மண்ணில் தோன்றிய வைரம் 8

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாலை டிஸ்சார்ஜ் செய்தவுடன் சாருவை அவளது காரில் அழைத்து சென்றான் அஸ்வின். அவளை காரிற்கு அழைத்து வந்த விதமும் அவள் அமர்வதற்கு வாகாக டிக்கியில் இருந்த தலையணையை எடுத்துவந்து ஒழுங்குபடுத்தி கொடுத்ததிலும் அத்தனை கரிசனை தெரிந்தது.

எதற்கும் தேவைப்படும் என்று டிரைவர் டிக்கியில் எடுத்துவைத்திருந்த அந்த இரு சிறு தலையணைகளும் இப்போது சாருவிற்கு உதவியது. ஒரு தலையணையை அவளது வலக்கையை வைக்க வசதியாக அவளது மார்பிற்கும் வயிற்றுக்கும் இடைப்பகுதியில் வைக்க மற்றொன்றை தலைக்கு சாய்வாக வைத்தான். அவனது ஒவ்வொரு செயலிலும் தாயின் கரிசனத்தை கண்ட சாருவின் மனம் நெகிழ அது கண்ணீராய் உடைப்பெடுக்க தயாரானது.

ஒரு பெண் எவ்வளவு தான் மனவுறுதிவுடையவளாக இருந்தாலும் அன்பு என்ற வட்டத்திற்கு அவளது உறுதி சிதறி சின்னாபின்னமாகிவிடும். அந்த அன்பிற்காக தன் சுயத்தன்மையை கூட இழக்க முன்வருவாள். அவ்வாறிருக்கையில் இவ்வளவு நாட்கள் அன்பிற்காக ஏங்கி தவித்த சாருவிற்கு தனக்காக பார்த்து பார்த்து செய்யும் அஸ்வினின் சிறு செய்கை கூட அவளை நெகழச் செய்ய அதன் தாக்கமே அந்த கண்ணீரின் உற்பத்தி..
அவளது முகமாற்றத்தை கவனித்த அஸ்வின் அதை வேறு விதமாக புரிந்து கொண்டு

“என்ன செய்து சாரு? கை வலிக்கிறதா??? ஏன் கண்ணெல்லாம் கலங்கியிருக்கு” என்று கேட்க அவனை சமாளிக்கும் விதமாக

“கையை தூக்கும் போது லைட்டா பெயின் இருந்துச்சு. அதான் கண் கலங்கிருச்சி.. இப்போ ஒன்றும் இல்லை. நோ வொரிஸ்” என்று கூற அவளது கூற்றில் சமாதானமானவன் வேறெதும் தேவையா என்று விசாரிக்க அவள் இல்லை என்று கூற கார் கதவினை அடைத்து விட்டு முன்புறம் ஏறி காரை எடுக்குமாறு டிரைவரை பணித்தார். கார் கிளம்பியதும் டிரைவர் “அம்மா இப்போ கை எப்படி இருக்கு??” என்று கேட்க

“இப்போ பரவாயில்லை அண்ணா..அண்ணா நீங்க சாப்பிட்டீங்களா??” என்று அவரிடம் கேட்க

“ஆமாம் மா. தம்பி அதுக்கு வாங்கும் போது எனக்கும் சேர்த்து வாங்கிட்டு வந்திருச்சி.” என்று கூற சாருவிற்கு அஸ்வினை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை. எந்த ஒரு சூழ்நிலையிலும் அனைவரையும் பற்றி தெரிந்து கொண்டு அவர்களது தேவைகளை நிறைவேற்றும் ஆளுமையை என்றும் போல் அன்றும் மனதினுள் பாராட்டினாள்.

இவ்வாறு வாகன நெரிசலினால் நீண்டுச்சென்ற பயணம் இரவு எட்டு மணியளவில் அஸ்வினின் வீட்டை அடைந்ததும் நிறைவடைந்தது. கார் சத்தம் கேட்டதும் வெளியே வந்த சித்ரா காரை நிறுத்தியவுடன் சாரு இறங்க உதவி செய்த அஸ்வின் அருகே சென்று தன் பங்கு உதவியை செய்தாள்.

சாருவை உள்ளே அழைத்து வந்த சித்ரா அவளை கவியின் அறைக்கு அழைத்து செல்ல அஸ்வின் அவர்களை பின்தொடர சித்ராவோ

“ கண்ணா சாருவை நான் பார்த்துக்கிறேன். நீ போய் பிரஷ் ஆகிட்டு சாப்பிட வா” என்று பணித்துவிட்டு செல்ல வேறு வழியின்றி அஸ்வின் தன்னறை நோக்கி சென்றான். ரிப்ரெஷ் செய்துவிட்டு வெளியே வந்த அஸ்வின் சாருவை பார்த்து டாக்டர் கொடுத்த மாத்திரைகளை வழங்கும் பொருட்டு அவள் இருந்த கவியின் அறைக்குள் நுழையும் முன் அறைக்கதவை தட்ட கதவை திறந்த சித்ரா

“என்ன கண்ணா சாருவை பார்க்க வந்தாயா?? இப்போ தான் உடை மாற்ற வைத்து படுக்க வைத்துவிட்டு வந்திருக்கேன் கண்ணா... ரொம்ப களைப்பா இருக்கு தூங்கட்டுமானு கேட்டா. இரும்மா கொஞ்சம் சாப்பிட்டு படுக்கலாம்னு சொல்லிட்டு வந்திருக்கேன். டாக்டர் மாத்திரை குடுத்ததா சொன்னியே..மாத்திரை எல்லாம் எங்க கண்ணா??” என்று கேட்க

“அதை கொடுக்க தான் வந்தேன் சித்தி. வருண் எங்க சித்தி?” என்று தான் கொண்டு வந்திருந்த மாத்திரையை கொடுத்துவிட்டு வருணை பற்றி விசாரிக்க

“ நீ வருவதற்கு முதல் ஆபிஸ் கால் ஒன்று வந்தது. ரொம்ப அவசரம்னு அவனை வரச்சொல்லியிருக்காங்க.. எப்படி நீ வராம எப்படி போறதுனு யோசிச்சிட்டு இருந்தான். நீ இப்போ வந்துருவனு சொல்லி அவனை நான் தான் அனுப்பி வச்சேன். நீ வந்தவுடன் கால் பண்றதா சொன்னேன். கண்ணா நீ அவனுக்கு கால் பண்ணி சொல்லிரு.”

“சரி சித்தி நான் அவன்கிட்ட பேசுறேன்” என்றுவிட்டு அங்கிருந்து சென்றான் அஸ்வின். பின் இரவு உணவை முடித்துவிட்டு தன் சித்தப்பாவை நலம் விசாரித்துவிட்டு அவருடன் சிறிது நேரம் உரையாடிய வண்ணம் இருக்க அவருக்கு மாத்திரை கொடுப்பதற்காக வந்த சித்ராவிடம் சாருவை பற்றி விசாரிக்க அவள் உறங்கிவிட்டதாக சித்ரா கூற மேலும் சிறிது நேரம் அவர்களுடன் உரையாடிவிட்டு தன் அறைக்கு சென்றான் அஸ்வின்.

அறைக்கு வந்து தன் அழைபேசியுடன் படுக்கையில் விழுந்தவன் டேட்டாவினை ஆன் செய்ய பேஸ்புக் மெசென்ஜரில் அராத்து ஆனந்தி என்ற பெயரில் இருந்து செய்தி வந்திருப்பதாக நாட்டிபிகேஷன் வர அதனை ஓப்பன் செய்து பார்த்தவன் அதில் ஒரு ஆடியோ மெசேஜ் வந்திருக்க அதனை கேட்கும் பொருட்டு தன் செல்ப்பில் இருந்த ஹெட்செட்டை எடுக்க கட்டிலிருந்து எழுந்து சென்றான். அந்த பெயரை பார்த்தவுடனே அது இன்று காலை தன்னுடன் பேசிய பெண்தான் என்று அஸ்வினுக்கு உறுதியானது. காலையில் பேசியது போல் ஏதும் எக்கு தப்பாய் பேசி வாய்ஸ் மெசேஜ் அனுப்பியிருப்பாள் என்ற பயத்திலேயே அஸ்வின் தன் ஹெட்செட்டை எடுக்க சென்றான். ஹெட்செட்டை காதில் மாட்டியவாறு வாய்ஸ் மெசேஜை ஆன் செய்ய அது

“ஓய் ரௌடிபேபி... என்னடா பாதியிலே ஓடி போய்ட்டா.. உன்னை மண்டபம் முழுக்கா தேடுனேன். நீ ரொம்ப மோசம். சரி உன்னை மன்னிச்சு விடுறேன்... உன்னை ஏன்டா என் அத்தை இவ்வளவு அழகா பெத்து போட்டாங்க?? அந்த மண்டபத்தில் இருந்த எல்லா நொள்ளிக்கண்ணும் உன்மேல தான் இருந்துச்சி. ஒருபுறம் அதை பார்த்து பத்திகிட்டு வந்தாலும் மறுபுறம் என் ஆளு தான் அதுனு நினைக்கும் போது ரொம்ப பெருமையாவும் இருந்துச்சி. ஆனாலும் நீ இவ்வளவு அழகா பொறந்து தொலைச்சிருக்கக்கூடாது. ஆளை தூக்குறடா நீ.... ஓகோ ஓகோ நீ கடுப்பாகுறது புரியிது... மிச்சத்தை நாளைக்கு பேசிக்கலாம்.. குட் நைட். ஸீவீட் டிரீம்ஸ். லவ் யூ டா ரௌடி பேபி “என்று விட்டு ஒரு நீண்ட முத்தத்துடன் நிறைவடைந்திருந்தது அந்த வாய்ஸ் மெசேஜ். அதை ஆப் செய்து மொபைலை ஓரமாக வைத்தவன் கண்களை மூடினான்.

கண்மூடியவனுக்கு உறக்கத்திற்கு பதில் அவளது பேச்சே ஓடிக்கொண்டிருந்தது.

சாரு அங்கிருந்த ஒரு வாரமும் அவளை ஒருவர் மாற்றி ஒருவர் அன்பாக கவனித்து கொண்டனர். நேரத்திற்கு உணவு , சிறு சுணக்கத்திற்கும் என்னவென்று பதறி ஓடிவரும் உறவுகள், ஜாலியான கலாட்டாக்கள், அன்பை அப்பழுக்கற்று வாரி இறைக்கும் குடும்பம் என்று அந்த ஒரு வார அஸ்வின் வீட்டு வாசம் அவள் இத்தனை நாட்கள் இழந்திருந்த சந்தோஷத்தை ஒட்டு மொத்தமாக வழங்கியது. அந்த மகிழ்வை இன்னும் இரட்டிப்படைய செய்தது அஸ்வினின் அதிகப்படியான அக்கறை. காலையில் ஆபிஸ் செல்லும் முன் அவளிடம் நலம் விசாரிப்பதுடன் அன்றைய நாளுக்கான ஆபிஸ் வேலை சம்பந்தமாகவும் கலந்துரையாடிவிட்டு செல்பவன் இரவு உணவின் பின் மறுபடியும் நலம் விசாரிக்க வருவான். அப்படி வருபவன் கையில் ஏதும் புத்தகம் அல்லது பொழுது போக்குடன் தொடர்புடையதாக பொருட்கள் இருக்கும். அவனது வீட்டினர் இருக்கும் போது பொழுது போக்கு தேவையில்லை என்று தெரிந்த போதிலும் அவன் அவ்வாறு அவளுக்கென்று வாங்கும் போது ஒரு மனநிறைவு அவனுள் ஏற்படும்.
அந்த காரணத்திற்காகவே தினமும் ஏதேனும் வாங்கி வந்து கொடுப்பான். கவி மற்றும் மாதேஷ் வரும் வரை சித்ராவின் அன்புக்கட்டளையின் பேரில் ரூமினுள்ளேயே இருப்பவளுக்கு அது பெரும் உதவியாகவே இருந்தது. அதனால் அவன் வாங்கி வருபவற்றை விருப்புடனே வாங்கிக்கொண்டாள். எப்போதும் வேலை வேலை என்று ஓடுபவளுக்கு இந்த ஓய்வில் விருப்பமில்லாத போதிலும் அஸ்வினின் வீட்டிலிருப்பதால் சித்ராவின் பேச்சினை மதித்து ஓய்வே தன் முழு நேர தொழில் என்று இருந்தாள். அவளை ஹாஸ்பிடல் அழைத்து சென்று வரும் சேவையையும் அஸ்வின் தன் வசமே வைத்திருந்தான். என்ன தான் வேலை நெருக்கடி இருந்தாலும் சரியான நேரத்திற்கு வந்து சாருவை அழைத்து சென்று விடுவான். இவ்வாறு அவனது ஒவ்வொரு செயலிலும் சாரு தன் அன்னையின் அன்பை உணர்ந்தாள். ஆனால் தான் அவ்வாறு உணர்வதை அஸ்வின் எப்போது உணர்ந்து அவளை தன்னில் பாதியாக ஏற்றுக்கொள்வான் என்ற கேள்விக்கு அவளிடம் பதில் இல்லை.

இவ்வாறு அவளது நாட்கள் சென்றிருக்க சாருவை நலம் விசாரிக்க வந்தனர் சஞ்சயும் அவனது தந்தை ராமமூர்த்தியும். ராமமூர்த்தி சாருவின் தந்தையின் பால்ய சிநேகிதர். சாருவின் தந்தை இறந்த பின் ஆதரவற்று நின்ற சாருவையும் தொழிலையும் அவரே பொறுப்பெடுத்தார். காலேஜ் படித்துக்கொண்டிருந்த சாருவிற்கு தொழில் பற்றி பாடம் நடத்தி தவழும் குழந்தைக்கு நடக்க கற்றுக்கொடுக்கும் அன்னையினை போல் அவளது ஒவ்வொரு முன்னேற்றங்களிலும் சறுக்கல்களிலும் உற்ற துணையாய் இருந்த அவளது அரசாட்சியின் இராஜகுரு அவரே. அவரை பின் தொடர்ந்து சஞ்சுவும் சாருவிற்கு ஆதரவாய் இன்றுவரை இருக்கின்றான்.

சாருவை நலம் விசாரித்த ராமமூர்த்தி
“சாரி சாருமா அன்று சஞ்சு உன்னை பார்க்க வந்தப்போ நானும் ஆண்டியும் ஊரில் இல்லை.அதான் வர முடியவில்லை “

“ஐயோ அங்கிள் எதுக்கு என்கிட்ட சாரி எல்லாம் சொல்லுறீங்க??? உங்களுக்கு வர முடியாட்டியும் நீங்களும் ஆண்டியும் தினமும் போனின் என்னை விசாரிச்சிட்டு தான் இருக்கீங்க... என் மேல உங்க இரண்டு பேருக்கும் எவ்வளவு பாசம்னு எனக்கு நல்லாவே தெரியும். அதோட நீங்க இரண்டு பேரும் ப்ரீதி அக்காவோட டிலிவரிக்கு போயிருந்ததால தான் என்னை பார்க்க வரவில்லைனும் தெரியும்.சோ நீங்க வொரி பண்ணிக்க வேண்டாம். குட்டி பையன் எப்படி இருக்கான்?? ப்ரீதி அக்கா எப்படி இருக்காங்க??” என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு அவர்களது குடும்பத்தின் புது வரவினை பற்றிய விசாரணையில் இறங்க ராமமூர்த்தியும் அவளுக்கு பதில் கூறத்தொடங்கினார்.

அன்றிரவு பால்கனியில் தன் போலி கணக்கில் இருந்து அஸ்வினிக்கு அழைத்தான் சாரு. இரண்டு மூன்று நாட்களாக அவனுக்கு தாறுமாறாக வாய்ஸ் மெசஜ் அனுப்பி அதற்கு அவனிடம் இருந்து எதிர்மறையான ரெஸ்பான்சை எதிர்பார்த்து சாரு காத்திருக்க அவனோ எந்தவித பிரதிபலிப்பையும் காட்டாமல் இருக்க அதனால் ஏமாற்றமடைந்த சாரு இன்று அவனிடம் பேசிவிட வேண்டும் என்ற முடிவுடன் அவனுக்கு அழைத்தாள் சாரு.

ஒரே ரிங்கில் போனை அட்டென்ட் பண்ண அஸ்வினிடம் பொறியத்தொடங்கினாள் சாரு.

“உன்னை எல்லாம் பெத்தாங்களா செஞ்சாங்களா டா??? மனிஷன்னா பீலிங்சை கொஞ்சமாவது வெளியில காட்டனும். இப்படி கல்லை முழுங்கினவன் மாதிரி குத்துக்கல்லாட்டம் இருக்கக்கூடாது... இவ்வளவு மெசேஜ் அனுப்பியிருக்கேனே ஒரு ரிப்ளை பண்ணியா?? அதை விடு அட்லீஸ்ட் பிளாக் சரி பண்ணியா?? எவனுக்கோ வந்த விருந்துங்கிற மாதிரி இருக்க... இங்க ஒருத்தி நம்மளை உருகி உருகி காதலிச்சிட்டு இருக்காளே ...அவளை பற்றி கொஞ்சமாவது உனக்கு அக்கறை இருக்கா..?.. ஒன்னு பேசு இல்லாட்டி திட்டு.. இப்படி எதையும் செய்யாம ஊமையடிகள் மாதிரி ஒரு ரியாக்க்ஷனும் இல்லாம இருக்க..... நீ என்ன நினைக்கிறனு யோசிச்சு யோசிச்சே எனக்கு பைத்தியம் புடிச்சிரும் போல... உனக்கு ரௌடி பேபினு பேர் வச்சதுக்கு பதிலா ரொபோனு பேர் வச்சிருக்கலாம். சீ அந்த பேரை வைத்து அதையும் அசிங்க படுத்த கூடாது. அதுக்கு கூட ஆடிபிசியல் இன்டலிஜன்ஸ் மூலம் இப்ப உணர்ச்சி குடுக்குறாங்க..”என்று அவனை தாறுமாறாக வசைபாட அவனோ சிரிக்கத்தொடங்கினான்.

“டேய் நான் இங்க தொண்டத்தண்ணி வற்ற கத்திட்டு இருக்கேன் நீ சிரிக்கிறியா டா?? ராஸ்கல் கையில் சிக்கும் போது உனக்கு இருக்குடா டேய் “ எனக்கூற அவன் சிரிப்பு இன்னும் அதிகமானது.

“போதும் டா ரௌடி. உனக்கு கொஞ்சம் கூட ரிப்ளை பண்ணனும்னு தோணலையா??? ப்ளீஸ்டா திட்டனும்னு தோனுனா கூட திட்டிரு. இப்படி ரிப்ளை பண்ணாம இருக்காத... மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு டா. நீ என்னையும் என்னோட லவ்வையும் புரிந்து புரிந்துக்கொள்ளவே மாட்டியா??” என்று தன் மொத்த காதலையும் குரலில் தேக்கி சாரு வினவ அஸ்வின் அமைதியானான்.

“சரி சரி விடு எப்படியும் நீ பதில் சொல்லமாட்டனு எனக்கு நல்லா தெரியும். எதை சரியா செய்றியோ இல்லையோ இப்படி கேள்வி கேட்டோன சைலண்டாவதை மட்டும் சரியா செய்ற... ஓகோடா ரொம்ப டயட்டா இருக்கு. நான் தூங்க போறேன். குட் நைட்.ஸ்வீட் ட்ரீம்ஸ்.. அப்புறம் இனிமே மெசேஜ் பண்ணா ரிப்ளை பண்ணு. இல்லைனு வை போன் ஹெங் ஆகுற அளவுக்கு மெசேஜ் அனுப்புவேன் பார்த்துக்கோ... சொன்னது புரியிதா.. ஓகே பாய்... லவ் யூ டா ரௌடி பேபி.. ஐயம் டெரிப்லி மிஸ்ஸிங் யூ..” என்றுவிட்டு வழமையாய் கொடுக்கும் அந்த நீண்ட முத்தத்தை கொடுத்துவிட்டு காலை கட் செய்த சாருவிற்கு அஸ்வினின் எண்ணத்தை பற்றி யூகிக்க முடியவில்லை. அவனிடம் நெருங்கும் வழி வேறெதும் இல்லாததால் என்ன செய்வதென்று தெரியாமல் முழி பிதுங்கி நின்ற சாருவை சித்ரா வந்துறங்குமாறு அழைத்தார்.
சித்ராவின் தரமான ஒருவார கவனிப்பால் இருவாரங்கள் கழித்து கழற்றமாறு அறிவுறுத்தப்பட்ட பாண்டேஜ் ஒரே வாரத்தில் கழற்றப்பட்டது. பாண்டேஜ் நீக்கப்பட்டதும் சித்ராவிற்கு இன்னும் தொல்லை கொடுக்கலாகாது என்று எண்ணி தன் இல்லம் திரும்பினாள் சாரு. அவள் புறப்படுவதாக கூறியதும் அதை மறுத்த அஸ்வினின் குடும்பத்தாரை சமாதானப்படுத்துவதற்குள் அவளுக்கு போதும் போதுமென்றாகிவிட்டது. ஆனால் அஸ்வினின் பங்கு இல்லாததே அவளை பெரிதும் வாட்டியது. அவள் புறப்படுவதாக கூறியதும் கார்சாவியை எடுத்து வந்து நின்றவனை கண்டதும் சாருவிற்கு உள்ளுக்குள் குபு குபு என்று எறியத்தொடங்கியது. மைன்ட் வாய்சிலேயே அவனை காய்ச்சி எடுக்கத்தொடங்கினாள் சாரு.

“கொஞ்சமாவது மண்டையில ஏதாவது இருக்கா அவனுக்கு. நான் போறேனு சொல்லுறேன். ஒரு பேச்சுக்கு சரி இருங்கனு சொல்லுறானா பாரு. நீ போனால் போதும் என்ற ரீதியில் ஆளுக்கு முதல் கார் சாவியோட வந்து நிற்கிறான். இந்த வீட்டுல இருக்கவங்களுக்கு உள்ள பாசம் கூட இந்த வளர்ந்து கெட்டவனுக்கு இல்லை. இவனை சைட் அடிக்க நான் இங்க தங்க ஓகே சொன்னா இந்த கிறுக்கு நான் எப்போடா கிளம்புவேன்னு பார்த்துட்டு இருந்திருக்கு... ஆண்டவா எதுக்கு இவனை என் கண்ணுல காட்டுன??? இந்த தத்தியை பார்த்து எதுக்கு எனக்கு லவ் வரவச்ச??? இப்படி எதையும் வெளிப்படுத்தாம இருக்க இவனை பற்றி தினம் தினம் யோசிச்சே எனக்கு பைத்தியம் பிடிச்சிரும் போல... இப்பவே இப்படினா இவனை கல்யாணம் பண்ண பிறகு என்னோட பாடு... நினைக்கவே கண்ணை கட்டுதே... சாரு நீ எல்லாம் பிசினஸ் வுமன்னு வெளியில சொல்லிறாதா.....இவனை சமாளிக்க நீ முக்கி முணங்குவது வெளியில தெரிந்தது பொளப்பு நாறிரும்.”என்று தன் மைண்ட் வாயிசில் அவளை அர்ச்சித்தது மட்டுமல்லாமல் தன்னையும் சேர்த்து வசை பாடினாள்.

அவள் தன் இல்லம் திரும்பிய இரு நாட்களுக்கு பின் அலுவலகத்தில் இருந்த போது சஞ்சய் அவளை அழைத்தான்.

“என்ன சஞ்சு போன வேலை முடியலையா??”

“இல்லை சாரு இங்க இழுத்தடிக்கிறாய்ங்க... இங்க வா காண்டிரக்ட் சைன் பண்ணலாம்னு சொல்லிட்டு அந்தாளு பிஸ்னர் டூர் போயிட்டாராம். ஆல்ரெடி இன்பார்ம் பண்ணலைனு கேட்டதுக்கு நாங்க பண்ணிட்டோம். உங்களுக்கு இன்பர்மேஷன் வரலையானு என்கிட்டேயே திருப்பி கேட்குறாய்க... ஒரு சின்ன பிராபிட்டுக்கு ஆசைப்பட்டு இவங்க பண்ணுற அட்டூழியத்தெல்லாம் பார்த்துட்டு இருக்க வேண்டி இருக்கு..”

“அப்போ கிளம்பி வந்துரு சஞ்சு..”

“வரத்தான் சாரு டிக்கட் எல்லாம் போட்டேன். இப்போ கால் பண்ணி அவங்க பாஸ் வந்துட்டாராம். நாளைக்கு வந்தா கண்ராக்ட் சைன் பண்ணலாம்னு சொன்னாங்க. சரி மறுபடியும் அலைய வேண்டாமேனு டிக்கட்டை கான்சல் பண்ணிட்டேன்.”

“அதுவும் சரி தான். அந்த காண்ரக்ட் நாமக்கு பிராபிட்டை மட்டும் தராது. அதோட அடிஷனலா நம்மளோட பிஸ்னசை வேல்ட் லெவலில் எக்ஸ்பான்ட் பண்ண இது ஒரு ஆப்பர்சுனிட்டியா இருக்கு. இந்த காண்டரக்ட் சைன் பண்ணி நாம சக்கஸ்புல்லா கம்பிளீட் பண்ணி குடுத்தோம்னா நிறைய வேல்ட் லெவள் கம்பனிஸ் நமக்கு டென்டர் குடுப்பாங்க.. இதோட இம்பார்ட்டன்ஸ் என்னை விட உனக்கு தான் நல்லா தெரியும்..”

“அது தெரிந்ததால் தான் அவங்க இவ்வளவு அலைக்கழித்தும் ஒன்றும் சொல்லாம இருக்கேன்.ஆனா பயபுள்ள என்னைக்காவது என்கிட்ட மாட்டுவான். அன்னைக்கு இருக்குடி அவனுக்கு”

“யாரு சஞ்சு அந்த பயபுள்ள??”

“வேற யாரு அந்த பிஏ தான். ரொம்ப ஓவரா தான் பண்ணுறான். என்னைப்பற்றி சரியா தெரியலை அவனுக்கு.... நான் பார்க்க பழம் மாதிரி இருக்கதால பச்சைப்புள்ளனு நினைச்சிட்டான் போல..எனக்கு கோபம் வந்தா கெட்ட வார்த்தை எல்லா மொழியிலும் தாறுமாறா வரும்னு பயபுள்ளைக்கு தெரியலை.. அதான் புள்ள ரொம்ப துள்ளுது”

“சரி கோபப்படாத.. இன்னைக்கு மட்டும் தானே அவனை சகிச்சிக்கோ...”

“ஓகே சாரு. நான் எதுக்கு கால் பண்ணேண்ணா இன்னைக்கு அந்த ரேகா இன்டஸ்ரிஸ் மானேஜரோட நமக்கு மீட்டிங் பிக்ஸ் ஆகியிருக்கு. நான் இன்னைக்கு வந்திருவேனு நினைச்சி இன்னைக்கு பிக்ஸ் பண்ணேன். பட் என்னால வரமுடியலை. சோ நீயும் அஸ்வினும் போய் அதை அட்டென்ட் பண்ணுங்க. அந்த டிடெய்ல்ஸ் எல்லாம் அஸ்வின் கிட்ட தான் இருக்கு. அவர்கிட்ட கேட்டு வாங்கிக்கோ.. அப்புறம் மீட்டிங் ஜெட்விங் ஹோட்டலில் ஈவினிங் செவன் ஓர் க்ளோக் பிக்ஸ் ஆகியிருக்கு... நீ அங்க டைமிற்கு போயிரு...”

“ஓகே சஞ்சு.. ஆனா ஏன் அந்த ஹோட்டலில் மீட்டிங் பிக்ஸ் பண்ணியிருக்க?? அது மோஸ்ட்லி லவர்ஸ் போகிற ரெஸ்டாரண்ட் ஆச்சே... அங்க இந்த மீட்டிங் கண்டாக்ட் பண்ண வசதிப்படுமா??”

“ஹாஹா... நான் அந்த இடத்தை பிக்ஸ் பண்ணலை சாரு.. அந்த மானேஜர் தான் பிக்ஸ் பண்ணார்.. நீ அவரிடம் போய் உன் சந்தேகத்தை கேளு..”

“சரி சரி நான் பார்த்துக்கிறேன். நீ உன் வேலையை முடித்துவிட்டு சீக்கிரம் வந்து சேரு.. உன்கிட்ட நான் நிறைய டிஸ்கஸ் பண்ண இருக்கு...”

“ஓகே சாரு... ஆனா இனிமே உனக்கு என்கிட்ட டிஸ்கஸ் பண்ண வேண்டிய தேவை இருக்காதுனு எனக்கு தோணுது..” என்று சஞ்சய் பொடிவைத்து பேச

“என்ன சஞ்சய் சொல்லுற?? நீ சொல்லுறது எனக்கு புரியவில்லை..”

“ஆ... ஒன்றும் இல்லை நான் வந்து பேசிக்கிறேன். பாய்” என்றுவிட்டு சஞ்சய் போனை அணைக்க அவனது பேச்சில் குழம்பிய சாரு என்னவென்று புரியாது யோசிக்க அவளது யோசனை அடுத்து வந்த அழைப்பினால் பின்தள்ளப்பட்டது. பின் அஸ்வினை அழைத்து அன்று அட்டன்ட் பண்ண வேண்டிய மீட்டிங் பற்றிய விவரங்களை கேட்டறிந்து கொண்டு அவள் போனை அணைக்க அஸ்வின் ஒரு விஷமப் புன்னகையுடன் போனை வைத்தவன் இரவு செல்லவேண்டிய மீட்டிங்கிற்கான வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN