🌹பாகம் 21🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு வழியாக கல்யாணம் ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு அனைவரும் வீடு திரும்பினர்.ருத்ரன் மீண்டும் ஏதோ அலுவல் என்று வெளியே சென்று விட, மற்றவர்கள் வாங்கி வந்த ஜவுளிகளை கடைப் பரப்பி பார்த்துக் கொண்டிருந்தனர்.
"இந்தா அக்கா , உனக்காக நான் எடுத்தது. நல்லாயிருக்கா? பார்த்து சொல்லு பார்க்கலாம்''மது ருத்ரன் வாங்கிக் கொடுத்த சாரியை மயூராவிடம் குடுத்தாள்.

பார்த்தவுடன் அந்த சாரி மயூராவை பெரிதும் வசீகரித்து விட்டது."வாவ் எனக்கு புடிச்ச கலர் சாரி, இந்த மயிலு டிசைன் சூப்பர். என்னடி இது..என் சாரி இவ்வளவு விலையா எடுத்து இருக்க'' மயூரா கேட்க மது திருதிருவென விழித்தாள்.

"நான் எங்க எடுத்தேன், உம் புருஷன்தான் எடுத்தான். விலை எவ்வளவுனு கூட எனக்கு தெரியல யக்கா'' மது மனதுக்குள் முனங்கினாள்.

"அது வந்து...வந்து..''மது இழுக்க அந்தரன் உதவிக்கு வந்தான்.
"அட என்ன மயிலே, எங்களுக்காக திரும்ப வந்தவளுக்கு நாங்க இதை கூட வாங்கிக் குடுக்க கூடாதா? எங்கள்
மனத்திருப்திக்கு வாங்கிக்கோயேன் மயிலே''அந்தரன் பேசவும் மயூரா மகிழ்ச்சியாய் சிரித்தாள்.

"ரெண்டு பேருக்கும் நன்றி, சாரி செம்ம, மயிலுக்கு புடிச்சிருக்காம்''மயூரா சாரியை ஆசையாய் தோள் மேல் போட்டு காண்பித்தாள்.மயூரா அங்கிருந்து சென்றதும், மது அந்தரனுக்கு நன்றி சொன்னாள்.

"நன்றி மாமோய், நீ வந்து காப்பாத்திட்ட, இல்ல கருப்பாயி என்னை கண்டம் பண்ணியிருப்பா''மது கூற அந்தரன் சிரித்தான்.

"பின்ன என் பொண்டாட்டிய நான் தானே பார்த்துக்கணும்'' அந்தரன் காதலாய் மது காதை கடிக்க , மது வெட்கத்தில் சிரித்தாள்.பின் அந்தரன் கிளம்பி விட, அனைவரும் அவரவர் அறைக்கு கலைந்து சென்றனர். இரவு வெகு நேரமாகியும் ருத்ரன் வீடு திரும்ப வில்லை. ஷாப்பிங் சென்று வந்த களைப்பில் அனைவரும் உறங்கியிருக்க, மயூரா மட்டும் அவள் அறையில் மதுவின் கல்யாண புடவைக்கு ஜாக்கேட்டில் எம்பிராய்டரி ஒர்க் பண்ணிக் கொண்டிருந்தாள் .

அப்பொழுது கீழே யாரோ எதையோ உருட்டும் சத்தம் கேட்கவும், மயூரா திடுக்கிட்டாள். என்ன சத்தம் என்று பார்க்க கீழே இறங்கிச் சென்றாள்.ஹீலிங் ரூம் அருகே சத்தம் வரவும், அங்கு சென்று பார்த்தாள் . அங்கே ருத்ரன் தான் எதையோ தேடிக் கொண்டிருந்தான். "இந்த அகால வேளையில் இந்த நெட்டக் கொக்கு இங்க என்ன உருட்டிக்கிட்டு இருக்கான்.'' மயூரா மனதிற்குள் எண்ணியவாறே அவனை நோக்கி முன்னேறி னாள்.

"இந்த நேரத்தில் இங்க என்ன உருட்டிக்கிட்டு இருக்க மாமா? ''மயூரா கேள்வியில் திட்டுக்கிட்டு அவள் புறம் திரும்பினான் ருத்ரன்.அவன் நின்ற கோலம் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்ததது. தலை கலைந்து கண்கள் சிவந்து ரொம்ப களைப்புற்றவன் போல் இருந்தான்.

" மைக்ரேன் மயூரா.. பெயின் கில்லர் எடுக்க வந்தேன். மது எங்க வெச்சானு தெரியல. வலி உயிரை போகுது. ரொம்ப நைட் ஆயிடுச்சு. அவளை ஏன் எழுப்புவான்னு தான் நானே தேடிக்கிட்டு இருக்கேன்''

அப்பொழுது தான் மயூராவிற்கு நினைவு வந்தது. மது கூறினாளே தான் வீட்டில் இல்லாத ஐந்து வருடங்கள் அவன் வலி குறையவே இல்லை. மாத்திரைகள் துணையோடு இத்தனை நாட்களை சமாளித்திருக்கிறான் என்று.
அவளுக்கு உள்ளே ஏதோ பண்ணியது. அவன் வலிக்கு அவள் தானே நிவாரணி. அவள் நின்றிருந்த நேரம் ருத்ரன் மருந்தை தேடிக் கண்டு பிடித்திருந்தான். அதை அவன் கையில் எடுக்கும் வேளை, மயூரா அவன் கைப் பற்றி தடுத்தாள்.

"மருந்து வேண்டாம் மாமா. நீ போய் படுத்துக்கோ. நான் தலை பிடிச்சு விடறேன். சரி ஆயிடும்'' மயூரா கூற அவன் தலையசைத்தான்.

"நீ ஏதாச்சும் சாப்டியா மாமா '' அவள் கேக்க அதற்கும் இல்லை என்று தலை யசைத்தான்.

"நேரத்துக்கு சாப்பிடாம வயித்த காயப் போட்டு தான் இப்படி தலை வலினு கஷ்டப்படற '' மயூரா அவளுக்குள் முனங்கியவாறே கிச்சனுக்குச் சென்றாள்.

சுட சுட இரண்டு தோசை வார்த்து, சட்டினி சூடு பண்ணினாள். இரண்டு இஞ்சி தட்டி போட்டு தண்ணீர் விட்டு கஷாயம் தயாரித்து கொஞ்சம் தேன் கலந்து குடிக்கும் பதத்தில் தயாரித்து எடுத்துக் கொண்டாள் .வலியில் கண்மூடி படுத்திருந்த ருத்ரனை எழுப்பி இரண்டு தோசைகளையும் ஊட்டி விட்டாள். இஞ்சி டீ குடிக்க குடுத்தாள்.

அவளின் அந்த செய்கை ருத்ரனை கண் கலங்க வைத்தது. அவன் வலியில் கண் கலங்குறான்னு மயூரா நினைத்துக் கொண்டாள்.
"படுத்துக்கோ மாமா , நான் தலை பிடிச்சு விடறேன்.''
அவன் அருகில் அமர்ந்து தலை பிடித்து விட தொடங்கினாள்.அவள் விரல்கள் அவன் நெற்றியை தடவ தடவ சொல்ல முடியாத ஒரு நிம்மதி அவனுள் பரவியது.

5 வருடங்களில் மாறாத அவள் வருடல்கள். அவன் தலை தன்னிச்சையாக நகர்ந்து அவள் மடியை தஞ்சமடைந்தது.
பிடித்து கொண்டிருந்த விரல்கள் சிறிது நேரம் ஸ்தம்பிக்க, மயூரவிற்குள் பூகம்பமாய் மூண்டு எழுந்த அந்த உணர்வு சில நிமிடங்கள் நீடித்தது.அவள் எதுவும் பேசவே இல்லை. இயந்தர கதியாய் அவள் கரங்கள் இயங்கியது.

அவள் விழி உறக்கத்தை வாங்கிக் கொண்டு ஐந்து வருடங்களுக்கு பிறகு மிகவும் நிம்மதியாக அவள் மடி மீது பிள்ளையாய் ருத்ரன் உறங்கிக் கொண்டிருந்தான்.

கரங்களில் தவழ்ந்த கனவுகள்...

இரு விழிகளில் கரைந்து முடியுதே..
இதயத்தில் மலர்ந்த நினைவுகள்..
இன்று நிஜங்களை இழந்து தவிக்குதே..
பிரிந்து போன நானும்..
மறந்து போன நீயும் ...
மௌனமாய் கலந்து பிரிகிறோம்...
துளி நேசம்.. விழி பேசும்..
உயிர் கொண்ட காதல்
உருகி மருகி கருகி போனதே..
தொலைவில் தொலைந்த காதலே..
அருகில் தவிக்க நோகுதே..
தனிமை வரங்கள் ஆகிய
தருணம் மறந்து போகுதே..
வர வா வாழ்க்கையை உன்னுடன் பகிர நானும்..
தர வா உன்னையே என்னிடம் தினமும் நீயும்..
உயிர் தேடுதே..உனை நாடுதே..
கனவாய் கலைந்திடும் நினைவே நீயே..
உறவாய் மகிழ்ந்திடும் உயிரும் நானே..
தொடராமல் போகுமோ இந்த பந்தம்?
துணையே என்றும் இவள் உந்தன் சொந்தம்..
கனலாகி போகுமா? கதையாகி போகுமா?
விதி போகும் பாதையில் மதி கூட்டி போகுது..
தனியாகி போகிறேன்...
துணையாகி ஓடி வா..

மௌன கண்ணீரில் கரைந்து போனது அவள் இரவு. இரும்பு சுமையை தனக்கு தந்துவிட்டு நிம்மதியாக உறங்குபவனின் நிர்மலமான முகத்தை மெதுவாக வருடிக் கொடுத்தாள்.எல்லாமே சரியாக நடந்திருந்தால், இந்நேரம் ஒரு குட்டி ருத்ராவோ இல்லை சுட்டி மயூராவோ பிறந்திருப்பார்கள்.

கலவையான உணர்வுகளோடு அவள் அமர்ந்தபடியே உறங்க, பழக்க தோஷத்தில் ருத்ரா தலை திரும்பி அவள் வயிற்றோடு புதைந்து கொண்டு நிம்மதியாக உறங்கி விட்டிருந்தான்.
அதிகாலையில் கண் விழித்த மயூரா, அவன் தலையை மெத்தை மேல் நகர்த்தி நன்றாக படுக்கும்படி செய்து விட்டு தன்னறைக்குத் திரும்பினாள்.


*தொடரும்
 

Author: KaNi
Article Title: 🌹பாகம் 21🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN