யோகி  தாத்தாவை  கண்டதும் மயூரா  முகம்  மகிழ்ச்சியில்  பூரித்தது. ஐந்து  வருடங்களில்  பெரிதும்  மாறி யிருந்தாள். நேர்த்தியான  சிகை  அலங்காரம் , அம்சமான  உடை  தேர்வுகள் , நேர்  கொண்ட  பார்வை, பழைய  சுட்டி  மயூராவை மாயமாக்கிவிட்டிருந்தது.

வாஞ்சையாய்  அவள்  தலையை  வருடியவாறு "இங்க  இருந்தது  போதும்  மயிலே, அமிர்தம் உன்னை  அருமையா  கவனிச்சிக்கிட்டாலும், உன்  வீடு  அங்க  வெறுமையா  இருக்குது." நீ  இல்லாமல்  உன்  அந்தரனும்  மதனிகாவும்  கல்யாணம்  பண்ணிக்க  போறது  இல்லைனு  இந்த  ஐந்து  வருஷங்களை கடத்திட்டாங்க. உன்னை  பெத்தவங்களை  கவனிக்கற  பொறுப்பு  உனக்கு  இருக்குடா. உன்  காயங்கள்  ஆறி இருக்கும். வந்திடு  மகளே '' யோகி  தாத்தா  பேச  பேச  மயூரா  நெகிழ்ந்து  போனாள்.

அந்த  கடங்காரன் பண்ணின   தப்புக்கு  தன்  உறவுகளை  தண்டிக்கறதுல   என்ன  நியாயம்  இருக்கு? அவள்  மேல  உயிரை  வைத்திருக்கும்  அத்தையை தனியாக  அல்லவா  தவிக்க விட்டு  வந்திருக்கிறாள். தன்  உரிமைகளை  எதற்காக  இவனுக்காக  விட்டு  கொடுக்கணும்? மயூரா  யோசிக்க ஆரம்பித்தாள்.

தனக்காக  தங்கள்  சந்தோசங்களை  தியாகம்  செய்ய  துணிந்த மது  அந்தரன்  முகம்  நினைவில்  வந்தது. அவர்களுக்காக கண்டிப்பாக  வீடு  திரும்பத்தான்  வேண்டும்.

"நீங்க  போங்க  தாத்தா, அந்தரன்  மது  கல்யாண ஏற்பாடுகளை  கவனிக்க  சொல்லுங்க  தாத்தா. நான்  வந்திடுவேன் ''தாத்தாவின்  கைகளை பிடித்துக்  கூறினாள். தாத்தாவும்  வந்த  வேலை சுமூகமாய் முடிந்த  மகிழ்ச்சியில்  யோகி தாத்தா  கிளம்பினார்.

மயூரா  அமிர்தம் பாட்டியிடம் விஷயத்தைக்  கூறினாள். "போய்ட்டு  வா  கண்ணே, என்ன இருந்தாலும் அது  உன்  வீடு  இல்லையா?  நீ போகணும்மா.எங்களை  பத்தி  நீ  கவலைப்படாதே  மயூரா. நீ  வர்றதுக்கு  கொஞ்ச நாள்  முன்னுக்குத்  தான்  நானும்  அவரும்  இன்பவனம்  வந்திடலாம்னு  யோசிச்சோம். அதுக்குள்ள  அண்ணன்தான்  உன்னை  இங்க  கொண்டு வந்து  விட்டுட்டாரு.உங்கூடவே  ஐந்து வருஷங்கள்  அப்படியே  ஓடிருச்சு. நாங்களும்  உன்  கூடவே  வந்திடறோம்  மயூரா''பாட்டி  பேச  பேச  மயூரா  அவரைக்  கட்டிக் கொண்டாள்.

வெகு விரைவில்  மயூரா  தன்  குடும்ப உறுப்பினர்களை   சந்தித்தது மலைக் கோட்டை  சிவன்  கோவிலில்தான். ஐந்து வருடங்கள்  கழித்து  சிவன்  கோவில்  செல்கிறாள். நிழல் போல்  முந்தைய  நினைவுகள் அங்கே  கட்டவிழ்க ஆரம்பித்தது.

ஒவ்வொரு  பௌர்ணமியும்  அவளும்  அவனும் குடும்பமாய்  கூத்தும்  கும்மாளமாய் கூடி  கழித்த நாட்கள்.மலரும்  நினைவுகளாய் புகைப்  போல  கரைந்து சென்றது. அவர்களுக்கு  முன்னதாகவே  மயூரா  கோவிலுக்கு  சென்று விட்டிருந்தாள்.

தொலைவில்  தன்  அத்தை மாமா, அம்மா அப்பா, சித்தப்பா  சித்தி  மதனிகா  வருவதை  கவனித்தாள். அனைவரிடமும்  சில  மாற்றங்கள். அத்தை  இளைத்து விட்டிருந்தார்.அம்மாவின்  கண்களில்  அயர்ச்சி  தெரிந்தது.

அவர்கள்  பின்னால்  வந்து  கொண்டிருந்தது  ருத்ரன். கண்கள்  தன்னிச்சையாக  அவனை  நோக்க, மழிக்காத  தாடியும்  முடியுமாய் , புன்னகை  தொலைத்த  இறுகிய  உதடுகள், நிலையற்ற  பார்வையுமாய்  வந்தது அவன்தான். ஆனால்  அவன்  நடையில்  கம்பீரம்  குறையவே  இல்லை. கண்களில்  துளிர்த்த  கண்ணீரை  மயூரா  துடைத்துக்  கொண்டாள்.

அவர்கள்  உள்ளே  வந்து  இறைவனை  தரிசித்து  அர்ச்சனை  செய்யும்  வேலையில்தான்  மயூரா  தன்  அத்தை  அருகில்  சென்று  நின்றுக் கொண்டாள்.

ஒவ்வொரு  பெயராக  சொல்லி  அர்ச்சனை  செய்யும்  வேளை,  "ஆருஷி  மயூரா  தேவி, சதயம், கும்ப ராசி '' ஒலித்தது  அவள்  குரலே. ஏதோ  பிரமை  போல்  அவள்  அத்தை  அசையாது  நிற்க, மதனிகாதான் மயூராவை  கண்டு  ஆர்ப்பரித்தாள்.

"அத்தை  அக்கா  வந்திட்டா, அக்கா  வந்திட்டா, இங்க  பாரு  அத்தை''பவானியை  உலுக்கினாள்.

பவானி நிஜம்  உணர்ந்து,  "என்  கண்மணி  வந்திட்டியா? எங்கடி  என்ன  விட்டு  போய்ட்ட? என்  ராஜாத்தி  நல்ல  இருக்கியா  நீ?  ''மயூராவை  கட்டிப் பிடித்து  உச்சி  முகந்தார். கூடவே  சாம்பவியும் மயூராவை கட்டிக்  கொண்டார்.

ருத்ரன்  முகத்தில்  எந்த  சலனமும்  இல்லை. அவன்  பார்வைக்கு  மயூரா  வேறு மாதிரி  தெரிந்தாள். மாம்பழ  வண்ண  காஞ்சி  பட்டு சேலை , பின்னலிட்ட கூந்தல், அளவான  திருநீறு, நேர்  கொண்ட  பார்வை. சற்று  தள்ளி  நின்று  அவளையே  பார்த்துக் கொண்டிருந்தான்.

அவன்  கண்களை  ஒரு  விஷயம்  மிக  உறுத்தியது. மயூரா  இடது  கை  மணிக் கட்டில்  அந்த  பச்சை  இல்லவே  இல்லை. மயூராவும்  அவனை  ஒரு  பொருட்டாகவே  கருதவில்லை.அவ்வேளை  அங்கு  வந்த  யோகி  தாத்தா தான் "எதுவாக  இருந்தாலும்  வீட்ல  போய்  பேசிக்கலாம். எல்லோரும்  இப்ப  கிளம்புங்க வீட்டுக்கு.அதான்  உங்க  வீட்டு  மஹாலட்சுமி  வந்திட்டாளே. ம்ம்ம் ம்ம்ம்  கிளம்புங்க ''தாத்தா  அனைவரையும்  கிளப்பினார் .

சாம்பவி, பவானி, சாரதா மூவரும்  மயூராவிற்கு  ஆரத்தி  எடுத்து  வீட்டுக்கு  அழைத்தனர். ருத்ரனை  தவிர  அனைவரும்  அவளை  சூழ்ந்துக்  கொண்டு  கேள்வி  மேல்  கேள்வி  கேட்க  ஆரம்பித்தனர்.செய்தி அறிந்து  அந்தரனும்  அங்கு வந்து விட்டான்.

"எல்லோரும்  என்னை  மன்னிச்சிடுங்க. எனக்கு  அப்ப  என்ன  செய்யறதுனு  தெரியல.மனசு  முழுக்க  வலி , குழப்பம், எங்கயாச்சும்  போய்டணும்தான்  தோணுச்சு  அப்போ. யோகி  தாத்தா  தான்  வால்பாறைல  அவர்  தங்கச்சி  வீட்ல  தங்க  வெச்சாரு.நான்   கேட்டுக்கிட்டனாலதான்  நான்  எங்க  இருந்தேன்னு  உங்ககிட்ட  சொல்ளாமல்  மறைச்சிட்டாரு. ''

"அங்க  அவங்களுக்கு  குழந்தையில்லை.சிவராம்  தாத்தா  அமிர்தம் பாட்டி  என்னை  தங்கமாய்  பார்த்துக்கிட்டாங்க. அவங்களை  தனியா  விட்டுட்டு வர்ற மனசில்லை. இப்போ  கூட  அவங்களை இன்பவனத்தில்  தான்  விட்டுட்டு  வந்தேன். என்னால உங்க  எல்லோருக்கும்  கஷ்டம். பட்  என்னை  புரிஞ்சிக்குவீங்கனு  நம்பறேன் '' மயூரா  தெளிவாக  பேசினாள்.

"நீ  திரும்ப வந்ததே  போதும்  கண்ணே. நாங்க  தான்  உன்கிட்ட  மன்னிப்பு  கேக்கணும்.

உன்  துன்பத்தில்  எங்க  யாரையும்  பங்கு கொள்ள விடாது  தனியே  போய்ட்டு  இந்த  அஞ்சி  வருஷங்கள்  எங்க  நிம்மதியை  கூட  எடுத்துட்டு  போய்ட்டியேம்மா'' பவானி கண்  கலங்கினார்.

மயூரா  அவரை  அணைத்துக்  கொண்டாள். "இனி  யாருக்காகவும்  உன்னை  விட்டு  போகவே  மாட்டேன்  அத்தை. மயிலை  மன்னிச்சிடு. சரி  எனக்கு  ரொம்ப  பசிக்குது. சாப்பாடு  தர்வியா?  '', குழந்தை  போல  அவள்  கேட்கவும்  பவானி  அவளை  இறுக்க கட்டிக்  கொண்டார்.

தன்  கையால்  உணவு  பரிமாறி  மயூராவிற்கு ஊட்டி விட  மதனிகாவும்  சேர்ந்துக்  கொண்டாள். பின்  தனியே  அந்தரனை  சந்திக்க  அவன்  முகத்தின்  கோவச்  சாயலை  கண்டு  மயூரா  புன்னகையித்தாள்.

"என்ன  வக்கீல்  வண்டு முருகா, அஞ்சி  வருஷம்  என்  தொல்லையில்லாமல்  ஜாலியா  இருந்தியா? என்ன  மூஞ்சி  மூக்கு  எல்லாம்  சிவக்குவது?  ஒ  அய்யா  கோவமாய்  இருக்கீங்களா? உன்  மூஞ்சிக்கு  இது  செட் ஆகல நைனா '' மயூரா  கலாய்க்க  அந்தரன்  முகம்  சிவந்தது.

"நீ  எங்கிட்ட ஒன்னும்  பேச வேணாம். உனக்கு  உன்  மாமன்  மேல  காண்டுனா  அவன்  தலைல  நல்ல  பெரிய  கல்லை  போட்டு  கொல்லு. எதுக்கு  என்கிட்ட  சொல்லாமல்  என்னை  விட்டுட்டு  போன? அஞ்சி  வருஷங்கள் உன்னை  எங்க  தேடி  தேடி  அலைஞ்சேன்  தெரியுமா  கிராதகி. பெரிய  இவளாட்டும்  அந்த கிழவன்  கூட  போய்ட்டா '' ஐந்து  வருட  பரிதவிப்பு அவனை  அப்படி  பேச  வைத்தது.

மயூரா  எதுவும்  பேசாமல்  அவன்  தோள்  மேல்  சாய்ந்தாள்.அந்தரன்  அவளை அப்படியே  கட்டிக் கொண்டான்.

"சாரி  வண்டு முருகா, என் நிலைமை  அப்படி. உனக்கு  புரியும்தானே ''மயூராவின்  கண்கள்  கலங்கியது.

"நான்  உங்களுக்காகதான்  திரும்பி  வந்தேன்.எனக்காக  நீங்க  ரெண்டு  பேரும்  இவ்வளவு நாள்  வைட்  பண்ணியிருக்க கூடாது. நான்  வந்திட்டேன்ல, சீக்கிரம்  உன்  மதுவை  உனக்கு  கட்டி  வைப்பேனாம். இப்ப  கொஞ்சம்  சிரி  பார்க்கலாம் '' மயூரா  சிரிப்பதைப்  பார்த்து  அந்தரனும்  சிரித்தான். மறந்தும்  கூட  அவள்  ருத்ரனை  பற்றி  விசாரிக்கவே  இல்லை.

அவளுடைய  அறை  அவள்  விட்டு  சென்றது  போலவே  நேர்த்தியாக  இருந்தது. அனைவரும்  சென்று விட்ட நிலையில்  தனியாக  தன்  அறையில் மயூரா  அமர்ந்திருந்தாள். இனி  ருத்ரனை  தவிர்க்க  இயலாது. வரும்  நாட்களை  தைரியமாக எதிர்க்  கொள்ளும்  துணிவு  இப்பொழுது  அவளுக்கு  வந்துவிட்டது. அதோடு  மதனிகா அந்தரன்  கல்யாண ஏற்பாடுகள்  சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது.

தொடரும்..

Author: KaNi
Article Title: 🌹பாகம் 18🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.