என்னடி மாயாவி நீ: 9, 10

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 9

சிறுபிள்ளையிலிருந்து டீனேஜ் வயசில் கால் வைக்கும் அழகான மாணவ பருவம் இது. இந்த பருவம் தான் வாழ்க்கை என்றால் என்ன, வாழ்க்கையில் இதற்கடுத்து நடக்கவிருப்பது என்ன என்பதை கூறும் பருவம்.

முதல் நட்பும் இங்கே தான், ஏன் சிலருக்கு முதல் காதல் கூட மலருவதும் இங்கே தான். முதல் நட்பெல்லாம் நல்ல நட்பாகிவிடாது. அதுபோல தான் இவர்களின் நட்பும் முதல் நட்பல்ல. ஆனால், காலம் கடந்து காவியம் பாடுமளவிற்கு இவர்களின் நட்பு புனிதமானது.

ஜூன் மாதம் என்றாலே எல்லாருக்கும் நினைவை தட்டுவது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகளின் திறப்புதான்.

வர்ஷித் தனது சொந்த ஊரான தஞ்சாவூர் அருகிலுள்ள பூவலுர் (கற்பனை ஊர்) கிராமத்திலிருந்து திருச்சிக்கு வந்தான். குமாரசாமி வர்ஷித்தை திருச்சியில் 8ஆம் வகுப்பு சேர்த்துவிட்டு, விடுதியிலும் சேர்த்தார். அவரும் ஆசை ஆசையை வளர்த்த பிள்ளையை மனசு கேட்காமல் தான் விடுதியில் சேர்த்தார் அவன் வாழ்க்கை நல்லா இருக்கணும் என்னும் நோக்கில். அவனும் சிறுவயதிலிருந்து வீட்டில் இருந்துவிட்டு தீடிரென்று பழக்கமில்லாத ஊர், தெரியாத நபர்கள், புது பள்ளிக்கூடம் என எல்லாமே வர்ஷித்திற்கு அறிமுகமில்லாதவைகளாகவும் விடுதியை நினைத்து கொஞ்சம் பயமாகவும் இருந்தது.

அன்றுதான் பள்ளிகள் திறக்கப்பட்டு முதல் நாள். விஷ்ணு L.K.G யிலிருந்து அதே பள்ளியில் தான் படித்து வந்தான். அவனுக்கு முதல் நாள் பள்ளி என்பதில் பெரிய மாற்றம் ஏதும் தோன்றவில்லை. அதே நண்பர் கூட்டம், அதே பள்ளிக்கூடம், என்ன முன்னாடி 7ஆம் வகுப்பு, இப்போ 8ஆம் வகுப்பிற்கு மாறியிருந்தான். முதல் நாளில் வர்ஷித்தை பள்ளியிலும் விடுதியிலும் சேர்த்துவிட்டு அவனது மாமா குமாரசாமி கிளம்பினார் தன் வருத்தத்தை மறைத்து, தான் வருந்தினால் அவனும் வருந்துவான் என.

வர்ஷித் வகுப்பறைக்குள் நுழையும் போது ஆசிரியர் முதல் வகுப்பு என்பதால் பொதுவாக பேசிக்கொண்டு இருந்தார். வர்ஷித் வந்ததும் அவனது பெயர் மற்றும் ஊரை கேட்டுவிட்டு அவன் உயரமாக இருப்பதால், கடைசி பெஞ்சிற்கு சென்று அமர சொன்னார். அந்த இருக்கையை தான் நாம் காலம் காலமாக 'மாப்பிள்ளை பெஞ்சு' என்றழைப்பது வழக்கம்.

ஏற்கனவே, கடைசி
இருக்கையில் மூன்று பேர் பழைய மாணவர்கள் அமர்ந்திருந்தனர். அந்த மூன்று பேரின் நடுவில் தான் விஷ்ணு இடம் பெற்றிருந்தான். இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் இல்லை என விஷ்ணு இருந்தான். ஆசிரியர் சொன்னதும் வர்ஷித்தும் கடைசி இருக்கைக்கு சென்றான். விஷ்ணுவின் இருபுறம் உள்ள மாணவர்கள் அவனுக்கு முகத்தாலே வெறுப்பை காட்டினார்கள். ஆனால், ஆசிரியர் சொன்னதால் வேறு வழியில்லாமல் இடம் கொடுத்தனர். விஷ்ணு இதனை கண்டுக்கொள்ளவேயில்லை. வர்ஷித் முன்பு எல்லாம் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தாலும் இப்போது சங்கடமாக இருந்தது.

அந்த வகுப்பு முடிந்து ஆசிரியர் வெளியேறியதும் விஷ்ணுவை தவிர மற்ற இருவரும் வர்ஷித்தை இந்த இடத்தை விட்டு, முன்னாடி பெஞ்சில் உட்கார சொன்னார்கள். அவனுக்குமே அங்கு அமர பிடிக்காமல் போனது. அவன் போவதை பற்றி விஷ்ணு ஏதும் கூறவில்லை.

அந்த வாரத்திலேயே ஒரு நாள் மதியம், வர்ஷித் மட்டும் தனியாக மரத்தடியில் அமர்ந்து, விடுதியிலிருந்து கொண்டு வந்த உணவு டப்பாவை திறந்து வைத்துக்கொண்டு உட்காந்திருந்தான். விஷ்ணு அவனை கவனித்து கொண்டிருந்தான். வர்ஷித்தோ உணவை வேண்டா வெறுப்பாக பார்த்து கொண்டிருந்தான். அவன் கண்களிலிருந்து கண்ணீர் துளிகள் கன்னத்தை தொட்டு பார்த்தது, அவனது மனதில் வீட்டு நியாபகங்கள் வாழ்ந்து கொண்டிருந்ததால்...

இதையெல்லாம் கவனித்த விஷ்ணு மட்டும் தனியாக அவ்விடத்தில் இருந்ததால், வர்ஷித்திடம் சென்று, 'ஏன் சாப்பிடாம டப்பாவ பார்த்துட்டு உட்காந்துருக்க' என கேட்க, வர்ஷித் அவனை பார்த்து 'பிடிக்கல' என்றான். சரி என்கூட வா என்று அவனை கை பிடித்து அழைத்து இவனது ஸ்னாக்ஸை எடுத்து கொடுத்து சாப்பிட வைத்தான்.'நன்றி' என்ற சொல்லோடு வர்ஷித் சென்றுவிட்டான். வர்ஷித்திற்கு சிறு வருத்தம் விஷ்ணு மீது, அன்று அவன் பெஞ்சில் உட்காரும்போது இவனது நண்பர்கள் மறுத்ததை நினைத்து. இவனுக்கு தினமும் மதிய சாப்பாடு நகரமானதை தெரிந்த விஷ்ணு, ஒரு நாள் இவனாகவே வர்ஷித்திற்கும் சேர்த்து மதிய உணவை வீட்டில் கேட்டு வாங்கி கொண்டு வந்திருந்தான். வர்ஷித்திடம் கொடுத்ததுக்கு, அவன் முதலில் வாங்கிக்கொள்ளவில்லை. பிறகு, பேசி போராடி வாங்கி கொள்ள செய்தான். வாங்கிக்கொண்டதோடு விடாமல் அருகிலே அமர்ந்து சாப்பிடவும் வைத்தான். பிறகு, வர்ஷித் தனது கோபத்தை விஷ்ணுவிடம் கூறும்போது, அவனோ சிரிப்புடன் "அவனுங்க L.K.G யிலிருந்து என்னோட கிளாஸ்மேட் டா அதனால அன்னைக்கு ஒண்ணுமே பண்ண முடில, இதுக்கெல்லாமா கோச்சுக்குவ சரி ஓகே இனிமேல் நாம பிரண்ட்ஸ் ஆனால், உன் கூட எப்பவுமே இருக்க முடியாது, அவனுங்க கூட சாப்பிட்டுட்டு, நீ சாப்பிடும்போது உன்கூட இதுமாதிரி பேசிகிட்டு இருக்கேன் சரியா. இனிமேல், நானே உனக்கு மதிய சாப்பாடு கொண்டு வரேன்" என கூறியவனின் வெகுளி பேச்சு பிடித்திருந்ததால், வர்ஷித் எல்லாத்துக்கும் சரி என்றே மண்டையை ஆட்டினான்.

தினமும் வர்ஷித்திற்கு சாப்பாடு கொண்டு வருவது விஷ்ணுவின் வழக்கமாயிற்று. வர்ஷித்தும் இரண்டு மூன்று நாட்கள் வேண்டாம் என முற்றுகையிட்டாலும் விஷ்ணு அதை பொருட்படுத்தவில்லை. பிறகு, வர்ஷித்தும் இதை ஏற்றுக்கொண்டான். இவர்களின் நட்பும் வளர ஆரம்பித்தது.

சில நாட்கள் இப்படியே நகர, பள்ளியில் ஸ்போர்ட்ஸ் டேயும் வந்தது. விஷ்ணு ஸ்போர்ட்ஸில் உள்ளதால், அவனுக்கு தலைக்குமேல் வேலையிருந்தது. அவன் நண்பர்கள் இருவரும், 'அதான் உனக்குதான் புது பிரண்ட் கிடைச்சிருக்கானேடா அப்புறம் என்ன அவன்கிட்ட கொடுத்து நோட்ஸ் எழுத சொல்லுடா 'என சொல்ல மற்றொருவனோ, 'அதான் சோறு போட்டே ஒரு அடிமையை வச்சிருக்கியே அவன்கிட்ட கொடுத்தா, அவன் எழுத போறான்' என நக்கல் செய்தனர் இவனுடைய நட்பு பிடிக்காத நண்பர்கள். வர்ஷித், விஷ்ணுக்கு உதவ மாட்டான் என நம்பிக்கையில் பேசினர்.

விஷ்ணுவும் தயக்கத்தோடு வர்ஷித்திடம் சென்று உதவி கேட்டான். அவனும் மலர்ந்த முகம் மாறாமல் உதவி செய்றேன் என உதவினான். ஒருவாரம் முழுக்க விஷ்ணுக்கும் அவனது பெஞ்சில் உள்ள இருவருக்கும் ஸ்போர்ட்ஸ் டே வேளையில் ஈடுபட்டிருந்ததால், வகுப்பில் தலைக்கட்ட முடியவில்லை. சாப்பிடும் நேரம் மட்டுமே, விஷ்ணு வர்ஷித்திடம் பேசி கழித்தான்.

வகுப்பு நடத்தும்போது வர்ஷித் விஷ்ணுக்கும் நோட்டில் முழுதும் எழுதி வைத்திருந்தான். ஸ்போர்ட்ஸ் டே முடிந்து விஷ்ணு வகுப்புக்கு வரும்போது வர்ஷித் எல்லா நோட்டையும் எழுதி வைத்திருந்தான். விஷ்ணுவை விட அவனது இரு நண்பர்களுக்கு தான் பேரதிர்ச்சியாக இருந்தது, வர்ஷித்தின் நடவடிக்கை. விஷ்ணுக்கு மனசு முழுக்க ஆனந்தமாகயிருந்தது தமக்காக இவ்வளவு பன்றான் என.

வர்ஷித் ஏற்கனவே நன்றாக படிப்பவன். விஷ்ணு வகுப்புக்கு வந்ததும் வர்ஷித் அனைத்தையும் சொல்லியும் கொடுத்தான். அவனுக்கு மட்டுமல்ல அவனது இரு நண்பர்களுக்கும் நோட் கொடுத்து எழுத வைத்து சொல்லி கொடுத்தான். அவர்கள் இருவரின் மனதையே அசைத்து பார்த்தது வர்ஷித்தின் நல்ல குணம் தான். விஷ்ணுக்கும் இவன் தன் நண்பன் என கர்வமும் மேலோங்கியது. வர்ஷித்தை விஷ்ணு கடைசி பெஞ்சில் தன்னுடன் உட்கார வைத்து கொண்டான். அவனுடைய நண்பர்களும் வரவேற்றனர். வர்ஷித்தும் விஷ்ணுவும் பக்கத்தில் அமர்ந்திருந்தனர். இவர்களின் நட்பும் துளிர்த்த செடி போல, மலர்ந்த மொட்டு போல அழகாக வளர்ந்து கொண்டிருந்தது.

குடல் வலித்திடும் வரை தினமும் சிரித்தே கூத்தடிப்போம்...
உடல் வலித்திடும் வரை கைகளால் அணைத்தே குதூகலிப்போம்....
நீ அடித்தாலும் நீ பிடித்தாலும் என் நண்பன் தானடா....
நான் அழுதாலும் நான் சிரித்தாலும் என் துணையே
நீ தானடா...

8ஆம் வகுப்பு கடைசி பரிட்சை நெருங்கும் நேரத்தில், ஒருநாள் வர்ஷித் தனியாக அமர்ந்து கொண்டிருந்தான். பின்னாலிருந்து விஷ்ணு, வர்ஷித் தோளை தொட்ட பிறகு சுயநினைவு பெற்றவன் கண்ணீரை துடைக்கும் வேளையில், விஷ்ணு கவனித்தான் வர்ஷித் அழுவதை. காரணம் கேட்டவனிடத்தில் பதிலேதும் இல்லை. விஷ்ணுவோ," நான் எல்லாத்தையும் உன்கிட்ட தான் சொல்றேன்.ஆனால், நீ எதையும் சொல்றது இல்லை. நான் உனக்கு பெஸ்ட் பிரண்டா இருந்தா என்கிட்ட சொல்லு இல்லனா வேணாம்" என விஷ்ணு சொல்லிய பிறகே, வர்ஷித் அனைத்தையும் சொன்னான், எனக்கு ஹாஸ்டல தங்கவே பிடிக்கல என சாப்பாடு, காலையில் சீக்கிரமா எழுப்புவது முதல் இரவு தூங்கும் வரை அனைத்தும் பிடிக்கல என கூறி முடித்தான். இவனும் எவ்வளவோ சமாதானம் செய்தான். ஆனால், அவனின் வருத்தம் தினமும் வாடிக்கையாகிப்போனது.

அத்தியாயம்: 10

இந்நிலையில், ஒரு நாள் வர்ஷித் பள்ளிக்கு வரவில்லை. அவனும் காரணமின்றி விடுப்பு எடுப்பவன் இல்லையே என யூகித்தவன் விசாரித்ததில், அவனுக்கு காய்ச்சல் என தெரிந்துகொண்டான். அன்றிரவே, விடுதியிலிருந்து வர்ஷித் மாமாவுக்கு எவ்வளவு போன் அடித்தும் அவர் எடுக்கவில்லை. பிறகுதான், வர்ஷித் விஷ்ணுவின் வீட்டு நம்பர் கொடுத்தான். விடுதியிலிருந்து விஷ்ணு வீட்டிற்கு தகவல் சொன்னார்கள். விஷ்ணு வீட்டை பொறுத்தவரை வர்ஷித்தை பார்த்ததில்லை என்றாலும் விஷ்ணுவின் நட்பால் அவன் அங்கு உயிர் பெற்று வாழ்ந்து கொண்டிருப்பவன் தான். சொன்னவுடன், விஷ்ணுவும் சுப்பிரமணியனும் சென்று அவனை அழைத்து மருத்துமனையில் பார்த்து அவனை குணப்படுத்தி வைத்திருந்தனர். அவனுக்கும் அங்கு இருப்பது நல்ல உணர்வாக உணர்ந்தான்.
கிடைக்க பெறாத தாயின் அன்பும் தந்தையின் பாசமும் வர்ஷித்திற்கு அங்கு கிடைத்தது. அதோடு, நண்பன் கூடவே இருப்பதால், ரொம்ப மகிழ்ச்சியாக வாழ்ந்தான். அவனின் மகிழ்ச்சியை கலைக்காத வண்ணம் விஷ்ணுவின் அப்பாவும் அம்மாவும் வர்ஷித் இங்கே தங்கிக்கொள்வதை பற்றி அவனது மாமாவிடம் பேசலாம் என முடிவெடுத்தனர். பிறகு வர்ஷித்தை பார்க்க வந்த குமாரசாமியிடம் வர்ஷித்தை இங்கே வைத்துக்கொள்வதை பற்றி விஷ்ணுவின் பெற்றோர் கேட்டபோது முதலில் மறுத்தவர் வர்ஷித்தின் முகத்தை பார்த்து அவனது எண்ணத்தை தெரிந்து கொண்டார், அவன் இங்கே சந்தோசமாக இருப்பான், இவர்களும் அவனை நன்றாக கவனிப்பார் என நம்பிக்கை கொண்டதால் ஒத்துகொண்டார். பிறகு, இருவரும் ஒரே வீட்டில் இருந்தனர். எப்பயாவுது மாமா வந்து வர்ஷித்தை பார்ப்பது உண்டு. வசந்தாவிற்கும் அண்ணன் தம்பி யாரும் இல்லாததால், குமாரசாமியை தன் அண்ணனாகவே ஏற்றுக்கொண்டார். விஷ்ணுவும் மாமா என்றழைத்தே, அவரும் இந்த குடும்பத்தில் ஒருவரானார். காலங்கள் நகர்ந்தாலும் இருவரின் நட்பும் வளர்ந்ததே தவிர இம்மியும் குறையவில்லை. இருவரும் பள்ளி படிப்பு முடித்து ஒரே கல்லூரியில் சேர்ந்தனர். ஒரே பாட பிரிவை தேர்ந்தெடுத்தனர்.

வர்ஷித்தும் அந்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன் போலாகியிருந்தான். சுப்பிரமணி வசந்தாவிற்கும் வர்ஷித் இன்னொரு மகன் ஆனான். இருவருக்கும் பாசத்திற்கு அங்கு பஞ்சமேயில்லை. விஷ்ணுக்கும் தன் தந்தை தாயை நினைத்து பெருமையாக இருந்தது. விஷ்ணு பள்ளி போல கல்லூரியிலும் ஸ்போர்ட்ஸில் இருந்ததால், அவனுக்கும் சேர்த்தே எல்லா வேலையும் பார்ப்பது வர்ஷித் என்றால், அவனை நினைத்து பெருமை படுவது விஷ்ணு தான். விஷ்ணுக்கு ஒன்று என்றாலும் வர்ஷித்தும், வர்ஷித்துக்கு ஒன்று என்றால் விஷ்ணு வருவது வழக்கம். ஒருவரையொருவர் விட்டுக்கொடுப்பதே கிடையாது. அவர்களின் அறை முழுதும் இவர்களின் புகைப்படங்கள் தான் புகை மிதந்து கொண்டிருப்பது போல எல்லா இடத்திலும் பரவி அந்த அறையை அலங்கரித்தது. அன்று முதல் இன்று வரை இருவரும் சேர்ந்தே படிப்பது, தூங்குவது முதல் சரக்கடிப்பது வரை ஒன்றாகத்தான் செய்வார். பெற்றோர் எவ்வளவு சொல்லியும் இந்த விஷயத்தில் இருவரும் கேட்கவில்லை. அன்றும் அப்படித்தான், இருவரும் நண்பர்களின் பார்ட்டிக்கு சென்று விட்டு சரக்கடித்துவிட்டு தள்ளாடும் நிலையில் இருவரும் வீடு திரும்பினர். பார்ட்டிக்கு போனாலே இந்த நிலைதான் என அறிந்த பெற்றோர்கள் இவர்களிருவரை அமைதியாக தூங்க வைக்க காத்திருந்தனர். ஏற்கனவே, சாதாரணமாக இருவரும் கேலி கூத்துமாக இருக்க, ட்ரிங்க்ஸ் பண்ணால், பாட்டு பாடி, டான்ஸ் ஆடாம தூங்க மாட்டாங்க, ரெண்டு பேரையும் தூங்கவைக்குறதுக்குள்ள இல்லாத சேட்டையெல்லாம் பண்ணிட்டுதான் தூங்குவாங்க. அன்றும் இது போலவே இருவரும் வீட்டுக்கு வந்து இயல்பு போல் இல்லாமல் அமைதியாக அமர்ந்து, குசு குசு வென ரகசியம் காப்பது போல பேசினர். இருவரின் பெற்றோருக்கு தான் பரிதாப நிலை இவர்களின் நடவடிக்கை புரியாததால்.

சற்று நேரத்திற்கு பிறகு, மீண்டும் பழைய படி ஆரம்பித்தனர். இருவரும் தனித்தனியாக அமர்ந்திருந்த பெற்றோரை ஒன்று சேர்த்து உட்கார வைத்து, 'அப்பவே ரெண்டு பேரும் வீட்டுக்கு தெரியாம லவ் பண்ணதும் இல்லாம, தாத்தா கிட்ட இந்த பொண்ணையே பொண்ணு பார்க்க போற மாதிரி செட் பண்ணி அரேஞ்சு மேரேஜ் பண்ணியிருக்கிங்க, எவ்ளோ கேடி வேலை பாத்துருக்கீங்க, உங்கள பனிஷ் பண்ணியே ஆகணும்' என விஷ்ணு கூற வர்ஷித்தோ, 'நாம முன்னாடியே யோசிச்ச தண்டனை தான் இருக்கே, அதையே கொடுப்போம்'என கூறினான்.

சுப்பிரமணியனோ, "பிள்ளைங்க ஆசையா கேட்டாங்கனு சொன்னது தப்பா போச்சே, இது இப்போ நமக்கே கஷ்டமா போச்சே" என யோசிச்சு கொண்டே மனைவியை பார்த்தார் அவளோ, 'இதெல்லாம் உங்க வேலையா பிள்ளைங்க கிட்ட எத சொல்லணும்னு ஒரு வரைமுறை இல்ல'என கடிந்து கூறியவரை கூட சுப்பிரமணியனின் ஒரு கள்ள சிரிப்பு வசந்தாவை ஆப் செய்தது. இந்த சிரிப்ப வச்சே என்ன சரி பண்ணியறது என நொந்துகொண்டவரிடம் வர்ஷித்தோ 'இப்ப திருட்டு தனமா பண்ண ரொமான்ஸ எங்களுக்கு முன்னாடி செய்யணும் இதான் உங்களுக்கு பனிஷ்மென்ட்' என கூறும்போதுதான் இவர்கள் இருவர் இருப்பதை உணர்ந்தார்கள் பெற்றோர்.விஷ்ணுவும் 'இதே இதே' என ஆமோதித்து, பாதியிலே 'இதுக்கெல்லாம் நான் வரல ஆள விடுங்க' என எழுந்து போக துடித்த அம்மாவின் கையை பிடித்து உட்கார வைத்தான். சுப்பிரமணியனோ, 'கொஞ்சம் ஈசியா கொடுங்கப்பா' என்றவரிடத்தில், ' இந்த திருட்டு வேலைக்கே நீங்க தான் காரணம், அதுனால நீங்க பேசக்கூடாது' என்றனர் இருவரும்.

இருவரும் சாதாரணமாக இருந்தால், சுப்பிரமணியன் வாய்க்கு வாயடித்து கேலி செய்பவர். ஆனால், இன்றும் பதிலுக்கு பதில் பேசினால், அவரின் நிலைமை தான் பரிதாபம் அதுனால அமைதி காத்தார்.

விஷ்ணு மறுபடி ஆரம்பித்தான், 'சரி நீங்க ரொம்ப வெக்கபடுறதுனால கொஞ்சம் ஈசியாவே தரோம், அம்மாவின் முகத்துக்காக' என்றான். அவனே, 'நீங்க லவ் பண்ணதுநால, எங்க முன்னாடி ஐ லவ் யூ சொல்லி ப்ரொபோஸ் பண்ணுங்க' என்றான். வர்ஷித்தும் இருவரை கட்டாயப்படுத்தினான். சரி இவர்களை அடக்கமுடியாது என பல காரணம் சொன்னவர்கள் கடைசியில் இதை ஒப்புக்கொண்டு சுப்பிரமணியன், வசந்தாவின் கண்களை நோக்கி, காதலும் ஆசையுமாக முதல்முறை சொன்னது போலவே தனது காதலை சொன்னார். காதலுடனும் வெட்கத்துடனும் வசந்தா ஏற்றுக்கொண்டார். இதை கண்ட வர்ஷித்தும் விஷ்ணுவும் கை தட்டி விசில் அடித்து பெற்றோரை கட்டி பிடித்து முத்தம் கொடுத்தனர்.

'சரி சரி நீங்க சொன்னது நாங்க பண்ணிட்டோம்ல இப்ப நீங்க பேசாம சத்தமில்லாம ஒழுங்கா தூங்கணும்' என இனி இருந்தால் பல சேட்டைக்கு ஆளாகி விடுவோம் என சுப்பிரமணியனும் வசந்தாவும் அவர் அறைக்கு சென்றனர். வர்ஷித்தும் விஷ்ணுவும் அறைக்கு சென்று மஞ்சத்தில் சரிந்தனர். வர்ஷித், "அவுங்க மட்டும்தா ப்ரொபோஸ் பண்ணனுமா, ஏன் நாம பண்ணக்கூடாது" என கேட்க, விஷ்ணுவோ "ஏன் மச்சி நாமளும் சொல்லுவோம்டா, ஐ லவ் யூ மச்சான்" என வர்ஷித்தை கட்டிப்பிடிக்க அவனும் "மீது டூ மச்சி" என விஷ்ணுவை கட்டிக்கொண்டு கட்டி கொண்டு கன்னத்தில் முத்தம் கொடுத்தான். விஷ்ணு, "நான் எப்பவுமே உன்னோட சந்தோசம், துக்கம் எல்லாத்துலயும் உன்கூட இருப்பேன்டா. நாம ஒருத்தர் ஒருத்தருக்கு துணையாக இருக்கணும்டா " என வர்ஷித்திடம் கூறினான். வர்ஷிதோ, உன்னோட நட்பு கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்டா என இருவரும் போதையிலே பல கதைகளை பேசியே தூங்கினர்.

அன்பால் பிணைக்கப்பட்டு, அனைத்து ப்ரெண்ட்ஷிப் பாடல்களும் நமக்குத்தான் என இருந்த இருவரின் வாழ்வில் வந்த பிரிவுதான் வர்ஷித்தின் நியூ யார்க் பயணம். இவன் போவதில் விஷ்ணுக்கு சிறிதும் உடன்பாடில்லை. வர்ஷித்தும் விஷ்ணுவை பிரிவதில் வருத்தமிருந்தாலும் தனக்கு மாற்றம் தேவை என நினைத்தான். எல்லாவற்றையும் பகிரும் நண்பனிடம் இந்த மாற்றம் என்பது எ
தனால் வந்த விளைவு என்பதை மறைத்திருந்தான். இந்த விஷயம் குடும்பத்தில் தெரிந்தால், என்னவாகும் என்பதை பலமுறை சிந்தித்திருக்கிறான். இனிமேலவுது தெரிய வருமா என்பதை வரும் பகுதியில் தெரிந்துக்கொள்ளலாம்.


நீ கொடுத்த வாழ்வில்,
நட்பிலக்கணமே நம்மை கண்டு வியக்கும் வகையில்,
உன்னோடு பயணிக்கலாம் எனும் ஆசை கொண்டு
நானிருக்கையில்,
கிணற்றில் இறங்கி
கலங்கிய நிலாவை
கண்ட குழந்தை போல
ஏமாற்றமடைந்தேனடா...
வானவில் போல நீயும்
தோன்றி மறையும் போது
சோகம் கொண்டேனடா....
உன்னை தொலைத்த வாழ்வில்
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 9, 10
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN