... அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சௌமியா நந்தன் திருமணமும் கோவிலில் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவும் அவளுக்கே தெரியாமல்....!!!

விஷயம் கேள்விப்பட்ட மலர் எந்த உணர்ச்சியும் காண்பிக்கவில்லை. மகேஷ் தான் கொதித்துப் போனான்.
"என் தங்கச்சிய நிச்சயம் பண்ணவன் கூட சௌம்யாவுக்கு எப்படி கல்யாணம் நடக்கலாம்?" என்று மகேஷ் சுவாதியிடம் சண்டையிட... "அது அவங்கவங்க விருப்பம்" என்று முடிந்து விட்டாள் சுவாதி.

நந்தன் என்னதான் திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாலும்... திருமண நாள் நெருங்க நெருங்க உயிரைக் கொல்லும் வலிதான் அவனது நெஞ்சில் எழுந்தது.

சௌமியாவின் பிறந்தநாளும் வந்துவிட...
சௌமியாவிடம் குடும்பமாக கோவிலுக்கு செல்ல போகிறோம் என்று சொல்லிவிட்டு
காலையிலேயே கோவிலுக்கு கிளம்பினர் அனைவரும்...

மலர் கோவிலுக்கு வர மறுக்க ... சுவாதி வற்புறுத்தியதால் வேறு வழியில்லாமல் கிளம்பினாள்.
இதைக் கண்டும் காணாமலும் கவனித்துக்கொண்டிருந்த ஆதித்யாவோ, "மனசுக்கு பிடிச்ச அவளோட அருமை காதலனுக்கு இன்னைக்கு கல்யாணம்ல.... அந்த அருமையான காட்சியை இவ எப்படி நேர்ல வந்து பார்க்க முடியும்... அதான் வர மாட்டேன்னு சொல்லி இருப்பா" என்று உள்ளுக்குள் எரிச்சல் பட்டுக் கொண்டான். அவன் எடுத்த முடிவு மேலும் உறுதியானது.

என்றும் இல்லாத அதிசயமாக கடவுள் நம்பிக்கை இல்லாத தன் அண்ணன் கூட தனக்காக கோவிலுக்கு வருகிறான்... என்பதை அறிந்த சௌமியா உண்மையாகவே பெருமகிழ்ச்சி அடைந்தாள்.
பக்கத்திலிருந்த அம்மன் கோயிலுக்கு சென்றவர்கள்...
சௌமியாவை முன்னே விட்டு கோவிலின் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தனர்.

சௌமியாவும் தன் பிறந்த நாள் அதுவுமாக...இனி எல்லாம் நல்லதாகவே நடக்க வேண்டும் என்று கடவுளிடம் மனதார வேண்டிக் கொண்டாள்....
ஆனால் அதன் பிறகு அங்கு நடந்ததோ ... அவள் கனவிலும் எதிர்பார்க்காதது.

ஐந்து மாதங்களுக்குப் பிறகு....

மாலை 4 மணி தனது சிவப்பு நிற ஆக்டிவாவை போர்டிகோவில் நிறுத்திவிட்டு தனது ஹேண்ட் பேக்கினை எடுத்துக்கொண்டு வீட்டிற்குள் சென்றாள் மலர்.
முகத்தில் எந்த உணர்வும் இல்லை. சோகமாகவும் இல்லை. அதே சமயம் மகிழ்ச்சியாகவும் இல்லை. இறுகிபோய் இருந்தது மலரின் முகம். ஆனால் அதில் எப்பொழுதும் இல்லாத உறுதியும்... தன்னம்பிக்கையும் அதிகமாக இருந்தது. மிரட்சியும் பயமும் அதில் தென்படவில்லை
அவளை தனது வீட்டின் மாடியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு உருவம்....
இவள் எப்படி இங்கே? என்று யோசித்தது. ஆனால் விடை தான் தெரியவில்லை.

தனது கைப்பேசியில் யாரிடமோ டென்ஷனாக பேசிக் கொண்டிருந்த மகேஷ், தங்கையின் வருகையை உணர்ந்ததும் போன் காலை கட் செய்துவிட்டு, "லட்சுமி அம்மா மலருக்கு டீ போட்டுக்கொண்டு வாங்க" என்றவன் தங்கையின் அருகே சென்று அமர்ந்தான்.

சோபாவில் தலை சாய்ந்து டீப்பாயில் காலை நீட்டி அமர்ந்திருந்தவள், அண்ணன் அருகில் அமர்ந்ததும் அவன் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அவளது தலையை ஆதூரமாய் வருடியவாறு, "என்னாச்சுடா... ஏன் ஒரு மாதிரி இருக்க?" என்று கேட்டதுதான் தாமதம்....
"என் ஃப்ரெண்ட் மேகலா அவளோட பையன எங்க ஸ்கூல்ல தான் சேர்த்து இருக்கா... என்ன அங்க பார்த்ததும் என்னோட பர்சனல் லைஃப் பத்தி கேட்க ஆரம்பிச்சிட்டா... என்னால அவ கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்ல முடியல... அண்ணா வெறுப்பா இருக்கு. எதுக்கு தேவையில்லாம அடுத்தவங்க பர்சனல் லைஃப் பத்தி கேக்குறாங்களோ... முடியல..." என்று தன் தலையை அழுத்தி பிடித்துக் கொண்டாள் மலர்விழி.

ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசுவதற்கே தயங்கும் மலர்... இப்பொழுது சற்று வளவள என்று பேச ஆரம்பித்து இருந்தாள்.
தங்கையை பார்த்து சிரித்தவன்,
"நீ என்னம்மா சொன்ன?" என்று கேட்டான்.

"நான் என்ன அண்ணா சொல்லணும்?அதான் நாங்க ரெண்டுபேரும் பிரிஞ்சு இருக்கிறது ஊருக்கே தெரியுமே...எல்லாம் தெரிஞ்சும் தெரியாத மாதிரி என் கிட்டவே வந்து கேக்குறாங்க... நம்மளே நம்மளோட வலிய சொன்னாதான் அவங்க மனசு ஆறும் போல" என்று மலர் விரக்தியுடன் சொல்லவும்... மகேஷின் இதயம் தங்கைக்காக துடித்தது.

"எல்லாத்துக்கும் நான்தான் காரணம் மலர் மா... நான் மட்டும் கவனமா எல்லாத்தையும் விசாரிச்சு முடிவு பண்ணி இருந்தேனா... உனக்கு இவ்வளவு கஷ்டம் வந்து இருக்காதே?" என்று வருந்திய அண்ணனை பார்த்து முறைத்தாள் மலர்.

"அண்ணா எத்தன தடவ சொல்றது? இது எல்லாத்துக்கும் காரணம் என்னோட பயந்த சுபாவமும் வெகுளிதனமும் தான். நான் நினைச்சிருந்தா உன்கிட்ட வந்து எல்லாத்தையும் சொல்லி இருக்க முடியும்.அதை விட்டுட்டு எனக்குள்ளேயே பலவீனமா இருந்து இருக்கேன். மிஸ்டேக்ஸ் ஃபுல்லா நான் பண்ணது தான். ஆனா தண்டனை என்கூட நீயும் சேர்ந்து அனுபவிக்க..." என்றவளின் குரலில் சொல்லவெண்ணா துயர் இருப்பதை ஒரு அண்ணனாக அவனால் உணர முடிந்தது.

என்னதான் வருத்தமாக பேசினாலும் மலரின் கண்களில் இருந்து ஒரு துளி நீரும் வரவில்லை. கடந்த ஐந்து மாத காலங்களில் மலரிடம் நிறைய மாற்றங்கள் வந்திருந்தது.
சிந்தனையில் தெளிவும், பேச்சில் நளினமும், கண்களில் தீட்சையமும் செயலில் அதிரடியும் வந்திருந்தது.
அதாவது தன்னிடம் உள்ள சோகத்தை ... தானும் கண்ணீர் கடலில் மூழ்கி அடுத்தவரையும் மூழ்க விடாமல் காப்பதற்காக தனக்குத்தானே... முகமூடி அணிந்து தன்னை தைரியம் உள்ளவளாக வெளிக்காட்டிக் கொண்டாள் மலர்.

தங்கையின் வருத்தமான குரலில் மகேஷ் மௌனியாக இருக்க, மலர் அவனின் தோளில் சாய்ந்து கொண்டே... லட்சுமி அம்மாள் போட்டு கொடுத்திருந்த டீயை ரசித்து பருகிக் கொண்டிருந்தாள்.

"இன்னைக்கு ஸ்கூல்ல என்னல்லாம் நடந்துச்சு?" என்று பேச்சை மாற்றினான் மகேஷ்.

அது புரிந்தாலும்... விடாமல்....
"வானதி குட்டிய பாத்தேன். ஆனா அவ என்கிட்ட பேசாம முகத்தைத் திருப்பிட்டு போயிட்டா... சுவாதி அண்ணி என்கிட்ட பேசக்கூடாதுன்னு சொல்லிட்டாங்க போல ...பின்ன அவங்க குடும்பத்தையே பிரிச்சு இருக்கேனே..." என்று மறைமுகமாக அண்ணனுக்கு அதையே நினைவு படுத்தினாள் மலர்.

இதற்கு மேல் என்ன பேசினாலும் திரும்பத் திரும்ப அதைத்தான் சொல்வாள் என்பதை உணர்ந்து... "நந்தன் அமெரிக்காவிலிருந்து வந்திருக்கான் போல... காலையிலேயே கார்ல இருந்து இறங்கி வீட்டுக்கு போறத பார்த்தேன்" என்று மகேஷ் சொன்னதுதான் தாமதம் குடித்துக் கொண்டிருந்த டீ புரை ஏற...
வாட்ட்... என்று அதிர்ந்து விட்டாள் மலர்.

அலுவலகத்திலிருந்து வந்ததிலிருந்து பயங்கர உஷ்ணமாக இருந்த அண்ணனை கோவமாக பார்த்துக் கொண்டிருந்தாள் சுவாதி.

மகேஷ் புதிதாக வேலைக்கு சேர்ந்திருந்த அலுவலகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தி அவனை வேலையை விட்டு தூக்கிவிட்டான் ஆதித்யா.
கிட்டத்தட்ட இந்த ஐந்து மாதங்களாக, இதை தான் செய்து கொண்டிருக்கிறான்.

மகேஷ் வேலைக்கு செல்கின்ற எல்லா கம்பெனிகளில் பேசி மிரட்டி அவனுக்கு வேலை இல்லாமல் செய்து கொண்டிருந்தான்.
ஆனாலும் மகேஷ் தோல்வியை ஒத்துக் கொள்ளாமல் அடுத்த வேலைக்கு தாவிக் கொண்டே இருந்தான். தோல்வியை ஒப்புக் கொள்ளவே இல்லையே...

இங்கு ஆதித்யாவிற்கோ கணவனைப் பிரிந்து துன்பப்படும் தங்கையின் சோர்ந்த முகத்தையும் தந்தையைத் தேடும் குழந்தையின் முகத்தையும் பார்க்க முடியவில்லை. அவர்களது துன்பத்தை போக்க முடியவில்லையே என்று உள்ளுக்குள் வெடித்து கொண்டிருந்தான்.

இத்தனைக்கும் குழந்தையைக் கூட மகேஷுக்கு காட்டாமல் தான் வைத்திருந்தான். அப்பொழுதாவது மனம்மாறி தன் தங்கையையும் அவனது குழந்தையையும் தேடி வந்து விடுவான் என்ற அற்ப நம்பிக்கை தான் அவனுக்கு. ஆனால் அதையும் சுக்குநூறாக உடைத்து விட்டு, எனக்கு என் தங்கை தான் முக்கியம் என்று கடந்த 5 மாதங்களாக நிரூபித்து கொண்டிருந்தான் மகேஷ்.

சுவாதி தான் தினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தாள். அதைப்பார்த்து வருத்தமாக இருந்தாலும்...அதற்காக அவன் திரும்பவும் மலரை கூட்டி வர முடியுமா என்ன? இன்னொருவனை மனதில் சுமப்பவள் அவள்... என்ற நினைப்பே அவனுக்கு வேப்பங்காயாக கசந்தது.

அண்ணனின் முகத்தை அவ்வளவு நேரம் கோபமாக பார்த்துக்கொண்டிருந்த
சுவாதி, தினமும் சொல்லும் அதே டயலாக்கை மீண்டும் சொன்னாள்.
"ப்ளீஸ் ண்ணா மலர கூட்டிட்டு வந்திடு... டைவர்ஸ் பண்ணாத அவள... உன்னால என் வாழ்க்கையும் வீணா போகுது" என்று கெஞ்சிக் கேட்டும் ஆதித்யா அசையவில்லை.

தங்கையை அழுத்தமாக பார்த்தவன்,
"நான் ஏற்கனவே சொன்னதுதான்... சுவாதி உன்னோட புருஷன் உன்கிட்ட சேர்த்து வைக்கிறது என்னோட பொறுப்பு. ஆனா மலர என்னால திரும்ப கூட்டிட்டு வர முடியாது. என் கண்டிஷனுக்கு நீங்க ஒத்துக்கிட்ட அப்புறம் தானே... நான் மேரேஜ்க்கு ஒத்துக்கிட்டேன்... இப்ப திடீர்னு நீ மாத்தி பேசுற" சீறி விட்டு சென்ற அண்ணனை பாவமாக பார்த்தாள் சுவாதி.

அப்பொழுது சாதாரணமாக தெரிந்த அந்த கண்டிஷன் இப்பொழுது அவளது வாழ்க்கையையே புரட்டி போட்டுக் கொண்டிருந்தது.

"மலர நான் கல்யாணம் பண்ணிக்கனும்னா அதுக்கு ஒரு கண்டிஷன் இருக்கு" என்றவுடன் தானும் சௌமியாவும் எதுவாக இருந்தாலும் பரவாயில்லை என்று சொன்னது இப்போது நினைத்துப்பார்த்தால் நெருப்பாக நெஞ்சில் எரிந்தது.

"எனக்கு எப்போ பிரியனும்னு தோணுதோ... அப்போ நான் அவள விட்டு விலகிடுவேன்... அதுக்கு நீங்க எக்காரணத்தைக் கொண்டும் குறுக்க வரக்கூடாது" என்று சொன்னவனது பேச்சு அப்பொழுது அவர்களுக்கு சீரியஸாக தெரியவில்லை. ஆனால் அது நடைமுறையில் வரும்பொழுது தான் அதன் பக்கவிளைவுகள் புரிந்தது.

மலரின் வாழ்வில் பெரும் வெள்ளம் வந்தது என்றால் சுவாதியின் வாழ்க்கை அந்த வெள்ளத்தில் அகப்பட்ட துணியாக சுருண்ட விழுந்துவிட்டது. ஆனால் யாருக்காக இதெல்லாம் செய்தாளோ? அவள் திருமணம் முடிந்து கணவனுடன் நன்றாகத் தானே இருக்கிறாள்? தான் மட்டும் தான் கணவனைப் பிரிந்து அவதிப்படுகிறேன்... என்று நினைத்தவளுக்கு சௌமியாவின் மீது கோபம் கோபமாக வந்தது.

மறுநாள்...
பரபரப்பான காலை நேரத்தில்....
அந்த அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பிளாட்டில்....

"அடியே மியாவ்... எனக்கு இன்னைக்கு முக்கியமான மீட்டிங் இருக்குன்னு தெரியும் தானே என்னுடைய ஷர்ட அயன் பண்ணி வச்சிட்டியா....ஒரு சுருக்கம் இருந்தாலும் உன் பொறந்த வீட்டுக்கு உன்ன பார்சல் பண்ணிடுவேன்... ஜாக்கிரதை" என்ற கணவனின் அரட்டல் குரலில்....
அவசர அவசரமாக அயன் செய்து கொண்டிருந்தாள் அவனின் தர்மபத்தினி.

அந்த வேலையை முடிப்பதற்குள்,
"மியாவ் சாப்பாடு ரெடி பண்ணலையா? இன்னும் என்ன பண்ற லேட் ஆகுது எனக்கு? மார்னிங் டிபன் இட்லி சாம்பார் வடை கேசரி இது மட்டும் பண்ணிடு... மதியத்துக்கு நான் வெளியில லன்ச் சாப்ட்டுக்குறேன் உனக்கு மட்டும் ஏதாவது பண்ணிக்கோ" என்று மீண்டும் கட்டளை பிறப்பித்து விட்டு குளிக்க சென்றான் அவன்.

அவன் குளித்துவிட்டு வருவதற்குள் அவசர அவசரமாக சமையலை முடித்து... ஆவி பறக்க அவனுக்கு பரிமாறி விட்டு அப்பாடி... என்று சோபாவில் சோர்ந்துபோய் அமர்ந்தவளை உன்னை விட்டேனா? என்பதுபோல்
"ஓய் மியாவ் என்ன அதுக்குள்ள ரெஸ்ட்டா ... இவ்வளவு சோம்பேறியா இருக்கக் கூடாது... ஓடிப் போய் மாமா ஷூவ பாலிஷ் பண்ணி எடுத்துட்டு வா... பாக்கலாம்" என்றான் கணவன்.

உள்ளுக்குள்...
"டேய் என்னைக்காவது என்கிட்ட வசமாக சிக்குவ... அன்னிக்கு வச்சிக்கிறேன்டா உன்ன..." என்று கருவி கொண்டாலும்... வெளியே அவனைப் பார்த்து இழித்துக்கொண்டே ஷூவை பாலிஷ் செய்து வைத்தாள் திருமதி சௌமியா சரத்.

அவளது முக மாற்றத்தை வைத்து அவளது மைண்ட் வாய்ஸை கேட்ச் பிடித்த சரத்...
"சிறுத்தை சிக்கும் சில்வண்டு சிக்காது மியாவ்... ஓவர் கற்பனை உடம்புக்கு ஆகாது" என்றான்.
தன் மனதில் நினைப்பதை கூட விடாமல் கண்டுபிடிப்பவனை என்ன செய்வது? என்று தெரியாமல் அவள் முழித்துக் கொண்டிருக்க... அவள் அருகில் வந்தவன் அவளது கன்னத்தில் தட்டி,
"ஒன்னும் செய்ய முடியாது மியாவ்..." என்று ரகசியம் போல் சொல்லிவிட்டு, அவள் பாலிஷ் பண்ணி வைத்திருந்த ஷூவை போட்டு லேசை கட்டிவிட்டு அலுவலக பையை எடுத்துக்கொண்டு கிளம்ப தயாரானான் சரத்.

"அப்பாடா சீக்கிரம் போய் தொல... தொல்லை புடிச்சவனே..."என்று இவள் மனதிற்குள் வசைபாட ...
அவள் மனதை படித்தவன் சிரித்துக்கொண்டே கதவு வரை சென்றுவிட்டு யூ டர்ன் அடித்து திரும்பி வந்து,
"மியாவ் குட்டி ஈவினிங் முந்திரி பக்கோடா பண்ணிடு... மாமாவுக்கு சாப்ட்டு ரொம்ப நாள் ஆச்சு... அச்சோ சொல்லும்போதே நாக்கு ஊருதே" என்று நொட்டை விட்டவன்...

"எப்போதும்போல யூடூப் பாத்து பண்ணிடு... நீதான் மொத மொத சாப்பிட்டு பார்க்கணும்... நீ உயிரோட இருந்தா தான் மாமா சாப்பிடுவேன் மியாவ்" என்று அவளுக்கு அபாய சங்கை ஊதி விட்டு மின்னல் வேகத்தில் அலுவலத்திற்கு தனது பைக்கில் பறந்து விட்டான் சரத்.
சௌமியாவோ, டேய்ய்ய்ய்... பல்லை கடித்தாள்.

அவன் சென்றதும் வீட்டிற்குள் வந்தவளுக்கு அவனின் மீது கோபமாக வந்தாலும் தன்னை நினைத்தே ஆச்சரியமாகவும் இருந்தது. யாருக்கும் அடங்காமல் திமிர்பிடித்தவளாக அலைந்த தானா? இப்படி மாறி இருக்கிறோம் என்று...
உடையிலிருந்து... அவள் என்ன செய்ய வேண்டும்... என்ன சாப்பிட வேண்டும் என்பது வரை எல்லாவற்றையும் முடிவு செய்வது அவளது கணவன் சரத் தான்...

ஆரம்பத்தில் ... "எதுவும் செய்ய மாட்டேன் எல்லாம் என் இஷ்டம் மிஸ்டர்.. உன்னோட வேலைய பாரு" என்று முரண்டு பிடித்தவளை அரட்டி மிரட்டி செய்ய வைத்தாலும் இப்பொழுது அதெல்லாம் ஓரளவு பழகிவிட்டது.

அவளது அண்ணன் வீட்டில் அவளது கண் அசைவிற்கு வேலை செய்ய பலர் காத்துக் கொண்டிருக்க... இங்கு வேலை செய்வது எரிச்சலாக வந்தாலும் வேறு வழி இல்லை சௌமியாவிற்கு....

பழைய நினைவுகளில் பெருமூச்சு வர.... அவளது மொபைல் சத்தம் கேட்டு படுக்கை அறைக்கு விரைந்தாள் அவள்.
சுவாதி தான் அழைத்திருந்தாள். எடுக்க மனமில்லாமல் அதை பார்த்துக்கொண்டே இருந்த சௌமியா, அடுத்த முறை அவள் அழைக்கும் பொழுது வேண்டாவெறுப்பாக எடுத்தாள்.

சுவாதி ஒன்றும் பாசமழை பொழிவதற்கு அழைக்க மாட்டாள். நான் வாழாவெட்டியாக வீட்டில் இருப்பதற்கு நீதான் காரணம் என்று கரித்துக் கொட்டுவதற்காக மட்டுமே அழைப்பாள். அக்காவின் வசவுகளுக்கு பயந்தே பிறந்த வீட்டிற்கு செல்வதை தவிர்த்து விட்டாள் அவள்...

"ஹலோ அக்கா" என்று சௌமியா சொன்னதுதான் தாமதம்....

"என்னடி தின்னுட்டு நல்லா தூங்குறியா... பின்ன தூங்காம இருக்க முடியுமா? என்ன ஜம்முனு புருஷன் கூட இருக்கியே சுகபோக வாழ்க்கை தான் போ..."
என்று சுவாதி அவளைச் சாட

"என்ன பத்தி நீ ரொம்ப கவலைப் பட வேண்டாம்... மூடிட்டு வேலையப் பாரு ...இப்ப எதுக்கு போன் பண்ண அத முதல்ல சொல்லு" சுள்ளென்று எரிந்து விழுந்தாள்.

"ஏய் என்னடி ஓவரா பண்ற... உன்னாலதான் நான் என் மகிய பிரிஞ்சு கஷ்டப்படுறேன். நீ நல்லா நிம்மதியா இரு... உனக்காக பண்ணித்தான் எனக்கு இந்த நிலைமை" என்று சுவாதி அந்தபுறம் கண்ணை கசக்க....

எப்பொழுது போன் பண்ணினாலும் இதையே இழுத்து இழுத்து பேசும் அக்காவை என்ன செய்வது? என்று தெரியாமல் கடுப்பாகி போன சௌமியா...
"ஆமா நான் தான் மலருக்கு அண்ணன டைவர்ஸ் கொடுக்க சொல்லிட்டு உனக்கும் மாமவ டைவர்ஸ் கொடுக்க சொன்னேன். அது மட்டும் இல்ல ஊர்ல உள்ள எல்லா புருஷனையும் அவங்கவங்க பொண்டாட்டிக்கு நான் தான் டைவர்ஸ் கொடுக்க சொல்லிட்டிருக்கேன்.எல்லாத்துக்கும் நான்தான் காரணம். அதுக்கு என்ன ஜெயில்ல புடிச்சு போடப் போறியா? என்ன?" என்று சௌமியா இந்த புறம் கத்திவிட்டு மொபைலை வைத்துவிட... சுவாதியோ அந்தப்புறம் கொலைவெறியில் இருந்தாள்.

போனை கட் செய்து மெத்தையில் தூக்கி எறிந்துவிட்டு, புசுபுசுவென்று பெருமூச்சு விட்டு தனது கோபத்தை கட்டுப்படுத்தினால் சௌமியா.

பின்னே இங்கு அவள் படும்பாடு அவளுக்கு தானே தெரியும். ஏதோ இங்கு அவள் சொகுசாக இருப்பது போல் அல்லவா சுவாதி பேசுகிறாள்.
அவள் வீட்டில் ஒரு நாளும் சமையலறை பக்கம் செல்லாதவள் இன்று வகைவகையாக உணவு பதார்த்தங்கள் செய்கிறாள் என்றால் சும்மாவா? அதற்கு எவ்வளவு கஷ்டப் பட்டிருக்க வேண்டும்... காய்கறி வெட்டும் பொழுது கைகளில் எத்தனை வெட்டுக் குத்து வாங்கியிருக்கிறாள் ... அடுப்பு வேளையில் எத்தனை சூடு... எத்தனை எண்ணை தெறிப்புகள்... கைகளை விரித்து பார்த்தவள் அதிலிருந்த தழும்புகளை வருடினாள்.

ப்பா... இத்தனைக்கும் அவள் செய்த உணவுகளை முதலில் அவளையே சோதனை எலியாக பயன்படுத்தி சோதனை செய்து விட்டுதான் சரத் சாப்பிடுவான். ஆரம்பத்தில் அவள் செய்ததை அவளே சாப்பிட்டு எவ்வளவு துன்பப்பட்டால் என்பது அவளுக்கு தானே தெரியும்...
இத்தனைக்கும் வீட்டில் ஒரு வேலையாள் கூட இல்லை. எல்லாவற்றையும் சுத்தம் செய்வது கூட சௌமியா தான். அண்ணன் வீட்டில் ஏசியில் சொகுசாக இருந்தவள்... இங்கு வெறும் ஃபேன் காற்றில் உட்கார்ந்திருக்கிறாள். அதுவும் கரண்ட் பில் அதிகம் ஆகிவிட்டால் சரத்திடம் அதற்கும் தனியாக திட்டு விழும். இதில் மேலும் கொடுமையாக வாரத்திற்கு ஒரு முறை சரத்தின் சொந்த கிராமத்திற்கு வேறு செல்ல வேண்டும். அங்குதான் சரத்தின் அம்மா அப்பா எல்லாரும் இருக்கிறார்கள். அங்கு சென்றால் இதைவிட கேவலமாக சாணி தட்ட வைத்துவிடுவான் சரத். தன் நிலைமை தனக்கு தானே தெரியும் என்று உள்ளுக்குள் வெதும்பி கொண்டிருந்தாள் சௌமியா.

இத்தனை மாதங்களில் அண்ணன் வீட்டிற்கு கூட சரத் அனுமதி இல்லாமல் செல்ல முடியாது... தன் அண்ணனே தன்னை பார்க்க வந்தால் மட்டுமே பார்க்க முடியும்.....
திருமணம் அவசர அவசரமாக நடந்து முடிந்திருந்தாலும்...ஆதித்யாவிடம் இருந்து ஒரு பைசா வாங்கவில்லை சரத். ஆதித்யா எவ்வளவோ கேட்டும்... அவனிடம் இருந்து தனது சம்பளத்திற்கு அதிகமாக ஒரு ரூபாய் கூட வேண்டாம் என்று விட்டான்.
மீண்டும் மீண்டும் அவன் வற்புறுத்திக் கொண்டே இருக்க... "உங்க தங்கச்சிக்கு நீங்களே விலை பேசுறீங்களா பாஸ்?" என்றவனின் வார்த்தைக்கு பிறகு ஆதித்யா அதைப்பற்றி கேட்கவே இல்லை.

ஆரம்பத்தில் அதைக் கேள்விப்பட்டு... திமிர் பிடித்தவன்... கொழுப்பு பிடித்தவன்... என்று அவனை திட்டி தீர்த்தவள்...
இப்பொழுது அவனின் செயலை நினைத்துப் பார்த்தால் ஏனோ பெருமையாக உணர்ந்தாள் சௌமியா என்னும் மியாவ்.

காலையிலிருந்து அலுவலகத்திற்கு கிளம்பாமல் லேப்டாப்பில் எதையோ பார்த்துக்கொண்டிருந்த அண்ணனின் அருகில் வந்து அமர்ந்தாள் மலர்.
தங்கையின் வருகையை உணர்ந்தாலும் அவளின் முகத்தை பார்ப்பதை தவிர்த்து விட்டு,
ஏதாவது வேலைக்கான வேக்கன்சி இருக்கிறதா?என்று பார்த்துக் கொண்டிருந்தான் மகேஷ்.

"என்ன அண்ணா இந்த வேலையையும் அந்தப் பூச்சாண்டியால போச்சா? அதான் நேத்து நான் வேலையில் இருந்து வரும்போது டென்ஷனா இருந்தீங்களா?" என்று கேட்ட தங்கையின் முகத்தை பார்க்காமலேயே....
"ஒரு பிரச்சனையும் இல்லம்மா அடுத்த வேலையை இன்னைக்கே ஏற்பாடு பண்ணிடுவேன்..." என்றான் மகேஷ்.

"அண்ணா இப்பவும் ஒன்னும் கெட்டுப் போகல... தயவுசெஞ்சு என்ன பத்தி கவலைப்படாம சுவாதி அண்ணி ...வானதி பாப்பா கூட போயிடுங்க. எனக்கு இப்போ வேலை இருக்கே... அப்பா அம்மா எனக்காக விட்டு வெச்ச இந்த வீடு இருக்கு.இதுவே போதும் ண்ணா என்ன நானே பார்த்துப்பேன்..." என்றாள் மலர் தைரியமாக...

தனக்காக யோசிக்கும் தங்கையை கனிவாக பார்த்த மகேஷ்,
"இதே அப்பா இருந்திருந்தா உன்னை இப்படியே விட்டு இருப்பாரா?" என்று அவன் தொண்டை கரகரக்க வருந்திய குரலில் மகேஷ் கேட்கவும்... மலரினால் வாயை திறக்க முடியவில்லை.

தங்கையின் வாடிய முகத்தை கவனித்தாலும், அதைவிடுத்து
"நேரம் ஆகிட்டுமா... சாப்டுட்டு ஸ்கூலுக்கு கிளம்பு..." என்று பரிவுடன் சொன்ன அண்ணனை பார்த்ததும் கண்கள் கலங்க அதை மறைக்க எழுந்து சென்றுவிட்டாள் மலர்.

அவனுக்காக தானே அவள் தன்னை தைரியம் உள்ளவளாக மாற்றிக்கொண்டதே!!! இப்பொழுது தன் அண்ணனின் முன் அழுதால் ஏற்கனவே சோர்ந்திருக்கும் அவனின் நிலை? என்ன ஆவது அவனுக்கு பக்க பலமாக இருக்க வேண்டியது தனது கடமை... என்று உறுதி எடுத்தவள் தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்துவிட்டு பணிக்கு கிளம்பலானாள்.

மலர் பி எஸ் சி முடித்து விட்டு பிஎட் பண்ணி இருந்ததால்... அவளுக்கு எளிதாக பக்கத்திலிருந்த புகழ்பெற்ற பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்துவிட்டது. கடந்த நான்கு மாதங்களாக அங்கு தான் பணிபுரிகிறாள்.

சின்ன சிறுவர்களை பார்த்து அவர்களுடன் பேசி... பழகி ...மகிழ்ந்து அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது கூட இன்பமாக இருந்தது அவளுக்கு... நடந்ததை நினைத்துக்கொண்டே தங்கை முடங்கி விடக்கூடாது என்று நினைத்த மகேஷும் மலர் வேலைக்கு செல்வதை தடுக்கவில்லை.

வானதி கூட அங்குதான் Pre.K.G சேர்ந்திருந்தாள். எதேச்சையாக மலரை பார்க்க நேர்ந்தாலும் பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓடி விடுவாள். சுவாதி ஏதோ தன்னை பற்றி தவறாக சொல்லி வைத்திருக்கிறாள் என்பது மட்டும் மலருக்கு புரிந்தது. இல்லையென்றால் அத்தை அத்தை என்று காலை கட்டிக் கொண்டு சுற்றும் குழந்தை திடீரென்று தன்னைப் பார்த்து ஓடாது என்பது அவளுக்கு நிச்சயம்...

சாப்பிட்டுவிட்டு இனி என்ன செய்வது யோசனையோடு வேலைக்கு கிளம்பிக் கொண்டிருந்த மலர் காலிங்பெல் சத்தத்தில் யோசனை கலைந்து வேகமாக சென்று கதவைத்திறந்தாள்.
வெளியே நின்றது நந்தன்...!!!

மலர் அதிர்ச்சி எல்லாம் ஆகவில்லை அவளுக்குத்தான் நேற்றே அவன் வந்தது தெரியுமே....

இளஞ்சிவப்பு நிற காட்டன் சாரியில் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்னை பார்த்தவளை சொல்லவண்ணா வருத்ததோடு பார்த்துக் கொண்டிருந்தவன்... அவளுக்குப் பின்னால் மகேஷ் வருவதை பார்த்ததும், "ஹலோ மகேஷ் சார்" என்றான்.

அவன் அன்றொருநாள் மொபைலில் தன் தங்கையை குறித்து தவறாக பேசியிருந்தால்... அவன் மேல் இன்னும் மனச் சுணக்கம் இருக்கத்தான் செய்தது. இருந்தாலும் வீட்டிற்கு வந்தவனை முகத்தில் அடித்தது போல் பேச மனம் வராமல் ஹலோ நந்தன் உள்ள வாங்க என்று சொன்னான் மகேஷ்.

மலர் வாயே திறக்கவில்லை... நந்தனை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே சென்றவள்...
தனது கைப்பையை எடுத்துக்கொண்டு ஹாலில் அமர்ந்து நந்தனுடன் பேசிக் கொண்டிருந்த அண்ணனிடம் வந்து,
"நான் கிளம்புறேன் அண்ணா லேட் ஆகிட்டு... சீக்கிரம் வேலை கிடைக்க ஆல் தி பெஸ்ட்" என்றுவிட்டு நந்தனை பார்க்காமல் விடுவிடுவென்று கிளம்பி வெளியே சென்று விட்டாள்.

மகேஷிடம் பொதுவாக பேசிக் கொண்டிருந்த நந்தனுக்கு, மலர் அவளது ஆக்டிவாவை உயிர்ப்பித்து கிளம்பும் சத்தம் தெளிவாகவே கேட்டது.

அவனது மனமோ...
"எதுக்கு ஆதித்யா வீட்ல இருக்காம இங்க வந்து இருக்கா?" என்று யோசனையில் மூழ்கியது...

தொடரும்.....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN