உறவாக வேண்டுமடி நீயே 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உறவு – 4

யுகநந்திதாவிடம் சவால் விட்டுத் தன் அறைக்குத் திரும்பிய அபிக்கு இன்னமுமே அவள் மீதிருந்த கோபம் அடங்கவில்லை. “இவள் எந்த நோக்கத்தோடு என் கூட டை அப் வைக்க ஆர்வமா இருக்கிறானு தெரியல. என் கம்பெனியை இழுத்து மூட வேண்டும் என்ற எண்ணத்தை விட வேறு ஏதோ பிளான் இருக்கு அவளிடம். அதைத் என்னவென்று கண்டுபிடிக்க வேண்டும்.



உடனே யோசனை வந்தவனாக யாருக்கோ போன் செய்தவன் “நான் ஒருத்தர் பற்றி சில டீடெய்ல்ஸ் உங்களுக்கு மெயில் செய்கிறேன். ஆனால் எனக்கு அவங்களைப் பற்றி முழு டீடெய்ல்ஸ் வேண்டும். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எனக்கு வரவேண்டும். ஓகே.. சி யு லேட்டர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தவனுக்கு மேற்கொண்டு எதையும் செய்ய முடியாத அளவுக்கு இதே சிந்தனையாக இருக்க, தாய் முகம் பார்த்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும் என்ற எண்ணத்தில் மாலை சீக்கிரமாகவே வீட்டுக்குக் கிளம்பினான் அபி.



வீட்டிற்கு வந்தவனுக்குத் தாய் இல்லாதது அவனுக்குள் இன்னும் சோர்வைக் கொடுக்க, அவரைப் பார்த்தே ஆகவேண்டும் என்ற உந்துதலில் தாய்க்கு அழைக்கவும் அவர் அந்த குடியிருப்பிலிருக்கும் பூங்காவில் இருப்பதாகச் சொல்ல தாயைத் தேடிச் சென்றான் அவன்.



அபி இப்பொழுதிருக்கும் வீடு தனித்தனியே பல வில்லாக்கள் உள்ளடங்கிய குடியிருப்பு. வீடு தான் பாரம்பரியமே தவிர அந்த குடியிருப்பே குட்டி நகரம் போல் பார்க், திரையரங்கத்துடன் கூடிய மால், பெரியவர்களுக்கு காஸினோ, பில்லியர்ட்ஸ் மற்றும் குழந்தைகளுக்கு டேபிள் டென்னிஸ், கேரம், செஸ் போன்ற உள்விளையாட்டு அரங்கு முதல் கிரிக்கெட், ஃபுட்பால் போன்ற விளையாட்டு மைதானம், சூப்பர் மார்க்கெட், கோவில் வரை சகலமும் இருக்கும்.



மணிமேகலைக்குப் பூர்வீகம் திருச்சி. அவர் பிறந்து வளர்ந்தது என்னமோ வாடகை வீட்டில் தான். இப்போது வசதி வரவும் இதே திருச்சியில் பாரம்பரிய வீட்டைக் கட்டி வாழவேண்டும் என்று அவருக்கு ஒரு ஆசை வந்தது. அதற்கான வேலையில் அபி இறங்க, இந்த வில்லாவுக்கான விளம்பரத்தைப் பார்த்தவர் பாரம்பரிய முறைப் படி வீடும் மற்ற அனைத்தும் ஒரே இடத்தில் கிடைத்தது மட்டுமில்லாமல் சுற்றி ஆட்களும் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில் மணிமேகலை இந்த வீட்டை விரும்ப அதற்கு பிள்ளைகளும் சம்மதிக்க இங்கு குடிவந்தனர்.



பூங்காவுக்கு வந்தவன் காரை நிறுத்தி விட்டு உள்ளே வந்து தாயைத் தேட அவனைக் கண்டு கொண்ட மேகலை “அதோ வராங்களே, அவங்க தான் என் அபிப்பா!” என்று பக்கத்தில் அமர்ந்திருந்தவரிடம் சொன்னவர்



“அபிப்பா நான் இங்கே இருக்கேன்” என்று மகனை அழைக்க அவரை பார்த்தவன் தனக்கும் தாய்க்குமான பத்தடி இடைவெளியை இவன் கடக்க முற்பட, அதற்குள் அங்கு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது முயல் குட்டி ஒன்று “அபீஈஈஈபா....” என்ற கூவலுடன் தாவி வந்து அவன் காலைக் கட்டிக் கொள்ள, அந்த திடீர் தாக்குதலில் ஒரு வினாடி அதிர்ந்து தடுமாறியே போனான் அபி.



என்ன செய்வது என்று தெரியாமல் சுற்றும் முற்றும் யாராவது வருகிறார்களா என்று பார்த்தவன் யாரும் வரவில்லை என்றதும் வேறு வழியில்லாமல் காலைக் கட்டிய அந்த முயல் குட்டியைத் தூக்கிக் கொண்டான் அபி. தன் துருதுரு மான் விழியால் அவனைப் பார்த்தவள் அவன் அணிந்திருந்த கண்ணாடியைப் பிடுங்க முற்படவும் அவளிடமிருந்து காப்பாற்ற அவன் அதைக் கழற்றி மறைத்து வைக்கவும் அதில் கோபம் கொண்ட அந்த முயல் குட்டியோ உரிமையாக அவன் முகத்தை தன் இரு பிஞ்சு கைகளாலும் பிடித்து கன்னத்தில் பல் படாமல் உதட்டால் ஆத்திரம் தீரும் மட்டும் கடிக்க, இப்போது இன்பமாக அதிர்ந்தான் அபி.



இது எப்படி சாத்தியம்? பார்க்கும் முதல் முறையே ஒரு குழந்தை இப்படி ஒட்டிக் கொள்ளுமா? அதிலும் அபிப்பா என்ற விளிப்புடன்! அவன் ஒன்றும் குழந்தைகளைத் தூக்காமலோ பார்க்காமலோ இருந்தவன் இல்லை. ஆனால் இவள் தனியோ என்று உணர்ந்தான். அவன் நின்றது நின்ற படி இருக்கவும் மேகலையுடன் பக்கத்திலிருந்த பெண்மணியோ “மோளே! எந்தா இது? அங்கிளோட முகமெல்லாம் இப்படி எச்ச பண்ணிட்ட? பேட் கேர்ள்.. சாரி கேள்” என்று மிரட்ட



“நோ.... நோ... ட்ரிவேணி குட் கேர்ள். அபிப்பாவும் குட் கேர்ள்.. கரெக்டா?” என்று அவள் அவனிடமே கேட்க



“சமர்த்து குட்டி நீ! எங்கே நான் உன்னை பேட் கேர்ள் என்று சொல்லிடப் போறேனென்று என்னையும் குட் கேர்ளாக மாற்றிட்டியா?” என்று சொல்லிய படி அவன் அவளுக்கு கிச்சு கிச்சு மூட்ட, கிளுக்கி சிரித்தபடி அவனின் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் அந்த முயல் குட்டி.



“இவங்க பெயர் தங்கம். இங்க F எக்ஸ்டென்ஷன்ல தான் இருக்காங்க. இவ அவங்க பேத்தி திருவேணி. இந்த ஒரு மாதமாகத் தான் இவர்களைத் தெரியும். உன்னைப் பற்றி நான் பேசும் போது எல்லாம் அபிப்பா என்று சொல்லி சொல்லி அதைக் கேட்ட இந்த வாண்டும் உன்னை அபிப்பானு கூப்பிடுறா” என்று மேகலை அவனுக்கு விளக்கம் கொடுக்கவும்



“ஹலோ ஆன்ட்டி! நான் தான் அபிரஞ்சன்” என்று தங்கத்திடம் தன்னை அறிமுகப்படுத்தியவனிடம்



“அபிப்பாஆஆ! விளையாடப் போலாமா?” சாட்சாத் திருவேணி தான் அவன் தாடையைப் பிடித்துக் கேட்க



“மோளே! அங்கிளுக்கு டயர்டா இருக்கும். இவிட வா.. அம்மமா கூட விளையாடு” என தங்கம் அழைக்கவும்



“ம்ஊம்... வேண்ணாம் போ.. நா வர மாட்டேன்” என வேணி அடம்பிடிக்க



“இருக்கட்டும் ஆன்ட்டி. இன்றைக்கு ஆபீஸில் வேலை கொஞ்சம் குறைவு என்பதால் தான் சீக்கிரம் வீட்டுக்கு வந்தேன். சோ அப்படி ஒன்றும் நான் டயர்டாக இல்லை. நீங்களும் அம்மாவும் பேசிட்டு இருங்க.. நான் பார்த்துக் கொள்கிறேன்” அவன் எந்த பந்தாவும் இல்லாமல் சொல்ல



“விடு தங்கம்.. அவளுக்கு அவள் அப்பா ஞாபகம் வந்துவிட்டது போல” என்று மேகலையும் சொல்ல, அமைதியானார் தங்கம்.



“என்ன விளையாடணும்?” என்று கேட்டவனுக்கு அங்கிருந்த ஊஞ்சல் முதல் சீசா வரை கூப்பிட்டவளை எந்த சுணக்கமும் இல்லாமல் அந்த முயல் குட்டியுடன் சுற்றினான் அபி. பின் அவர்கள் காரை அனுப்பி விட்டு இவனே தங்கத்தையும் வேணியையும் அவர்கள் வீட்டில் விட்டவன் பின் தன் தாயையும் தன் வீட்டில் விட்டு விட்டு மனசும் உடலும் புத்துணர்வுடன் இருக்கவும் வெளியே கிளம்பி விட்டான் அபி.



இரவு....

“எனக்கு பால் புவா வேண்ணாம். கொளம்பு புவாதான் வேண்ணும் அத்த” என்று வேணி தன் மழலைக் குரலில் அடம்பிடிக்க



“என்ன இம்புட்டு புடிவாதம் புடிக்குற புள்ள? அது செத்த உரப்பா இருக்குனு சொல்லுதேன்.. கேக்க மாட்டேங்கிறவ! இரு அம்மா வரட்டும் சொல்லுதேன்” என்று போதும்பொண்ணு என்று பெயர் கொண்டவள் சலித்துக் கொள்ளும் நேரம் அவர்கள் போர்டிகோவில் கார் வந்து நிற்க அதிலிருந்து நந்திதா இறங்கினாள்



“ஹேய்..... அம்மா வந்தாச்சு!” என்று கூவிய படி வேணி டைனிங் டேபிள் மேல் ஏறி நின்று தலையாட்டி பொம்மை மாதிரி அவள் உடலை அசைத்து டான்ஸ் ஆடவும், போதும்பொண்ணுவுக்கு சிரிப்பு வந்தது.



“வாலு! கார் சத்தம் கேட்க்கையில உடனே உங்க அம்மா தான் வாராங்களா? என்னமோ ஒரு மாசம் வெளிநாடு போய் இன்றைக்கு தான் வர்றாப்ல குஷியா குத்தாட்டம் போடுறவ! எல்லாம் காலையில் பார்த்துட்டுப் போய் இப்போ வாராங்க.. அவ்வளவு தானே?” என்று அவள் நொடித்துக் கொண்டிருக்கும் பொழுது டைனிங் ரூம் பக்கம் பேச்சுக் குரல் கேட்க அங்கு வந்தாள் நந்திதா.



தாய் அருகில் வரவும் “அம்மாஆஆ!” என்று கத்தலுடன் வேணி அவள் கழுத்தைக் கட்டிக் கொள்ள மகளை அணைத்து உச்சியில் முத்தமிட்டவள் “இன்னும் சாப்பிடாம என்ன பண்ற பேபி?” என்று சிறு அதட்டலுடன் கேட்க



“ராணிமா! பால் சோறு சாப்பிடச் சொல்லுதேன், இவ குழம்பு கேக்கிறா” என்று போதும்பொண்ணு போட்டுக் கொடுக்கவும்



தாய் திட்டுவதற்கு முன் முந்திக் கொண்டு வேணியே “அம்மாஆஆ.... பால்புவா சாப்புட்டா நைட்டு தூங்கும்போது வயித்துக்குள்ள குட்டி குட்டிப் பூச்சி கடிக்குதும்மா. அதான் வேணானு சொன்ன” என்று அவள் சில தாளம் ராகம் பாவனையுடன் சொல்லவும் மகளின் சாமர்த்தியத்தைப் பார்த்து ‘என் செல்லம்’ என்று மனதிற்குள் கொஞ்சியவள் “இல்லை டா.. நிறைய சாக்லேட் சாப்பிட்டா தான் பூச்சி கடிக்கும். கொஞ்சமா பால் சாதம் சாப்பிட்டா ஒண்ணும் செய்யாது. நேற்று கீழே விழுந்து நாக்குல புண் வந்தது இல்ல? சோ அது சரியாகும் வரை பால் சாதம் தான் சாப்பிடணும்” என்று மகளுக்கு விளக்கியவள்



“ஏன் பொண்ணு! அம்மே சாப்பிட்டாங்களா?



“சாப்புட்டாங்க ராணிமா! செத்த கெறக்கமா இருக்குனு வெரசா அந்த BP மாத்திரய முழுங்கிட்டு தூங்க போய்ட்டாங்க”



“அவங்களுக்கு இப்போதெல்லாம் அடிக்கடி மயக்கம் வருது. செக் பண்ணா பெருசா எதுவும் இல்லையென்று டாக்டர் சொல்றாங்க. வேணியைப் பார்த்துக் கொள்ள ஆள் வைக்கலாமென்று சொன்னாலும் கேட்பதில்லை. பிறகு என்ன தான் செய்ய?” நந்திதாவின் குரலில் கவலை இருந்தது.



“எனக்கு செமஸ்டர் பரீட்சைக்கு இப்போ இருபது நாள் லீவ் தான் மா. கொழந்தையையும் அத்தையையும் நான் பார்த்துக்கிடுறேன். அப்பவும் அவங்களுக்கு இப்படியே இருந்துனா ஒரு ஆள் போட்டுட்டு அவங்களுக்கு ஓய்வு கொடுத்திடலாம். நீங்க ஏன் கெடந்து வெசனப்படுறீங்க?” என போதும்பொண்ணு தேற்றவும்



“அப்படி தான் செய்ய வேண்டும். அதற்காக நீ படிப்பதை விட்டுவிடாதே” சிறு கண்டிப்பு நந்திதாவிடம்.



“அதெல்லாம் நான் படிச்சிகிடுவேன் ராணிமா”



“ம்ம்ம்.... நான் ஃபிரெஷ் ஆகி வருகிறேன். அதற்குள் என் பேபி சாப்பிட்டா சமர்த்து. இல்லைறென்றால் அம்மா வந்து ஊட்டி விடுவேனாம்” என்று சொல்லி மகளின் நெற்றியில் முத்தமிட்டுச் சென்றாள் நந்திதா.



குளித்து முடித்து தங்கத்தின் அறைக்குச் சென்று அவரைப் பார்க்க, தூங்கிக் கொண்டிருந்தார் அவர். சத்தமில்லாமல் இவள் வெளியே செல்ல எத்தனிக்கும் நேரம் “ராணிமா! சாப்டீங்களா?” என்று வாஞ்சையுடன் அவர் கேட்கவும், அதில் நெகிழ்ந்தவள் திரும்பி வந்து அவர் கட்டிலின் அருகில் மண்டியிட்டு அமர்ந்து அவர் கையைப் பிடித்துக் கொண்டவள்



“உடம்புக்கு என்ன செய்யுது அம்மே? இப்போதெல்லாம் நீங்க ரொம்ப சோர்ந்து போறீங்க” அவர் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் இவள் அவரைப் பதில் கேள்வி கேட்க



“முதல்ல எழுந்து சேரில் உட்காருங்க ராணிமா” என்று கெஞ்சியவர் “பின்ன எல்லாம் வயசாகிடுச்சி இல்ல? அதான்.. வேறொண்ணும் இல்ல” விட்டேந்தியாக அவர் சொல்ல



“ஹாங்.. எந்தொரு வல்லிய பிராயம்?” இவள் முறைக்க



“நிங்களையே ஞான் வளர்த்தன். இப்போ நிங்கள பொண்ண வளர்க்குறேன். பின்னே வயசு ஆகாமலா இருக்கும்?” அவரிடம் கேலி இழையோடியது.



“என் பெண்ணோட பெண்ணை வளர்த்துட்டு இப்படி சொன்னா பரவாயில்லை. இப்போ சொன்னா?” என்று சலித்தவள் “நாம் ஆஸ்ரேலியா போய் வேற நல்ல டாக்டராக பார்ப்போமா?” இவள் அவர் தலையை வருடியபடி கேட்க



“ஹா... ஹா... அப்படி ஒரு பாக்கியம் கிட்டியால் ஞான் வேணாம்னு சொல்லுவனா?” என்று அவள் முன்பு சொன்னதற்குப் பதில் சொன்னவர் “அதொண்ணும் வேண்டா ராணிமா. நிங்கள் இவிட வந்த நோக்கம் வேறு. நிங்களோட பணியை முதல்ல முடிங்க. மற்றதெல்லாம் பின்னே நோக்கலாம்” என்று வெளிநாட்டுப் பயணத்துக்கு மறுத்தவர் “நிங்கள் இதுவரை சாப்பிடல இல்ல.. போய் சாப்பிடுங்க. இல்ல.. ஞான் வரட்டே?” என்று அவர் எழுந்திரிக்க முயல



“வேண்டாம் வேண்டாம்.. நீங்க படுங்க. நான் போய் சாப்பிடுகிறேன். நான் எடுத்திருக்கிற வேலையை முடித்த உடனே நாம் ஆஸ்ரேலியா போகிறோம். சரிங்களா?” என்று செல்லமாகக் கட்டளை இட்டவள் “நாளைக்கு டேனிஷ் பபுல் வரான். கூடவே டாக்டர் கேபிராவும் வராங்க. காலையில ஐந்து முப்பதுக்கு ஃபிளைட். நான் தான் போய் அவர்களைக் அழைத்துக் கொண்டு வரவேண்டும்” என்ற தகவலையும் அவள் சொல்ல



“பபுல் வரானா? அந்த பிள்ளையப் பார்த்து அஞ்சு வருஷம் ஆச்சு இல்ல? என்ன தான் வீடியோ கால்ல நோக்கியானாலும் நேரில் நோக்கர மாதிரி இல்ல. அந்த பிள்ளையும் தான் நிங்கள விவா...”



“அம்மே! எனக்குப் பசிக்குது. நான் சாப்பிடப் போறேன். நீங்க ரெஸ்ட் எடுங்க” அவர் சொல்ல வரும் வார்த்தையை முடிக்க விடாமல் இவள் இப்படியெல்லாம் பேசி கிளம்ப, போகும் மகளை மனதில் பல வலிகளுடன் பார்த்தார் அந்த தாய். ‘எப்போ இ விஷயம் எடுத்தாலும் பிடி கொடுக்கறது இல்ல. இப்போ அவன் வரான் இல்ல? இத்தவண பேசி முடிவு செய்யணும்” என்ற எண்ணங்களுடன் உறக்கத்திற்குச் சென்றார் அவர்.



சாப்பிட்டு முடித்தவள் போதும்பொண்ணு அறையில் தூங்கும் தன் மகளைச் சென்று தூக்க “ராணிமா பேபி என் கூடவே தூங்கட்டுமே?”



“வேண்டாம் பொண்ணு. நீ காலையில் எழுந்து படிக்கும் போது உன்னைத் தொந்தரவு செய்வா” என்றவள் அவள் மறுபடியும் பேச இடம் கொடுக்காமல் தன் அறைக்கு வந்து மகளைப் படுக்க வைத்து அவளை அணைத்தார் போல படுத்தவளுக்கு இன்றைய நினைவுகள் அனைத்தும் மனதில் ஓடியது. அதிலும் அபியுடனான சந்திப்புகளை நினைத்தவளுக்கு நீண்ட பெருமூச்சே பதிலாக கிடைத்தது. என்ன ஆனாலும் இந்த விஷயத்தை முடிக்காமல் விடக் கூடாது என்ற எண்ணத்தை மட்டும் தன் நெஞ்சில் ஆழ உழுதால் அவள்.



அதே நேரம் அங்கு படுக்கையிலிருந்த அபியும் இன்றைய இவர்களின் சந்திப்பையும் அதைத் தொடர்ந்த பேச்சுக்களையும் நினைத்தவனுக்கு உடம்பில் உஷ்ணம் பரவியது. அதே நேரம் மாலை சந்தித்த அந்த முயல் குட்டியை நினைத்ததும் அவனுக்கு வெல்வெட் மழையே உள்ளுக்குள் கொட்டியது.



“முழுக்க முழுக்க வெண்ணையைக் குழைத்து செய்த மாதிரி என்ன ஒரு மென்மை அந்த குழந்தை! அதிலும் கண்ணை உருட்டி உருட்டிக் கெஞ்சும் போது அப்படியே கருப்பு நிற டெடிபியர் தான் என் முன்னாடி நிற்கிறதோ என்று நினைத்தேன்” என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டவனோ அதே சிரித்த முகத்துடன் மறுநாள் நடக்கப் போவது தெரியாமல் உறங்கினான் தி கிரேட் பிசினஸ் மேன் அபிரஞ்சன். தாயால் வந்த உக்கிரத்தைத் தான் மகள் அவள் எச்சிலால் தனிய வைத்து விட்டாளே அவனுக்கு!



காலையில் எழுந்து குளித்து முடித்து நந்திதா கிளம்பி அவள் அறைக் கதவைத் திறக்கவும் வெளியே இருந்து தங்கம் கதவைத் தட்டவும் சரியாக இருந்தது. “நீங்க ஏன் அம்மே இப்போ எழுந்தீங்க?” என்று இவள் அதட்ட



“நிங்களோட அசைவுகள் எனக்குத் தெரியாதா? நிங்களே புறப்பட்டு பிறகு வேணி ஒற்றைக்கு தானே இருப்பா? அதான் வந்தது. நிங்களே புறப்படுங்க ராணிமா. ஞான் பார்த்துக்கான். அவிட உறங்கறதுக்குப் பதில் இவிட உறங்கப் போறேன். போய்ட்டு வரு” என்ற படி அவர் உள்ளே செல்ல அவரை இறுக்கி கட்டிக் கொண்டவள் கன்னத்தில் முத்தமிட்டு “இது தான் என்ற அம்மே!” என்று கொஞ்சிய படி விலகிச் சென்றாள் நந்திதா.



ஏர்போர்ட்டில் பபுல் அவளைப் பார்த்ததும் ஆர்ப்பாட்டமாக வந்து அணைத்துக் கொண்டவன் “ஐ மிஸ் யூ குயீன்!” என்று உணர்ந்து சொல்ல, “மீ டூ” என்றவள் “வெல்கம் டூ இந்தியா” என்று இருவரையும் வரவேற்றுத் தன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப் போகும் வழியெல்லாம் முன் சீட்டில் அமர்ந்து கதை பேசி வந்தான் பபுல்.



டேனிஷ் பபுல்! ஆஸ்திரேலியாவில் பிறந்து வளர்ந்தவன். தாய் வழி பாட்டி ஒரு தடவியல் நிபுணர். அவரின் நேர்மையால் தாய் தந்தையரை விபத்தில் இழந்தவன். நந்திதாவும் அவனும் ஒரே பள்ளியில் படித்ததால் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள். பாட்டி அவர் உத்தியோகம் காரணமாக எப்போதும் பிஸி என்பதால் தங்கம் தான் அவனுக்கு இன்னொரு தாய்.



டாக்டர் படித்தவன் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர் என்ற பெயரையும் எடுத்துள்ளான். அவனுடைய துறை சார்ந்த ஆராய்ச்சிக்காக ஐந்து வருடங்கள் ஒப்பந்த அடிப்படையில் கனடாவில் இருந்தவன் ஒரு வாரம் முன்பு தான் அந்த காலம் முடிந்து அதிலிருந்து வெளியே வந்தான். இதோ இப்போது நந்திதா இந்தியாவிற்கு அழைத்தாள் என்றவுடன் இந்தியா வந்து விட்டான்.



என்ன தான் அவன் வெளிநாட்டவனாக இருந்தாலும் இந்திய கலாச்சாரம் அவனுக்கு நிரம்பப் பிடிக்கும். அப்படி அவனுக்குப் பிடிக்கக் காரணமே தங்கமும் நந்திதாவும் தான். அதனாலேயே நந்திதாவை அதிகம் பிடிக்க, அந்தப் பிடித்தமே அவளை வாழ்க்கைத் துணையாக ஏற்க நினைத்தது. அதை நேரடியாகவே தங்கத்திடமும் நந்திதாவிடமும் சொல்லிவிட்டான்.




தங்கத்துக்கு விருப்பம். ஏன், அவன் பாட்டிக்குக் கூட இஷ்டம் தான். ஆனால் நந்திதாவுக்குத் தான் அவனை நண்பன் என்பதையும் மீறி அப்படி பார்க்க முடியவில்லை. அவளை எப்படியாவது மாற்றி விட முடியும் என்ற நம்பிக்கையில் இருக்கிறான். தங்கத்திற்கு அவள் ராணி என்பதால் அவனுக்கு அவள் குயீன்! இந்த முறை குயீனின் சம்மதத்தைப் பெறவேண்டும் என்ற சங்கல்பத்துடனேயே இந்தியா வந்து இறங்கினான் பபுல்.


epi - 3
 
Last edited:

Author: yuvanika
Article Title: உறவாக வேண்டுமடி நீயே 4
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN