பூவே: 01

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிலாமகள் பொட்டென உருக்கொண்டு நடுவானில் அரங்கேறி கருமையவளை பொலிவேற்றி கொண்டிருக்க, நட்சத்திர கூட்டம் பூத்து குலுங்கியது முன்னிரவு முடியும் நேரத்தில்.

மக்களை காக்கும் காவல் நிலையத்தில் நண்பர்களின் ஜீவனை வற்ற விட்டிருந்தான் அவன்.

சற்று நேரத்திற்கு முன், நால்வரும் மதுபான கடையிலிருந்து வெளிவர ஜோ, "மச்சா சீக்கிரம் வண்டி எடு, நேரா வீட்டுக்கு போ" என்றான் கண்டிப்புடன் மணிபார்த்துக்கொண்டே.

"இதோ மச்சான் கிளம்பிரலாம்" என கூறி புல்லட்டை முறுக்கியவன் ஜோ ஏறி அமர்ந்தவுடன் "டேய்! மச்சான் சரக்கு பத்திரம்" என எச்சரிக்க, "ம்ம் கிளம்பு கிளம்பு" என்றான் ஜோ ஏக கடுப்புடன்.

அருகிலுள்ள பைக்கில் இருவரும் ஏறி அமர, முன்னிருந்தவனிடன் கண்களால் கேட்க நொடியினில் அவனும் சம்மதம் தந்ததும், இரு இருசக்கரமும் அதீத வேகத்தில் சிறகின்றி நெடுஞ்சாலையில் பறவை என ஆனது.

வேகம் ஏற ஏற ஜோ, "மச்...சாசான்ன் தேவையில்லாத வேலை பாக்குற... மெதுவாவா வண்டி
ஓட்டுடா" என பல்லிடுக்கிலிருந்து கூறினான்.

அவன் கேட்பதாய் இல்லை. நிகித்தும் தன் முன்னிருந்த விக்னேஷிடம் "விக்கி நீயும் ஏன்டா அவன போல பண்ற... மெதுவா போயேன்டா" கூறினான், ஒருவார காலமாக சோகமாக கேட்பாரற்று சுற்றிக்கொண்டிருந்தவன்.

இருவரது வண்டியும் நான் நீ என போட்டி போட்டு சீற விக்னேஷ் பதிலளித்தான்.

"நிகி போலாம்டா எப்பவாவதுதானே இப்படி... என்ஜோய் த மொமெண்ட்டா" என விக்கி கூற

ஜோ, "மொமெண்ட் தானே போலீஸ் கிட்ட மாட்டினா தெரியும் தம்பி" என்றான் கோபம் கலந்த கிண்டலுடன்.

எந்த நேரத்தில் கூறினானோ அடுத்த பத்தாம் நிமிடம் ரோந்து பணி வந்த காவலரிடம் சிக்கி அவனது உற்ற துணை ராயல் என்பீல்டும் மதுபாட்டிலும் பறிபோனது.

இதோ, ஜோ முறைக்க காவல் நிலையத்தில் மூவரும் அமர்ந்திருந்தனர். ஆளுக்கு ஒரு கவலை இருக்க அவனது கவலை கேட்ட மூவரும் அதிர்ச்சி பின் கோபம் கொண்டனர்.

ஜோ, "இந்நேரம் பிரியாணி ஆறியிருக்கும்ல ம்ம்ம் ஐஸ்கிரீம் கேக் கூட உருகிட்டு இருக்கும்ல... ம்ச் போச்சே எல்லாம்" என மூவரையும் சிரிப்புடன் பார்க்க கொலைவெறி கொண்டனர் அவன்மீது.

ஆம். இன்று அவனது பிறந்தநாள். உடம்பைதானே மறுமுறை பிறக்க வைக்கமுடியாது, மனதை புத்துணர்வுடன் புதியதெம்புடன் புத்துயிர் கொண்டு பிறக்க வைக்க முடியுமே.

எப்போதும் போல அவனை மகிழ்விக்கும் நோக்கில் கேக் வெட்டி கொண்டாடலாம் என நண்பர்கள் அவனுக்கு தெரியாது என்ற நம்பிக்கையுடன் செய்தனர்.

இதில் இன்று என பார்த்து "நான் பிரியாணி செய்கிறேன்" என்றான் அவன். நல்லது சாப்பிட்டு கொண்டாடி அவரவர் வீட்ட பாக்க போகலாம் என மூவரும் முடிவு செய்திருக்க.

இவர்களின் திட்டமறிந்துதான் சிறுபிள்ளைத்தனமாக 'இன்னைக்குகூட என்கூட இருக்க கூடாதா?' எனும் கோபத்திலே தாமதமாகட்டும் என்றே மூவரிடமும் "டேய்! நம்ம சேந்து சரக்கடிச்சி ரொம்ப நாள் ஆச்சுல இன்னைக்கு வாங்கலாம் குடிக்கலாம் என்ன" என அவன் கேட்க மூவருக்கும் மறுக்க முடியவில்லை அவனை கண்டு.

ஜோவை சீண்டும் நோக்கிலே பைக்கில் கண்மூடித்தனமான வேகத்தில் போனது கூட.

ஆனால், இப்படி பிடிபட்டு உட்காருவோம் என அவனும் நினைத்து பார்க்கவில்லை. இதோ நினைத்ததை போல தாமதம் ஆகிவிட்டது மூவருக்கும். நள்ளிரவை நெருங்க நொடிகளும் பெருகி கொண்டிருந்தது. அவன் அப்படித்தான் தனக்கு சரி என பட்டால் சரி என்று விடுவான்.

விக்னேஷ், "எப்படிடா கண்டுபுடிச்ச? அதுவும் இன்னைக்கு சமையல் பார்த்துட்டு தானே இருந்த அப்புறம் எப்படி?" என ஆதங்கத்துடன் கேட்க, "அதுவா... நீங்க குசுகுசுனு ரகசியம் பேசுவீங்கடா. இப்போ மட்டுமில்ல எல்லா வருஷமும் தான். அப்பறம் கண்ணால பேசுவீங்க" என சொல்லி சிரித்தவன், "இதோ இருக்கானே ஜோ அவன் காதல்ல கூட இப்படி கண்ணால பேசுவானானு தெரியல... ஆனா இன்னைக்கு ரொம்ப பேசினான்டா" என கூறி சிரித்த அவன் "கொஞ்சம் வித்தியாசமா பண்ணுங்கடா, பண்ணாதே பண்ணாம" என அறிவுரை வேற இலவசமாக வழங்க, மூவரும் முறைத்து சிரித்தனர்.

ஜோ, "உண்மையிலே உன் பேருக்கு தகுந்த போல நீ கேடிதான்டா" என கூற அவனோ "நோ...கவிதீனா" என்றான் தன் முழு பெயரை.

சில கேடித்தனம் அவன் செய்ய ஜோ அவனது பெயரை சுருக்கி கேடி என கூப்பிட்டால், அவன் இல்லை என மறுத்து தன் பெயரை கூறுவது வழக்கம் தான்.

மூலையில் அமர்ந்த இவர்களின் பேச்சு நீள, அங்கிருந்த கான்ஸ்டபிள் ஒருவர் அதட்ட கப்சிப் என ஆகினர். ஜோ வாசலையே பார்த்திருக்க, தீனா ஜோவை யுகித்திருந்தான்.

அரை மணி நேரம் சென்றிருக்காது, வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக ஆறடி மனிதர் நாற்பத்திஐந்தாய் தொட்டிருந்த அவர் உள்ளே வர, அனைத்து காவலர்களும் மரியாதை நிமித்தம் எழுந்து நிற்க, நால்வரையும் ஒரு பார்வை பார்த்தவர். நேரம் சென்று எஸ்.ஐ மூர்த்தியிடம் பேச, இந்நால்வரும் எழுந்து நின்றனர்.

தீனா, "பாத்தியா என்னோட குருநாதவ. மாஸ் காட்டுறாரு நீங்கலாம் சிம்ப்லி வேஸ்ட்டா" என மூவரிடம் முணுமுணுக்க ஜோ, "ம்க்கும் அந்த குருநாதருக்கே தகவல் சொன்னது நானாக்கும்" என செய்தி போல சொல்லி காட்டினான். தீனாவிற்கும் அது தெரியும். அவன்தான் உள்நுழையும்போதே ஜோ ஏட்டு விடம் கண்காட்டியதை பார்த்தானே.

மறுநிமிடம் நால்வரும் வெளியில் நிற்க, தீனா குருநாதனிடம், "குருநாதா யூ ஆர் அல்வேஸ் கிரேட் குருநாதா!" என்றான் முகம் கொள்ளா ஆனந்தத்துடன்.

அவரோ தீனாவை முறைத்து ஜோவிடம் ஏதோ கேட்க, அவனும் சொல்ல அவர் மறுபடியும் முறைத்தார். தலையை தொங்க போட்டுக்கொண்டான். ஜோ இன்று அவனுக்கு பிறந்த நாள் என கூறியதால் அவர் ஒன்றும் சொல்ல வில்லை.

அவர் நால்வரையும் காரில் ஏற சொல்ல, தீனா தன் புல்லட்டை திரும்பி பார்க்க, "உன் பைக் எங்கையும் போகாது என் ஆளுங்க கொண்டு வருவாங்க, இப்போ நீ ஏறு" என கூற அவர் பேசிய மகிழ்ச்சியில் வண்டியில் ஏறினான்.

அவர் வந்து அவனை விடுவிக்க அவருக்கு என்ன பலன்? அது அவன் மீதுள்ள அன்பு என்றால் மிகையாகாது. அவரது களைப்பை பார்த்தவன், தன் தப்பை உணர்ந்தான். பழக்கத்தை மாற்ற நினைப்பானா?

அவர்கள் சென்ற பிறகு, கான்ஸ்டபிள் எஸ்.ஐயிடம் "பாத்திங்களா மூர்த்தி சார் சின்ன பசங்கனு நினச்சா பெரிய இடத்த பின்னாடி வச்சிட்டு அலையிறானுங்க" என புலம்ப, அதற்கு அவர் "ஒரு மணி நேரம் உட்காரவைச்சி கண்டிச்சி நானே அனுப்பிருப்பேன் இதுக்கு இவளோ அலப்பறை தேவையில்லை. இப்படி காப்பாத்துறதுதான் பசங்களுக்கு துளிர்விட்டு போகுது" என அவர் கூறி வேலையை பார்க்கலானார்.

காரில் அமைதியே நிலவியது. வீடுவர மூவரும் இறங்கியதும் ஜோ காரில் முன் சீட்டில் அமர்ந்த குருநாதனிடம் "ரொம்ப தேங்க்ஸ் சார் இந்த நேரத்திற்கு உதவி பண்ணீங்க" என்றான்.

அடுத்து தீனா அவர் முன் வந்து தலைநிமிராமலே "சாரி குருநாதா" என்றான். தீனா என அவர் அழைக்கவே நிமிர்ந்தான்.

முன் இருந்த கோபம் தீர்ந்து மகிழ்ச்சியுடன் தோளில் தட்டி பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூற, அவனும் மகிழ்ச்சி ஆனான். அவர் கிளம்ப தீனா வீடு நோக்கி நடந்தான்.

அவன் தங்கியிருந்தது விக்னேஷின் அத்தை வீட்டின் மேல் பகுதி தான். அதனால் நால்வருக்கும் அங்கு வந்து செல்வது சுலபமானது.

பொறியியல் முதல் வருடமே தீனா இவ்வீட்டிற்கு வந்திருந்தான் விக்னேஷ் மூலம். மூவரும் சூழ்நிலை காரணமாக இரவில் தாங்க முடியாமல் போனது. பகலில் கூட பைக்கோடு ஊர் சுற்றி தனிமையை துரத்துபவன், இரவில் அண்டும் தனிமையை வெறுப்பவன்.

'இவனுங்களும் இருக்க மாட்டானுங்க, அவளும் வரல ச்ச' என சலித்துக்கொண்டே படியேறினான்.

மேல சென்றவனின் அடுத்து ஒரு இருப்பது நிமிடம் நண்பர்களால் அழகானது. பிறந்தநாள் வாழ்த்து கூறி அன்பினை பரிமாறி, பாதி கட்டிகையை மாறி மாறி ஊட்டிக்கொண்டாலும் மீதியை முகத்தில் பூசி அழகு பார்த்து கொண்டனர்.

அறையையும் தங்களையும் சுத்தப்படுத்தி அமர பசி வயிறை கிள்ளியது. தீனாவின் கைப்பக்குவதை ஒரு கை பார்த்தனர்.

சாப்பிடுகையில் விக்னேஷ், "தீனா உனக்கு இந்த வருஷம் அமோகமா இருக்க போது பாரு... முதல்லே போலீஸ் ஸ்டேஷன்ல உக்காந்துட்டு வந்துருக்க.. பாக்கலாம்" என அவனை கலாய்க்க தீனா, "அது எப்படி போன யாருக்கு என்ன" என சலிப்புடன் கூறினான்.

ஜோ ஆரம்பித்தான். "மச்சான் கல்யாணம் பண்ணிக்கோடா வருஷாவருசம் சொல்றதுதான். எங்க துணை எவ்ளோ தூரம் வரபோகுது புரிஞ்சுகோடா" என கூற, ஒரு நிமிடத்தில் முகம் இறுகி இளகியவன்

"கொஞ்சம் நடைமுறைய யோசியேன். கல்யாணம் ஆகணும்னா செலவு பண்ண சம்பாதிக்கணும், நம்பிக்கைக்காக நல்ல பேமிலி பேக் கிரௌண்ட் வேணும், வெல் செட்டலோட இருக்கனும் இன்னும் நிறைய... இதுல ஒண்ணாவது என்கிட்டே இருக்கா? இல்ல. எல்லாம் இருக்குற பசங்களுக்கே இப்பலாம் பொண்ணு கிடைக்கமாட்டிக்கிது. எனக்கெல்லாம் நோ வே. அப்படியே கிடைச்சாலும் எனக்கு வேணாம்" என தன் விளக்கத்தையும் முடிவையும் ஒருங்கே கூறினான் தீனா.

விக்னேஷ் "லவ் பண்ணுடா பாத்துக்கலாம்" என கூற அவனை முறைத்த தீனா, "லவ்லாம் நேர விரையம்" என்றான் வேண்டா வெறுப்புடன்.

நிகித் உடனே, "நீ வேணா மோனிஷாவ கட்டிக்கோயேண்டா அவளுக்குத்தான் உன்ன பத்தி தெரியுமே" என கூற ஜோ தீனாவை ஆழப்பார்த்தான்.

தீனா, "அவளா ச்சே... அவலாம் பேமிலிக்கு ஆக மாட்டடா" என கூறி ஜோவை நிம்மதியடைய வைத்தான்.

கடந்த சில வருடமாக நடக்கும் இப்பேச்சிற்கு பதில் சொல்லியே தீனா கைதேர்ந்திருந்தான் என்றே சொல்ல வேண்டும். ஆனால் ஜோவிற்கு தீனாவின் பதில்கள் கோபம் மூட்டியது.

"தின்னுடா நல்லா தின்னு... அதானே கரெக்ட்டா பண்ற" என சாப்பிடும் தீனாவை திட்டிக்கொண்டே கைகழுவினான். கர்மசிரத்தையாக சாப்பிட்டு கொண்டே சாதாரணமாக "ஆமாடா நா செய்ற ஒரே நல்ல விஷயம் இதுதான்" என்றான் அவனும்.

இன்னும் கோபம் கொண்டவன், "நீ இத மட்டுமா செய்யுற, இன்னும் தேவையற்ற வேலையெல்லாம் பழகி வச்சிருக்க" என திட்டு தீனாவிற்கு என்றாலும் பார்வை விக்னேஷ் மீது இருந்தது.

"அது.... சும்மாடா" என மழுப்பியவன் "என்ன யாரு கேக்க போறா சொல்லு" என தீனா கேட்க, "கேட்டாலும் அடங்குறதுல சொல்லு" என கூறி தன்னை சமன் செய்தவன்,

"ஏதோ பண்ணுடா, எதுமே சரியாவே படல" என சலித்துக்கொண்டவன் பக்கத்து அறையை நோட்டமிட்டு "எல்லாம் வந்துருச்சா... சீக்கிரம் தச்சு முடி, இன்னும் பேசி வாங்கி தரேன்" என்றான் தீனாவை பார்த்து. அவனும் சரி என தலை அசைத்தான்.

மூவரும் விடைபெற கட்டியணைத்துக்கொண்டான். அவனை மாற்றும் பொருட்டு நிகித், "எங்கள சொன்னில நாளைக்கு நீ வித்தியாசமா ட்ரீட் கொடு என்ன" என கேட்க ம்ம் யோசித்தவன் "உங்களுக்கு மது எனக்கு மாது ஓகேவா" என ஜோவை கோபப்படுத்தி சிரிக்க, ஜோ பொய்யென தெளிந்தவன் தீனாவின் மண்டையிலே தட்டினான். அவனும் சிரிப்புடன் தலையை தேய்த்துக்கொண்டே நாளைக்கு பாக்கலாமென அனுப்பிவைத்தான்.

ஓய்ந்து பெருமூச்சுவிட்டவன் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து மெத்தையில் படுத்தான். மறுநிமிடம் கைபேசியின் தொடுதிரை மிளிர, மகிழ்ச்சியுடன் பச்சையை தடவினான்.

"தீனா அண்ணா பிறந்தநாள் வாழ்த்துக்கள்" என்றாள் விஸ்வதி. சிறுபுன்னகையுடன்

"தேங்க்ஸ்டாமா... உனக்கு எப்படி?" என கேட்க "இப்போதான் விக்னேஷ் ஸ்டேட்டஸ் பாத்தேன் அதான். ஹ்ம் எங்க வீட்டுக்கு மேல இருக்கீங்க நேர்ல பாத்து விஷ் பண்ண முடில... சரி சரி அண்ணாலாம் போயாச்சா?" என கேட்டாள்.

அவன் "போயாச்சு போயாச்சு" என சோர்ந்து கூற அவள், "போரடிச்சா கல்யாணம் செய்து அண்ணிய கூட்டி வாங்க... அஸ்வின்க்கு உங்க வயசுதான். நாளைக்கு அவனுக்கு பொண்ணு பாக்க போறாங்க" என இலவச செய்தி இணைத்து கூற, ஓஓ என்றதில் சோகம் இழையோடியதா? தெரியவில்லை அவனுக்கே.

"நீங்க எப்போதும் இதேபோல சந்தோசமா உங்க வாழ்க்கைய வாழனும்" என வாழ்த்துடன் அவள் தொடர்பை துண்டிக்க மகிழ்ச்சியாக உணர்ந்தான்.

வாட்ஸாப்பில் வாழ்த்து செய்தி குவிந்து கிடக்க, ஜோஸ்வந்த் பெயரில் ரொம்ப நேரம் டைப்பிங் என காட்டியது. ஜோ இவ்ளோ நேரம் என்ன 'டைப் செய்றான்' என யோசிக்கும் வேளையில் டொய் என்ற ஒலி எழுப்பி குறுஞ்செய்தி வந்தது.

"மச்சா...ஹாப்பி பர்த்டேடா எப்பவும் இதே போல நாம இருக்கனும்டா. எல்லாத்துலயும் துணையாக நான் இருப்பேன்டா ஆனா எல்லா நேரமும் இருக்க முடியுமா? தெரியல... பாத்தில நாங்க கிளம்பும்போது நீ எப்படி ஆகிட்ட. இதுக்குதான் உனக்குன்னு ஒரு பொண்ணு வந்தா சரியாகிடும்னு சொல்றது. இந்த வருஷமாவது உனக்கான தேவதை உன்ன தேடி வரனும்டா அகைன் ஹாப்பி பர்த்டே" என அவன் முடித்திருக்க.

முதலில் படிக்க படிக்க ஆர்வமும் சந்தோசம் கொண்டவன் கடைசி இருவரியில் கடுகடுத்தான்.

ஜோ ஆர்வமுடன் பதிலுக்கு காத்திருக்க, தீனா (.)முற்றுப்புள்ளியை மட்டும் அனுப்பினான் பதிலாக.

" ம் நீ கடைசில புல் ஸ்டாப் வைக்க மறந்துட்ட அதான் நான் வச்சேன்" என கூடுதல் தகவலும் அனுப்பினான். தன் நட்பின் நக்கல் புரியாதவனா அவன் சரி இன்று இவை போதுமென விட்டுவிட்டான் ஜோஸ்வந்த்.

இவனை மேலும் எரிச்சலூட்டவே போன் செய்தாள் மோனிஷா. ம்ச் என எடுத்தவன் "ஹாப்பி பர்த்டே பேபி" என குழைந்த அவளின் குரல் கேட்டு வெறுப்பானவன் நொடியில் ஹோல்டில் போட்டு ஜோவிடம் சாட்டில் என்னோட வயசு என்னடா என கேட்டான். அதை கேட்டு தலையில் அடித்துக்கொள்ளாத குறைதான் ஜோவின் நிலைமை. பதில் வந்ததும் இவளிடம் பேசினான்.

"ஹேய் இங்க பாரு எனக்கு 29 வயசாகுது இன்னும் பேபி பேபினு கொஞ்சாத" என காய்ந்தவனை அவள் சமாதானம் பேச, தீனா மிகவும் பேச்சை வளர்க்க விரும்பாமல் நறுக்கென பேசி துண்டித்தான். அவன் இப்படித்தான் என அவளும் விட்டுவிட்டாள். இருந்தும் அவனிடம் நிற்பது எதற்கு?

தனிமை தீர இறைவனிடம் வழி கேட்டு கோரிக்கை விண்ணப்பித்து அவன் உறங்க இரவும் வைகறையை எட்டியது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN