துயில் 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ருத்ரமாதேவி ஒன்றும் பரம்பரை பணக்காரியோ அல்லது அரசியல் குடும்பத்தில் இருந்து வந்த வாரிசோ அல்ல. தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் சால்னா கடை வைத்திருந்து தன் பிழைப்பை ஓட்டியவர் தான் ருத்ரமாதேவியின் அன்னை. அவர் நம்பி ஒருவனை திருமணம் செய்ய, அவன் குடித்தே இறந்துவிட, பின் தாய் மகள் இருவருக்கும் இந்த சால்னா கடை தான் வயிற்றுப் பாட்டுக்கான தொழில். அப்போது அங்கு கடைக்கு வந்து போகும் சில அடியாட்ளுகளுடன் பழக்கம் ஏற்பட… அதன் பழக்கமே பிற்காலத்தில் அந்த அடியாட்களின் தலைவனுடன்... அதாவது அரசியல்வாதியுடன் நெருக்கமான பழக்கமாகிப் போனது ருத்ரமாதேவியின் தாய்க்கு.

அவரும் தான் என்ன செய்வார்… எத்தனை நாளைக்குத் தான் வயது வந்த மகளை வைத்துக் கொண்டு இரவு பன்னிரெண்டு மணி வரை சால்னா கடையை ஓட்டுவார்? அதனால் முறையற்ற தாரமாக இருந்தாலும் பரவாயில்லை என்று அரசியல்வாதியுடன் ஒத்துப்போய் விட்டார் அவர். தாயைப் போல மகளும் தன் தேவைக்கு, அதாவது... பெரியதாக அரசியல் பதவியில் வர வேண்டும் என்ற ஆசையில், ஒரு மத்திய அமைச்சரிடம் அடைக்கலமாகி விட... அங்கு ஆரம்பித்தது ருத்ரமாதேவியின் அரசியல் வாழ்வு. அந்த அமைச்சரின் உரிமையுள்ள வாரிசுகளை எல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, அவர் ஆரம்பித்த கட்சியையே தன் வசமாக்கிக் கொண்டார் அவர்.

அப்போது எதிரிகளுக்கு சொல்லவா வேண்டும்? ஆனால் இவர்களில் தேவியம்மைக்குத் தன் விசுவாசத்தில் நாயாக இருந்தான் கோட்டை ராஜன். அதற்கு அவனுக்கு கிடைத்த சன்மானம் தான் தன்னைப் போல் சிங்கமாய் கர்ஜிக்காமல் பிறந்ததிலிருந்து எலிக் குட்டியாய் இருக்கும் தன் ஒரே மகளை அவனுக்குக் கட்டி வைத்து மருமகனான கோட்டை ராஜனை அவருக்குப் பின் அரசியல் வாரிசாக மாற்றினார் தேவியம்மை.

என்ன தான் பல அரசியல் தந்திரங்களை மருமகன் கற்றிருந்தாலும் அவனால் ஒரு மத்திய அமைச்சராகத் தான் வர முடிந்தது. பிரதம மந்திரியாக இருந்து பலரை அதிகாரம் செய்து நாட்டையே ஆண்டு வாழ்ந்து வந்த தேவியம்மைக்கு, இந்த மத்திய அமைச்சர் பதவியில் கிடைத்த பேரும் புகழும் பணமும் பற்றாமல் போக... உடனே அவருடைய பார்வை மூத்த பேரன் ருத்ரதீரன் மேல் விழ, அவர் எண்ணங்களை மறுபடியும் உயிர்ப்பித்துக் கொடுக்க வந்த தெய்வமாகவே அவனை நினைத்தார் அவர்.

ஒருவேளை, அவர் கேட்டது நடந்திருக்கும்... அதாவது, ருத்ரதீரனின் எட்டாவது வயதில் அவன் தன் குடும்பத்தினருடன் கனடா சென்று செட்டில் ஆகாமல் இருந்திருந்தால் நூற்றுக்கு இருநூறு சதவீதம் அப்படி நடக்க ஒரு வாய்ப்பாய் இருந்திருக்கும். ஆனால் அவன் தாய், தம்பி ஆகாஷ், தங்கை பவிதா… இவர்களுடன் அவன் கடல் கடந்து போனது தான் ருத்ரதீரனுடைய நல்ல நேரமாகிப் போனது. அதுவே தேவியம்மையின் கெட்ட நேரம் என்று மாறி போனது. ஆமாம், இந்த மூவர் தான் அவனைப் பொறுத்தவரை அவனுக்கு குடும்பம். அந்த குடும்பத்தில் இடையில் ஒருத்தி வந்து சேர்ந்தாள்... தற்போது இடையிலேயே அவனை விட்டு விலகிச் சென்று விட்டாள் அவள். எங்கோ உயிரோடாவது இருப்பாளா? சந்தேகம் தான்!

இவனுக்கு எட்டு வயது இருக்கும் போது... பிரதான எதிர்க்கட்சியில் முக்கிய அரசியல் பிரமுகர் குண்டுவெடிப்பில் இறந்து விட, அது சம்பந்தமாய் தேவியம்மை மேல் எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து அவர் பதவி இழந்ததோடு மட்டுமில்லாமல் அவர் மேலும் சி.பி.ஐ விசாரணை பாய… இதனால் வெளியில் செல்வதற்கும் வெளியூர் போவதற்கும் வருவதற்கும் ஆயிரத்தெட்டு கேள்விகள் நிபந்தனைகள். குடும்பத்தில் அசௌகரியமான சூழ்நிலை நிலவியது.

அரசியல் குடும்பத்தில் பிறந்து வளர்ந்திருந்தாலும் அரசியலே பிடிக்காத கயல்விழி, அதனால் தான் பெற்ற பிள்ளைகளுக்கு இனி இந்த அரசியல் சங்காத்தமே வேண்டாம் என்று முடிவு செய்தவர்… ஆறு வயது சின்ன மகனையும், நான்கு வயது பெண்ணையும் அழைத்துக் கொண்டு பெரிய மகனுடன் கனடா சென்றவர் தான். இதில்… இறந்தவரின் விஸ்வாசிகளால் பிள்ளைகளின் உயிருக்கும் ஆபத்து என்பதால், கோட்டை ராஜன் கூட மறுப்பு சொல்லலாமல் மனைவிக்கு அனைத்து உதவிகளையும் செய்து அனைவரையும் கனடா அனுப்பி வைத்தார்.

விசாரணையை ஒன்றும் இல்லாமல் செய்து தேவியம்மை அதிலிருந்து வெளிவந்த பிறகும், ஏனோ கனடா சென்ற இவர்கள் மட்டும் திரும்ப இந்தியா வரவே இல்லை. வர யாருக்கும் விருப்பம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அன்று சறுக்கிய தன் அரசியல் கனவை நினைத்து இன்று வரை தேவியம்மைக்கு வருத்தம் தான். அதன் பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவுக்குக்குத் தான் ருத்ரதீரனும் அவன் குடும்பத்தாரும் இந்தியா வந்து சென்றார்கள்.

ருத்ரதீரன் டிகிரி முடித்தவன். ஆனால் அதெல்லாம் அவனுக்கு ஏட்டளவு தான். அவன் கனவு, லட்சியம் எல்லாம் மைக்கேல் ஜாக்சன் போல் உலகளவில் சிறந்த நடனக் கலைஞன் என்ற பெயரை எடுப்பது தான். இந்த உலகத்தில் எந்த வகை நடனம் இருந்தாலும் அவை அனைத்தையும் கற்றுக் கொள்ள ஆர்வம் உள்ளவன். நடனத்தின் மேல் தீராத காதல் என்று கூட சொல்லலாம்.

தனக்குள்ள தீராக் காதல் போல் மற்றவர் யாருக்கேனும் இருந்தால் அவர்கள் அனைவரும் தங்கள் கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள, உலகம் முழுவதும் இவன் அமைப்பில் நடனப் பள்ளி வைக்க வேண்டும் என்பதே இவன் லட்சியம்.

அப்படி ஒரு உன்னதமான தன் லட்சியம் நிறைவேற இவன் செய்தது என்னமோ ஒரு கொடிய பாவத்தைத் தான்... அன்று செய்த அந்தப் பாவத்தின் பலனாகத் தான் இன்று இவன் இப்படி படுத்திருக்கிறானோ... இவனால் பாவம் இழைக்கப் பட்ட அந்த உள்ளம் தான் இதற்கு பதில் சொல்லவேண்டும். ஆனால் விடை தான் கிடைக்குமா?

அப்படி எல்லாம் நித்தமும் ஆடலுடன் பாடலுடன் பம்பரமாய் சுழன்று கொண்டிருந்தவன் தான் இன்று இப்படி படுக்கையில் இருக்கிறான்.

நாற்பத்தியெட்டு மணிநேரம் சென்ற பிறகு தான் கண் விழித்தான் ருத்ரதீரன்.

முதலில், சற்றே சிரமப் பட்டு கண்விழித்தவனுக்கு, ஒன்றும் தெளிவாக அறிய முடியாத புகை மண்டலமாகத் தான் அவன் முன் காட்சிகள் இருந்தது. மறுபடியும் மயக்கத்திற்குச் சென்றவன், பின் விழித்த போது ஓரளவு அவனுக்கு காட்சிகள் தெளிவாகத் தெரிந்தது.

மகன் பக்கத்திலேயே கயல்விழி இருந்ததால், “என்ன டா தீரா செய்யுது… என்னப்பா அப்படி பார்க்கிற?” என்று இவர் மகனிடம் வினவ

ஒரு அந்நியப் பார்வையுடன் தாயைப் பார்த்தவனோ, “ஆமாம்… நீங்க யாரு?” என்று எடுத்த உடனே கேட்டு அவர் தலையில் இடியை இறக்க… தாய்க்கு மட்டுமா? பேரனை வைத்து கோட்டையில் கொடி நாட்ட இருந்த தேவியம்மையின் கனவுக் கோட்டையும் அல்லவா தூள் தூளானது...

அந்த அந்நியப் பார்வையைக் கூட ஒரு நொடி பார்த்தவனோ... அடுத்த நொடி குழப்பப் பார்வையுடன் துயிலில் ஆழ்ந்தான் அவன்.

டாக்டர்களுக்குத் தகவல் சொல்லப் பட... மறுபடியும் அவன் கேஸ் ஃபைலைப் புரட்டியபடி விவாதத்தில் இறங்கியது பத்து பேர் கொண்ட மருத்துவக் குழு. இறுதியில் கிடைத்த பதில்... அவனுக்கு மண்டையில் அடி பட்டதால்… சில விஷயங்கள், உறவுகள், சம்பவங்கள் மறந்திருக்க வாய்ப்பு இருப்பதாக அவர்கள் கண்டறிந்ததைச் சொல்ல… கேட்ட மொத்த குடும்பமுமே அதிர்ந்து போனார்கள்.

“என்னங்கடா... உங்க காலேஜ் ஸ்டூடென்ட் பீஸ்க்கு இந்த தேவியம்மை உதவி தேவை, உங்க சொகுசு வாழ்க்கைக்கு எல்லாம் நான் தான் எல்லாம் செய்யணும். ஆனா இங்க எவனுக்கும் என் பேரனைக் காப்பாற்ற துப்பு இல்ல இல்லை? எனக்குத் தெரியாது... என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ… எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன். எனக்கு என் பழைய பேரன் வேணும். அப்படி நடக்கலை...” அங்கிருந்த இரும்பு பூ ஜாடியை அவர் தூக்கி அடிக்க, அது சரியாய் ‘படார்’ என்ற சத்தத்துடன் கண்ணாடி கதவில் பட்டு சுக்கு நூறாய் கண்ணாடியைச் சிதற அடித்தது.

அங்கிருந்தவர்கள் அரண்டு போனவர்களாக தலைமை மருத்துவரைப் பார்க்க, அவரோ “மேம், கொஞ்சம் புரிஞ்சிக்கோங்க. உங்க பேரன் எந்த நிலைமையில இங்க வந்தாருன்னு உங்களுக்குத் தெரியும். நாங்க எங்களால் முடிந்ததை செய்துட்டோம். இப்போ அவருக்கு நினைவு வரலனா... அது அவர் மூளையில் ஏற்பட்ட அதிர்ச்சியால் கூட இருக்கலாம். இந்த விபத்து அவருக்கு மறு பிறவி. சோ, கொஞ்சம் நாள் கடந்து தான் பார்க்கனும்?

By the way… அவர் ஏதோ அன்கான்சஷியஸ் மைண்ட்ல கூட அப்படி தெரியலைனு கேட்டிருக்கலாம். மறுமுறை அவர் கண் விழித்ததும் உங்க உறவுகள் எல்லோரையும் கொஞ்சம் மெதுவா அவர் கிட்ட பேச்சு கொடுக்கச் சொல்லுங்க. By god grace நல்லதே நடக்கும். அதுக்கு மேல் எங்க மேலே கோபப்படறதுக்கு எதுவும் இல்லை மேம்” மெத்தப் படித்த இவன் தற்குறியான அந்த சால்னா கடைக்காரியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். இவன் படித்து மக்களுக்கு சேவை செய்ய வந்தவன் என்றால்... அந்த மக்களே தேர்ந்தெடுத்த தலைவியாயிற்றே அவள். அந்த அதிகாரம் அவளிடம் இருக்காத என்ன?

மறுமுறை ருத்ரதீரன் கண்விழித்த நேரம், டாக்டர் சொன்னது போல் மொத்த குடும்பமுமே அவனைச் சுற்றி குழுமியிருந்தார்கள். அனைவரும் ஆவலே வடிவாய் அவனையே காண... அவன் தங்கையோ சட்டென அவன் கட்டிலை நெருங்கியவள்,

“அண்ணா.... அண்ணா.... என்ன தெரியுதா? நான் உன்னோட செல்ல பவிகுட்டி ணா. என்ன கொஞ்சும் போது குட்டி செல்லம்னு கொஞ்சுவியே... ஞாபகம் இருக்கா ணா?” தான் இருபது வயது குமரி என்பதையும் மறந்து எங்கே தன் அண்ணன் தன்னை தெரியவில்லை என்று சொல்லிவிடுவானோ என்ற பயத்தில் கன்னத்தில் கண்ணீரின் கோடுகள் தடம் பதிய கேவியபடி தன் அண்ணனிடம் கேட்டு கொண்டு இருந்தாள் அவனின் செல்லத் தங்கை.

இவள் ஆரம்பித்ததும் உடனே ஆகாஷ், “அண்ணா, என்ன தெரியுதா... நான் தான் ஆகாஷ்” என்க

உடனே “அண்ணா இவன் பெயர் ஆகாஷ் இல்லண்ணா… டெபாசிட் கெளன்டர்ணா. அதானே நாம் இவனுக்கு வைத்த பேரு?” சிறு கொஞ்சலுடன் பவிதா அண்ணனுக்கு நினைவு படுத்த,

அவன் நண்பன் விபாகரனோ, “டேய் தீரா, நான் உன் ஃபிரண்ட் விபா டா. இந்தியா வந்தா, நீ என் கூடத்தான் டா ஊர் சுற்றுவ. ஞாபகம் இருக்கா?” என்று அவன் பங்குக்கு சொல்ல, இவை அனைத்திற்கும் ருத்ரதீரனோ ஒன்றும் புரியாமல் விழிக்க.... எல்லோரையும் தள்ளிக் கொண்டு பேரனிடம் வந்த தேவியம்மை,

“நைனா... என்ன தெரியுதா அப்பு? நான் உன் பாட்டி ப்பா....” என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டவர், “தோ… இவன் உன் அப்பா... இவ உன் அம்மா டா” என்று இருவரையும் அவரே அறிமுகப்படுத்த

அங்கிருந்த அனைவரையும் இடதுபுறம் ஆரம்பித்து தன் வலதுபுறம் வரை பார்வையைச் சுழல விட்டு பார்த்தவனோ, பின் ஒன்றும் புரியாமல் ஒருவித தேடலுடன் மறுபடியும் அவன் பார்வை வலதுபுறத்திலிருந்து இடதுபுடம் சுழன்றது. ஒருவேளை… தன்னவளைத் தேடி இருப்பானோ?

பின் கண்களைச் சோர்வாக மூடியவனோ, “எனக்கு என்னையே யாருன்னு தெரியல” என்க, அங்கிருந்த அனைவருமே ஸ்தம்பித்துப் போனார்கள்.

ஆக மொத்தத்தில் நம் நாயகனுக்கு அம்னீஷியா நோய் என்று முடிவு செய்தார்கள் மருத்துவர்கள். தன்னையே யார் என்று அறிய முடியாத நிலையில் இருந்தான் அவன்...

இவை அனைத்தையும் இவனுக்காகத் துடித்துக் கொண்டிருந்த இன்னோர் ஜீவனுக்கு சொல்லப் படவும், “சீக்கிரம் சரி ஆகிடும்... என் ருத்ரன் சீக்கிரம் பழைய படி மாறிடுவார். ஆனா, நான் மட்டும் அவர் பக்கத்தில் இருக்க மாட்டேன். உங்களுக்கு எல்லாம் கொடுத்த வாக்குப் படி நான் அவரை விட்டு எங்கேயாவது போகிறேன். அவரை நல்ல மாதிரி பார்த்துக்கோங்க”

கண்ணிலிருந்து அருவியாய் கண்ணீர் கொட்ட... தன்னையும் மீறி வெளிவர இருந்த கேவலை இடதுகையால் வாய் பொத்தி அடக்கியவள், தன் வலது கையிலிருந்த போனை நழுவ விடாமல் கெட்டியாகப் பிடித்த படி... தன்னைச் சமாளித்தவள் பின் அந்த போனை காதுக்குக் கொண்டு சென்று,

“இதோ நான் கிளம்பிட்டேன்... நீங்க சொன்ன மாதிரி நான் கிளம்பிட்டேன். யாரையும் தெரியாத அவருக்கு என்னை மட்டுமா தெரியப் போகுது? அவர் என்னை மறந்தது மறந்ததாகவே இருக்கட்டும். கடைசிவரை அவருக்கு என் நினைவு வரவேண்டாம்”

இதைச் சொல்லும்போதே கேவியவள் அழைப்பைத் துண்டித்து விட்டு அடுத்த நொடியே தன் உடமைகளை எடுத்துக் கொண்டு வாடகைக் கார் பிடித்து விமான நிலையம் வந்தவள்... கண்ணில் நீரையும், நெஞ்சில் தன்னவனையும் சுமந்த படி இவள் விமானத்தில் அமர்ந்திருக்க... இவர்கள் இருவரின் காதலையும் சுமந்தபடி அதற்கு சாட்சியாக கொட்டும் மழையைக் கிழித்துக் கொண்டு பறந்தது கண்டம் தாண்டும் அந்த விமானம்.
 
என்னது amnishiya va avanaye avanuku யாரு nu theriyala யா.... Appo avan பாட்டி saalnaa கடை vechi இருந்தவங்க la நாள் இடைல அரசியல் வாதி ஆயி இருக்காங்க.... ஏன் ava avana vittu pora.... Super Super maa... Semma episode
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னது amnishiya va avanaye avanuku யாரு nu theriyala யா.... Appo avan பாட்டி saalnaa கடை vechi இருந்தவங்க la நாள் இடைல அரசியல் வாதி ஆயி இருக்காங்க.... ஏன் ava avana vittu pora.... Super Super maa... Semma episode
நன்றிங்க சித்து சிஸ் kiss heart kiss heart kiss heart kiss heart smilie 13 smilie 13 smilie 13 smilie 13 smilie 13
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN