என்னடி மாயாவி நீ: 8

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 8


கோபத்தில் விளைந்து உதித்தவன் போன்று காட்சியளித்த வர்ஷித்தின் முகம் கொஞ்சம் இறுக்கம் தளர்ந்தது, விஷ்ணுவின் தாய் தந்தை முகத்தை கண்டு. ஆம், இவ்வளவு சீக்கிரமா யார் வந்திருப்பது என்று யோசித்து கொண்டே வெளியே வந்தனர் இருவரும் கார் வந்த சத்தத்தை கேட்டு.


இருவரும் வாசற்படியில் நிற்க அவனோ இருவரையும் பார்வையில் பதித்துக்கொண்டே வாசலில் நின்றான். இப்போது அவனது முகத்தில் கோபம் மறைந்து கண்ணில் கண்ணீர் துளிகள் பூத்து கன்னத்தில் இறங்கி முகமெங்கும் சோகத்தின் வாசனையை பரப்பியது.

வசந்தாவின் கண்களும் சுப்பிரமணியன் கண்களும் வர்ஷித்தின் கண்களும் கலங்கி ஒருவரை ஒருவர் கண்களாலே தாங்கி நின்றனர். ஆதிகாவின் நிலை தான் பரிதாபம், இங்கு என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என தெரியாமல் பயத்தில் நடுங்கி நின்றாளே தவிர யாரையும் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. வர்ஷித் கண்களால் ஏன் இதை என்கிட்டே மறச்சிங்க என கேள்வி கேட்க, இந்த கேள்வியில் இருவரது முகமும் மனமும் குற்ற குறுகுறுப்பில் தலை கவிழ்ந்தது.

அவர்கள் தலை கவிழ்ந்ததை தாங்க முடியாமல் சட்டென்று ஓடி அவர்கள் இருவரையும் கட்டி ஆற தழுவிக்கொண்டான், அந்த அணைப்பு தான் இருக்கிறேன் என்பது போல் இருந்தது. மூவரும் கண்ணீர் விட்டு கதறினர். ஏன்மா நான் உயிரோட இருக்குறது உங்க கண்ணுக்கு தெரியலையா, இல்லை அந்த அளவுக்கு நான் மூணாவுது மனுசனா போயிட்டேனா என கேட்டவனிடம் வசந்தா, "என்னப்பா இப்படியெல்லாம் பேசுற, நீ எங்களோட புள்ள உன்ன எதுக்கு இப்படி நினைக்கபோறோம் என வர்ஷித்தின் முகத்தை வருடி கண்ணீரை துடைத்து கொண்டு அவனது முகத்தையும் துடைத்துவிட்டார். இந்த பதில் தான் வருமென்று அவனுக்கு ஏற்கனவே தெரிந்தது தான். ஏனென்றால், அவனை பெறாவிட்டாலும் தூக்கி வளர்த்த அன்னை ஆயிற்றே. தன்னிடம் விஷ்ணு இறந்த விஷயத்தை கூறாமல் இருந்த அவர்களின் மேலுள்ள கோபத்தினாலே தனது மனதை கல்லாக்கி கொண்டு இந்த கேள்வியை அவர்களிடத்தில் உதிர்த்தான்.

ஆதிகாவிற்கு இங்கு என்ன நடக்கிறது என யோசித்து தவித்து கொண்டிருந்தாள். இங்கு நடப்பதை அவளால் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது. முதலில் புரியாமலிருக்க பிறகு நடப்பதும் புரியாவிட்டாலும் இவன் தனக்காக பிரச்சனை செய்ய இங்கு வரவில்லை என்பதை புரிந்துக்கொண்டான். இவனுக்கும் இந்த குடும்பத்திற்கும் ஏதோ ஒரு பிணைப்பு உள்ளதை அவள் அங்கு அரங்கேறிய காட்சிகளை வைத்து யூகித்துக்கொண்டாள்.

சில நிமிடங்கள் கழித்து, வர்ஷித் ஜோடியாக வந்திருப்பதை கண்டு சோகம் மறந்து மகிழ்ச்சியாக அவனை வரவேற்றனர். ஏய் என்ன பாத்துட்டு இருக்க, போயிட்டு ஆரத்தி கரைச்சு எடுத்துட்டு வா நம்ம புள்ள இப்பதா முதல் முறையா கல்யாணம் ஆகி வந்திருக்கான் என அப்பா கூற அவரது மனைவியோ உள்ளே சென்று ஆலத்தோடு வந்தார். இருவரையும் ஒன்று சேர நிற்கவைத்து ஆரத்தி எடுத்து வலது காலை எடுத்து வைத்து உள்ளே போங்க என்று கூறி ஆழத்தை வாசலில் கொட்ட போனார் வசந்தா. வர்ஷித்தை குற்ற உணர்வு கொன்றது, விஷ்ணு இடத்தில் தான் இருக்கிறமே என்று.


உள்ளே நுழையும் போது அவர்களை சிரித்த முகத்துடன் வரவேற்த்தது பூமாலைக்கு நடுவில் பத்தி வாசனையில் உயிர்கொண்டு, உருவமற்று போட்டோக்குள் ஒளிந்திருக்கும் விஷ்ணுதான். அவனது முகத்தை இந்த ஒரு நிலையில் பார்த்தவுடன் திகைத்து நின்றனர். வர்ஷித்திற்கு சொல்ல முடியாத துயரமும் கம்பீர ஆணின் அகராதியில் இடம்பெறாத அழுகையும் தொற்றிக்கொண்டது.

இதை வெளியில் காட்டக்கூடாது. தான் வருந்துவது அப்பா அம்மாவுக்கு தெரிந்தால், அவர்களும் வருந்துவர் என நினைத்து தன்னை கட்டுப்படுத்தி கொண்டான். அவர்கள் இந்நாள் வரை தன்னை வளர்த்ததற்கு இனிமேல் தானே அவர்களின் துன்பத்திற்கு மருந்தாக வேண்டும், அவர்களை எந்த நிலையிலும் கை விடவே கூடாது. இனிமேல் அவர்கள் தான் நமக்கு எல்லாமே என முடிவெடுத்து ஹாலில் இருந்த சோபாவில் அமர்ந்து விஷ்ணுவை வெறித்து பார்த்து கொண்டிருந்தான். எங்கே போனாலும் ஒன்னா தானேடா போவோம். நீ சொன்னதை கேட்காம நான் வெளிநாடு போனதுக்கு நீ ஓரேடியா என்ன விட்டுட்டு போயிட்டியேடா என்மேல அவ்ளோ கோபமாட உனக்கு. கடைசி நேரத்துல உன்கூட இல்லாமா என்னோட சுயநலத்துக்காக நான் வெளிநாடு போயிட்டேனே என புலம்பி மனதினுள் நொந்துக்கொண்டான். ஆதிகவோ அன்று உயிரற்ற சடலத்தில் அவனது முகத்தை பார்த்தது, பிறகு இப்போதான் பார்க்கிறாள். அவன் ஏமாற்றிய வலியில் அவனது முகத்தையே பார்க்க மறுத்திருந்தாள். இப்போது, எதார்த்தமாக அவனை கண்ட பின்பு கல்லாகி போனாள்.

இருவரது எண்ண ஓட்டங்களை களைத்த படி, வசந்தாவோ இரண்டு பேரும் மேல போயிட்டு குளிச்சிட்டு வாங்க, சாப்பாடு எடுத்து வைக்கிறேன் என சொல்ல ஆதிகா அதற்கு சரிங்கமா என்றாள். வர்ஷித் பேசாமல் இருந்தலும் ஆதிகா கூறியதை கவனிக்க தவறவில்லை.

வர்ஷித்தும் ஆதிகாவும் பைகளை சுமந்து கொண்டு படியில் ஏறினர். வர்ஷித் அம்மா சொன்ன அறைக்கு செல்லாமல் அதற்கு அருகிலிருந்த அறைக்கு சென்றான்.

உள்ளே சென்றதும் அவளிடம் முகம் காட்டாமல் குளியறைக்குள் புகுந்து கொண்டான். ஆதிகாவிற்கு வர்ஷித்தின் கண்ணீர் சோகத்தை உண்டாக்கியது. அவன் குளித்து முடித்து வெளியே வந்தவுடன் அவளை நிமிர்ந்து பார்த்து அவுங்கள அம்மா அப்பாணு கூப்பிடதே அத்தை மாமானு கூப்பிடு, அவுங்ககூட நல்லா பேசு பழகு என கூறி முடித்தான். முதலில் அவனது சொல்லில் அதிர்ந்தவள் பிறகு நிம்மதி அடைந்தாள். இதுவும் அவுங்க சந்தோச படுவாங்க, அதுக்காக மட்டும் தான் என கூறி பட்டும் படாமல் பேசிய தனது கணவனை கண்டவள் ஆற்றாமையுடன் பார்த்துவிட்டு குளிக்கச்சென்றாள். பல விதமான யோசனையோடு அமர்ந்தவன் வண்டியில் நிதானமாக பயணிப்பவனுக்கு சாலை விபத்து என்பதை அவனுக்கு ஏற்றுக்கொள்ள இயலவில்லை. இதற்கு பின் ஏதோ ஒரு சூழ்ச்சி உள்ளது, அதை கண்டுபிடிக்கவேண்டும் என முடிவெடுத்தான்.

குழப்பத்தினுள் தன்னை சமன் செய்து கொள்ள சிகரெட்டை பற்ற வைத்து மொட்டை மாடிக்கு சென்றான். புகைப்பிடிப்பதில் தன்னிலை மறந்தவனின் மனமும் மொட்டை மாடி போல வெறுமையாக தோன்றியது.

கீழே ஹாலிலிருந்து அன்னையின் குரல் இவனை எட்டியதும் சிகரெட் துண்டை காலில் போட்டு மிதித்து விட்டு கீழே இறங்கினான்.

அப்பொழுது, ஆதிகாவும் அம்மாவும் இணைந்து ஒன்றாக பேசிக்கொண்டிருக்கும் காட்சியை கண்டான். வர்ஷித் சாப்பிட அமர்ந்ததும் வசந்தா ஆதிகாவையும் அவன் கூட அமர்ந்து சாப்பிட சொன்னார். அவளோ அதை மறுக்க, வர்ஷித்திற்கு ஆதிகா அம்மா பேச்சை மறுப்பதால் கோபம் வந்தது. அவன் பார்வையின் கோப மொழி சற்று புரிந்ததால், அவன் அருகில் சென்று அமர்ந்து உண்டாள். இவளிடம் கோபப்பட்டு கோபப்பட்டு அவனின் கோபத்தை ஆதிகா நன்றாகவே புரிந்திருந்தாள். ஆதிகா அம்மாவிடம் சகஜமாக அத்தை என பேச, வர்ஷித் முகத்தில் சிறு புன்னகையின் விளைவாக அவனது உதட்டில் வளைவு ஏற்பட்டது மனத்தில் நிம்மதியும் பரவியது. அதுகூட சில நொடி தான், அந்த அற்புத காட்சியை அவள் தவறாது கவனித்து இருந்தாள். அவனின் புன்னகை முகம் ஆதிகாவின் கண்ணிற்கு அழகாக தெரிந்தது. அவனின் சிரித்த முகம், அவன் அருகில் அமர்ந்து உண்பது என எல்லாமே அவளுக்கு புதிது.

ஆதிகாவிற்கு அதன் பிறகு விஷ்ணு எந்த வகையிலும் தொல்லை செய்யவில்லை. ஆனால், வர்ஷித்திற்கும் இந்த குடும்பத்துக்கும் என்ன தொடர்பு எனும் குழப்பம் மேலோங்கியிருந்தது. யாரிடம் கேட்பது என்று தெரியாமல் திசையை மறந்த குழந்தைபோல ஆனது அவளது நிலைமை.

சாப்பிட்டு முடித்தவுடன் வர்ஷித்தின் அருகே அவனது அம்மா வந்து, 'இந்த விஷயம் தெரிந்ததும் மாமாகிட்ட ஏதும் கோபப்பட்டியாப்பா' என கேட்க அவனோ, அப்புறம் கோப படமா,எவ்வளவு சுய நலம் அவருக்கு என்றான் வர்ஷித். அதற்கு அம்மா 'மாமாவிடம் கோபப்படாதப்பா, நான்தான் அவரிடம் உன்கிட்ட எதுவும் சொல்லக்கூடாதுணு சொன்னேன் என்றார். வர்ஷித் ஏன்மா இப்படி பண்ணீங்க என கேட்டதுக்கு, 'உனக்கு தெரிஞ்சா நீ கல்யாணமே பண்ணிக்க மாட்ட, நீயே இப்பதா சம்மதம் சொல்லிருக்க நீயும் என்னோட புள்ள தான உன்னோட கல்யாணம்னா அது எனக்கும் சந்தோசம் தான அதான் சொல்லல என்றார் அவனது அம்மா. சொன்ன மறுநொடி, வர்ஷித் அவரது மடியில் படுத்து கண்ணீர் சிந்தினான். அவன் இவ்வாறு துவண்டு அழுவதை கண்டு, ஆறுதலாக தலையை வருடி, என்னப்பா சின்ன புள்ள மாதிரி அழுதுகிட்டு இருக்க, நீ இப்போ ஒரு குடும்ப தலைவர், அது போல நடந்துக்கனும். எங்களுக்கு தான் நீ இருக்கியே வேற எதுக்கு நாங்க கவலை படப்போறோம் என கூறியவரிடத்தில், இந்த புள்ளய தான் நீங்க அப்போ மறந்துட்டீங்கதானே என கோபத்துடன் கூறி மடியிலிருந்து எழுந்து அறைக்கு சென்றான். வசந்தாவிற்கு தெரியும் இவனது கோபத்திற்கு ஆயுள் சிறிது என.

மேல அறையில் சென்று படுத்தவனுக்கு அன்று மாமா இவனிடம் கூறியதை நினைவு கூர்ந்தான். வர்ஷித்திடம் பெண்ணின் போட்டோவை அனுப்பிய போதே இங்கு அம்மாகிட்ட சொன்னீங்களா என தான் கேட்டான். அதற்கு மாமாவும் கூறினேன் என்றார். அதற்கு மறுநாள் தான் விஷ்ணு இறந்தான். இந்த செய்தியை வர்ஷித்திடம் சொல்லலாம் என அவனது மாமா குமாரசாமி முற்பட்ட போது வசந்தா தடுத்து விட்டார். திருமணம் நடந்த பிறகு தெரிய வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என வசந்தா கூறினார். அதனாலே, வர்ஷித்திடம் மாமாவும் கூறவில்லை. இவன் இந்தியா வந்ததும் எதிர்ப்பார்த்தது விஷ்ணு குடும்பத்தை தான்.

மாமாவிடம் விஷ்ணு குடும்பத்தை பற்றி கேட்டதற்கு குடும்பத்தோடு ஒரு வாரம் திருப்பதி சென்றிருப்பதாக கூறினார். தானும் அந்த குடும்பத்தில் ஒருவன்தானே என நினைத்தபோது அவரது மாமா ஏதோ நேர்த்திக்கடன்னு சொன்னங்க, உன்னோட கல்யாணத்துக்கு வரமுடியலையேனு ரொம்ப கவலை பட்டாங்க என கூறி அவனது சிந்தனையை தடை செய்தார். இதையெல்லாம் கேட்டு நம்பியிருந்தான், திருமணத்திற்கு முன் வரை. ஆனால், மணவறையில் ஆதிகாவை பார்த்தவுடன் அவனுக்கு சந்தேகம் மேலோங்கியது, இவள் விஷ்ணுவின் காதலி ஆயிற்றே என. இவர்களின் காதல் இவனை தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதால் இதை பற்றி இவன் வேறு யாரிடமும் கேட்கவில்லை, அவளிடமும் கேட்டுக்கொள்ளவில்லை. ஏனென்றால், அவள் வருத்தப்படுவாள் என்பதால். கடைசியாக, ஆதிகாவின் அப்பாவிற்கு காதல் பிடிக்காது இவர்களின் காதல் தெரிந்ததும் மறுத்திருப்பார். விஷ்ணு திருப்பதி சென்ற இந்த வாரத்தில் எனக்கு மணமுடிக்க திட்டம் போட்டிருக்கார் என தானே கற்பனையில் யூகித்துக்கொண்டான்.

பிறகு, திருமணம் முடிந்து, விஷ்ணு ஊருக்கு வந்ததும் இதைப்பற்றி பேசி இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்கவேண்டும் என முடிவெடுத்தான் இல்லாத விஷ்ணுக்காக உயிரற்ற இவர்களின் காதலுக்காக. சென்னை சென்று அவளை ஒதுக்கியத்துக்கும் இதுவே காரணம். விஷ்ணுவின் இறப்பு செய்தி கேட்டவுடன் ஏமாற்றத்தில் மூள்கிப்போனான். இப்போது, ஆதிகாவை நினைத்தே மிகவும் வருத்தப்பட்டான், இவளின் வாழ்க்கை இப்படி ஆகிவிட்டதே என. அவளின் விஷயத்தில் என்ன முடிவெடுப்பது என நினைத்து குழம்பினான். வெளியில் கம்பீரமாக தன்னை காட்டிக்கொண்டாலும் உள்ளே மிகவும் மனமுடைந்து போனான்.

அன்று இரவும் நெருங்கியது. ஆதிகா அறைக்கு செல்லும்போது வழி தவறி காலையில் வர்ஷித் கூட்டி சென்ற அறைக்கு அருகிலுள்ள அறைக்கு சென்றாள். உள்ளே சென்றவள், ஆ வென அறை முழுவதும் பார்த்தாள். இந்த அறை தான், வர்ஷித் விஷ்ணு இருவரும் தங்கியிருந்த அறை. காலையில் அம்மா கூறியும் அவன் அந்த அறையை தவிர்த்ததற்க்கு காரணம், அங்கு சென்றால் தன்னை கட்டுப்படுத்த முடியாது என்று.

ஏனென்றால், அந்த அறை முழுதும் விஷ்ணு, வர்ஷித் பொருட்கள் ஜோடியாகவே இருந்தது. சுவர் மீது இவர்களின் சிறுவயது முதல் இப்போதுவரை உள்ள எல்லா பருவநிலையையும் காட்டும் வகையில் இருந்தது நிறைய போட்டோக்கள்.இதை எல்லாம் பார்த்து, இவர்களின் பந்தம் என்ன என்பதை தெரிந்தே ஆகவேண்டும் என நோக்கில் கீழே சென்று அத்தையிடம் கேட்டாள். அவரும் ஆரம்பித்தார் இவர்களின் நட்பு கதையை....

வானவில் போல அழகாய், வண்ண கோலமாய் விரிந்த இவர்களின் நட்பை அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்.

நன்றி!
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 8
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN