துளி 7

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உயிர் காதல் அடங்காது, நெருப்பாலும் பொசுங்காது
நடந்தாலே அது சுகம் தானே
துணையாக நானும் வருவேனே


அஜய் வந்தமர்ந்ததும் தேவ் அபியின் முகத்தை பார்க்க அபியும் அவன் நிலை புரிந்து தானே அஜயுடன் பேச முன்வந்தான்...
“அஜய்...”

“அபி... நீங்க என்ன கேட்கப்போறீங்கனு எனக்கு தெரியும்... ஆனா ப்ளீஸ் நான் பதில் சொல்கின்ற நிலைமையில் இல்லை....”

“அஜய்... உங்க நிலைமை எனக்கு புரிகிறது... ஆனா இந்த விஷயத்தில் இப்பவும் ஏதாவது முடிவெடுக்கவில்லைனா அது இரண்டு பேருக்குமே பாதிப்பு தான்.. வேணாம்னு சொல்லிட்டு வந்தானே தவிர அவனும் நிம்மதியாகவோ சந்தோஷமாகவோ இருக்கவில்லை... அவன் பண்ண ஒரே தப்பு கோபத்துல சூட்டியை அங்க தனியாக விட்டுட்டு வந்தது தான்..” என்று அபி தேவ்விற்காக பேச அஜய்யோ

“ஆனா உங்க ப்ரெண்ட் நல்லா தானே இருக்காரு அபி... ஆனா என்னோட பேபி... அவளுக்கு நடந்த கொடுமைக்கெல்லாம் உங்க ப்ரெண்ட் மட்டும் தானே காரணம்..”என்று அஜய் தேவ்வை குற்றம்சாட்ட அபியோ

“அஜய்... அந்த நேரத்துல அந்த நிலைமையில் எதையும் யோசிக்காமல் செய்துட்டான்... அது சரினு நான் சொல்லலை... அது அவனை மீறி நடந்த விஷயம்... அதற்காக இந்த நான்கு வருடமாக அவன் போதும்ங்கிற அளவுக்கு அனுபவிச்சிட்டான்...ப்ளீஸ் இனியாவது இரண்டு பேரும் சேரணும்....”

“அபி உங்க நட்பு அனுபவித்ததை விட என்னோட பேபி பல கொடுமையை அனுபவிச்சிருக்கா ...அதுக்கு உங்க ப்ரெண்ட் என்ன பதில் சொல்லப்போறாரு...??” என்று அஜய் கேட்க தன் இருக்கையிலிருந்து எழுந்த தேவ்

“நான் எல்லாத்தையும் சரிப்படுத்துறேன் அஜய்... எல்லாவற்றையும் சரிப்படுத்துறேன்.. என்னை நம்புங்க..” என்று தேவ் கூற விருட்டென எழுந்து தேவ்வின் சட்டையை பிடித்த அஜய்

“எதைடா சரிப்படுத்துவ?? உன்னை காதலித்து ரணப்பட்டிருக்கிற மனதையா.... உன்னையே நினைத்து உருகி பேதலித்திருக்கிற சிந்தையையா... இல்லை களங்கப்பட்டிருக்கிற அவளோட கற்பையா??? எதைடா... சரிப்படுத்துவ??? சொல்லு..” என்று அஜய் தேவ்வை உலுக்க அவனோ அஜயின் வார்த்தைகளில் ஸ்தம்பித்து நின்றான்.. தேவ் மட்டுமின்றி அபியுமே அஜயின் வார்த்தைகளில் அதிர்ந்துவிட்டான்...

தேவ் குரல் நடுங்க “நீங்க... நீங்க .. என்ன சொல்லுறீங்க??” என்று கேட்க அவன் சட்டையை விட்ட அஜய் தன் இருக்கையில் அமர்ந்தான்...

“ஆமா... உன்னால அவ எல்லாத்தையும் இழந்துட்டா... மிச்சமிருப்பது அவ உயிர் மட்டும்... அதையும் பறிச்சிடாத...”

“அஜய் ப்ளீஸ்... சூட்டிக்கு என்னாச்சு... ப்ளீஸ் சொல்லுங்க...” என்று தேவ் கேட்க

“அன்னைக்கு நீங்க போனதும் அவ அப்பா கூட வீட்டுக்கு வந்தவ நேரா அவ ரூமுக்கு போயிட்டா... அன்றைக்கு போனவ மூன்று நாளாக ரூமை விட்டு வெளியே வரவில்லை... அவ அப்பாவும் அதை பற்றி பெருசா கவலைப்படவில்லை.... நான் அவ போனுக்கு ட்ரை பண்ணப்போ அவ எடுக்கலை.. அவ உங்ககூட பிசியா இருக்காபோலனு நானும் விட்டுட்டேன்.. மறுபடியும் அடுத்த நாள் கால் பண்ணப்போ போன் ஸ்விட்ச் ஆப்னு வந்தது... சரி வீட்டுக்கு கால் பண்ணுவோம்னு அவ வீட்டுக்கு கால் பண்ணும் போது தான் சர்வன்ட் சொன்னாங்க இப்படி அவ மூன்று நாளாக வெளியில வரலைனு... எனக்கு என்ன பண்ணுறதுனு புரியலை.. நான் சர்வன்ட்டை உள்ள போய் பார்க்க சொன்னேன்... உள்ள அவ மயங்கிடந்திருக்கா... உடனே அவளை ஆஸ்பிடல் அழைச்சிட்டு போயிருக்காங்க. நான் என்னோட சித்திக்கு கால் பண்ணி அவளை போய் பார்க்க சொன்னேன்...
மூன்று நாளா எதுவும் சாப்பிடாததால டீஹைட்ரேட்டாகிட்டானு டாக்டர்ஸ் சொன்னாங்க.... கண் முழிச்சவ சுவற்றையே வெறிச்சிட்டு இருந்திருக்கா.. கேட்ட எந்த கேள்விக்கும் பதிலும் சொல்லலை..... சைக்கேட்டிஸ்ட காண்பித்தபோது அவரு டிப்ரெஷன் அதனால தான் இப்படி ஆகிட்டாங்க... ட்ரீட்மண்ட் கொடுத்தா சரியாகிடும்னு சொன்னாரு..வீட்டுலயே வைத்து ட்ரீட்மண்ட் பண்ணலாம்னு சொன்னாங்க.... எனக்கு லீவ் கிடைக்கலை... அதனால என்னோட சித்தி மூலமாக ஒரு நர்ஸை அரேன்ஜ் பண்ணி அவ வீட்டுலயே அவளை கவனிக்க ஏற்பாடு பண்ணேன்... ஆனா அதற்கு பிறகு அவளோட பிஹேவியர் ரொம்ப சேன்ஜ் ஆகிடுச்சு..ரொம்ப அப்நோர்மலா பிஹேவ் பண்ண ஆரம்பிச்சா... அவள் கண்ணு முன்னாடி வருபவர்களை எல்லாம் காயப்படுத்துனா... கிட்டதட்ட ஹிஸ்டீரியா பேஷண்ட் மாதிரி நடந்துக்க ஆரம்பிச்சா... அவளை பார்த்துக்கு இருந்த நர்சை தவிர வேறு யாரையும் பக்கத்துல விடமாட்டா.. இதற்கு மேல் இவளை வீட்டுல வைத்து ட்ரீட்மண்ட் கொடுக்கமுடியாதுனு அவளை மனநல காப்பகத்துல சேர்த்துட்டாங்க..... அங்கேயிருந்த நேரத்துல அவ...அவளுக்கு” என்று அன்று அவளுக்கு நடந்த கொடூரத்தை கூறத்தொடங்கினான் அஜய்..

மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரவ்யா முதலில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டாள்... சிறிது காலத்திலேயே அவளின் நோயின் வீரியம் குறைந்திட அவள் முற்றாக குணமடையும் வரை வேறொரு பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.. அந்த பிரிவிலிருந்த மற்றைய நோயாளிகளும் அவளை போலவே மன அழுத்தத்தால் மனநோயாளியாகியவர்கள்... அவர்களது மன அழுத்தத்தை குறைக்க தினமும் யோகா, மெல்லிசை பாடல்கள் மேலும் மன இறுக்கத்தை குறைக்கும் வகையான விளையாட்டுக்கள் என்று அந்த பிரிவில் இடம்பெறும்... ஸ்ரவ்யாவும் அந்த பிரிவிலிருந்து சிகிச்சை பெற்ற போதிலும் அவள் இழந்த பேச்சு அவளுக்கு கிட்டவில்லை . அதேபோல் அவள் மனமும் சூழலை கவனிக்க தவறி அப்பு என்ற ஒற்றை வார்த்தையிலேயே சரணடைந்திருந்தது...

ஒருநாள் இரவு நேரம் உறங்கிக்கொண்டிருந்தவள் திடீரென்று எழுந்து காவலாளி அசந்த நேரத்தில் காப்பகத்திலிருந்து வெளியேறிவிட்டாள்...
அவள் மனதின் கட்டளையை மட்டும் ஏற்றவள் அந்த இரவுநேரத்தில் ஒரு குறுக்கச்சந்தில் சென்றிட அங்கொரு இளைஞர் பட்டாளம் போதைப்பொருள் பயன்படுத்திக்கொண்டிருந்தனர்...

தேவ்வை மட்டும் எண்ணமும் செயலாய் கொண்டிருந்தவளுக்கு எதிரேயிருந்த கும்பல் கண்ணிற்கு தெரியவில்லை.....
போதையின் பிடியில் சிக்குண்டிருந்தவர்களுக்கும் ஸ்ரவ்யா பச்சையுடை அணிந்திருக்கும் நோயாளியாய் தெரியாமல் தம் காமப்பசியை தீர்க்க வந்த மதனமோகியாய் தெரிய அவளை ஆண்டு தம் பசியை தீர்க்கும் வெறியை அவர்களுள் உருவாக்கியது...
தம்மை நோக்கி வந்தவளை தம் காமப்பசிக்கு இரையாக்கியது அந்த கும்பல்...

உடல் உணர்ந்த வலியை மனம் உணர தவற ஸ்ரவ்யாவோ அந்த கும்பலின் பசிக்கு தன்னுணர்வில்லாமலே இரையாகினாள்....
போதை தெளியும் வரை அந்த மலரினுள் மெல்லியவளை வேட்டையாடிய கும்பல் காலை விடியலுக்கு முன்னே யாரும் பார்ப்பதற்குள் அங்கிருந்து கிளம்பியது...
கசக்கப்பட்ட மலராய் அந்த குறுக்குச்சந்தில் கிடந்தவளை கண்ட தெருநாயொன்று தொடர்ந்து குரைத்தபடியிருக்க அந்த வழியாக சென்ற ஒருவர் என்னவென்று பார்த்து போலிஸிற்கு தகவல் கூறினார்...

காப்பகத்தில் இவளை காணாது தேடியவர்களுக்கும் இந்த செய்தி தெரிவிக்கப்பட அவர்கள் ஸ்ரவ்யாவின் தந்தைக்கு தெரிவிக்க அவரோ அதை பற்றி கண்டுகொள்ளவில்லை....

விஷயம் கேள்விப்பட்ட அஜய் அடித்துப்பிடித்துக்கொண்டு இலங்கை வந்து சேர்ந்தான்...

வந்தவன் நேரே ஸ்ரவ்யாவை அனுமதித்திருந்த மருத்துவமனைக்கு சென்றான்.... அங்கு ஸ்ரவ்யாவின் நிலை மிகமோசமாயிருந்தது....

அவளை பரிசோதித்த மருத்துவர்கள் அவளை பலர் சேர்ந்து கற்பழித்துள்ளதாகவும் அவள் நிலை சற்று கவலைக்கிடமாக உள்ளதாகவும் தெரிவித்தனர்...

அதை கேட்ட அஜயிற்கு சர்வ நாடியும் நடுங்கியது... அவள் உயிர்பிழைத்து வந்தாள் மட்டும் போதும் என்று மனதினுள் ஆயிரம் பிரார்த்தனைகளை வைத்தவன் ஒரு வாரமாய் மருத்துவமனையே கதியென்று கிடந்தான்...

நாளுக்கு நாள் அவள் உடல்நிலை தேறுவதற்கு பதில் சிக்கலாகிக்கொண்டே வந்தது... மருத்துவர்கள் அவள் உயிர்பிழைப்பது கடினமென்று கைவிரித்துவிட அஜயிற்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை....

எவ்வாறேனும் தன் பேபியை குணப்படுத்திவிடவேண்டுமென்ற எண்ணம் மட்டுமே அவன் மனதில் இருக்க தனக்கு தெரிந்து மருத்துவர்களாய் இருக்கும் தன் நண்பர்களிடம் ஸ்ரவ்யாவின் ரிப்போட்டினை அனுப்பி வைத்து அவர்களிடம் ஆலோசனை கேட்க அவர்களும் ஒன்று போல் அவள் பிழைப்பதற்கு வாய்ப்பில்லை என்று கூறிட கலங்கிநின்றான் அஜய்....

அவன் வேறு எதுவும் செய்யமுடியாதா என்று ஸ்ரவ்யாவுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவரிடம் கேட்க அவரும்

“மிஸ்டர் அஜய்... மெடிக்கல் மிரேக்கல்னு ஒரு வார்த்தை கேள்விபட்டிருப்பீங்க... அப்படியேதாவது நடந்தா தான் ஸ்ரவ்யா பிழைக்கிறதுக்கு வாய்ப்பு இருக்கு.. இன்னொரு விடயம் அவங்க மனசுல வாழவேண்டும் எனும் எண்ணம் இல்லை... அதுனால தான் எந்தவித சிகிச்சையும் பலனளிக்கவில்லை... அவங்ககிட்ட பேசுங்க. அவங்க மீண்டு வரணும் என்ற ஆசையை வலியுறுத்துங்க... அவங்க மனசு சீக்கிரம் குணமாகனும்னு நினைக்க தொடங்குனா அது கூட அவங்க பிழைக்கிறதுக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.. எத்தனையோ பேருக்கு முழுதாக கைகால் இயக்கம் முடங்கியும் கூட அவங்க மனசுல இருந்த வாழவேண்டும் என்கிற வெறி அவங்களை குணப்படுத்தியிருக்கு. ஸ்ரவ்யாவுக்கு அப்படி ஏதாவது மிராக்கல் நடக்கலாம். முயற்சி பண்ணி பாருங்க... அவங்க கூட பேசுங்க.. நீங்க பேசுறது அவங்க மூளைக்கு கேட்காவிட்டாலும் அவங்க மனசுக்கு கேட்கும்.. அவங்க கூட பேசுங்க..” என்று கூற அஜயும் கடைசியாக கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்த நினைத்தான்...
டாக்டரின் அனுமதியுடன் ஐ.சி.யூவிற்கு சென்றவன் உடல் முழுதும் வயர் பூட்டப்பட்டிருந்த ஸ்ரவ்யாவை கண்டான்...
அதை கண்டவனது நெஞ்சம் விம்மி வெடித்தபோதிலும் அதை வெளிக்காட்டவில்லை...

ஸ்ரவ்யா அருகே இருக்கையை எடுத்து போட்டவன் அதில் அமர்ந்து ஸ்ரவ்யாவின் கையினை பிடித்துக்கொண்டான்..
அவள்புறம் குனிந்து

“பேபி... நான் தான் அஜய்.. உன்னோட சிப்மங்... நான் பேசுறது உனக்கு கேட்குதா பேபி.... நான் உன்னை பார்க்கத்தான் ஶ்ரீலங்கா வந்திருக்கேன் பேபி.. பாரு நான் இப்போ எவ்வளவு அழகாக தமிழ் பேசுறேன்னு... இப்போ என்னை பீட்டர்னு கூப்பிடமாட்ட தானே... சொல்லு பேபி... நீ கூப்பிட்ட மாதிரி நான் ஶ்ரீலங்கா வந்துட்டேன் பேபி.. நீயும் சொன்னமாதிரி எனக்கு ஶ்ரீலங்காவை சுற்றி காட்டு பேபி.. நீ கேட்டமாதிரி சாக்லேட் பர்பியூம்னு எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கேன் பேபி... ப்ளீஸ் பேபி.. கண் முழித்து பாரு.... என்னை உன் அப்புகிட்ட கூட்டிட்டு போ.. நான் தான் சூப்பர்னு உனக்கு ப்ரூவ் பண்ணுறேன்.. எழுந்து வா பேபி.. உன்னோட அப்புகிட்டகூட்டிட்டுபோ..” என்று அஜய் அவளிடம் பேச அவள் அருகே நின்றிருந்த நர்ஸ் மானிட்டரை பார்த்தபடியே சென்று டாக்டரை அழைத்துவந்தார்..

ஸ்ரவ்யாவை பரிசோதித்த மருத்துவர் அஜயிடம்

“மிஸ்டர் அஜய்... தொடர்ந்து ஸ்ரவ்யாகிட்ட பேசுங்க.. அவங்க ஹெல்த் ரிக்கர் ஆவதற்கான சிம்டப்ஸ் தென்படுது... நீங்க தொடர்ந்து அவங்ககிட்ட பேசுங்க..” என்று கூறியவர் நர்ஸிடம் சில குறிப்புக்களை கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்..

அஜய் தொடர்ந்து தேவ்வை பற்றி பேச அவளின் உடல்நிலை தேறுவதை கண்டான்...

தேவ் அவளுக்காக காத்திருப்பதாக கூறியவன் அவள் அவனுக்கு அனுப்பியிருந்த தேவ் பேசிய ஆடியோவை போட்டுக்காட்ட அது அவளின் நிலையை முற்றாக மாற்றத்தொடங்கியது...
ஸ்ரவ்யா அஜயிற்கு கூறியிருந்த தனக்கும் தேவ்விற்குமான காதல் கதையை தினம்தோறும் அஜய் ஒவ்வொரு கதையாக கூற அதை கிரகிக்கத்தொடங்கிய அவள் மனம் அவள் குணமாக வழி செய்தது..
உயிர்பிழைக்கமாட்டாள் என்று கைவிரித்த மருத்துவர்களே அவள் விரைவில் தேறியதை கண்டு வியந்தனர்...

இரண்டு வாரங்களின் பின் முற்றாக குணமடைந்தாள் ஸ்ரவ்யா... உடல் குணமடைந்ததே தவிர மனமும் மூளையும் பழைய நிலையிலேயே இருந்தது...
அவளை மீண்டும் காப்பகத்தில் விட விரும்பாத அஜய் கொழும்பிலேயே ஒரு தனிவீடொன்று எடுத்து அவளை அங்கு தங்கவைத்தான்.. அவளை கவனித்துக்கொள்ள ஒரு நர்ஸை அமர்த்தியவன் அவளின் காவலுக்கும் சிகிச்சைக்கும் தேவையான ஒழுங்கை செய்தான்...

அவன் வேலை அவனை நிர்ப்பந்திக்க அவன் மீண்டும் கனடா கிளம்பவேண்டியதானது... ஸ்ரவ்யாவை தன்னுடனேயே அழைத்து செல்ல முயல அவள் தற்போது இருக்கும் நிலையில் அவளுக்கு பயணம் சரிப்படாது என்றும் தக்கதுணையின்றி அவளை அனுப்புவது சிக்கலென்றும் மருத்துவர் பரிந்துரைக்க அஜயால் ஸ்ரவ்யாவை அழைத்து செல்லமுடியவில்லை.....

இரண்டு வருடங்களாய் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வருபவன் ஸ்ரவ்யாவை பார்த்துவிட்டு செல்வான்.. அதோடு தினமும் நர்சின் உதவியோடு ஸ்ரவ்யாவிடம் பேசுவான்.. ஆனால் அவளிடம் எந்த பிரதிபலிப்பும் இருக்காது.... இந்த முறை ஸ்ரவ்யாவை அழைத்து செல்லும் நோக்கத்தோடு வந்திருந்தான் அஜய்..

அஜய் ஸ்ரவ்யாவிற்கு நடந்த அனைத்தையும் கூற தேவ்வோ உள்ளுக்குள் நொறுங்கிப்போய் அமர்ந்திருந்தான்... ஸ்ரவ்யாவிற்கு நடந்த கொடுமைகளை கேட்டனது காதல் மனம் அவனை வசைபாடியே கொன்றது....

ஒட்டுமொத்த கொடுமைகளும் குத்தகைக்கு எடுத்தது போல் ஸ்ரவ்யாவின் வாழ்வுமொத்தமும் கொடுமைகளாலேயே சிதைந்திருந்தது... அதில் தன் பங்கும் இருந்ததையே தேவ்வால் ஜீரணிக்கமுடியவில்லை... அவளது வேதனைகளுக்கு நிவாரணியாக நான் இருப்பேன் என்ற நம்பிக்கையில் தானே அவள் என்னை சரணடைந்தாள்.... ஆனால் நானே அவள் வாழ்வை சிதைத்துவிட்டேனே.... அவளுக்கு நடந்த அனைத்து கொடுமைகளுக்குமே தான் மட்டுமே காரணமென்று தேவ்வின் மனம் அவனை சாடியது...

உயிர் போகும் நிலை வந்தபோது கூட ஸ்ரவ்யா தேவ்விற்காக மட்டுமே உயிர்த்து வந்ததாக அஜய் கூறியதே அவனை மேலும் துன்புறுத்தியது... தானோ அவள் தனக்கு துரோகம் இழைத்துவிட்டதாக மறுக அவளோ தனக்காக எமனுடன் போராடி மீண்டு வந்திருக்கிறாளென்றால் தன் மீது அவள் கொண்ட காதலின் ஆழம் அவனை புல்லரிக்கச்செய்தது... அனைத்தும் மறந்த நிலையில் கூட தன் நினைவை மட்டும் சுமந்திருப்பவளின் அன்புக்கு தான் தகுதியானவன் தானா என்ற கேள்வி அவன் மனதை அரித்தது....

ஆனால் அவன் மனமே அவள் வேதனைகளுக்கான நிவாரணி உன் காதல் மட்டுமே என்று அவனுக்கு எடுத்துரைத்தது... அவனது காதலும் அரவணைப்புமே அவளை குணப்படுத்தக்கூடிய ஒரே மருந்து என்று உணர்ந்தான் தேவ்...

நொடியும் தாமதிக்காது தனக்கெதிரே அமர்ந்திருந்த அஜயின் கையினை பிடித்தவன்

“அஜய் ப்ளீஸ்... எனக்கு ஒரு வாய்ப்பு தாங்க.... நான் அவளை சரிப்படுத்துறேன்... அவளோட இந்த நிலைமைக்கு நான் மட்டும் தான் காரணம்... என்னை நம்பி வந்தவளுக்காக எப்பாடுபட்டாவது அவளுக்கு துணையாக இருந்திருக்கனும்... ஆனா நான் அப்படி நடந்துக்கலை.... நடந்தது எதுவும் மாறப்போறதில்லை. ஆனா நிச்சயம் பழைய ஸ்ரவ்யாவை என்னால மீட்டெடுக்க முடியும்... அவ பழையமாதிரியே உங்க பேபியா மீண்டு வருவா.... “

“உங்களை எப்படி நம்புறது தேவ்...?? ஏற்கனவே ஒரு பிரச்சினைனு வந்தப்போ பாதியில விட்டுட்டு போனவரு தானே நீங்க... மறுபடியும் விட்டுட்டு போகமாட்டீங்கனு என்ன நிச்சயம்?? ஒருதடவை அவ பட்டதே போதும்... மறுபடியும் அவளுக்கு அந்த நரக வாழ்க்கை வேண்டாம்...”

“அஜய்... நீங்க என்ன யோசிக்கிறீங்கனு புரியிது... ஆனால் உங்களுக்கே தெரியும் ஸ்ரவ்யாவுக்கு அப்பவும் இப்பவும் எப்பவும் நான் தான் வேண்டும்... எனக்காகவென்று பிறந்தவ அவ.... ஆனா நான் தான் அதை புரிந்துக்கொள்ளாமல் அவளை தனியாக விட்டுட்டு போயிட்டேன்... ஆனா இனி எந்தவொரு கணமும் அவளை பிரியமாட்டேன்.... அவளை குணமாக்கி உங்க பேபியாக உங்க கையில ஒப்படைக்கும் வரை அவளை நான் பார்த்துக்கிறேன்... ப்ளீஸ் என்னை நம்புங்க அஜய்... நான் அவளுக்கு பண்ண கொடுமைக்கு தண்டனையாக நினைத்துக்கொள்ளுங்கள்...” என்று தேவ் மன்றாட அஜயிற்குமே அவன் கூறியது சரியென்றே தோன்றியது...

மருத்துவர் கூட இதனையே பரிந்துரைத்தார்... ஆனால் அவனால் அதை நடைமுறைப்படுத்தமுடியவில்லை... இப்போது அதற்கொரு வாய்ப்பு கிடைத்திருக்க அதன் மூலமாய் ஸ்ரவ்யா குணமடைந்தாலே போதும் என்று எண்ணினான் அஜய்...

ஆனால் தேவ் மீதிருந்த கோபம் அவனை ஒப்புகொள்ள மறுத்தது.... இப்போது தன் கோபத்தைவிட ஸ்ரவ்யாவின் நலனே பிரதானமாக தெரிய தேவ்வின் வேண்டுகோளை ஏற்றான் அஜய்...
ஆனால் அவனை முற்றாய் நம்ப மறுத்தவன்

“நான் இப்போ வந்ததே பேபியை என்கூட கனடா கூட்டிட்டு போகத்தான்... உங்களுக்கு வன்மன்த் தான் டைம்... அதற்கிடையில உங்கமேல இருந்த நம்பிக்கையை நான் இழந்தேன்னா பேபியை நான் என்கூடவே கூட்டிட்டு போயிடுவேன்..” என்று அஜய் கூற தேவ்விற்கு அவன் இத்தனை தூரத்திற்கு மனமிரங்கியதே போதும் என்றிருந்தது..

“தாங்க்ஸ் அஜய்... இனி சூட்டி என்னோட பொறுப்பு.... ஆனா... அவ அப்பா...”

“யாரு அவரா... அவரெல்லாம் மிருகத்தை விட கொடிய இனம்... அவள் இருக்காளா செத்தாளானு கூட அவருக்கு தெரியாது... சொல்லப்போனா எல்லாம் இருந்தும் பேபி அனாதை தான்.... அவரை பற்றி கவலைப்படவேண்டிய எந்த அவசியமும் இல்லை... அவருக்கு ஆண்டு அனுபவிக்க சொத்தும் சீராட்ட ஊருக்கு தெரியாமல் ஒரு குடும்பமும் இருக்கு.... அதனால அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை... விட்டது தொல்லைனு நிம்மதியாக இருப்பாரு...” என்று அஜய் வெறுப்புடன் கூற ஸ்ரவ்யாவின் தந்தை பற்றியறிந்த தேவ்வும் அதை ஏற்றான்....

“அஜய் நான் சூட்டி இருக்கிற வீட்டுலயே தங்கிக்கிறேன்...”

“தேவ்...” என்று அபி அழைக்க

“ஆமா அபி... அவளை என்னோட கைக்குள்ள வைத்து பார்த்துக்க போறேன்... அதுக்கு நான் அங்க தங்குனா தான் சரிப்படும்...”

“ஆனா தேவ் அம்மா அப்பா...”

“அவங்களுக்கு இப்போ எந்த விஷயமும் தெரிவேண்டாம்... நான் வேலை விஷயமாக கொழும்புல தங்கியிருக்கேன்னு சொல்கிறேன்... முதல்ல சூட்டி குணமாகட்டும்... பிறகு மற்றதை பார்த்துக்கலாம்..” என்று தேவ் கூறிட அபியிற்கும் அதுவே சரியென்று பட்டது..
அன்றே தன் உடமைகளுடன் ஸ்ரவ்யா தங்கியிருந்த வீட்டிற்கு கிளம்பினான் தேவ்.... அஜய் அபியுடனேயே அவன் பிளாட்டில் தங்கியிருக்க தேவ் ஸ்ரவ்யாவின் வீட்டில் எதிர்வரும் நாட்களை எதிர்கொள்ள தயாரானான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN