துளி 5

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மனம் தேடும் உன்னை.
இன்று தந்தேன் என்னை
நீங்காதென்னை,
இல்லை இல்லை

கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அஜய் அறையிலிருந்து வெளியேற அவன் பின்னே வேலைக்கார பெண்மணியும் சென்றுவிட அங்கு தேவ்வும் ஸ்ரவ்யாவும் தனித்துவிடப்பட்டனர்...
தேவ் முகத்தை மூடிக்கொண்டு நிலத்தில் முட்டி போட்டபடி அழுது கொண்டிருக்க அவன் அழுகையை கண்ட ஸ்ரவ்யா கட்டிலிருந்து எழுந்து அவனருகே வந்து நின்று அவன் தலைமீது கைவைத்து அப்பு என்றழைத்தாள்..
அவள் ஸ்பரிசம் உணர்ந்தவனுக்கு குற்றவுணர்ச்சி மேலிட அமர்ந்தபடியே அவள் காலை கட்டியபடி
“நான் பாவி சூட்டி... நான் பாவி...உன்னை பத்தி யோசிக்காமல் என்னுடைய சுயநலத்துக்காக உன்னை தனியா தவிக்கவிட்டுட்டு போயிட்டேன்... உன்னோட இந்த நிலைக்கு நான் மட்டும் தான் காரணம்... மன்னிப்பு கேட்கக்கூட முடியாத பாவியாகிட்டேன்.... என்னோட தப்புக்கு மன்னிப்பே இல்லை... எனக்கு தண்டனை கொடு சூட்டி ...உனக்கு பாவம் பண்ண கெட்டவன் நான்...” என்று வேதனையின் உச்சத்தில் தேவ் புலம்பிக்கொண்டிருக்க ஸ்ரவ்யாவோ
“அ..ப்...பு..” என்று மீண்டும் அழைக்க தேவ்வோ தன்னுடைய வேதனையிலேயே உழன்றபடியிருந்தான்...

அப்போது உள்ளே வந்த அஜய் அதை பார்த்து அவர்களருகே ஓடி வந்து ஸ்ரவ்யாவின் கன்னம் பற்றி

“பேபி.. நீ பேசுறியா?? உன்னால பேச முடியிதா??” என்று கண்கள் கலங்கி மகிழ்ச்சியுடன் கேட்க ஸ்ரவ்யா மீண்டும்

“அ..ப்..பு..” என்று ஒவ்வொன்றாய் ஒவ்வொரு எழுத்தாய் உச்சரித்தாள்..

அப்போது தான் தேவ்விற்கு அஜய் ஸ்ரவ்யாவிற்கு பேச்சு போய்விட்டது என்று கூறியது நினைவில் வர வாரிச்சுருட்டிக்கொண்டு எழுந்தவன் ஸ்ரவ்யாவின் கரம் பற்றி

“சூட்டி... ஒரு தடவை அப்புனு கூப்பிடுமா..” என்று கூற அவளும் ஒவ்வொரு எழுத்தாய் அவள் அவனை ஆசையாய் அழைக்கும் வார்த்தையை கூற தேவ்விற்கோ தலைகால் புரியாத அளவிற்கு மகிழ்ச்சி...

அவள் வலக்கையை உயர்த்தி அவளது புறங்கையில் முத்தமிட்டவன்

“சூட்டி..நான் உன்னோட அப்பு தான்....நான் தான் உன்னோட அப்பு..” என்று கண்ணில் நீருடன் கூற இவற்றையெல்லாம் பார்த்தபடியிருந்த அஜய் எதுவும் கூறவில்லை...

பின் ஸ்ரவ்யாவையும் தேவ்வையும் தனிமைப்படுத்திவிட்டு அஜய் வெளியேறினான்...

அஜய் வெளியேறிய அடுத்த கணம் ஸ்ரவ்யாவை இழுத்து அணைத்த தேவ் தன் இத்தனை நாள் பிரிவுத்துயரை தீர்த்துக்கொண்டான்..

கடந்து சென்ற ஒவ்வொரு நிமிடமும் அவனுள் பல எண்ண ஊற்றல்கள்...
ஸ்ரவாயாவோ தாய் சிறகினை கண்ட குஞ்சு போல் அவன் அணைப்பிலேயே அடங்கியிருந்தவள் அதன் சுகத்தில் அவன் மார்பிலேயே துயில் கொள்ள அவளை அணைத்தபடி அழைத்து வந்தவன் அவளை படுக்கையில் படுக்கவைத்து போர்வையை போர்த்திவிட்டான்...

அவள் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டவன் சில நிமிடங்கள் அவளையே பார்த்திருந்துவிட்டு வெளியே வந்தான்...

அப்போது அஜய் வெளியே வேலைக்கார பெண்மணியிடம் ஏதோ பேசிக்கொண்டிருக்க அவனை பாரத்து தேவ்

“அஜய்” என்றழைக்க அவனது அழைப்பை ஏற்று திரும்பிப்பார்த்த ஜெய் வேறு எதுவும் கூறாமல் எழுந்து

“வாங்க போகலாம்..” என்று கூற தேவ்வும் ஹெல்மட்டை எடுத்துக்கொண்டு அஜயுடன் வாசலிற்கு வந்தான்....
அஜய் ஏதாவது சொல்வான் என்று தேவ் அவன் முகத்தை பார்க்க அஜயோ தேவ்வை பார்ப்பதையே தவிர்த்தான்...

அமைதியாய் பயணம் தொடர இருவரும் தங்கள் பிளாட்டை வந்தடைந்தனர். அறைக்குள் செல்ல முயன்ற அஜயை தேவ் தடுக்க முயல

“தேவ்... நான் எதுவும் பேச விரும்பல... இப்போதைக்கு இதை பத்தி பேச வேண்டாம்...” என்று கூறிவிட்டு அஜய் அவன் அறைக்குள் சென்று அடைந்து கொள்ள இங்கு தேவ்வோ குற்றவுணர்ச்சியில் தவித்தான்.....

எதுவும் செய்யமுடியாத தன்னிலையை எண்ணி நொந்தவன் பால்கனியில் சென்று அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டான்...

உச்சி வெயில் சுள்ளென முகத்திலடிக்க அதன் உஷ்ணம் கூட உணராது அவனது புலன்கள் ஐந்தும் மறுத்திருக்க நினைவோ பழைய நினைவுகளில் சிக்கித்தவித்தது...

ஸ்ரவ்யா தேவ்வுடனும் அவனுடைய சகாக்களுடனும் தான் தன் பொழுதை ஓட்டினாள்.... காலேஜில் லெக்சர்ஸ் தவிர்ந்த மற்றைய நேரங்களில் மியூசிக் ரூமே கதியென்று கிடப்பவள் காலேஜ் முடிந்ததும் தேவ் வெளியே சென்றால் அவனுடனேயே செல்வாள்...

முதலில் அவள் நலம் கருதி வெளியே அழைத்து செல்ல மறுத்தவன் பின் தன் நண்பன் கபிலனின் மூலம் ஸ்ரவ்யாவை பற்றி தெரிந்து கொண்டவனுக்கு அவளை தவிர்க்கமுடியவில்லை.....

ஸ்ரவ்யாவின் பிறப்பிடம் எழில் கொஞ்சும் கண்டி மாநகரம்... அங்கு பல எஸ்டேட்டுக்களுக்கும் மற்றும் இன்ன பல தொழில் சாம்ராஜியத்திற்கும் அதிபதியான நாராயணமூர்த்தியின் ஒரே வாரிசு தான் ஸ்ரவ்யா... ஆனால் அது அவள் தோழி திவ்யாவை தவிர வேறு எவருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிகக்கவனமாய் இருந்தாள் ஸ்ரவ்யா...அதனால் திவ்யாவிடம் கூட தன்னை பற்றி யாரிடமும் வெளிப்படுத்தக்கூடாது என்று வாக்குறுதி பெற்றிருந்தாள்...

ஸ்ரவ்யாவின் பெற்றோர் இருவரும் ஸ்ரவ்யா சிறு வயதில் இருக்கும் போதே மனம் ஒத்துப்போகவில்லை என்று பிரிந்துவிட ஸ்ரவ்யா தன் அன்னையின் அரவணைப்பில் வளர்ந்தாள்... அவளுக்கு தந்தையின் பிரிவு தெரியக்கூடாது என்றெண்ணிய அவள் அன்னை அவளை ஹாஸ்டலில் சேர்த்துவிட அவளுக்கு தந்தையின் அன்போடு தாயின் அன்பும் கிட்டாத நிலை ஏற்பட்டது..... அன்பிற்கு ஏங்கியருந்தவளுக்கு திவ்யாவின் நட்பு சற்று ஆறுதலாய் இருந்தது... அதோடு அவள் படித்தது புகழ் பெற்ற கான்வென்ட் பாடசாலையொன்றில்... அங்கு ஹாஸ்டலில் மேற்பார்வையாக இருந்த கன்னியாஸ்திரி ஒருவர் இவள் தனிமையை உணர்ந்து ஸ்ரவ்யாவிற்கு பல விதங்களில் உதவினார்.. அவரின் வழிகாட்டுதலின் பேரிலேயே அவள் வெஸ்டன் மியூசிக் கற்றாள்.. அதோடு சர்ச்சில் கொயரிலும் பங்கு பற்றியவளுக்கு இசை பெரும் துணையாகிட தன் தனிமையை இசையின் துணையுடன் விரட்டியடித்தாள்..

இவ்வாறு இருந்தவளது வாழ்வை மறுபடியும் புரட்டிப்போட்டது அவளது அன்னையின் இறப்பு...
ஸ்ரவ்யாவின் அன்னை அவளது பதினான்காவது வயதில் வாகனவிபத்தில் இறந்துவிட மைனர் என்பதால் தந்தையின் நிழலின் கீழ் அவரது பங்களாவில் அவளது நாட்கள் நகர்ந்தது... பதின் பருவத்தில் இருந்தவளுக்கு தந்தையின் நடவடிக்கைகள் மனதளவில் பாதிப்பை உருவாக்கியது...

காலையில் அமைதியாக இருப்பவர் மாலையில் குடித்துவிட்டு வந்து வீட்டையே ரணகளப்படுத்திவிடுவார்... அவர் இரவு வரும் போது வேலைக்காரர்கள் கூட அவர் முன் நிற்க அஞ்சுவர்.. குடித்துவிட்டு வந்து அவர்பேசும் வார்த்தைகளை காதால் கேட்கமுடியாத அளவிற்கு கொடூரமாய் இருக்கும்...
ஒருமுறை ஸ்ரவ்யா ஹாலில் தன் கீபோர்ட்டில் ஏதோ பாடலை இசைத்தபடி அதை அனுபவித்து ரசித்து பாடிக்கொண்டிருக்க அப்போது குடித்துவிட்டு வந்த அவள் தந்தை

“யாருக்குடி நடுவீட்டுல கச்சேரி வச்சிட்டு இருக்க?? யாரை கவுக்க இப்போ பாட்டு பாடிட்டு இருக்க?? மொளச்சி மூனு இல விடல உனக்கு லவ்வு கேட்குதா?? இதுக்கு தான் தினமும் மியூசிக் கிளாஸ் போறியா?? நிஜமாவே மியூசிக் கிளாஸ் தான் போறியா?? இல்லை அப்படி சொல்லிட்டு எவன் கூடவாவது படுக்க போறியா?? அப்படினா இப்பவே சொல்லிரு.... நான் உன்னை இப்பவே தலை முழுகிடுறேன்.... உன் அம்மாக்காரி தான் இல்லாத ஆட்டம் எல்லாம் போட்டா... கடைசியில அல்பாயிசுல போயி சேர்ந்துட்டா.. நீயும் அவ மாதிரி கண்டவன் கூட மேய்ஞ்சிராத.. என்னால இன்னொரு அசிங்கத்தை சகிச்சிக்க முடியாது..” என்று ஒரு சிறு பெண்ணிடம் கூறக்கூடாத வார்த்தைகளால் அவளை அர்ச்சிக்க அவளுக்கு தந்தை என்ற உறவே வெறுத்துப்போனது...

அதைவிட தன் அன்னையின் ஒழுக்கத்தை அவர் வஞ்சித்ததை அவளால் ஏற்க முடியவில்லை.... ஆனால் தான் அவரை எதிர்த்து பேசுவதால் எதுவும் ஆகப்போவதில்லை என்று எண்ணியவள் உள்ளே செல்ல முயல

“கச்சேரி முடிச்சிட்டியா?? பாட்டு பாடி எவனையாவது வளைச்சிப்போடலாம்னு தானே கிளாசெல்லாம் போற???வயித்த தள்ளிக்கிட்டு வந்து நிக்கிறதுல அவ்வளவு ஆர்வமா உனக்கு?? சரி சரி நான் சொல்லுறதுக்கொன்னும் இல்லை... நீ பாடு மத்தவன் கூட படு... அதை பத்தி எனக்கு கவலை இல்லை. .. ஆனா அதை செய்யுறதுனுனா இந்த வீட்டுல இருக்காத..” என்று ஸ்ரவ்யாவின் தந்தை இன்னும் விசனமாய் பேச ஸ்ரவ்யாவிற்கோ அழுகை முட்டிக்கொண்டு வர தன்னறைக்குள் சென்று கட்டிலில் விழுந்தவளது மனம் பெரிதும் ரணப்பட்டிருந்தது.. அதன் பின் அவள் பாடுவதையே நிறுத்தியிருந்தாள்..
பாடுவதை நிறுத்தியவளுக்கு இசையின் மீது அவள் கொண்ட காதலை மறக்கமுடியவில்லை... அதனால் அவள் தந்தை இல்லாத சமயத்தில் அறையை பூட்டிக்கொண்டு சற்று நேரம் கீ போர்ட் வாசிப்பாள்.... மற்றபடி அனைத்தையும் நிறுத்தியிருந்தாள் ஸ்ரவ்யா...

இவ்வாறு தனிமையை தத்தடுத்தவளுக்கு துணையாய் மாறினான் தேவ்... அவன் நட்பாய் செய்யும் சிறு செயல் கூட ஸ்ரவ்யாவிற்கு பெரும் ஆறுதலாய் இருக்க அவனுடனேயே தன் அதிக நேரத்தை செலவழித்தாள்... முதலில் ஸ்ரவ்யாவின் ஒட்டுதலை பெரிதாய் கவனிக்காத தேவ் ஒரு நாள் எங்கோ தன் நட்புக்களுடன் வெளியே செல்லுவதாய் கூற ஸ்ரவ்யாவோ தானும் வருவதாய் கூறினாள்.. அன்று அவர்கள் செல்லும் இடம் சற்று பாதுக்காப்பில்லாததால் தேவ் மறுக்க ஸ்ரவ்யாவோ பிடிவாதம் பிடித்தாள்..
அவளது பிடிவாதத்தால் கோபமடைந்த தேவ்

“ஒரு தடவை சொன்னா உனக்கு புரியாதா?? நாங்க போற இடத்துக்கெல்லாம் உன்னை கூட்டிட்டு போக இயலாது... நீ நினைச்சதை செய்றதுக்கு இங்க நான் ஆள் இல்லை. எதுக்கும் ஒரு எல்லை இருக்கு...அதை புரிஞ்சி நடந்துக்கோ.... எப்பவும் என் பின்னால அலையிற வேலையை விட்டுட்டு உருப்படியாக ஏதாவது பண்ணு... சே.. மனுஷனுக்கு நிம்மதி வெளிய கூட போக முடியல..” என்று தேவ் கோபத்தில் கடிந்துகொள்ள அவனது பேச்சில் மனம் நொந்தவள் எதுவும் கூறாது கண்களில் நீருடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்....

அவள் நகர்ந்ததும் அவனருகே வந்த அபி
“டேய் பாவம்டா அவ... ஏன் அவகிட்ட அப்படி பேசுன?? பாரு அழுதுட்டே போறா...”

“பின் என்னடா.. எங்க போனாலும் கூடவே கூட்டிட்டு போனு பிடிவாதம் பிடிக்கிறா.. அதோடு எப்பவும் என் பின்னாடியே சுத்திட்டு இருந்தா பார்க்கிறவங்க அவளை தப்பா பேச மாட்டாங்களா... இவளுக்கு எதுவுமே புரியமாட்டேங்குது..அதான் அப்படி பேசுனேன்...”

“டேய் பாவம்டா...சூட்டி அதெல்லாம் நினைச்சிருக்க மாட்டா..” என்று அபி கூற அவர்களருகே வந்த கபிலன்

“பாவம்டா அவ.. அம்மா இல்லாத பொண்ணு... அப்பா கூடவும் பெரிசா ஒட்டுதல் இல்லை....” என்ற கபிலன் அவள் குடும்ப உறுப்பினர்கள் பற்றியும் அவர்களுக்கும் இவளுக்குமிடைய உட்பூசல்களை கூறியவனுக்கு அவளது குடும்பத்தின் பொருளாதார நிலை பற்றி தெரியாது..
கபிலன் திவ்யாவிடம் ஸ்ரவ்யா பற்றி விசாரித்த போது அவள் ஸ்ரவ்யாவின் பொருளாதார நிலையை மட்டும் கூறாது அவளது தற்போதைய நிலையை மட்டும் கூறியிருந்தாள்.. அதையே கபிலன் தேவ்விடம் ஒப்புவிக்க தேவ்விற்கோ குற்றவுணர்ச்சி மேலெழுந்தது....
அன்புக்காக மட்டுமே தன்னை சுற்றி வந்தவளை நோகடித்து விட்டோமே என்று வருந்தியவன் அடுத்தநாள் அவளை சமாதானப்படுத்தலாம் என்று எண்ணி வெளியே கிளம்பினான்...

ஆனால் ஸ்ரவ்யாவோ மூன்று நாட்களாய் மியூசிக் ரூம் பக்கமே வராமல் இருக்க அவளை தேடிச்சென்றான் தேவ்...
அவள் லெக்சர்ஸ் முடிந்து வெளியே செல்லும் போது வழிமறித்தவன்

“ஹேய் சூட்டி...என்ன மூணு நாளா ஆளையே காணோம்..” என்று தேவ் கேட்க ஸ்ரவ்யாவோ பதிலேதும் கூறாது விலகிச்செல்ல முயன்றாள்..
அவள் கரம் பற்றி தடுத்த தேவ்

“ஹேய் சாரிமா... அன்னைக்கு நிறை ரொம்ப பிடிவாதம் பிடிச்சதும் எனக்கு கோபம் வந்திடுச்சு... அதான் அப்படி பேசிட்டேன்... அன்னைக்கு எங்க கிளாஸ் மேட் ரஞ்சனோட பர்த்டே ட்ரீட்... பாய்ஸ் பாட்டினா கொஞ்சம் அப்படி இப்படி இருக்கும்னு தான் உன்னை கூட்டிட்டு போக முடியாதுனு சொன்னேன்... நீ அதை புரிஞ்சிக்காம பிடிவாதம் பிடிக்கவும் எனக்கு கோபம் வந்திடுச்சு.. அதான் அப்படி ஹார்ஸா பேசிட்டேன்... சாரிமா...” என்று தேவ் மன்னிப்பு கேட்க ஸ்ரவ்யாவோ தன் கையை அவன் கரத்திலிருந்து விலக்கிக்கொண்டவள் எதுவும் கூறாது விலகி நடந்தாள்..

தேவ்வோ மீண்டும் வழிமறித்து
“அதான் சாரி சொல்லிட்டேன்ல... மன்னிச்சிரலாமே... இனிமே இப்படி உன்னை ஹர்ட் பண்ணி பேசமாட்டேன்.. சரியா??” என்று கேட்க அவளோ எதுவும் கூறாது அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்....

இவ்வாறு ஒரு கிழமைக்கு மேலாக அவளின் காலில் விழாத குறையாக கெஞ்சி ஸ்ரவ்யாவை மலையிறக்கினான் தேவ்... அதன் பின் எங்கு செல்வதாயினும் அவளை தன்னுடனேயே அழைத்து செல்வான்... அவளை அழைத்து செல்ல முடியாத இடங்களுக்கு அவன் செல்வதை தவிர்த்துக்கொண்டான்......

பரீட்சைகள் முடிந்து விடுமுறை அறிவிக்கப்பட தேவ் ஊரிற்கு கிளம்ப தயாரானான்... அதை ஸ்ரவ்யாவிற்கு தெரிவித்தபோது அவளும் உடன் வருவதாக கூறினாள்.... தேவ்விற்கோ தன் பெற்றோர் இவளை மட்டும் தனியாய் அழைத்து சென்றால் ஏதாவது நினைப்பார்களோ என்று தயங்க அப்போது அபி

“மச்சி நாங்களும் உன்கூட ஊருக்கு வர்றோம்.... ப்ரெண்சா ட்ரிப் போன மாதிரியும் இருக்கும்... அம்மா அப்பாவும் எதுவும் நினைக்கமாட்டாங்க... சூட்டிக்கும் எந்த பிரச்சனையும் வராது ...” என்று அபி யோசனை கூற தேவ்விற்கும் அதுவே சரியென்று பட்டது...

ஆண்கள் பெண்களென்று மொத்தமாய் பத்து பேர் தேவ்வின் ஊரான நுவரேலியாவிற்கு கிளம்பினர்...

பஸ்ஸில் தேவ் அருகே அமர்ந்துகொண்ட ஸ்ரவ்யா அவன் ஊர் பற்றியும் குடும்பம் பற்றியும் விசாரிக்க அவனும் ஆர்வத்துடன் தான் பிறந்து வளர்ந்த கதையென்று அனைத்தையும் கூறிக்கொண்டு வந்தான்....

இவ்வாறு அந்த கதை பேசியபடி ஏழு மணித்தியாலங்களின் பின் நுவரேலியாவை வந்தடைந்தனர்.. அவர்கள் அங்கு வந்தடைந்த நேரம் இரவு ஏழை தாண்டிவிட்டதால் குளிர் ஊசியாய் உடலை குத்த ஸ்ரவ்யாவிற்கு போட்டிருந்த ஸ்வெட்டரை தாண்டி குளிரால் உடல் நடுங்கியது....

அவள் நிலை உணர்ந்தவன் தன்னிடமிருந்த இன்னொரு ஸ்வெட்டரை கொடுத்து அவளை அணிந்துகொள்ளச்சொன்னான்...

“என்ன சூட்டி ரொம்ப குளிருதா???”

“ஆமா அப்பு.... கண்டியில பொறந்து வளர்ந்த எனக்கே இந்த குளிரை தாங்க முடியலை... மத்தவங்க எப்படி சமாளிக்க போறாங்களோ...”

“இந்த சீசனுக்கு இப்படி தான் ஆறு மணிக்கு மேல வெளியே இறங்க முடியாது.... ரொம்ப குளிரும்... கொஞ்ச நேரம் பொறுத்துக்கோ... வீட்டுக்கு போனதும் சுடுதண்ணியில குளிச்சா நல்லா இருக்கும்....” என்றபடி தேவ் அவளது பையினையும் தனது பையினையும் தூக்கி வந்தான் ....

தேவ்வின் வீடு பஸ் தரிப்பிடத்திலிருந்து ஐந்து நிமிட நடை தூரம் தான்.....

ஆனால் செல்லும் பாதையில் சிதறிக்கிடந்த கற்கள் அவர்களது பயணத்தை தாமதப்படுத்தியது....
ஒருவாறு வீடு வந்து சேர்ந்தவர்களை குள்ளாவோடு கையில் டார்ச் லைட்டினை ஏந்தி அதனை ஒளிரச்செய்தபடி வரவேற்றார் தேவ்வின் தந்தை...

இவர்களது சத்தம் கேட்டு தேவ்வின் அன்னையும் வந்துவிட அனைவரையும் வரவேற்று அமரச்சொன்னவர் அவர்களுக்கு குடிப்பதற்கு பிளேன்டீ எடுத்து வந்தார்....

அந்த குளிருக்கு பிளேன்டீயும் கித்துள் கருப்பட்டியும் தேவார்மிதமாய் இருக்க அனைவரும் பருகிமுடித்தனர்...

பின் அனைவரும் சுடு நீரில் முகம் கைகால் அலம்பிவிட்டு வந்ததும் அனைவருக்கும் உணவு எடுத்து வைத்தார் தேவ்வின் அன்னை..
அனைவரும் பயணக்களைப்பில் இருந்ததால் உணவை முடித்துவிட்டு படுத்துவிட்டனர்..
ஆண்கள் சிலர் தேவ்வின் அறையிலும் சிலர் ஹாலிலும் படுத்துக்கொள்ள பெண்கள் மற்றைய அறையில் படுத்துக்கொண்டனர்...
தேவ் அனைவருக்கும் குளிருக்கு இதமாய் கனமான போர்வையை கொடுக்க அது குளிரின் வீரியத்தை கட்டுப்படுத்த உதவியது...
பயணக்களைப்பில் அனைவரும் தாமதிக்காது உறங்கிவிட்டனர்..

மறுநாள் காலை ஏழு மணிக்கு உறக்கம் கலைந்து எழுந்த ஸ்ரவ்யா சுற்றும் முற்றும் பார்க்க அனைவரும் அசந்து தூங்கிக்கொண்டிருந்தனர்... ஜன்னல்கள் அனைத்தும் மூடியிருக்க விடியல் நிகழ்ந்துவிட்டதா என்று கண்டறியமுடியாமலிருக்க தன் மொபைலை எடுத்து பார்த்தாள் ஸ்ரவ்யா.. அது மணி ஏழு என்று காட்ட மெதுவாக எழுந்தவள் விரிப்பை மடித்துவிட்டு அறையிலிருந்து வெளியே வந்தாள்.... முன்புற வாசல் கதவு மூடியிருக்க மெதுவாக பின்புறம் சென்றாள்.
பின்புறம் சமையலறையும் அதோடு புகைக்கூடும் இருக்க பின்புறமாய் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டு அதன் கீழே ஒரு மேசையும் போடப்பட்டிருந்தது...

தேவ் தன் அன்னையோடு சமையலறையில் இருந்தான்.. ஸ்ரவ்யா வரும் போது தேவ்வின் அன்னை கேஸ் அடுப்பில் கறி தாழித்துக்கொண்டிருக்க தேவ்வோ தன் அன்னையுடன் ஏதோ கதை பேசியபடி மரத்தாலான தேங்காய் துருவியில் இருபுறமாய் காலிட்டு தேங்காய் திருவிக்கொண்டிருந்தான்...

இதை கண்டவளுக்கு தானும் இதில் ஒரு பாகமாய் மாறவேண்டுமென்ற அவா எழ தன் குரலை கனைத்தபடி

“தேவ்..” என்றழைக்க அவள் குரலில் கலைந்த மகன் அன்னை இருவரும் வா என்று அவளை அழைத்தனர்...

“அம்மா... இவ.. சூட்டி.. சூட்டி இது அம்மா..” என்று கூற பெண்கள் இருவரும் சிரித்தனர்.
அவர்கள் சிரிப்பில் குழம்பிய தேவ்

“இப்போ எதுக்கு இரண்டு பேரும் சிரிக்கிறீங்க..”

“அதுவா.. உங்க அறிமுகப்படலத்தை பார்த்ததும் எங்களுக்கு சிரிப்பு வந்திடுச்ச... அதைவிட உங்களுக்கு தெரியாத ஒரு விஷயம் நானும் அம்மாவும் ஆல்ரெடி அறிமுகம் ஆகிட்டோம்..”

“ஆமா தம்பி.. சூட்டி நேத்தே என்கூட வந்து பேசுச்சு.. சூட்டி தேத்தண்ணி குடிக்கிறியா மா???”

“இப்போ வேணா அம்மா.. எல்லாரும் எழும்பிரட்டும்...சேர்ந்தே குடிக்கிறோம்..”

“சரி தண்ணி கொதிக்க போட்டிருக்கேன்... மூஞ்சு கழுவிட்டுவா.. தம்பி தண்ணியை சரியான சூட்டுல கலந்தது குடு...” என்று பணிக்க துருவியில் இருந்த தேங்காயை வழித்து தட்டில் இட்டவன் தட்டை தன் அன்னையிடம் கொடுத்துவிட்டு புகைக்கூடத்திற்கு செல்ல ஸ்ரவ்யா துவாய் எடுக்க அறைக்கு சென்றாள்....

தேவ் அதற்குள் வாளியொன்றில் சுடுநீரோடு சாதரண நீரை கலந்து சாதாரண சூட்டில் நீரை பதப்படுத்தியிருந்தான்..

அவர்களின் வீட்டின் பின்னே திறந்தவெளி குளியலறையும் அதை கடந்து இருபதடி தூரத்தில் கழிப்பறையும் அமைந்திருந்தது..

காலைக்கடனை முடித்துவிட்டு வந்தவள் மிதமான சூட்டிலிருந்த நீரினால் முகம் மற்றும் கைகால் கழுவினாள்... அவள் வரும்வரை மறுபுறம் திரும்பி நின்றவன் அவள் குரல் கொடுத்ததும் அவளது துவாயை அவளிடம் கொடுத்தவன் தன் கையில் வைத்திருந்த வேப்பங்குச்சால் பல் துலக்கத்தொடங்கினான்..ஶ்ரீ
அதை கண்ட ஸ்ரவ்யா

“ஹே அப்பு... என்ன ப்ரஸ்ஸை மறந்து வச்சிட்டு வந்திட்டியா??”

“அதெல்லாம் இல்லை சூட்டி... ஊருக்கு வந்தா இந்த குச்சி தான் எனக்கு ப்ரெஸ்... இதுல ப்ரஸ் பண்ணுறதே தனி சுகம் தெரியுமா???”

“அப்போ எனக்கும் ஒரு குச்சி வேணும்...”

“ஹேய் நீ தான் ப்ரெஸ் பண்ணிட்டியே..”

“பரவாயில்லை மறுபடியும் ப்ரஸ் பண்ணுறேன்... “ என்று ஸ்ரவ்யா அடம்பிடிக்க

“இரு வரேன்...” என்றவன் அங்கிருந்து சென்று கையில் வேப்பங்கொத்துடன் வந்தான்.. அதை சரியான முறையில் வெட்டி பதப்படுத்தியவன் அதை ஸ்ரவ்யாவிடம் கொடுத்து அதை உபயோகிக்கும் முறையினையும் விளக்கினான்..

அவன் கூறியபடி பல் துலக்கியவளை அரும்பாடுபட்டு உள்ளே அழைத்து வந்தான்..
உள்ளே வந்தவள் குளிரால் நடுங்க தன் அன்னையிடம் கூறி அவள் உள்ளங்கையிரண்டையும் சூடேறும் வரை தேய்த்துவிட சொன்னான்..
அவளது கையை தேய்த்தபடியே தேவ்வின் அன்னை

“தம்பி பல்லு தேச்சிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா?? சீக்கிரம் வாங்கனு தானே சொன்னேன்.. இப்போ பாரு குளிர் தாங்காம புள்ள உடம்பு எப்படி நடுங்குதுனு....”

“அம்மா.. நான் சொன்னேன்மா.. இந்த வாண்டு தான் சொல்லுற பேச்சை கேட்காம வேப்பங்குச்சி கேட்டு அடம்பிடிச்சி கரைச்சல் பண்ணிச்சு.. அதான் சுணங்கிருச்சு..”

“சரி நீ காட்ட தண்ணியை ஊத்து... சூடா ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்..” என்று கூற தேவ்விம் கொதித்துக்கொண்டிருந்த தண்ணீரில் இருந்து சற்று நீரை எடுத்தவன் தேயிலை வடியின் உதவியோடு பிளேன்டீயை ஊற்றினான்..

அதை ஸ்ரவ்யாவிடம் கொடுத்தவன் கித்துள் கருப்பட்டி ஒரு துண்டையும் கொடுத்தான்..
ஒரு மிடறு குடித்ததுமே ஸ்ரவ்யாவிற்கு மொத்த குளிரும் அடங்கியதாயொரு உணர்வு...
காலி கப்பை ஸ்ரவ்யா தேவ்வின் கையில் கொடுக்க அதை வாங்கியவன்

“இப்போ எப்படி இருக்கு??”

“ம்ம்.. ஆனா ஏன் விடிஞ்சும் இங்க இப்படி குளிருது.. எங்க ஊருலயும் ரொம்ப குளிரும் தான்... ஆனா இந்த நேரத்துக்கு குளிரெல்லாம் அடங்கிரும்.. ஆனா இங்க இன்னமும் இப்படி தான் இருக்கு..” என்று ஸ்ரவ்யா கேட்க தேவ்வோ

“அது அப்படி தான் சூட்டி... எட்டு மணிக்கு மேல தான் பனி கொட்டுறது கொஞ்சம் குறையும்... இங்க தானே இருக்கப்போற... நீயே பார்ப்ப...” என்று தேவ் கூற என அந்த விடியல் அழகாய் விடிந்தது..
சற்று நேரத்தில் மற்றவர்களும் எழுந்து கொள்ள அந்த இடமே அமர்களப்பட்டது..

காலை உணவிற்கு பாண் வாங்கப்பட்டிருக்க தொட்டுக்கொள்ள பருப்பு கறியும் தேங்காய் சம்பலும் செய்திருந்தார் தேவ்வின் தந்தை...
ஹாலில் நடுவே உணவு பொருட்களை ஒழுங்குப்படுத்த பத்து பேரும் வட்டமாய் சுற்றி அமர்ந்து தமக்கு தேவையானவற்றை எடுத்து வைத்துக்கொண்டு உண்டனர்.
அப்போது அபி

“டேய் தேவ்.. அம்மா எங்கடா??”

“எதுக்குடா... அவங்க உள்ள இருக்காங்க..”

“நீ அம்மாவ கூப்பிடேன்..”

“நீ எதுக்குனு சொல்லு..”

“நீ கூப்பிடு நான் அம்மாகிட்டயே சொல்றேன்..”
என்று அபி அடம்பிடிக்க தன் அன்னையை அழைத்தான் தேவ்...
ஹாலிற்கு வந்தவரிடம் அபி

“அம்மா.. எங்கம்மா இருந்தீங்க இவ்வளவு நாளு..” என்று அபி கேட்க அவனது கேள்வியில் குழம்பிய தேவ்வின் அன்னை தேவ்வை பார்க்க தேவ்வோ

“டேய் நல்லா தானே இருந்த.. திடீர்னு என்ன ஆச்சு உனக்கு..”

“மச்சான் வெயிலுக்கு சூடேறி பித்தம் தலைக்கேரும்னு சொல்லுவாங்களே... அதே மாதிரி நம்ம அபிக்கு குளிரால ஏதோ ஒரு நட்டு லூசாகிடுச்சு போல...” என்று கபிலன் அபியை வார அபியோ

“டேய் கபிலா நான் நல்ல மூடுல இருக்கேன்.. அதனால தப்பிச்ச.. அம்மா.. உங்க பருப்பு கறி செம்ம ருசி.. அப்படியே அமிர்த கலசத்துல இருந்த தேவாமிர்தத்தை குடிச்சமாதிரி இருக்கு...”

“உனக்கு யாருடா தேவாமிர்தம் குடுத்தா.. நீ பஞ்சாமிர்தம் சாப்பிட்டு பார்த்திருக்கேன்... இது என்ன தேவாமிர்தம்...” என்று கபிலன் மீண்டும் அபியை வம்பிழுக்க

“அவன் கிடக்கிறான்மா.. எப்படிமா உங்க பருப்பு கறி இவ்வளவு டேஸ்ட்டு.. அதோட இந்த தேங்காய் சம்பல் சான்சே இல்ல போங்க... “

“டேய்.. எங்க அம்மா கைபக்குவம் எப்பவும் சூப்பர் தான்டா... அதோடு இங்க நாங்க பயன்படுத்துற தண்ணி மலையில இருந்து வர்ற தண்ணி...அதான் ருசியா இருக்கு...” என்று தேவ் தன் அன்னையின் சமையல் ரகசியத்தை எடுத்துரைக்கவென்று அந்த இடம் கலகலப்பாயிருநந்தது...

அங்கிருந்த இரு வாரங்களும் ஸ்ரவ்யா தேவ்வின் அன்னையோடு அலைந்துகொண்டிருந்தாள்.. மிகுதி நேரங்களில் தேவ்வின் சித்தி மற்றும் மாமா மகள்கள் வர அவர்களோடு நேரம் செலவழித்தாள்.

அவர்களும் ஸ்ரவ்யாவையும் அவளது மற்ற தோழிகளையும் அழைத்துக்கொண்டு தேயிலை தோட்டம், காய்கறி தோட்டம், ஆறு, கோயில் என்று அனைத்து இடங்களையும் சுற்றி காட்டினர்...

அன்று ஸ்ரவ்யா உற்பட தேவ்வோடு ஊரிற்கு வந்திருந்த அனைவரையும் ஹக்கல பூங்காவிற்கு அழைத்து சென்றான் தேவ்...

வண்ண வண்ண பூக்களும், பல பயிர்ச்செய்கை முறையில் பராமரிக்கப்பட்ட மரம், செடி, கொடி என்று அந்த இடமே வண்ணமயமாய் ரம்மியமாயிருந்தது....

எங்கும் காணக்கிடைக்காத இலங்கை மண்ணிற்கே தனித்துவமான பல வண்ணப்பூக்களும் தாவரங்களும் அந்த பூங்காவில் வீற்றிருந்து மேலும் நளினம் சேர்த்தது...

அழகாய் ஒழுங்கமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டிருந்த அந்த இடத்தில் கூட்டமாயிருந்து பல புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர் தேவ்வின் குழுவினர்..
ஒவ்வொருவரும் ஒவ்வோர் இடமாய் பிரிந்து செல்ல தேவ் ஸ்ரவ்யாவின் பின்னே அவளுக்கு துணையாய் சென்றான்...

ஸ்ரவ்யா அந்த நீண்ட அகன்ற கார்டனின் அழகில் மயங்கியவள் சுற்றுப்புறம் மறந்து அங்கிருந்த ஒவ்வொரு பூக்களையும் கரத்தால் தீண்டாது விழியால் தீண்டி அதை அனுபவித்தபடி கால் போனபோக்கில் நடக்க தேவ்வோ அவளை வீடியோ எடுத்தபடி வந்தான்.. சில இடங்களில் அவள் யதார்த்தமாய் நின்ற இடங்களை புகைப்படமாய் சேமித்துக்கொண்டவன் அவளை பின்தொடரவும் தவறவில்லை...
கார்டினை சுற்றி பார்த்தவர்கள் அடுத்து எல்லேயிற்கு கிளம்பினர்..

இவ்வாறு நினைவுகளின் பிடியில் சிக்கி மூழ்கியவனை சுயநினைவு பெறச்செய்தது அஜயின் அழைப்பு..

தேவ்வின் முன்னே நின்றிருந்த அஜய் அவனிடம் தன் கையிலிருந்த தேவ்வின் மொபைலை நீட்ட அதை வாங்கி காதில் வைத்தவன்..

“ஹலோ..”

“.....”

“இன்னும் இல்லடா...”

“......”

“பார்த்துக்கலாம்... ஈவினிங் சீக்கிரம் வர்றியா?? உன்கிட்ட கொஞ்சம் பேசனும்..”

“.....”

“சரி பார்த்துக்கிறேன்.. பாய்..” என்றபடி அழைப்பை துண்டித்துவிட்டு அஜயை தேட அஜயோ ஹாலில் அமர்ந்து உணவு அருந்திக்கொண்டிருந்தான்...
அவன் எதிரே வந்தமர்ந்த தேவ்விற்கு அஜயிடம் பேசுவதற்கு நாவெழவில்லை....

தேவ்வும் தனக்கென ஒரு தட்டை எடுத்துக்கொண்டு உணவிட்டு அதை அருந்தி முடித்தவன் அபியின் வருகைக்காக காத்திருந்தான்..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN